Thursday, July 20, 2006

உயிரே போச்சு / தேன் கூடு(மரணம்) போட்டிக்காக

யனைடு குப்பி, தூக்குக்கயிறு, அரளிவிதை, பூச்சி மருந்து, மலை உச்சி, ரயில் தண்டவாளம், பாழும் கிணறு... இன்னும் பலப்பல தற்கொலை உபாயங்களையும் ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்தான் கோயிந்சாமி.

டுபாகூர் டாக்டர் ஒருவரிடம் திடீர் ஆபரேஷன் செய்து கொள்ளலாமா
என்றுகூட யோசித்தான்!

அல்லது சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் பரப்பப்பட்ட எஸ்.எம்.எஸ். சொன்னபடி, 'ஆதி' படம் ஒருதரம் பார்க்கலாமா என்றும் மனக்கணக்கு போட்டுப் பார்த்தான்.

ம்ஹீம். எதுவுமே உசிதமாகப்படாததால் கடலுக்குள் குதித்து செத்துப்போக முடிவு செய்தான் கட்டக்கடைசியாக!

இதோ... நம்ம கோயிந்சாமியே இந்தியப் பெருங்கடலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாரே! (ரேடியோ டிராமா பாணில கரீக்டா இத்தப் படிச்சவங்களுக்கு சபாஷ்பா!)

கரையோடு கரையாய் இருக்கும் கடலுக்குள் எப்படிக் குதிப்பதாம்?! ஒருசில விநாடிகள் மண்டைக்குள்ளிருக்கும் மசாலாவைக் குலுக்கி யோசித்த கோயிந்சாமி ஒரு முடிவுக்கு வருகிறான்.

குடுகுடுவென ஒடிப்போய் கரையோடு கரையாக கடலைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அந்த முடிவு.

'உயிரே போனாலும் இதிலிருந்து ஜகா வாங்கக்கூடாது' என நெஞ்சில் கை வைத்து சத்தியம் செய்யப்போனவன் கையில் இருந்த இரண்டு ரூபாய் சில்லறைக்காசு தட்டுப்படுகிறது.

"கடலை... கடலை... சூடான வேர்க்கடலை'' என சவுண்ட் கொடுத்தவாறே கோயிந்சாமியின் பக்கம் வருகிறான் பொடியன் ஒருவன்.

சரிதான் 'சாவுறதுக்கு முன்னாடி உனக்குப்பிடிச்ச வேர்க்கடலை சாப்டுட்டு அப்புறமா சாவுடா' என அவனுக்குப் பிடித்த ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் நேரில் வந்து அருள்வாக்கு சொல்வது போலவே உணர்கிறான் கோயிந்சாமி. இரண்டு ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கி, 'ரெண்டு மூணு' வேர்க்கடலைகள் கொசுறாகவும் வாங்கிச்சாப்பிட்டு விட்டு, கை துடைக்கும் சமயம் அந்தக் காகிதத்தைப் பார்க்கிறான். பையன் வேர்க்கடலை மடித்துக் கொடுத்திருந்த காகிதம்.

'சாகப்போறீங்களா? உடனே எங்களுக்குப் போன் பண்ணுங்க! நிம்மதியான சாவுக்கு நாங்க கியாரண்டி!!!' என ஒரு வரி விளம்பரம் பிரிண்ட் ஆகியிருந்தது அந்தக் காகிதத்தில். அதுவும் அதே 'ஆழ்வார்பேட்டை பார்ட்டி'யின் மகாத்மியம்தான் என நினைத்துக் கொள்கிறான் கோயிந்சாமி.

பதறியடித்துக்கொண்டு பேண்டின் உள் பாக்கெட்டுக்குள் கைவிட்டு, "அப்பாடா" என்றபடியே ஏழரையாக மடக்கி வைத்திருந்த எமர்ஜென்ஸி பத்து ரூபாய் நோட்டை வெளியே எடுக்கிறான். டெலிபோன் பூத்தை நோக்கி ஒட்ட நடை!

