Sunday, July 09, 2006

எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்! 1

'ஆனந்த விகடன்'தான் என் தாய் வீடு! 'விகடன்' என்ற பத்திரிகைப் பல்கலைக் கழகத்தில் பாடம் பயின்றவன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.
எனக்குக் கொடுக்கப்பட்ட பாடங்கள் என் தொழிலுக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும் நிறைய இனிப்பு சேர்த்திருக்கின்றன். இதோ ஒரு பருக்கைச் சோறு...

அப்போது நான் இளமைத் துடிப்புள்ள மாணவப் பத்திரிகையாளன். விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் புதுச் சேர்க்கை.

பொறியியல் பட்டப்படிப்பின் நான்காவது(இறுதி) வருடம் பயிலும்போதுதான் இந்த வாய்ப்புக் கிடைத்தது. அதனால் பகுதி நேரப் பத்திரிகைப் பணிக்கு அதிக நேரம் செலவிட முடியாமல் போய் விட்டது(அப்படியும் விகடன் தேர்வில் OUTSTANDING STUDENT REPORTER ஆக தேர்ச்சிபெற்றுவிட்டதால் அந்த பொறியியல் பட்டதாரி அத்தோடு தொலைந்தான்!!).

கிடைக்கும் சொற்ப நிமிட அவகாசங்களில் பிரசுரிப்புக்குத் தேறும் செய்திகளை சேகரிக்கப் 'பர பற'ப்பேன். மூன்று கற்களில் இரண்டு மாங்காய் - இதுதான் நான் அப்போது எனக்கு வகுத்துக் கோண்டிருந்த ஃபார்முலா. அதாவது மூன்று மேட்டர்கள் எழுதிஅனுப்பினால் அதில் இரண்டாவது பிரசுரமாகிவிட வேண்டும்!

ஒரு சில மாணவ நிருபர்களுக்கே கிடைத்த அந்த அதிர்ஷ்டம் எனக்கும் கிடைத்தது. தொடர்ச்சியாக என் கட்டுரைகள் பிரசுரமாகி வந்தன.

இந்த சுயபுராணமெல்லாம் எதற்காக என்றால்... ஒரு கட்டுரை எழுதினால் அது பிரசுரமாகிவிட வேண்டும் என்பது எனக்கு எவ்வளவு அத்தியாவசியமானதாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான்.

சரி விஷயத்துக்கு வருகிறேன், புதிய ஊரில் ஒயின் ஷாப் தேடி அலையும் வெளியூர் குடிகாரன் மாதிரி செய்திக்காக நான் தேடலில் மும்முரமாயிருந்த ஒரு நாள்... ஒரு பொழுது..

"எப்படியும் இருபது முப்பது பேராவது இருக்கும்... அத்தனை பேர்கிட்டயும் அவங்க நிலப்பத்திரங்களை அடகு வாங்கிக்கிட்டு, எல்லோரையும் கொத்தடிமைகளா வச்சிருக்காரு ஒரு பெரிய மனுஷன்" என்ற அதிர்ச்சிகரத் தகவல் சொன்னார் ஒரு நண்பர். சிகப்புச் சட்டைக்காரர் அவர்.

அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பல செய்திகளை கட்டுரையாக்கி இருக்கிறேன். நம்பத் தகுந்த 'துப்புக் கொடுப்பாளர்'.

'ஆஹா.. சில்லறை மீனுக்கு ஆசைப்பட்டால் சுறா மீனே வந்து விழுந்திருக்கே!' என சந்தோஷப்பட்டேன்.

இந்த இடத்தில் ஒரு இடைச் செருகல்... பத்திரிகையாளன் அதுவும் புலனாய்வுப் பத்திரிகையாளன் என்றால் இப்படித்தான்! கெட்டசெய்தி எதுவும் கேள்விப்பட்டால் 'ஐயோ இப்படி நடந்துடுச்சே' என வருத்தப்படுவதற்கு முன்னால் 'சூப்பரான நியூஸ் கிடைச்சுருச்சு' என்ற சந்தோஷம் முந்திக் கொண்டு வந்து நிற்கும்.

எனக்கும் அப்படியே! நின்றது!!

காலேஜுக்கு கட் அடித்துவிட்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டேன். கொடைக்கானலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமத்துக்குப் பயணம்.

