Monday, September 11, 2006

ஓடிப்போலாமா?! / காதல் பால்



சென்னையில் இருந்து பெங்களூருக்கு போன் அழைப்பு... ""நண்பா நான்தான்.''

"சொல்லு. நல்லா இருக்கியா? எப்டி இருக்கா என் தங்கச்சி, அதாண்டா உன் காதலி?''

"நானும் நல்லா இல்ல. அவளும் நல்லா இல்ல.''

"என்னடா... ஏதாச்சும் பிரச்னையா? விஷயத்தச் சொல்லு முதல்ல.''

"வீட்டைவிட்டு கிளம்பி வந்துட்டா அவ. இப்ப என்கூடத் தான் இருக்கா. நாளைக்கு ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ்ல கல்யாணம். எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு. எனக்கு டென்ஷனா இருக்குடா. நீ இப்பவே கிளம்பி வரணும்.''

"அடக்கடவுளே! போனை அவகிட்ட கொடு.''

போன் கைமாறியது.

"எத்தனை மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினே நீ?''

"காலைல ஒன்பது மணிக்கு. யுனிவர்சிடி வரை போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன்.''

கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான் நண்பன். பகல் இரண்டு.

"தேங்க் காட்! போனைக் கட் பண்ணு, மேனேஜர்ட்ட லீவ் சொல்லிட்டு இப்பவே சென்னைக்கு ஃப்ளைட் பிடிக்கிறேன்.''

சென்னை. காந்தி மண்டபம். அவனும் அவளும் நண்பனும் பதற்றத்தோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

"ஏன்மா நீதான் எம்.ஏ. படிக்கப் போறேன்னு சொன்னியே. ஓடிவந்து கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இப்ப என்ன வந்தது?'' அவளைப் பார்த்துப் பேசியவன் அவன் பக்கமும் திரும்பினான்..."இப்பதான் வேலைல சேர்ந்து நாலு மாசமாகுது. நாலாயிரம்தானே உன் சம்பளம். பெத்தவங்களை விட்டு தனியா வந்து இந்தப் பணத்துல குடும்பம் நடத்திட முடியுமா உன்னால. கேஸ் சிலிண்டர் விலை என்னன்னு தெரியுமா உனக்கு இப்ப?''

எல்லோரும் அமைதியானார்கள்.

அவள்தான் மௌனம் கலைத்தாள். "எங்க காதல் மேட்டர் வீட்ல அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு. எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான்...''

அவன் தொடர்ந்தான்... "நான் எங்க வீட்ல விஷயத்தைச் சொல்லிட்டேன். `ரெண்டு வருஷம் போகட்டும், பார்க்க லாம்'னு அப்பா சொல்லிட்டார்.''

"ம்ம்ம்...''-பெருமூச்சோடு பேசினான் நண்பன்... "அவசரப்பட்டுட்டிங்க!''

"அவங்கப்பா பார்க்குற மாப்பிள்ளைக்கு அவ கழுத்த நீட்டி இருக்கணும்ங்குறியா நீ?!'' - காதலன் டென்ஷனானான்.

"இல்ல... இன்னும் கொஞ்சம் போராடிப் பார்த்திருக்கணும் நீங்க ரெண்டு பேருமே.''

இருவரும் அதிர்ச்சியானார்கள். அவளை ஏறிட்டவாறே சொன்னான் நண்பன்... "நீ ஒருத்தனை லவ் பண்றேன்னு தெரிஞ்சும், அவங்க உனக்கு மாப்பிள்ளை பார்க்குறது உனக்குப் பிடிக்கலைனு தெரிஞ்சும் உன்னை சந்தேகப்படாம தனியா வீட்டை விட்டு அனுப்பியிருக்காங்க பார்த்தியா உங்க பேரண்ட்ஸ். அந்த நம் பிக்கையைப் பொய்யாக்கணுமா?''

மறுபடியும் மௌனம் ஓரிரு நிமிடங்களுக்கு.

"இப்ப என்னதான் பண்ணணும்ங்கிறே நீ?'' -எரிச்சலோடு கேட்டான் காதலன். மருள மருளப் பார்த்துக் கொண்டிருந்தாள் காதலி.

"கிளம்புங்க'' என்றான் நண்பன்.

"எங்கே?'' என்றார்கள் இருவரும்.

"பொண்ணு வீட்டைவிட்டுப் போயிட்டாள்னு இவங்கப்பா அம்மா உணர்றதுக்கு
முன்னாடி இவளை அவங்க வீட்ல கொண்டு போய் விட்டாகணும்.''

தவு திறந்தது.
"என்னாச்சுடி... மதியம் லன்ச் சுக்கு வந்திருவேன்னு சொல்லிட்டு வீட்டைவிட்டுப் போனவ! இப்ப மணி என்னன்னு பார்த்...'' - மகளின் முதுகுக்குப் பின்னால் நின்றிருந்த இரு இளைஞர்களைக் கண்டதும் பேச்சை பாதியிலேயே நிறுத்தினாள் அவளது அம்மா.

விலகினாள். அவள் முன்னே செல்ல, அழையா விருந்தினர்களாக மற்ற இருவரும் உள்ளே நுழைந் தார்கள். ஜாக்கிரதையாக வலது காலை எடுத்து வைத்தான் அவன்!

மகளின் கையை இறுகப் பிடித்தாள் அம்மா.. "என்னடி நடக்குது இங்கே? யார் இவங்க?'' - கிசுகிசுப்போடு தன் எரிச்சலைக் காட்டினாள். அந்த இருவரில் ஒருவனே தன் மகளின் காதலன் என்பதை சட்டென உணர்ந்து கொண்டது அவள் மனம்.

நண்பன் ஆரம்பித்தான்.. "அப்பா இல்லிங்களா வீட்ல?''

