Tuesday, October 03, 2006

சீச்சீ! நான் மாட்டேன்! / காதல் பால்


ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
- பொருட்பால், அதிகாரம்: 98. பெருமை, குறள்: 974

கற்புடைய பெண்களைப் போல எவனொருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடப்பானாயின் அவன் பெருமைக்குரியவனே!

ட்டம் சூடு பிடித்தது. விசில் சத்தம் கூரையைக் கிழித்தது!

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை அதுவரை ‘இந்தப் பூனையா பால் குடிக்கப் போகிறது’ என யோசிக்கவைத்திருந்த அந்த அழகுப் பெண் தன் ஆடைகளை விலக்க ஆரம்பித்து விட்டாள்!

புகையும், கூத்தும், கும்மாளமுமாக கூக்குரல் கொடுத்த கூட்டம் உற்சாகப் பெருங்குரலெடுத்து ஆர்ப்பரித்தது. ‘திடும் திடும்’ என ஸ்பீக்கர் ஸ்பீடும் ஏகத்துக்கு எகிறிப் போயிருந்தது.

அப்படியும் இப்படியுமாக தளர்த்திக் காட்டிய தன் மேலாடையை சட்டென உருவி, கூட்டத்தை நோக்கி வீசினாள் ஆட்ட நாயகி!

திறந்த வாய் மூடாமல் வெறித்தனமாக அவளை விழுங்கிக் கொண்டிருந்தன கூட்டத்துக் கண்கள்.

“மச்சி.. கொடுத்த பணத்துக்கு சரியான மேட்டர்டா!” என்றான் ஒருவன்.

“மெரட்டிட்டாடா! இன்னிக்கு தூக்கம் போச்சு போ!” என்றான் இன்னொருவன்.

“உஸ்.. சத்தம் போடாம வந்த காரியத்தைக் கவனிங்கடா. டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்றான் மூன்றாவது ஆள்.

“நான் கிளம்புறேன். எனக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கல. ‘ட்ரிங்க்ஸ் பார்ட்டி’னு பொய் சொல்லி என்னை இங்கே கூட்டிட்டு வந்ததுக்காக இன்னும் ஒரு வாரத்துக்காச்சும் உங்களோட நான் பேசப்போறதில்லை” என்றான் அவன், நாலாவது ஆள், நம் கதையின் நாயகன்.

அவன் விருட்டென வெளியே கிளம்ப, எரிச்சலோடு எழுந்து பின்னே ஓடினார்கள் மற்ற மூன்று நண்பர்களும்.

கேபரே கொண்டாட்டத்தை முழுதுமாக அனுபவிக்க முடியாத கோபத்தோடு அவனைப்பிடித்து நிறுத்தினார்கள்.. “சரி வந்துதொலை. குடிக்கப் போலாம்”

அவசரக் குடியர்கள் எல்லாம் எழுந்து அவரவர் திசைகளுக்குப் போய்விட பாரில் இவர்கள் நான்கு பேர் உட்பட ஒரு சில மொடாக்குடிகாரர்கள் மட்டுமே இருந்தனர்.

“ச்சே.. என்ன ஒரு அழகு! அசத்திப்புட்டாடா அந்த கேபரே டான்ஸர். பார்த்ததெல்லாம் அப்டியே கண்ணுக்குள்ள இருக்கு” என்றான் முதலாவது ஆள்.

அதட்டுப் போட்டான் அடுத்தவன்.. “அடச்சீ. என்னது சின்னப்புள்ளத்தனமாட்டம்? ஏதோ காணாததக் கண்டமாதிரில்ல இந்த வழி வழியுறே!”

வழி மொழிந்தான் மூன்றாமவன்.. “ஆமால்ல.. அப்ப பிடிச்சு அந்த ஆட்டக்காரி அழகையே புகழ்ந்துட்டு இருக்கான் இவன். டேய் மாப்ளை, இந்தமாதிரி இடத்துக்கெல்லாம் வந்தமா பார்த்தமா போனமானு இருக்கணும். அளவுக்கு மிஞ்சி ஜொள் விடக்கூடாடது. மீறினா தங்கச்சிகிட்ட போட்டுக் கொடுத்துடுவோம், ஜாக்கிரதை!”

எட்டிப் பார்த்த கோபத்தோடு கடுகடுப்பாகக் கேட்டான் நான்காவதாக இருந்த அவன்.. “கல்யாணமாகி பிள்ளை குட்டி பெத்தவன் மாதிரியா பேசுறீங்க? அதத்தவிர வாழ்க்கைல வேற எதுவுமே இல்லையா?”

கெக்கே பிக்கே எனச் சிரித்தார்கள் அனைவரும்.

“இங்க பாருங்கடா நம்ம சாமியார் என்ன சொல்றார்னு! டேய்.. நீ சொன்னியே பிள்ளை குட்டி அதெல்லாம் எப்புடி பொறக்குதாம். இப்படி நாலு இடத்துக்குப் போயி நாலையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டாத்தான் எப்பவும் படுக்கையில கும்னு இருக்கலாம் தெரிஞ்சுதா..” எனக் கிண்டலடித்தான் ஒரு நண்பன்.

