Saturday, July 29, 2006
ச்சே! என்னயும் கத்தியெடுக்க வச்சுட்டாங்களே!
எனது நண்பர்களில் ஒருவர் எனக்கு அனுப்பிய
தனி மடல் இது...
// Dear Gowtham,
I strongly condemn the words of Mr.Jayaraman and welcome your reply to him in the post where he has commented.
But personally i feel your recent post has started a new avenue for the irresponsible castetist persons to express their views. It is a view of a person and you will see how people are waiting to bring in caste colour to such comments.
Waiting to see the response.
Also is this post required at all, are we not trying to expose a person's view, i think you will agree that we all do not have the same view some may be good and some may be bad. We have the basic courtesy of expressing it in a way that others do not get offended but that is not available in every person. Condemning that is right but exposing it will not be a good act. This is my personal opinion.
Waiting to get your view point.//
இதற்கு நான் அனுப்பிய பதில்...
//சத்தியமாகச் சொல்கிறேன்... கம்ப்யூட்டர் தமிழுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் கையெழுத்துப் பறவையாகவே கடந்த மாதம் 29ம் தேதிவரை இருந்தவன் நான். அன்றுதான் முதன் முதலாக வலைப்பூ உலகத்தைப் பார்த்தவன். நிஜமாகவே இணையத்தில் தமிழ் வளர்வதாக நம்பிக்கை வந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பே ப்ளாக் பக்கம் எட்டிப்பாருங்க என என்னிடம் சொன்ன வலைப்பக்கம் பழம் தின்று கொட்டைபோட்ட(இப்போது வெளியேறிவிட்ட) நண்பர் ஒருவரிடம் போனவாரம்தான் 'நீங்க அப்ப சொன்னப்ப நான் கேக்கல. இப்பதான் ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்' என ஆர்வத்தோடு கூறினேன். அப்போதுதான் ஜாதி வர்ணப் பூச்சுடன் வலைப்பக்கம் நடக்கும் அத்து மீறல்கள் குறித்து அறிந்தேன். அதிர்ந்தேன்.
80 படைப்புகளையும் நிச்சயம் படித்திருக்க மாட்டார் திரு. ஜயராமன் என்றே நான் இப்போதும் கருதுகிறேன். அவரது அரை வேக்காட்டுத் தனமான பின்னூட்டம் என்னை வருத்தப் பட வைத்தது. அங்கேயே பதில் கொடுத்தாலும் நிலாவுக்கு தொடர் சங்கடம் ஏற்படுத்தி விட்டோமோ என்ற யோசனையுடன்தான் தனி போஸ்ட் போட முடிவெடுத்தேன்.
கருத்து சுதந்திரத்துக்கும் அபத்தத்தை அடையாளம் காட்டுவதற்கும் முடிச்சுப் போடாதீர்கள்.
இருப்பினும் உங்கள் கருத்தையும் அந்த நண்பர் சொன்னதையும் முடிச்சுப் போட்டுப் பார்த்து இப்போது லேசாக வருந்துகிறேன்.
தேவர் மகன் க்ளைமாக்ஸ் கமல் போல 'என்னையும் கத்தி எடுக்க வச்சுட்டாங்களே' என கவலைப்படுகிறேன்!
As we all know creative people are emotional idiots! //
ஆக...
'சரியானது வென்றே தீரும், அபத்தங்கள் கண்டனத்துகுரியதே ஆகும்'
என என் கருத்தை உறுதியோடு இன்னொரு முறை சொல்லி இந்த விவாதத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.
திரு.ஜயராமனின் பின்னூட்டத்துக்கு முதல் கோபம் காட்டியது நான்தான் என்பதால், நடக்கும் / நடக்கலாம் என நண்பர்கள் பலரும் கவலைப்படும் குழப்பங்களுக்கு வருந்தி
இத்துடன் இந்த விவகார விகாரத்தையும்
என் ஜி போஸ்ட்டையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறேன்.
என்னாலும்(!) நடந்துவிட்ட சங்கடங்களுக்கு வருந்துகிறேன்.
'ச்சே! என்னையும் கத்தி எடுக்க வச்சுட்டாங்களே!'
தேன்கூடு போட்டியாளர்களின் 'மன விகாரங்கள்!'
முதல் பரிசு பெற்ற நிலாவை வாழ்த்தி ஐயா அவர்கள் கொடுத்த பின்னூட்டம் இதோ...
At July 28, 2006 2:16 AM, ஜயராமன் said...
இது தங்கள் இந்த பதிவில் நான் இடும் இரண்டாவது பின்னூட்டம்.
முதல் பரிசு அறிவிப்பை கேட்டு நான் நானே வென்றதாக மகிழ்ந்தேன்.உங்களுக்காக மெனக்கட்டு இந்த தேன்கூடு எங்க இருக்குன்னு பாத்து அதில என்ன பதிச்சு தேனியெல்லாம் கொட்டாம போய் ஒரு ஓட்டு போட்டேன். (யாருக்குன்னு சொல்லவேற வேணுமா) இந்த ராமர் அங்கே அணிப்பிள்ளையா ஆயிட்டேன்.
பரிசுகள் மூன்றும் மூன்று சுவையான பதிவுகளுக்கு போய் இருக்கிறது. முக்கனிகள் போல் மூன்று பதிவுகளும் இருக்கின்றன.
ஒருத்தர் கவிதை சிம்பதி ஓட்டில பரிசு தட்டிவிட்டது என்று நினைக்கிறேன். (அதற்காக குறை என்று தவறாக நினைக்கவேண்டாம்)ஆனால், தங்கள் கதை பல மைல் வித்தியாசத்தில் ஓடி வென்ற குதிரை.
இந்த 'மரணம்' தலைப்பில் இவ்வளவு உற்சாகமாகவும் பாஸிட்டிவ் ஆகவும் ஒரு கதையை அமைத்தது தங்கள் முதல் வெற்றி.
மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது. தங்கள் சிறுகதையை படித்த பிறகு அதை சொல்லிய விதம், (லோகல் ஸ்லாங் மட்டும் இல்ல. விறுவிறுப்பான வார்த்தைகளை போட்டு வேகமாக சொன்ன பாணி) மறுபடியும் படிக்க சொன்னது.மேலும் ப்ளாஸ்பேக் ரொம்ப குறைச்சல்.
மற்ற பல கதைகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு மூட்டையை அவர்கள் சுமந்து கொண்டே அலைந்தார்கள். அதனால் கதை படிக்கும்போது அயர்ச்சி வந்தது. ஆனால், தங்கள் கதை நிகழ்விலேயே சுற்றி வந்தது.தங்கள் கதையின் பாத்திரங்கள் காம்ப்ளிகேட் இல்லாத ஓர் முனை பாத்திரங்கள். அது கதைக்கு மிக மெருகு.
மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள்.
ரொம்ப இழுத்துவிட்டேன் போல இருக்கு.
ஜூட்.
கங்க்ராட்ஸ்.
ஐயா அவர்களுக்கு அங்கேயே நான் கொடுத்த பதிலூட்டம் இதோ...
At July 28, 2006 12:19 PM, ஜி கௌதம் said...
ஐயா ஜயராமன் அவர்களே..(மன்னிக்கவும் நிலா! இது உங்கள் இடமென்றாலும் ஐயாவிடம் கொஞ்சம் பேசவேண்டியுள்ளது!)
ஏற்கெனவே நான் இங்கே ஒரு பின்னூட்டத்தில் சொன்னதை மறுபடியும் ஒருமுறை வழி மொழிகிறேன்.... 'சரியானது வென்றே தீரும்!' வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள், மனமார வாழ்த்துங்கள்.
அதே சமயம்... 'மற்ற பலரை'க் காயப்படுத்தாமலிருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
//மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது.//
//மற்ற பல கதைகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு மூட்டையை அவர்கள் சுமந்து கொண்டே அலைந்தார்கள். அதனால் கதை படிக்கும்போது அயர்ச்சி வந்தது.//
//மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள்.//
எல்லோரையும் உற்சாகப் படுத்தவேண்டும் என்பதற்காக 80 பதிவுகளுக்கும் வோட்டுப் போட்டவன் நான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் போட்டிக்குப் படைப்புகளை அனுப்பியவர்களில் நானுமொருவன் என்பதால் சுய கோபத்தில் நான் இந்தப் பின்னூட்டத்தை எழுதுவதாக தப்பர்த்தம் செய்துவிட வேண்டாம்!
'இன்றைக்கு சமையல் அருமை' என மனைவியைப் பாராட்டலாம். ஆனால் 'இதுவரை நீ சமைத்ததெல்லாம் சகிக்கலை. இன்றைக்கு சமையல் அருமை'எனச் சொல்வது மனைவிக்கான பாராட்டு இல்லை!
'மற்ற பலரின் மன விகாரங்களை' அவர்களது ஒரே படைப்பில் படித்து கண்டுபிடித்த அதிமேதேவி ஐயாவே... இணையத்தில் தமிழ் வளர்வதாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். எழுதுபவர்களை உற்சாகப் படுத்த முடியாதபடியான மன விகாரம் உங்களுக்கு இருக்கட்டும், அதனால் ஊருக்குக் கெடுதல் இல்லை. ஆனால் காயப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்.
நிலாவின் பதிவில் இதை வளர்க்க விரும்பாததால் தனி இடுகையாக இங்கே பதிவு செய்கிறேன். என் கருத்துக்கு ஏக கருத்துக்களையும் எதிர்க் கருத்துக்களையும் வரவேற்கிறேன் நண்பர்களே..
மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்த்துங்கள்
பங்கேற்ற அனைவருக்கும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தேன்கூடு மற்றும் தமிழ்மணத்துக்கு நன்றிகள்.
முக்கியமாக ஒரு விஷயம்...
எனக்கு (நானே நானா) வோட்டுப் போட்ட அந்த பதினோரு பேருக்கும்,
(பிணங்களின் மரணங்கள்) ஒன்பது பேருக்கும்,
(உயிரே போச்சு) ஏழு பேருக்கும்..
நன்றியோ நன்றிகள். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.
Wednesday, July 26, 2006
மீசை வைத்த தேவதை / காதல் பால் 4

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
-பொருட்பால், அதிகாரம்: கேள்வி, குறள்: 413
செவிக்கு உணவாகிய கேள்வியினை உடையவர் இவ்வுலகில் வாழ்பவராயினும், அமிழ்தத்தை உணவாகக்கொள்ளும் தேவர்களுக்குச் சமமானவரே.
நாலைந்து கப்பல்கள் மொத்தமாகக் கவிழ்ந்ததுபோல அதீத கவலையுடன் இருந்தாள் அவள்.
அவளது முகரேகைகளைப் பார்த்த வேகத்தில் படித்து விட்டான் அவன். அவனும் வருத்தப்பட ஆரம்பித்தான்!
அந்த அதிகாலை நேரத்தில் அவனையும், அவளையும், இன்னபிற பயணிகளையும் சுமந்தபடி ஒடிக்கொண்டிருந்தது சென்னை மாநகரப் பேருந்து.
ஐந்து நாட்களுக்கு முன்புதான், அதுவும் எதேச்சையாகத்தான் அவளை முதன் முதலாகப் பார்த்திருந்தான் அவன். மயிலாப்பூரில் இருக்கும் அவனது அலுவலகத்துக்கு கே.கே. நகரில் இருந்து ஒரே பஸ் பிடித்தால் போய் விடலாம். அப்படிப் பயணிப்பதே அவன் வழக்கம். வழக்கத்தை மிஸ் பண்ணிய ஒரு நாளில், தி.நகர்வரை பாதி தூரத்துக்கு ஒரு பஸ்ஸும், மீதித் தூரத்துக்கு ஆட்டோவும் பிடிக்கவேண்டியதாயிற்று.
'வெட்டி அலைச்சல்! நேர விரயம்!' என்று அலுத்துக் கொண்டே பஸ்ஸுக்குள் புகுந்தான். அடுத்த ஸ்டாப்பில் ஏறினாள் அந்த அப்சரஸ்! தீமையிலும் நன்மை!!
'ச்சே... இன்னும் கொஞ்ச நேரம் இந்த அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் போய்விட்டதே' என வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தபடிதான் தி.நகரில் பஸ்ஸைவிட்டு இறங்கினான். அவள் அதே பஸ்ஸில் தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.
மறுநாளில் இருந்து தினமும் அந்தப் புது ரூட்டே அவன் வழக்கமானது!
அந்தப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அவளை எட்ட நின்று பார்ப்பான். பார்த்துக் கொண்டே இருப்பான். குறு குறுப்பை உணர்ந்து அவள் எப்போதாவது தலை உயர்த்தித் தேடினால் வேறு பக்கம் திரும்பிப் கொள்வான்.
அவள் தரிசனமே அவன் தவமானது. இன்றோடு வெற்றிகரமான ஆறாவதுநாள். நேற்று ஒருநாள் மட்டும் திடீர் தலை வலியால் ஆபீஸுக்கு லீவு போட்டிருந்தான்.
