Monday, October 18, 2010

மதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன?







மதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அப்படியே இங்கே பதிவு செய்யப்படுகிறது! எனது உள்நோக்கம் எதுவுமில்லீங்கோ!! அப்படியே கட் அண்ட் பேஸ்ட்!!!


தேதி : 18.10.2010

அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகச் செய்தி


""முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கத் திராணியில்லாத; அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ் நாட்டை ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாற்றிய; மின்வெட்டை அறிமுகப்படுத்தி தமிழ் நாட்டை இருளில் மூழ்கடித்த; 
மணல் கொள்ளை மூலம் தமிழ் நாட்டை பாலைவனமாக்கிய; கிரானைட் கொள்ளை மூலம் நாட்டின் வளத்தை சுரண்டிக் கொண்டிருக்கிற; மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய; விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத 
மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து"" அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் 
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை!

""முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கத் திராணியில்லாத; அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ் நாட்டை ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாற்றிய; மின்வெட்டை அறிமுகப்படுத்தி தமிழ் நாட்டை இருளில் மூழ்கடித்த; 
மணல் கொள்ளை மூலம் தமிழ் நாட்டை பாலைவனமாக்கிய; கிரானைட் கொள்ளை மூலம் நாட்டின் வளத்தை சுரண்டிக் கொண்டிருக்கிற; மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய; விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து"", அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இன்று பிற்பகல் (18.10.2010 - திங்கட் கிழமை), மதுரையில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்கள்.  அங்கு அவருக்கு தலைமைக் கழக நிர்வாகிகளும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் மகத்தான வரவேற்பை வழங்கினர்.  

கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மதுரை விமான நிலையத்தில் இருந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்திற்குச் செல்லும் வழியெங்கும், அம்மா அவர்களை வரவேற்கும் விதமாக, சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வாழை மரங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

எங்கு நோக்கினும் லட்சக்கணக்கில் அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் கடலில் நீந்தியபடி கண்டன ஆர்ப்பாட்ட மேடையை வந்தடைந்த கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு 
புரட்சித் தலைவி அம்மா அவர்களை, தலைமைக் கழக நிர்வாகிகளும், 
கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு வரவேற்றனர்.  

கண்டன ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக, கழகப் பொருளாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  

அதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரி, மன்னர் கல்லூரி, எஸ்.என். கல்லூரி, வக்ப் போர்டு கல்லூரி, பி.டி.ஆர். கல்லூரி மற்றும் அருளானந்தம் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 1,778 மாணவ, மாணவியர்களும்,

அதே போல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி, பெருந்துறை IRT மருத்துவக் கல்லூரி, JKK முனிராஜா பொறியயல் கல்லூரி, PKR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, MIT பாலிடெக்னிக் கல்லூரி, ஐஸ்வர்யா B.Ed., கல்லூரி உட்பட 32 கல்லூரிகளைச் சேர்ந்த 1,076 மாணவ, மாணவியர்களும், ஆக மொத்தம் 2854 பேர் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் திரு. வி.பி. கலைராஜன், எம்.எல்.ஏ., அவர்கள் செய்திருந்தார்.

அடுத்தாக, கழக அமைப்புச் செயலாளர் திரு. சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.பி. சண்முகநாதன், கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K.T. பச்சைமால், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. செல்லூர் கே. ராஜூ  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

அடுத்ததாக, மைனாரிட்டி திமுக அரசின் பல்வேறு முறைகேடுகளை மக்கள் மன்றத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அலைகடலெனத் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே, கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உரையாற்றும் போது,  
என் அன்பார்ந்த தமிழக மக்களே! 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளே!
வரவேற்புரை ஆற்றிய கழகப் பொருளாளர் அன்புச் சகோதரர் திரு. ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அவர்களே!

சிறப்புரை ஆற்றிய கழக அமைப்புச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ., அவர்களே! திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் 
திரு. நத்தம் இரா. விசுவநாதன், எம்.எல்.ஏ., அவர்களே! தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. S.P. சண்முகநாதன் அவர்களே! கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. KT. பச்சைமால் அவர்களே! மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. செல்லூர் கே. ராஜூ அவர்களே!