மொத்தம் இருபத்தி நான்கு தொழிலாளர்கள், அத்தனை பேரும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து இரண்டு வருடங்களாகி இருக்கும். அனைவரும் கொத்தடிமைகள்! பஞ்சம் பிழைப்பதற்காக வீடு, வாசல், வயக்காடுகளை அந்தப் பெரிய மனிதரிடம் அடகு வைத்தவர்கள். குபு குபு'வெனக் குட்டி போடும் வட்டியைக்கூட கட்ட முடியாமல் தடுமாறியதால், அவர்களை கூலியில்லாத வேலைக்காரர்களாக தனது பண்ணைத்தோட்டத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர்.

தடி மீசை அடியாட்கள், கொலை வெறியோடு அலையும் வேட்டை நாய்கள், இத்யாதி இத்யாதி பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி அப்பாவி அடிமைகள் அனைவரிடமும் பேசினேன்.

'போட்டோ புடிக்க வேண்டாம்' என்று முரண்டு பிடித்தவர்களை சமாளிக்க வேண்டியிருந்தது. 'நம்புங்கள்... பத்திரிகையில் போட்டோ போட மாட்டோம். ஆனால் இப்படி ஒரு விஷயம் நடப்பதை எங்கள் எம்.டி.(அப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியரான எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களை அலுவலகத்தில் எல்லோரும் இப்படித்தான் குறிப்பிட்டார்கள். கேள்விப்பட்டுக் கேள்விப்ப்ட்டு அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இப்போதும்கூட 'எம்.டி' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எங்கிருந்தாலும் என் நினைவுக்குவரும் முதல் முகம் அவருடையதுதான்) நம்ப வேண்டும் அல்லவா! அதற்காக கட்டாயம் நான் போட்டோ அனுப்பியாக வேண்டும்' என்று கூறி சமாதானப் படுத்தினேன். வேண்டியமட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்துவிட்டு, மலையிறங்கினேன்.

அடுத்ததாக விஷயத்தின் வில்லனையும் நேரில் சந்தித்தாக வேண்டும். அதாவது அந்தப் பெரிய மனிதரை!

நிஜமாகவே ஊருக்குள் பெரிய மனிதர்தான். மரம் கடத்தல், டூப்ளிகேட் மதுபாட்டில், அடிதடி... என பல விஷ விஷயங்களில் அவரது பெயர் பிரபலம். அப்போதைய ஆளும் கட்சியின் செல்வாக்கு பெற்ற மனிதர். எம்.எல்.ஏ. ஒருவரின் நெருங்கிய உறவினர்.

இத்தனை 'அட்டாச்மெண்ட்கள்' இருந்ததால் அவர் முன் நின்று பேசவே நடுங்குவார்களாம் உள்ளூரில் பலரும். எனக்கென்ன நான்தான் வெளியூராச்சே!

அந்த (அ)சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கக் கிளம்பினேன். அடுத்த நாளும் காலேஜுக்கு கட்.

அந்த ஆளின் வீட்டுக்கு வழி கேட்டபோது ஊருக்குள் ஏற இறங்கப் பார்த்தபடியேதான் கை காட்டினார்கள். பயமில்லை என்றாலும் சின்னதாக தயக்கம் எனக்குள் முளைத்திருந்தது.

வேறு வழியே இல்லை, கட்டுரையை எழுதி முடிக்க வேண்டுமென்றால் அவரை பேட்டி எடுத்தே ஆக வேண்டும். அதுதான் விகடன் சம்பிரதாயம். 'ஒரு தரப்புச் செய்தியை மட்டும் வெளியிடக் கூடாது. எதிர் தரப்பிலும் கேட்டு எழுதியாக வேண்டும்' என எங்களுக்கு படித்துப் படித்து சொல்லிக் கொடுத்திருந்தார்கள். வியர்த்திருந்த உள்ளங்கையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு விடுவிடுவென 'பெரிய' வீட்டுப் படியேறிவிட்டேன்.

நல்ல விஷயத்துக்காக யாராவது நல்ல மனிதர்களைச் சந்தித்தால் 'ஆனந்த விகடன் நிருபர்' என் அறிமுகம் செய்து கொள்வோம். இப்போது அது தேவையில்லை...

"ஜூனியர் விகடன்ல இருந்து வர்றேன். சார்கிட்ட கொஞ்சம் பேசணும்."

