கல்லூரிக்காலத்தில் இருந்து அந்தக்கவலை என்னைப்போட்டு அரித்துக்கொண்டே இருக்கிறது! தலை போகிற பிரச்னையினால் ஏற்பட்ட கவலை இல்லையென்றாலும், தலைக்கு மேல் இருப்பது ஒவ்வொன்றாக என்னைவிட்டுப் போய்க்கொண்டே இருப்பது பற்றிய கடுங்கவலை அது!
முன்னே வந்து கொத்தாக விழுந்து, புருவங்களை மறைக்கும் முடியை அப்படியே சுருளாக வளைத்து, பிறைநிலா போல அரைவட்டம் உருவாக்கி, படு ஸ்டைலாக பள்ளிக்கூடம் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் தெரியாது.. அந்த முன் மண்டை முடிகளுக்கு அல்பாயுசுதான் என்று!
”உங்கப்பாவுக்கு இருக்கும் வழுக்கைத் தலைக்கு இந்த வயசுல உனக்கு இவ்வளவு முடி இருக்கிறதே பெரிய ஆச்சர்யம்” என நண்பர்கள் ஆறுதல் படுத்துவதுண்டு. அப்படித்தான் நானும் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொள்வேன்.
‘காலுக்கு செருப்பு இல்லையே என கவலைப்படுபவன், கால்களே இல்லாதவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசித்துப்பார்க்க வேண்டும்’ என எப்போதோ யார் சொல்லியோ கேட்ட உலகப்பழமொழிகூட, ‘தலையில் முடி அதிகமாக இல்லையே என கவலைப்படுபவன், தலையில் முடியே இல்லாதவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசித்துப்பார்க்க வேண்டும்’ என்றுதான் என் காதுகளுக்குள் பத்திரமாக பதிந்திருக்கிறது.
கண்டகண்ட கழுதை குதிரை எண்ணெயெல்லாம் வாங்கித் தேய்த்து ஓரளவுக்கு பாதுகாத்துக்கொண்டே இருக்கிறேன். பார்க்கலாம்.. இன்னும் எத்தனை வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டியதுதான்.. வேறு வழி?!
சரி, சொந்தக்கதை போதும்.. வந்த கதைக்கு போகலாம்!
குமரன் செந்திலை நான் முதன் முறையாகப் பார்த்தபோது அவர் தலையில் கருகருவென அடர்த்தியாக முடி இருந்தது. அவரும் என்னைப்போலவே இன்ஞினியரிங் படித்துவிட்டு, பத்திரிகையாளராக அவதாரம் எடுத்தவர் என்பதால், அவர் மீது கொஞ்சம் பாசம் எனக்கு அதிகம்.
ஆனந்த விகடனில் பணி புரிவதற்காக நான் சென்னை வந்த காலத்தில் குமரன் செந்தில் விகடனின் சினிமா செய்தியாளர். பிரபல நடிகர் – நடிகைகளுக்கெல்லாம் போகிறபோக்கில் போன் போட்டு ஜாலியாகப் பேசும் அவரை நாங்கள் அப்போது பிரமிப்பாக பார்ப்போம்.
எனக்கும் என்னுடன் சென்னைக்கு பத்திரிகைப் பணிக்காக வந்திருந்த இன்னொரு நண்பனுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதுபோக்கு என்ன தெரியுமா! சினிமாக்காரர்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே குமரன் செந்திலோடு ஒட்டிக்கொண்டு ஊர் சுற்றுவோம்.
அவர் போகும் சினிமா கம்பெனிகளுக்கெல்லாம் கூடவே போய், அதுவரையில் நாங்கள் திரையில் மட்டுமே பார்த்திருந்த பிரபலங்களெல்லாம் அவரோடு ‘வாடா மச்சான்’ லெவலுக்குப் பேசுவதை பரவசத்தோடு பார்ப்போம். அது ஒரு காலம்!
கால சுனாமியால் பாதைகள் மாறி பயணம் செய்து, அதே குமரன் செந்திலை பத்து வருடம் கழித்து பார்த்தபோது.. பாவமாக இருந்தது!
ஆள் அப்படியேதான் இருந்தார். ஆனால் தலையில் நிறைய சந்துபொந்துகள். முக்கால்வாசி முடிகள் கொட்டிப்போய் நிறைய வழுக்கைககள் வாங்கியிருந்தது அவரது தலை.
முடி கொட்டாமல் தடுத்து நிறுத்துவது என்ற என்ற எனது தனிப்பட்ட கவலை அவரோடு சேர்ந்து இருவருக்கும் பொதுவான கவலையானது. அதன்பின்னர் நாங்கள் சந்திக்க நேரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாதி நேரத்தை இப்படி முடிக்காக கவலைப்படுவதிலேயே கடத்திவிடுவோம்.
மறுபடியும் இருவருக்கும் வெவ்வேறு திசைகளில் வாழ்க்கைப் பயணம்.. எங்கள் சந்திப்புகள் குறைந்துகொண்டே போய், ஒருகட்டத்தில் சுத்தமாக நின்றுபோயின.
நான்கு வருடங்கள் கழித்து ஒரு நாள்.. ஏதேச்சையாக தெருவில் பார்த்தேன் குமரன் செந்திலை.
