நாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது.
ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருக்கும் பழம்பெரும் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகளின் அரதப்பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், அவற்றுக்கும் இப்போது வெளிவரும் அவற்றின் வாரிசுஇதழ்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்கூட இருக்கலாம்!
கதை, கவிதை, நகைச்சுவை, நாடகம்.. என கட்டுப்பெட்டி வளையத்துக்குள்தான் அந்தக்காலத்து பத்திரிகைகள் வலம் வந்தன. கிசு கிசு என்ற வார்த்தையினை அறிமுகப்படுத்தி முதன்முதலாக அரசல் புரசல் செய்திகளை வெளியிட்டது குமுதம்.
நான்கைந்து பேர் உட்கார்ந்து ஜமா கட்டும் பேச்சுக்கச்சேரியில் பல விஷயங்களை அலசிக்காயப்போடும் பாணி விகடனின் ’திண்ணை’யால் பாப்புலரானது.
நாளடைவில் கதை – கவிதை போன்ற கற்பனைக்குதிரை சமாச்சாரங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் குறைந்துபோய், ’நாளை என்னாகும்’ என்பது தொடர்பான செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது இப்போதைய தமிழ் பத்திரிகைகளில். வாசகர்களின் ‘நாளை என்னாகும்’ ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகி புலனாய்வுப் பத்திரிகைகளுக்கான தேவைகளும் இங்கே உருவாகிவிட்டன.
அரசியல் – சமுதாய – புலனாய்வு வார மற்றும் வாரமிருமுறை பத்திரிகைகளின் முதன்மை இலக்கு இளைஞர்கள்தான். இப்போதும்கூட பரபரப்புப் பத்திரிகைகளை முதல் ஆளாகச் சென்று அதிகாலையிலேயே கடைகளில் வாங்கி, அங்கேயே நின்று ஆர்வமும் கோளாறுமாகப் புரட்டிப் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் காணலாம். நானும் அப்படி ஒரு இளைஞனாகவே வளர்ந்தேன்.
காமிக்ஸ் புத்தகங்கள்மீது இருந்த ஆர்வத்தை மேற்படி புலனாய்வு பத்திரிகைகளே மட்டுப்படுத்தி என்னை அடக்கி ஆண்டன பள்ளிக்காலம் முதலாக. கடைக்காரர்கள் எரிந்து விழும் அளவுக்கு ‘ஜூனியர் விகடன் இன்னும் வர்லியா?’ எனக்கேட்டுக்கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட காலம் அது.
ஜூனியர் விகடனில் ஆரம்பித்த புலனாய்வு பத்திரிகைகளின் மோகம் தராசு, சத்ரியன், நக்கீரன், கழுகு, ராஜ ரிஷி.. என வெளிவந்த (மற்றும் வெளிவந்து காணாமல் போன!) அனைத்து பத்திரிகைகளையும் விரட்டி விரட்டி வாங்கவைத்தது.
ரொம்ப வெள்ளந்தியாக மேற்படி புலனாய்வு பத்திரிகைகளில் வெளிவரும் விஷயங்கள் எல்லாவற்றையும் ஒரு எழுத்துவிடாமல் நம்புவேன் அப்போது!
அப்படியென்றால் இப்போது?!
அதுதான் மேட்டர்!
தொண்ணூறுகளில் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு சுபயோக சுப தினத்தில் ‘ஜூனியர் போஸ்ட்’ இதழின் பொறுப்பாசிரியர் பணிகளையும் என்னை நம்பிக் கொடுத்தார்கள். ’ஜூனியர் விகடன்’ ஆசிரியர் குழுவின் பெரும் தலைவர்கள் விடுமுறை எடுக்கும் சமயங்களில் அதனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் எனக்குக் கொடுக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பங்களில் அரசியல் அனல் பறக்கும் ‘மிஸ்டர் கழுகு’ பகுதிக்காக செய்தியாளர்கள் கொடுக்கும் தகவல்களைத் தொகுத்து எழுதிப் பெருமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு முறை நான் தொகுத்துக் கொடுத்த கழுகார் கட்டுரைக்கு வைக்கப்பட்ட தலைப்பு.. ‘அ.தி.மு.க.வின் அடுத்த புரட்சித் தலைவராகிறார் ரஜினி!’.