உட்காரச் சொன்னார்கள். முரட்டு வீட்டை வேடிக்கை பார்த்தபடியே நான் இருக்க... ஓரிரு நிமிடங்களில் 'அவர்' வந்துவிட்டார். அந்த அவகாசத்தில் எனக்கு கொஞ்சம் தெனாவெட்டு வந்துவிட்டது.

''வாங்க தம்பி'' என்றார். என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்.

வாங்கியவர் அதை அலட்சியமாகப் பார்த்தார். என்னையும் ஏற இறங்கப் பார்த்தார்.

அதில் 'STUDENT REPORTER - TRAINEE' என இருந்தது. அதைப் பார்த்துத்தான் அவ்வளவு அலட்சியம் காட்டுகிறார் என நானே நினைத்துக் கொண்டேன். 'வைக்கிறேண்டி உனக்கு ஆப்பு' என மனதில் கறுவிக்கொண்டே பேச ஆரம்பித்தேன்...

"கொடைக்கானல் மலைப்பக்கம் இருக்க உங்க தோட்டத்துல இருபத்திநாலு பேரை கொத்தடிமையா வச்சிருக்கீங்களே! அதப் பத்தி உங்ககிட்ட பேசணும்"

பேசியபடியே அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன். ரியாக்சனுக்கு ஏற்ற எதிர்க் கேள்வியை எடுத்துவிட வேண்டுமே!

"நீங்கதான் நேத்து அங்க போயி விசாரிச்ச ஆளா?" என்றார்.

அடப்பாவி! ரகசியமாக விசாரணை செய்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்க, அது இந்த ஆளுக்கும் தெரிந்திருக்கிறதே!

"ஆமா சார்" சொன்னேன்.

கண்களை மூடி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். கையோடு கொண்டு போயிருந்த ஆட்டோஃபோகஸ் கேமராவை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தேன்.

"தம்பி, கேமராவ முதல்ல உள்ள வைங்க'' என்றார் அவர்.

"இல்ல சார்... அது வந்து..." என் ஏதோ பேச ஆரம்பிக்க நான் முயல... தொண்டையை செருமிக் கொண்டு பேசலானார் அவர்.

''தம்பி இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வாங்கள்ல அதான் தைரியமா இந்த பிரச்னைல இறங்கியிருக்கிங்க. சரி, நாம ஒரு டீலுக்கு வருவோம். அந்த இருபத்திநாலு பேர்கிட்டயும் அவங்கவங்க பத்திரத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துர்றேன். வாங்குன கடனையும் தள்ளுபடி செஞ்சுர்றேன். பிரச்னய இத்தோட விட்ருங்க. புக்ல மேட்டர போட்றாதீங்க.''

வெலவெலத்து விட்டேன் நான். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!

என்னாது.... சின்னப்புள்ளயாட்டம்?!

அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அலுவலகத்தில் பேசி முடிவு சொல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டேன். மனது முழுக்க குழம்பிப் போயிருந்தேன். எனது இரண்டு நாள் உழைப்பு அது. செய்தி வெளியானால் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். OUTSTANDING REPORTER ஆக தேர்வாக இந்தக் கட்டுரை கை கொடுக்கும்.

வழியிலேயே எஸ்.டி.டி. பூத்துக்குள் புகுந்து சென்னைக்குப் போன் போட்டேன்.
மறு முனையில் விகடன் அலுவலகம். நடந்ததையெல்லாம் விலாவாரியாகச் சொன்னேன்.

அரை மணி நேரம் கழித்து மறுபடியும் போன் பண்ணச் சொன்னார் சுபா. அவர்தான் நான் உட்பட மதுரைப்பக்கம் இருக்கும் அந்த வருடத்து மாணவ நிருபர்களையெல்லாம் வழி நடத்தியவர்(இப்போது ராடன் டி.வி.யின் க்ரியேடிவ் ஹெட்).

அடுத்த முப்பத்தொன்றாவது நிமிடம் மறு போன் போட்டேன். என் காதுகளும் பதைபதைப்போடு காத்திருந்தன.

''அந்த மேட்டர எழுதவேணாம்னு எம்.டி. சொல்லிட்டாரு.."

என் தலையில் இடி இறங்கியது. என் உழைப்பெல்லாம் வேஸ்ட்!