புன்னகையோடு, புதுப் பொலிவோடு, குழந்தையின் குதூகலத்தோடு, அலுவலகப் பரபரப்போடு, அதிகாலைப் பரவசத்தோடு... இப்படிப் பல உணர்ச் சிகளை அவள் முகத்தில் படித்திருக்கிறான். இந்த நிமிடத்து வருத்த முகம் அவன் இதுவரை பார்க்காதது.
'ஏதோ ஒரு சிக்கலில் இருக்கிறாள் அவள்' என்பது மட்டும் புரிந்தது. அனால் அந்த 'ஏதோ' என்பது என்னவென்றுதான் புரியவில்லை!
பதைபதைப்பும் பரிதவிப்புமாகத் தகித்தான் அவன்.
'பாதி வழியில் பஸ்ஸில் ஏறிக்கொள்ளும் அப்சரஸ்' என்பதைத் தவிர வேறெதுவும் அவளைப் பற்றித் தெரியாது அவனுக்கு. எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கிடையாது அவனுக்குள்.
'கண்டதும் காதல்' பற்றிக்கொள்ளும் வயதையெல்லாம் கடந்து விட்டவன் என்பதால் இந்தப் பக்குவம் அவனுக்கு வந்திருந்தது.
அவளைப் பார்க்க வேண்டும். பத்து நிமிடமாவது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதில் லையா... அப்படித்தான் இதுவும்! இந்தச் 'சாமி' இவனுக்குப் பிடித்திருக்கிறது!
தி.நகரில் கொத்தாக பஸ்ஸைவிட்டு இறங்கினார்கள் பலர். அவனும் கொத்தில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் அவளை விட்டு விலகிச் செல்ல மனமில்லை. பஸ்ஸைவிட்டு இறங்கவுமில்லை. அவளை நெருங்கிச் சென்றான். இன்று அலுவலகத்துக்குப் போன மாதிரிதான்!
புதிதாக முண்டியடித்துக்கொண்டு உள்ளே புகுந்த கூட்டம் பஸ்ஸை நிரப்பியது. அவளுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டான் அவன்.
இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில் இருந்தது அவள் மட்டுமே. பஸ் நகர அரம்பித்தது.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாவது முறையாக அவள் முகத்தை மறுபடியும் ஒருமுறை ஓரக்கண்களால் பார்த்து மனதுக்குள் உச்சுக் கொட்டியவன், சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டான். மொத்த பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்து இடம் மட்டுமே காலியாக இருந்தது.
அடுத்த ஸ்டாப். பஸ்ஸில் இருந்து யாரும் இறங்கவில்லை. மாறாக இரண்டு பேர் புது வரவாகச் சேர்ந்து கொண்டனர். உட்கார இடம் தேடிய இருவரும் அவளருகே இருந்த ஒரே ஒரு காலியிடத்தைக் குறி பார்த்து முன்னேறினர்.
அவர்கள் அருகே வரவர... கூடவே காற்றில் மிதந்து வந்தது சாராய நெடி! அந்தக் கருமம்தானோ அவர்களுக்கு பெட்காபி?!
'எங்கே அந்தக் குடிகாரத் தடியர்களில் ஒருவன் தன் அருகே உட்கார்ந்து விடுவானோ' என்ற கலவரத்தில் மருள மருள விழித்தவளது கண்களுக்கு அப்போதுதான் தென்பட்டான் அருகே நின்ற 'சாமி பக்தன்!' உட்கார இடமில்லாமல்தான் அவனும் நிற்பதாக தப்பர்த்தம் செய்து கொண்டாள்.
தடியன்களுக்குப் பதில் இந்த அப்பாவியே தேவலை எனப் பட்டிருக்க வேண்டும்.
"பரவால்ல... நீங்க வேணா உட்காருங்களேன்'' என்றாள் அவளே.
முட்டிக்கொண்டு வந்த தடியர்களையும், அவள் குரலின் வேகத்தையும் வைத்து சூழ்நிலையை யூகித்துக்கொண்டான் அவன்.
கொஞ்சமும் எதிர்பார்த்திராத கணம் அது. தேவதைக்குப் பக்கத்திலேயே உட்கார இருக்கை! உட்கார்ந்தும் விட்டான்!
அவனுக்கும், அவளுக்கும் மிரட்டல் 'லுக்' கொடுத்துவிட்டு தூரப் போனார்கள் குடிகாரர்கள் இருவரும்.
காற்றுக்குப் படபடத்த அவள் புடவை லேசாக அவன் கால்களில் உரசியது. தயக்கத்தோடு விலகி உட்கார்ந்தான்.
அதைக் கவனித்து விட்டாள் அவளும். அவன் மீது அவளையும் அறியாமல் மரியாதை கூடியது! முகம் பார்த்துப் புன்னகைத்தாள். சொற்ப விநாடியில் அவன் 'பணால்!' வெறும் "பணால்' இல்லை, வேகமான 'பணால்!!!
"நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒரு விஷயம் கேட்கலாமா?''
லேசாக அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள். "ம்'' என்றாள்.
"நா ஒரு வாரமா உங்கள இந்த பஸ்ல பார்க்குறேன். இன்னிக்கு மட்டும் ரொம்ப கவலையா, குழப்பமா இருக்கிற மாதிரி தெரியுதே..?''
ஏதோ பேச வாயெடுத்தாள் அவள். குறுக்கே புகுந்தான் அவன்... ""பர்ஸனல் மேட்டர்தான். ஆனா, தினமும் பூ மாதிரி பார்த்த உங்க முகத்தை இன்னிக்கு இப்படிப் பார்க்கிறப்ப மனசுக்கு கஷ்டமா இருக்குங்க''
அவளது கண்கள் பனித்தன. அடக்கி வைத்திருந்த அழுகை!
சட்டென சுதாரித்தாள். விழி நீரைத் துடைத்துக் கொண்டாள்.
அவன் மீது இனம் புரியாத பாசம் வந்தது. "அண்ணா சதுக்கம் ஸ்டாப் இறங்கேய்" என்று கண்டக்டர் கொடுத்த குரலும் வந்தது.
அவள் இறங்கினாள். கூடவே அவனும். அவள் நடந்தாள்; கூடவே அவனும்.
அவனிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருந்தது அவளுக்கு. பேச ஆரம்பித்தாள். முதல் நாளில்... ஒரே நாளில் தான் அடுத்தடுத்து சந்தித்த அத் தனை சோகங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தாள்.
தன் அம்மாவின் நினைவு நாளான நேற்று காலையில் அப்பாவுக்கும் சித்திக்கும் வீட்டில் நடந்த பெரும் தகராறு பற்றிச் சொன்னாள். அதே துயரத் தோடு ஆபிஸில் தப்பும் தவறுமாக வேலை செய்து உயர் அதிகாரியிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதைச் சொன்னாள். கவலையோடு வீடு வந்தபோது 'ஏண்டி லேட்' என சித்திக்காரி கத்திக் குவித்ததைச் சொன்னாள். நள்ளிரவு வெகுநேரம்வரை தான் அழுததைச் சொன்னாள். சோகத்தைப் பகிர்ந்து கொள்ள தனக்கென யாரும் இல்லாமல்போன சோகத்தைச் சொன்னாள்.
அத்தனை நேரம் நடந்தபடியே அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் சொன்னான்..
"கவலைப்படாதீங்க. இதுவும் கடந்து போகும்னு நம்பிக்கையோட உங்களுக்கு நீங்களே சொல்லிக்கங்க. எல்லாம் சரியாகிடும்...''
எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாயிற்று. பாரம் குறைந்த மனதோடு அவனை நன்றிப் பார்வை பார்த்தாள் அவள்.
அந்தச்சில நொடிகளில் அவளது மனக்கண்களுக்குள் ஒரு கனவு வந்தது. கனவில் ஒரு தேவதை வந்தாள். அந்த தேவதைக்கு மீசை இருந்தது...
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து, காதல் களத்து...
Saturday, July 22, 2006
கிளியும் குரங்கும் / காதல் பால் 3
ஐந்தும் அகத்தே நகும்
-அறத்துப்பால், அதிகாரம்: கூடா ஒழுக்கம், குறள்:271
கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தை பிறர் அறியவில்லை எனினும் அவனது உடலில் இருக்கும் ஐந்து பூதங்களும் அவனைக் கண்டு கொண்டு நகைக்கும்.
"ஏண்டி இன்னுமா ட்ரெஸ் எடுத்து வைக்கல?!'' - ஏக எரிச்சலோடுதான் பெட்ரூமுக்குள் நுழைந்தான் அவன். ஊருக்குப் புறப்பட்டாக வேண்டிய அவசரத்தால் பொத்துக் கொண்டு வந்த எரிச்சல் அது.
"இதோ... அஞ்சே நிமிஷத்துல ரெடி பண்ணிடுறேன் மாமா'' - ஒவ்வொரு ட்ரெஸ்ஸையும் பார்த்துப் பார்த்து சூட்கேஸுக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவனது மனைவி. கிளி மாதிரிப் பொண்டாட்டி!
என்ன புண்ணியம்! `குரங்கு' அங்கே ரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருக்குமே! அரேபியக் குதிரைவாகு அந்தக் குரங்குக்கு. ஐயாவின் ஆபீஸிலேயே ஸ்டோர் கீப்பர் உத்தியோகம் பார்ப்பவள். இந்த நிமிட உத்தியோகம் ஐயாவோட கீப்!
"சீக்கிரம் ஆகட்டும்டி. எங்க மேனேஜர் இந்நேரம் ஸ்டேஷனுக்கு வந்துருப்பார்.''
பாவம் அந்த அப்பாவி மேனேஜர், வேலை நேரம் முடிந்த பிறகும் அலுவ லகத்தில் `தான் உண்டு, தன் வேலை உண்டு' என்றிருந்தவர், அவன் சொன்ன பொய்யால் அந்த நிமிடம் புரையேறித் திணறினார்.
பாசம் பேசியது... "மாமா... சூடா கிச்சடி கிளறி வெச்சிருக்கேன். கொஞ்சமாச்சும் சாப்டுட்டுப் போங்களேன்.
'' வேஷம் `வள்' என்றது... "அதுக்கெல்லாம் டயம் இல்ல. ட்ரெய்ன்லயே சாப்டுக்கறேன்.''
"இல்ல.. ட்ரெய்ன்ல வாங்குறது டேஸ்ட்டாவே இருக்காது. உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொல்வீங்களே! அதான் உங்களுக்காகவே, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி குழைவான பதத்துல கிச்சடி பண்ணியிருக்கேன்.''
இத்தனைக்கும் அரைமணி நேரத்துக்கு முன்புதான்... அலுவலகத்திலிருந்து புறப்படும் போதுதான்... வீட்டுக்குப் போன் செய்து, `உடனடியாக நான் பெங்களூருக்குப் போக வேண்டும். அவசரமான ஆபீஸ் வேலை. நானும் எங்க மேனேஜரும் போறோம்' என்று `கதை' சொல்லியிருந்தான் அவன். அரை நாள் லீவு போட்டு விட்டு அந்த ஸ்டோர் `கீப்'பர் மதியமே தன் ஹாஸ்டலுக்குப் போய் விட்டாள். பகல் தூக்கம் போட்டு, புத்துணர்ச்சியோடு மாலையில் நேராக ஸ்டேஷனுக்குப் போய் விடுவாள் அவள். வழக்கம் போல் ஆபீஸ் நேரம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து, சூட்கேஸை எடுத்துக் கொண்டு அவனும் ரயில்வே ஸ்டேஷனில் சங்கமித்து விடுவான். ஓடும் ரயிலில்... ஏசி கூபேயில்... முன்னிரவுப் பயணத்திலேயே முதல் ரவுண்டு கிளுகிளுப்புகளை முடித்துக் கொள்வதாகத் திட்டம் தீட்டியிருந்தார்கள்.
அவன் சட்டைப்பையில் இருந்த பேப்பர்களையெல்லாம் டேபிள் மீது வைத்துவிட்டு, டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்றான். கண்ணாடியில் தன் முக அழகைச் சரிபார்த்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு நாட்கள் பெங்களூர் வாசம். கூடவே பெங்களூர் தக்காளியின் வாசமும்! நினைக்கும்போதே பரவசமாக இருந்தது அவனுக்கு.
"இந்தாங்க...'' - பாசக்காரச் சிறுக்கி தட்டோடு கொஞ்சம் கிச்சடியைக் கொண்டு வந்து நீட்டினாள். அவனது முக பல்பு `பொசுக்'கென ஃப்யூஸ் போனது.