“ஓஹோ அதான் இவன் அஞ்சு வருஷத்துல நாலு பிள்ளை பெத்த ரகசியமா!” என பதில் கிண்டல் கொடுத்தான் இன்னொரு நண்பன்.

மூன்றாமவன் எல்லை கடந்தான்.. “ஆமா உன் முதல் இரவு எப்டி மச்சி நடந்தது? எவ்வளவு நேரம் தாக்குப் பிடிச்சே நீ?”

பெருமையோரு பேசலானான் முதலாமவன்.. “அதையேன் கேட்கறீங்க. அவ கொண்டு வந்த பால் பழத்தையே விடிஞ்ச பிறகுதான் குடிச்சோம்னா பார்த்துக்கங்க” என்றான். தொடர்ந்து தன் முதல் இரவு அனுபவத்தை விலாவாரியாக விவரித்தான்.

அவன் முடித்ததும் இரண்டாவது ஆள் ஆரம்பித்தான்.. “லைட்டை அணைக்கவே விடமாட்டேன்னுட்டா என் பொண்டாட்டி. இருட்டு அவளுக்குப் பிடிக்காதாம். அப்றம் என்ன.. விளக்கு வெளிச்சத்திலேயே..”

அடுத்தது மூன்றாவது ஆளின் முறை. பொதுக்கூட்டத்துக்கு பேசப்போகிறவன் மாதிரி தொண்டையைக் கணைத்துக் கொண்டு கொட்டத் தொடங்கினான்.. “அந்த விஷயத்துல நான் கொடுத்து வச்சவன்டா. என் வொய்ஃப் என்னைவிட வேகமா இருந்துட்டா. அவதான் எனக்கு முதல் கிஸ் கொடுத்தா..”

மூன்று பேரும் பேசி அடங்கியதும் அவன் பக்கம் திரும்பினார்கள்.

“என்னடா சாமியார். உன் ஃபர்ஸ்ட் நைட் எப்டி நடந்தது? இல்ல.. நிஜமாவே நடந்ததா?”

கொல்லெனச் சிரித்தார்கள் அனைவரும். மிச்சம் மீதமிருந்த மதுக் கோப்பைகளை ஒரே மூச்சில் காலியாக்கினார்கள்.

அதுவரை தன் காதுகளை அடைத்து வைத்திருந்த பஞ்சுத் துகள்களை வெளியே எடுத்தான் அவன்.

“பேசி முடிச்சுட்டிங்களா உங்க அநாகரிகத்தையெல்லாம்?”

“அப்ப இவ்வளவு நேரம் நாங்க எங்க முதல் இரவு பத்தி சொன்னதையெல்லாம் நீ கேட்கவே இல்லியா?”

“இல்ல!”

“ஏன்?”

“அந்த காதல் கொலையை நானும் செய்ய விரும்பல”

எல்லோரும் அமைதியானார்கள். தொடர்ந்தான் அவன்.. “ நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு எத்தனையோ தடவை வந்திருக்கீங்க. என் மனைவியையும் பார்த்திருக்கீங்க. அஃப்கோர்ஸ் அவளை நீங்க எப்பவும் தப்பா நினைச்சதில்லைன்னாலும் எங்க கட்டில் வாழ்க்கை பத்தி நா உங்களோட பேசினேன்னா.. அது உங்களை தப்பா யோசிக்க வெச்சுடும். நான் என்னைப்பத்தி சொல்றப்ப, நீங்க என் மனைவியையும் சேர்த்தே கற்பனை பண்ணிக்குவீங்க. என் மனைவியை அரை குறை உடைகளோட உங்க கற்பனைப் பொருளாக்க நானே உடந்தையா இருக்கணுமா? ஒரு மனைவியோட காதலை மட்டுமல்ல கட்டிலையும் மத்தவங்ககூட பகிர்ந்துக்க எந்தவொரு நல்ல கணவனும் விரும்பமாட்டான். அது நிஜத்தில்தான் என்றில்லை, கற்பனையிலும்!”

சொல்லிவிட்டு எழுந்து பெருமையோடு நடக்கலானான் அவன். குடித்ததெல்லாம் வடிந்து போன உணர்வோடு சிலையாக நின்றார்கள் நண்பர்கள் மூவரும்.


ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
, தன் காதலையும் கொண்டொழுகின்!

முந்தைய காதல்பால் இங்கே!

2 comments:

ILA (a) இளா said...

படமும், விளக்கமும், பால் குடிக்க நினைத்த பூனைகளும், அதற்கு சூடு போட்ட பூனையும் சூப்பர்.

Anonymous said...

அண்ணே!

கட்டில் சமாச்சாரம் தனிப்பட்ட விஷயம்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்! ஆனால் கதை கேட்காம காதை மூடினவன் அந்த நேரமெல்லாம் நண்பனோட மனைவியை நினச்சு பாக்காம இருந்தான் என்பதை என்னால ஒத்துக்க முடியலை! அந்த எண்ணம் இருந்ததனால தானே அவன் காஅதையே மூடினான்!