என் அமைதியை யூகித்துவிட்ட சுபா தொடர்ந்து பேசினார்.. ''எம்.டி. என்ன ஃபீல் பண்றார்னா... நாம செய்தி வெளியிடுறதோட நோக்கமே அதப் பார்த்து அரசு அதிகாரிகள் யாராச்சும் அந்த கொத்தடிமைகளை மீட்கணும்ங்கிறதுதான். செய்தி வெளியாகுறதுக்கு முன்னாடியே அது நடந்துடுச்சுன்னா சந்தோஷம்தானே! ''

"அப்ப அந்த ஆளை...?''

'' தப்பு செஞ்சவர்தான். ஆனா தப்பை உணர்ந்து திருந்திட்டார்ல. அதனால அவரப்பத்தி எழுத வேணாம்ங்கிறார் எம்.டி. ஆனா அந்த ஆள் சொன்னமாதிரி அத்தனை பேருக்கும் பத்திரங்களையெல்லாம் திருப்பிக் கொடுத்து அவங்களை விடுவிக்கிறாரான்னு கூட இருந்து உறுதி செஞ்சுக்கங்க. உங்களால இருபத்திநாலு அப்பாவிகளுக்கு நல்லது நடக்கப் போகுது... கங்ராட்ஸ்!''

சந்தோஷப் பெருமையோடு போனை வைத்தேன். தான் செய்த தவறை உணர்ந்துகொண்டு யாரரவது ''ஸாரி'' சொன்னால் மன்னிக்கும் மனப்பக்குவம் கொஞ்சமேனும் எனக்கு வந்தது அதற்குப் பிறகுதான்!

40 comments:

ILA (a) இளா said...

முதன் முறையா உங்க பதிவ படிக்கிறேங்க. இனிமே அடிக்கடி உங்க பதிவு பக்கம் கண்டிப்பா வருவேங்க. வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

இந்த கட்டுரை படிக்கும் போது மிகுந்த சந்தோஷகா உள்ளது. உங்கள் எம்.டியின் மேல் மிகுந்த மரியாதை வருகின்றது. உங்களால் 24 குடும்பங்களுக்கு வாழ்வு கிடைத்து உள்ளது. ஆண்டவன் அருளால் நீங்கள் நலமாக வாழ வேண்டுகிறேன்.

G Gowtham said...

நன்றி இளா
கண்டிப்பா வாங்க.

கைப்புள்ள said...

நல்லாருக்குங்க. உங்கப் பதிவுக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது இவ்வரிகள்.

//சந்தோஷப் பெருமையோடு போனை வைத்தேன். தான் செய்த தவறை உணர்ந்துகொண்டு யாரரவது ''ஸாரி'' சொன்னால் மன்னிக்கும் மனப்பக்குவம் கொஞ்சமேனும் எனக்கு வந்தது அதற்குப் பிறகுதான்!//

நீங்களும் அதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்ட விதம் வெகு சிறப்பு.வாழ்த்துகள்.

Dubukku said...

Nice one. Have linked you in Desipundit

http://www.desipundit.com/2006/07/08/vikatanexperiences/

மாயவரத்தான் said...

அட.. கௌதம்ஜி!

வாங்க... வாங்க...!!

கடல்கணேசன் said...

ஜிஜி.. முதல் கமெண்ட் என்ன எழுதினேன் என்று ஞாபகம் இல்லை.. அதுபோகட்டும்.. எனக்கு நன்றி, பதிலெல்லாம் எழுத வேண்டாம்.. ..தொடர்ந்து எழுதுங்கள்.. இப்படி(அந்த கொத்தடிமை போன்ற) வெளிவராத எத்தனையோ கட்டுரைகளின் பின்ணனியில் மிக சுவாரஸ்யமான அனுபவங்கள் நிறைய இருக்கும்.. எல்லாவற்றையும் நினைவுக்குக் கொண்டு வந்து எழுதுங்கள்..(திருப்பதிசாமி பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.. அந்த இளவயது திறமைசாலி பற்றி பதிவு செய்யுங்களேன்)

துளசி கோபால் said...

கஷ்டப்படுற ஒரு ஆளுக்கு நல்லது செய்யறதுக்குன்னாலும், நாம் கொஞ்சம்
இறங்கிவந்தா தப்பே இல்ல்லீங்க.