நன்றியுரை ஆற்ற உள்ள மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் 
அன்புச் சகோதரர் திரு. எம். ஜெயராமன் அவர்களே!

மாவட்டக் கழகச் செயலாளர்களே! நிர்வாகிகளே!

ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்களே, நிர்வாகிகளே! கிளை, வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்களே, நிர்வாகிகளே! கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளே! கழக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களே! உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!

வணக்கத்திற்குரிய பெரியோர்களே!

என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே!

இதய தெய்வம் புரட்சித் தலைவர் MGR-ன் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் பாசறை மற்றும் 
இளம் பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக உள்ள இளம் சிங்கங்களே! இளம் வீராங்கனைகளே!

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, வெள்ளமென 
இங்கே திரண்டிருக்கும் தமிழக மக்களே!

வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

தெற்கு தமிழகத்தின் நுழைவு வாயிலாக கோயில் மாநகரமாம் மதுரை விளங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் புகழ் பெற்ற தமிழ்ச்சங்கம் தோன்றியது இங்கு தான்.  மதுரை ராஜ கோபுரம் கட்டப்படுவதற்கும், புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மகால் உருவாவதற்கும், காரணமாக இருந்த பெருமைக்குரிய திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்த இடம் மதுரை.  சிலப்பதிகாரம் காவியத்தின் மையமாக விளங்கிய மதுரை நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதில் சிறந்து விளங்கியது.  தன்னுடைய கணவர் கோவலனுக்கு பாண்டிய மன்னர் தெரியாமல் அநீதியை இழைத்ததன் காரணமாக கோபமுற்று தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரை கண்ணகி எரித்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழ் அறிஞர் நக்கீரன் பிறந்த ஊர் மதுரை.  இன்றளவும் பெண்களின் வீரத்திற்கு அடையாளமாக போற்றப்படும் வரலாற்று வீர மங்கை ராணி மங்கம்மாள் ஆட்சி புரிந்த இடம் மதுரை.  இப்படிப்பட்ட பெருமை மிக்கவர்களின் குணங்கள் தான் மதுரை மாநகர மக்களின் ரத்தத்தில் குடி கொண்டிருக்கின்றன. உங்கள் மூதாதையர்களின் குண நலன்களைக் கொண்டுள்ள நீங்கள் அனைவரும் அநீதி, நேர்மையின்மை, கெடுதல், ஒழுக்கமின்மை, சுயநலம் ஆகியவற்றை எப்பொழுதும் எதிர்ப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு ஒரு மெல்லிய நீரோடையாக ஊருக்கே உழைக்க வேண்டும் என்கிற ஊழியச் சிந்தனையோடு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும்; அவருக்குப் பின் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவும்; மூதறிஞர் ராஜாஜியும்; பெருந்தலைவர் காமராஜரும்; பெரியவர் பக்தவத்சலமும்; அவருக்குப் பின் பேரறிஞர் அண்ணாவும்; அதன் பின் பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும்; அதற்குப் பின் நானும் தமிழகத்தை ஆண்ட போது, இந்தத் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் பின்னோக்கிப் பாருங்கள்.  இதை விளக்குவதற்கு ஒரு கதையை இங்கே நான் சொல்ல ஆசைப்படுகிறேன். 

