Wednesday, October 25, 2006

அம்மா அப்பா விளையாட்டு! / காதல் பால்


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
- அறத்துப்பால், அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை, குறள்: 136

ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை உணர்ந்து, அச்செயலைத் தவிர்த்து விடுவார்கள் அறிவுடையோர்.


“ஆமா.. ‘டேட்டிங் டேட்டிங்’னு சொல்றாங்களே! அப்படின்னா என்ன?” - அவளை ஓரக்கண்களால் பார்த்தபடியே கேட்டான் அவன்.

இரண்டு கண்களாலும் முறைத்தபடியே சொன்னாள் அவள்.. “என்னது.. கிண்டலா? தொலைச்சுப் புடுவேன், ஜாக்கிரதை!”

“யேய் நிஜமாடா! என்ன நம்பு. என்னன்னு தெரியாமத்தானே கேட்குறேன். உனக்குத் தெரிஞ்சா விளக்கம் சொல்லு. இல்ல, ‘தெரியாது’ன்னு சொல்லு! இதுக்கு ஏன் லுக் விடுறே?”

“யாருக்கு? உனக்கா தெரியாது? என்னை நம்பச் சொல்றியாக்கும்? திருட்டு ராஸ்கல்!”

“முன்னே பின்னே செத்திருந்தாதானேம்மா சுடுகாடு தெரியும். நான் இதுவரை டேட்டிங் போனதே இல்லை. நல்லா சொல்றேன், கேட்டுக்கோ. இதுவரை நான் எவகூடவும் டேட்டிங், போட்டிங்னு எந்த தப்புத்தண்டாவும் பண்ணதில்லை”

“ஹை! டேட்டிங்னா என்னன்னே தெரியாதுன்னு போன நிமிஷம் சொன்னே. இப்ப என்னடான்னா தப்புத்தண்டான்னு அனர்த்தம் சொல்றே! இந்த ஜோலியெல்லாம் நம்மகிட்ட நடக்காது மகனே. நேரடியா மேட்டருக்கு வா! இப்ப என்னான்றே நீ?

“சரி சரி.. கமிங் டு த பாயிண்ட். என்கூட வெளியூருக்கு வர்றியா? ஒரு ஜாலி ட்ரிப்?”

இதைத்தான் கேட்கப் போகிறான் என அவன் இந்தப் பேச்சை எடுத்ததுமே யூகித்துவிட்டிருந்ததால் அதிர்ச்சி இல்லை அவளது முகத்தில். அதனால் ஏமாற்றம் அவன் முகத்தில்!

“ஏண்டீ.. ‘டேட்டிங் வா’ன்னு கூப்பிடறேன். நீ என்னடான்னா ஏதோ ‘டீ குடிக்க வா’ன்னு நான் கூப்பிட்டமாதிரி காஷூவலா ரியாக் ஷன் கொடுக்குறே!” என வெளிப்படையாகவே கேட்டுவிட்டான்.

அவனை முகத்துக்கு முகம் பார்த்தபடியே பேசினாள் அவள்.. “டேட்டிங்னா நீ சொன்னமாதிரி தப்பு தண்டாவெல்லாம் கிடையாது. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு மனம் விட்டுப் பழக, பேச, சிரிக்க ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.”

“ஓஹோ! அப்புறம்..?” - அவள் பேச்சை ரசித்தான் அவன்.

“ம்.. விழுப்புரம்! குறுக்கே பெசாம கேளு.. நீயும் நானும் மூணு வருஷமா லவ் பண்றோம். ஒருத்தர ஒருத்தர் ஏறக்குறைய நல்லாவே புரிஞ்சாச்சுன்னு நான் நம்பறேன். இப்ப எதுக்கு நமக்கு டேட்டிங்? நாம என்ன காலேஜ் பசங்களா! ரெண்டு பேரும் டீஸண்டான ஜாப்ல இருக்கோம்ங்குறதை மறந்துடாதே!”

“அடச்சீ! வேலை பார்க்குறதுக்கும் டீஸண்டுக்கும் டேட்டிங்குக்கும் என்ன சம்பந்தம்? ஏன் உளர்றே?” என்றான் அவன்.

இப்போது அவள் முறை.. “ஓஹோ! அப்புறம்..?” என்றாள்.

“வருவியா? வரமாட்டியா? வரலேன்னா உன் பேச்சு கா!” எனப்பாடினான்.

“நீ சின்னப் புள்ளைத்தனமா ஏதும் வரம்பு மீற மாட்டேன்னு ப்ராமிஸ் கொடுத்தா நான் உன்கூட எங்க வேண்ணாலும் வரத்தயார்” என்றாள் அவள்.

“ஏன் என் மேல அவ்வளவு பயமா?” - லேசான வெட்கத்துடன் திரும்பி நின்ற அவளின் இடுப்பைப் பிடித்து செல்லமாகக் கிள்ளியவாறே கேட்டான்.

“அப்படின்னு இல்லை” - செல்லமாகவே சிணுங்கினாள் அவள்.

தூண்டில் வீசினான் அவன்.. “அப்படியா ரொம்ப சந்தோஷம். அப்ப.. வா என்னோட”

“வந்து..?” - இந்தத் தூண்டில் அவளிடமிருந்து!

“வா! ரூம் போட்டு ஓடிப் பிடிச்சு விளையாடலாம் ரெண்டு பேரும்!” - குஷியோடு சொன்னான் அவன்.

வெட்கச் சிவப்போடும் பொங்கும் சிரிப்போடும் அவனை அடிக்க கையை ஓங்கினாள் அவள். பார்க் பெஞ்சில் இருந்து எழுந்து குழந்தைபோல ஓடினான் அவன்.