24 குடும்பங்களுக்கு நல் வாழ்வு...

உண்மையிலேயே உங்களைப் பாராட்டறோங்க.

நல்லா இருங்க.

ramachandranusha(உஷா) said...

கெளதம் படிக்க மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் இன்னும் நிறைய உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
உங்களுக்கு சீனியர்கள்- ஆசிப்மீரான், முக்கு சுந்தர், நிர்மலா ஆகியோர்களும் முன்னாள் மாணவ நிருபர்கள், இங்கு பிலாக் எழுதுகிறார்கள். இன்னும் வேறு யாராவது இருந்தால் கையைத் தூக்குங்கள் :-)

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு கௌதம்.. தலைப்பு தான் கொஞ்சம் மிஸ்லீடிங்கா இருக்கோ? மற்றபடி, ஆசிரியரின் பெருந்தன்மையும், உங்களோட உழைப்பும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

G Gowtham said...

Mail received from Mr.N.Chokkan...
//அன்புள்ள திரு. ஜி. கௌதம்,

உங்கள் புதிய போஸ்ட் படித்தேன். பிரமிப்பாக இருந்தது, ஒரு
பின்னூட்டக்காரர் குறிப்பிட்டிருந்ததுபோல், எழுதாத ஒரு கட்டுரையின்மூலம்
24 பேருக்கு நல்லது செய்திருக்கிறீர்கள். தொடரின் மற்ற பாகங்களையும்
படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூர்//

இலவசக்கொத்தனார் said...

அவங்க 24 பேருக்கும் விடுதலை கிடைச்சுதானே. இப்போ என்ன பண்ணறாங்க தெரியுமா?

பாருங்க பத்திரிகை பலத்தை, நீங்க எல்லாம் நினைச்சா எவ்வளவு நல்லது பண்ணாலாம். வெரி குட் சார்.

G Gowtham said...

ஆகவே தோழர்களே, தோழியரே...

நிறைய எழுதணும்ங்கிற ஆர்வத்தை எனக்குள் விதைத்தற்கு நன்றி!
கம்ப்யூட்டர் தமிழ், ட்ஸ்க்கி, யுனிகோடு சமாச்சாரமெல்லாம் ஜூன் 29 முதல்தான் எனக்கு பரிச்சயம்.
சிந்திக்கும் வேகத்துக்கு டைப் பண்ண முடியல.
பார்த்துக் கொண்டிருக்கும் வேலையும் சொற்பமான நேரத்தையே ஜி போஸ்ட்டுக்குக் கொடுக்கிறது.
ஆயிரம் இருந்தும் வசதியின்மைகள் இருந்தும் முடியும்போதெல்லாம் எழுதக் கடமைப்பட்டுள்ளேன்.
உங்கள் அனைவரது வலைப்பூக்களையும் படித்து கருத்துக் கூற ஆசை. கொஞ்சம் அவகாசம் கொடுக்கவும், ப்ளீஸ்...

வாழ்த்துக்களுக்கு நன்றி இளா.

நாகை சிவா,
இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன் எங்கள் எம்.டி. அவர்களின் பெருமைகளைச் சொல்ல. சொல்வேன்.

கைப்புள்ள,
கடந்து வந்த பாதையின் நீளம் அல்ல, நடந்து வந்தபோது நாம் க்ற்றுக்கொண்டதே அனுபவம்.
இது நான் ந்ம்புவது, அதைத்தான் நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள்.

dubukku,
just now i came to know the value of disipundit and your effort.
beacause i am new to blogs world.
thank u very much for the trust on me. excueseme for the belated reply. i was away from net.

மாயவரத்தான்ஜி,
வந்துட்டேன் உங்க ஆசிர்வாதங்களேட!

கணேசன்,
நிச்சயம் எழுத்றேன் அந்த சாதனையாளன் பற்றி.
மனசுக்குள்ள ஆயிரம் இருக்கே..
எதச்சொல்றது....