சீனியர் செய்தியாளர் ஒருவர்தான் இம்மாதிரியான ‘ஸ்கூப்(?!)’ தகவல்களை அப்போது கொடுத்து வந்தார். அவர் சொல்வதைக் கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டு, எழுதிக் கொடுத்திருக்கிறேன் பலமுறை.
ரஜினி அ.தி.மு.க.வுக்கு தலைவராகப் போகிறார் என்பதை மட்டுமல்ல, இப்படி எத்தனையோ செய்திகளை அவர் சொல்லக் கேட்டு என் கைகளால் எழுதிக் கொடுத்திருக்கிறேன். (டெலிட் செய்யப்பட வேண்டியது-செய்திகளின் நம்பகத்தன்மை பற்றியெல்லாம் துளிக்கூட யோசித்ததில்லை!)
அதுமட்டுமல்ல, அதன்பின்னர் கேள்விப்பட்டதையும் கேள்விப்பட்டதாகச் சொல்லப்பட்டதையும் கேள்விப்பட்டு சொல்லப்பட்டதாக ஊகித்ததையும் வைத்து நானே பல கட்டுரைகளில் ‘அதோ வர்றார் ரஜினி, இதோ வந்துட்டார் ரஜினி’ என எழுதித் தள்ளியிருக்கிறேன். ஒரு செய்தியைக் கட்டுரைப்படுத்தும்போது எல்லா தரப்பிலும் விசாரிக்க வேண்டும் என விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சொல்லிக் கொடுத்ததை இம்மாதிரியான அரசியல் அணுமானக் கட்டுரைகள் எழுதும்போது தற்காலிகமாக மறந்துவிடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளின் லிஸ்ட்டில் நானும் சில காலம் இருந்திருக்கிறேன்!
இதைக் கூட்டிக் கழித்து யோசித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை அடுத்த சில வருடங்களில் ஜெயா டி.வி.யின் மார்கெடிங் மேனேஜராகப் பணிபுரிந்த காலகட்டம்தான் கொடுத்தது! பத்திரிகையாளன் அடையாளத்தைத் தற்காலிகமாக ஓரம் கட்டி வைத்துவிட்டு வியாபாரியாகி இருந்தேன்.
ஜெயா டி.வி. தன் ஒளிபரப்பைத் துவக்கி சில நாட்களே ஆகியிருந்தன. வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை புலனாய்வுப் பத்திரிகைகளிலும் ஏகத்துக்கு யூகங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். எந்தச் செய்தி எந்தப் பத்திரிகையில் என்று தனித்தனியாகக் குறிப்பிட்டு ‘பிடி சாபம்’ வாங்கத் தயாராக இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடுகிறேன்..
‘தினசரி நடவடிக்கைகள் உட்பட ஜெயா டி.வி.யின் நிர்வாகம் முழுவதையும் சசிகலாதான் கவனித்துக் கொள்கிறார்.’ என்று எழுதியது ஒரு பத்திரிகை.
’நியூஸ் டீம் தயாரிக்கும் செய்திகளை ஜெயலலிதாவுக்குப் போட்டுக் காட்டுகிறார்கள். அவர் ஓ.கே. சொன்னதும்தான் ஒளிபரப்புகிறார்கள்’ என்றது இன்னொரு பத்திரிகை.
‘ஜெயா டி.வி.யின் ஒரு தளம் முழுவதும் மினி தியேட்டர் வடிவமைத்து, அதில் தினமும் புதுப் புதுப் படங்களை வரவழைத்துப் பார்க்கிறார்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும்’ என்றது வேறொரு பத்திரிகை.