"அடச்சீ! போ அந்தப் பக்கம். எனக்கு டயமாச்சு''
அவளது மலர் முகம் வாடியது. வருத்தத்தை விழுங்கியபடி வழியனுப்பி வைத்தாள்... "பார்த்து சூதானமா போய்ட்டு வாங்க. ரயில்ல ஏறுனதும் செல்போன்ல இருந்து ஒரு வாட்டி போன் பண்ணுங்க மாமா''
"சரி சரி... பையன் ட்யூஷன்ல இருந்து வந்ததும் ரெண்டு நாள்ல அப்பா வந்துடுவார்னு சொல்லிடு'' - செருப்புக்குள் கால்களைக் கொடுத்தபடியே அவன் பேச, அப்போது "ஒரு நிமிஷம் மாமா'' என்றபடியே ஓடி வந்தாள் அவள். கையில் திருநீறு.
"உட்கார்ந்து சாமி கும்புடுறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்ல. நான் வர்றேன்.''
கறாராகக் கத்தியவன், `க்கும்.. இப்படி ஒரு கிராமத்தி கிறுக்கச்சிய என் தலைல கட்டிட்டானுக' எனப் புலம்பியபடியே நடையைக் கட்டினான்.
ஜிலு ஜிலுவென இருந்த அந்தக் கிளு கிளு குரங்கு கைக்கடிகாரத்தைக் காட்டி, அவனை முறைத்தாள்.
"இதான் வர்ற நேரமாக்கும்!''
"கோச்சுக்காத டார்லிங். நானென்ன ரஜினிகாந்த் மாதிரி சொல்லிக்கிட்டேயா இருந்தேன். விஜயகாந்த் மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட் டேன்ல!''
'உலகமகா' ஜோக் அடித்து, அவனாகவே அதற்கு சிரிசிரித்து, அவளைக் கூல் பண்ண முயன்றான். தோற்றான்.
"எனக்குக் கொலை பசி. இன்னும் பத்து நிமிஷத்துல ட்ரெய்ன் கிளம்பிடும். சாப்பிட பார்சல் ஏதாச்சும் வாங்கிக்கங்க. நான் போய் ஸீட்ல உட்கார்றேன்.''
விடுவிடுவென அவள் நடந்து போயே விட்டாள். ஐயாவின் கடைசி நேர கவுண்ட் டவுன் ஆரம்பமானது...இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன!
ஸ்டேஷனுக்குள்ளேயே இருந்த அசைவ ஓட்டலுக்குள் ஓடினான். அவளுக்கு ஜில்லோஜில் என்றுதான் தண்ணீர் இருக்க வேண்டும்.
...இன்னும் ஒன்பது நிமிடங்களே உள்ளன!
'ஜிலு ஜிலு'வுக்குப் பிடித்த ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் ஆர்டர் செய்தான். கூடவே மட்டன் பிரியாணி, சிக்கன் குருமா, கழுதை, குதிரையெல்லாம் ஆர்டர் பண்ணினான்.
'உடனடியா ரெண்டு இட்லி சாப்பிட்டால் தேவலை' என்று அவன் வயிறும் பசியோடு கேட்டது. நடக்கப் போகும் ரயில் பரவசத்தை நினைத்துக் கொண்டிருந்த சுகத்தில் மத்தியான சாப்பாட்டைக்கூட மிஸ் பண்ணியிருந்தான். காலையில் இரண்டரை தோசை சாப்பிட்டது. ரயிலில் ஏறியதும் முதல் காரியமாக சாப்பிட்டே ஆக வேண்டும் என சொல்லிக் கொண்டே நான்கு இட்லிகளையும் பார்சல் பண்ணச் சொன்னான்.
...இன்னும் ஏழு நிமிடங்களே உள்ளன!
நகம் கடித்தான். "சீக்கிரம் பண்ணச் சொல்லுங்க. ட்ரெய்னுக்கு நேரமாச்சு'' எனப் பதற்றத்தோடு அதட்டினான்.
...இன்னும் ஆறு நிமிடங்களே உள்ளன!
பார்சலை பிடுங்கிக் கொண்டு லாங்ஜம்ப் அடித்து வெளியே தாவினான். பழ வண்டியைத் தேடி அவளுக்குப் பிடித்த மலைவாழைப் பழம் அரை டஜன் வாங்கினான்.
...இன்னும் நான்கு நிமிடங்களே உள்ளன!
ஓடினான் ரயிலை நோக்கி. கிட்ட நெருங்கியதும்தான் ஜில் தண்ணீர் வாங்காதது மரமண்டைக்கு உரைத்தது.
...இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன!
திரும்ப ஓடி, பிளாட்ஃபாரக் கடையில் "வாட்டர் பாட்டில்'' கேட்டான். நாலைந்து பாட்டில்களைத் தொட்டுப் பார்த்து ஒன்றைத் தேர்வு செய்தான்.
...இன்னும் இரண்டு விநாடிகளே உள்ளன!
முயல் வேகத்தில் மறுபடியும் ரயிலை நோக்கி ஓடி வந்தான். 'ப்ச்!' புயல் வேகமெடுத்திருந்தது அவன் போக வேண்டிய ரயில்! கண்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. ஒரு தம் பிடித்து ஓடினால் ஓடும் ரயிலுக்குள் ஏறிவிடலாம். உயிரை வெறுத்து ஓடினான்அவன். ஓடினான்... ஓடினான்... பிளாட்ஃபாரத்தின் விளிம்புக்கே ஓடினான்.
பசிக் கிறக்கமும் கூடச்சேர படக்கென கண்கள் இருண்டன. நிலை தடுமாறினான்.
கண்களைத் தொடர்ந்து ஒவ்வொரு புலனாக செயல் இழக்க ஆரம்பித்தன.
`அம்மா'வைக் கூப்பிடக்கூடத் திராணியில்லாத வனாக ரெயிலுக்கும், தண்டவாளத்துக்கும், பிளாட்ஃபாரத்துக்கும் நடுவே மயங்கிச் சரிந்தான்!
உணர்வு வந்தபோது அவன் கிடந்தது மருத்துவமனைக் கட்டிலில்.
அழுது வீங்கிய முகத்துடன் அருகே நின்றிருந்த அவன் மனைவியிடம் டாக்டர் சொல்வது அசரீரி மாதிரி கேட்டது அவனுக்கு...
"நல்லவேளை. உங்க ஹஸ்பெண்ட் வீட்ல விட்டுட்டுப் போன ட்ரெய்ன் டிக்கெட்டைக் கொடுக்கணும்னு நீங்க ஸ்டேஷனுக்கு போனீங்க பாருங்க. அதனாலதான் அவரை உடனடியாப் பார்த்து ஆஸ்பிடல்ல சேர்க்க முடிஞ்சது உங்களால!''
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும், காதல் கை கொடுக்கும்.
Friday, July 21, 2006
அலிபாபாவும் 45 திருடர்களும்/ எதற்கு? ஏன்? எப்படி? 5

'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' கதையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்தானே?
அலிபாபாவின் கண்களில் படுவதற்கு முன்பு அவர்கள் மொத்தம் நாற்பத்தைந்து பேராகத்தான் இருந்தனர்!
ஒரு நாள்... திருடப் போகும்போது வழியில் எதிர்ப்பட்ட அழகான பெண் ஒருத்தியைப் பார்த்து அசந்து போனார்கள் அந்த ஐந்து பேரும். அன்று இரவு முழுக்க தூக்கம் பிடிக்கவில்லை. அவளது அழகிய முகத்தை
அவர்களால் மறக்க முடியவில்லை!
ஐந்து பேருமே அந்தப் பெண் மீது காதல் வயப்பட்டனர். தனித்தனியே அவளைச் சந்தித்து தங்கள் காதலைத் தெரிவித்தனர்.
அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். ''திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு வாங்க. உங்க காதலைப் பரிசீலனை செய்கிறேன்'' என ஐவரிடமும் தனித்தனியே சொன்னாள்.
முதலாவது திருடன் திருட்டை நிறுத்த முயன்று, அது முடியாமல் போகவே, அவளை மறக்கவும் முடியாமல் திணறி, புத்தி பேதலித்து கூட்டத்தைவிட்டே காணாமல் போனான்.
இரண்டாவது திருடன் திருந்திவிட்டான். அதைப் பொறுக்காத நாற்பது திருடர்களும் சேர்ந்து அவனைத் தீர்த்துக்கட்டி விட்டார்கள்.
மற்ற மூவரும் நாற்பது திருடர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, திருந்திய நபர்களாக அந்தப் பெண்ணைச் சந்தித்தனர்.
மூவரில் தனக்குப் பிடித்த ஒருவனைக் காதலிக்கச் சம்மதித்தாள் அந்த அழகுப் பெண்.
காதல் தோல்வியைத் தாங்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்டான் அடுத்தவன்.
இன்னொருவனோ, 'எங்கிருந்தாலும் வாழ்க' என வாழ்த்திவிட்டு விவசாயம் பார்க்கப் போய்விட்டான்.
இதிலிருந்து தெரியவரும் நீதி என்ன தெரிகிறதா?
?
?
?
?
?
?
?
நீதி: எது எப்படி இருந்தாலும்... ஒருவன் செய்து கொண்டிருக்கும் தவறுகளை எப்படியேனும் நிறுத்தச் செய்யும் வலிமை கொண்டது காதல்!
Thursday, July 20, 2006
பிணங்களின் மரணங்கள்/ தேன் கூடு(மரணம்) போட்டிக்காக
எம் பேரு செல்விங்க. நா படிச்ச பள்ளிக்கூடத்துக்குப் போயி, 'தமிழ்ச்செல்வி'னு இப்பக்கேட்டாக்கூட வாட்ச்மேன் தாத்தால இருந்து ஹெட் மாஸ்டர் வரைக்கும் என்னக் கை காட்டிருவாங்க!
நீங்க நினனக்கிறமாதிரி என்னோட முழுப் பேரு தமிழ்ச்செல்வி இல்லைங்க. தமிழ்ல கதை, கவிதை, கட்டுரைன்னு எந்தப் போட்டி நடத்துனாலும் எங்க ஸ்கூல்ல நான்தான் முத ஆளா வருவேன். அதனால வந்த அடையாளப் பேருங்க அது.
எங்கப்பா சொந்தமா ரெண்டு ஒயின் ஷாப் வச்சிருந்தாரு. ஊருல பெரிய தலக்கட்டு. கோவம் வர்றப்ப எங்கப்பாவ நீங்க பார்க்கணுமே... அவரோட முறுக்கு மீசையப் பார்த்தாலே ஊருல பாதிப் பய பூமிய நனைச்சுருவான்! அம்புட்டு கோவம் வரும் அவருக்கு.
சரி எங்கதைய எங்க விட்டேன்... ஆங்... ஞாபகம் வந்துருச்சு. எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. அப்ப நா அஞ்சாப்பு படிச்சுட்டிருந்தேன். பள்ளிக்கூடத்துல பேச்சுப் போட்டி.
எனக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்! அதுதான் நா மொத மொதல்ல வாங்குன பரிசு. தமிழம்மாவுக்கு எம்மேல கொள்ள ஆசை. நா பரிசு வாங்குனத பாராட்டுறதுக்காக அவங்க கைக்காசுல எனக்கு சாக்லேட் மிட்டாய்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.
ஆசையோட வீட்டுக்குப் போனேன்.
'இந்தா பாருங்க நா வாங்குன ஃபர்ஸ்ட் ப்ரைஸ்'னு சொல்லிக் குதிச்சேன். பாக்கு உரல்ல வெத்தல இடிச்சுட்டிருந்த எங்க பாட்டிக்கிழவி வந்து, 'அடச்சீ! இத்தனாஞ்சூடு சோப்பு டப்பாவ வாங்கிட்டு வந்ததுக்கா இந்த ஆட்டம் போடுறவ'னு ஒரு அதட்டு போட்டுச்சு. அதக்கேட்டதும் எங்கப்பா, அம்மா, அண்ணன்காரன், வீட்டு வேலைக்காரங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க பாருங்க... அப்பதான் முதல் வாட்டி...
அப்பறம் நான் அதே பள்ளிக்கூடத்துலதான் பத்தாப்பு பாதிவரை படிச்சேன். என்னது... பாதிக்கு மேல ஏன் படிக்கலேனு கேக்குறீங்களா? சொல்றேன்.
அன்னிக்கு வெள்ளிக் கெழம... மாரியாத்தா கோயிலுக்கு எல்லாரும் கெளம்பிட்டிருக்கோம். அடி வயித்துல கோணி ஊசிய வச்சுத் தைய்க்கிற மாதிரி சுரீர்னு ஒரு வலி! கச கசனு ஆயிருச்சு!
அப்புடியே சுருண்டு படுத்துட்டேன். வேலைக்கார தாயம்மாதான் சத்தம் கேட்டு ஓடி வந்துச்சு. 'அடியாத்தி... புள்ள சமஞ்சிருச்சு'னு ஊரக் கூட்டிருச்சு!
