Tuesday, November 16, 2010

கம்பிக்குள் தம்மாத்துண்டு வெளிச்சம்! - ஒரு துளி கடல் 7


கம்பி எண்ணி இருக்கிறீர்களா? அதாவது.. போலீஸ் ஸ்டேஷன் லாக் அப்-பில் எத்தனை குறுக்குக் கம்பிகள் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஏழு கம்பிகள் இருப்பதாகவே தமிழ் சினிமாக்களில் பார்த்து தெரிந்து வைத்திருந்த நான், நிஜமாகப் போய், பக்கத்தில் இருந்து எண்ணிப்பார்த்த போது ஆறுதான் இருந்தன. அதுவும் பலியாடு கணக்காக கொஞ்சம் பயந்து நடுங்கியபடியேதான் எண்ணினேன் அப்போது! ஹ்ம்.. என் சூழ்நிலை அப்போது அப்படி!!

எப்போது? எப்படி?

’கரெக்ட்.. இந்த இடத்துல ‘கட்’ பண்ணி அப்படியே ’ஃப்ஷாஷ்பேக்’ போலாம்!’

திண்டுக்கல் – பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவன் நான். ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரிய அடையாளம்வேறு!

எப்படியும் அவுட் ஸ்டேண்டிங் ரிப்போர்ட்டராக தேர்ச்சி பெற்றாக வேண்டும் என அரக்கப்பரக்கவே பத்திரிகையாளன் பணியைச் செய்துவந்தேன். அதனால் விகடன் அலுவலகத்திலும்சரி, ஊருக்குள்ளும்சரி.. கொஞ்சம் நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருந்தேன்.

நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு எல்லாம்!

அதுசரி, சிக்கலெல்லாம் ட்ரெய்லர் கொடுத்துவிட்டா வந்து வழி மறிச்சுத் தொலைக்கும்?!

உடன் படிக்கும் தோழி ஒருத்திக்கு அன்று பிறந்தநாள். கொண்டாட வேண்டாமா! பெண்கள் 5 பேர், பையன்கள் 3 பேர்.. மொத்தம் 8 பேருமாகக் கிளம்பினோம்.

பார்க், பீச், சிட்டி சென்டர்.. மாதிரியான ஜமா ஸ்பாட்கள் எங்கள் ஊரிலெல்லாம் இல்லை என்பதாலும் நாங்கள் ரொம்ம்ம்ப்ப நல்ல பிள்ளைகள் என்பதாலும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம். மூக்குப் பிடிக்க சாப்பிட்டோம்.

பில் வந்ததும் பர்த்டே பேபியின் தலையில் கட்டிவிட வேண்டும் என திட்டம். பில் வந்தது. பையன்கள் மூவரும் உஷாரானோம்.

”இங்கே கொடுங்க.. இங்கே கொடுங்க” என பேபியே சவுண்டு கொடுத்தார். ’அப்பாடா’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டான் உடன் இருந்த நண்பன் ஒருவன். அவன் பெயர் ஸ்கூட்டர். அப்பா – அம்மா வைத்த பெயர் எதுவாக இருந்தாலும் கூடப்படிக்கிறவங்க வைக்கும் ’செல்லப்பெயர்’தானே கல்லூரி முழுக்க எதிரொலிக்கும்!

ஆனாலும் விதி வலியதுதானே?!

குறுக்கே புகுந்து பாய்ந்து பில்லைக் கைப்பற்றினான் கூட வந்திருந்த இரண்டாவது நண்பன். இவனுக்கு எங்கள் மாணவ சமுதாயம் வைத்திருந்த பெயர் முதலாளி. இத்தனைக்கும் ‘மவனே, எவனும் உணர்ச்சிவசப்பட்டு இன்னிக்கு பில்லைக் கையில் எடுத்துடக்கூடாது’ என பக்காவாகப் பேசிவைத்துக்கொண்டுதான் போயிருந்தோம்.

”என்ன நீங்க.. எங்களை பில் பே பண்ண விடமாட்டேங்கறீங்க” என பெண்கள் சிணுங்க, காதுகளில் புகையோடு ஸ்கூட்டர் முறைக்க, நான் கெக்கேபிக்கே என திருதிருக்க.. முதலாளி பணத்தைக் கொடுத்தான். மறந்தும்கூட எங்கள் முகத்தைப் பார்க்கவில்லை அவன்.

