Tuesday, October 19, 2010

தொப்பை சொன்ன சேதி! - ஒரு துளி கடல் 6


எனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை!

பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிசையில் உட்கார்ந்தால்தான் வாத்தியார் (டீச்சரும்தான்.. ஹிஹி!) முழுதாக தெரிவார் என்ற அளவுக்கு ’பொடிப்பயல்’.

நாளாக நாளாக உயரத்தில் தேறிவிட்டேன் என்றாலும் உடம்பு வைப்பதில் மட்டும் ம்ஹூம் ம்ஹூம்!

’ஓமக்குச்சி’ அளவுக்கு நோஞ்சானாக இல்லை என்றாலும் ஒல்லிக்குச்சி உடம்போடுதான் இருப்பேன்.

அந்தக்காலத்தில்.. திண்டுக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்துக்குள் ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளராகப் புகுந்து, அங்கே நடந்த குடுமிப்பிடி கோதாவைப் படம் பிடிக்க ஆரம்பித்து, ஆவேசமாக இருந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டு, கேமரா உடைபட்டு, சட்டை கிழிபட்டு, தாக்கப்பட்ட ஜூவி செய்தியாளராக.. அந்த நிலையில் எலும்பும் தோலுமாக என்னை நான் எடுத்துக்கொண்டு சென்னைக்கு அனுப்பிவைத்த புகைப்படத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறார் ஓவியர் அரஸ். ’என்றாவது ஒருநாள் உலகத்துக்கு வெளியிடுவேன்’ என்று அடிக்கடி என்னிடம் மிரட்டிக்கொண்டிருக்கிறார்!

‘பெத்தராயுடு’ டாக்டர் எனக்குப் போட்ட ஸ்டீராய்டு ஊசிகளின் பக்க விளைவாக மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் லேசாக குண்டடித்தது என் உடல். அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டது தொப்பை!

‘தொப்பை கண்ட்ரோல் புரோகிராம்’களை ஆரம்பிக்கத் தொடங்கினேன்.

சக தொப்பையாளர்களைப் போலவே நானும் எடுத்த எடுப்பில் சாப்பாட்டில்தான் கைவைத்தேன். அதாவது சாப்பாட்டில் கைவைப்பதைக் குறைக்க ஆரம்பித்தேன். டயட்டுங்கோ!

ஒரு வேலையில் இறங்கிவிட்டால் வெறி பிடித்தவன்போல அதைச் செய்பவன் நான் என்பதால் டயட் மேட்டர் ரொம்ப ஓவர் ஆகி, நடக்கும்போதே திடீரென மயங்கிவிழும் அளவுக்கு சோப்ளாங்கி ஆனேன்.

ட்ரிப்ஸ் ஏற்றிய டாக்டர் கண்டமேனிக்குத் திட்டினார்.. ”யோவ்.. சாப்பாட்டை கட் பண்ணிட்டா உயிர் வாழவே முடியாதுய்யா” என உருட்டி மிரட்டினார். அதோடு விட்டேன் ஜூட் டயட்டுக்கு!

நாளொரு சென்டி மீட்டரும் பொழுதொரு மில்லி மீட்டருமாக தொப்பை வளர்ந்து விடக்கூடாதே என்ற கவலையை விடமுடியவில்லை.

”காலை எழுந்ததும் சுடுநீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்ர்ர்னு எடை குறையும்” என ஒரு ‘நண்பேன்டா’ கொடுத்த அட்வைஸ்படி அதைக் குடிக்க ஆரம்பித்தேன்.

ஒரிரு வாரங்களில் மூலிகைமணி டாக்டர் வேங்கடேசனின் மனைவி ருக்மணி வேங்கடேசனிடம் இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் நான் குடிக்க ஆரம்பித்திருப்பது விஷம் எனப் புரிந்து தூக்கிவாரிப் போட்டுக்கொண்டேன்! சுடுநீரில் தேன் கலந்தால் அது டாக்ஸின் ஆகிவிடுமாம். அதாவது புற்று நோயைத் தூண்டிவிடக்கூடிய ஒரு ஆபத்தான அயிட்டம். கொடுமை கொடுமை எனக் கூவிக்கொண்டு டுபாகூர் சாமியாரிடம் போனகதை!

“லேசான இளம் சூட்டுடன் வெது வெது நிலையில் இருக்கும் நீரில்தான் தேனைக் கலக்க வேண்டும். அப்போதுதான் வெயிட் குறையும்” என்றார் ருக்மணி வேங்கடேசன்.  

