Sunday, December 19, 2010

நாளை - இன்று - நேற்று / ஒரு துளி கடல்


பத்திரிகைகளுக்கு படம் வரையும் ஓவியர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை கொண்டவர்கள்.

ஷ்யாமிடம் டெலிபோனில் கதையையும் படம் வரைய வேண்டிய காட்சியையும் விவரித்துவிட்டு, அடுத்த நிமிடம் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனால் ஓவியம் தயாராக இருக்கும்.
சில சமயங்களில் கதையைக் கொண்டு போகும் அலுவலக உதவியாளரை, ‘ஒரு நிமிஷம்’ என உட்காரவைத்துவிட்டு, அவர் கண் எதிரிலேயே அந்த ஒரே நிமிடத்தில் படம் வரைந்து, கையோடு கொடுத்தனுப்பி விடுவார் மனிதர். அந்த அளவுக்கு கிடு கிடு கிராதக ஓவியர் அவர்!

அதேசமயம்.. எவ்வளவு கிடுகிடுவென ஷ்யாம் ஓவியம் வரைந்து கொடுத்தாலும் அவர் ஓவியங்களில் சிரிக்கும் பெண்களைப் பார்த்த மாத்திரத்தில் மனதுக்குள் காதல் கொப்பளிப்பதைத் தவிர்க்கவே முடியாது!

இன்னொருவர் மணியம் செல்வன். அவரிடம் பத்திரிகைகளுக்கு ஓவியம் வாங்குவது ஜேசுதாஸை சினிமாவுக்குப் பாடவைப்பதுபோல அவ்வளவு சுலபமான காரியமில்லை. எல்லோருக்கும் சாத்தியப்படுவதுமில்லை.

எடுத்த எடுப்பில் ’சரிம்மா.. பத்து நாள் கழிச்சு வந்து வாங்கிக்கம்மா’ என பாசமாகச் சொல்வார். உரிமையும் பாசமும் அவர் குரலில் இருக்கும்.

’இல்லை சார்.. கொஞ்சம் அவசரம்..’ என தலையைச் சொறிந்தால், ‘ஒரு வாரம்’ என்பார்.

‘சார், டெம்போவெல்லாம் வச்சுக் கடத்தி இருக்கோம். பார்த்துப் போட்டுக் கொடுங்க’ என கெஞ்சினால் குறைந்த பட்சம் ’மூன்று நாள்’ என இறங்கி வரலாம். அப்படியும் அந்த மூன்றாவது நாளில் போய் நின்றவுடன் ‘இந்தா பிடி’ என எடுத்துக் கொடுத்துவிட மாட்டார்.

‘இன்னும்.. இன்னும்..’ என ஓவியத்தை மெருகு படுத்திக்கொண்டே இருப்பார். சுலபத்தில் திருப்தி அடைந்துவிட மாட்டார்.

அலுவலகத்தில் அந்த ஒரே ஒரு ஓவியத்துக்காக அச்சு இயந்திரம் காத்திருக்கும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பவேண்டுமே என எல்லோரும் டென்ஷனோடு காத்திருப்பார்கள்.

எத்தனை எரிச்சல்கள் இருந்தாலும் எல்லோரது வாயையும் ஒரே நேரத்தில் அடைத்துவிடும் ம.செ.வின் உயிரோவியம்!  அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்காத குறையாகத்தான் ஓவியத்தை வாங்கிவருவார்கள் உதவி ஆசிரியர்கள். ’குணா’ கமல் போல ‘ம.செ.. ம.செ.. ச்சே.. என்னமா இருக்கு ஓவியம்’ என புலம்பிக்கொண்டுதான் அலுவலகம் வருவார்கள்.

கோயில் சிலைகளைத் திருடுவது போல, சிறுகதைகளுக்கு ம.செ. வரைந்து கொடுத்த ஓவியங்களை பத்திரிகை அலுவலகங்களில் இருந்து திருடி எடுத்துக்கொண்டு போவார்கள் ரசனையான உதவி ஆசிரியர்கள் பலர். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்.. என தமிழகத்தின் நம்பர் ஒன் பத்திரிகைள்(?!) மூன்றிலும் குப்பை கொட்டிய அல்லது குப்பை கூட்டிய அனுபவம் எனக்கிருப்பதால் மேற்படி ‘திருடர்கள்’ பலரை எனக்கு நன்றாகவே தெரியும்!