பேச்சும் சிரிப்புமாக தோழிகள் தங்கியிருந்த ஹாஸ்டல் வரை நடந்தே வந்தோம். அப்படியும் தீர்ந்து போகவில்லை வார்த்தைகள்! (’அடங்கொக்கா மக்கா.. கடலை கடலை’ என கத்தாதீர்கள் என்னருமை மக்கா!)

எல்லாவிதத்திலும் சமர்த்துப் பையன்கள் இமேஜ் எங்களுக்கு இருந்ததால் (சத்தியம் சாமி.. நம்புங்க!) அந்த தனியார் ஹாஸ்டலில் தங்கிப் படித்துவந்த மற்ற கல்லூரி பெண்களும் எங்களைப் பார்த்தால் வலிய வந்து ‘ஹாய்.. பை’ சொல்வது வழக்கமே.

பரிட்சை ஹாலுக்குள் நுழைவதற்கு முன்னும் படக் படக்கென பாடம் படிப்பது போல, தோழிகள் ஹாஸ்டலுக்குள் நுழையும் கடைசி நிமிடம்வரை பேசியபடியே இருந்த எங்களை நோக்கி ட்டுட்டுட்டுட்டு என ஒரு சத்தம் ஊர்ந்து வந்தது. திரும்பினோம்.

ஒரு இளக்காரப் பார்வை கொடுத்தபடியே பைக்கில் எங்களைக் கடந்து கொண்டிருந்தார் ஒரு காக்கி சட்டை கரடு முரடு.  

”இந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர்.. இந்த தெருவுலதானே போலீஸ் ஸ்டேஷனும் இருக்கு. தினமும் எங்களை இப்படி முறைச்சு பார்த்துகிட்டேதான் போவார் வருவார்” என எரிச்சலோடு சொன்னாள் தோழி ஒருத்தி.

சட்டென வாட்ச்சைப் பார்த்துவிட்டு அச்சச்சோ சொன்னேன்… “எட்டு மணி ஆகப்போகுது. விகடன் ஆபிஸுக்கு மேட்டர் அனுப்பனும். நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருங்க.. நான் போய் கவரை கொரியர்ல கொடுத்துட்டு அஞ்சு நிமிஷத்துல வரேன்” எனச் சொல்லி விடைபெற்றேன்.

கைவசம் தயாராக வைத்திருந்தேன் எழுதி முடிக்கப்பட்டிருந்த கட்டுரையை. கொரியர் ஆபிஸ் போய் கவரைக் கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் திரும்பினேன்.

அதற்குள் அங்கே கப்பல் கவிழ்ந்திருந்தது!

ஹாஸ்டல் வாசலில் பதைபதைப்போடு நின்று கொண்டிருந்தனர் தோழிகள் ஐந்துபேரும்!

“ஹே.. என்னாச்சு?”

“ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போய்ட்டார் அந்த சப் இன்ஸ்பெக்டர்”

”பொறுமையா சொல்லுங்க.. என்ன நடந்தது?”

“அந்த சப் இன்ஸ்பெக்டர் திரும்ப வரும்போது ரவுடி மாதிரி நடந்துகிட்டார். ‘என்னங்கடி.. இந்த வீட்ல ஹாஸ்டல் நடக்குதா.. இல்லை.. ப்ராத்தல் நடக்குதா?’ன்னு சத்தம் போட்டார். நாங்க என்ன சொல்லியும் கேட்கலை. ‘உங்க மேல சந்தேகமா இருக்கு, வாங்கடா ஸ்டேஷனுக்கு’ன்னு அதட்டி ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு போயிட்டார்..” - பர்த்டே பேபியின் கண்களில் பதைபதைப்பையும் மீறி கண்ணீரும்!

நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறின எனக்குள். இந்த அநியாயத்தைத் தட்டிகேட்டாக வேண்டாமா உடனே! (இந்த இடத்தில் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என பின்ணணி இசையைச் சேர்த்துப் படித்துக்கொள்ளவும்!).

