Wednesday, November 29, 2006

இந்தச் சட்டை தெரியுமா? இந்தச் சட்டை தெரியுமா?


உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

- பொருட்பால், அதிகாரம்: 108. கயமை, குறள்: 1079
பிறர் நண்றாக உடுப்பதையும் உண்பதையும் கண்டால், பொறாமை கொண்டு அவர்மீது குற்றம் காணத்துடிப்பான் கீழ்மகன்

வனைத்தேடி ஓடி வந்தாள் அவள்..

“நீ இங்கதான் இருக்கியா! எங்கெல்லாம் தேடுறது?”

“ஹாய்! சொல்லு, என்ன சேதி?”

“இருக்கு, ஸ்பெஷல் சேதி!”

“கமான் கமான்.. சஸ்பென்ஸ் வைக்காதே, சொல்லிடு! என்னது இது கிஃப்ட் பேக்? யாருக்கு?”

“ம், உனக்குத்தான்! இந்தா பிடி.. நாளை இனிய பிறந்த நாள் காணும் தோழனுக்கு இந்த அன்புத் தோழியின் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்!”

“வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ்! நாளைக்குத்தான் என் பர்த்டேனு எனக்கே நீ சொல்லித்தான் நினைவுக்கு வருது. அசத்திட்டே! ஆமா.. என் பர்த்டே உனக்கெப்படி தெரியும்? நான் இதுவரை யார்கிட்டயும் சொன்னதில்லையே?”

“தெரிஞ்சுக்கணும்னு நினைச்சுட்டா தன்னால தெரிஞ்சுடும், அந்த ஆராய்ச்சி இப்ப எதுக்கு? என் கிஃப்டை பிரிச்சுப் பார்..”

“சட்டை அட்டகாசமா இருக்கு! எப்படியும் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல இருக்கும். எதுக்கு இப்ப வீண் செலவு?”

“போடா இவனே.. அட்டகாசமா இருக்குல்ல, அணிந்து மகிழ்! நாளைக்கு காலேஜ் வர்றப்ப இந்த சட்டையோடதான் நீ வரணும்”

“அப்படின்னா..?”

“எனக்கு ஒரு செண்டிமென்ட் உண்டு. நான் யாருக்கு பர்த்டே ஷர்ட் ப்ரஸண்ட் பண்ணாலும் அவங்க எனக்கு பெஸ்ட் ஃப்ரண்டாயிடுவாங்க..”

“அப்படியா?!”

“எனக்கு மட்டுமில்ல, எங்கம்மாவுக்கும் இதே செண்டிமென்ட் உண்டு. அவங்ககூடப் படிச்ச பல நண்பர்கள் இன்னிக்கும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க தெரியுமா! இப்ப எல்லோரும் எங்க குடும்ப நண்பர்கள்!”

“அப்டிப்போட்டுத் தாக்கு! அப்ப.. நீ அவளோட குடும்ப நண்பனாகிட்டியாக்கும்?” - உதட்டளவில் உற்சாகமாகக் கேட்டான் அறைத் தோழன். உள்ளே பொறாமைப்புகை பொங்குவதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!

“அடப்போடா.. நண்பன்னுதானே சொன்னா, காதலன்னு சொல்லலியே...” - ஏக்கதோடு சொன்னான் பர்த்டே பையன்.

“அவசரப்படாதடா. இப்பத்தான் நட்புன்னு நெருங்கி வந்திருக்கா. கொஞ்சம் காத்திரு. கூடிய சீக்கிரமே அவ வாயாலேயே காதல்னு சொல்லவெச்சுடலாம்!”

“அப்படிங்குறே?”

“ஆமா நண்பா. நான் எதுக்கு இருக்கேன். சிந்திச்சு செயல்பட்டு எப்படியாவது உங்க நட்பை காதலாக்கிட மாட்டேனா..” என வார்த்தைகளாலும், ‘மவனே.. கிளி மாதிரி இருக்க இப்படி ஒரு ஃபிகரை குரங்குப்பய நீ கொத்திட்டு போறதையா நான் அனுமதிப்பேன். உன்னையும் அவளையும் நெருங்க விடாமப் பண்றதுக்காக நான் இதுவரை போட்ட எல்லாத் திட்டங்களும் போணியாகமப் போயிருக்கலாம். ஆனா இப்ப வெச்சிருக்கேண்டி அதிரடி ஐடியா! இன்னிக்கோட உங்க நெருக்கத்துக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்குறேன்’ என மனதாலும் சொன்னான் ‘தோழன்’!

