"ச்சே! நீ இப்படி நடப்பேன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலே. இனிமே உன் சங்காத்தமே எனக்கு வேணாம்..” - கோபாவேசமாகச் சொல்லிவிட்டு வெளியேறினான் ரமேஷ்.
அவனை எரித்துப் பார்த்தபடியே சொன்னான் சுரேஷ்.. “போடி போ! கோடி ரூபா கொடுத்தாலும் உன் ஃப்ரெண்ட்ஷிப் எனக்கு வேணாம். விட்டது பீடை..”
அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மொத்தம் நாற்பது பேர். ரமேஷையும் சேர்த்து சுரேஷோடு சண்டை போட்டுப் பிரிந்து போனவர்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு!
மிச்சம் இருக்கும் முப்பத்தொன்பதாவது ஆள்.. விகேஷ் மட்டுமே!
தனியே உட்கார்ந்து யோசித்தபோது அதிர்ந்தான் சுரேஷ். தனக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் ஆறுதலாகப் பேச அந்த அலுவலகத்தில் இருப்பது விகேஷ் மட்டும்தான் என்ற உண்மையை உணர்ந்ததால் பயம் வந்தது அவனுக்கு.
விலகாத பயத்துடன் விகேஷைச் சந்திக்க ஓடினான்.
“என்னாச்சு? ஏன் இப்படி வியர்க்க விறுவிறுக்க ஓடி வர்றே?” என்று கேட்டான் விகேஷ்.
“இந்த ஆபிஸ்ல என்கூட சிரிச்சுப்பேசுற ஒரே ஒரு ஆள் நீ மட்டும்தான். ஆனா உனக்கு இங்க இருக்கும் அத்தனை பேருமே ஃப்ரெண்ட்ஸ். யாருமே உன்கூட சண்டை சச்சரவுன்னு போடுறதில்லை. அதெப்படி உனக்கு மட்டும் எல்லாருமே இணக்கமான ஆளாயிடுறாங்க? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லித்தர முடியுமா?” என்று கெஞ்சலோடு கேட்டான் சுரேஷ்.
சொன்னான் அந்த ரகசியத்தை விகேஷ். என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா?
?
?
?
?
?
?
?
“ஆரம்பத்தில் எனக்கும் உன் போல சண்டைக்குணம் இருந்தது. ஒரு கட்டத்தில் திருந்தினேன். யாருடன் பேசினாலும் ஒவ்வொருமுறையும், ‘ஒருவேளை இது நாங்கள் இருவரும் கடைசியாகப் பேசிக்கொள்ளும் வாய்ப்பாகக்கூட இருக்கலாம்’ என எனக்குள் சொல்லிக்கொள்வென். அதன் பிறகு நட்பு மட்டுமே என் வார்த்தைகளாகும்!”
1 comment:
நல்ல பதிவு கெளதம்.
இதைப் படிக்கும் போதே எனக்கு ஒரு ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வந்தது..
"Every Arugment has 3 sides.. myside,yourside and the rightside"
Post a Comment