Friday, June 25, 2010

ஒரு துளி கடல்! - அதே இடம்! வெவ்வேறு நேரம்!

விசாலப்பார்வையால் விழுங்குவோம் மக்களை!
ணக்கம் வாசக நண்பர்களே!
தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதைக் கவனித்திருக்கிறீர்களா?

இரையை கொஞ்சம்கூட சிந்தாமல் சிதறாமல் ’வயிறு கொள்ளுவத’ற்காக குஞ்சுப்பறவைகள் வெகு விசாலமாக வாய் திறந்து வாங்கிக்கொள்வதைப் பார்த்து பிரமித்திருக்கிறீர்களா?

நம்மைச் சுற்றியும் இப்படி நமக்கு இரை கொடுக்க எத்தனையோ தற்காலிகத் தாய்ப்பறவைகள்!
சில உயிர்ப்பறவைகள்.. சில உயிரற்ற பறவைகள்!

நம்மை நாமே குஞ்சுப்பறவைகளாய் மாற்றிக்கொண்டு,
விசாலமாக விழுங்கக் கற்றுக்கொள்வதால்
விளைய வைக்க முடியும் பல நன்மைகளை
நமக்குள்ளும் – நமக்கும் – நம்மைச் சுற்றியும்!

அடாவடி ஆட்டோக்காரன் போல சுற்றி வளைத்து ஊர் போய்ச் சேராமல், நான் கவனித்த இரையை உள்ளது உள்ளபடி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

எனக்குக் கிடைத்தது.. சாப்பிடலாம் வாங்க!  

1
அதே இடம்.. வெவ்வேறு நேரம்!


துவரை நூற்றுக்கணக்கான தடவைகள் அந்த இடத்தைக் கடந்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொருமுறையும் புதிதாகவே உணர்கிறேன்!

வீட்டில் இருந்து புறப்பட்டு, சிலபல ‘இடது – வலது’களைக் கடந்தபின் எனக்கு இடப்புறமாக எதிர்ப்படும் இடம் அது. அது என ஒருமையில்தான்  சொல்ல வேண்டும் என்பதில்லை, உயிர்மையில் சொன்னால்கூட என்னைப்பொருத்தவரை தப்பில்லை.

அது என் கவனத்தைக் கவர ஆரம்பித்த முதல் நாள் இப்போதும் அப்படியே நினைவில் நிற்கிறது.

’வழக்கம்போல குறட்டைவிட்டு தூங்கி சொதப்பிடாதே. அஞ்சு மணிக்கெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் வந்துடு. கவுத்துடாதே!’ என மொபைல் போனில் ஒரு முறையும், கனவில் வந்து பல முறையும் மிரட்டிய நண்பனின் லொள்ளு தாங்கமாட்டாமல் அதிகாலை நான்கு மணிக்கே படுக்கையில் இருந்து எழுந்துவிட்டேன்.

பின்பசிக்கு முன்பே முன்பசிக்கும் கொஞ்சம் சாப்பிடும் குழந்தை மனசுக்காரன் போல, காலைக்கடன்களைக் கொஞ்சமேகொஞ்சம் அடைத்துவிட்டு மிச்சம் மீதியை ’வந்து பார்த்துக்கலாம்’ என்ற நினைப்போடு பைக்கை உதைத்தேன். சிலபல ’இடது – வலது’களைக் கடந்தேன்.

காலியாகக் கிடந்த தெருக்களைத் தாண்டிய வாகனம் திடீரென நின்று நிதானிக்க வேண்டியிருந்தது. கசமுசாவெனக் கொஞ்சம் மனிதர்கள்! பிரேக் பிடித்து, தலை திருப்பி, என்ன – ஏதுவெனக் கவனித்தேன்.

பெரிதாக ஒன்றுமில்லை.. பால் விற்பனைதான். ஜோராக நடந்துகொண்டிருந்தது.

மரச் சட்டங்களை குறுக்கும் நெடுக்குமாக அடுக்கி, ஆணியடித்து டேபிள் போல தோராயமான ஒரு தோற்றத்தில் இருந்த மேடைமீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன பால் பாக்கெட் ட்ரேக்கள்.

டேபிளுக்கு அந்தப்பக்கம் ஒரு நடுத்தர வயது பெண்மணியும், தூங்குமூஞ்சி குட்டிப்பெண் ஒருத்தியும் பரபரப்பாக வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்தனர். அதிகாலை இருளில் எதிரே நிற்கும் நபர்களின் முகம் பார்த்த வேகத்தில், அவர்கள் கேட்காமலேயே ஒன்று, அல்லது இரண்டு பாக்கெட்டுகளை எடுத்து மின்னல் வேகத்தில் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ரெகுலர் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என மனதுக்குள் எண்ணியபடியே கூட்டத்தைக் கடந்து வண்டியின் கியரை மாற்றினேன்.

