Monday, November 06, 2006

சிக்னல் கிடைச்சாச்சு! / காதல்பால்


மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்

- பொருட்பால், அதிகாரம்: 70. அமைச்சியல், குறள்: 692

மன்னர் விரும்பும் பொருளை தான் விரும்பாத ஒருவனுக்கு அம்மன்னரால் நிலையான செல்வம் வந்து சேரும்.

ன்னும் பஸ் வந்துசேரவில்லை. எரிச்சல் ஒவ்வொரு நிமிடமும் கூடிக்கொண்டே போனது அவனுக்கு.

‘ச்சே! இன்னிக்குன்னு பார்த்து சதி பண்றானே இந்த பஸ்காரன்!’ அலுத்துக் கொண்டே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்பதாவது முறையாக பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் வாட்சைப் பார்த்துக் கொண்டான்.

எவனோ ஒருவன் தன்னை உற்று உற்றுப் பார்க்கிறானே என மிரண்டுபோன அந்தப் பெண்ணும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்பதாவது முறையாக அவனை முறைத்துக் கொண்டாள்!

முறைப்பைப் பொருட்படுத்தும் மனநிலையில் அவன் இல்லை. ‘அம்மா தாயே, நான் இன்னிக்கு வாட்ச் கட்ட மறந்துட்டேன். அதான் உன் கையைப் பார்க்குறேன். கையை மட்டும்தான் பார்க்குறேன்’ என்றெல்லாம் அவளிடம் விளக்கம் சொல்லத் தோனவில்லை அவனுக்கு. காரணம்.. தேர்வு நேரப் பதட்டம்!

இந்த செமஸ்டரின் முதல் தேர்வு. விடியவிடிய விழித்திருந்து படித்தான். வாசலுக்கு வந்து விழுந்த பால் பாக்கெட்டை எடுத்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிட்டுத்தான் அவனையுமறியாமல் கண் அசந்தான். தடாலென உணர்வு வந்து, தடதடாலென கிளம்பி, தடதடதடாலென பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்தால்.. பஸ்ஸைக்காணோம்! எரிச்சல் கோபமாக மாறி, மாறிமாறி நகம் கடித்துத் துப்பலானான்.

நல்லவேளை, அவன் தன் விரலைக் கடித்துத் துப்புவதற்குள் பஸ் வந்துவிட்டது!

‘உட்கார ஒரு இடம் கிடைத்தால் தேவலை’ என்ற நினைப்போடு படியேறினான். விடிய விடியப் படித்ததை ஒரு தரம் வேகமாக திருப்பிப் பார்த்துக் கொள்ள விரும்பினான்.

அந்த ‘ஒரு இடமும்’ அவன் தன் மீது உட்காருவதில் விருப்பமாகத்தான் இருந்தது போல. ஒரே ஒரு ஸீட் மட்டுமே காலியாக இருந்தது. ஓடிப்போய் உட்கார்ந்தான்.

முட்டி மோதிக்கொண்டு அவனுடனேயே பஸ்ஸுக்குள் ஏறிய மற்ற பலரில் அந்த ஒற்றை இருக்கையைக் குறிவைத்து ஓடிவந்த ஒருசிலர் ஏமாந்துபோய் விலகி நின்றார்கள். ‘ச்சே’ கொட்டியபடி அருகே வந்து நின்றாள் ஒரு பெண். நிமிர்ந்து முகம் பார்த்தான் அவன். ‘முறை’த்தாள். அதே கடிகாரப் பெண்!

‘அட! எவ்வளவு அழகாக இருக்கிறாள்?’ என அப்போதுதான் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

‘அடச்சீ! அரைமணி நேரமா உன் பக்கத்துலதானே நின்று கொண்டிருந்தாள். அப்ப இவள் அழகை ரசிக்காம விட்டுட்டு இப்ப வழியுறியே!’ என்றது அவனது மனசாட்சி.

‘அப்ப பஸ் வரலேன்னு டென்ஷன்ல இருந்தேன். அதான்பா அழகை ரசிக்க முடியலே’ என்றான் மனதுக்குள் மனசாட்சியிடம்.

‘உன் ரசனை இருக்கட்டும், அங்கே பார்.. எப்படியாவது உட்கார்ந்துவிடலாம் என்ற பெரிய நம்பிக்கையோடு இருந்திருப்பாள் போலும். முகம் வாடிவிட்டாள்! பார்.. அவளும் உன்னைப்போல் கல்லூரி மாணவிதான். கையில் புத்தகம் வைத்திருக்கிறாள்’ - இது மனசாட்சி.

‘ஆமாம். ஆனால் இவ எங்க காலேஜ்ல படிக்கலியே. இத்தனை நாளா இவளை இந்த பஸ்ல பார்த்ததும் இல்லியே’ - இது அவன்.