‘ரஜினிகாந்த் நடித்த படங்களை மட்டுமல்ல பாடல் காட்சிகளைக்கூட மறந்தும் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பி விடக்கூடாது என கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா’ என்றது மற்றொரு பத்திரிகை.
எல்லாவற்றையும் படிக்கையில் எனக்கு நானே சிரித்துக் கொண்டேன். வேறு வழி?!
ஜெயா டி.வி.யின் தினப்படி நிர்வாகத்திலோ மேற்படி நிர்வாகத்திலோ எனக்குத் தெரிந்து சசிகலா தலையை நுழைக்கவில்லை. மாறாக, தொழில் நுட்ப ரீதியாக நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தார்.
பேட்டி கொடுப்பதற்காக ஜெயா டி.வி.யின் ஸ்டுடியோவுக்கு ஜெயலலிதா வரும்போது கூடவே வரும் சசிகலா, பணி புரிந்து கொண்டிருக்கும் நபர்களை ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் பார்த்து, புன்னகைத்துப் போனதோடு சரி.
செய்திகள் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்னர் அதற்கான பாலிஸிகள் வரையறுப்பதற்காக ஜெயலலிதாவுடன் கலந்துரையாடிய பின்னர் சுதந்திரமாகவே செயல்பட்டனர் செய்திப்பிரிவினர். சின்னக் குழந்தைகள் போல ‘அடிக்கிறான் டீச்சர் – கிள்ளுறான் டீச்சர்’ என்றெல்லாம் ஜெயலலிதாவின் நிழலிலேயே அண்டிக்க்கொண்டு பணிகளைச் செய்யவில்லை.
தேர்தல் நேரங்களில் அடிக்கடி ஜெயலலிதாவுடன் விவாதிக்கச் செல்வார் செய்திப் பிரிவின் தலைவர் கே.பி.சுனில். மற்றபடி தன் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட்டுத்தான் ஒரு டீம் உருவாக்கிக் கொண்டு பணியாற்றினார்.
ஜெயா டி.வி.யின் ஒரு தளம் முழுவதும் மினி தியேட்டர் வடிவமைத்து வசதி செய்து கொண்டார் ஜெயலலிதா என்ற பத்திரிகைச் செய்திதான் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. காரணம்.. செய்திப் பிரிவுக்கு படப்பிடிப்பு தளம் வைக்க போதிய இடம் இல்லாததால், ஏற்கெனவே தனக்காக வடிவமைத்துக் கட்டியிருந்த மினி தியேட்டரைக் கொடுத்துவிட்டார் ஜெயலலிதா. தியேட்டரை அடித்து இடித்து ஸ்டுடியோவாக்கி இருந்தோம்.
ரஜினி படங்கள் குறித்து புலனாய்வு பத்திரிகைகள் எழுதிய செய்திதான் இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கிறது.
அந்தச் செய்து மேற்படி பத்திரிகைகளில் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்னரே போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயா டி.வி.யின் முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு!
”அம்மா கூப்பிட்டாங்க”
“ஆமாம்.. ஏன் நம்ம டி.வி.யில ரஜினி படமெலாம் போடமாட்டேங்கறீங்க?” என எதிரில் இருந்தவர்களிடம் ஜெயலலிதா இயல்பாகக் கேட்க…
’இல்லை.. உங்களுக்குப் பிடிக்காதுன்னு…’ என சம்பந்தப்பட்டவர்கள் தலையைச் சொறிய..
“நான் சொன்னேனா உங்ககிட்ட” என கடிந்து கொண்டார் ஜெயலலிதா.
அதன்பின்னர் ரஜினி படங்களின் ஒளிபரப்பு உரிமை வாங்க ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது நிபுணர் குழு. ம்ஹூம்.. ஏற்கெனவே வெளியான அத்தனை படங்களின் உரிமையும் சன் டி.வி. உட்பட வெவ்வேறு சேனல்களால் வாங்கப்பட்டிருந்தன.