அந்த மரச்சட்டங்களால் ஆன டேபிள் போன்ற பொருள்தான் இந்தக்கட்டுரையின் கதாநாயகன் என அப்போது எனக்குத் தெரியவில்லை!
ந்த நாளை அனுப்பிவிட்டு, இன்னும் சில நாட்களைக் கடந்துவிட்டு, வேறு ஒரு நாள்!

ஒரு முக்கியமான ஃபைலை வீட்டில் வைத்துவிட்டு வந்ததால் அதை எடுப்பதற்காக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது மணி பகல் ஒன்றைத் தாண்டியிருக்கும்.

’தேவையா இந்த அலைச்சல் உனக்கு? ஒழுங்கா கவனமா காலைல கிளம்புறப்பவே மறக்காம ஃபைலை எடுத்திருக்கலாம்ல!’ - வடிவேலு பாணியில் எனக்கு நானே பேசியபடியே பயணித்திருந்தவன், பைக்கின் வேகம் குறைத்தேன்.. அதே இடம்! அன்று போலவே கசமுசா கூட்டம்!!

அனிச்சையாக தலை திருப்பினேன். ‘ஹாய்’ சொன்னது அதே மரச்சட்ட டேபிள்.

அதன்மீது இப்போது பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக.. ஏதோ சில நியூஸ் பேப்பர் பொட்டலங்கள். ஒரு ஓரமாக டேபிளோடு ஒட்டிக்கொண்டிருந்த உடைந்த சிலேட்டுப்பலகை ‘சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம்’ என தகவல் சொன்னது!

‘அட’ சொன்னபடியே டேபிளுக்கு அந்தப்பக்கமாக உட்கார்ந்திருந்த பாட்டியம்மாவைப் பார்த்தேன். பேச்சுலர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் சோத்துக்கடை நன்றாகவே நடந்துகொண்டிருந்தது.

நான் கடந்து போனேன். சில நாட்களும் கடந்து போயின.

ழக்கமாக இரவு பத்து மணியைத் தாண்டியபிறகே வீட்டுக்குத் திரும்பும் பழக்கமுள்ள நான், அன்று எட்டாவது உலக அதிசயமாக மாலை ஆறு மணிக்கே ’U’ டர்ன் அடித்தேன்!

இந்த அகால(?!) நேரத்தில் என்னை யாருமே வீட்டில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ரியாக்‌ஷனும் எப்படி இருக்கும் என கற்பனை பண்ணியபடியே பைக் மிதித்திருந்தவனை பிரேக் அடிக்கவைத்தது அதே இடம்!

இளம் தம்பதி ஒன்று கை உயர்த்தியபடியே சாலையின் குறுக்கே புகுந்தது. பைக்கை நிறுத்தி கால்களை ஊன்றினேன். புன்னகைத்தபடியே ஜோடி சாலையைக் கடந்தது.

நேராகப்போய்.. எதிரே இருந்த பூக்கடையில் நின்றனர் தம்பதி சமேதராக.

முழங்கையை நீட்டி மடக்கி அவர்களுக்கு பூ கொடுத்த டீன் ஏஜ் பெண்ணைப் பார்த்த என்னை விசிலடிக்காமல் கூப்பிட்டது அதே மரச்சட்ட டேபிள்! ’என்னைப்பார் என் அழகைப்பார்’ என்றது!

அடடே.. பூக்கடைக்கும் அதே டேபிள்!

தற்குப்பிறகு அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் என்னை அறியாமலேயே என் கண்கள் அந்த டேபிளைத் தேடும். பால் கடையாகவோ, சோத்துக்கடையாகவோ, பூக்கடையாகவோ, அல்லது ஒன்றும் தெரியாத அப்பாவி போல கட்டைச் சுவரில் சாய்ந்தபடியோ.. தினமும் எனக்கு சேதி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது அந்த டேபிள்.

எடுத்திருக்கும் ஒரே ஒரு வேலையைக் கூட உருப்படியாக முடிக்க முடிக்காமல் திண்டாடும் நண்பர்கள் யாராவது இருந்தால் என்னிடம் அழைத்து வாருங்கள். எதை – எப்போது – எப்படி என சரியாகத் திட்டமிட்டு, அதற்காக நேரத்தைப் பகிர்ந்துகொண்டு செய்வதால் ஒருவேலையை என்ன..  ஓராயிரம் வேலைகளை ஒருவனால் திறம்படச் செய்ய முடியும் என சொல்லாமல் சொல்லும் நமது ’கதாநாயகனை’ப் போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம்!


- நன்றி: சூரிய கதிர் - மாதமிருமுறை இதழ்

No comments: