Tuesday, November 14, 2006

யானைக்கும் அடி வலிக்கும்! /காதல்பால்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
- பொருட்பால், அதிகாரம்: 60. ஊக்கம் உடைமை, குறள்: 599

பெரிய உடம்பையும் கூர்மையான கொம்புகளையும் உடையதாயினும் புலி தாக்குமானால் அச்சப்படும் யானை.

முகத்தில் வீசப்பட்ட ஃபைலில் இருந்து விசிறியடிக்கப்பட்ட காகிதங்களைப் பொறுக்கிக்கொண்டு மேனேஜரின் அறையைவிட்டு வெளியேறினார் ஹெட் க்ளார்க்!

நட்ட நடு ஹாலில் நின்று, எல்லோருக்கும் கேட்கும்படி அதே சமயம் சன்னமான குரலில் கிசுகிசுத்தார்.. “யானைக்கு மதம் பிடிச்சிடுச்சு. ஒரு அரைமணி நேரத்துக்காவது யாரும் கிட்டே நெருங்கிடாதீங்க!”

எச்சரிக்கை ரிப்போர்ட்டுக்கு எல்லோரும் உஷாரானார்கள். ‘இந்த ராட்சஸன் அறைப்பக்கம் என்னை அனுப்பிடாதே ஆண்டவா’ என மனசுக்குள் ஒரு நிமிடப் பிரார்த்தனை நடத்திக் கொண்டவர்களும் ஒரு சிலர்!

இருந்தாலும் எல்லோரையுமா காப்பாற்றிவிட முடியும் ஆண்டவனால்? அக்கவுண்டன்ட் டேபிளில் இண்டர்காம் அலறியது. மேனேஜரின் அழைப்பு.. “யோவ்.. வாய்யா இங்கே”

எல்லோரது பரிதாபப் பார்வைகளையும் அள்ளிக் கொண்டு மேனேஜரின் அறைக்குள் நடுநடு அடியெடுத்துவைத்தார் அக்கவுண்டன்ட்.

“எக்ஸ்க்யூஸ்மி சார்..”

“யோவ். உன்கிட்ட நான் என்ன சொன்னேன், நீ என்ன பண்ணியிருக்கே?!” - யானையாகப்பட்ட மேனேஜர் காட்டுக்கத்தல் போட்டார்!

“இல்ல சார்.. நீங்க சொன்னத நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போல. வேணும்னுட்டு எதும் பண்ணல”

“நிறுத்துய்யா. சுபீரியர் திட்டுனா வாங்கிக்கணும். எதிர்த்துப் பேசாதே! தொலைச்சுப்புடுவேன்”

பேச்சில் மட்டுமல்ல, நிஜத்திலும் தொலைச்சுப்புடும் ஆசாமிதான் மேனேஜர். தன்னை எதிர்த்துப் பேசியதற்காக ஒரே மாதத்தில் ஆறு பேர்களை அலுவலகத்தைவிட்டு துரத்தியடித்திருக்கிறார். முதலாளிகளுக்கு எப்போதுமே ‘ஆறு பேரை’விட இப்படிப்பட்ட ‘மேனேஜர்’கள்தானே முக்கியம்! மேனேஜர் பேச்சுக்கு மறு பேச்சு கிடைக்காது நிர்வாகத்திலிருந்து!

தொபுகடீர் என தரையில் விழுந்தார் அக்கவுண்டன்ட்.. “இனிமே இப்படி நடக்காது. மன்னிச்சுடுங்க. நான் புள்ளகுட்டிக்காரன்”

“சரி சரி போய்த்தொலைங்க” - எரிச்சலோடு சொன்னார் மேனேஜர்.

யானை புகுந்த சோளக்காடு மாதிரி கந்தலான மனசோடு வெளியேறினார் அக்கவுண்டன்ட்.

‘எவன் எவனுக்கோ எது எதுவோ நடக்குது. இவனுக்கு எதுவும் நடக்க மாட்டேங்குதே. யானைனு இவனுக்கு பேர் வச்சிருக்காங்களே, அது தப்பு. காட்டு யானைதான் சரி’ - பொங்கிப் புலம்பியபடியே தளர் நடையோடு இருக்கைக்கு வந்தார்.

நெக்ஸ்ட்..!

பதறியபடியே மேனேஜரின் அறைக்குள் புகுந்தாள் ரிசப்ஷனிஸ்ட். சும்மா சொல்லக்கூடாது பேரழகி அவள். ஆனானப்பட்ட ஆண்களெல்லாம் அவளைப் பார்த்தமாத்திரத்தில் சொக்கிப்போய் சைலண்டாகி விடுவார்கள். ஆனால் ம்ஹூம், நம்ம யானையார் மட்டும் விதிவிலக்கான ஆண்! ‘அழகி’ப்பாச்சாவெல்லாம் அவரிடம் பலிக்காது!

“என்ன ட்ரெஸ் போட்டுட்டு வந்திருக்கே நீ? இதென்ன வருஷத்துக்கு நாப்பது கோடி டர்ன் ஓவர் பண்ற ஆபிஸா, இல்ல அழகிப்போட்டி நடத்துற க்ளப்பா? உன் வயசுக்கு முழுசா போத்திக்க மனசு வராதுதான். அதுக்காக முழுசா தொறந்துடாதே! போ!”