“பொறுமையா இருங்க.. என்ன தப்பு பண்ணினாங்க அவங்க ரெண்டு பேரும். அரெஸ்ட் எல்லாம் பண்ண முடியாது. நான் போய் பேசுறேன். ரெண்டுல ஒண்ணு பார்க்காம இன்னிக்கு விடுறதில்லை” என்று பெண்களுக்கு தைரியம் சொல்லிவிட்டு, நடையைக் கட்டினேன். (பாட்ஷா பட ரீரிகார்டிங்கை இங்கே போட்டுக்கலாம்.. ஹிஹி!)

காக்கி சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க கடும்கோபத்தோடு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன்..

உள்ளே ஒரு ஓரமாக.. நண்பர்கள் இருவரும் பரிதாபமாக நின்று கொண்டிருந்தனர்.

‘பொறுங்கடா.. அதான் நான் வந்துட்டேன்ல’ என கண்களிலேயே ஆறுதல் சொல்லிவிட்டு, நேராக சப் இன்ஸ்பெக்டர் டேபிளுக்குப் போனேன்.

“சார் வணக்கம்’

பதில் வணக்கமெல்லாம் எதிர்பார்க்க முடியுமா அப்பேர்ப்பட்ட அடாவடி போலீஸ்காரரிடம். மெல்ல தலை தூக்கி ஒரு புழுவைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தார்.

படபடவெனப் பேசினேன்.. “நான் ஜூனியர் விகடன் ரிப்போர்ட்டர். பி.எஸ்.என்.ஏ. காலேஜ்ல படிக்கிறேன். நீங்க கூட்டிட்டு வந்திருக்கும் ரெண்டு பேரும் என்னோட ஃப்ரண்ட்ஸ். என்ன தப்பு செஞ்சாங்கன்னு அவங்களை இங்கே கூட்டி வந்திருக்கீங்க?”. இங்கே எழுதும்போது தெளிவா வந்துவிட்டது என்றாலும் அப்போது பேசும்போது உளறிக்கொட்டினேன். ஆத்திரக்காரனுக்கு புத்தியும் மட்டு, நிதானமும் மட்டுட்டு!

ஏற இறங்கப் பார்த்த காக்கி, ”நீ ரிப்போர்ட்டரா? இல்ல.. ஸ்டூடண்ட்டா? தெளிவா சொல்லு” என்றார் மிரட்டும் தொணியில்.

ஜூனியர் விகடன் கொடுத்த அடையாள அட்டையை எடுத்து நீட்டினேன். கூடவே காலேஜ் ஐடெண்டிடி கார்டையும் கொடுத்தேன்.

இரண்டையும் மாறி மாறிப் பார்த்தார். ‘ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டர் – ட்ரெய்னி’ என அடையாள அட்டையில் இருந்ததைப் பார்த்ததும் ’தொழிலுக்கு நான் பச்சா’ என்பதைப் புரிந்து கொண்டார். கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார்.

“யோவ் கான்ஸ்டபிள்.. சாரையும் அந்தப் பசங்ககூட உட்கார வைய்யா” என்றார்!

ஐயகோ! என்ன இது இந்த திண்டுக்கல்லுக்கு வந்த சோதனை?! ரத்தம் கொதித்தது எனக்கு. “சார்.. நான்.. ரிப்போர்ட்டர்.. அது.. வந்து.. ஸ்டூடண்ட்.. இவங்க.. பசங்க” என உளற ஆரம்பித்தேன் பயத்தில்.

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அந்த ஆள் பாட்டுக்கு எழுந்து போய்விட்டார். நண்பர்கள் இருந்த இடத்துக்கு என்னைத் தள்ளிக்கொண்டு வந்தார் கான்ஸ்டபிள்.

வியர்க்க விறுவிறுக்க வரும் என்னை விநோதமாகப் பார்த்தார்கள் நண்பர்கள்.

”இங்கேயே இருங்க.. ஐயா ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்து உங்களை விசாரிப்பார்” எனச் சொல்லி, கமுக்கமாகச் சிரித்துவிட்டுப் போனார் கான்ஸ்டபிள்.

குனிந்த தலை நிமிராமல் நடந்ததைச் சொன்னேன் நண்பர்களிடம். கீழே விழுந்துட்டேன், இனி எதுக்கு மீசையில மண் ஒட்டியதை மறைத்துக்கொண்டு!

