அன்புள்ள வலையுலக நண்பர்களே!
மிகக் குறுகிய காலமே உங்களுடன் பழகியிருந்தாலும் மிக மிக நெருக்கமாகிப் போயிருக்கிறேன் உங்களில் பலருடன். அதனாலேயே ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் நான் எடுத்த ஒரு முடிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
'குங்குமம்' வார இதழின் 'பொறுப்பாசிரியர்' பதவியில் இருந்து நானாகவே விலகுகிறேன். இன்று இப்படம் கடைசி, இந்தத் தியேட்டரில்!
ஆகவே தோழர்களே!
இன்னும் இரண்டு மணி நேரமே (மாலை 6 மணிவரை) நான் குங்குமம் அலுவலகத்தில் இருப்பேன்.
குங்குமம் இதழ் தொடர்பான (இதழில் என் வழியாக வெளியான தங்கள் படைப்புகள் தொடர்பான) சந்தேகங்கமேதும் இருக்குமானால் உடனடியாகக் கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ளவும். நானும் அலுவலகத்தில் விளக்கம் கேட்டுப் பெற ஏதுவாக இருக்கும்.
இன்னும் சில வாரங்களுக்கு வலைப்பூ பக்கம் நான் வர இயலாது என்பதால் இப்போதைக்கு இதுவே என் கடைசிப் பதிவு!
நன்றி நண்பர்களே!
Friday, December 22, 2006
Tuesday, December 19, 2006
காதல்பாலின் கடைசி பால்!

என் இனிய வலை நண்பர்களே!
அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங்கே கடைசிக்கதை.
குங்குமம் வார இதழில் தொடராகவும் வெளியானது.
பக்கப்பற்றாக்குறைக்காக இதழில் வெட்டப்பட்ட பாராக்களும் வலைப்பூவில் சுதந்திரமாக பதிவாகியிருக்கின்றன. தவிர, குங்குமத்தில் வெளிவராத ஓரிரு கதைகளும்கூட இங்கே பிரத்தியேகமாக பதிவாகியிருக்கின்றன!
ஜி போஸ்ட்டிலும் வெளியான கதைகள் மற்றும் குங்குமத்தில் பிரசுரமாகி இங்கே பதிவுசெய்யப்படாத கதைகள் தவிர இன்னும் சில புதிய கதைகளையும் சேர்த்து புத்தகமாக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
அதனால் இந்தக் கதையோடு காதல்பாலை முடித்துக்கொள்கிறேன் நண்பர்களே.
இன்னொரு முக்கியமான ரகசியம்..
நான் எழுதிய காதல்பால் கதைகள் அனைத்துமே நிஜக்கதைதான்! எல்லாவற்றிலும் ஒரு இருபத்தைந்து சதவீதமாவது நிஜம் கலந்திருப்பது உண்மை!
இந்தக் கடைசிக் கதையோ முழுக்க முழுக்க நிஜம், என் வாழ்க்கை!
நன்றி நண்பர்களே..
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு
- அறத்துப்பால், அதிகாரம்: 22. ஒப்புரவறிதல், குறள்: 211
நீரைக் கொடுக்கும் மேகங்களுக்கு உயிர்கள் செய்யும் கைமாறு என்ன? மேகம்போன்று இருப்பவர்கள் செய்யும் உதவிகளும் கைமாறு கருதிச் செய்யப்படுவனல்ல.
“ஹலோ”
பாசமும் நேசமும் வழிந்தோடும் அவளது ‘ஹலோ’வில் இந்த முறை பதட்டமும் பற்றியிருந்தது!
“என்னாச்சு? எனிதிங் ராங்?!” - பதில் பதட்டம் அவனது வார்த்தைகளில்!
“நான் வீட்டைவிட்டு கிளம்பி வந்துட்டேன். இப்ப மதுரை பஸ் ஸ்டாண்டுல இருக்கேன்.”
“என்ன சொல்றே? பி சீரியஸ்!”
“ஆமா, எக்ஸாம் முடிஞ்சதும் உங்களை நேர்ல வரவழைச்சு நம்ம காதல் பத்திப் பேசுறதா சொன்னார் அப்பா. ஆனா இப்ப என்னடான்னா.. அது என்னைச் சமாளிக்கச் சொன்ன பொய்னு தெரிஞ்சிடுச்சு. அதான் வேற வழி தெரியாம வீட்டை விட்டு வெளிய வந்துட்டேன். மதுரைக்கு வந்துசேர்ந்து அரைமணி நேரமாகுது”
முகம் வியர்த்தான் அவன்.