அன்றில் இருந்து இன்று வரை ’தேன் குடி நிகழ்வை’த் தொடர்கிறேன் என்றாலும் வளர்ப்புத் தொப்பை குறைந்த பாடில்லை. இருந்தாலும் தொண்டை மற்றும் வாய்ப்பகுதிகளில் புண் தொந்தரவுகள் கப் சிப் என காணாமல் போனதற்கு இந்த நிகழ்வு’தேன்’ காரணம் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்ததால் தொடர்கிறேன்.

அடுத்த படியாக.. வாக்கிங்!

“தினமும் முக்கால் மணி நேரம் நடக்கணும். வியர்க்க விறுவிறுக்க நடக்கணும். வாங்க நடக்கலாம்” என்றார் நண்பர் எம்.ஆர்.பாரதி.

ஒரு சுபயோக சுபதினத்தில்.. இரண்டு பேரும் ஒரு சினிமா டிஸ்கஷனுக்காக கோவா போனசமயத்தில் ஆரம்பித்தேன் சுபவாக்கிங்!

“இந்த வியர்வை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” என பாரதியிடம் கேட்டபடியே முதல் நாள் ஓட்டத்தை முடித்தேன் வெற்றிகரமாக.

அந்த அலுப்பில் அடுத்த நாள் அம்பேல்! கண் திறக்கவே காலை 9 மணியானது!

பொறுமையின் திரு உருவாக எனக்காகக் காத்திருந்தார் பாரதி. “வாங்க போலாம்” என்றார்.

“ஒன்பது மணிக்கு மேலயா?” என்றேன்.

“இத்தனை மணிக்குத்தான் வாக்கிங் போகணும்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா நாமெல்லாம் ஒருநாளும் வாக்கிங் போக முடியாது. எத்தனை மணிக்கு எழுகிறோமோ அத்தனை மணிக்கு நடக்க வேண்டியதுதான்.. லெட்ஸ் மூவ்.. கமான்யா” என்றார் பாரதி.

காலை வெயில் காய நடந்தோம் கோவா கடற்கரையோரம்.

அடுத்த இரண்டு நாட்களும்கூட வெயில் நேரத்தில்தான் நடை பழகினோம்.

சென்னை திரும்பியதும்.. வீட்டுக் கதவைத் திறந்துவிட்ட மனைவி, “அய்யய்யே.. என்ன இது இப்படி கருத்துப்போய் வந்திருக்கீங்க” என்றதும் அதோடு தொலைந்தது வாக்கிங் பழக்கம்!

என்றைக்கு சூரியனுக்கு முன்னதாக எழுகிறேனோ அன்றைக்கு மறுபடியும் நடைப்பயிற்சியை ஆரம்பித்துக்கொள்ளலாம் என இன்றுவரை நான் காத்துக்கொண்டிருக்கிறேனாக்கும்!

’மாயமில்லை மந்திரமில்லை’ என நடைபாதை டப்பா வைத்தியன் போல கூவாவிட்டாலும் சற்றேரக்குறைய அதே பாணியில் விளம்பரம் செய்துகொண்டிருக்கும் எடை குறைப்பு நிறுவனம் ஒன்றினை அணுகினேன் எனது தொப்பை கண்ட்ரோல் ப்ராஜக்டின் அடுத்த கட்டமாக.

அழகான பெண்குட்டிகள் சிரித்துப் பேசி வரவேற்றார்கள். ”ஒரு கிலோவுக்கு ஜஸ்ட் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும்” என்றார்கள் மஜீத் மட்டன் ஸ்டால் பாணியில்!

“தொப்பை காணாமல் போயிரும்ல?” எனக் கேட்டுக்கொண்டேன்.

உலகமகா ஜோக்கைக் கேட்டவள் போல ரசித்துச் சிரித்தாள் அந்தப் பெண்குட்டி.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் என்னை வந்து காப்பாற்றினார் ஒரு பழைய நண்பர். அந்த நிறுவனத்தில் பல வருடங்களாக பணிபுரிகிறாராம் அவர்.

ஏதேச்சையாக என்னைப் பார்த்துவிட்டவர், தனியே தள்ளிக்கொண்டு போனார்… “என்னசார் நீங்க.. பச்சைப்புள்ளையா இருக்கீங்க? உங்களுக்கு இருக்கிறதெல்லாம் ஜூஜூபி தொப்பை சார். எப்பாடுபட்டாவது வாக்கிங் பழக்கத்தை கடைபிடிங்க. எடையும் குறையும், உடலும் சுறுசுறுப்பா இருக்கும்” என புத்தி சொன்னார்.

