Wednesday, April 01, 2015

நல்ல விஷயம்.. பகிர்கிறேன்! நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்!

ரத்தத்தில் இருக்கும் மிக முக்கியமான சங்கதி.. பிளேட்லெட் எனப்படும் தட்டை அணுக்கள். ஆரோக்கியமான ஒரு மனிதனின் ஒரு கனமில்லி மீட்டர் ரத்தத்தில் 4 லட்சம் பிளேட்லெட் அணுக்கள் இருக்கலாம்.

வயதாக ஆக.. நோய் நொடிகள் தாக்க.. இந்த அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. 2 லட்சம், 1.5 லட்சம்வரை குறைவதில் ஆபத்து ஏதுமில்லை. ஆனால், அதையும் தாண்டி ஆயிரக்கணக்காகக் குறையும்போது மகா ஆபத்து!

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் தானாக வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி பிளேட்லெட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, கார்க் போல அடைப்பை ஏற்படுத்தி மென்மேலும் ரத்தம் கசிவதற்கு தடை உத்தரவு போட்டுவிடும்!

புற்று நோயாளிகளுக்கு பிறரிடமிருந்து தானமாகக் கிடைக்கும் இந்த பிளேட்லெட் அணுக்கள் அருமருந்தாகின்றன! நோயாளிகளின் அவதியைக் குறைத்து, ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்வதற்காக இந்த பிளேட்லெட் அணுக்களை பிறரிடமிருந்து தானம் பெற்று, அவர்களின் உடலுக்குள் அவ்வப்போது செலுத்துவார்கள்.

தானத்தில் சிறந்தது ரத்ததானம். ரத்ததானத்தை விடவும் பல மடங்கு சிறப்பானது இந்த பிளேட்லெட் ரத்த அணுக்கள் தானம்! ஒருமுறை பிளேட்லெட் தானம் செய்வது ஐந்து முறை ரத்ததானம் செய்வதற்குச் சமம்!

ரத்தத்தை உடலில் இருந்து எடுத்து, பிளேட்லெட் செல்களை மட்டும் தனியே பிரித்து, எடுத்துக்கொண்டு, ரத்தத்தை மறுபடி நம் உடலுக்குள்ளேயே செலுத்தி விடுவார்கள். அதாவது, சாற்றை எடுத்துக்கொண்டு, சக்கையை திரும்பக் கொடுப்பது போல!

இப்பேர்ப்பட்ட தானத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருவர் தொடர்ந்து செய்துவருகிறார் என்றால், அவருக்கு எத்தனை திடமான தியாக மனப்பான்மை இருக்க வேண்டும்! அதுவும், அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்குச் சென்று, முன்பின் முகம் தெரியாத ஏழை - எளியவர்களுக்கு மட்டுமே பிளேட்லெட் தானம் செய்து வருகிறார்!

தானத்தை விடவும் கூடுதல் சிறப்பு.. 80 ரூபாய் ட்யூப்லைட்டை தானமாகக் கொடுத்துவிட்டு, அதில் பாதி வெளிச்சத்தை மறைக்கும் அளவுக்கு உபயதாரர் பெயர் போட்டுக்கொள்ளும் இந்தக்காலத்தில், தான் செய்துவரும் பிளேட்லெட் தானம் பற்றி பெருமைக்காகக் கூட யாரிடமும் பேசாத நபர்! அவருக்கு நெருக்கமான ஒருசிலருக்குத்தான் இது தெரியும்!

அப்பேர்ப்பட்ட ஒருவர் இங்கே சென்னையில் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் என்றால், அந்தப் பள்ளியின் தரம் எப்படி இருக்கும் என்று சொல்லியா தெரிய வேண்டும்!

அந்த மாமனிதர்.. 10 வருடங்களுக்கும் மேலாக என்னுடன் நட்பிலிருக்கும் அன்பு நண்பர் டாக்டர். நாஞ்சில் கென்னடி. அவர் நடத்திவரும் சர்வதேச உறைவிடப் பள்ளி.. போரூரில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இருக்கும் Sri Vidhya Academy – International Residential School.

20 ஏக்கர் பரப்பளவில்.. அருமையான இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளி குறித்து இவ்வார ஆனந்த விகடனில் வெளியான செய்திக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

விகடனில் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, தன் பையனுக்கு இந்தப் பள்ளியில் அட்மிஷன் போடச் சென்றார் என் கல்லூரித் தோழர் ஒருவர். அவர் அட்மிஷன் கேட்ட வகுப்பில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என்பதால்நோ அட்மிஷன்சொல்லி இருக்கிறார்கள்.