வியர்வையைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் அவள்.. “ஆத்திர அவசரத்துக்குன்னு நீங்க கொடுத்து வச்சிருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டு மட்டும்தான் இப்ப என் கையில் இருக்கு”
“இப்ப எங்கேர்ந்து பேசுறே?”
“பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருக்க டெலிபோன் பூத்ல”
“அங்கேயே இரு. ஒரு பத்து நிமிஷம் எனக்கு டயம் கொடு. மறுபடியும் பேசு”
பரபரவெனக் கழிந்தன அந்தப் பத்து நிமிடங்கள்..
“ஹலோ, நான்தாங்க”
“ரைட். நான் சொல்ற அட்ரஸை எழுதிக்கோ. ஒரு ஆட்டோ புடிச்சு அங்கே போயிடு. அவர் உனக்காக வெயிட் பண்றார். இன்னும் அரைமணி நேரத்துல அவரோட ஆபிசுக்கு போன் பண்ணி அடுத்து என்ன பண்றதுன்னு உன்கிட்ட நானே பேசுறேன்”
ஓட்ட நடையில் கடந்தன முப்பது நிமிடங்கள்..
“ஹலோ அண்ணே!”
“சொல்லுப்பா. சகோதரி இங்கதான் இருக்காங்க. தைரியம் சொல்லிட்டு இருக்கேன்”
“அண்ணே ரொம்ப..”
“அடப்போய்யா நீ வேற, நன்றி கின்றின்னு கெட்ட வார்த்தை சொல்லி அசிங்கப்படுத்திடாதே! இப்ப என்ன பண்றது அடுத்து?”
அதட்டுப்போட்ட அண்ணனுக்கு அடுத்ததைச் சொன்னான் அவன்.. “இன்னும் ஒரு மணி நேரத்துல என் ஃப்ரெண்டு அங்கே வந்திருவாண்ணே. மத்ததை அவன் பார்த்துக்குவான்”
“சரி. நீயும் தைரியமா இரு. இந்தா சகோதரிகிட்ட போனைக் கொடுக்குறேன். காலைல இருந்து சாப்பிடலையாம். இப்பத்தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சிருக்கேன். நீயும் ஒரு வார்த்தை சொல்லிடு. போராடி ஜெயிக்கணும்னா உடம்பு முக்கியம்”
“சரிண்ணே”
ஒன்றரை மணி நேரம் கழிந்தது..
மறுபடியும் மதுரை பஸ் ஸ்டாண்ட். மறுபடியும் அதே டெலிபோன் பூத்.
பழகிய முகமானதால் பூத் பெண்ணைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்தாள் அவள். கூடவே உதவிக்கு ஓடி வந்திருந்த அவனது நண்பன். பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்திருப்பான்போல, கசங்கிப் போயிருந்தான்.
பர்ஸை எடுத்தாள் அவள். சற்று நேரத்துக்கு முன்னர் அண்ணன் வலுக்கட்டாயமாகக் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் இப்போது அவள் பர்ஸில்!
“போன் பண்ணிட்டு அப்புறம் பணம் கொடுத்தாப் போதும்ங்க” என்றாள் பூத் பெண். ஏதோ ஒரு ஞாபகத்தில் பணம் எடுத்து நீட்டியதற்காக அசடு வழிந்துகொண்டாள் அவள். அவளிடம் நம்பரை வாங்கி டயல் பண்ணினான் நண்பன்.
“டேய். நாங்க பஸ் ஸ்டாண்ட் வந்துட்டோம்டா”
“நல்லதுடா. சென்னைக்கு ரெண்டு டிக்கெட் ஏற்பாடு பண்ணுடா சீக்கிரம். நீ டிக்கெட்டைக் கையில் வாங்குறதுக்குள்ள என் தம்பி அங்கே வந்திடுவான். ரெண்டு பேரையும் பத்திரமா வண்டியேத்திட்டு போன் பண்ணுடா”
“தம்பியா?”
“சொந்தத் தம்பி இல்லடா, தம்பி மாதிரி ஆபத்துக்குதவ வந்தவன்”
“சரிடா. பணம் எதுவும் கொடுத்தனுப்பவா?”
“இல்லடா, பரவாயில்லை. போனை அவகிட்டே கொடு”
மறுநாள் விடிந்தது சென்னையில்..
