Saturday, June 26, 2010

சித்தெறும்பு என்னைக் கடிச்சது!

ஒரு துளி கடல் 2
சித்தெறும்பு என்னைக் கடிச்சது!

’இதுக்கெல்லாம் நீ பின்னாடி வருத்தப்படணும்’ என பெரியவர்கள் சிறுவயதில் எனக்கு எச்சரித்த பல விஷயங்கள் எதிர்காலத்தில் என்னை வருத்தப்படவைக்கக் காத்திருக்கின்றன.

இருக்கட்டும்.. வரும்போது வருந்திக்கொள்ளலாம். ஆனால்.. சின்னஞ்சிறு வயதுகளில் வரிசை கட்டிக்கொண்டு செல்லும் எறும்புக்கூட்டத்தை விளையாட்டுக்காக எப்பாடு படுத்தியிருக்கிறேன் என இப்போது நினைத்தாலும் மனது வலிக்கிறது!

அதற்கான காரணத்தைச் சொல்வதற்கு முன்பாக ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ப்போது ஜெயா தொலைக்காட்சியின் மார்கெடிங் துறையில் மேலாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த அந்த இளைஞருக்கு வயது 26 இருக்கும். பேச்சுக்காக இங்கே அவரது பெயரை குமார் என வைத்துக்கொள்வோம்.

காலை நேரம் சுமார் 10 மணி.. அலுவலக வேலை தொடர்பாக டிசைனர் முரளியிடம் பேச வேண்டியிருந்தது. கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் அரசியல் கட்சிபோல, டிசைன் வேலைகளை வெளியில் இருந்து பணியாற்றும் முரளியிடம் கொடுத்திருந்தோம். அடிக்கடி போனிலும், முடிகிறபோது நேரிலும் பேசிக்கொள்வோம்.

அன்று அவசரமாகவும் அவசியமாகவும் பேச பல விஷயங்கள் இருந்ததால் நேரில் சந்திக்க நினைத்தேன். குமாரை அழைத்தேன்.. “முரளியை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரத்தில் வரச்சொல்லுங்கள்” என்றேன்.

’ஆகட்டும்’ சொல்லிவிட்டு நகர்ந்தார் குமார். அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிவிட்டேன் நான்.

11 மணி இருக்கும். சட்டென நினைவுக்கு வந்தார் முரளி. குமாரைக் கூப்பிட்டேன்.. “என்னாச்சுப்பா.. முரளியை வரச்சொல்லி இருந்தேனே?”

’அவர் வீட்ல இல்லையாம். வெளியே கிளம்பி போயிட்டாராம். மெசேஜ் கன்வே பண்ணிட்டேன்’ என்று சொல்லி என்னிடம் ‘முறைப்பு’ வாங்கிக் கொண்டார் குமார்.

“வீட்ல இல்லாட்டி என்ன.. மொபைல் போன்ல பிடிக்கவேண்டியதுதானே..”

ஒரு டன் அசடு ப்ளஸ் ஆயிரம் வாட்ஸ் பல்பு இரண்டையும் ஒரே சமயத்தில் தன் முகத்தில் கொண்டு வந்த குமார், ‘ஸாரி, எனக்குத் தோணவே இல்லை பாருங்க’ என தலையில் அடித்துக்கொண்டே நகர்ந்தார். கழுத்தைப் பிடித்துக்கொண்டிருந்த வேறு அவசர வேலைகளில் மூழ்கினேன். 

மறுபடியும் முரளி என் நினைவுக்கு வந்தபோது மணி பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது.

”குமார்..?”

’திரும்ப திரும்ப நான் ட்ரை பண்ணிட்டே இருக்கேன். அவர் மொபைல் போன் ஸ்விட்ச்டு ஆஃப்-லயே இருக்கு..’ என எனக்கும், ‘யோவ்.. என்னை ஏன்யா கத்துறே? அந்தாள் போனை ஆஃப் பண்ணியே வெச்சிருக்கானே!’ என தனக்குள்ளும் சொல்லிக்கொண்ட குமார் எதிரே கொஞ்சம் எரிச்சலோடு நின்றிருந்தார்.

