Wednesday, August 16, 2006

தீர்ந்துபோன வார்த்தைகள்! / காதல் பால்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
-பொருட்பால், அதிகாரம்: தெரிந்து செயல்வகை, குறள்: 466

செய்யத்தகாதவற்றை செய்வதாலும் கேடு உண்டாகும். அதுபோலவே செய்யத்தக்கவற்றைச் செய்யாததாலும் கேடு உண்டாகும்

தோ சொல்ல நினைக்குற மாதிரி தெரியுது. என்னன்னுதான் சொல்லிடேன்!” -ஏக்கம் ப்ளஸ் செல்லக் கோபத்துடன் கேட்டாள் அவள்.

குறும்புச் சிரிப்பைச் சிந்தினான் எதிரே கை கட்டியபடி நின்றிருந்த அவன்.

அவனுக்கும் அவளுக்கும் இடையே இருப்பது அழகான கெமிஸ்ட்ரி! அரை ட்ராயர் பருவத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். எல்.கே.ஜி. முதல் இன்ஞினியரிங் வரை ஒன்றாகவே படித்து வந்திருப்பவர்கள். எதிரெதிர் வீடு.

படிப்பில் இருவருக்கும் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி இருக்கும். இப்போதும் போட்டிதான். காதலை யார் வாயிலிருந்து யார் முதலில் வரவழைப்பது என்ற போட்டி!

நல்ல நட்புதான் அவர்களிடையே இருந்த உறவு. ஆனால் நட்பு காதலாகக் கூடாது என்ற கட்டாயமா என்ன! பிசைந்த மண் எந்தக் கணத்தில் பானையாக மாற ஆரம்பிக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. அப்படித்தான் இவர்கள் நட்பு காதலாகப் பூத்ததும்!

முதலில் சொல்ல விடாமல் வெட்கம் தடுக்கிறது அவளுக்கு. அவனோ கிராதகன். அவளது கண்களில் காதலைப் படித்துவிட்டாலும் கண்டுக்காதவனாக நடிக்கிறான். என்னதான் நெருக்கமாகப் பழகினாலும் கொஞ்சம் கள்ளத்தனத்தையும் கற்றுக் கொடுத்து விடுகிறதே இந்தக் காதல்!

“ஒண்ணுமில்லையே!” என்றான் அவன் அவள் முகத்தில் மின்னலடித்த ஏமாற்றத்தை ஓரக்கண்களால் பார்த்தபடியே. “ஆமா.. நீ ஏதோ சொல்ல விரும்புற மாதிரி தெரியுதே?” என்று தூண்டில் வேறு போட்டான்.

“ம்கூம். ஒண்ணுமில்லை” என்றாள் அவளும் மென்று விழுங்கியபடியே.

சட்டென நினைவு வந்தவனாக, “நாளைக்கு இண்டர்வியூ இருக்கு நமக்கு, தெரியும்ல?” என்றான் அவன்.

“ஆமால்ல. விடியோ கான்ஃபரன்ஸிங்லதானே! நல்ல வேளை ஞாபகப்படுத்தினே. நெஜமாவே மறந்துட்டேன்.”

“சரி வா. வீட்டுக்குப் போகலாம். நாம வீட்டை விட்டு வந்து ரொம்ப நேரமாகுது. சீக்கிரம் போனா இண்டர்வியூவுக்கு ச்சும்மா கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிக்கலாம்.”

“அதென்ன மாயமோ தெரியல. ‘அவன்கூட சேர்ந்து ஆம்பளைப்பயலாட்டம் ஊர் சுத்தப்படாது’னு காலைல என்ட்ட மல்லுக்குவந்த எங்கம்மா நீ வீட்டுக்கு வந்து ‘ஆண்ட்டி நானும் உங்க பொண்ணும் கொஞ்சம் வெளில போகணும்.’னதும் ஒரு பேச்சுப் பேசாம அனுப்பி வச்சுட்டாங்க. அப்டி என்னதான் சொக்குப்பொடி போட்டியோ எங்கம்மாவுக்கு!”

-இப்படி அவள் சொன்னது அவன் மனக்காதுகளுக்கு இப்படித்தான் கேட்டது.. “நம்ம காதலுக்கு எங்க அம்மா க்ரீன் சிக்னல் கொடுத்துட்டா!”

மனதோடு சிரித்துக் கொண்டான்!

ட்சத்திர ஹோட்டல். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான இண்டர்வியூ நடந்தது. வீடியோ திரையில் நாலைந்து வெள்ளைக்காரர்கள் கேள்விகள் கேட்க, கேமராவுக்கு முன்பிருந்து உயிர்ப்போடு பதில் பேசியாக வேண்டும்.

அவன், அவள் தவிர இன்னும் எட்டு பேர் வந்திருந்தனர்.

முதலில் அவன் முறை. தீவிர யோசனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் பேசிய விதமே வெள்ளைப்பார்ட்டிகளுக்குப் பிடித்துப் போனது.

