Thursday, July 06, 2006

குதிரைச் சவாரி / எப்படி? எதற்கு? ஏன்? 2

குதிரைச் சவாரி கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான் ஒருவன். முறையான பயிற்சிக்காக சரியான பயிற்சியாளரைத் தேடினான்.

பல வழிகளிலும் முயற்சி செய்து கடைசியில் அருமையான குரு ஒருவரைக் கண்டுபிடித்தான். அவரைச் சந்தித்தான்.
தன் விருப்பத்தைச் சொன்னான்.

தன்னை நாடி, நம்பி வந்திருப்பதால் உடனடியாக அவனுக்கு பயிற்சி கொடுக்க ஒப்புக் கொண்டார் பயிற்சியாளர். "இன்றே பயிற்சியை ஆரம்பிக்கலாம்"என்றார்.

"அதற்கு முன்னால் ஒரு கேள்வி?" என்றான் வந்தவன்.

"ம்... கேளுங்கள்" என்றார் பயிற்சியாளர்.

"எத்தனை நாட்களில் குதிரைச் சவாரியை நான் கற்றுக் கொள்ள முடியும்?" என்றான் வந்தவன்.

"தினம் நான்கு மணி நேரப் பயிற்சி... இருபது நாட்களில் இந்தக் கலை உங்கள் வசமாகும்" என்றார் பயிற்சியாளர்.

"இல்லை, நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். தினமும் இருபது மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொள்ளத் தயார். எத்தனை நாட்களில் இந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பீர்கள்?" என்றான் வந்தவன்.

அதற்கு அந்தப் பயிற்சியாளர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
?

?

?

?

?

?

?

?

?

?

என்ன யோசிச்சுட்டீங்களா? இப்ப பதில்...

"இதே ஆர்வத்தில் நீங்கள் இருந்தால் இருபது நாட்கள் என்ன... இருபது வருடங்களானாலும் உங்களால் குதிரைச் சவாரி கற்றுக் கொள்ள முடியாது. என்னால் கற்றுக் கொடுக்கவும் முடியாது.
வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நான்கு நாட்களில் சாப்பிடவேண்டிய உணவை ஒரே நாளில் சாப்பிட்டுவிட்டு வந்தீர்கள் என்றால், இருபது நாட்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய பயிற்சியை நான்கு
நாட்களிலேயே உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்" என்றார் பயிசியாளர்.

தலை கவிழ்ந்தான் வந்தவன். சரியான குருவை அடையாளம் கண்டுகொள்ள உதவிய அதே பொறுமை மறுபடியும் அவனுக்கு வந்தது!

7 comments:

கோவி.கண்ணன் said...

ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் பயிற்சியா குதிரையும் செத்துடும் ... பயிற்சி ஆளரும் செத்துடுவான். ஆர்வக்கோளரு பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். தவளை கதையும் நன்றாக இருந்தது

G Gowtham said...

செங்கமலம், abcdஎட்வர்ட்(?)z, கோவி.கண்ணன்..
முகம் தெரியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
தினம் ஒரு கதை சொல்ல முயல்கிறேன்.
ஓரிரு வாரங்கள் அவகாசம் கொடுக்கவும், தமிழ் அடிக்க பழகிக் கொள்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் பயிற்சியா குதிரையும் செத்துடும் ... பயிற்சி ஆளரும் செத்துடுவான். ஆர்வக்கோளரு பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்//

இந்தக் கதையில் உம்மைப் பற்றித்தான் ஏதோ உள்குத்து இருக்கிறது என்பது என் எண்ணம்.

:-))

G Gowtham said...

ஆஞ்சநேயருக்கு அடுத்தபடியாக நாமக்கலுக்கு புகழ் சேர்க்கும் ஐயா சிபி அவர்களே!
(உங்கள் லொள்ளு பதிவுகளையெல்லாம் படிச்சதாலதான் இந்த விளிப்பு... தப்பா எடுத்துக்காதீங்க!)

//இந்தக் கதையில் உம்மைப் பற்றித்தான் ஏதோ உள்குத்து இருக்கிறது என்பது என் எண்ணம்.//

அந்த ஏதோ என்னன்னு எனக்கு புரியல சாமியோவ்!
எடுத்து வுட்டீங்கன்னா புரிஞ்சுப்பேன்!!

நாகை சிவா said...

ஆஹா, நம்ம மக்கள் எல்லாம் ஏற்கனவே வந்தாச்சா! அப்ப சரி, கச்சேரியை இங்கேயும் ஆரம்பித்து விட வேண்டியது தான்

"ஆக்கப் பொருத்தவனுக்கு, ஆற பொருக்கவில்லை". நல்ல கருத்து உள்ள கதை...

நரியா said...

வணக்கம் கௌத்தம்.
சிறிய கதைகள் மிக அருமையாக எழுதுகிறீர்கள். அதில் அடங்கிய தத்துவங்களும் அருமை.

வாழ்த்துக்கள்!!.

நன்றி,
நரியா

G Gowtham said...

நாமக்கல் சிவா,
//ஆஹா, நம்ம மக்கள் எல்லாம் ஏற்கனவே வந்தாச்சா! அப்ப சரி, கச்சேரியை இங்கேயும் ஆரம்பித்து விட வேண்டியது தான்//
எல்லோரும் நம் மக்களே!
உங்க கச்சேரி இங்கே நடந்தால் அது என் பாக்கியம்!


நரியா,
நன்றி. 'வானமே இல்லை' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன். கிழ்க்கு பதிப்பகத்தின் வெளியீடு. சின்னக்கதைகள் வாயிலாக உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ள உத்வும் முயற்சி அது. கிடைத்தால் படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.