சரி.. விஷயத்துக்கு வருவோம்.

அந்த நிமிட வேலையை அந்த நிமிடத்திலேயே செய்து முடித்துவிட்டு, அடுத்தநிமிட வேலைக்காக பசித்த புலிபோலக் காத்திருப்பது ஷ்யாமின் பாணி.

அந்த நிமிட வேலையை அடுத்த நிமிடம் வரை செய்தாலும், ’இன்னும் ஒரு நிமிடம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் மெருகு படுத்தலாமே’ என யோசிக்கும் பர்ஃபக்‌ஷனிஸ்ட் ரகம் மணியம் செல்வன்.

அதே சமயம்.. அடுத்த நிமிட வேலையையும் கடந்துபோன நிமிடத்திலேயே செய்து முடித்துவிட்டு, எப்போதுமே இந்த நிமிடம் ஹாயாக இருக்கும் ரகத்தைச் சேர்ந்த இன்னொருவரையும் எனக்கு தெரியும். அவர் ஓவியரல்ல, எழுத்தாளர்.. பா.ராகவன்.

எந்த நிமிடம் சந்தித்தாலும் வேலை வெட்டி இல்லாத ஆள் போலவே பரபரப்பு எதுவுமின்றி இருப்பார் பா.ரா. காரணம்.. எனக்குத் தெரிந்து எந்த வேலையையும் கடைசி நேர பரபரப்புக்கு எடுத்துச் செல்வதே இல்லை அவர்.

’ஆகவே தோழர்களே.. குமுதம் ரிப்போர்ட்டரில் நான் எழுதிக்கொண்டிருக்கும் ஸோ அண்ட் ஸோ தொடரின் இறுதி அத்தியாயத்தை வெற்றிகரமாக எழுதி முடிச்சு, மங்களம் பாடியாச்சு’ என அதிகாலை மூணே முக்கால் மணிக்கு ஒரு மின்னஞ்சல் வரும் ராகவனிடம் இருந்து. அவர் எழுதி முடித்திருக்கும் கடைசி அத்தியாயத்தின் எண் 99 என இருக்கும். ஆனால் விற்பனையில் இருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரின் வெளியாகி இருக்கும் அந்தத் தொடரின் அத்தியாயம் 86 ஆகத்தான் இருக்கும். 13 அத்தியாயங்கள் முன் கூட்டியே வெகு வேகமாக ஓடியிருப்பார் பா.ரா. அந்த அளவுக்கு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்(13!) ஜாக்கிரதை முத்தண்ணா அவர்.

அச்சு இயந்திரத்துக்கு அகோரப் பசி வந்து, அதன் பின்னர் அல்சர்  வந்தபிறகும் கட்டுரையை முடித்துக் கொடுக்காமல் அடம் பிடிக்கும் கடைசி நிமிடப் பரபரப்புக்காரனான என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஏக்கப் பெருமூச்சு இந்த ராகவன்.

ராகவனை நினைக்கும்போதும், சந்திக்கும்போதும் பெருமூச்சைக் கிளப்பும் இப்படியான நினைவுகள் ஒருபுறம் இருந்தாலும், வலது மூளையின் இன்னொரு புறம் கலர் கலராகத் தோன்றி நிற்கும் கடன் அட்டைகளும் வாடிக்கையான விஷயம்தான் எனக்கு!

க்ரெடிட் கார்டு என நம் கடன்கார சமூகத்தால் போற்றிப் புகழப்படும் கடன் அட்டைகளின் செயல்பாட்டுக்கும், ராகவன் போன்றவர்களின் முன் ஜாக்கிரதை செயல்பாட்டுக்கும் எதிரும் புதிருமான ஒரு தொடர்பு இருக்கிறது.

விரும்பிய பொருட்களை – விரும்பிய நேரத்தில் வாங்கிக்கொண்டு க்ரெடிட் கார்டினைத் தேய்த்து விடலாம். பின்னர் 50 நாட்கள்வரை கால அவகாசம் கொடுப்பார்கள். அப்போது பணத்தைக் கட்டிவிட்டால் போதும். இதுதானே க்ரெடிட் கார்டுகளின் அடிப்படைத் தத்துவம்.