ந்த நாளும் வந்தது!

மகாபலிபுரம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த அரசுப் பேரூந்தின் கடைசி வரிசையில் ஜன்னலோரம் அவள். அவளோரம் அவன்!

அவனுக்கு நினைக்க நினைக்க ஜில்லென்று இருந்தது. அவளுக்கோ உஷ்ணப் பெருமூச்சு!

மெதுவாக அவள் காதுகளில் கிசுகிசுத்தான் அவன்.. “யேய் இப்ப சொல்! நிஜமாவே என்னை ஒண்ணும் பண்ணவிட மாட்டியா?”

“என்னது?” - காதில் எதுவும் விழாதவளாக நடித்தாள் அவள்.

அவன் மறு மொழிந்தான்.. “முத்தம் கொடுக்கக்கூட விடமாட்டியாடி? நான் பாவமில்லை!”

‘க்ளுக்’கென சிரித்தாள் அவள்.

“இந்தாங்க பாக்கி சில்லறை. நீங்கதானே ஐநூறு ரூபா நோட்டு கொடுத்தது?” என்றார் அருகே வந்த கண்டக்டர்.

கண்டக்டர் விலகிச் சென்றதும் மறுபடியும் ஏக்கத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான் அவன்.

அவனது வலது கையை எடுத்து தன் இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையில் வைத்துப் பொத்திக் கொண்டாள் அவள். அவன் முகத்தைப் பார்க்காமலேயே சொன்னாள்.. “நான் என்னிக்கு இருந்தாலும் உனக்கானவ. நீ ஆசைப்பட்டா இன்னிக்கே என்னை உனக்கு முழுசா தரவும் நான் தயார்”

அவன் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. ரத்தம் இரண்டு மடங்கானது போலிருந்தது!

“நிஜமாத்தான் சொல்றியா?”

“ம்”

வெட்கம் பிடுங்கித்தின்றது போக ஒரு எழுத்துப் பதிலை மட்டுமே சொல்ல முடிந்தது அவளால்! பிடிக்குள் இருந்த அவனது கையை இருக்கினாள்.

அதற்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை!

ரொம்பவே விசாலமானதாக இருந்தது அந்த கடற்கரையோர ரிசார்ட்..

வரவேற்பறையில் இருந்து கூடவே நடந்து வந்து, அவர்களுக்கு ஒதுக்கிய அறையின் கதவைத் திறந்து கொடுத்தான் ரூம் பையன். விளக்குகளைப் போட்டான். ஏ.ஸி.யினை ஆன் செய்தான். ப்ரிட்ஜைத் திறந்து உள்ளே மினரல் வாட்டர் பாட்டில்கள் இருப்பதை உறுதிசெய்து கொண்டான். “எதுனா வேணும்னா போன் பண்ணுங்க சார். நம்பர்லாம் அதோ அங்கே இருக்கு” என்றபடியே டிரஸ்ஸிங் டேபிளின்மீது கிடந்த லேமினேடட் சார்ட்டைக் காட்டினான். கொஞ்சம் தயங்கி நின்று, தலை சொரிந்து, கொடுத்த டிப்ஸை வாங்கிக்கொண்டு வெளியேறினான்.

கதவை சத்தமில்லாமல் சாத்தினான் அவன். தாழ்ப்பாள் போட்டான். திரும்பினான். சுவற்றைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்த அவளை நோக்கி நடந்தான்.

அந்தக் கணம் இருவருக்குமே புத்தம் புதிதாக இருந்தது! மூன்று வருடக் காதல் காலத்தில் செக்ஸ் பற்றியெல்லாம் கூச்சமில்லாமல் விவாதித்தவர்கள்தான் இருவருமே. ஆனால் அதுதான் தங்களுக்குள் நடக்கப் போகிறது என்று தெரிந்த மாத்திரத்தில் அட்டையாக வந்து ஒட்டிக்கொண்டுவிட்டதே பாழாய்ப்போன இந்த வெட்கம்!

அருகே சென்றவன், அவள் முதுகை உரசியபடி நின்றான். சிலிர்த்தாள் அவள்.

தன் இரண்டு கைகளையும் கொண்டு அவள் இடுப்பை வளைத்து, இறுக்கிப் பிடிக்கும்போது சின்னதாக அலறியபடியே விலகினாள் அவள்.

“ஒரு நிமிஷம்” என்றாள், அறைக்குள்ளேயே இருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

தலையில் கை வைத்தபடியே வெளியே வந்தாள் அடுத்த சில நிமிடங்களில்..

“ப்ச்! பக்கத்துல எங்காச்சும் மெடிகல் ஷாப் இருக்குமா?” என்றாள்.

“ஏன்?” என்றான் லேசான கலவரத்துடன்.

“இல்ல.. நாப்கின் வாங்கித் தர முடியுமா? வழக்கமா அது வர்றதுக்கு இன்னும் நாலஞ்சு நாள் இருக்கு. ஆனா இன்னிக்கே வந்துடுச்சு!”

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து,
உடலறியும் உண்மைக்காதல்!

முந்தைய காதல்பால் இங்கே!

5 comments:

லக்கிலுக் said...

தலைவரே!

உங்களுக்கு இன்னொரு பெயர் "ஷக்தி பாரதி"யா?

வினையூக்கி said...

தலை!!!
super. I guessed the ending.

Anonymous said...

அட போங்கப்பா

Anonymous said...

கெளதம், படிச்சு முடிச்சவுடனே வாய் விட்டு சிரிச்சுட்டேன்.
நல்ல காமடியா இருந்தது.

Anonymous said...

nalla suspense :-)