எனக்கும் கென்னடிக்கும் உள்ள நட்பு பற்றி ஏற்கெனவே என் கல்லூரித் தோழருக்குத் தெரியும் என்பதால், எனக்கு போன் செய்து, சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

நண்பர் கென்னடியை நேரில் சந்தித்து ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தன. பள்ளியைச் சுற்றிப் பார்த்து, மாணவர்களுக்கு மேலும் என்னென்ன வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கலாம் என ஆலோசனை கூறும்படி என்னைக் கேட்டிருந்தார். அதற்காக கடந்த ஜனவரியில் சந்தித்திருந்தேன். 

சரி, மறுபடி சந்திக்க ஒரு வாய்ப்பு என்ற எண்ணத்தில் கல்லூரித் தோழருடன் நானும் பள்ளிக்குச் சென்றேன். கென்னடியைச் சந்தித்தேன்.

வேறெந்த ரெசிடென்ஷியல் ஸ்கூலில் வாங்கும் கட்டணத்தை விடவும் இங்கே கம்மி. கல்வித்தரமும் அபாரம். அதனால், “எப்படியாச்சும் இங்கேயே அட்மிஷன் வாங்கிக்கொடுங்க நண்பாஎன உடன் வந்திருந்த தோழர் காதைக் கடித்தார்.

இதற்காகவா இவ்வளவுதூரம் வந்திருக்கிறீர்கள்.. ஒரு போன் செஞ்சிருக்கலாமேஎனக் கேட்டு நலம் விசாரித்தார் கென்னடி. “இவ்வளவு தூரம் பயணம் செய்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதற்காகவேனும் ஏதாவது நான் செய்தாக வேண்டுமேஎன்று கூறிப் புன்னகைத்தார். அப்புறமென்ன.. அட்மிஷன் கிடைத்தது. தோழருக்கு மனமகிழ்ச்சி!

பள்ளியை எனக்கும் தோழருக்கும் சுற்றிக் காட்டினார் நண்பர் கென்னடி. ஏற்கெனவே ஓரிரு முறை பார்த்து வியந்த அதே பள்ளிதான் என்றாலும், பள்ளியின் வசதிகளையும் அங்கே பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் பார்க்கப் பார்க்க இம்முறையும் பரவசமே! வாழ்க்கைப் பட்டனை ரீவைண்ட் செய்து, இன்னொரு முறை பள்ளிப் பருவத்தை அனுபவிக்க முடியாதா என்ற ஏக்கம்தான் எட்டிப் பார்த்தது!

விடைபெறும்போது கென்னடியிடம் சொன்னேன்.. “இத்தனை அழகான பள்ளியை நீங்கள் லாப நோக்கமில்லாமல் நடத்துவதற்கு பாராட்டுக்கள்! இங்கே மற்ற பள்ளிகளை விட குறைவான கட்டணம் வாங்குவதற்கும் பாராட்டுக்கள்! நான் சொன்னதற்காக சீட் கொடுத்திருக்கிறீர்களே.. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்!”

கட்டக் கடைசியாக நான் சொன்னதுதான் இங்கே என் இணைய நண்பர்களுக்கான செய்தி.. “உங்கள் பள்ளி குறித்து நான் என் வலைப்பக்கத்தில் எழுதுகிறேன்.. ஃபேஸ் புக்கில் ஷேர் செய்கிறேன். அதைப் படிக்கும் என் நண்பர்கள் தங்கள் குழந்தைகளை இங்கே சேர்க்க வரும்போது, அவர்களுக்கும் மறுக்காமல் அட்மிஷன் கொடுக்க வேண்டும் நீங்கள்!” என்றேன். சிரித்து விட்டார் கென்னடி. ‘சரிஎன்றும் சொல்லாமல், ‘இல்லைஎன்றும் மறுக்காமல் மார்க்கமாக தலையாட்டினார்!

மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே!


கென்னடி சார்.. இதோ.. நான் சொன்னதை நான் செய்து விட்டேன்! :-)

பிற்சேர்க்கை: இந்தப் பதிவு குறித்து எங்கள் இருவருக்கும் நெருக்கமான வேறொரு நண்பர் மூலம் (இவர் இங்கே என் நட்பு வட்டத்திலும் இருக்கிறார்) கேள்விப்பட்ட கென்னடி, பிளேட்லெட் தானம் செய்வதைப் பற்றி பொதுவில் எழுதியதற்காக லேசாக வருத்தப்பட்டார். மன்னிக்கணும் கென்னடி சார்.. உங்கள் பள்ளியின் தரம் பற்றிச் சொல்லும்போது, அதை நடத்தும் உங்களது நல்ல உள்ளம் பற்றியும் சொல்ல ஆசைப்பட்டேன்!