அப்படி 50 ஐயும் கடந்து பணத்தைக் கட்டாதவர்களின் கணக்கில் சூடு வைத்த மீட்டர் வேகத்தில் வட்டியும் வட்டிக்கான குட்டிகளும் ஏறும் என்பது தனித் தத்துவம்.

ஒரு காலத்தில் கலர் கலராக நிறைய க்ரெடிட் கார்டுகள் உபயோகப்படுத்தியவன் நான். வட்டிகளும் குட்டிகளும் குட்டிக்கரணம் அடிக்க ஆரம்பிக்கவும் சுதாரித்துக் கொண்டேன்.

நமக்கெல்லாம் க்ரெடிட் கார்டு சரிப்பட்டு வராது என முடிவு கட்டி ஒரு சுபயோக சுபதினத்தில் எல்லா வங்கிகளுக்கும் கடுதாசி எழுதிப் போட்டு வரவழைத்தேன். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக உட்கார்ந்துபேசி அத்தனை க்ரெடிட் கார்டுகளையும் மொத்தமாக ஏறக்கட்டிவிட்டேன்.

அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து கணக்குகளை சிக்கலில்லாமல் முடித்தேன். என்றாலும்.. வில்லங்கம் பிடித்தவர்கள் லிஸ்ட்டில் என் பெயரையும் சேர்த்துவிட்டார்கள் என்ற விவரம் பின்னாளில் வீட்டுக்கடன் வாங்குவதற்காக எல்.ஐ.சி.போனபோதுதான் தெரிந்தது.

‘சிபில் ரிப்போர்ட்ல உங்க பெயர்ல சிக்கல் இருக்குங்க’ என்றார் எல்.ஐ.சி. அதிகாரி.

க்ரெடிட் கார்டிலோ, வங்கிக் கடன்களிலோ பாக்கி வைத்து வங்கிகளைப் பரிதவிக்க வைத்த நபர்களைப் பற்றிய விவரங்களை இப்படி சிபில் எனப்படும் அமைப்பில் பதிவு செய்து வைத்துவிடுவார்கள். சிபில் – CIBIL - Credit Information Bureau (India) Limited அடுத்தமுறை யாருக்காவது க்ரெடிட் கார்டோ கடனோ கொடுப்பதற்கு முன்னர் சிபில் விவரங்களை ஒரு முறை செக் பண்ணிக்கொள்வார்கள் வங்கி ஆசாமிகள்.

சிபிலில் சிக்கலென்றால் நோ லோன் – நோ கார்டு என இரக்கமில்லாமல் சொல்லிவிடுவார்கள். இதுதான் நடைமுறை.

பயன்படுத்திய அத்தனை க்ரெடிட் கார்டுகளையும் பக்காவாக கணக்கு முடித்த என் பெயரில் சிபில் ரிப்போர்ட்டில் புள்ளி வைத்திருந்தது கேள்விப்பட்டுக் கொதித்தது நெஞ்சம்.

இணையத்தில் சிபில் தளத்தைப் பிடித்து, ‘ஐயா பெரியவர்களே.. என் பெயரில் – எந்தெந்த வங்கிகளில் இருந்து குற்றப் பத்திரிகை வாசித்திருக்கிறார்கள் எனச் சொல்லுங்கள்?’ என மின்னஞ்சல் அனுப்பினேன். 

சில பல மின்னஞ்சல் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு ‘இன்னின்ன வங்கிகளில் நீங்கள் பாக்கி வைத்திருப்பதாகப் புகார்’ என்றார்கள்.

இணையத்தில் தேடித் துழாவி, சம்பந்தப்பட்ட அத்தனை வங்கிகளுக்கும் மின்னஞ்சல் தட்டினேன். ’என் பெயரில் ஏதும் வராக்கடன் இருக்கிறதா? சிபில் ரிப்போர்ட்டில் கருப்புப் புள்ளி வைத்திருக்கிறீர்களே?!’ எனக் கேட்டேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நான் தொடர்பு கொண்ட 5 வங்கிகளில் 3, ‘உங்கள் கணக்கில் ஜீரோ பேலன்ஸ்’ என்றது.