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர்.   அந்த கிராமத்திற்கு யார் செல்ல வேண்டுமானாலும் அல்லது அந்த ஊர் மக்கள் மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் பரிசல் மூலம் தான் பயணம் செய்ய முடியும்.  தினமும் காலையில் ஒரு பரிசல்காரன் அந்த கிராமத்தில் இருந்து பரிசல் ஓட்டி தன் பரிசலிலே ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு அக்கரைக்கு போவான்.  அது போல இருட்டுவதற்கு முன்பு மாலை 6 மணி அளவில் அதே பரிசல் ஓட்டி அக்கரையில் இருந்து அந்தக் கிராமத்திற்கு பரிசலை செலுத்துவான். அப்படித் தான் ஒரு நாள் பரிசலோட்டி பரிசலை கொண்டு வந்து நிறுத்தி ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு இருந்தான்.  அந்தக் கிராமத்தில் இருந்து வெளியூருக்குச் சென்று விளக்குமாறு விற்கும் பெண் ஒருத்தி தான் விற்றது போக மிச்சம் உள்ள விளக்குமாறு கற்றைகளை கையில் பிடித்துக் கொண்டு 
பரிசலில் ஏறி அமர்ந்தாள்.  அவள் அருகே குரங்கு வித்தை காட்டும் ஒருவன் குரங்கோடு பரிசலில் ஏறி அமர்ந்தான்.   அது போலவே பாம்பாட்டி ஒருவனும் கூடை நிறைய பாம்புகளை வைத்துக் கொண்டு பரிசலில் ஏறி உட்கார்ந்தான்.  இது போல அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பரிசலில்  அமர்ந்துவிட்டார்கள்.   பரிசல் புறப்பட தயாரானது.  அப்போது ஒருவன் 
ஓடி வந்து பரிசலிலே ஏற முயற்சித்தான்.  ஆனால் பரிசல்காரன் அவனை ஏற்ற மறுத்து """"ஒழுங்காக போய்விடு.  உன்னை ஏற்ற முடியாது"" என்று மறுத்தான்.  அவனோ, """"நானும் ஏறிக்கொள்வேன்"" என்று அடம் பிடித்தான்.  பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் பரிசல் ஓட்டியிடம் """"அவனும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் தானே? உனக்குரிய கூலியைத்தான் தருகிறானே? அவனை ஏற்றிக் கொண்டால் என்ன?"" என்று கேட்டார்கள். உடனே பரிசல்காரன் சொன்னான் """"அய்யோ, உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது.  கொடூர புத்தியும் எந்நேரமும் பிறருக்கு தீங்கு செய்யக்கூடிய விஷமச் சிந்தனையும் கொண்ட மோசமான தீயசக்தி அவன்.  பரிசல் இங்கிருந்து ஊர் போய்ச் சேருவதற்குள் எதையாவது செய்து நமக்கு ஆபத்தை விளைவித்துவிடுவான்.  நீங்கள் அவனுக்கு ஆதரவாக பேசாதீர்கள்"" என்று மன்றாடினான்.
  
ஆனால், அந்தப் பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் """"உனக்கு அந்த பயம் வேண்டாம்.  நாங்கள் வேண்டுமானால் அவனது கையையும் காலையும் கட்டி பரிசலிலே போட்டு விடுகிறோம்.  அவனால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது.  நமது பயணத்திற்கும் ஆபத்து வராது"" என்று பரிசல் ஓட்டியிடம் ஆலோசனை சொன்னார்கள்.  அப்போது பரிசல் ஓட்டி """"அய்யோ! இவன் மிக மோசமானவன்.  கை, கால்களை கட்டிப் போட்டாலும் அவனால் கெட்டது செய்யாமல் இருக்க முடியாது"" என்று முடிந்தவரை மறுத்தான். 
ஆனால், ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் ஒருவனை மட்டும் விட்டுவிட்டுப் போவதில் நியாயமில்லை என்று பரிசல்காரனை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு அந்த நபருடைய கைகளையும், கால்களையும் கட்டி அவனைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு பரிசலை நகர்த்தச் சொன்னார்கள். பரிசல்காரன் அரைகுறை மனதோடு பரிசலை ஓட்டத் தொடங்கினான்.  ஏறத்தாழ இரண்டு மைல் அளவுக்கு பரிசல் கடந்து நடு ஆற்றைத் தொட்டது. இன்னும் 
பாதி அளவு பயணத்தை கடக்க வேண்டும். மேகம் திரண்டு கொண்டு வந்தது.  காற்றும், மழையும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.  இந்தத் தருணத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அந்தத் தீயசக்தி.  விளக்குமாறு கற்றைகளை பக்கத்தில் வைத்த வண்ணம் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த பெண்ணிடமிருந்து ஒரு விளக்குமாறு குச்சியை தனது வாயாலே கடித்து உருவினான்.  வாயில் வைத்திருந்த குச்சியை வைத்து குரங்காட்டியின் மடியில் உட்கார்ந்திருந்த குரங்கின் கண்ணிலே கொண்டு போய் குத்தினான்.  குரங்கு மிரண்டு பாம்பாட்டி அடுக்கி வைத்திருந்த பாம்புக் கூடையின் மீது விழுந்தது.  உடனே பாம்புக் கூடை சரிந்து உள்ளிருந்த பாம்புகள் அனைத்தும் பரிசலுக்குள்ளே விழுந்து ஓட பரிசலில் பயணம் செய்த அனைவரும் ""அய்யோ!, அம்மா!"" என்று அலறி 
ஒரு புறமாய் ஒதுங்க பரிசல் கவிழ்ந்தது.  தீயசக்திக்கு பரிதாபம் காட்டியவர்கள் நீரினுள் மூழ்கிப் போனார்கள்.
  