“யு.எஸ். வர விருப்பமா?” என்றார்கள் கட்டக்கடைசியாக.

அவனுக்கு இன்ப அதிர்ச்சி! அந்த நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்காகவே தேர்வு நடத்துவதாகக் கூறப்பட்டது. அமெரிக்க அழைப்பு அவன் எதிர்பாராதது. அவன் மனதுக்குள் அமெரிக்கக் கனவே இருந்தது. அதனால்தான் கேம்பஸ் இண்டர்வியூவில் தானாகக் கிடைத்த சென்னை, பெங்களூர் வாய்ப்புகளுக்கும் பாராமுகமாய் இருந்துவிட்டான். இந்த இடத்துக்குக்கூட சீரியஸாக அவன் வரவில்லை. வெட்டியா வீட்டில் பொழுது போக்குவதற்குப் பதில் ஒரு இண்டர்வியூ பயிற்சி, அவ்வளவே!

“டபுள் ஓ.கே.” சொன்னான் கடைசிக் கேள்விக்கு, அந்த நிமிடம் அவளை மறந்துபோய்!

“ச்சே! போடா! நீ என்கிட்ட என்ன சொல்லி இங்கே கூட்டிட்டு வந்தே? இப்ப என்ன பண்ணி வச்சிருக்கே?” -நிஜமான கோபத்தில் சத்தம் போட்டாள் அவள்.

‘ச்சும்மா லுலுலுவாச்சுக்கும் அட்டெண்ட் பண்ணிட்டு வரலாம் வா’ என்று அவளை அழைத்து வந்ததே அவன்தான். இப்போது ‘அமெரிக்காவுக்கு வரியா’ என்றதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ரெடியாக இருக்கிறானே!

எங்கே அவனைப் பிரிந்து விடுவோமோ என்ற பதைபதைப்பு அவளிடத்தில் தெரிந்ததை ரசித்தான் அவன்.

ஒரே மாதத்தில் எல்லாம் எதிர்பாராத வேகத்தில் மள மளவென நடந்து முடிந்தது!

சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்ப ஒரு மினி கும்பலே கூடியிருந்தது. செமத்தியான சம்பளம். அமெரிக்க வேலை.
“ஒரு ரெண்டு வருஷம் அங்க இருந்துட்டா லைஃப் ஸ்டைலே மாறிடும் ஆண்ட்டி” -அவளைப் பார்க்காதவனாக ஆக்ட் கொடுத்தபடியே அவளது அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் அவன். எதிர் வீடு, குடும்ப நட்பு இதுகளுக்காக அவளுடைய குடும்பமும் வழியனுப்ப வந்திருந்தது.

உர்ரென்று இருந்தாள் அவள். அவளுக்கும் அதே நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் வேலை கிடைத்திருந்தது. நாளடைவில் அவளும் அமெரிக்கா போய் அவனுடன் சேர வழியுண்டு என்பதால் கொஞ்சம் குறைவான சம்பளம் என்றாலும் வேலைக்கு ஒப்புக்கொண்டிருந்தாள் அவள்.

எல்லோரிடமும் பேசி விடைபெற்று நடக்கும்போது திரும்பி அவள் கண்களைப் பார்த்தான்.

‘ஏதோ சொல்ல நினைக்குற மாதிரி தெரியுது. என்னன்னுதான் சொல்லிடேன்.’ என கெஞ்சின அவள் கண்கள்! சட்டென உடைந்து போனான். தடுமாறி நின்றான்.

கண்கள் கசிய கை காட்டிக் கொண்டிருந்த அவனது அம்மா, “மனசுக்குள்ள எதையும் வச்சுக்காம போய்ட்டு வாப்பா” என்றாள் விசும்பலுடன். மகன் தங்களைப் பிரிவதை மட்டும் நினனத்தே தடுமாறுவதாக எண்ணிக்கொண்டாள் அவள்.

ஒரு கணம் நிதானித்து விழி நீரை மறித்துக் கொண்டு, புன்னகை காட்டி, திரும்பி நடந்தான் அவன்.

‘எங்கே போகப் போகிறாள்? யு.எஸ். போய் செட்டிலானதும் போன்ல சத்தம் போட்டு, ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கலாம்!’ - இது அவனது மனக்கணக்கு!

‘நிஜமாவே என் காதலை அவன் புரிஞ்சுக்கலியோ? எதுவும் சொல்லாம போறானே!’ -இது அவளது மனக்கணக்கு!

காலம் வேறு ஒரு கணக்குப் போட்டது!!

விமானம் இறங்கியதும் முதல் காரியமாக தன் வீட்டுக்கு போன் போட்டான் அவன். அப்பாதான் எடுத்தார்.