துளசி கோபால்,
//கஷ்டப்படுற ஒரு ஆளுக்கு நல்லது செய்யறதுக்குன்னாலும், நாம் கொஞ்சம்
இறங்கிவந்தா தப்பே இல்ல்லீங்க.//
சரியாச் சொன்னீங்க.
அந்த நிமிஷம் நாம இறங்குறதா நினைச்சு வருத்தப்பட்டாலும் உண்மையில் நாம உயர்கிறோம்ங்கிறது பிறிதொரு சஙதர்ப்பத்தில்தான் ந்மக்கு தெரிகிறது.
எனக்கு OUTSTANDING கிடைச்சதுக்கு இதுவும் ஒரு காரணம். ந்ன்றி.

ramachandranusha,
நல்ல விஷயத்த கேள்விப்படும்போதும் செய்யும்போதும் மனசுக்கு நிறைவுதான்.
எனக்கும் சந்தோஷமே!
எங்காளு இன்னொருத்தர் இருக்காரே!கடல் கணேசன் என்ற து.கணேசன்.
'கற்றது கடலளவு' என்ற அட்டகாசமான அனுபவப் புத்தகம் எழுதியவர்.

பொன்ஸ்,
//தலைப்பு தான் கொஞ்சம் மிஸ்லீடிங்கா இருக்கோ? //
நானும் யோசிக்கிறேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்க பொன்ஸ்.
//மற்றபடி, ஆசிரியரின் பெருந்தன்மையும், உங்களோட உழைப்பும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..//
எம்.டி. அவர்கள் பெருந்தன்மைக்கு மட்டுமில்ல, உழைப்புக்கும் அவரே சரியான உதாரணம். நானெல்லாம் சும்மா.. பிஸ்கோத்துங்க!
தினமும் அலுவலகத்துக்கு முதலில் வ்ரும் உழைப்பாளி அவர்தான்.

நன்றி சொக்கன்,
தினமும் எழுத ஆசைப்படுகிறேன், பார்க்கலாம்!

நன்மனம் said...

நல்லது செய்யனம்னு நினைக்கிறவங்களுக்கு எப்படி வேணும்னாலும் வாய்ப்பு வரும்னு சொல்லாம சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

மிகவும் நல்ல முடிவு. நல்லது நடக்க வேண்டும். அது நடந்து விட்டது. எடுத்த முடிவு சரிதான்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்களோட அனுபவத்தை நன்கு விவரித்து எழுதியுள்ளீர்கள். இதைப் பற்றி எழுதியிருந்தால் உங்களுக்கு பேரும் புகழும் மட்டுமே கிடைத்திருக்கும் ஆனால் அதை விட நல்ல விசயம் உங்கள் உழைப்பால் நடந்திருக்கிறது வாழ்த்துக்கள்.

கடல்கணேசன் said...

ஜிஜி.. போறபோக்கில் என்னைப் பற்றி அறிமுகம் செய்து விட்டுப் போய்விட்டீர்கள்.. நிஜமாகவே கடந்த ஒருவாரமாகத் தான் நான் இணையதளம் பக்கம் வந்தேன்.. எத்தனையோ திறமைசாலிகளின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு இங்கே கிடைத்தது.. (ஒவ்வொருத்தரும் தனித்தனியே கலக்குகிறார்கள்.. படிக்க சந்தோஷமாக இருக்கிறது..)நான் என் பெயரை மட்டுமே ப்திவு செய்துள்ளேன்.. வேறு எதுவும் இதுவரை எழுதவில்லை.. சமர்த்தாக, நல்ல வாசகனாக எல்லோருடையதையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.. ( மரபூர் ஜெய.சந்திரசேகரன் என்ற பெயரில் எழுதும் 'ஜெ.சந்திரசேகரன்' விகடனின் முன்னாள் மாணவ நிருபர்தான்(மதுரைக்காரர்..)..(1987-88 Batch)..

Srikanth Meenakshi said...

கௌதம்,

நீங்கள் இருந்த நிலையில் நீங்களும் உங்கள் ஆசிரியக்குழுவும் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தோன்றுகிறது. இருந்தாலும், அந்தப் 'பெரிய மனிதர்' மனம் திருந்தியதாக நம்ப முடியவில்லை. 'மாட்டிக் கொள்ளக் கூடாது', 'பேப்பரில் பேர் அடிபட்டால் அரசியல் செல்வாக்கு குறையும்' போன்ற விஷயங்கள் தான் அவரைச் சரணடைய வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு இது போன்ற செயல்களை அவர் செய்தாரா இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும். இல்லை, 'எத்தனையோ பேரை வச்சிருக்கோம், இவங்க இருபத்திநாலு பேரைத்தானே கண்டுபிடித்தார்கள், பேப்பரில் வந்தால் மொத்த வண்டவாளமும் தெரியறதுக்கு பதில், இத்தோடு முடிந்தால் தேவலை' என்றும் நினைத்திருக்கலாம்.