இனி ஒவர் டு கோயிந்சாமி அண்ட் அந்தப்பக்கப் பார்ட்டி...

"ஹலோ...''

"யெஸ்... ஹலோவ்!''

"வணக்கங்க. நான் கோயிந்சாமி பேசுறேங்க பீச்ல இருந்து''

"கோயிந்தாசாமி.. வெரி நைஸ் நேம். ம்... சொல்லுங்க''

"நான் சாகணும்ங்க... நிம்மதியா சாகணும்''

"நல்ல ஆசைதான். செஞ்சுட்டாப் போச்சு!''

"எப்படின்னு ஒரு வழி சொல்லுங்களேன்''

"தாராளமா! ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சில கேள்விகள் உங்ககிட்ட கேட்க வேண்டியிருக்கே''

"கேளுங்க சார் பதில் சொல்றேன்''

"நீங்க செத்துப் போயிட்டிங்கன்னா உங்க பாடியைப் புதைக்கணுமா? இல்ல எரிக்கணுமா?''

"எரிச்சிருங்க சார்''

"ரைட்.. எரிச்சா கிடைக்குற சாம்பலை ஒடுற ஜலத்துல கரைக்கணுமா? இல்ல உட்கார்ந்துட்டு இருக்குற... ஸாரி தேங்கிக்கிட்டு இருக்குற ஜலத்துல கரைக்கணுமா?''

"ம்... ஜலத்துலயே கரைச்சிடுங்க. கரைஞ்சு பரவிடனுமாக்கும் நான்''

"சரி... ஒடுறதுன்னா ஆத்துலயா? இல்ல அருவிலயா?''

"அதுக்கெல்லாம் கூடவா கேள்வி... ஆத்துலயே பெட்டர்''

"ஓஹோ. அப்ப வட இந்தியாவுல இருக்கற ஆறா? இல்ல தென்னிந்திய ஆறா?''

"என்னங்க இது ரொம்பக் கேள்வி கேட்கறீங்க?''

"ஹலோ.. நீங்க பதில்தான் சொல்லணும், நாங்கதான் கேள்வி கேட்கணும்''

"சரி.. கேட்டு வையுங்க''

"மறுபடியும் கேட்கிறேன். நீங்க செத்த பின்னாடி உங்க சாம்பலை வட இந்தியாவுல இருக்க ஆத்துல கரைக்கணுமா? இல்ல தென்னிந்திய ஆத்துல கரைக்கணுமா?''

"சரி சரி வட இந்தியாவுக்கே போயிடுங்க''

"ஓ.கே. அப்ப பஸ்ல போகணுமா? இல்ல ரயில்ல போகணுமா நாங்க?''

"எப்படியாவது போய்த் தொலைய வேண்டியதுதானே''

"என்ன சொன்னீங்க?''

"இல்ல, ரயில்ல போங்கண்ணேன்''

"அப்படின்னா வித் டிக்கெட்லயா? ஆல்ல வித் அவுட் டிக்கெட்லயா?''

"வேணாம்.. எனக்குக் கோபம் கோபமா வருது''

"கூல்டௌன் மிஸ்டர் கோயிந்தாசாமி. கரெக்டா சொல்லுங்க உங்களுக்குக் கோபம் வருதா? இல்ல கோபம் கோபமா வருதா?''

"யோவ் என்ன விளையாடுறியா? நானும் அப்ப பிடிச்சு பார்த்துட்டே இருக்கேன். ஏன்யா என்னைப் பார்த்தா 'இனா வானா' மாதிரியா தெரியுது உனக்கு?''

"ஆத்திரப்படக்கூடாது மிஸ்டர் கோயிந்தாசாமி, உங்க பிராப்ளமே இதுதான். எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டாவே ஆப்ஷன் கொடுக்கறீங்க. தெளிவாச் சொல்லுங்க... 'இனா'வா? இல்ல 'வானா'வா?''