சாதி சனம் மொத்தமும் சேர்ந்துருச்சு. கெடா வெட்டி திருவிழாவே கொண்டாடிட்டாய்ங்க. ஓலக் குடிசைக்கு அந்தப்பக்கம் நா உட்கார்ந்துருக்கேன். எனக்கு அசிங்கம் புடுங்கித் திங்கிது.
அப்பத்தான் கூட்டத்துல இருந்து யாரோ சொன்னாங்க... "எலே மாரியப்பா, அதான் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டாள்ல. பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறத நிறுத்திப்புடு. என்ன நாஞ்சொல்றது?''
'அய்யய்யோ வேணாம். நா படிக்கணும். நிறைய படிக்கணும்' னு நா உள்ள உக்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்கப்ப, எங்கப்பா சொன்னார் பாருங்க... "ஆமாமா... அடுத்த வீட்டுக்குப் போற பொட்டப் புள்ளைக்கு படிப்பெதுக்கு''னு அப்ப ஒரு வாட்டி...
பொம்ம மாதிரி வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடந்தேன். அடுத்த ஆறாவது மாசமே எங்க வீட்ல எனக்கு மாப்ள பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. தடுத்து நிப்பாட்டுறதுக்காக எவ்ளவோ போராடுனேன். எதுவும் செல்லுபடியாகல.
தினமும் நா அழுறதப் பார்த்துட்டு எங்கம்மா ஒரு நா அப்பாகிட்ட குசு குசுனு பேசிக்கிட்டு இருந்ததை நானும் தெரியாத்தனமா கேட்டுட்டேன். ''இவ கல்யாணம் வேணாம் வெணாம்னு அடம் பிடிக்குறதப் பார்க்குறப்ப எனக்கொரு சந்தேகம்ங்க. பள்ளிக்கூடத்துல கூடப்படிச்ச பய எவனயாச்சும் மனசுல முடிஞ்சு வச்சிருப்பாளோ''னு என்னப் பெத்த ஆத்தாவே சொன்னுச்சு பாருங்க... அப்ப ஒரு வாட்டி...
''அழாதடி செல்வி. கல்யாணத்துக்கு ஒத்துக்க. மாரியாத்தா புண்ணியத்துல வர்ற மாப்ள உன்னப் புரிஞ்சுக்குறவரா அமஞ்சுட்டா அவரே உன்னப் படிக்க வைக்கலாம்டி. அப்டித்தான் எங்க மாமா ஒண்ணு அது கட்டிக்கிட்ட பொஞ்சாதிய எம்.ஏ வரைக்கும் படிக்க வச்சது'' னு பக்கத்து வீட்டு மீனாட்சியக்கா புதுசா ஒரு நம்பிக்கை கொடுத்துச்சு. கல்யாணத்துக்கு சரின்னுட்டேன்.
ஆனா என்ன நடந்தது தெரியுமா? படிச்ச மாப்ளயா நா பார்க்கச் சொன்னாக்க பத்து ஒயின்ஷாப் நடத்துற ஒருத்தரப் புடிச்சார்ந்தாரு அப்பா!
'மாப்ளயப் புடிக்கலே'னு சொன்னதுக்கு விடிய விடிய நினச்சு நினச்சு அடிச்சாரு எங்கப்பா. விடிஞ்ச பிறகும் அழுதுச்சு எங்கம்மா. பாட்டிக் கெழவி
சாகப்போறேன்னு அரளி விதைய அரைச்சுக்கிட்டு இருக்கு இன்னொரு பக்கமா.
'அவ்வளவுதான்'னு நினைச்சுக் கிட்டு அந்த மாப்ளயவே கட்டிக்க சம்மதம் சொன்னேன் பாருங்க... அப்ப ஒரு வாட்டி...
சாட்சிக்காரன் கால்ல விழுறத விட சண்டைக்காரன் கால்லயே விழலாம்னு ஒரு நம்பிக்கை மனசுக்குள்ள இருந்துச்சு. முத ராத்திரியன்னிக்கு தயங்கித்தயங்கி எம் புருஷன்கிட்டயே படிக்கணுங்குற என்னோட ஆசையச் சொன்னேன்.
அம்புட்டுதான்!
'நல்ல கதையக்கெடுத்தே போ. உன்னக் கட்டிக்கிட்டது குடும்பம் நடத்துறதுக்காகத்தான். காலேஜூக்கு அனுப்பி உன்னக் கலெக்டராக்குறதுக்காக இல்லே. நா படிச்சது நாலாப்பு வரைக்கும்தான். அதுனால யாராச்சும் உன்கிட்ட கேட்டாக்க நீ மூணாப்பு வரைதான் படிச்சதா சொல்லணும் ஆமா'னு எம் புருஷன் சொன்னாரு பாருங்க... அப்ப ஒரு வாட்டி...
எனக்கு என்ன ஏதுன்னே புரியாம எல்லாமே நடந்தது எனக்கும் எம் புருஷனுக்கும்! படுத்துகுற வயசா அது?
வலிக்குதுன்னு நா அழுறத நிறுத்த வைக்க முடியாம, அழுகைச் சத்தத்தையாவது நிறுத்தனும்னு என் வாயில புடவை முந்தானையச் சொருகிட்டு மேல பாய்வாரு எம் புருஷன்.
அப்பல்லாம் விடிய விடிய நா அழுத ஒவ்வொரு வாட்டியும்...
ஒம்பதே மாஷத்துல எனக்கும் ஒரு புள்ள பொறந்துச்சு! பொறந்தது பொட்டையாப் போச்சேன்னு என்னத் தவிர எங்க குடும்பத்துல எல்லாருக்கும் வருத்தம்.
பச்ச உடம்போட என்னை ஆஸ்பத்திரில படுக்க வச்சுக்கிட்டு நா ஒருத்தி இருக்கேங்குறதயே மதிக்காம என் குழந்தய அந்த தங்கத்த கள்ளிப்பால் ஊத்திக் கொல்லலாமா இல்ல தூக்க மாத்திர கொடுத்துக் கொல்லலாமானு எம் புருஷனும் மாமியாகாரியும் பேசிக்கிட்டாங்க பாருங்க... அப்ப ஒரு வாட்டி...
நல்லவேளை... பேசினதோட விட்டுட்டாங்க. என் மகளைக் கொல்லல!
அதுக்காக நா இன்னிவரைக்கும் போகாத கோயில் இல்ல. நன்றி சொல்லாத சாமி இல்ல.
இதோ இப்பக்கூட முனீஸ்வரன் கோயிலுக்குப் போயிட்டுதான் வீட்டுக்குள்ள நுழையுறேன்.
ஐயோ!
நடு வீட்டுக்குள்ள வச்சு எம் பொண்ணை தன்னோட பெல்ட்டால அடிச்சுக்கிட்டிருக்காரு எம் புருஷன்!
''ஐயோ சாமி... ஏங்க புள்ளயப் போட்டு இப்டி அடிக்குறீங்க. தொளுக்கு மேல வளர்ந்துட்ட புள்ளைங்க. அவள அடிக்காதிங்க.''னு அழுகுறேன் நான்.
என்னப்பார்த்து முறைச்சுக்கிட்டே அவர் சொல்றாரு...''எல்லாம் நீ கொடுக்குற செல்லம்டி. புள்ளயாம்ல புள்ள... அன்னிக்கே கள்ளிப்பால ஊத்தியிருக்கனும்டி இவளுக்கு. டவுனுக்குப் போயி காலேஜ்ல படிக்கணுமாம். சேர்த்து விடலைனா மருந்தக் குடிச்சுட்டு செத்துடுவாளாம். அடுத்த வீட்டுக்குப் போற பொட்டக் கழுதைக்கு படிப்பெதுக்குடி? அந்தக் காசுக்கு நாலு காளைமாடு வாங்கி விட்டாக்கக்கூட வயல உழுதுக்கிட்டிருக்கும்''
கண்களைத் துடைச்சுக்கிட்டு நா சொல்றேன்... ''இல்லங்க அவ சொல்றதுதான் சரி. அவ மேல படிக்கட்டும்''
பொளேர்னு ஒரு அறை. வெறியோட கத்துனார் எம் புருஷன்...''ஆத்தாளயும் மகளையும் ஒன்ணா தல முழுகிருவேன். என்னது இத்தன வ்ருஷமா இல்லாத வாயி... திடீர்னு! கொன்னுருவேன் கொன்னு!''
எங்கே இருந்துதான் அம்புட்டு வேகம் எனக்கு வருதுன்னு தெரியலங்க... பொங்க ஆரம்பிக்கிறேன்... எம்புட்டு வருஷமா உள்ள கிடக்குற வலி... ''அதயும் பார்த்துரலாம் வாய்யா. கொன்னுருவாராம்ல... அடச்சீ செத்த பொணத்த எத்தன வாட்டிடா கொல்லுவீங்க. எம் புள்ளை மேல கையவச்சிங்க... அவ வாழ்க்கயயும் கெடுக்க நினச்சீங்க... வக்காலி, அம்புட்டு பேரயும் வெட்டிச் சாச்சுருவேன்... தைரியம் இருந்தா வாங்கடா..''
ஒரு கைல எம் பொண்ணு. இன்னோரு கைல வெட்டருவா... ஊரே என்னப்பார்த்து திகைச்சு நிக்குது!
உயிரே போச்சு / தேன் கூடு(மரணம்) போட்டிக்காக
டுபாகூர் டாக்டர் ஒருவரிடம் திடீர் ஆபரேஷன் செய்து கொள்ளலாமா
என்றுகூட யோசித்தான்!
அல்லது சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் பரப்பப்பட்ட எஸ்.எம்.எஸ். சொன்னபடி, 'ஆதி' படம் ஒருதரம் பார்க்கலாமா என்றும் மனக்கணக்கு போட்டுப் பார்த்தான்.
ம்ஹீம். எதுவுமே உசிதமாகப்படாததால் கடலுக்குள் குதித்து செத்துப்போக முடிவு செய்தான் கட்டக்கடைசியாக!
இதோ... நம்ம கோயிந்சாமியே இந்தியப் பெருங்கடலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாரே! (ரேடியோ டிராமா பாணில கரீக்டா இத்தப் படிச்சவங்களுக்கு சபாஷ்பா!)
கரையோடு கரையாய் இருக்கும் கடலுக்குள் எப்படிக் குதிப்பதாம்?! ஒருசில விநாடிகள் மண்டைக்குள்ளிருக்கும் மசாலாவைக் குலுக்கி யோசித்த கோயிந்சாமி ஒரு முடிவுக்கு வருகிறான்.
குடுகுடுவென ஒடிப்போய் கரையோடு கரையாக கடலைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அந்த முடிவு.
'உயிரே போனாலும் இதிலிருந்து ஜகா வாங்கக்கூடாது' என நெஞ்சில் கை வைத்து சத்தியம் செய்யப்போனவன் கையில் இருந்த இரண்டு ரூபாய் சில்லறைக்காசு தட்டுப்படுகிறது.
"கடலை... கடலை... சூடான வேர்க்கடலை'' என சவுண்ட் கொடுத்தவாறே கோயிந்சாமியின் பக்கம் வருகிறான் பொடியன் ஒருவன்.
சரிதான் 'சாவுறதுக்கு முன்னாடி உனக்குப்பிடிச்ச வேர்க்கடலை சாப்டுட்டு அப்புறமா சாவுடா' என அவனுக்குப் பிடித்த ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் நேரில் வந்து அருள்வாக்கு சொல்வது போலவே உணர்கிறான் கோயிந்சாமி. இரண்டு ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கி, 'ரெண்டு மூணு' வேர்க்கடலைகள் கொசுறாகவும் வாங்கிச்சாப்பிட்டு விட்டு, கை துடைக்கும் சமயம் அந்தக் காகிதத்தைப் பார்க்கிறான். பையன் வேர்க்கடலை மடித்துக் கொடுத்திருந்த காகிதம்.
'சாகப்போறீங்களா? உடனே எங்களுக்குப் போன் பண்ணுங்க! நிம்மதியான சாவுக்கு நாங்க கியாரண்டி!!!' என ஒரு வரி விளம்பரம் பிரிண்ட் ஆகியிருந்தது அந்தக் காகிதத்தில். அதுவும் அதே 'ஆழ்வார்பேட்டை பார்ட்டி'யின் மகாத்மியம்தான் என நினைத்துக் கொள்கிறான் கோயிந்சாமி.
பதறியடித்துக்கொண்டு பேண்டின் உள் பாக்கெட்டுக்குள் கைவிட்டு, "அப்பாடா" என்றபடியே ஏழரையாக மடக்கி வைத்திருந்த எமர்ஜென்ஸி பத்து ரூபாய் நோட்டை வெளியே எடுக்கிறான். டெலிபோன் பூத்தை நோக்கி ஒட்ட நடை!
இனி ஒவர் டு கோயிந்சாமி அண்ட் அந்தப்பக்கப் பார்ட்டி...
"ஹலோ...''
"யெஸ்... ஹலோவ்!''