“ஜர்னியெல்லாம் நல்லா இருந்ததா?” என நலம் விசாரித்துவிட்டுச் சொன்னார்.. “இங்க உன் ஃப்ரெண்டு அதான் எதிர்த்த வீட்டு வாலு இருக்காளே அவளைப் பெண் பார்க்க வராங்களாம் நாளைக்கு. என்ன அவசரமோ தெரியல, கால்ல நெருப்பக் கட்டிக்கிட்டு ஏற்பாடு பண்ணிட்டான் அவங்கப்பன். நீ ஒரு போன் போட்டு அவளுக்கு விஷ் பண்ணிடேன்”

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்,
சொல்லாக் காதலாய்



10 comments:

இராம்/Raam said...

கெளதம்,

குதிரையை மறுபடியும் மாத்திட்டிங்களா...

மயிலாடுதுறை சிவா said...

கெளதம்

கதை நன்றாக இல்லையோ என்று தோன்றுகிறது. அதாவது அவனோ அல்லது அவளோ நிச்சயம் தங்களது எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டு இருக்கலாம் என்றே கருதுகிறேன்.

அப்படியே பெண் பார்க்க வந்தால் என்ன? அவன் அவளை கூப்பிட்டு நடந்த வற்றிக்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் சேரலாமே?

காதல் என்றால் சேர்ந்துதான் ஆகவேண்டுமா? என்ன?

இந்த பூமியில் நிறைவேறிய காதலைவிட நிறைவேறாத காதலே அதிகம்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

G Gowtham said...

ராம்,
இதுவும் நம்ம ப்ளாக் இன்ஞினியர் பாலாவோட கைவண்ணமே!
எப்டி இருக்கு?
நல்லா இருந்தா என்னைப் பாராட்டுங்க!
இல்லேன்னா பாலாவைத்திட்டுங்க!!

சிவா,
கொஞ்சம் அவசரத்தில் எழுதியது உண்மயே!
//அவனோ அல்லது அவளோ நிச்சயம் தங்களது எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டு இருக்கலாம் என்றே கருதுகிறேன்.

அப்படியே பெண் பார்க்க வந்தால் என்ன? அவன் அவளை கூப்பிட்டு நடந்த வற்றிக்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் சேரலாமே?

காதல் என்றால் சேர்ந்துதான் ஆகவேண்டுமா? என்ன?

இந்த பூமியில் நிறைவேறிய காதலைவிட நிறைவேறாத காதலே அதிகம்...//

மன்னிக்கணும் சிவா. நான் இந்தக் காதலை தோல்வியில் முடிக்கவில்லையே!
இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சியிலேயே நிறுத்திவிட்டேன்!
முடிவு அவரவர் இஷ்டம்! :-)

Unknown said...

கௌதம்,

சொல்லாதக் காதலை அழகா சொல்லியிருக்கீங்க!!!

வாழ்த்துக்கள்!!!

Anu said...

analum america nnadum
lovera marandutta eppadi..???

Jazeela said...

நாயகன் பெரிய அதிர்ஷ்டசாலிதான் நேர்முகம் முடிந்து 1 மாதத்திலேயே பறக்கிறாராமே?
//“ஜர்னியெல்லாம் நல்லா இருந்ததா?” // 'பயணம் என்ற அழகிய சிறிய தமிழ் சொற்கள் இருக்க ஆங்கிலம் புகுத்துவானேன். முடிந்த வரை ஆங்கிலம் தவிர்க்கலாமே? இயல்பான இடத்தில் போட்டுக்கலாம் ஆனா இந்த இடத்தில் பயணம்ன்னு சுலுவா போட்டிருக்கலாம்ன்னு தோணுச்சு. உங்களுக்கு திருப்த்தி இல்லாத கதை எங்களுக்கு திருப்த்தியாகதான் இருந்தது.

ILA (a) இளா said...

சே, இப்படி எதிர்பார்க்காத மாதிரி முடிச்சுட்டிங்களே. கதையமப்பு நல்லா இருக்கு, மனசுதான் பாராமா ஆகிடுச்சு.. :( இதுக்கு இரண்டாவுது பகுதின்னு போட்டு சேர்த்து வெச்சுருங்களேன், புண்ணியமாப்போகும்

கார்த்திக் பிரபு said...

தலைவா தயவு செய்து அவர்களை சேர்த்து வைக்கிற மாதிரி இரண்டாம் பாகம் எழுதிடுங்க
பொசுக்குன்னு பாலசந்தர் மாதிரி முடிக்காதீங்க..அவங்க பாவன் தானே ,நாங்களும்

Unknown said...

Story was good enough except the climax Portion.. would have extended the explanation of his fathers conversation about the girls situation, then Finally if the guy felt like his close friend has no intension of love on him and tears - END.. Immediate marriage isn't fit for this story as you were explaining the other situations with so much details, like video conference interview, Girls look towards him etc..,

Unknown said...

Story was good enough except the climax Portion.. would have extended the explanation of his fathers conversation about the girls situation, then Finally if the guy felt like his close friend has no intension of love on him and tears - END.. Immediate marriage isn't fit for this story as you were explaining the other situations with so much details, like video conference interview, Girls look towards him etc..,