தி.நகர் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கிய அவளையும் உடன்வந்த அந்தத் தம்பியையும் வியப்போடு பார்த்தான்
“சரி வாங்க ரூமுக்குப் போகலாம்”
“நீங்க தங்கியிருக்குற பேச்சுலர் ரூமுக்கா?”
சிரித்தான் அவன். இதுதான் சாக்கென்று அவள் லேசாக வெட்கப் பட்டுக் கொண்டாள்!
அறைக்கதவைத் திறந்ததும் பலூன்கள் பறந்தன!
ப்ளைவுட்டில் ‘வெல்கம்’ கூட பெயரோடு வருவியிருந்தார்கள். பாசக்காரப் பயலுக, அதிகாலையில் பஸ் ஸ்டாண்டுக்கு அவன் புறப்பட்டபோதுகூட இந்த ஜோடனைகளெல்லாம் இல்லை. அதற்குப் பிறகு நடந்திருக்கிறது ‘ஆர்ட் டைரக்டர்’ வேலை!
முகம் பூராவும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் அறைத்தோழர்கள். இப்போது அவனுக்கும் வெட்கம் ஒட்டிக்கொண்டது!
திடுதிப்பென பாய்ச்சலோடு வெளியே இருந்து ஓடி வந்தான் இன்னொரு தோழன்.. “மாப்ளே, சிஸ்டரோட வீட்டுல உன்மேல சந்தேகம் வந்திருச்சு. யாரோ ஒருத்தர் அவங்க அண்ணன்னு சொல்லிட்டு வாசல்ல உன் பேரச் சொல்லி விசாரிச்சுட்டு இருக்கார்டா..”
தடாலடி படத்தின் அதிரடி க்ளைமாக்ஸ் போல அறை பரபரப்பானது அடுத்த நொடியிலேயே!
“ம். சீக்கிரம். நீங்க இங்கேர்ந்து போயாகணும்”
எஸ்கேப்!
தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தார் அவர். வாசலில் அவனும் அவளும் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் தூக்கம் தொலைத்தார்!
“உள்ளே வாங்க”
சுடச்சுட காபி போட்டுக் கொண்டு வந்து நீட்டினார் அவரது மனைவி.
“குளிச்சுட்டு சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கங்க. அப்புறம் ஆற அமர உட்கார்ந்து பேசிக்கலாம்”
பொறுமையாகச் சொன்னார் அவர். ஆனால் அவனுக்குப் பொறுமை இல்லை! நடந்தது எல்லாவற்றையும் கடகடவெனச் சொன்னான்.
“அப்படியாம்மா? இவன் சொல்றதுல உனக்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்குதா?” என்றார் அவர்.
“இல்லை” என்றாள் அவள்.
நெருப்பு வேகத்தில் காட்சிகள் மாறின, மாறிக்கொண்டே இருந்தன!
வீட்டில் அவனும் அவளும் துணைக்கு சுவர்க்கடிகாரத்தின் சத்தமும்!
கண்கள் கலங்கியிருந்தாள் அவள்.. “கொஞ்சம் பயமா இருக்குங்க”
பயப்படாதவன் போல தன்னைக் காட்டிக்கொண்டு கேட்டான் அவன்.. “பயமா? கவலையா?”
“தெரியல”
“எண்ணித் துணிக கருமம்னு வள்ளுவர் சொன்னதுதான். நாம இப்பத் துணிஞ்சுட்டோம். மறுபடி திரும்ப யோசிச்சா பயமும் கவலையும்தான் வரும்”
“ம்”
டெலிபோன் கூப்பிட்டது.
“ஹலோ”
மறு முனையில் இருந்தது அவனது அறைத்தோழன்.
“நாளைக்கு காலைல உங்களுக்கு கல்யாணம்”
அதற்காகத்தான் ஆசைப்பட்டான் என்றாலும் தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.. “என்னடா சொல்றே?”
“ஆமாண்டா. மயிலாப்பூர் கோயில்ல மேரேஜ். முடிச்சதும் ரிஜிஸ்டர் ஆபிஸ் போறோம்”
“டேய் இப்ப என் கைல பணம்னு பார்த்தா ஆயிரம் ரூபாய்கூட தேறாதுடா. எப்படிடா இதெல்லாம் நடக்கும்?”
“போடா இவனே! மாப்ளையா லட்சணமா கல்யாணத்துக்கு கரெக்டா வந்து சேர்ந்திடு. பணமெல்லாம் கைக்கு வந்தாச்சு”
“யார் கொடுத்தா?”
