Wednesday, July 26, 2006

மீசை வைத்த தேவதை / காதல் பால் 4


செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து

-பொருட்பால், அதிகாரம்: கேள்வி, குறள்: 413

செவிக்கு உணவாகிய கேள்வியினை உடையவர் இவ்வுலகில் வாழ்பவராயினும், அமிழ்தத்தை உணவாகக்கொள்ளும் தேவர்களுக்குச் சமமானவரே.

நாலைந்து கப்பல்கள் மொத்தமாகக் கவிழ்ந்ததுபோல அதீத கவலையுடன் இருந்தாள் அவள்.

அவளது முகரேகைகளைப் பார்த்த வேகத்தில் படித்து விட்டான் அவன். அவனும் வருத்தப்பட ஆரம்பித்தான்!

அந்த அதிகாலை நேரத்தில் அவனையும், அவளையும், இன்னபிற பயணிகளையும் சுமந்தபடி ஒடிக்கொண்டிருந்தது சென்னை மாநகரப் பேருந்து.

ஐந்து நாட்களுக்கு முன்புதான், அதுவும் எதேச்சையாகத்தான் அவளை முதன் முதலாகப் பார்த்திருந்தான் அவன். மயிலாப்பூரில் இருக்கும் அவனது அலுவலகத்துக்கு கே.கே. நகரில் இருந்து ஒரே பஸ் பிடித்தால் போய் விடலாம். அப்படிப் பயணிப்பதே அவன் வழக்கம். வழக்கத்தை மிஸ் பண்ணிய ஒரு நாளில், தி.நகர்வரை பாதி தூரத்துக்கு ஒரு பஸ்ஸும், மீதித் தூரத்துக்கு ஆட்டோவும் பிடிக்கவேண்டியதாயிற்று.

'வெட்டி அலைச்சல்! நேர விரயம்!' என்று அலுத்துக் கொண்டே பஸ்ஸுக்குள் புகுந்தான். அடுத்த ஸ்டாப்பில் ஏறினாள் அந்த அப்சரஸ்! தீமையிலும் நன்மை!!

'ச்சே... இன்னும் கொஞ்ச நேரம் இந்த அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் போய்விட்டதே' என வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தபடிதான் தி.நகரில் பஸ்ஸைவிட்டு இறங்கினான். அவள் அதே பஸ்ஸில் தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.

மறுநாளில் இருந்து தினமும் அந்தப் புது ரூட்டே அவன் வழக்கமானது!

அந்தப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அவளை எட்ட நின்று பார்ப்பான். பார்த்துக் கொண்டே இருப்பான். குறு குறுப்பை உணர்ந்து அவள் எப்போதாவது தலை உயர்த்தித் தேடினால் வேறு பக்கம் திரும்பிப் கொள்வான்.

அவள் தரிசனமே அவன் தவமானது. இன்றோடு வெற்றிகரமான ஆறாவதுநாள். நேற்று ஒருநாள் மட்டும் திடீர் தலை வலியால் ஆபீஸுக்கு லீவு போட்டிருந்தான்.

புன்னகையோடு, புதுப் பொலிவோடு, குழந்தையின் குதூகலத்தோடு, அலுவலகப் பரபரப்போடு, அதிகாலைப் பரவசத்தோடு... இப்படிப் பல உணர்ச் சிகளை அவள் முகத்தில் படித்திருக்கிறான். இந்த நிமிடத்து வருத்த முகம் அவன் இதுவரை பார்க்காதது.

'ஏதோ ஒரு சிக்கலில் இருக்கிறாள் அவள்' என்பது மட்டும் புரிந்தது. அனால் அந்த 'ஏதோ' என்பது என்னவென்றுதான் புரியவில்லை!

பதைபதைப்பும் பரிதவிப்புமாகத் தகித்தான் அவன்.

'பாதி வழியில் பஸ்ஸில் ஏறிக்கொள்ளும் அப்சரஸ்' என்பதைத் தவிர வேறெதுவும் அவளைப் பற்றித் தெரியாது அவனுக்கு. எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கிடையாது அவனுக்குள்.

'கண்டதும் காதல்' பற்றிக்கொள்ளும் வயதையெல்லாம் கடந்து விட்டவன் என்பதால் இந்தப் பக்குவம் அவனுக்கு வந்திருந்தது.

அவளைப் பார்க்க வேண்டும். பத்து நிமிடமாவது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதில் லையா... அப்படித்தான் இதுவும்! இந்தச் 'சாமி' இவனுக்குப் பிடித்திருக்கிறது!

தி.நகரில் கொத்தாக பஸ்ஸைவிட்டு இறங்கினார்கள் பலர். அவனும் கொத்தில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் அவளை விட்டு விலகிச் செல்ல மனமில்லை. பஸ்ஸைவிட்டு இறங்கவுமில்லை. அவளை நெருங்கிச் சென்றான். இன்று அலுவலகத்துக்குப் போன மாதிரிதான்!