"வணக்கங்க. நான் கோயிந்சாமி பேசுறேங்க பீச்ல இருந்து''
"கோயிந்தாசாமி.. வெரி நைஸ் நேம். ம்... சொல்லுங்க''
"நான் சாகணும்ங்க... நிம்மதியா சாகணும்''
"நல்ல ஆசைதான். செஞ்சுட்டாப் போச்சு!''
"எப்படின்னு ஒரு வழி சொல்லுங்களேன்''
"தாராளமா! ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சில கேள்விகள் உங்ககிட்ட கேட்க வேண்டியிருக்கே''
"கேளுங்க சார் பதில் சொல்றேன்''
"நீங்க செத்துப் போயிட்டிங்கன்னா உங்க பாடியைப் புதைக்கணுமா? இல்ல எரிக்கணுமா?''
"எரிச்சிருங்க சார்''
"ரைட்.. எரிச்சா கிடைக்குற சாம்பலை ஒடுற ஜலத்துல கரைக்கணுமா? இல்ல உட்கார்ந்துட்டு இருக்குற... ஸாரி தேங்கிக்கிட்டு இருக்குற ஜலத்துல கரைக்கணுமா?''
"ம்... ஜலத்துலயே கரைச்சிடுங்க. கரைஞ்சு பரவிடனுமாக்கும் நான்''
"சரி... ஒடுறதுன்னா ஆத்துலயா? இல்ல அருவிலயா?''
"அதுக்கெல்லாம் கூடவா கேள்வி... ஆத்துலயே பெட்டர்''
"ஓஹோ. அப்ப வட இந்தியாவுல இருக்கற ஆறா? இல்ல தென்னிந்திய ஆறா?''
"என்னங்க இது ரொம்பக் கேள்வி கேட்கறீங்க?''
"ஹலோ.. நீங்க பதில்தான் சொல்லணும், நாங்கதான் கேள்வி கேட்கணும்''
"சரி.. கேட்டு வையுங்க''
"மறுபடியும் கேட்கிறேன். நீங்க செத்த பின்னாடி உங்க சாம்பலை வட இந்தியாவுல இருக்க ஆத்துல கரைக்கணுமா? இல்ல தென்னிந்திய ஆத்துல கரைக்கணுமா?''
"சரி சரி வட இந்தியாவுக்கே போயிடுங்க''
"ஓ.கே. அப்ப பஸ்ல போகணுமா? இல்ல ரயில்ல போகணுமா நாங்க?''
"எப்படியாவது போய்த் தொலைய வேண்டியதுதானே''
"என்ன சொன்னீங்க?''
"இல்ல, ரயில்ல போங்கண்ணேன்''
"அப்படின்னா வித் டிக்கெட்லயா? ஆல்ல வித் அவுட் டிக்கெட்லயா?''
"வேணாம்.. எனக்குக் கோபம் கோபமா வருது''
"கூல்டௌன் மிஸ்டர் கோயிந்தாசாமி. கரெக்டா சொல்லுங்க உங்களுக்குக் கோபம் வருதா? இல்ல கோபம் கோபமா வருதா?''
"யோவ் என்ன விளையாடுறியா? நானும் அப்ப பிடிச்சு பார்த்துட்டே இருக்கேன். ஏன்யா என்னைப் பார்த்தா 'இனா வானா' மாதிரியா தெரியுது உனக்கு?''
"ஆத்திரப்படக்கூடாது மிஸ்டர் கோயிந்தாசாமி, உங்க பிராப்ளமே இதுதான். எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டாவே ஆப்ஷன் கொடுக்கறீங்க. தெளிவாச் சொல்லுங்க... 'இனா'வா? இல்ல 'வானா'வா?''
"ஒரு புண்ணாக்கும் இல்லை போனைக் கட் பண்ணுடா புறம்போக்கு! பன்னாடை''
"ஹலோ ஹலோ போனைக் கட் பண்ணிடாதிங்கோ மிஸ்டர் கோயிந்தாசாமி. நீங்க சாகணும்''
"டேய்...செத்து ஒரு கழுதையும் ஆகப் போறதில்ல. உன்னை நேர்ல பார்த்து நாலு சாத்து சாத்தணும் அதுக்காகவாச்சும் உயிரோட இருக்கப் போறேன்டா படுபாவி ராஸ்கல்...''
"குட்! இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!''
கோயிந்சாமி கோபசாமியாக டெலிபோனை கட் செய்ய... கட் கட் கட்!
Wednesday, July 19, 2006
சிறு மீன் / எப்படி? எதற்கு? ஏன்? 4
ஒன்றையொன்று தொந்தரவு செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்துடன் போதிய இடைவெளி விட்டு, ஒற்றைக்கால் தவத்தை ஆரம்பித்தன.
வரமாகப் பெரிய சைஸ் மீன் வரவேண்டும் என ஆசைப்பட்டது கொக்கு நம்பர் ஒன். தன்னைக் கடந்து நீந்திப்போகும் சின்னஞ்சிறு மீன்களையெல்லாம்
பிடித்துத் தின்னாமல் வேடிக்கை பார்த்தது! ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரை காத்திருக்க முடிவு செய்திருந்தது அது.
இரண்டாவது கொக்குக்கு அந்த வைராக்கியமெல்லாம் தெரிந்திருக்கவில்லை.
ஓடும் நீரில் ஆடி அசைந்துவரும் குட்டி மீன்களைப் பிடித்துச் சாப்பிட ஆரம்பித்தது. பாவம்... அதன் பசி அதற்கு!
நெடு நேரமாகியும் பெரிய மீன் எதுவும் வந்தபாடில்லை. வைராக்கியக் கொக்குக்கு பசி மயக்கம்!
மாறாக, அந்த நேரப் பசிக்கு கிடைத்த மீன்களைச் சாப்பிட்டுவிட்டு தெம்போடு பெரிய மீனுக்காகக் காத்திருந்தது இரண்டாவது கொக்கு. பெரிய மீனைப் பிடிக்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது!
பசிக் கிறக்கத்தில் முதலாவது கொக்கு வாடி வதங்கிப் போயிருந்த நேரத்தில்... அந்த ஒரு விநாடியில்... வில்லன்கள் காத்திருப்பதை அறியாமல் நீரோடு வந்தது மெகா சைஸ் மீன் ஒன்று!
அந்த நொடியில் என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிகிறதா?
?
?
?
?
?
?
?
பெரிய மீனைக் கவ்வ முயன்று, உடலில் போதிய தெம்பு இல்லாததால் கோட்டை விட்டது கொக்கு நம்பர் ஒன். அதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட இரண்டாவது கொக்கு வலுவோடு பாய்ந்தது. பெரிய மீனையும் அதுவே பிடித்தது.
Tuesday, July 18, 2006
'சிதம்பர' ரகசியம் / காதல் பால் 2
கருதி இடத்தாற் செயின்
- பொருட்பால், அதிகாரம்:காலம் அறிதல், குறள்:484
விளக்கம்: 'காலத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப காரியங்களைச் செய்பவன் உலகை ஆள நினைத்தாலும் அது சாத்தியமே!'
அவன் எப்போதும் இப்படித்தான். வேலை விரும்பி! கம்ப்யூட்டருக்குள் புகுந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"சார்.. மணி பதினொண்ணு பத்து! டீ சாப்பிடப் போலயா?''
-உரிமையோடு கேட்டார் ஹெட் கிளார்க். அந்த அலுவலகத்தில் டீ டைம் பதினொரு மணி.
வேலையில் மூழ்கிப் போயிருந்த அவன் அப்போதுதான் வெளியே வந்தான்.
"ஆமா! மணி பதினொண்ணு பத்து!''
-தனக்குத்தானே சொல்லிக் கொண்டே அதே வேகத்தில் சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவனாக முகம் மலர்ந்தான். அதுவரை எதையோ மறந்திருந்ததற்காக தன் தலையைத் தானே செல்லமாகக் குட்டிக்கொண்டான்.
பரவசத்தோடு நகர்ந்து டெலிபோனை எடுத்தான்.
அவனது திடீர் சுறுசுறுப்பை வியந்து பார்த்தபடியே வந்தான் தன் வயிற்றுக்குப் பெட்ரோல் போடப் போயிருந்த பக்கத்து இருக்கைக்காரன். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவன். தன் இருக்கையில் உட்கார்ந்தான். மற்றவர்கள் போனில் பேசுவதை ஒட்டுக் கேட்பது அநாகரிகம் எனத் தெரிந்தும் அதைச் செய்யத் தயாரானான்...
"நான்தான்டா செல்லம்''
"...............''
"மெனி மெனி ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே டார்லிங்.''
"................''
"பார்த்தியா... இந்த வருஷமும் சரியா நீ பிறந்த அதே பதினொண்ணு பத்துக்கே உனக்கு வாழ்த்துச் சொல்லிட்டேன்!''
ஒரு கணவன் தன் மனைவிக்கு காதலோடு போனில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதை ஒட்டுக்கேட்பவனும் பக்கம் இருந்து தெரிந்து கொண்டான்!
அதை உணராமலேயே தன் காதல் பேச்சைத் தொடர்ந்தான் கணவன்...
"ஒ.கே.! ஊருக்குப் போன் பண்ணி உங்க அப்பா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க. மத்தியான நேர டி.வி. சீரியல்களுக்கெல்லாம் இன்னிக்கு லீவு கொடுத்துடு. கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ.''
".............''
"எதுக்கா? இன்னிக்கு நைட் நாம டின்னருக்கு வெளில போறோம்டா. வந்து படுக்க லேட்டாகிடும்ல... அதான்.''
"..................''
"ஹா.. ஹா. ஹா..''வென ரசித்துச் சிரித்து, ""ஒ.கே. டா'' எனச் சொல்லி, டெலிபோனைக் கட் செய்தான் அவன்.
மறுபக்கம் அவன் மனைவி என்ன ஜோக் அடித்திருப்பாள் என யூகிக்க முடியவில்லை பக்கத்து இருக்கைப் பார்ட்டியால்!
பகல் மணி ஒன்று.
அதுவரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அலுவலகம் ஒருமணி நேரம் ஒய்வெடுக்கும் நேரம்.
முக்காலே மூணு வீசம் பேரும் சாப்பாட்டுப் பைகளுடன் டைனிங் ஹாலுக்குப் போயிருக்க... அவனும் அந்த பக்கத்து இருக்கைக்காரனும் மட்டும்தான் இன்னும் சாப்பிடப் போகாத ஆட்கள்.
"எனக்குப் பசிக்கலை. லன்ச் சாப்பிடவே பிடிக்கல சார்'' என அவனிடமும், "பொண்டாட்டிகிட்ட அப்படி என்னதான் பேசுறான்னு உட்கார்ந்து கவனிச்சுக் கேட்டுட வேண்டியதுதான்'' என தனக்குள்ளும் சொன்னான் பக்கத்தான். அந்த மனக்கணக்கை அறியாமல், வாட்ச்சைப் பார்த்தபடியே வீட்டுக்கு மறு போன் போட்டான் காதல் கணவன். காதுகளைத் தீட்டிக் கொண்டான் பக்கத்தான்.
"என்னாச்சுடா... ஏன் போனை எடுக்க இவ்வளவு லேட்? தூங்கிட்டியா?''
"..................''
"அச்சச்சோ. திடீர்னு ஏன்டா தலைவலி?! அப்ப இன்னும் சாப்பிடலியா நீ?''
".....................''
"அப்படியில்ல, பசி இருந்தாகல்கூட தலைவலி வந்திருக்கலாம். ஏதாவது கொஞ்சமாச்சும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோயேன்.''
'மனைவிக்குத் திடீர் தலைவலி என்றதும் என்னமாய்ப் பதறுகிறான் இவன்' என தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான் ஒட்டுக்காதுப் பார்ட்டி.
பதறியவன் ஒரு முடிவுக்கு வந்தான்..
"சரி.. நீ சிரமப்படாதே. ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு இதோ நானே வீட்டுக்கு வர்றேன். ஒரு இருபது நிமிஷத்துல அங்க இருப்பேன். ஒரு எட்டு போயி டாக்டரைப் பார்த்துட்டே வந்துடலாம். சரியா... இதோ வந்துடறேன்டா'' என்று பாசத்தோடு பேசி அரக்கப்பரக்க போனை வைத்தான்.
படக்கென வேறு திசையில் பார்ப்பவன் போல முகம் திருப்பிக்கொண்டான் பக்கத்தான்.
"என் வொய்ஃபுக்கு திடீர்னு தலைவலி வந்துடுச்சாம். பாவம்... இன்னிக்கு அவளோட பர்த்டே வேற. நான் உடனே வீட்டுக்குக் கிளம்புறேன். மேனேஜர் லன்ச் முடிச்சுட்டு வந்ததும் அரைநாள் லீவு சொல்லிடுங்க எனக்கு.'' - ஒரே மூச்சில் பேசியவன், முகத்தில் முளைத்திருந்த வியர்வையைத் துடைத்த படியே வெளியேறினான்.