அறைத் தோழனின் அழுக்கு மன ஓட்டத்தைக் கொஞ்சமும் அறியாத அப்பாவியாக ஆனந்தக் கண்ணீர் விட்டான் சட்டைக்காரன்..

“இப்படி ஒரு நண்பன் கிடைச்சது என் அதிர்ஷ்டம்டா!”

“இப்படி ஒரு ஷர்ட் கிடைச்சதும் உன் அதிர்ஷ்டம்தான்டா. பிராண்டட் அயிட்டம் தெரியுமா? அர்மானி... விலை எப்படியும் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேலதான் இருக்கும்” - வாய் பிளந்து ஆச்சர்யப்பட்டான் ‘தோழன்’.

“என்னது பத்தாயிரமா!!!” என மயக்கம் வராத குறையாக புருவம் உயர்த்தினான் அதிர்ஷ்டக்காரன்.. “நான் இதை ரெண்டாயிரம் ரூபாய் இருக்கும்னு தப்பா மதிப்பு போட்டுச் சொன்னப்பக் கூட அவ உண்மையைச் சொல்லலைடா” என்றும் சொன்னான், விலகாத வியப்போடு.

‘பரம்பரைப் பணக்காரன் நான். நானே இதுவரை வாங்காத காஸ்ட்லியஸ்ட் ஷர்ட் இது. நீ போட்டுட்டேன்னு வெச்சுக்க, அதுக்கப்புறம் நான் உயிர்வாழ்றதே வேஸ்ட்’ - மனதுக்குள் கருவிய ‘தோழன்’, “இன்னிக்கே.. இப்பவே.. இந்த நிமிஷமே ஒரு முடிவு பண்றேன்” என்றான்.

“சொல்டா என்னுயிர்த்தோழா” என அவனைக் கொஞ்சினான் அப்பாவி.

எதிரே இருக்கும் பாவி இரக்கமே இல்லாமல் தன் திட்டத்தைச் சொன்னான்.. “மச்சி நீ என்ன பண்றே.. இந்த சட்டையை அயர்ன் பண்ற சாக்குல பொசுக்கி டேமேஜ் பண்ணிடு. நாளைக்கு இந்த சட்டையோட உன்னை எதிர்பார்ப்பா அவ. நீ போட்டுட்டு போகலைன்னதும் கோபமாயிடுவா. கத்துவா. திட்டுவா. பயந்துடாதே! அவ உன்மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்குறத கண்டு பிடிக்கத்தான் இந்த டெக்னிக். எவ்வளவுக்கெவ்வளவு கத்துறாளோ அவ்வளவுக்கவ்வளவு அன்புன்னு அர்த்தம். அடுத்த ஸ்டெப் எடுத்துவைக்க இது நமக்கு உதவும்”

அவளது சட்டை செண்டிமெண்ட்டையும் பொசுக்கிப் போடும் குயுக்தியைச் சொன்னான் ‘தோழன்’. அதை அப்படியே நம்பினான் அப்பாவியும்!

“ஹே! என்னாச்சுப்பா நான் ப்ரஸண்ட் பண்ண ஷர்ட்? பர்த்டே பாய் இப்படியா சிம்ப்பிளா காலேஜுக்கு வர்றது?!”

“இல்ல, அயர்ன் பண்றப்ப மிஸ் ஆகிடுச்சு! ஷர்ட் பொசுங்கி பெருசா ஓட்டை விழுந்துடுச்சு! ஸாரி.. நீ ஆசையா வாங்கிக் கொடுத்தே.. அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு”

“அவ்வளவுதானே! கவலைய விடு.. இந்தா இதைப் போட்டுக்கோ”

“என்னது இன்னொரு புது ஷர்ட்டா?!”