அவர் சொல்லச்சொல்ல.. நான் கேட்க கேட்க.. அவசர உப்புமா போல அவசர குரு ஆனார் அவர் எனக்கு!

“இல்லை பாஸ்.. நானும் ஏறக்குறையா ஆறு மாத காலம் என்னென்னமோ வழிகள்ல ட்ரை பண்ணிட்டே(?!)தான் இருக்கேன். கொஞ்சம்கூட குறைஞ்ச மாதிரி தெரியலியே இந்த தொப்பை!” என பரிதாபமாக நான் கேட்டதற்கு ‘குரு’ சொன்னதுதான் எனக்கு(ம்) பாடம்..

“சார்.. உடம்புல எடை போடுதுன்னு வச்சுக்கங்க.. முதல்ல தொப்பைதான் விழும். அப்புறம்தான் மத்த பாகங்கள்ல சதை வைக்கும். அதேசமயம்.. எடையைக் குறைக்க முயற்சி செஞ்சோம்னா.. உடம்புல மத்த பாகங்கள்ல சேர்ந்த கொழுப்புதான் முதல்ல குறையும்.. தொப்பை கடைசியாத்தான் குறையும்”

ஆக.. முதன் முதலில் உள்ளேறும் தொப்பை கட்டக்கடைசியாகத்தான் வெளியேறும்!

தொப்பை போலத்தானே நமக்குள் வந்து தொலைக்கும் பொய் - பொறாமை – பொறுமையின்மை – பகை – கோபம் – காழ்ப்புணர்ச்சி – சுயநலம் – அடுத்துக்கெடுத்தல் போன்ற பலவகையான குணங்களும்! எளிதாக வந்து ஒட்டிக்கொள்ளும், அவ்வளவு சாமானியமாக வெளியேறாது.

’எந்திரன்’ படத்து ‘ரெட் சிப்’ தத்துவம்தான்! உள்ளே வரும்போதே ’கபர்தார்’ சொல்லிக்கொண்டு தடுத்து நிறுத்தி, ரவுண்டு கட்டி விரட்டிவிடவேண்டும்!.


11 comments:

rachinnathurai said...

வாழ்வின் இரண்டாம் பாதியில் அழகான் விழயங்களில் ஒன்று தொப்பை .எனில்.அதை ஒழிக்க இவ்வளவு முயற்சி தேவையில்லை.அதிகாலையில் எழுந்து சுகமான் நடைபோடுங்கள் த்தொப்பை போயி போயிந்தி. இல்லாவிட்டால் சரியான சித்த மருத்துவரிடம் செல்லுங்கள்,தொப்பைக்கு டாடா போடுங்க.

முரளிகண்ணன் said...

:-))))

Anonymous said...

sir ungalukku onnum avlavu thoppai illai namma ponnamaravathi sathishsa vidava - G.Rajeshnarayan

G Gowtham said...

சின்னத்துரை..
எப்படி இருக்கிறாய்?

முரளிகண்ணன்..
:-)))))

ராஜேஷ்நாராயணன்..
ஹாஹாஹா..
நன்றி!

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

a said...

நல்ல அனுபவ பாடங்கள்.........

அஹ‌ம‌து இர்ஷாத் said...

:-))

யுவகிருஷ்ணா said...

//sir ungalukku onnum avlavu thoppai illai namma ponnamaravathi sathishsa vidava//

பொன்னமராவதி சதிஷின் தொப்பை ஒரு 50 கே.ஜி. அதிசயம்.

அவரே இந்த மேட்டரைப் பத்தி கவலைப்படாதபோது, தொப்பைன்னு கூட சொல்லமுடியாத - வேணும்னா லேசான தொந்தின்னு சொல்லலாம் - கவுதம் சார் கவலைப்படுறது கொஞ்சமில்லை. ரொம்பவே ஓவர்! :-)

யுவகிருஷ்ணா said...

//sir ungalukku onnum avlavu thoppai illai namma ponnamaravathi sathishsa vidava//

பொன்னமராவதி சதிஷின் தொப்பை ஒரு 50 கே.ஜி. அதிசயம்.

அவரே இந்த மேட்டரைப் பத்தி கவலைப்படாதபோது, தொப்பைன்னு கூட சொல்லமுடியாத - வேணும்னா லேசான தொந்தின்னு சொல்லலாம் - கவுதம் சார் கவலைப்படுறது கொஞ்சமில்லை. ரொம்பவே ஓவர்! :-)

era.thangapandian said...

நல்ல பதிவுகள்.. முன்னமே படித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும்போது சுகமாக இருக்கிறது

சமுத்ரா said...

:)