அவன் போவதைப் பார்த்தபடியே அந்தப் பக்கம் வந்தார் ஹெட் க்ளார்க். அதுவரை நடந்தது எதுவுமே தெரியாதவராய் அந்தப் பக்கத்து இருக்கைக்காரனிடம் சொன்னார்...
"இதோ போறாரே ஆவருதான் நம்ம ஆபீஸ்லயே கொடுத்துவச்ச மனுஷன். அவர் உட்கார்னு சொன்னா மறுபேச்சே பேசாம உட்காருவாங்க அவரோட வொய்ஃப். அப்படி என்னதான் சொக்குப்பொடி போடுவாரோ பொண்டாட்டிக்கு?!''
'எனக்குத் தெரியும்' என தனக்குள் சொல்லிக் கொண்டான் பக்கத்து இருக்கைக்காரன்.
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின், மனைவி எம்மாத்திரம்!
கடல் கன்னி / எப்படி? எதற்கு? ஏன்? 3
"ரிலாக்ஸ். வேலைக்கு லீவு போட்டுட்டு எங்காவது உல்லாசப் பயணம் போய் வா'' என்று அட்வைஸ் சொன்னான் நண்பன்.
அவ்வாறே ஒரு அழகான தீவுக்குப் பயணமானான் வாழப் பிடிக்காதவன்.
அங்குதான் அந்த அதிசயம் கண்டான். குட்டிப் படகில் தீவை தனி மனிதனாக வலம் வந்தபோது கற்பனைக் கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த கடல் கன்னியை நேரில் பார்த்தான்!
அவன் திகைப்பில் சிரிக்க, அவள் விரும்பிச் சிரித்தாள்.
"நான் சாகா வரம் பெற்றவள்'' என அவள் பேச்சோடு பேச்சாகச் சொன்ன போது 'ப்ச்'சுக் கொட்டினான் அவன்.
"ச்சே! என் வாழ்க்கையெல்லாம் சுத்தமா வேஸ்ட். ஐவ்வொரு முறை பிரச்னை வரும்போதும் செத்து செத்துப் பிழைக்கிறேன்'' என்றான்.
அதைக்கேட்ட கடற்கன்னி சொன்னதைக் கேட்டதும், "வாழப் பிடிக்கிறது'' என்றான் அவன். அப்படி என்ன சொல்லியிருப்பாள் அந்தக் க.க.?
?
?
?
?
?
?
?
கடற்கன்னி சொன்னது:
"எது நடந்தாலும் எனக்கு மரணமில்லை என்பதால் என் வாழ்வில் சுவாரசியங்கள் கிடையாது. மனிதனான உன் வாழ்வில் அப்படியல்ல. மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பதால் வாழும் ஒவ்வொரு நாளும் சுவாரசியமும் சவாலும் கொண்டது. வரையறுக்கப்பட்ட வாழ்க்கை என்பதால் ஒவ்வொரு கணமும் வாழப் பிடித்தமானது!''
Wednesday, July 12, 2006
தேன்கூடு போட்டிக்காக -'நானேநானா'
‘த்தூ!’
கண் விழித்துப் பார்க்கும்போது எனக்கே என்னைப்பார்க்க அசிங்கம் பிடுங்கித் தின்கிறது!
ப்ளாட்ஃபாரத்தில் தலை வைத்து, தார் ரோட்டில் உடம்பை விரித்துக் கொண்டு நாள்பட்ட குடிகாரன் போல தாறுமாறாக கலைந்து கிடக்கிறேன். ஒரே ஒரு தடவை, அதுவும் நாலே நாலு க்ளாஸ் குடித்ததற்கே இப்படியா?
நகரம் விழித்தெழுந்து, வேகமெடுத்து வெகு நேரமாயிருக்கும்போல. 'வ்ர்ரூம்.. வ்ர்ரூம்' என என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், ஒரு பயலும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை!
சரி விடுங்கள், அவரவர் அவசரம் அவரவர்க்கு!
எனக்கு அதையெல்லாம்விட அவசர வேலையிருக்கிறது. தலை போகிற அவசரமில்லை, என் தங்கைக்கு தாலி போகிற அவசரம்!
இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு கல்யாணம்.
பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தபோது என் அப்பா ஜம்பமாக அளந்துவிட்ட இருபது பவுன் தங்கத்துக்காகத்தான் இப்படி நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கிறேன் நான். ஏழைக் குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்ததன் பாவப்பட்ட பலன் இது. அனுபவித்துத்தானே ஆகவேண்டும்!
அதற்காக நான் வருத்தப்பட்டே பாரம் சுமப்பதாகக் கருதிவிட வேண்டாம். என் குடும்பம் எனக்கு சுகமான சுமைதான்.
என் மீது அளவிடமுடியாத அளவில் நம்பிக்கை வைத்திருக்கும் அம்மா, விபத்தில் தன் இரண்டு கால்களையும் இழ்ந்து வீட்டோடு முடங்கிப்போன அப்பா, ‘ஊர்-உலகத்துக் கொடுத்த கல்யாணப் பத்திரிகைகள் அறிவித்தபடி அடுத்த வாரம் தனக்குத் திருமணம் நடக்குமா’ என்ற பதைபதைப்போடு காத்திருக்கும் அழகுத் தங்கை, ‘இன்னும் ஆறே மாசம்ணே, காலேஜ் படிப்பு முடிஞ்சுடும். யார் கால்லவாச்சும் விழுந்து ஒரு வேலை வாங்கிடுவேன். அதுக்கப்புறம் வீட்டுக்காக நீ படுற கஷ்டத்த நானும் பங்கு போட்டுக்குவேன்ணே’ என பாசக்குரல் கொடுக்கும் தம்பி...
ஒவ்வொருவராக நினைவுக்குவந்து புன்னகைப் பூ கொடுக்க, எனக்கு உடனே அவர்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!
அடச்சே! இன்னமும் ரோட்டிலேயே கிடக்கிறேனே!
வாரிச்சுருட்டிக் கொண்டு எழுகிறேன்.
மனசு கனமாக இருந்தாலும், உடல் காற்றுப்போலிருப்பதாகவே உணர்கிறேன். வழக்கமாக படுக்கையில் இருந்து எழும்போது கூடவே எழும் அந்த கொலைகார ஒற்றைத் தலைவலி இப்போது இல்லவே இல்லை.
நிஜம்தான். நண்பர்கள் சொன்னது மாதிரி ஆல்கஹால் என்பது எந்தவிதமான வலியையும் போக்கும் சர்வரோக நிவாரணிதான்!
‘குடிகாரா’ என்று கூப்பிட்டது மனக்குரல்!
கவனம் கொடுத்துக் கேட்கிறேன்.
‘ ‘காலேஜ்ல கூடப்படிச்ச ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் நல்ல நிலைமைல, பேங்க் வேலைல இருக்காங்க. சென்னைலதான் உத்தியோகம். ஒரு எட்டு போயி கொஞ்சம் பேசிப்பார்த்துட்டு வர்றேன். ஆளுக்குப் பத்தாயிரம் ரூபா கொடுத்தாக்கூட இந்த நேரத்துக்கு உதவியா இருக்கும்’னு வீட்ல சொல்லிட்டுத்தானே பஸ் பிடிச்சே! ஃப்ரெண்ட்ஸ் ஊத்தி விட்டுட்டாங்கன்னு சாராயம் குடிச்சுட்டு தெரு நாயாட்டம் நடு ரோட்டில் கவிந்துட்ட்டே. அது போதாதுன்னு, இப்ப ஆல்கஹால் புராணமே பாட ஆரம்பிச்சுட்டியா?’
‘தப்புதாங்க மனசாட்சி. இதோ வீட்டுக்குக் கிளம்பிட்டேன்!’ என்று மனசாட்சியிடமும், ‘வெறும் இருபதாயிரம் ரூபாய் எதிர்பார்த்து வந்த எனக்கு ஒருலட்சம்வரை வட்டியில்லாக் கடன் கொடுப்பதாக, அதுவும் இரண்டே நாளில் கொடுப்பதாக என் நண்பர்கள் சொன்ன நல்ல சேதியை உடனே அப்பா-அம்மாவிடம் சொல்லவேண்டும்.’ என்று எனக்கு நானாகவும் சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் பறக்கிறேன்.
கண்ணில் தெரியுது வீடு. வாசல் கதவுகள் திறந்தே கிடக்கின்றன!
‘ஏன் இப்படி கதவைத் திறந்து போட்டிருக்கிறார்கள்’ என்ற கேள்விச் சிந்தனையோடு உள்ளே பாய்கிறேன்.
வீடு என்றதும் பெரிதாக எதையும் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டாம். மொத்தமே முந்நூற்றி ஐம்பது சதுர அடி இடம். ஒரு சமையல் ரூம், ஒரு ஹால், ஒரு ஓரத்தில் டாய்லெட்.. அவ்வளவே.
அந்த ஹால்தான் எங்களுக்கு எல்லாமுமே! ஒரு மூலையில் அப்பாவும் அவரது கட்டிலும் நிரந்தரமாக வாசம். எஞ்சியிருக்கும் சொச்ச இடம் எங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது பச்சோந்தியாக மாறிப் பயன் தரும். சாப்பிட உட்கார்ந்தால் டைனிங் ஹால், கருப்பு வெள்ளை டி.வி. பார்க்கையில் ரெக்ரியேஷன் ரூம், ‘அடுத்து என்ன பண்ணலாம், சொல்லுங்க’ என அப்பா கேட்கும் சமையங்களில் ஆளாளுக்குப் பேசும்போது டிஸ்கஷன் ரூம், ராத்திரியானால் பெட் ரூம், சுவரோடு சுவராக ஒரு சாமி ரூமும் (சாமி சுவர்)உண்டு!
‘பொசுக்’கென ஹால் பாதியாகக் குறைந்திருந்தது! அம்மாவின் கிழியாத புடவை ஒன்றை விரித்து திரை போல ஹாலின் குறுக்கே கட்டியிருந்தார்கள். இதெதற்கு?! ஒரு ரெண்டு மூனு நாள் வீட்டில் இல்லையென்றால் என்னென்னமோ நடந்துவிடுகிறது!
அடடா! அப்பாவின் கட்டில் என்னாச்சு? தரையில்... பாயில்... படுத்திருக்கிறாரே!
புயலே அடித்தாலும் ஷேவ் பண்ணாமல் இருக்கமாட்டார் அப்பா. இன்று என்னடாவென்றால் முள் தாடியுடன் காய்ந்த கருவாடாக சுருண்டு கிடக்கிறார்.
‘அப்பா...’
அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். என் குரல் அவரை எதுவும் செய்யவில்லை.
பாவம், தூக்கத்தில் இருக்க மாட்டார். கவலை மயக்கத்தில்தான் இருப்பார்.
மகளை எப்படி மகன் கரையேற்றப் போகிறான் என்ற கவலை.
‘கவலை வேண்டாம் அப்பா, உதவிக்கு ஓடி வர என் ஆருயிர் நண்பர்கள் ரெடியாக இருக்கிறார்கள்’ என்று சொல்லி அப்பாவை எழுப்ப வாய் பரபரத்தது.
வேண்டாம், முதலில் இந்த சந்தோஷச் செய்தியை அம்மாவிடம்தான் சொல்ல வேண்டும்.
அப்பாவைக் கடந்து திரும்புகிறேன். அட! இங்குதான் இருக்கிறான் என் சகோதரன்!
‘என்னாச்சு? காலேஜ் போகலையா?’
என்னைக் கவனிக்கும் நிலையில் அவனில்லை. வாய்ப்பக்கம் ஒரு ஈ நெருக்கமாகப் பறப்பதுகூடத் தெரியாமல் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆங்... இப்போதுதான் ஞாபகம் வருகிறது, இந்த வாரம் ஏதோ தேர்விருப்பதாக கூறியிருந்தான். ராத்திரி பூராவும் கண் விழித்துப் படித்திருப்பான். அதான் பகலிலும் தூக்கம்!
புடவைத்திரைக்கு மறுபுறம் சன்னமாகக் கேட்கும் விசும்பல் சத்தம் பொளேரென என்னை அறைகிறது.
நடுங்கும் ஈரல் குலைகளுடன் திரையை விலக்குகிறேன். தங்கை!
தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறாள். குலுங்கும் முதுகு அவள் ஆற்றமாட்டாமல் அழுவதைக் காட்டுகிறது.
‘ஏன் அழுகிறாய் என் சகோதரி? பணம் வாங்கி வரப்போன அண்ணன் அப்படியே ஓடிபோய்விட்டான் என முடிவு செய்து அழுகிறாயா? இதோ வந்தேனடி என் தங்கமே!’
-தங்கையைத் தூக்கி இப்படியெல்லாம் பேசி மாரோடு சேர்த்துக்கொள்ள ஆசைதான். ஆனால் முடியாதே! வயதுக்கு வந்த பெண்ணை அவள் அண்ணனாக இருந்தாலும் தொட்டுப் பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதே.