“யெஸ். காலைல வீட்டுல இருந்து கிளம்புறப்பவே மனசுக்குள்ள ஏதோ ஒரு தடுமாற்றம். என்னமோ தெரியல, ‘இன்னொரு சட்டை வாங்கிட்டுப் போ’ன்னு மனசு சொன்னது. அதுக்கான காரணம் என்னன்னு இப்பத்தான் தெரியுது. நல்லவேளை என் செண்ட்டிமென்ட்டை என் மனசு காப்பாத்திடுச்சு!” - சந்தோஷப் பெருமூச்சு விட்டாள் அவள்.

சிலையானான் அவன்.

அதே இடத்தில் தான் அணிந்திருந்த பழைய சட்டையைக் கழட்டிவிட்டு, புதுச்சட்டை அணிந்து கொண்டான் அவன்.

“சூப்பர்!” எனக் கைகொடுத்த அவள் மெதுவாக அவன் காதுகளில் சொன்னாள்.. “எங்கம்மா லைஃப்லயும் அவங்க காலேஜ் படிக்கிறப்ப இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. அம்மா ப்ரஸண்டா கொடுத்த ஷர்ட் பொசுங்கிப் போயிடுச்சுன்னு வருத்தத்தோட சொல்லியிருக்கார் அவங்களோட பாய் ஃப்ரண்ட் ஒருத்தர். கையோட அவரைக் கூட்டிட்டுப் போய் புதுசா ஒரு ஷர்ட் மறுபடியும் வாங்கிக் கொடுத்தாங்கலாம் அம்மா”

“ம்”

“என்ன ‘ம்’? எங்கம்மா லைஃப்ல நடந்ததெல்லாம் அப்படியே என் லைஃப்லயும் நடக்குதேங்குற பரவசத்துல இருக்கேன் நான். எங்கம்மாகிட்ட ஒரே பர்த்டேக்கு ரெண்டு ஷர்ட் வாங்கின அந்த ஃப்ரண்ட்தான் எங்கப்பா!”


உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
, பல காதலுக்கு அவனே தூண்!

முந்தைய 'காதல்பால்' இங்கே!

6 comments:

Anonymous said...

கௌதம்
அருமையான கதை அழகா நேர்த்தியா எழுதி இருக்கீங்க ..வாழ்த்துக்கள்

கருப்பு said...

ஒரு பத்திரிகைக்காரருக்கு உள்ள நேர்த்தி கதைகளில் வெளிப்படுகிறது!

பின்குறிப்பு:- நிறைய ஐஸ் வெச்சா என் பதிவுகளையும் குங்குமத்தில் போடுவீங்கன்னு சென்னைப் பட்டிணம் பசங்க சொன்னாங்க!

கருப்பு said...

ஒரு பத்திரிகைக்காரருக்கு உள்ள நேர்த்தி கதைகளில் வெளிப்படுகிறது!

பின்குறிப்பு:- நிறைய ஐஸ் வெச்சா என் பதிவுகளையும் குங்குமத்தில் போடுவீங்கன்னு சென்னைப் பட்டிணம் பசங்க சொன்னாங்க!

கருப்பு said...

ஒரு பத்திரிகைக்காரருக்கு உள்ள நேர்த்தி கதைகளில் வெளிப்படுகிறது!

பின்குறிப்பு:- நிறைய ஐஸ் வெச்சா என் பதிவுகளையும் குங்குமத்தில் போடுவீங்கன்னு சென்னைப் பட்டிணம் பசங்க சொன்னாங்க!

லக்கிலுக் said...

உலகில் புரிபட முடியாத ஒரே மேஜிக் காதல் தான்....

எப்படி வரும்? எப்படிப் போகும்ணு சம்பந்தப்பட்டவங்களுக்கே தெரியாது :-((((

அட்டகாசமான பதிவு.....

இப்படிக்கு
காதலால் நொந்துபோன
நொந்தகுமாரன்

Kowsalya Subramanian said...

என்னமோ போங்க, இந்த முறை நான் முடிவ முன்னாடியே யூகிச்சிட்டேன் :)