நாமக்கல் சிபி said...

24 குடும்பங்களுக்கு உங்களால் வாழ்க்கையே திரும்ப கிடைத்திருக்கு. இதை படிக்கும் போது விகடன் ஆசிரியர் மீதும், உங்கள் மீதும் மதிப்பு உயர்கிறது.

Aruna Srinivasan said...

கௌதம்

இது, இதுதான் இந்தத் தொழில் இருக்கும், அடிப்படையில் நிறைவான உணர்வு. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

எனக்கு arunas at gmail.comக்கு ஒரு மயில் ( இன்னும் ஒரு வாரம் வலைப்பதிவில் 'கொட்டை' போட்டுவிட்டீர்களானால் மயில் என்பது மெயில் என்று புரிந்து கொள்வீர்கள் :-) ) அனுப்ப முடியுமா?

நன்றி

அருணா

G Gowtham said...

நன்மனம்,
நீங்க சொல்றது கரெக்ட்.
வாய்ப்புகள்தான் நம்மை உருவாக்குகின்றன

ராகவன்,குமரன். கணேசன்..
மறுமொழிகளுக்கு நன்றி.

srikanth sir
//அதன் பிறகு இது போன்ற செயல்களை அவர் செய்தாரா இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும். இல்லை, 'எத்தனையோ பேரை வச்சிருக்கோம், இவங்க இருபத்திநாலு பேரைத்தானே கண்டுபிடித்தார்கள், பேப்பரில் வந்தால் மொத்த வண்டவாளமும் தெரியறதுக்கு பதில், இத்தோடு முடிந்தால் தேவலை' என்றும் நினைத்திருக்கலாம்.//
அந்த மனிதர் ஹார்ட் அட்டாக்கில் இறந்தது வரை அவரை கண் கொத்திப்பாம்பாக கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.
அப்படி ஏதும் நடக்கவில்லை!

வெட்டிப்பயல்
எல்லாப் புகழும் விகடனுக்கே!

அருணா மேடம்,
அனுப்பிட்டேன். தாமத்த்துக்கு மன்னிக்கவும்

இராம்/Raam said...

கெளதம் உண்மையாகவே அருமை.விகடன் மற்றும் குமுதம் பத்திரிக்கைகளை சிறியவயதிலிருந்து படித்துவருகிறேன்.இம்மாதிரியான பல வெளிவரா தகவல்கள் மிகவும் ஆச்சரியமுட்டுகின்றன.வாழ்த்துக்கள்

த.அகிலன் said...

நானும் முதல்முறையா உங்க பதிவைப்பார்த்தேன் ரசித்தேன் சிலிர்த்தேன் உங்க பதிவு ஒரு மலைத்தேன் என நான் நினைத்தேன்.(ரொம்ப அதிகமோ?)

அன்புடன்
த.அகிலன்

பினாத்தல் சுரேஷ் said...

சொன்னால் நம்புவீர்களா தெரியாது.. நீங்கள் போன் செய்யும் கட்டத்தில் நானுமே யோசித்தேன் - பத்திரிக்கையில் போடாமலே தீர்வு கிடைக்கும்போது ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என்று.

MD-ஐப்பற்றி நிறைய இதுபோல கேள்விப்பட்டிருக்கிறேன், இருந்தாலும் முதல் கைத்தகவல் உங்களுடையது.. வாங்க கௌதம், கலக்குங்க!

Badri Seshadri said...

கௌதம்! இப்பொழுதுதான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன். கலக்குங்கள்!

கஸ்தூரிப்பெண் said...

இரண்டு நாள் உழைப்பை பதிவில் பார்க்கமுடியவில்லையென்றாலும், 24 குடும்பங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது நிறைவை கொடுத்திருக்கும்.

கொஞ்ச நாளுக்கு அப்புறம் Follow-up report போட முடிந்ததா?

கார்த்திக் பிரபு said...

hi today only i visited ur page..great sir..nalla pdhivu..nanum vikatanukku katturai eludhi anuupinane(student scheme)
but didnt get selected..pach

selct agiyirundhaal ungalai pol ennakum niraya anubavangal kidaithiukkum

if u have time pls visit my blog..share ur thoughts and comments

மயிலாடுதுறை சிவா said...