அப்பா, தம்பி, தங்கை... எல்லோரும் எனக்கு ஓரே ஒரு நிமிட அவகாசம் கொடுங்கள். நான் கொண்டு வந்திருக்கும் இனிப்புச் செய்தியை அம்மாவிடம் சொல்லி, அதை அம்மா உங்கள் அனைவரிடமும் சொல்லி, இந்த வீடே கொஞ்ச நேரத்தில் ஆனந்தக் கூத்தாடப்போகிறது பாருங்கள்.
‘அம்மா..!’
சமையல்கட்டுக்குத் தாவினேன். தேடினேன். அம்மாவைக்காணோம்.
திரும்ப வெளியே வந்தபோதுதான் கவனித்தேன் சாமி சுவற்றுக்குப் பக்கத்தில் அம்மா! கையில் ஏதோ நியூஸ் பேப்பர்.
'அட நீ இங்கேயா இருக்கிறாய்.. நான் தேடுவது தெரியவில்லையா?'
அருகே உட்கார்ந்து ஆசையோடு அவள் தோளைத் தொடுகிறேன். சலனமின்றி, சாமி படங்களையே வெறித்துக் கொண்டிருக்கிறாள். நான் வந்துவிட்டது அவளுக்குத் தெரியவில்லை!
'ச்சே! நீயுமா உன் பிள்ளையை நம்பவில்லை?! இதோ வந்துவிட்டேன் அம்மா!'
அம்மாவின் நிலை குத்திய பார்வை இருக்கும் திசையைப் பார்க்கிறேன். சுவற்றில் எல்லா சாமி படங்களுக்கு நடுவே புதிதாக பூவோடும் பொட்டோடும் என் புகைப்படம்!
அம்மாவின் கையில் இருக்கும் நியூஸ் பேப்பரில், ‘குடி போதையில் ரோட்டைக் கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி அதே இடத்தில் இறந்தார்’ என்ற செய்தியோடு என் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது!!
Sunday, July 09, 2006
எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்! 1
எனக்குக் கொடுக்கப்பட்ட பாடங்கள் என் தொழிலுக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும் நிறைய இனிப்பு சேர்த்திருக்கின்றன். இதோ ஒரு பருக்கைச் சோறு...
அப்போது நான் இளமைத் துடிப்புள்ள மாணவப் பத்திரிகையாளன். விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் புதுச் சேர்க்கை.
பொறியியல் பட்டப்படிப்பின் நான்காவது(இறுதி) வருடம் பயிலும்போதுதான் இந்த வாய்ப்புக் கிடைத்தது. அதனால் பகுதி நேரப் பத்திரிகைப் பணிக்கு அதிக நேரம் செலவிட முடியாமல் போய் விட்டது(அப்படியும் விகடன் தேர்வில் OUTSTANDING STUDENT REPORTER ஆக தேர்ச்சிபெற்றுவிட்டதால் அந்த பொறியியல் பட்டதாரி அத்தோடு தொலைந்தான்!!).
கிடைக்கும் சொற்ப நிமிட அவகாசங்களில் பிரசுரிப்புக்குத் தேறும் செய்திகளை சேகரிக்கப் 'பர பற'ப்பேன். மூன்று கற்களில் இரண்டு மாங்காய் - இதுதான் நான் அப்போது எனக்கு வகுத்துக் கோண்டிருந்த ஃபார்முலா. அதாவது மூன்று மேட்டர்கள் எழுதிஅனுப்பினால் அதில் இரண்டாவது பிரசுரமாகிவிட வேண்டும்!
ஒரு சில மாணவ நிருபர்களுக்கே கிடைத்த அந்த அதிர்ஷ்டம் எனக்கும் கிடைத்தது. தொடர்ச்சியாக என் கட்டுரைகள் பிரசுரமாகி வந்தன.
இந்த சுயபுராணமெல்லாம் எதற்காக என்றால்... ஒரு கட்டுரை எழுதினால் அது பிரசுரமாகிவிட வேண்டும் என்பது எனக்கு எவ்வளவு அத்தியாவசியமானதாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான்.
சரி விஷயத்துக்கு வருகிறேன், புதிய ஊரில் ஒயின் ஷாப் தேடி அலையும் வெளியூர் குடிகாரன் மாதிரி செய்திக்காக நான் தேடலில் மும்முரமாயிருந்த ஒரு நாள்... ஒரு பொழுது..
"எப்படியும் இருபது முப்பது பேராவது இருக்கும்... அத்தனை பேர்கிட்டயும் அவங்க நிலப்பத்திரங்களை அடகு வாங்கிக்கிட்டு, எல்லோரையும் கொத்தடிமைகளா வச்சிருக்காரு ஒரு பெரிய மனுஷன்" என்ற அதிர்ச்சிகரத் தகவல் சொன்னார் ஒரு நண்பர். சிகப்புச் சட்டைக்காரர் அவர்.
அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பல செய்திகளை கட்டுரையாக்கி இருக்கிறேன். நம்பத் தகுந்த 'துப்புக் கொடுப்பாளர்'.
'ஆஹா.. சில்லறை மீனுக்கு ஆசைப்பட்டால் சுறா மீனே வந்து விழுந்திருக்கே!' என சந்தோஷப்பட்டேன்.
இந்த இடத்தில் ஒரு இடைச் செருகல்... பத்திரிகையாளன் அதுவும் புலனாய்வுப் பத்திரிகையாளன் என்றால் இப்படித்தான்! கெட்டசெய்தி எதுவும் கேள்விப்பட்டால் 'ஐயோ இப்படி நடந்துடுச்சே' என வருத்தப்படுவதற்கு முன்னால் 'சூப்பரான நியூஸ் கிடைச்சுருச்சு' என்ற சந்தோஷம் முந்திக் கொண்டு வந்து நிற்கும்.
எனக்கும் அப்படியே! நின்றது!!
காலேஜுக்கு கட் அடித்துவிட்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டேன். கொடைக்கானலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமத்துக்குப் பயணம்.
மொத்தம் இருபத்தி நான்கு தொழிலாளர்கள், அத்தனை பேரும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து இரண்டு வருடங்களாகி இருக்கும். அனைவரும் கொத்தடிமைகள்! பஞ்சம் பிழைப்பதற்காக வீடு, வாசல், வயக்காடுகளை அந்தப் பெரிய மனிதரிடம் அடகு வைத்தவர்கள். குபு குபு'வெனக் குட்டி போடும் வட்டியைக்கூட கட்ட முடியாமல் தடுமாறியதால், அவர்களை கூலியில்லாத வேலைக்காரர்களாக தனது பண்ணைத்தோட்டத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர்.
தடி மீசை அடியாட்கள், கொலை வெறியோடு அலையும் வேட்டை நாய்கள், இத்யாதி இத்யாதி பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி அப்பாவி அடிமைகள் அனைவரிடமும் பேசினேன்.
'போட்டோ புடிக்க வேண்டாம்' என்று முரண்டு பிடித்தவர்களை சமாளிக்க வேண்டியிருந்தது. 'நம்புங்கள்... பத்திரிகையில் போட்டோ போட மாட்டோம். ஆனால் இப்படி ஒரு விஷயம் நடப்பதை எங்கள் எம்.டி.(அப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியரான எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களை அலுவலகத்தில் எல்லோரும் இப்படித்தான் குறிப்பிட்டார்கள். கேள்விப்பட்டுக் கேள்விப்ப்ட்டு அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இப்போதும்கூட 'எம்.டி' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எங்கிருந்தாலும் என் நினைவுக்குவரும் முதல் முகம் அவருடையதுதான்) நம்ப வேண்டும் அல்லவா! அதற்காக கட்டாயம் நான் போட்டோ அனுப்பியாக வேண்டும்' என்று கூறி சமாதானப் படுத்தினேன். வேண்டியமட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.
அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்துவிட்டு, மலையிறங்கினேன்.
அடுத்ததாக விஷயத்தின் வில்லனையும் நேரில் சந்தித்தாக வேண்டும். அதாவது அந்தப் பெரிய மனிதரை!
நிஜமாகவே ஊருக்குள் பெரிய மனிதர்தான். மரம் கடத்தல், டூப்ளிகேட் மதுபாட்டில், அடிதடி... என பல விஷ விஷயங்களில் அவரது பெயர் பிரபலம். அப்போதைய ஆளும் கட்சியின் செல்வாக்கு பெற்ற மனிதர். எம்.எல்.ஏ. ஒருவரின் நெருங்கிய உறவினர்.
இத்தனை 'அட்டாச்மெண்ட்கள்' இருந்ததால் அவர் முன் நின்று பேசவே நடுங்குவார்களாம் உள்ளூரில் பலரும். எனக்கென்ன நான்தான் வெளியூராச்சே!
அந்த (அ)சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கக் கிளம்பினேன். அடுத்த நாளும் காலேஜுக்கு கட்.
அந்த ஆளின் வீட்டுக்கு வழி கேட்டபோது ஊருக்குள் ஏற இறங்கப் பார்த்தபடியேதான் கை காட்டினார்கள். பயமில்லை என்றாலும் சின்னதாக தயக்கம் எனக்குள் முளைத்திருந்தது.
வேறு வழியே இல்லை, கட்டுரையை எழுதி முடிக்க வேண்டுமென்றால் அவரை பேட்டி எடுத்தே ஆக வேண்டும். அதுதான் விகடன் சம்பிரதாயம். 'ஒரு தரப்புச் செய்தியை மட்டும் வெளியிடக் கூடாது. எதிர் தரப்பிலும் கேட்டு எழுதியாக வேண்டும்' என எங்களுக்கு படித்துப் படித்து சொல்லிக் கொடுத்திருந்தார்கள். வியர்த்திருந்த உள்ளங்கையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு விடுவிடுவென 'பெரிய' வீட்டுப் படியேறிவிட்டேன்.
நல்ல விஷயத்துக்காக யாராவது நல்ல மனிதர்களைச் சந்தித்தால் 'ஆனந்த விகடன் நிருபர்' என் அறிமுகம் செய்து கொள்வோம். இப்போது அது தேவையில்லை...
"ஜூனியர் விகடன்ல இருந்து வர்றேன். சார்கிட்ட கொஞ்சம் பேசணும்."
உட்காரச் சொன்னார்கள். முரட்டு வீட்டை வேடிக்கை பார்த்தபடியே நான் இருக்க... ஓரிரு நிமிடங்களில் 'அவர்' வந்துவிட்டார். அந்த அவகாசத்தில் எனக்கு கொஞ்சம் தெனாவெட்டு வந்துவிட்டது.
''வாங்க தம்பி'' என்றார். என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்.
வாங்கியவர் அதை அலட்சியமாகப் பார்த்தார். என்னையும் ஏற இறங்கப் பார்த்தார்.
அதில் 'STUDENT REPORTER - TRAINEE' என இருந்தது. அதைப் பார்த்துத்தான் அவ்வளவு அலட்சியம் காட்டுகிறார் என நானே நினைத்துக் கொண்டேன். 'வைக்கிறேண்டி உனக்கு ஆப்பு' என மனதில் கறுவிக்கொண்டே பேச ஆரம்பித்தேன்...
"கொடைக்கானல் மலைப்பக்கம் இருக்க உங்க தோட்டத்துல இருபத்திநாலு பேரை கொத்தடிமையா வச்சிருக்கீங்களே! அதப் பத்தி உங்ககிட்ட பேசணும்"
பேசியபடியே அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன். ரியாக்சனுக்கு ஏற்ற எதிர்க் கேள்வியை எடுத்துவிட வேண்டுமே!
"நீங்கதான் நேத்து அங்க போயி விசாரிச்ச ஆளா?" என்றார்.
அடப்பாவி! ரகசியமாக விசாரணை செய்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்க, அது இந்த ஆளுக்கும் தெரிந்திருக்கிறதே!
"ஆமா சார்" சொன்னேன்.
கண்களை மூடி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். கையோடு கொண்டு போயிருந்த ஆட்டோஃபோகஸ் கேமராவை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தேன்.
"தம்பி, கேமராவ முதல்ல உள்ள வைங்க'' என்றார் அவர்.
"இல்ல சார்... அது வந்து..." என் ஏதோ பேச ஆரம்பிக்க நான் முயல... தொண்டையை செருமிக் கொண்டு பேசலானார் அவர்.
''தம்பி இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வாங்கள்ல அதான் தைரியமா இந்த பிரச்னைல இறங்கியிருக்கிங்க. சரி, நாம ஒரு டீலுக்கு வருவோம். அந்த இருபத்திநாலு பேர்கிட்டயும் அவங்கவங்க பத்திரத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துர்றேன். வாங்குன கடனையும் தள்ளுபடி செஞ்சுர்றேன். பிரச்னய இத்தோட விட்ருங்க. புக்ல மேட்டர போட்றாதீங்க.''