‘ம்க்கும். ஒருவேளை இவ உங்க காலேஜுக்கு புதுசா வந்திருக்கும் லெக்சரரா இருப்பாளோ?’ - ‘வல்லவன்’ சிம்பு போல வம்பு செய்தது மனசாட்சி. ‘இருக்காது.

படிப்பதற்காக புத்தகத்தை விரித்தான். ஆனால் மனமும் மனசாட்சியும் புத்தக எழுத்துக்களில் அவன் பயணிப்பதை அனுமதிக்கவில்லை. ‘அவளைப்பார்! அவள் வாடிய முகத்தைப்பார்’ என்று அவனை மிரட்டி அடித்தன!

ஐந்து நிமிடங்கள் தாக்குப்பிடித்திருப்பான், அதற்கு மேல் ம்ஹூம்!

“எக்ஸ்க்யூஸ் மீ”

தலை உயர்த்தி அவன் பார்க்க, தலை திருப்பினாள் அவள். முகம் மட்டும் என்னமோ ஏதோவென முறைப்பிலேயே இருந்தது.

“நீங்க வேணும்னா உட்கார்ந்துக்கங்க. பரவாயில்லை” - சொல்லியபடியே அவன் எழுந்தான்.

“வேண்டாம் பரவாயில்லை” - சொல்லியபடியே அவள் உட்கார்ந்தாள்! உட்கார்ந்த வேகத்தில் கையில் இருந்த புத்தகத்தைப் பிரித்து மும்முரமாகப் படிக்கலானாள்.

‘அடேய் நான் சொல்லலே, இவளும் எக்ஸாமுக்குப் படிக்கிறா பாரு’ என்றது குதித்து வந்து நின்ற மனசாட்சி.

நின்றபடியே தன் புத்தகத்தை எடுத்தான் அவனும். அவள் பக்கம் பார்க்க அலைபாய்ந்த மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஏதோ முடிந்தமட்டும் பாடம் படிக்க முயன்றான். அப்படியே படிப்பில் மூழ்கிப் போனான்.

“காலேஜ் ஸ்டாப்பெல்லாம் இறங்குங்க” கண்டக்டரின் குரலுக்கு அவனும் இறங்கினான். கூடவே அவளும்!

காற்றில் பறக்கும் புடவைத் தலைப்பு மேலே உரசும் அளவுக்கு நெருக்கமாக அவனருகே வந்தாள் அவள். முகம் முழுக்க மின்னல் போல ஒரு புன்னகையோடு “தேங்க்ஸ்” சொன்னாள். அதே மின்னலாக விலகி வேகமாக நடந்து போனாள்.

“மச்சான் உனக்கு மச்சம்டா”

திரும்பிப் பார்த்தான் அவன். முதல் பஸ்ஸில் வந்திறங்கி, காலேஜுக்குள் நுழைவதற்கு முன் கடைசி தம் அடிப்பதற்காக ஒதுங்கியிருந்த தோஸ்த் கண்ணடித்தபடியே சொன்னான்.

“ஆமா யார்ரா இந்தப் பொண்ணு? புதுசா இருக்கே?!” என்றான் அவன்.

“மச்சான் நீ ரெண்டு நாளா காலேஜுக்கு வரலே. அந்த கேப்ல நம்ம க்ளாசுக்கு வந்த தேவதைடா இவ. அவங்கப்பனுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபராம். நம்ம காலேஜோட டெல்லி பிரான்ச்ல படிச்ச பொண்ணாம்” என்ற தோஸ்த் தொடர்ந்தான்.. “எப்பப் பாரு எல்லாப்பயலையும் முறைச்சுக்கிட்டே இருக்காடா. கிட்டே நெருங்கி கடலை வறுக்க ஒரு பயலுக்கும் துணிச்சல் இல்லே. பார்ட்டிய பிராக்கெட் போட நம்ம பசங்களுக்குள்ள செம போட்டி. ஆனா அவ என்னடான்னா உன்னைப்பார்த்து லுக்கும் ஸ்மைலும் கொடுத்துட்டுப் போகுது!”

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்
, காதலில் கடைக்கண் பார்வை!

முந்தைய காதல்பால்: இங்கே!

1 comment:

லக்கிலுக் said...

//முட்டி மோதிக்கொண்டு அவனுடனேயே பஸ்ஸுக்குள் ஏறிய மற்ற பலரில் அந்த ஒற்றை இருக்கையைக் குறிவைத்து ஓடிவந்த ஒருசிலர் ஏமாந்துபோய் விலகி நின்றார்கள். //

ம்ம்ம்ம்.... இந்த மாதிரி எப்பவும் ஏமாந்துப் போகிற அப்பாவிகள்லே நானும் ஒருத்தன் :-(