"அவங்க வெளியே போயிருக்காங்க. என்ன விஷயம் சொல்லுங்க'' என்றாள் அம்மா. அவள் முதுகுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள் மகள்.

"அது வந்து.. உங்க பொண்ணு விரும்பறது இதோ இவனைத்தான். என் நண்பன். நல்லவன். கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. இவனுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்க பொண்ணோட தான். வீட்ல வேற மாப்பிள்ளை பார்க்குறதா தெரிஞ்சதும் இவங்க கொஞ்சம் அவசரப்பட்டு முடி வெடுத்துட்டாங்க. வீட்டைவிட்டு கிளம்பி வந்துட்டாங்க உங்க பொண்ணு. இவன்தான் வரச் சொல்லியிருக்கான். கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சு. நல்லவேளை எனக்கு விஷயம் தெரிஞ்சதும் ஓடிவந்துட்டேன். `பொறுமையா உட்கார்ந்து ‘இது தப்பு'ன்னு எடுத்துச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டாங்க. இன்னும் கொஞ்ச காலம் உங்க சம்மதத் துக்காகக் காத்திருக்கலாம்னு இவங்களுக்கு நான் சொல்லி யிருக்கேன். அதான் உங்க பொண்ணை பத்திரமா கொண்டு வந்து வீட்ல சேர்க்குறதுக்காக வந்திருக்கோம்.''

தே நேரம்.. அங்கே காதலனின் வீட்டிலும் ஒரு களேபரம் நடந்து கொண்டிருந்தது!

"வணக்கம்ங்க. நான்தான் உங்க பையன் காதலிக்கிற பொண் ணோட தகப்பன்காரன்'' என்ற படியே வாசலில் நின்றிருந்தவரை உள்ளே வரச் சொல்வதா வேண்டாமா எனத் தடுமாறி னார்கள் பையனின் பெற்றோர்.

"வழி விடுங்க வீட்டுக்குள்ள போயி பேசுவோம்.'' என்றார் வந்தவர். அவராகவே வீட்டுக்குள் நுழைந்தார். சோபாவில் உட்கார்ந்தார். பேசலானார்..

"எனக்கு ஒரே பொண்ணுங்க. பெரிய இடத்துல சம்பந்தம் பார்த்துட்டு இருக்கேன். திடீர்னு ஒரு நாள் என் பொண்ணு என்கிட்ட வந்து உங்க பையனை விரும்புறதா சொன்னா. சின்னஞ் சிறுசுக விவகாரம் பார்த்திங்களா.. நாமளும் அடி, உதைன்னு அவசரப்பட்டுரக்கூடாதுன்னு விட்டுப் பிடிச்சுட்டு இருக்கேன். சாதி, சனம், அந்தஸ்து, ஆஸ்தி.. எப்படிப் பார்த்தாலும் ரெண்டு குடும்பத்துக்கும் சரிப்பட்டு வரவே வராதுங்க. அதான் உங்ககூட பேசிட்டுப்போலாம்னு வந்திருக்கேன். நான் என் பொண்ணை எப்படியாவது சமாதானப்படுத்திக்கிறேன். நீங்க உங்க பையனுக்கு இதையெல்லாம் புரியவச்சு இந்தப் பிரச்னைல நம்ம ரெண்டு குடும்பத்தோட மானத்தையும் காப்பாத்தணும்.''

அவர் கையில் இருந்த மொபைல் போன் அடித்தது. எடுத்தார். மறுமுனையில் மனைவி!

அங்கே வீட்டில் நடந்ததை யெல்லாம் சொன்னார் மனைவி. இடி விழுந்த முகத்தோடு அமைதியாகக் கேட்டார் அவர். ""சரி, பொண்ணை எதுவும் திட்டாதே. நான் வந்துர்றேன்'' என்று போனை வைத்தார்.

நடப்பது எதுவுமே புரியாமல் எதிரே நின்றுகொண்டிருந்தனர் பையனின் பெற்றோர்.

`பெண்ணின் தகப்பன்' இப்போது பெருமையோடு பேச ஆரம்பித்தார்..
"நான் இதுவரை பேசுனத எல்லாம் மறந்துடுங்க. சாதி, சனம், அந்தஸ்து, ஆஸ்தி.. எது எப்படி இருந்தாலும் எனக்குக் கவலை இல்லிங்க. பாவம் சின்னஞ்சிறுசுக. ஆசைப்பட் டுட்டாங்க. நம்ம சம்மதத் தோடதான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைக்குறாங்க. நாமதானேங்க பெரிய மனசு பண்ணி சேர்த்து வைக்கணும்.''

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்(, காதலில் நண்பன்)
- பொருட்பால், அதிகாரம்: 45 பெரியாரைத் துணைக்கோடல், குறள்: 442

ஒருவனது துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்குபவராகவும் அத்துன்பங்கள் வராதபடி முன்கூட்டியே கணித்துக் காப்பாற்றும் தன்மையுடையவராகவும் உள்ளவரைத் துணையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்(, காதலில் நல்ல நண்பனே அத்தகைய துணையாக இருப்பான்)

முந்தைய காதல்பால்கள்: இங்கே!

3 comments:

RAANA MONAA said...

வண்க்கம் வாஜாரே...!

காத்லுக்கு மர்யாதய் அப்டியே ரிபீட் பண்ணீக்கீறே...இன்னா ஆச்சி ஒன்க்கு..ஆறு வத்னா கடல் கீது..ஆனா கடலே வத்லாமா? புச்சா மேட்டர் வோணும் வாஜார்..ரே..!

Anonymous said...

Very nice story. Thanks!

கார்த்திக் பிரபு said...

hi sir

nalla irundhadhu..engirundhu pidikireenga karukkalai?