கலங்கிய கண்களோடு வெளியே வந்தவளைப் பார்த்த அத்தனை ஆண்களுக்கும் மனசு வலித்தது! (வலிக்காதா பின்னே?!) யாராவது ஒரு வீரன் தோன்றி இந்த யானை மேனேஜரை பெண்டு கழட்ட மாட்டானா என ஏங்கினார்கள் எல்லாருமே!

அடுத்தடுத்த சில அசம்பாவிதங்களுக்குப் பிறகு வழக்கம் போலவே அன்றும் சாயந்திரமானது! எல்லோரும் அலுவலகத்தில் இருந்து ‘ஒரு நாள் கழிந்தது’ என எஸ்கேப் ஆனார்கள்.

யானையாரும் தன் வீட்டுக்குக் கிளம்பினார்.

வீட்டுக்குள் நுழையும்போதே ஒரே ஹாரனுக்கு கதவைத் திறந்துவிடாத வாட்ச்மேன் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டான்!

போர்டிகோவில் வழுக்கிக்கொண்டு நின்றது கார். சிடுசிடு முகத்தோடு இறங்கினார் அவர், மேனேஜர்.

வீட்டின் கதவு இன்னும் திறக்கப்படவில்லை. சிடுசிடு முகம் கடுகடுவானது!

‘ச்சே… யெழவெடுத்தவ! கேட் திறக்குற சத்தம் கார் நுழையுற சத்தம், கேட்டும் இன்னும் வந்து வீட்டுக் கதவைத் திறக்கலியே’ - மனைவியைச் சபித்தபடியே காலிங்பெல்லில் கைவைத்தார்.

விநாடிகள் கடந்தன.. நிமிடங்கள் குடைந்தன. காலிங்பெல்லை திரும்பத் திரும்ப அழுத்திக்கொண்டே இருந்தார் அவர். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துச் சிதறின.

திடும் எனத் திறந்தது கதவு!

கலைந்த தூக்கத்தோடும் கலையாத கோபத்தோடும் கதவுக்குப் பின் நின்றாள் மிஸஸ் யானை! அடிபட்ட புலியாக கர்ஜித்தாள்.. “யோவ்வ்வ்! கையை வச்சுக்கிட்டு சும்மா நிற்க முடியாதா. மனுஷி நடந்து வரவேணாமா? துரை வெட்டி முறிச்சுட்டு வீடு வந்துட்டாருங்குறதுக்காக மாடில இருந்து பறந்தா வர முடியும்”

சர்வமும் அடங்கி சைலண்டாகி இருந்தார் மேனேஜரானையார்!

“இல்லம்மா... அது.. வந்து..”


பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின், கேளாய் காதலா!

முந்தைய 'காதல்பால்' இங்கே!

12 comments:

doondu said...

என்னுடைய பதிவுகள் எல்லாம் குங்குமத்தில் வராதா கெளதம்?

siva gnanamji(#18100882083107547329) said...

வீட்டுல வாங்கிக்கட்டியததான்
வெளியில வினியோகிக்கறாரு

G Gowtham said...

குறும்புக்கார doondu!
நான் வரலை ஆட்டைக்கு!!

மதிப்புக்குரிய sivagnanamji..
சரி விட்ருங்கோ.. பாம்பின் கால் பாம்பறிஞ்சிடுச்சு! ஹி ஹி!!

சென்ஷி said...

அப்போ அது உண்மைதானா

G Gowtham said...

சென்ஷி..
உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?!
அட! இன்னொரு பாம்பு!

siva gnanamji(#18100882083107547329) said...

குருவே சரணம்........

லக்கிலுக் said...

//வீட்டுல வாங்கிக்கட்டியததான்
வெளியில வினியோகிக்கறாரு//

அப்படியா? ரெண்டு பேருக்கும் அனுபவம் பேசுது....


//Doondu said...
என்னுடைய பதிவுகள் எல்லாம் குங்குமத்தில் வராதா கெளதம்? //

வாத்தியாரின் கோரிக்கையும் நியாயமாக தானே இருக்கு? :-))))

RBGR said...

வீட்டுக்கு வீடு வாசப்படி..!!

ஆமா! உங்க வீட்டிலும் வாசப்படி உண்டுதானே!

அதாங்க! படியேறும் போதே ஒரு முறைப்பு! ஒரு நக்கல்! சில கேள்விகள்!!

அதானே! வீட்டுக்கு வீடு வாசப்படி.

Unknown said...

படை பலத்தோடு இருப்பவனைக்கூட, படைபலம் குறைந்திருந்தாலும் ஊக்கமுடைய மன்னன் வென்று விட முடியும் என்பதற்காக வள்ளுவன் சொன்னதாக நான் படிக்கும்போது வாதியார் சொல்லிக்கொடுத்தார். இதில் காதல்பால் கலந்து விட்டீரே.

✪சிந்தாநதி said...

அலெக்ஸா டிராபிக் தர வரிசைபடி

ஜிபோஸ்ட் - 780,010

தமிழ் வலைப்பதிவுகளில் முதல் பத்துக்குள் வருகிறது.

ILA (a) இளா said...

//“இல்லம்மா... அது.. வந்து..”//
அப்படியா சேதி. நமக்கு இன்னும் பாம்பு கால் தெரியல

G Gowtham said...

//அலெக்ஸா டிராபிக் தர வரிசைபடி

ஜிபோஸ்ட் - 780,010

தமிழ் வலைப்பதிவுகளில் முதல் பத்துக்குள் வருகிறது//

அப்படியா!
தகவலுக்கு சிந்தாநதி நண்பரே.