புதிதாக முண்டியடித்துக்கொண்டு உள்ளே புகுந்த கூட்டம் பஸ்ஸை நிரப்பியது. அவளுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டான் அவன்.

இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில் இருந்தது அவள் மட்டுமே. பஸ் நகர அரம்பித்தது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாவது முறையாக அவள் முகத்தை மறுபடியும் ஒருமுறை ஓரக்கண்களால் பார்த்து மனதுக்குள் உச்சுக் கொட்டியவன், சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டான். மொத்த பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்து இடம் மட்டுமே காலியாக இருந்தது.

அடுத்த ஸ்டாப். பஸ்ஸில் இருந்து யாரும் இறங்கவில்லை. மாறாக இரண்டு பேர் புது வரவாகச் சேர்ந்து கொண்டனர். உட்கார இடம் தேடிய இருவரும் அவளருகே இருந்த ஒரே ஒரு காலியிடத்தைக் குறி பார்த்து முன்னேறினர்.

அவர்கள் அருகே வரவர... கூடவே காற்றில் மிதந்து வந்தது சாராய நெடி! அந்தக் கருமம்தானோ அவர்களுக்கு பெட்காபி?!

'எங்கே அந்தக் குடிகாரத் தடியர்களில் ஒருவன் தன் அருகே உட்கார்ந்து விடுவானோ' என்ற கலவரத்தில் மருள மருள விழித்தவளது கண்களுக்கு அப்போதுதான் தென்பட்டான் அருகே நின்ற 'சாமி பக்தன்!' உட்கார இடமில்லாமல்தான் அவனும் நிற்பதாக தப்பர்த்தம் செய்து கொண்டாள்.

தடியன்களுக்குப் பதில் இந்த அப்பாவியே தேவலை எனப் பட்டிருக்க வேண்டும்.

"பரவால்ல... நீங்க வேணா உட்காருங்களேன்'' என்றாள் அவளே.

முட்டிக்கொண்டு வந்த தடியர்களையும், அவள் குரலின் வேகத்தையும் வைத்து சூழ்நிலையை யூகித்துக்கொண்டான் அவன்.

கொஞ்சமும் எதிர்பார்த்திராத கணம் அது. தேவதைக்குப் பக்கத்திலேயே உட்கார இருக்கை! உட்கார்ந்தும் விட்டான்!

அவனுக்கும், அவளுக்கும் மிரட்டல் 'லுக்' கொடுத்துவிட்டு தூரப் போனார்கள் குடிகாரர்கள் இருவரும்.

காற்றுக்குப் படபடத்த அவள் புடவை லேசாக அவன் கால்களில் உரசியது. தயக்கத்தோடு விலகி உட்கார்ந்தான்.

அதைக் கவனித்து விட்டாள் அவளும். அவன் மீது அவளையும் அறியாமல் மரியாதை கூடியது! முகம் பார்த்துப் புன்னகைத்தாள். சொற்ப விநாடியில் அவன் 'பணால்!' வெறும் "பணால்' இல்லை, வேகமான 'பணால்!!!

"நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒரு விஷயம் கேட்கலாமா?''

லேசாக அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள். "ம்'' என்றாள்.

"நா ஒரு வாரமா உங்கள இந்த பஸ்ல பார்க்குறேன். இன்னிக்கு மட்டும் ரொம்ப கவலையா, குழப்பமா இருக்கிற மாதிரி தெரியுதே..?''

ஏதோ பேச வாயெடுத்தாள் அவள். குறுக்கே புகுந்தான் அவன்... ""பர்ஸனல் மேட்டர்தான். ஆனா, தினமும் பூ மாதிரி பார்த்த உங்க முகத்தை இன்னிக்கு இப்படிப் பார்க்கிறப்ப மனசுக்கு கஷ்டமா இருக்குங்க''

அவளது கண்கள் பனித்தன. அடக்கி வைத்திருந்த அழுகை!

சட்டென சுதாரித்தாள். விழி நீரைத் துடைத்துக் கொண்டாள்.

அவன் மீது இனம் புரியாத பாசம் வந்தது. "அண்ணா சதுக்கம் ஸ்டாப் இறங்கேய்" என்று கண்டக்டர் கொடுத்த குரலும் வந்தது.

அவள் இறங்கினாள். கூடவே அவனும். அவள் நடந்தாள்; கூடவே அவனும்.

அவனிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருந்தது அவளுக்கு. பேச ஆரம்பித்தாள். முதல் நாளில்... ஒரே நாளில் தான் அடுத்தடுத்து சந்தித்த அத் தனை சோகங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

தன் அம்மாவின் நினைவு நாளான நேற்று காலையில் அப்பாவுக்கும் சித்திக்கும் வீட்டில் நடந்த பெரும் தகராறு பற்றிச் சொன்னாள். அதே துயரத் தோடு ஆபிஸில் தப்பும் தவறுமாக வேலை செய்து உயர் அதிகாரியிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதைச் சொன்னாள். கவலையோடு வீடு வந்தபோது 'ஏண்டி லேட்' என சித்திக்காரி கத்திக் குவித்ததைச் சொன்னாள். நள்ளிரவு வெகுநேரம்வரை தான் அழுததைச் சொன்னாள். சோகத்தைப் பகிர்ந்து கொள்ள தனக்கென யாரும் இல்லாமல்போன சோகத்தைச் சொன்னாள்.

அத்தனை நேரம் நடந்தபடியே அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் சொன்னான்..

"கவலைப்படாதீங்க. இதுவும் கடந்து போகும்னு நம்பிக்கையோட உங்களுக்கு நீங்களே சொல்லிக்கங்க. எல்லாம் சரியாகிடும்...''

எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாயிற்று. பாரம் குறைந்த மனதோடு அவனை நன்றிப் பார்வை பார்த்தாள் அவள்.

அந்தச்சில நொடிகளில் அவளது மனக்கண்களுக்குள் ஒரு கனவு வந்தது. கனவில் ஒரு தேவதை வந்தாள். அந்த தேவதைக்கு மீசை இருந்தது...

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து,
காதல் களத்து...

18 comments:

G Gowtham said...

யாராச்சும் படிச்சுப் பார்த்து ஒரே ஒரு கமெண்ட்டாச்சும் போடுங்கப்பா!

Anonymous said...

COMMENT PODALENNALUM PADICHI KITTU THANPA IRUKKOM..

i like the style of ur writing.

Krish

மணியன் said...

உங்கள் புலம்பல்களைக் கேட்க ஒரு செவி இங்கே! கவலைப் படாதே சகோதரா, கதை சூப்பர்!

நிலா said...

நடையும் வார்த்தைப் பிரயோகமும் நன்று

யாத்ரீகன் said...

அந்த பினிசிங் டச் எனப்படும் முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ;-)

கப்பி | Kappi said...

சூப்பருங்கண்ணா..

G Gowtham said...

Thanks Krish

Sakotharar Maniyanukkum Nandri Ayya

Nandrukku Nandri Nila

Oru Unmai Sollattuma Yathreekan,
Antha final variya vachuthan kathayaiye pidichen!

Kappipaya thambikkum Nandringna

Anonymous said...

நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

முதலில் திருக்குறளில் பிழை திருத்துங்கள். அன்றொர் இல்லை. ஆன்றோர் => தேவர்.

Anonymous said...

super !! i felt as if i was travelling with them.

நவீன் ப்ரகாஷ் said...

தேவதைக்கு மீசை!! வித்யாசமாக இரூகிறது கெளதம்:))

G Gowtham said...

Anonymous no 1,
தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தியதற்கு நன்றி.

Anonymous no 2,
//முதலில் திருக்குறளில் பிழை திருத்துங்கள். அன்றொர் இல்லை. ஆன்றோர் => தேவர்.//
ஐயா மன்னிச்சுக்கங்க... தெரியாம செஞ்ச தப்பு அது!
பூனைக்கும் அடி சறுக்கும்ல!
இப்போ சரி பண்ணிட்டேன்.

கூடவே ட்ராவல் பண்ணியதற்கு நன்றி சிவா

naveen prakash,
//தேவதைக்கு மீசை!! வித்யாசமாக இரூகிறது கெளதம்:))//
நீங்களும் நானும்கூடத்தான் அந்த தேவதை நவீன்!!!

Anonymous said...

nalla keethu pa un matter. thochiya yethikinay iru ma kannu. aana romba sentimanta keethu pa. konjam gilmava yeithu.okie............... varataa.............

Anonymous said...

nalla keethu pa un matteru. thochiya yeithikinay iru ma kannu. romba sentimanta keethu pa. konjam mattera podu. okie................. varataa.....................

Anonymous said...

nalla keethu pa un matteru. thochiya yeithikinay iru ma kannu. romba sentimanta keethu pa. konjam mattera podu. okie................. varataa.....................

Unknown said...

ரொம்ப நல்லா இருந்துச்சுங்க...

உங்க நடையும், முடிவும்!!!

நாகராஜ் said...

அருட் பெருங்கோவும் நல்ல எழுத்தாளர்,அவரும் பாராட்டி இருப்பது கவுதமை உற்சாகமாக எழுத வைக்கும். தொடருங்கள் G.K

இப்படிக்கு
குமரன்@முத்தமிழ்மன்றம்.காம்

Om Santhosh said...

கதை நன்றாக இருந்தது.
யார்? அந்த மீசை தேவதை சொல்லிருக்கலாமே!