Monday, November 27, 2006

முடிவல்ல ஆரம்பம்! / எ-எ-ஏ?


ஜோடியாகப் பறந்து திரிந்தன இரண்டு கிளிகள். மப்பும் மந்தமுமாக இருந்த ஒரு துக்க தினத்தில் கிளி ஜோதிடக்காரன் ஒருவனிடம் சிக்கிக்கொண்டது பெண் கிளி!

தப்பிவிடாமல் இருப்பதற்காக அதன் சிறகுகளை ஒடித்தான் ஜோதிடன். சுய நினைவுக்கு வந்த கிளி பறக்க முயற்சித்துத் தோற்றது.

சில நாட்களில் மறுபடியும் சிறகுகள் முளைத்தன. மறுபடியும் அவற்றை ஒடித்தான் ஜோதிடன். மறுபடியும் பறக்க முயற்சித்துத் தோற்றது கிளி!

இப்படியே மறுபடி மறுபடி சிறகுகள் முளைப்பதும், அதனை இழந்து பறக்க முடியாமல் கிளி தவிப்பதும் பல முறை நடந்தது. அவ்வளவுதான்.. தான் பறக்கும் சக்தியை இழந்துவிட்டதாக நம்பியது அந்தப் பெண்கிளி! அதன்பிறகு அது பறந்து பார்க்கவே முயலவில்லை!

இனிமேல் இது பறக்க முயற்சிக்காது என்ற முடிவுக்கு வந்த ஜோதிடனும் அதன் பிறகு சிறகுகளை ஒடிப்பதை நிறுத்தி விட்டான்.

ஜோடியைக் காணாமல் தவித்த ஆண் கிளி ஆறேழு மாதங்களுக்குப் பின்னர் ஒரு சுப யோக சுப தினத்தில் பெண் கிளியைக் கண்டது. ஜோதிடக்காரனின் கூண்டுக்குள் வேகாத அரிசியைத் தின்று விதி வந்தால் சாவதற்குக் காத்திருந்த பெண் கிளியைப் பார்த்ததும் அதற்கு துக்கம் தாளவில்லை!

ஜோதிடக்காரன் அசரும் சமய சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது ஆண் கிளி. அவகாசம் கிடைத்ததும், “அடிமை வாழ்வு போதும். வா.. தப்பிவிடலாம்!” என பெண் கிளியை அழைத்தது.

“என்னால் பறக்க முடியாதே, எப்படித் தப்பிப்பது?” எனப் பதறியது பெண்.

“உன்னால் முடியும்.. பற” என்றது ஆண்.

“இல்லை, இதுவரை அறுபது முறை முயற்சித்து விட்டேன். பறக்கும் சக்தி என்னிடம் இப்போது இல்லை!” என்றது பெண்.

“போடி லூசு! உன்னால் முடியும்.. பற” என்று அதட்டியது ஆண்.

புதிய இறகுகளுடன் பறந்தது பெண்!

வெகுதூரம் பறந்துபோனதும் ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்காக மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன கிளிகள் இரண்டும். அப்போது பெண்ணிடம் ஆண் சொன்னது நமக்கும்தான்! அது...?


?

?

?

?

?

?

?

?

“எத்தனை முறை தோற்றாய் என்பதை நினைத்துப் பார்ப்பதால் பயம்தான் உண்டாகும். ‘போனமுறை தோற்றேன், இந்தமுறை ஜெயிப்பேன்’ என்ற சிந்தனைதான் வெற்றிக்கான வழி!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' : இங்கே!

1 comment:

N Suresh, Chennai said...

அன்பிற்கினிய கௌதம்,

நல்லதோர் கதை, அதில் நல்லதோர் பாடம். மிகவும் இனிமையாக இருந்தது. நெஞார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோன்று எழுதுங்கள்.

உங்கள் கதையைப் படித்த போது ஒன்று ஞாபகம் வந்தது, அது " எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல; விழுந்த பின் எத்தனை முறை எழுந்தாய் என்பதே முக்கியம்"

இரண்டாவதாக இந்த கதை இன்னொறையும் நினைவு படுத்திற்று.

காட்டில் யானையை பிடித்துதும் அதை ஒரு திடமான சங்கிலியால் மரத்தில் கட்டிப்போடுவார்கள். ஆரம்ப கோபத்தில் யானை காலால் அதை இழுத்து இழுத்து அந்த அடிமைச்சங்கிலையை உடைக்கப் பார்க்கும். முடிவில் அந்த இடம் ரணமாகி காலை அசைக்க முடியாத நிலையில், யானைப்பயிற்சியாளர், அந்த காலில் சாதாரண ஒரு கயிரை சுமமா கட்டி வைத்து அந்த ரணத்திற்கு மருந்துடிவார். ரணத்தின் மீதுள்ள இந்த சின்னக் கயிறு அந்த கனமான சங்கிலியை விட யானைக்கு பாரமாகத் தோன்றும்.

அந்தக் கயிறு பலம் வாய்ந்தது என்று தவராக, முட்டாள் தனமாக நினைத்து அந்த யானை விடுதலை பெற எந்த முயற்சியும் செய்யாமல் தன்னை அடக்கிய பயிற்சியாளருக்கு அடிமையாக இருக்கும்.

தனது பலம் தெரியாமல் மனிதகுலத்தில் பலர் இப்படித்தான் இந்த யானையைப் போல் அடிமைகளாக, சூழ்நிலைகளின் கைதிகளாக இன்று வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலையில் உங்கள் கிளிக்கதை ஊக்கம் தந்து, தைரியத்தை ஊட்டி இணையதள வாசகர்களுக்கு சுதந்திரம் கொடுத்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன்.

வாழ்த்துக்களுடன்
கவிஞர் என் சுரேஷ் சென்னை
http://nsureshchennai.blogspot.com