“அடப்பாவி.. உன்னைப் பார்த்ததும் தெய்வத்தைப் பார்த்த மாதிரி இருந்துச்சு. ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சது என் கண்ல. இப்ப என்னடான்னா..” – கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தான் ஸ்கூட்டர்.

முதலாளி உள்ளுக்குள் அழுதாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, பாட்ஷான்னு சொல்லிடவா இன்ஸ்பெக்டர்கிட்ட” என்றான். வேதனையிலும் ’சோக்’கடித்தான்!!

“ஆமாடா வெண்ணெய்.. உங்க அப்பாதான் மதுரையில.. தி.மு.க.வுல பெரிய ஆள்தானே.. அதைச் சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே” – எரிந்து விழுந்து கடித்தான் ஸ்கூட்டர்.

“ச்சே.. இந்த நேரம் பார்த்து இந்த சைலேந்திரபாபு எங்கே போனார்னு தெரியலியே” என புலம்பினேன் நான். அப்போது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சைலேந்திரபாபு எனக்கு ஓரளவு தெரிந்தவர்.

ஒருசில போலீஸ் வழக்குகள் சம்பந்தமாக அவரைச் சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறேன். அவர் சாராய ரெய்டு போனபோது உடன் சென்றது, கஞ்சா காடுகளை அழிக்க மலைக்கிராமங்களுக்கு வேட்டைக்குப் போனபோது கூடவே சென்ற பத்திரிகையாளர்கள் குழுவில் நானும் இடம்பெற்றது.. என பல சந்திப்புகளில் பரிச்சயமானவர். மிகுந்த மரியாதையோடு என்னை நடத்தியவர்.

ஆனால் என்ன பண்ணுவது.. அந்தக்காலத்தில் மொபைல் போனைக் கண்டுபிடிக்காதவனை இப்போதுதானே திட்டித்தீர்க்க முடிகிறது. ஸ்டேஷனில் இருக்கும் போனை பயன்படுத்தி எஸ்.பி.க்கு பேசலாம் என்றால் ‘இந்த சில்லறை பிரச்னைக்காக அவருக்கு போன் போடுவதா’ என்ற தயக்கம் வேறு.

பெரிய பெரிய பிரச்னைகளுக்கெல்லாம் தெனாவெட்டாக போலீஸை அணுகிய நாமெல்லாம் இப்படி ஒரு சப்பை மேட்டருக்கு அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமே என ஆத்திரமாக வந்தது. என்னதான் ஊர்ப்பிரச்னைக்கு குரல் கொடுதாலும், நமக்கொரு பிரச்னை என்றால்தானே நாடி நரம்பெல்லாம் நடுநடுக்க ஆரம்பிக்கிறது!

ஸ்டேஷனில் இருந்த பெரிய சைஸ் ட்ரங்குப் பெட்டிமீது மூன்று பேரும் உட்கார்ந்திருந்தோம். எங்களுக்கு ரொம்ப பக்கத்தில்தான் லாக் அப் இருந்தது. எத்தனை வாட்டிதான் அந்த ஆறு கம்பிகளை எண்ணிக்கொண்டே இருப்பது!

இதற்கு மேல் ஜூனியர் விகடன் பேரைச் சொல்லக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டேன். எங்கே நான் சொல்லி, நாளைக்கு அது ஜூனியர் விகடன் அலுவலகத்துக்குத் தெரிந்துபோய், ஒருவேளை இதனால் எனக்கு அவுட்ஸ்டேண்டிங் ரிப்போர்ட்டர் சர்டிஃபிகேட் கிடைக்காமல் போய்விடுமோ என்றும் வீணாக பீதி வயிற்றைக் கலக்கியது.

”எங்க அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்க.. லேடீஸ் ஹாஸ்டல் வாசல்ல அதென்ன உனக்கு பேச்சுன்னு திட்டித்தீர்த்துடுவாரு” என தானாகவே புலம்பிக் கொண்டிருந்தான் ஸ்கூட்டர்.

“போடா கிறுக்கா.. சட்டப்படி நம்மை ஒண்ணுமே செய்ய முடியாதுடா” என அவனுக்கு ஆறுதல் சொன்ன முதலாளி, “ஆனா என்ன.. கஞ்சா கேஸ், கள்ளச்சாராயக் கேஸ்னு பொய்க் கேஸ் போட்டு உள்ளே தள்ளினாலும் தள்ளலாம்” என பயமும் காட்டினான்.