இன்னொரு அறைத்தோழனின் பெயரைச் சொன்னான் அந்தத்தோழன்.
“பைக் வாங்குறதுக்காக அவன் ஆசை ஆசையா சேர்த்துவச்ச பணமாச்சேடா அது?!”
நெகிழ்ச்சியோடு போனை வைத்தான் அவன்.
நேரமும் நெகிழ்ச்சியும் கூடிக்கொண்டே போனது!
விளக்கு வெளிச்சமும் கல்யாணக் களையும் சூழ்ந்தது விட்டை!
“மாப்ளையும் பொண்ணும் எப்படி இருக்கீங்க? முகத்துல ஜோர் வந்திடுச்சு போல!”
அங்கே இல்லாத உற்றார் உறவினரை ஈடு செய்வதுபோல கூட்டமாக வீட்டுக்குள் நுழைந்தனர் அலுவலக சகாக்கள் பலர்.
அமைதிப் புன்னகையும் அதிக வெட்கமும் பொண்ணு மாப்ளையிடம்.
“உங்களுக்கு விஷயம் தெரியுமா.. இன்னிக்கு நம்ம ஆபிஸ்ல வேற வேலை எதுவும் நடக்கலை. அத்தனை ஸ்டாஃபுக்கும் உங்க கல்யாணம்தான் இன்றைய ஸ்பெஷல். தேடி வந்த பொண்ணு வீட்டுக்காரங்களை சமாளிக்குறதுக்காக ஒரு டீம். மாப்ளை வீட்டுக்காரங்களை சமாளிக்க ஒரு டீம். நிதி உதவி சேர்க்க ஒரு டீம், கோயில்ல கல்யாண ஏற்பாடுகளைக் கவனிக்க ஒரு டீம், ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் வேலைகளுக்காக ஒரு டீம், அப்புறம் இன்விடேஷன் கமிட்டி, பர்ச்சேஸ் கமிட்டி அது இதுன்னு ஆளாளுக்கு வேலையைப் பிரிச்சுக்கிட்டு பட்டையக் கிளப்பிட்டாங்க!"
நெகிழ்ச்சியான தருணம் அது.
“ஆஹா! இப்பத்தான் நம்ம வீடு அட்டகாசமா இருக்கு. எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா? என்ன சொல்றாங்க புதுமணத்தம்பதிகள்?” என்றபடியே உள்ளே வந்தார் காலையில் கிளம்பிப் போன வீட்டுக்காரர். கை நிறைய பார்சல் பைகள்!
“பொண்ணு மாப்ளைக்கு புது ட்ரெஸ் எடுத்தாச்சு. தாலியும் வாங்கியாச்சு. பொறுமையா செய்யவேண்டிய வேலைல்ல, அதான் நானே போய்ட்டு வந்துட்டேன்”
எல்லோரும் என்னென்னமோ பேசினார்கள். அன்பு மட்டும் நிலையாக இருந்தது!
எப்போதும் போலத்தான் விடிந்தது அன்றைய வானமும். அதற்கென்ன, கல்யாணமா காதுகுத்தா?!
அழுக்கு உள்ளாடைகளுடனும் புத்தம்புது மேலாடைகளுடனும் மாப்பிள்ளை தயார்!
அவனையும் அவளையும் ஆட்டோவில் பாதுகாப்பாக கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போக ஒரு டீம் தயாராக இருந்தது. ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் வழி நெடுக நேற்று முழுக்க யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பதை வியப்போடு விவரித்துக்கொண்டே வந்தார்கள் நண்பர்கள்.
அலுவலகத்தில் அவனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பலரும்கூட உதவிக்கு ஓடிவந்தவர்கள் வரிசையில் இருந்தனர்!
அமளிதுமளிப்பட்டது அதிகாலைக் கோயில். ஒரே இரவில் எப்படித்தான் அத்தனை பேருக்கும் சேதி சொன்னார்களோ, அலுவலக நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு ஆஜராகியிருந்தனர்!
உற்சாகக் கைகுலுக்கல்களும் சந்தோஷச் சிரிப்பலைகளுமாய் பொழுதுகள் பறந்தன.
அலுவலகத்தின் முதலாளியும் வந்தார்! மிக மிக அரிதான சந்தர்ப்பம் அது!!
பாசத்தோடு அவர் எடுத்துக்கொடுத்த தாலிக்கயிறை அவன் அவள் கழுத்தில் கட்டினான்..