இரண்டு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டேன் நான். எதிரே இரண்டு பேர் விளம்பரம் கொடுப்பதற்காக வந்து உட்கார்ந்திருந்தார்கள் என்பதால் குமாரை முறைத்துக்கூட என் உணர்வைக் காட்டமுடியவில்லை! கோபத்தை விழுங்கியபடியே பேசினேன்.. “சரிப்பா.. பர்ஸனல் மொபைல் ஒண்ணு வெச்சிருக்காரே.. உன்கிட்டதானே ‘கீப் இட் சீக்ரெட், அவசியம்னா இதில கூப்பிடலாம்’னு சொல்லி கொடுத்துட்டுப் போனார்.. அதில் ட்ரை பண்ணியா?”

மறுபடியும் டன் ப்ளஸ் வாட்ஸ் குமார் முகத்தில். மறுபடியும் ’எனக்குத் தோணவே இல்லை பாருங்க’. மறுபடியும் தன்னை நொந்தபடியே.. தன் தலையில் அடித்துக்கொண்டபடியே போனார்.

எதிரே இருந்தவர்களிடம் விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் தொடர்ந்தேன் நான்.

வேலைப்பளுவில் நேரம் எப்படி பறந்தது என்றே தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியபோது கண்கள் வாட்சைப் பார்த்தன.

பகல் 3 மணியைக் கடந்திருந்தது. 4 மணிக்குள் டிசைனர் முரளியிடம் நான் பேசி, அவர் அதைப் புரிந்துகொண்டு, ஒரு டிசைன் உருவாக்கி, அதை மாலைக்குள் செய்தித்தாள்களுக்கு கொடுத்தாக வேண்டும்.

அவசரமும் எரிச்சலும் பசியும் கலந்து கட்டி ‘குமாஆஆஆஆர்’ என கூப்பாரு போட வைத்தது.

‘அவரு லன்ச்சுக்குப் போயிருக்காரு சார்.. இன்னும் வரலை’ என்றான் ஆபிஸ் பையன்.

’ஐயோ’ என்றிருந்தது. ‘கூப்பிட்டீங்களா?’ என்றவாறே எங்கிருந்தோ ஓடி வந்தார் குமார்.

”என்னாச்சுப்பா.. என்ன சொன்னார் முரளி?” – பொறுமையாகத்தான் கேட்டேன்.

‘இல்லை.. ரொம்ப முக்கியமான விஷயம்னா மட்டும்தான் என் பர்ஸனல் மொபைல் நம்பரை யூஸ் பண்ணணும்னு முரளி சொல்லி இருக்கார்ல..’

“சரி.. அதுக்கு?!”

‘ரொம்ப முக்கியமான மேட்டர்தானான்னு உங்ககிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு அப்புறமா பேசலாம்னு வெய்ட் பண்ணிட்டிருக்கேன்’

சுர்ரென்றிருந்தது எனக்கு்.. “எத்தனை மணிக்கு சொன்னேன், என்கிட்ட கன்ஃபர்ம் பண்ணித் தொலைச்சிருக்க வேண்டியதுதானே? அதுக்கா இவ்ளோ நேரம்?”

‘நிங்க அப்ப இருந்து பிசியாவே இருந்தீங்க.. எப்படி உங்களை தொந்தரவு பண்றதுன்னு யோசிச்சுட்டே மிஸ் பண்ணிட்டேன்’

எப்படி இருக்கும் எனக்கு என நீங்களே கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்! கொஞ்சம் கூட மிகைப்படுத்தல் இன்றி நடந்ததை நடந்தபடியே இங்கே நினைவு கூர்ந்திருக்கிறேன்.

அப்புறம் நானே களத்தில் இறங்கி, முரளியைச் சந்தித்து, அந்த வேலையை முடித்தது இந்தக்கட்டுரைக்கு உதவாத விஷயம். ஆரம்பித்த இடத்துக்கே மறுபடியும் வருகிறேன். காரணத்துக்கான காரியம் சொல்கிறேன்.