"ஒரு புண்ணாக்கும் இல்லை போனைக் கட் பண்ணுடா புறம்போக்கு! பன்னாடை''

"ஹலோ ஹலோ போனைக் கட் பண்ணிடாதிங்கோ மிஸ்டர் கோயிந்தாசாமி. நீங்க சாகணும்''

"டேய்...செத்து ஒரு கழுதையும் ஆகப் போறதில்ல. உன்னை நேர்ல பார்த்து நாலு சாத்து சாத்தணும் அதுக்காகவாச்சும் உயிரோட இருக்கப் போறேன்டா படுபாவி ராஸ்கல்...''

"குட்! இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!''

கோயிந்சாமி கோபசாமியாக டெலிபோனை கட் செய்ய... கட் கட் கட்!

9 comments:

G Gowtham said...

ஆஹா... ஒருத்தர் கூட இந்தக் கதைக்கு பின்னூட்டம் போடலியே!
தப்பு பண்ணிட்டேனோ...
சாமி சத்தியமா இனிமே காமெடினு எதையும் எழுத மாட்டேங்ணா...

நாகை சிவா said...

இல்ல கெள்தம், நல்லா இருக்கு. தொடர்ந்து இது போல நகைச்சுவை கதைகளை எழுதவும்.

murali said...

நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
நகைச்சுவை உணர்வு நிரம்பிய மனம் நல்ல மனம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

யாத்ரீகன் said...

gowtham.... It was a good try.. but the conversation could have been more humorous.. my humble comment..

do keep writing.... dont check on the comments... lazybloggers like me.. comment very rarely :-) even if its a good post

G Gowtham said...

நாகை சிவா,
முரளி,
யாத்ரீகன்,
தோளைத்தொட்டு தேற்றியதற்கு நன்றிகள்.
காமெடி கீமெடி பண்ணிடலியே?!

MSV Muthu said...

ஆகா. அருமையான காமடி கதை. நன்றாக ரசித்து இரண்டு மூன்று முறை சிரித்துவிட்டேன், நல்லா சத்தம் போட்டு. பக்கத்தில் இருந்த நண்பன் கேட்க, அவனுக்கும் படித்துக்காட்டினேன்.

நான் ரசித்த வரிகள்

//கரையோடு கரையாய் இருக்கும் கடலுக்குள் எப்படிக் குதிப்பதாம்

//'ரெண்டு மூணு' வேர்க்கடலைகள் கொசுறாகவும் வாங்கிச்சாப்பிட்டு

//"கோயிந்தாசாமி.. வெரி நைஸ் நேம். ம்... சொல்லுங்க''


//"கூல்டௌன் மிஸ்டர் கோயிந்தாசாமி. கரெக்டா சொல்லுங்க உங்களுக்குக் கோபம் வருதா? இல்ல கோபம் கோபமா வருதா?''

//தெளிவாச் சொல்லுங்க... 'இனா'வா? இல்ல 'வானா'வா?

நல்ல முயற்சி. தொடர்ந்து நகைச்சுவைக்கதைகள் எழுதுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

கௌதம்.. கதை சூப்பர்..

இதுக்கு ஏன் உங்களுக்குப் பின்னூட்டம் வரலை?

ஒரு நாள் காத்திருந்தீங்களா? இல்லை ரெண்டு நாளா? ;)

போஸ்ட் தமிழ்மணத்தில் போட்டீங்களா? இல்லை தேன்கூடா?

(இன்னும் நிறைய கேட்கணும்னு ஆசை தான்.. ஆனா அப்புறம் கோயிந்சாமி மாதிரி என்னைக் கண்டவுடன் சுட உத்தரவு போட்டுட்டீங்கன்னா? எதுக்கு வம்பு ;)!)

Anonymous said...

today only i read this.. hmm nice try..

sengKamalam

Anu said...

Hi
I managed to read this in office.
And I couldnt stop laughing...
Nice one...Maranam engira talaippilum kooda comedy kalandiruppadu..wow..nice effort.