“நான்தான் பொண்ணுக்கு அப்பா ஸ்தானம்” என்றார் அந்தப் பொறுமை மனிதர்.
“நான் மாப்பிள்ளைக்கு அக்கா” என்று முன்வந்தார் ஒரு பெண். இதுவரை அந்தப்பெண்ணை மாப்பிள்ளை பார்த்ததே இல்லை! அவனது நண்பருக்கு நண்பி அவர்!
ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவுத் திருமணமும் நடந்து முடிந்தது!
யார் பணம் கொடுத்தது என அவனுக்கும் தெரியாது. எல்லோரும் கல்யாணச் சாப்பாடு முடித்து வாசலுக்கு வந்தாரகள்.
அலுவலகத்தில் அவனோடு பணிபுரியும் தோழியின் கணவர் அவன் அருகே வந்தார்.. “எங்கே தங்கப்போறீங்க?”
“இன்னும் அதப்பத்தி யோசிக்கலை”
“இந்தாங்க” என்றவர் கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிரகப்பிரவேசம் நடத்திய அவரது சொந்த வீட்டின் சாவி!
“ஒண்ணும் அவசரமில்லை. நாலைஞ்சு மாசம்கூட எடுத்துக்கங்க. பொறுமையா செட்டில் ஆகி, வேற வீடு பார்த்துட்ட பிறகு, நீங்க வீட்டைக் கொடுத்தாப்போதும்”
நடப்பது என்ன என அவன் நிதானிப்பதற்குள் சாவியைக் கொடுத்தவர் எங்கோ போயிருந்தார்!
கடற்கரைக் காற்று சூழ்ந்திருந்த வீடு.
தம்பதி போய்ச் சேர்ந்தபோது அங்கேயும் காத்திருந்தது ஒரு டீம்!
“வாங்க, வாங்க”
ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
வருவதாகச் சொன்ன பொறுமைசாலி மனிதர் அங்கே இல்லை. “நேத்து கல்யாண பர்ச்சேஸ் செய்றப்ப ஆட்டோவில் ஒரு விபத்து. பலமான உள்காயம். யாரிடமும் சொல்லாம சமாளிச்சிருக்கார் மனுஷன். இப்பத்தான் வலி அதிகமானதால ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கார்” என்று தகவல் சொன்னான் அங்கிருந்த ஒரு தோழன்.
“பாத்திரங்கள், பலசரக்கு சாமான்கள், மண்ணெண்ணெய் ஸ்டவ்.. இப்போதைக்கு கொஞ்சம் பொருள்தான் வாங்கியிருக்கோம். நாளைக்கு மத்ததையெல்லாம் வாங்கிக்கலாம்” என்றாள் தோழிப்பெண்.
வீட்டின் வரவேற்பறையைக் கடந்ததும் மல்லிகைப்பூ வாசம் எதிர்ப்பட்டது! பூ, பழம், பால், புதுப்பாய், தலையணை.. சினிமாக்களில் மட்டுமே பார்த்திருந்த முதலிரவு அறை!
“சரி நீங்க ரெஸ்ட் எடுத்துக்கங்க. நாளைக்கு காலைல நாங்க வர்றோம்” என்று குறும்போடு சொன்னாள் தோழி. தோழனையும் இழுத்துக்கொண்டு வெளியேறினாள்.
பேசவும் வார்த்தைகளின்றி அவனும் அவளும் உட்கார்ந்தனர். அலையின் இரைச்சல் உரத்து ஒலிப்பதாகத் தோணியது!
போன நிமிடம் குறும்போடு வெளியேறிய அந்தத் தோழி முதல் ஒவ்வொருவராக அவன் மனத்திரைக்குள் ஓடி வந்தார்கள். ரீவைண்ட் ஆனது அந்த இரண்டு நாட்களும்!
வாய்விட்டுப் புலம்பினான் அவன்.. “எதற்காக இத்தனை பேரும் நமக்கு உதவி செய்யவேண்டும். பணம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம். ஆனால் இப்படி அன்பைக் கொடுத்தவர்களுக்கு எதைக் கொடுப்பது கைமாறாக?”
அவள் சொன்னாள்.. “நான் நன்றி சொன்னப்ப மதுரையில அந்த அண்ணன் சொன்னதுதான் இப்ப ஞாபகத்துக்கு வருது”
“என்ன சொன்னார்?”
“உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நீங்க நன்றி சொல்லனும்னு அவசியமில்லைம்மா. அது தேவையுமில்லை. இப்படி ஒரு தம்பதிக்குத்தான் கல்யாணம் பண்ணிவச்சோம்னு நாங்க எல்லோரும் எப்பவும் பெருமைப்படுற மாதிரி வாழ்ந்துகாட்டுங்க. அது போதும்!”
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு, காதலில் பழகு!
Thursday, December 07, 2006
இன்று இப்படம் கடேசி! / ததடாடாலலடிடி!

சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாள்.. சிறிது தயக்கத்துடன் என்னிடம் பேசினார் ஒரு வலைப்பதிவர்!
“ஒரு விஷயம் சொல்றேன்.. தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க நடத்துற தடாலடி போட்டிகள்ல லக்கிலுக்குக்கே பெரும்பாலும் பரிசு கொடுக்கறீங்க. குங்குமத்தில் பிரசுரம் செய்யும் ஆறுதல் பரிசுக்குரிய கமெண்ட்டுகளிலும் அவரோட கமெண்ட்டுகளே அதிகமாக இடம்பெறுகின்றன. அதுக்குப் பதிலா வேற சில பதிவாளர்களின் கமெண்ட்டுகளை பிரசுரிக்கலாமே? நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்தது போலிருக்குமே! சமீபத்தில் அறிவிக்கப்படாத ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் இது குறித்து பலர் வருத்தப்பட்டாங்க” என்றார் அந்த நண்பர்.
அவருக்கு நான் சொன்ன பதிலைச் சொல்வதற்கு முன் எனக்கு வந்த இன்னும் சில மின்னஞ்சல்கள் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.
அடுத்த நாளே எனக்கு வந்த ஒரு தனி மடலில் இருந்ததும் சற்றேறக்குறைய இதே விஷயம்தான்! ஆனால் லக்கிலுக்கின் பெயருக்குப் பதில் இங்கே இருந்தது மாயவரத்தான் பெயர்!!
அடுத்ததாக வந்த ஒரு மொபைல் அழைப்பு, ‘லக்கிலுக், சிவஞானம்ஜி, தமிழி, சிந்தாநதி’ என்றது. அடுத்துவந்த மெயில், ‘மாயவரத்தான், வீ த பீப்பிள்’ என்றது.
இப்போ என் பதில்..
தடாலடிப் போட்டிக்கு வரும் பின்னூட்டங்களில் எழுதியவர்களின் பெயரையெல்லாம் நீக்கிவிட்டுத்தான் பரிசீலணைக்கே எடுத்துப் போவேன். சராசரியாக ஐந்து பேர் மதிப்பிடுவார்கள். அதாவது தாங்கள் செலக்ட் செய்யும் கமெண்ட்டுகளுக்கு டிக் கொடுப்பார்கள்.
அதிகதிகப்படியான டிக் வாங்கும் கமெண்ட்டுகளுக்கு முதல் பரிசு(கள்) முடிவு செய்யப்படும். எவ்வளவுக்கெவ்வளவு டிக் குறைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இறங்குவரிசையில் ஆறுதல் பரிசு, அதாவது பிரசுரத்துக்கு மட்டும்!
இப்படி டிக் வாங்கி தேர்வாகும் லக்கிலுக்/ மாயவரத்தான் கமெண்ட்டுகளை நான் தூக்கிக்கடாசுவது எந்த விதத்தில் நியாயம்?
முதல் பரிசு வாங்கிவிட்டார் என்பதால் ஆறுதல் பரிசுக்காக டிக் மதிப்பீட்டில் தேறிவரும் இவர்களது கமெண்ட்டுகளை ஒதுக்குவதும் நியாயமே அல்ல! நான் வளர்ந்த விகடன் எனக்குக் கற்றுக்கொடுத்ததும் இதைத்தான். அதாவது விகடன் நடத்தும் போட்டிகளில் பாருங்கள், முதல் பரிசு வாங்கிவிட்டார் என்பதற்காக ஒருவரது ஆறுதல் பரிசுகளை (இரண்டு, மூன்றாம் பரிசுகளையும்கூட) நிராகரிப்பதில்லை எப்போதுமே!