ஸ்டேஷனுக்குள் நுழையும் போலீஸ்காரர்கள் ஒவ்வொருவரும் எங்கள் அருகே வந்து, “யார்ரா நீங்க? என்ன தப்பு பண்ணீங்க?” என ஒரு தர்ம அதட்டுப் போடுவதும், நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு “போச்சுடா.. இன்னிக்கு அந்த கிறுக்கன்கிட்ட நீங்க சிக்கிட்டீங்களா” என உச்சுக்கொட்டிவிட்டுப் போவதுமாக நேரம் கடந்துகொண்டே இருந்தது.

“தம்பிங்களா.. பொண்ணுங்ககிட்ட சிரிச்சுப் பேசி ஜாலியா இருந்தீங்களா.. அது நம்ம சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிக்காம போயிருக்கும். ’என்னிக்காச்சும் ஒரு நாள் ரெய்டு பண்ற சாக்குல அந்த லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள புகுந்து அந்த குட்டிகளையெல்லாம் கிட்ட இருந்து பார்த்து ரசிக்கணும்யா’ன்னு அடிக்கடி அவரே சொல்லியிருக்கார். பொறாமையில சும்மா உங்களை பயங்காட்டுறதுக்காக கூட்டிட்டு வந்திருப்பார். இப்ப நாங்க அனுப்பிட்டோம்னா எங்களுக்கு டின் கட்டிருவார். பொறுங்க.. நைட் ரவுண்ட்ஸ் முடிஞ்சு வந்ததும் உங்களை அனுப்பிடுவார்” என ஆறுதல் சொன்னார் எங்களுக்கு டீ வாங்கிக் கொடுத்த ஹெட் கான்ஸ்டபிள்.

நேரமாக ஆக காணாமல்போன தைரியமும் தெம்பும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப வந்தது. ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் சப்-இன்ஸ்பெக்டர் திரும்பி வந்தார்.

ஸ்டேஷனுக்குள் நுழையும்போதே எகத்தாளமாக எங்களைப் பார்த்தவர், ஆடி அசைந்தபடியே இருக்கையில் போய்ச் சரிந்தார். ஹெட் கான்ஸ்டபிளை அருகே அழைத்தார்.

என்னிடம் இருந்து பிடுங்கி வைத்திருந்த அடையாள அட்டைகளை ஹெட் கான்ஸ்டபிள் கையில் கொடுத்து, ‘அவனுகளை அனுப்பிடு’ என்றார்.

அடுத்த சில நொடிகளில்.. பொசுக்கென வெளியே அனுப்பிவிட்டார்கள். காரசாரமாக நான்கைந்து வார்த்தைகள்கூட பேசமுடியவில்லையே என ஆதங்கமாக இருந்தது.

நேர்ந்த அவமானத்தை விகடன் அலுவலகத்தில் சொன்னால் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற கவலையும் இருந்தது. ‘இந்த சிம்ப்பிள் மேட்டரையே டீல் பண்ணத் தெரியாதவன், எப்படி பெரிய பத்திரிகையாளனாக ஆக முடியும்’ என்று கருதி எனக்கு அவுட்ஸ்டேண்டிங் ரிப்போர்ட்டர் அவார்டு கொடுக்காமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறதே. விளங்காத கனவு கண்டால் வெளியே சொல்லக்கூடாது என்பார்களே, அப்படி நடந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் எனக்குள் நானே வைத்து குமைந்துகொண்டிருந்தேன்.

அந்த சப்-இன்ஸ்பெக்டர் பற்றிய தகவல்களை சுறுசுறுப்போடு துப்பறியத் தொடங்கினேன். உள்ளூரில் பணிபுரிந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியுடன் அவருக்கு இருந்த ரகசிய உறவு பற்றி தகவல் கிடைத்தது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த குஷியோடு எழுத உட்கார்ந்தேன்.

எடுத்த எடுப்பில் ‘ரவுடி போலீஸ்’ என தலைப்புடன்தான் எழுதவே ஆரம்பித்தேன்.