ரவேற்பறை ஜன்னலில் ஆரம்பித்து, சுவற்றில் அணிவகுத்து, சமையலறைக்குள் அத்துமீறி, அதகளம் பண்ணிக்கொண்டிருந்த எறும்புக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஏகத்துக்கும் டென்ஷன் ஆனாள் மனைவி.

“சனியனுங்க.. எங்கிருந்துதான் இப்படி வருதுகன்னே தெரியலை”

’அச்சச்சோ!’ - ரொம்ப டென்ஷனோடு இருக்கிறாளே.. உதவி ஒத்தாசை பண்ணலாமே என உச்சுக்கொட்டியபடியே சமையலறைக்கு ஓடினேன்.

‘இருக்கட்டும் இன்னிக்கு வெச்சுக்கறேன் கச்சேரிய.. போய் எறும்பு பவுடர் வாங்கிட்டு வர்றேன்’ என்றபடியே கொலை வெறியோடு வீட்டைவிட்டு வெளியேறினாள் மனைவி.

புயல் கடந்த பூமியாக(?!) அமைதியோடு இருந்தது சமையலறை.  பொறுப்பாக அணி திரண்டு, அரிசி – பருப்பை அள்ளிக்கொண்டு, வந்தவழியே திரும்பிக்கொண்டிருந்த எறும்புக்கூட்டத்தை உற்றுப் பார்த்தேன்.

சின்ன வயது விளையாட்டு கருப்பு வெள்ளையில் நினைவுக்கு வந்தது. டம்ளரில் கொஞ்சம் தண்ணீர் பிடித்துக் கொண்டேன். ஆள்காட்டி விரலை நீரில் நனைத்து வெளியே எடுத்தேன். எறும்புக்கூட்டம் சென்றுகொண்டிருந்த பாதைக்கு குறுக்கே ஒரு நீர்க்கோடு போட்டேன்.

முதலில் வந்து கோட்டைச் சந்தித்த முன் வரிசை எறும்பு கண நேரம் மட்டுமே திகைத்தது. கவனிக்கவும்.. திகைத்தது, நிற்கவில்லை!

சட்டென இடது புறம் திரும்பி நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்தன மற்ற எறும்புகளும்.

விடுவேனா நான்.. புதிய பாதையின் குறுக்கேயும் ஒரு நீர்க்கோடு போட்டேன்.

விட்டதா எறும்பு.. திகைத்து, திரும்பி, வேறு வழியில் ஊர்வலத்தைத் தொடர்ந்தன.

இப்படியே எனக்கும் எறும்புகளுக்கும் கொஞ்ச நேரம் விளையாட்டு! கடைசியில்.. எத்தனைதான் இடைஞ்சல் கொடுத்தாலும் ஒரு வழிக்கு மாற்று வழியை உடனுக்குடன் தேர்ந்தெடுத்து, பயணத்தை முடிக்க நினைத்த எறும்பே வென்றது. மனதுக்குள் கைதட்டியபடியே பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

தன் முயற்சியில் மனம் தளராத அந்த துளியூண்டு விக்கிரமாதித்தன்களிடம் இருந்து நம் ‘குமார்’கள் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன என்ற உண்மை தெரிந்தபோது, தெரிந்தோ தெரியாமலோ காலம்காலமாக எறும்புக்கூட்டத்தைக் கொடுமைப்படுத்தியதற்காக என் மனது வலிக்கத்தானே செய்யும்!
- நன்றி: சூரிய கதிர் - மாதமிருமுறை இதழ்

3 comments:

ILA (a) இளா said...

மொதோ போணி என்னுது. படிச்சு வர்றேன். சவுக்கியமா அண்ணாத்த

G Gowtham said...

யப்பாடி! எம்புட்டு நாளாச்சு இளா.. நாம பேசியும்! ரீ எண்ட்ரியில எனக்கு பின்னூட்டம் போட்ட முத ஆள் நீங்கதான். நன்றி இளா. எப்போ சென்னைப்பக்கம் வர்றதா திட்டம்?

குழலி / Kuzhali said...

ஆகா எளிமையாக நன்றாக உள்ளது... கலக்குங்க