ஆக, திரும்பத்திரும்ப வெற்றி பெறும் நபர்களிடம் ‘இனிமேல் நீங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது. அப்போதுதான் மற்றவர்கள் பரிசு வாங்க முடியும்’ என நான் எப்படிச் சொல்லமுடியும்? அது சொத்தையான கோரிக்கையல்லவா! தவிர, ஐம்பதுக்கு குறைவான பங்களிப்புகள் என்று தடாலடிப்போட்டிக்கு வருகிறதோ அன்றுதான் அதை நிறுத்திக்கொள்ளலாம் என்பதே என் (முன்னாள்) முடிவு. இந்த நண்பர்களே ஐம்பதுக்கும் குறையாமல் தொடர்ந்து போட்டி நடக்கக் காரணமாயிருந்தவர்கள்!
மற்ற பதிவர் யாரேனும் ஒரு ஆலோசனையாக அதுவும் நேரிடையான பின்னூட்டம் வழியாகச் சொல்வதே சரியானதாகும். அப்போதும்கூட தொடர் வெற்றிபெறும் அவர்களின் திறமையை மனமாரப் பாராட்டிவிட்டுத்தான் இதைச் யோசனையாக முன்வைக்க வேண்டும்.
ரோஜாக்களுடன்தான் முள்ளும் இருக்கிறது! முட்களுடன்தான் ரோஜாவும் இருக்கிறது!! இந்த உலக உண்மை தெரிந்தும் இரு கூறாகப் பிரிந்து ‘இவரை ஆட்டத்தில் சேர்க்காதீங்க’ என அவர்களும், ‘அவரை ஆட்டத்தில் சேர்க்காதீங்க’ என இவர்களும் சொல்வது வருத்தத்துக்குரியது.
ஆகவே தோழர்களே இந்த வாரத்துடன் நம்ம தடாலடி ஆட்டத்தை முடித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இந்த வாரமே இப்படம் கடேசி! பின்னிப் பொளந்து கட்டிடுங்க!
போட்டி இதுதான்: படத்தைப் பார்த்தீர்கள்தானே! படத்துக்குப் பொருத்தமாக என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம்! அது எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! பரிசு? அதுவும் என்ன வேண்டுமானாலும் (சனிக்கிழமைக்குள் முடிவு செய்து அறிவிக்கிறேன்) இருக்கலாம்!!!!
நன்றி! நன்றி! வணக்கம்! வணக்கம்! (இங்கே எதுக்காக ரெண்டு ரெண்டு தடவை சொல்லியிருக்கேன்னு புரியுதில்லே!!)
பிற் சேர்க்கை: சனிக்கிழமை மாலை 6 மணிவரை வந்து, முதல் கட்டப் பரிசீலணையில் ஜெயித்திருக்கும் பளிச் கமெண்ட்டுகள் கீழே பின்னூட்டங்களின் அணிவகுப்பிலேயே எனது பின்னூட்டமாக வெளியாகியுள்ளது.
Tuesday, December 05, 2006
உதை! / எ?எ?ஏ?
பல வருடப் போராட்டத்துக்குப் பின் இயக்குநராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. தயாரிப்பாளர் ஓ.கே. ஹீரோ யார் எனத் தீர்மானித்ததும் ஷூட்டிங் ஆரம்பம்!
ஆசை ஆசையாக தான் செதுக்கி வைத்திருக்கும் கதையை ஒரு ஹீரோவிடம் சொன்னார் இயக்குநர். அலட்சியத்துடன் கேட்ட ஹீரோ, “பிடிக்கவில்லை” என்றார்! அதற்கான காரணங்களாக பத்து குறைகளைப் பட்டியலிட்டார்.
வருத்தத்தோடும் கோபத்தோடும் வெளியேறிய இயக்குநர், ஹீரோ சொன்ன பத்து விஷயங்களில் அபத்தங்கள் போக நியாயமானதாக தோன்றிய ஐந்து பாயிண்ட்டுகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டார். கதையில் அவற்றைச் சரி செய்தார். இன்னொரு ஹீரோவைத் தெடிப்போய்க் கதை சொன்னார்.
இரண்டாவது ஹீரோவும் நடிக்க மறுத்தார்! அவரும் பத்து குறைகளைப் பட்டியலிட்டார்
இயக்குநர் இந்த முறை கோபப்படாமல் யோசித்தார். தனக்குச் சரி எனப்பட்ட நான்கு விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதையை மறுபடியும் சரி செய்தார். மூன்றாவது ஹீரோவைத் தேடிப்போனார்.
அவரும் ‘நோ’ சொன்னார்! காரணமாக அவரும் ‘பத்து குறைகள்’ சொன்னார்.