கல்லூரி மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்த அப்பாவி மாணவர்கள் சிலரை ரவுடித்தனமாக ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று மிரட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என ஆரம்பித்து பெண் போலீஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல் செய்வதற்கே இவருக்கு நேரம் சரியாக இருக்கிறது என வெளுத்து வாங்கி இருந்தேன். நிஜக்கதையில் என் போர்ஷனை மட்டும் ஜாக்கிரதையாக நீக்கிவிட்டேன்.

கட்டுரை ஜூவி-யில் வெளிவரும். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக அந்த ரவுடி சப்-இன்ஸ்பெக்டர்மீது ஏதாவது நடவடிக்கை இருக்கும் என நப்பாசையுடன் காத்திருந்தேன். கட்டுரைக்குப் பதில் கண்ணன்தான் வந்தார், லைனில்!

மதுரையில் இருந்து ரா.கண்ணன் பேசினார். இப்போதைய விகடனின் இணை ஆசிரியராக இருக்கும் அவர், அப்போது எனக்கு அடுத்தகட்ட உயர் அதிகாரி. மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் எனக்கு ஒரு வருடம் சீனியர் அவர். அவுட் ஸ்டேண்டிங் ரிப்போர்ட்டராகத் தேர்ச்சிபெற்று, ரெசிடென்சியல் ரெப்ரசென்டேடிவ் ஆக பதவி உயர்வு பெற்று, மதுரையில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.

”உண்மையைச் சொல்லு.. அந்த சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட நீதானே மாட்டிக்கிட்டே?” என கண்ணன் கரெக்டாகக் கேட்டதும் அசடு வழிந்தபடியே நடந்ததைச் சொன்னேன்.

“அந்தாளு செஞ்சது அராஜகம்னாலும் நீ அதுக்காக இப்படி பழி வாங்கும் வெறியோடு ஆதாரம் எதுவும் இல்லாமல் எழுதுறதும் அராஜகம். சட்டத்துக்கு சாட்சி தேவை, பத்திரிகைக்காரனுக்கு ஆதாரம் தேவை” என்றார் கண்ணன்.

ஒரு காலத்தில் தன் உயர் போலீஸ் அதிகாரியை (கள்ளக்)காதல் செய்துகொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி பற்றிய பரபரப்புச் செய்தியை பகிரங்கமாக வெளியிட்டது ஜூனியர் விகடன். அந்த வழக்கை உதாரணமாக எடுத்துச் சொன்னார் கண்ணன்..

”அவங்க ரெண்டு பேரும் தனிப்பட்ட முறையில லவ்ஸ் பண்ணிக்கிட்டிருந்தது அவங்களோட சொந்தவிஷயம். அதனால் அவர்களைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரையைப் பிரசுரிக்க மறுத்துவிட்டார் நம் எம்.டி. (விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன்). அடுத்தவர்களது பெட்ரூமுக்குள் எட்டிப்பார்ப்பது பத்திரிகை தர்மமாகாது. பிற்காலத்தில்.. அந்த கள்ளக்காதலை அடிப்படையாக வைத்து நிறைய தகிடுதத்தங்கள் நடந்தன போலீஸ் டிபார்ட்மெண்டில். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம்.. இப்படி பல விஷயங்களுக்கு அந்த பெண் அதிகாரியைச் சந்தித்து காரியம் சாதித்துக் கொண்டார்கள் பலர். காதலி சொல்வதை கர்மசிரத்தையாக நிறைவேற்றிக் கொடுத்தார் அந்த உயர் போலீஸ் அதிகாரி. அப்போதுதான் அவர்கள் உறவு பற்றி ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியிடுவதை அனுமதித்தார் எம்.டி. அதுவும் எப்படி.. ’இவ்வளவு தகிடுதத்தங்கள் அரங்கேற்றப்படுவதற்குக் காரணம் அவர்களுக்கு இடையே இருக்கும் உறவுதான்’ என்ற அடிப்படையில்தான் எக்ஸ்போஸ் செய்தார்கள்.. காதலோ – கள்ளக்காதலோ அது தனிப்பட்ட விஷயங்கள். ஆனால் அதனை அடிப்படையாக வைத்து தகிடுதத்தங்கள், வரம்பு மீறல்கள் ஏற்படும்போதுதான் தனிப்பட்ட விஷயத்தை பொது சபைக்கு கொண்டு வரலாம்…”

கற்றுக்கொண்டேன் ஒரு புதிய விஷயம் ப்ராக்டிகல் ஜர்னலிஷத்தில் என்றாலும் அந்த ரவுடி சப்-இன்ஸ்பெக்டரை பழி தீர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மட்டும் அடங்கவே இல்லை.

தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் அந்த ரவுடி போலீஸுக்கு சாபம் கொடுத்துக்கொண்டுதான் இருந்தேன்.

பல நாட்கள் கழித்து ஒரு நாள்.. கோஷ்டிப்பூசல் குளறுபடிகளுடன் திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க.வின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு கேமராவுடன் போயிருந்தேன். காரசாரமாக நடந்த கோஷ்டிச் சண்டை அடிதடி அளவுக்கு வேகமெடுத்ததும் தடாலடி காட்சிகளை படம்பிடிக்கத் தொடங்கினேன்.

‘பிடிடா அந்த பத்திரிகைக்காரனை.. கேமராவைப் பிடுங்குடா’ என திடீரென என்னை நோக்கி ஆவேசக்குரல்கள்!

தங்களுக்குள் அடித்துக்கொண்டிருந்த கூட்டம் ஒருகணத்தில் கூட்டணி போட்டுக்கொண்டு, என்னை அடித்துத் துவைக்கும் நோக்கத்தோடு பாய்ந்தது. எகிறிக் குதித்து ஓடலானேன்.

இன்னும் ஒருசில விநாடிகளில் நான் எஸ்கேப் ஆகி விடுவேன் என்றிருந்த சூழலில், கொத்தாக என் சட்டையைப் பிடித்து நிறுத்தியது ஒரு உருவம். அதே ரவுடி சப்-இன்ஸ்பெக்டர்!

கூட்டத்துக்கு பந்தோபஸ்துக்காக வந்திருந்த ’ரவுடி’யார் என்னைப் பிடித்துக்கொடுத்து, ஆளும்கட்சிக்காரர்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டார். கொலைவெறியோடு என்னை நோக்கி வந்த ஒரு அ.தி.மு.க.கைத்தடி கையில் இருந்த கேமராவை பிடுங்கி, பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதுபோல தரையில் எரிந்தார்.

கேமரா இரண்டாகப் பிளந்தது! நான் கேமராவுக்கு மௌன அஞ்சலி செலுத்தக் குனிந்த சைக்கிள் கேப்பில் நான்கைந்து கும்மாங்குத்துகள் விழுந்தன எனக்கு.

மூத்த பத்திரிகையாளர்கள் ஓடிவந்து அதட்டுப்போட்டு, ரவுடி சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்தும் வெறியோடு சூழ்ந்திருந்த கைத்தடிகளிடமிருந்தும் என்னைக் காப்பாற்றினார்கள்.

அடுத்தநாள் உள்ளூர் நாளிதழ்களில் நானும் செய்தியாகி இருந்தேன். அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தாக்கப்பட்ட செய்தியாளர்!

’புதையல்’ எடுத்த செய்தியை விகடன் அலுவலகத்துக்கும், கண்ணனுக்கும் தெரியப்படுத்தினேன். கண்ணன் கொடுத்த ஆலோசனையின் பேரில் பக்கத்து ஊரான ஒட்டன்சத்திரத்தில் இருந்த விகடனின் சக பத்திரிகையாளர் எம்.பி.உதயசூரியன் என்னைச் சந்திக்க ஓடிவந்தார். இருவருமாகச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம். என் வீடு இருந்த ஏரியாவின்படி அது வேறு போலீஸ் ஸ்டேஷன். ரவுடி சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரிந்த ஸ்டேஷன் அல்ல. அன்று இரவு என் வீட்டுக்கு இரண்டு போலீஸ்காரர்களைக் காவலுக்குப் போட்டிருந்தார்கள்.
எஃப்.ஐ.ஆரில் ஆகட்டும், ஜூவியில் வெளியான கட்டுரையில் ஆகட்டும்.. ரவுடி சப்-இன்ஸ்பெக்டரைக் குறிப்பிடவே இல்லை. ஏற்கெனவே பட்ட அவமானத்துக்கு பழி வாங்குவதாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால் மனதில் வைத்துக் கருவிக்கொண்டதோடு நின்றுவிட்டேன்.