’அப்புறம் என்னங்கடா பிரச்னை? என் பெயரில் அப்படி என்ன உங்களுக்கு கொலை வெறி? எதுக்கு சிபில் ரிப்போர்ட்டில் கரும்புள்ளி வைத்திருக்கிறீர்கள்?’ என ‘அன்பாக’க் கேட்கவும், விழுந்தடித்துக்கொண்டு ‘ஸாரி’ கேட்டார்கள். ‘நீங்கள் இந்த மின்னஞ்சல் பரிவர்த்தனையை சிபிலுக்கும் நீங்கள் ஹவுசிங் லோன் வாங்கப்போகும் எல்.ஐ.சி.க்கும் அனுப்பிக்கொள்ளுங்கள். பிரச்னை எதுவும் இருக்காது’ என்றார்கள்.

மிச்சமிருக்கும் 2 வங்கிகளிலும் தப்புக்கணக்கு காட்டினார்கள். என்னிடம் இருந்த ஆதாரங்களுடன் வாதிட்டேன். ‘ஸாரி’ கேட்டு, ஜகா வாங்கினார்கள் அவர்களும்.

அப்புறமென்ன.. எல்.ஐ.சி.யின் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் தெனாவெட்டாக கடன் வாங்கி வீடு வாங்கினேன். அதை ஒழுங்காக கட்டிவருவதைக் காரணம் காட்டி அதற்குப் பின்னரும் பலமுறை பல காரணங்களுக்காக கடன் வாங்கியிருக்கிறேன்.


சிபில் ரிப்போர்ட்டில் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும் என் போன்ற சிலபல நியாயஸ்தர்களுக்கு உபயோகப்படுமே என்பதற்காக நான் போராடி கடன் பெற்ற அனுபவத்தைச் சொல்லி இருக்கிறேன்.

ஆக.. எப்படிப் பார்த்தாலும் எதிர்காலத்தில் சம்பாதிப்பதை இப்போதே செலவழித்துவிட சொல்லித்தரும் க்ரெடிட் கார்டுகள் மாதச் சம்பளக்காரர்களுக்கு தலைவலியையும் திருகுவலிகளையும் தரக்கூடிய சிக்கல் சண்முக சுந்தரங்கள்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

மாறாக.. எதிர்காலத்தில் செய்யவேண்டிய பணிகளை இன்றே செய்து முடித்துவிட்டு, நாளைய வருமானத்தையும் இன்றே உறுதி செய்து கொள்ளும் உல்டா தத்துவம்தான் நம் எல்லோருக்கும் தேவை.

அப்போதுதான் ஓட ஆரம்பித்துவிட்ட ரயிலைப் பிடிப்பதற்காக பறந்து போக முயற்சிக்கும் அபத்தங்களில் இருந்து குடும்பஸ்தர்கள் தப்பிக்க முடியும். ஆமாம்.. நாளை நமதே! அதுவும்.. இன்னிக்கே!!

இதுதான் க்ரெடிட் கார்டுகள் எனக்குச் சொன்ன எதிர்மறை புத்திமதி! ராகவன்ஸ் எஃபெக்ட் என்றும் சொல்லலாம்!!

நன்றி: சூரிய கதிர் மாதமிருமுறை இதழ்

6 comments:

butterfly Surya said...

அருமை.

கருத்துகளுக்கும் பகிர்விற்கும் நன்றி.

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

Vaidehi said...

அட்டகாசம் போங்க!

ரவி said...

ஓவியத்தில் ஆரம்பிச்சு சிபில்ல முடிச்சுட்டீங்எகளே !!!

பைதவே உங்க சிபில் அனுபவம் எனக்கு கண்டிப்பா உதவியா இருக்கும் !!

Ganesan said...

அருமை கொளதம்.

எழுதிய விதம் நகைசுவை தந்தாலும் , உள்ளிருக்கும் சோகம் மென்மையாக தென்பட்டது.

Aathira mullai said...

ஆனால் கிரடிட் கார்ட் வைத்துக்கொள்ளவில்லை என்றால் புழு பூச்சிகளைப் பார்ப்பது போல பார்க்கிறார்களே..
அனுபவம் தந்த படிப்பினை பகர்ந்தமைக்கு நன்றி ஜி.