வெலவெலத்து விட்டேன் நான். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
என்னாது.... சின்னப்புள்ளயாட்டம்?!
அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அலுவலகத்தில் பேசி முடிவு சொல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டேன். மனது முழுக்க குழம்பிப் போயிருந்தேன். எனது இரண்டு நாள் உழைப்பு அது. செய்தி வெளியானால் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். OUTSTANDING REPORTER ஆக தேர்வாக இந்தக் கட்டுரை கை கொடுக்கும்.
வழியிலேயே எஸ்.டி.டி. பூத்துக்குள் புகுந்து சென்னைக்குப் போன் போட்டேன்.
மறு முனையில் விகடன் அலுவலகம். நடந்ததையெல்லாம் விலாவாரியாகச் சொன்னேன்.
அரை மணி நேரம் கழித்து மறுபடியும் போன் பண்ணச் சொன்னார் சுபா. அவர்தான் நான் உட்பட மதுரைப்பக்கம் இருக்கும் அந்த வருடத்து மாணவ நிருபர்களையெல்லாம் வழி நடத்தியவர்(இப்போது ராடன் டி.வி.யின் க்ரியேடிவ் ஹெட்).
அடுத்த முப்பத்தொன்றாவது நிமிடம் மறு போன் போட்டேன். என் காதுகளும் பதைபதைப்போடு காத்திருந்தன.
''அந்த மேட்டர எழுதவேணாம்னு எம்.டி. சொல்லிட்டாரு.."
என் தலையில் இடி இறங்கியது. என் உழைப்பெல்லாம் வேஸ்ட்!
என் அமைதியை யூகித்துவிட்ட சுபா தொடர்ந்து பேசினார்.. ''எம்.டி. என்ன ஃபீல் பண்றார்னா... நாம செய்தி வெளியிடுறதோட நோக்கமே அதப் பார்த்து அரசு அதிகாரிகள் யாராச்சும் அந்த கொத்தடிமைகளை மீட்கணும்ங்கிறதுதான். செய்தி வெளியாகுறதுக்கு முன்னாடியே அது நடந்துடுச்சுன்னா சந்தோஷம்தானே! ''
"அப்ப அந்த ஆளை...?''
'' தப்பு செஞ்சவர்தான். ஆனா தப்பை உணர்ந்து திருந்திட்டார்ல. அதனால அவரப்பத்தி எழுத வேணாம்ங்கிறார் எம்.டி. ஆனா அந்த ஆள் சொன்னமாதிரி அத்தனை பேருக்கும் பத்திரங்களையெல்லாம் திருப்பிக் கொடுத்து அவங்களை விடுவிக்கிறாரான்னு கூட இருந்து உறுதி செஞ்சுக்கங்க. உங்களால இருபத்திநாலு அப்பாவிகளுக்கு நல்லது நடக்கப் போகுது... கங்ராட்ஸ்!''
சந்தோஷப் பெருமையோடு போனை வைத்தேன். தான் செய்த தவறை உணர்ந்துகொண்டு யாரரவது ''ஸாரி'' சொன்னால் மன்னிக்கும் மனப்பக்குவம் கொஞ்சமேனும் எனக்கு வந்தது அதற்குப் பிறகுதான்!
Thursday, July 06, 2006
வார்த்தை தவறிவிட்டாள் / காதல் பால் 1
அறத்துப்பால், அதிகாரம்: 12, குறள்: 120
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்
உரை: விற்பனைப் பொருளையும், வாங்கும் பொருளாகவே
மதித்தால் வணிகர்க்கு நல்ல வணிகம் எற்படும்.
மணி ஆறரையாகிவிட்டது. ஆட்டோபிடித்து போய்ச் சேர்ந்தால்கூட எப்படியும் எழு மணியாகிவிடும்.ஆக... ஒன்றரை மணி நேரம் தாமதம்!
"விட்டேனா பார்' என புதுப்புது வேலைகளைச் சுமத்திச் சாகடித்த உயர் அதிகாரியைச் சபித்தபடியே அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் அவள்.
போச்சு! இந்நேரம் அவன் கோபத்தில் ராட்சஸனாகவே மாறியிருப்பான்!கடந்து போன ஆட்டோவைக் கைதட்டிக் கூப்பிட்டாள். ஆட்டோ நின்றது. ஒடிப் புகுந்தாள்...
"பீச்... திருவள்ளுவர் சிலை போப்பா!''
இருக்கும் வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு அவளுக்காக திருவள்ளுவருக்குப் பக்கத்தில் காத்திருக்கும் அவனை நினைக்க நினைக்க அவளுக்குப் பதட்டமாகத்தான் இருந்தது.
யானைக்கு முன் வரும் மணியோசை மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கப் போகும் மோதலுக்கான முன்னோட்டம் இப்போதே அவள் காதுகளுக்குள் முட்டிமோதியது.
"இது உனக்கே நல்லா இருக்கா?''
"ஸாரிப்பா.. அந்த இடியட்... மேனேஜர் ரொம்ப படுத்திட்டார்! என் அவசரம் புரிஞ்சும், 'இத மட்டும் முடிச்சுட்டுப் போம்மா, அத மட்டும் பார்த்துட்டுப் போம்மா'ன்னு டார்ச்சர் பண்ணிட்டார்.''
"ஆமா... உனக்கு எப்பவுமே உன் ஆபீஸ் வேலைதான் முக்கியம். அப்புறம் எதுக்கு லவ்வர்னு நான் இங்க தண்டத்துக்கு!''
"ஏய்...ஏய்...ஏய்.... ப்ளீஸ்ப்பா! கோபப்படாதே!''
"சமாளிக்காத. 'வருவே வருவே'ன்னு கால்கடுக்க இரண்டு மணி நேரம் நின்னுருக்கேன். என் வலி எனக்குத்தானே தெரியும்.''
"அதான் சொல்றேன்ல என்ன நடந்ததுன்னு. வேணும்னே நான் உன்னைக் காக்க வெச்சது மாதரி பேசுறியே!''
"ஒரு டைம் ஃபிக்ஸ் பண்ணினா கரெக்டா வரமுடியுதா உன்னால. உனக்கெல்லாம் எதுக்கு காதல்?''
"வேணாம்... ரொம்பத் திட்டாதடா. அடங்கிடேன். என் செல்லம்ல... நீ ஒரு வாரமா கேட்டுட்டு இருக்குற இந்த இங்கிலீஷ் கிஸ் இன்னிக்கு உண்டு. ஒ.கே.வா?''
"எவனுக்கு வேணும் உன் இங்கிலீஷ் கிஸ். நீயே வெச்சுக்க.. ஆள விடு!''
குலுங்கி நின்றது ஆட்டோ. கற்பனை கலைந்து நிஜத்துக்கு வந்தாள் அவள்.
கடவுளே. இப்படி எதுவும் இன்றைக்கு நடந்துவிடக்கூடாது. என் தரப்பு நியாயத்தை அவன் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு சண்டை போடாமல் வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும்.
கடற்கரைத் திருவள்ளுவர் கண்களில் தெரிந்தார்.
"இங்கதான்... லெப்ட்ல நிப்பாட்டிக்கப்பா.''
இறங்கினாள். அவனுக்குப் பயந்து அதுவரை ஆஃப் பண்ணி வைத்திருந்த மொபைல் போனை ஆன் செய்தபடியே வழக்கமாக அவர்கள் சந்தித்துக்கொள்ளும் குட்டை மரத்தை நோக்கி ஓட்ட நடையெடுத்தாள்.
கண்கள் வலை வீசின.அவனைக் காணவே இல்லை! சின்னதாக ஒரு ‘அப்பாடா’ அவள் மனதுக்குள்! ஒருவேளை அவன் இன்னும் வரவில்லையோ?!
அல்லது அவன் வந்து வெறுத்துப் போய்த் திரும்பியிருந்தால்?! அடுத்த விநாடியே ‘அப்பாடா’, “அய்யோடா”வானது!பரபரவென நகம் கடித்தாள் அவள்.
வாட்சில் மணி பார்த்து, "ப்ச்.. ஏழேகால்'' என தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். சட்டென ஞாபகம் வந்து மொபைல் போனை எடுத்து அவனுக்கு டயல் செய்தாள்.உபயோகமில்லை. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகப் பெண் குரல் சொன்னது. எரிச்சல் பிசாசு அவளுக்குள் புகத் தொடங்கினான்!
ஒவ்வொரு விநாடியும் நகர அடம்பிடித்தது.
ஜோடியாகக் கடந்து போகும் காதலர்கள் எல்லோரும் அவளைப் பார்த்ததும், நின்று கேலியாகச் சிரித்துவிட்டுப் போனது போன்ற பிரமை!
நேரமாக ஆக எரிச்சல் கோபமாக உருமாறியது!வாட்சைப் பார்ப்பதும், ‘ப்ச்’சுக் கொட்டுவதும், மொபைல் போனை எடுத்துக் காதுகளில் வைத்து எமாறுவதுமாக இருந்தாள்.
கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி கடுங்கோபமாக உருவெடுத்த அந்த நேரத்தில்... "ஹாய்.. ஸாரிடா'' என்றவாறே அவள் முன்னே வந்து நின்றான் அவன்! கலைந்த தலை அரக்கப்பரக்க வந்ததை அடையாளப்படுத்தியது.
"இது உனக்கே நல்லா இருக்கா'' என்றாள் கடுகடு முகத்துடன்.
"ஸாரிடா... இந்த இடியட்... எங்க பாஸ் இன்னிக்குன்னு பார்த்து ரொம்பப் படுத்திட்டார்! என் அவசரம் புரிஞ்சும் ‘இத மட்டும் முடிச்சுட்டுப் போப்பா, அத மட்டும் பார்த்துட்டுப் போப்பா'ன்னு டார்ச்சர் பண்ணிட்டார்!''
"சமாளிக்காத. "வருவே வருவே'ன்னு கால்கடுக்க மூணு மணிநேரம் நின்னுருக்கேன். என் வலி எனக்குத்தானே தெரியும்'' - பொருமினாள் அவள்.
எந்த வார்த்தைகளை அவன் பேசிவிடக்கூடாது என அவள் கடவுளிடம் சில பல நிமிடங்களுக்கு முன்னால் வேண்டிக் கொண்டிருந்தாளோ அதே வார்த்தைகளை அவள் பேசிக்கொண்டிருந்தாள் இப்போது.
பக்கத்திலிருந்து சிலையாகப் பார்த்துக்கொண்டிருந்த திருவள்ளுவர் தலையில் அடித்துக்கொண்டார்!
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின், வார்த்தைகள் காதலர்க்கு!
குதிரைச் சவாரி / எப்படி? எதற்கு? ஏன்? 2
பல வழிகளிலும் முயற்சி செய்து கடைசியில் அருமையான குரு ஒருவரைக் கண்டுபிடித்தான். அவரைச் சந்தித்தான்.
தன் விருப்பத்தைச் சொன்னான்.
தன்னை நாடி, நம்பி வந்திருப்பதால் உடனடியாக அவனுக்கு பயிற்சி கொடுக்க ஒப்புக் கொண்டார் பயிற்சியாளர். "இன்றே பயிற்சியை ஆரம்பிக்கலாம்"என்றார்.
"அதற்கு முன்னால் ஒரு கேள்வி?" என்றான் வந்தவன்.
"ம்... கேளுங்கள்" என்றார் பயிற்சியாளர்.
"எத்தனை நாட்களில் குதிரைச் சவாரியை நான் கற்றுக் கொள்ள முடியும்?" என்றான் வந்தவன்.
"தினம் நான்கு மணி நேரப் பயிற்சி... இருபது நாட்களில் இந்தக் கலை உங்கள் வசமாகும்" என்றார் பயிற்சியாளர்.
"இல்லை, நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். தினமும் இருபது மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொள்ளத் தயார். எத்தனை நாட்களில் இந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பீர்கள்?" என்றான் வந்தவன்.
அதற்கு அந்தப் பயிற்சியாளர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
?
?
?
?
?
?
?
?
?
?
என்ன யோசிச்சுட்டீங்களா? இப்ப பதில்...
"இதே ஆர்வத்தில் நீங்கள் இருந்தால் இருபது நாட்கள் என்ன... இருபது வருடங்களானாலும் உங்களால் குதிரைச் சவாரி கற்றுக் கொள்ள முடியாது. என்னால் கற்றுக் கொடுக்கவும் முடியாது.
வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நான்கு நாட்களில் சாப்பிடவேண்டிய உணவை ஒரே நாளில் சாப்பிட்டுவிட்டு வந்தீர்கள் என்றால், இருபது நாட்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய பயிற்சியை நான்கு
நாட்களிலேயே உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்" என்றார் பயிசியாளர்.
தலை கவிழ்ந்தான் வந்தவன். சரியான குருவை அடையாளம் கண்டுகொள்ள உதவிய அதே பொறுமை மறுபடியும் அவனுக்கு வந்தது!