கெளதம்
உங்களது பல கட்டுரைகளை விகடனில்
படித்து இருக்கிறேன்.

13 வருடங்களுக்கு முன்பு நான் விகடனுக்கு
எழுதிய கேள்வி பதிலை உங்களுக்கு
நேரிடையாக அனுப்பி விகடனில் பிரசுரத்தீர்கள்.

வலைப் பூவில் நீங்கள் நிறைய எழத வேண்டும்
மயிலாடுதுறை சிவா...

Unknown said...

நல்ல நிகழ்வு. உங்களுக்கு எப்படியெல்லாம் இருந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்கமுடியுது.

Unknown said...

ஆமா, சாப்பிடச்சொன்னது அல்வாவையா ;-)

G Gowtham said...

venkatramani,
//ஆமா, சாப்பிடச்சொன்னது அல்வாவையா ;-) //
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்ற்றியேன் பராபரமே..
-இதுவும் விகடன் சொல்வதுதான்!

பழசை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றியும் பாராட்டுக்களும் மயிலாடுதுறை சிவா!

dont worry karthik
I will share my anubavangal

கஸ்தூரிப்பெண்,
//கொஞ்ச நாளுக்கு அப்புறம் Follow-up report போட முடிந்ததா?//
ம்ஹூம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் எங்கள் எம்.டி. உறுதியானவர். எந்த வகையிலும்(follow-up மூலமாகவும்) அந்த திருந்திய மனிதரைக் காட்டிக்கொடுக்கவில்லை.

badri,
நீங்களெல்லாம் படிக்க ஆரம்பித்திருப்பதால் இனிமேல் ஜாக்கிரதையாக எழுத வேண்டியிருக்கிறது!

ராம், சுரேஷ்
நன்றிகள்.

த.அகிலன்,
//நானும் முதல்முறையா உங்க பதிவைப்பார்த்தேன் ரசித்தேன் சிலிர்த்தேன் உங்க பதிவு ஒரு மலைத்தேன் என நான் நினைத்தேன்.(ரொம்ப அதிகமோ?)//
ஆம், ரொம்ப ஓவர்தான்!!

Anonymous said...

Karvendan

Truly you did great job!

மணியன் said...

இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள். விகடனின் OUTSTANDING REPORTERக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா ?

G Gowtham said...

நாமெல்லாம் கருவிகள்தானே
karvendan!

நம்பிக்கைக்கு நன்றி மணியன்.
அடிக்கடி வந்து போங்க.
நிஜமாவே உருப்படியா ஏதாச்சும் சொல்ல முயற்சி செய்றேன்.

Anonymous said...

Nanbar oruvar suggest panninar.Anal intha katturayai thedi eukkave neduneramanathu.I think there is a problem in your blog. pl correct.The article is very nice.
RR

Anu said...

ippathan idha padikkaren
nammala yaravadhu oruththarukku nanmai nadandhuunna aduve peria vishayam
neenga oru 24 kudumbangla vaazha vecchirukkinga
too great

நாகராஜ் said...

பரவாயில்ல அப்பு உங்களை என்னமோ ஏதோன்னு காதல் பால் படிச்சுட்டு நினச்சுட்டேன்

சரி திரும்ப வாறேன்

வலைஞன் said...

கௌதம்
உங்கள் பத்திரிகைத்துறை அனுபவங்களை நிறைய எழுதுங்கள். சந்தித்த மனிதர்களைப்பற்றியும்.

ஜூவியில் பல கொத்தடிமை மீட்பு கவர்ஸ்டோரிகள் வந்துள்ளன. வராத மீட்புகள் இப்படி பல இருக்கும் என்பதை உணரமுடிகிறது.
பத்திரிகையாளனின் தன்னம்பிக்கை இது போன்ற எழுத்தின் வலிமையை உணரும் தருணங்களில் தான் சிறக்கும்.

Vaidehi said...

மறுபடியும் அற்புதம். உங்களிடம் கொஞ்ச காலமே வேலை செய்திருந்தாலும் நான் நிறைய கற்றுக்கொண்டே ன். நன் றி !

Vijayaraghavan said...

Very nice Gotham.....just enjoyed your post....