இப்போது இயக்குநர் வருத்தம் கூடப் படவில்லை! இந்தப் பத்தில் தேறிய மூன்றினை எடுத்துக்கொண்டார். சரி செய்தார்.
புதிதாக ஒரு பையனைப் பிடித்து ஹீரோவாக நடிக்க வைத்தார். படம் சூப்பர் ஹிட்!
வெற்றிவிழா மேடையில் இயக்குநரைப் புகழ்ந்து தள்ளிய தொகுப்பாளர், “இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் என்ன?” எனக் கேட்டார். இயக்குநர் நெகிழ்ச்சியுடன் சொன்னது?
?
?
?
?
?
?
?
?
“என் கதையில் இருந்த ஓட்டைகளை நான் அடைத்துக்கொள்ள உதவிய அந்த மூன்று ஹீரோக்களே காரணம். அவர்கள் சொன்னதில் சில திருத்தங்களைச் செய்தபிறகுதான் ‘அறிமுக ஹீரோவை வைத்தும் ஜெயிக்க முடியும்’ என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. உதைபடும் பந்துதான் உயரத்துக்குப் போகும் என்ற உண்மையை எனக்கு உணர்த்தியவர்கள் அவர்கள்”
முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' : இங்கே!
Monday, December 04, 2006
சென்னைக்காரர்கள் கவனத்துக்கு!
ஒரு முக்கிய அறிவிப்பு நண்பர்களே!
- நீங்கள் வலைப்பதிவரா?
- சென்னையில் வசிப்பவரா? அல்லது தற்போது சென்னையில் இருப்பவரா?
- இசை, நடனம் இரண்டிலும் அல்லது ஏதாவது ஒன்றில் ஆர்வம் உண்டா?
- சங்கீத சீசனாச்சே, கச்சேரிக்குப் போவதுண்டா?
நான்கு கேள்விகளுக்கும் 'ஆம்' சொன்னவர்கள் இங்கே பின்னூட்டத்தில் உங்கள் போன் நம்பரை அல்லது மெயில் முகவரியை (பப்ளிஷ் பண்ணமாட்டேன் என உறுதி தருகிறேன்) அனுப்பவும்.
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் 'சேதி' என்னிடம் இருக்கிறது...
என்ன சிரீப்பு?! /தடாலடிப் போட்டி

ஸாரி, போன வெள்ளிக்கிழமை நடத்த முடியாமப் போன தடாலடி இன்று இங்கே!
படத்தில் சிரிக்கிறாங்க ஒரு அம்மணி. அவங்க எதைப் பார்த்துவிட்டு வேணும்னாலும் சிரிக்கட்டும். அல்லது எதைக் கேட்டுவிட்டு வேணும்னாலும் சிரிக்கட்டும். எதிரே யார் வேணும்னாலும் இருக்கட்டும்.
சிரிக்கும்போது ஏதாவது ஒருவரி கமெண்ட் அடிச்சுக்கிட்டே சிரிப்பாங்கள்ல! அந்த ஒருவரிதான் நீங்க சிந்திக்கப் போற பதில்..
இந்திய நேரப்படி இன்று இரவு 12 மணிதான் கெடு நேரம். பரிசு வழக்கம்போல்.
வாருங்கள் நண்பர்களே!
நம்ம குல வழக்கப்படி உங்கள் ஊர்/ நாட்டின் பெயரையும் சேர்த்தே பின்னூட்டமிடவும். உதாரணத்துக்கு.. 'பெங்களூரில் இருந்து இளா'
Friday, December 01, 2006
நீங்கள் தென்னிந்தியரா? இசைப்பிரியரா?
தலைப்பில் இருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் 'ஆமாம்' சொல்பவர்கள் இங்கே சொடுக்குங்கள்! உங்கள் பொன்னான வாக்குகளைப் பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள்!
நன்றி!
நன்றி!
மணிரத்னத்தின் 'குரு', லேட்டஸ்ட் நியூஸ் வேணுமா?
அன்பர்களே! நண்பர்களே!
நம்ம மணிரத்னத்தோட 'குரு' படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் தெரிஞ்சுக்கணுமா?
இங்கே க்ளிக் பண்ணுங்க!
அங்கே படிச்சுக்கங்க!
நம்ம மணிரத்னத்தோட 'குரு' படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் தெரிஞ்சுக்கணுமா?
இங்கே க்ளிக் பண்ணுங்க!
அங்கே படிச்சுக்கங்க!
Subscribe to:
Posts (Atom)