ஒரே படத்தை எத்தனை சேனல்களுக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற ஒப்பந்தத்தை ’நான் எக்ஸ்க்ளூசிவ் காப்பிரைட்’ என்பார்கள். அதன் அடிப்படையில் வாங்கவாவது மிச்சம் மீதி ஏதாவது ரஜினி படம் கிடைக்கிறதா எனத் தேடி ஏமாந்திருந்த நேரத்தில்தான் ‘ரஜினிகாந்த் நடித்த படங்களை மட்டுமல்ல பாடல் காட்சிகளைக்கூட மறந்தும் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பி விடக்கூடாது என கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா’ என்று அண்டப்புளுகு பரப்பின புலனாய்வுப் பத்திரிகைகள்.
இக்கரையில் இருந்து மட்டுமே பார்க்கக்கூடாது, அக்கரையிலும் அக்கறை வைக்கும் பொறுப்புணர்வு வேண்டும் என விகடனின் ஆரம்பகால பயிற்சிகளின்போது கற்றுக் கொடுத்ததை எனக்கு நானே அடிக்கோடிட்டுக் கொண்ட அனுபவம் இது.
அதன் பின்னர்.. ’குங்குமம்’ வார இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனையும் கலைஞர் கருணாநிதியையும் சம்பந்தப்படுத்தி ஒரு சில பத்திரிகைகளில் சின்னச் சின்னதாக சரடு விட்டதைப் படித்தபோதும்,
‘மக்கள் தொலைக்காட்சி’யில் செய்தி மற்றும் வணிகப்பிரிவுக்கு தலைவராகப் பணியாற்றிய காலத்தில் மருத்துவர் ராமதாஸ் குறித்து பல பத்திரிகைகளில் சரமாரியான கட்டுக்கதைகள் வெளியானதைப் படித்தபோதும்..
விகடன் கொடுத்த பாலபாடம் எனக்குள் நிரந்தரமாக பதிந்துவிட்டது!
நன்றி: சூரிய கதிர் மாதமிருமுறை இதழ்
2 comments:
7 பிறவிகள் எடுத்தாலும் என்று சொல்வது ஓர் நடைமுறை. 7-வது பிறவி எடுத்துள்ளதாகச் சொல்லியிருப்பது ரசனைக்குரியதோர் அம்சம்.எங்கு சென்றாலும் கண்ணில்பட்டுவிடுகிறது உமது பெயர். தமிழோவியம் சிறப்பு ஆசிரியராக நீவிர் எழுதிய கட்டுரைகள் கண்ணில் பட்டது, இன்று. ஒரு மந்திரம்! - தீதும் நன்றும்.. SEP 21, 2006
சிறப்பு ஆசிரியர் ஒரு காவியம் !- அனார்கலி SEP 21, 2006
சிறப்பு ஆசிரியர் ஓர் அசத்தல்! - அசத்தல் விளம்பரங்கள் SEP 21, 2006
சிறப்பு ஆசிரியர் ஓர் அனுபவம் ! - நினைக்கவும் தயாரில்லை! SEP 21, 2006
சிறப்பு ஆசிரியர் ஓர் அதிர்ச்சி ! - நெஞ்சை உலுக்கும் நிஜம்! SEP 21, 2006
சிறப்பு ஆசிரியர் இரண்டல்ல, மூன்று - ஒரு சிந்தனை ! SEP 21, 2006
சிறப்பு ஆசிரியர் கடமை - ஒரு கதை! SEP 21, 2006.தலைப்பே எல்லோரையும் வரவழைக்கும். விபத்திற்கு வரவில்லை என்றாலும் மரணத்திற்காவது வருவீரல்லவா? தொடர்ந்து எழுதுங்கள். நல்வாய்ப்புக்களை எல்லாம் தவறவிட்டுவிட்டு ஏங்கிக் கொண்டிருக்கும்......
கலக்கலான போஸ்ட்... உண்மைதான்... நடிகர்களின் பழைய பேட்டிகளை எல்லாம் எடுத்து படித்துப் பார்த்தால் இவரா இப்படி என்று எண்ணத் தோன்றும்... உதாரணம் ரஜினி...
Post a Comment