ஒரு கணம் ஷாக் ஆனேன் புன்னகைத்தபடியே என்னை நோக்கி வந்துகொண்டிருந்த உருவத்தைப் பார்த்து. அவர் போலவேதான் இருக்கிறார், ஆனால் அவர் போல அல்ல! தலை முழுக்க கரும்கும் என காடு மாதிரி மண்டிக்கிடந்தது முடி!
அடக்க முடியாத ஆர்வத்துடன் எடுத்த எடுப்பில் அதைத்தான் கேட்டேன்.. “என்ன செந்தில், விக் முடியா?!”.
“ம்ஹூம்.. இப்போது நீங்கள் பார்த்து பிரமித்துக்கொண்டிருப்பது அத்தனையும் அடியேனுடைய சொந்த உடம்பில் கருவாகி உருவாகியிருக்கும் ஒரிஜினல் முடிகளாக்கும்” என பெரும் பெருமையோடு சொன்னார் குமரன் செந்தில். தன் கருகரு கூந்தல் ரகசியத்தை எனக்கும் சொல்லிக்கொடுத்தார்.
”இங்கே பாருங்க.. நான் சொல்றதை அப்படியே கேளுங்க. நாளைக்கே சலூனுக்கோ கோயிலுக்கோ போய், பக்காவா ஒரு மொட்டை போடுங்க. மூணு நாளில் முட்டிக்கிட்டு வந்து முளைச்சு நிற்கும் முடி. மறுபடியும் சலூனுக்குப் போங்க. க்ளீன் ஷேவ் பண்ணிக்கங்க. இப்படியே மூணு நாள், ஒரு வாரம்னு சின்னச் சின்ன இடைவெளி கொடுத்து திரும்பத்திரும்ப மொட்டை போட்டுக்கிட்டே இருங்க”.
‘அப்படிச் செஞ்சா?!’
“ஒவ்வொரு முறை நீங்க மொட்டை போடுறப்பவும் புது வேகத்தோட புறப்பட்டு வரும் வெட்டப்பட்ட முடிகள். தவிர, ஒவ்வொரு முறையும் புத்தம் புதுசாகவும் பல முடிகள் முளைக்கும். அனுபவப்பூர்வமா நான் கண்ட உண்மை இது. ஏன்.. நீங்களேகூட இப்ப என் தலையைக் கண்டுக்கிட்டுத்தானே இருக்கீங்க!”
குறும்பாகச் சொன்னார் குமரன் செந்தில். வியப்போடு கேட்டுக்கொண்டேன்.
‘அப்போ.. திரும்ப திரும்ப மொட்டை போட்டுக்கிட்டே இருந்தா இழந்த ஏரியாக்களில்கூட திரும்ப முடி முளைச்சிடும்னா சொல்றீங்க?!’
”பாஸ்.. உங்க கண்ணு முன்னாடி நான் இருக்கேனே நடமாடும் சாட்சியா. ஆறுமாதம் மொட்டை போட்டுக்கிட்டே இருப்பேன். அடுத்த ஆறுமாதம் அழகா தலை வாரிப்பேன். ஒவ்வொரு வருஷமும் இரண்டாவது ஆறு மாதம் ஸ்டைலா தலை வாரிக்கணும்னா, முதல் ஆறு மாதம் முழுக்க மொட்டையோ மொட்டைதான். சத்தியமா என்னை நம்புங்க.. வெறெந்த சீக்ரெட் ட்ரீட்மெண்ட்டும் நான் பண்ணியதில்லை” என தலையில் அடிக்காத குறையாகச் சொல்லிவிட்டுப் போனார் குமரன் செந்தில்.
அவரது அட்வைஸ்படியே முதல் ஆறுமாதம் தொடர் மொட்டைத் தலையோடு இருந்த நான், ஏழாவது மாதம் முளைத்திருந்த நிறைய முடியோடு தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தது.
“அம்மா.. உன் ஃப்ரண்டுக்கு தலையில முடியெல்லாம் இருக்கே திடீர்னு!” என தோழியின் பையன் அதிர்ச்சியோடு கேட்கவே, அதற்கப்புறம் மொட்டை போடுவதையே நிறுத்திக்கொண்டேன் நான். குமரன் செந்திலின் கூந்தல் வளர்ப்பு டிப்ஸ் எனக்கு அந்த அளவில் பயன்படவில்லை. என்றாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணற்ற சந்தர்ப்பங்களை வாழ்க்கை எனக்கு கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது!
ஆசை ஆசையாக ஒரு விஷயத்தைச் செய்வேன். ஆர்வக்கோளாறு காரணமாக தோற்றுப்போவேன்.
மொட்டை போடப்படும் முடி போல, முன்னை விடவும் வெகு வேகமாக முளைத்து எழுவேன். இம்முறை எதிரிகளின் சூழ்ச்சியால் மறுபடியும் தோற்பேன்.
மறுபடியும் புதிய வேகத்தோடும் புதுப்புது யுக்திகளோடும் மீண்டும் முளைத்து எழுவேன்.
எத்தனை முறை தோற்றாலும் கவலையில்லை எனக்கு. மொட்டையடித்து முடக்கப்படும் முடியாக என்னைக் கற்பனை பண்ணிக்கொள்வேன். என்னையும் அறியாமல் வேகம் கொள்வேன்.
No comments:
Post a Comment