Thursday, July 06, 2006

வார்த்தை தவறிவிட்டாள் / காதல் பால் 1

ஒரு முன்னுரை: காலப் பொதுமறையான திருக்குறளின் அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் காதலைத் தேடும் புதிய பயணம். அதாவது அறம், பொருளில் இன்பம்!

அறத்துப்பால், அதிகாரம்: 12, குறள்: 120

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்

உரை: விற்பனைப் பொருளையும், வாங்கும் பொருளாகவே
மதித்தால் வணிகர்க்கு நல்ல வணிகம் எற்படும்.

ணி ஆறரையாகிவிட்டது. ஆட்டோபிடித்து போய்ச் சேர்ந்தால்கூட எப்படியும் எழு மணியாகிவிடும்.ஆக... ஒன்றரை மணி நேரம் தாமதம்!

"விட்டேனா பார்' என புதுப்புது வேலைகளைச் சுமத்திச் சாகடித்த உயர் அதிகாரியைச் சபித்தபடியே அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் அவள்.

போச்சு! இந்நேரம் அவன் கோபத்தில் ராட்சஸனாகவே மாறியிருப்பான்!கடந்து போன ஆட்டோவைக் கைதட்டிக் கூப்பிட்டாள். ஆட்டோ நின்றது. ஒடிப் புகுந்தாள்...

"பீச்... திருவள்ளுவர் சிலை போப்பா!''

இருக்கும் வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு அவளுக்காக திருவள்ளுவருக்குப் பக்கத்தில் காத்திருக்கும் அவனை நினைக்க நினைக்க அவளுக்குப் பதட்டமாகத்தான் இருந்தது.

யானைக்கு முன் வரும் மணியோசை மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கப் போகும் மோதலுக்கான முன்னோட்டம் இப்போதே அவள் காதுகளுக்குள் முட்டிமோதியது.

"இது உனக்கே நல்லா இருக்கா?''

"ஸாரிப்பா.. அந்த இடியட்... மேனேஜர் ரொம்ப படுத்திட்டார்! என் அவசரம் புரிஞ்சும், 'இத மட்டும் முடிச்சுட்டுப் போம்மா, அத மட்டும் பார்த்துட்டுப் போம்மா'ன்னு டார்ச்சர் பண்ணிட்டார்.''

"ஆமா... உனக்கு எப்பவுமே உன் ஆபீஸ் வேலைதான் முக்கியம். அப்புறம் எதுக்கு லவ்வர்னு நான் இங்க தண்டத்துக்கு!''

"ஏய்...ஏய்...ஏய்.... ப்ளீஸ்ப்பா! கோபப்படாதே!''

"சமாளிக்காத. 'வருவே வருவே'ன்னு கால்கடுக்க இரண்டு மணி நேரம் நின்னுருக்கேன். என் வலி எனக்குத்தானே தெரியும்.''

"அதான் சொல்றேன்ல என்ன நடந்ததுன்னு. வேணும்னே நான் உன்னைக் காக்க வெச்சது மாதரி பேசுறியே!''

"ஒரு டைம் ஃபிக்ஸ் பண்ணினா கரெக்டா வரமுடியுதா உன்னால. உனக்கெல்லாம் எதுக்கு காதல்?''

"வேணாம்... ரொம்பத் திட்டாதடா. அடங்கிடேன். என் செல்லம்ல... நீ ஒரு வாரமா கேட்டுட்டு இருக்குற இந்த இங்கிலீஷ் கிஸ் இன்னிக்கு உண்டு. ஒ.கே.வா?''

"எவனுக்கு வேணும் உன் இங்கிலீஷ் கிஸ். நீயே வெச்சுக்க.. ஆள விடு!''

குலுங்கி நின்றது ஆட்டோ. கற்பனை கலைந்து நிஜத்துக்கு வந்தாள் அவள்.

கடவுளே. இப்படி எதுவும் இன்றைக்கு நடந்துவிடக்கூடாது. என் தரப்பு நியாயத்தை அவன் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு சண்டை போடாமல் வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும்.

கடற்கரைத் திருவள்ளுவர் கண்களில் தெரிந்தார்.

"இங்கதான்... லெப்ட்ல நிப்பாட்டிக்கப்பா.''

இறங்கினாள். அவனுக்குப் பயந்து அதுவரை ஆஃப் பண்ணி வைத்திருந்த மொபைல் போனை ஆன் செய்தபடியே வழக்கமாக அவர்கள் சந்தித்துக்கொள்ளும் குட்டை மரத்தை நோக்கி ஓட்ட நடையெடுத்தாள்.

கண்கள் வலை வீசின.அவனைக் காணவே இல்லை! சின்னதாக ஒரு ‘அப்பாடா’ அவள் மனதுக்குள்! ஒருவேளை அவன் இன்னும் வரவில்லையோ?!

அல்லது அவன் வந்து வெறுத்துப் போய்த் திரும்பியிருந்தால்?! அடுத்த விநாடியே ‘அப்பாடா’, “அய்யோடா”வானது!பரபரவென நகம் கடித்தாள் அவள்.

வாட்சில் மணி பார்த்து, "ப்ச்.. ஏழேகால்'' என தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். சட்டென ஞாபகம் வந்து மொபைல் போனை எடுத்து அவனுக்கு டயல் செய்தாள்.உபயோகமில்லை. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகப் பெண் குரல் சொன்னது. எரிச்சல் பிசாசு அவளுக்குள் புகத் தொடங்கினான்!

ஒவ்வொரு விநாடியும் நகர அடம்பிடித்தது.

ஜோடியாகக் கடந்து போகும் காதலர்கள் எல்லோரும் அவளைப் பார்த்ததும், நின்று கேலியாகச் சிரித்துவிட்டுப் போனது போன்ற பிரமை!

நேரமாக ஆக எரிச்சல் கோபமாக உருமாறியது!வாட்சைப் பார்ப்பதும், ‘ப்ச்’சுக் கொட்டுவதும், மொபைல் போனை எடுத்துக் காதுகளில் வைத்து எமாறுவதுமாக இருந்தாள்.

கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி கடுங்கோபமாக உருவெடுத்த அந்த நேரத்தில்... "ஹாய்.. ஸாரிடா'' என்றவாறே அவள் முன்னே வந்து நின்றான் அவன்! கலைந்த தலை அரக்கப்பரக்க வந்ததை அடையாளப்படுத்தியது.

"இது உனக்கே நல்லா இருக்கா'' என்றாள் கடுகடு முகத்துடன்.

"ஸாரிடா... இந்த இடியட்... எங்க பாஸ் இன்னிக்குன்னு பார்த்து ரொம்பப் படுத்திட்டார்! என் அவசரம் புரிஞ்சும் ‘இத மட்டும் முடிச்சுட்டுப் போப்பா, அத மட்டும் பார்த்துட்டுப் போப்பா'ன்னு டார்ச்சர் பண்ணிட்டார்!''

"சமாளிக்காத. "வருவே வருவே'ன்னு கால்கடுக்க மூணு மணிநேரம் நின்னுருக்கேன். என் வலி எனக்குத்தானே தெரியும்'' - பொருமினாள் அவள்.

எந்த வார்த்தைகளை அவன் பேசிவிடக்கூடாது என அவள் கடவுளிடம் சில பல நிமிடங்களுக்கு முன்னால் வேண்டிக் கொண்டிருந்தாளோ அதே வார்த்தைகளை அவள் பேசிக்கொண்டிருந்தாள் இப்போது.
பக்கத்திலிருந்து சிலையாகப் பார்த்துக்கொண்டிருந்த திருவள்ளுவர் தலையில் அடித்துக்கொண்டார்!

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்,
வார்த்தைகள் காதலர்க்கு!

8 comments:

G Gowtham said...

கடல் கணேசன் என்ற து.கணேசன் அவர்களே!
மிக்க மகிழ்ச்சி.
உங்களது முதல் கமெண்ட் எனக்கு வரவில்லையே>

ABCDEdwardz said...

திருக்குறளுக்கு இப்படி ஒரு விளக்கமா?
புதுமை.
தொடரட்டும் 'காதல் பால்'கள்

நாகை சிவா said...

ரொம்ப நல்லா இருக்குங்கள்.

G Gowtham said...

Mail received from Thiru. N. Chokkan
//Dear Thiru. G. Gowtham,

VaNakkam,

I read first chapter of "kaathal paal" in your blog today - even
before I could see it in print :)

Its a very good and innovative idea, Actually when you mentioned the
name 'kaathal paal', I thought its a new thodar kathai - didn't know
it has such an interesting new theme behind it :)

Great going and eager to read the future chapters!!!!!!

EndRum Anbudan,

N. Chokkan,
Bangalore.//

G Gowtham said...

எட்வர்ட், சிவா, சொக்கன்..
மகிழ்ச்சி.

குங்குமம் வார இதழில் இதை தொடராக எழுதி வருகிறேன் என்றாலும், பக்க நெரிசல் இல்லாமல் முழுமையாக இங்கே எழுத ஆசைப்படுகிறேன்.

நிலா said...

கௌதம்

நல்ல முயற்சி

தொடருங்கள்

G Gowtham said...

நன்றி நிலா
இந்த உலகம் (blog world)
என்க்குப் பிடித்திருக்கிறது. நிச்சயம் தொடர்வேன்

முத்தமிழ் குமரன் said...

நல்லா இருக்குதுங்க படிச்சா மனசில பதிய வைக்கும் நடை,

விகடன் கொடுத்த பயிற்சியா

சந்தோஷம்