அடுத்த சில மாதங்களில் சென்னைக்கு வந்து பணியாற்றத் தயாரா என விகடனின் தலைமைச் செயலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், பெட்டி படுக்கை எடுக்காமல்கூட கிளம்பி வந்துவிட்டேன்.

சீனியர் நிருபர்கள் செய்தி சேகரிக்கச் செல்லும்போது என் டப்பா கேமராவைத் தூக்கிக்கொண்டு நானும் உடன் சென்று, கற்றுக்கொள்வதற்காக வேடிக்கை பார்ப்பேன். பரபரப்புப் பணி என்பதால் அடாவடி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தடாலடி கைத்தடி பற்றிய நினைவு எப்போதாவதுதான் வரும். ஆனால்.. மேம்போக்காக அல்லாமல், நாபிக்கமலத்தில்(?!) இருந்தே சாபமிடுவேன். அத்தோடு சரி!

கிட்டத்தட்ட சென்னைவாசியாகவே ஆகிப்போனபின் ஒரு நாள்.. விடுமுறை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் போனபோது எனக்கு இரண்டு ஆச்சரியங்கள் காத்திருந்தன.

பஸ் ஸ்டாண்டில் என்னை வரவேற்ற நக்கீரன் நிருபரும் நெருங்கிய நண்பருமான சக்திவேலுடன் நின்று பேசிக்கொண்டிருந்தேன்.

சக்திக்கு பயபக்தியுடன் ”குட் மார்னிங் சார்” சொன்ன குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். எங்கேயோ பார்த்தமுகம்! உற்றுப்பார்த்தேன்.. சாட்சாத் ரவுடி சப்-இன்ஸ்பெக்டர்தான்! ’காதல்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘ஙெங்ஙெங்ஙெங்ஙெ’ சொல்லும் பரத் தோற்றத்தில் ஒரு இருபது சதவிகிதமாவது ரவுடி சாருக்கு இருந்தது!

விஷ் பண்ணிவிட்டு கையில் வைத்திருந்த லத்தியைத் தரையில் தட்டியபடியே எங்களைக் கடந்துவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.

“ஆள் யார்னு தெரியுதுதானே? நிறைய கம்ப்ளெய்ண்ட்ஸ் இவர் மேல.. டிபார்ட்மெண்ட்ல நிறைய கெட்ட பேர்.. பதவி இறக்கம் செஞ்சுட்டாங்க..” என்றார் சக்தி.

மனதுக்குள் ஒரு கணக்கு தீர்ந்தது. 

அடுத்த கணக்கும் அந்த நிமிடமே தீர்ந்தது.

“இன்னொரு விஷயம் தெரியுமா.. உன்னை அடிச்சு, கேமராவை உடைச்சான்ல அந்த அ.தி.மு.க. ஆள்.. எம்.பி.சீனிவாசனோட கோஷ்டி ஆள்.. திடீர்னு கை-கால் விளங்காம படுத்த படுக்கையாகிட்டான்” என்றார் சக்தி.

இந்தத் தொடருக்கு ‘ஒரு துளி கடல்’ என பெயர் வைத்துவிட்டதால் ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே இங்கே உதாரணமாகச் சொல்லி இருக்கிறேன். ஆனால்.. இப்படி நூற்றுக்கணக்கான அனுபவங்கள் இருக்கின்றன என்னிடம் அரசனால் அன்றே கொல்ல முடியாவிட்டாலும் தெய்வம் நின்று கொன்றதற்கு சாட்சியாக!

(நன்றி: சூரியகதிர் மாதமிருமுறை இதழ்..) 

4 comments:

ILA (a) இளா said...

அடப்பாவமே! உங்களால ஒன்னுமே பண்ண முடியலையா?

அமைதி அப்பா said...

ஏற்கனவே சூரியகதிரில் முதல் பகுதி படித்திருந்தேன்.
உங்களை எப்போது வெளியில் விட்டார்கள் என்ற கேள்வி என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.
நன்றாக உள்ளது.
முடிவும் நன்று.

Anonymous said...

தர்மம் வெல்லும் என்பதில் சந்தேகமென்ன? - என்ற ஒரு கேள்வி இதை வாசித்ததும் என் முன்னே!

மிக மிக சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள், நன்றி.

அன்புடன் என் சுரேஷ்

Ahamed irshad said...

ந‌ல்லாயிருக்குங்க‌..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html