பரிசலில் புகுந்த அந்த தீயசக்தி போல அமைதியான தமிழ்நாட்டு அரசியலில் புகுந்தவர் தான் திருக்குவளை தீயசக்தி என்னும் கருணாநிதி.  பரிசல் ஓட்டி எப்படி அந்தத் 
தீய சக்தியை பரிசலில் ஏற வேண்டாம் என்று தடுத்தானோ; அது போலவே கருணாநிதியின் 
தீய குணங்களை அறிந்த காரணத்தால் தான் பேரறிஞர் அண்ணா கூட """"தம்பி வா, தலைமையேற்க வா"" என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைப் பார்த்துத் தான் அழைத்தாரே தவிர கருணாநிதியை அப்படி அழைக்கவில்லை.
  
""நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்"" என்று அண்ணா அவர்கள் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை ஜாடையாக அடையாளம் காட்டினாரே தவிர கருணாநிதியை அப்படி அடையாளம் காட்டவில்லை.  ஆனால், தமிழக மக்களின் பொல்லாத காலம் தமிழக அரசியலின் போதாத நேரம் கருணாநிதி என்னும் தீயசக்தியின் தந்திரங்கள் வென்றன.  அதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

மதுரை என்றாலே, ஒரு காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தான் நம் நினைவிற்கு வரும்.  அழகர் ஆற்றில் இறங்கும் அழகிய சித்திரைத் திருவிழா நம் நினைவிற்கு வரும்.  சமத்துவத்திற்கு சான்று சொல்லும் கோரிப்பாளையம் பள்ளி வாசலும் அறிவு வளர்க்கும் அமெரிக்கன் கல்லூரியும், திருமலை நாயக்கர் மகாலும் நம் மனக்கண் முன்னே காட்சி அளிக்கும்.  இன்று மதுரை என்றவுடன் இந்த புகழ் பெற்ற நினைவுகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மக்கள் முன் நிற்பது எல்லாம் வன்முறை, ரவுடிகளின் அராஜகம், கட்டப் பஞ்சாயத்து, கோரப் படுகொலைகள் போன்றவை தான்.  இன்று மதுரை என்று பேச ஆரம்பித்த உடனே மு.க. அழகிரியின் அராஜகங்களை நினைத்து தான் மக்கள் பயப்படுகின்றனர்.  
ஒரு காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியே மதுரை மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் யாத்ரிகர்களும், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களுடன் கூடிப் பழகுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் காரணமாக மதுரை """"தூங்கா நகரம்"" என்று அழைக்கப்பட்டது. இன்று இங்குள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது மதுரை 
""""தூங்க முடியாத நகரம்"" ஆகிவிட்டது.

சாதாரண இட்லி கடை வைத்திருப்பவர் முதல் நகைக் கடை அதிபர் வரை ஒவ்வொருவரும் """"அழகிரி அரசுக்கு"" கப்பம் கட்ட வேண்டும்.  ஒவ்வொரு  அரசு அதிகாரியும் அழகிரிக்கு அடி பணிந்து நடக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மதுரையை விட்டு மாற்றப்படுவார்கள்.  கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் மதுரையில் 
11  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அழகிரிக்கு அடிமையாக இருக்க மறுத்ததன் காரணமாக பல காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.  இந்த மாறுதல்களை எல்லாம் அழகிரி சார்பில் அவரது உதவியாளர் """"பொட்டு"" சுரேஷ் தான் கவனிக்கிறார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் தற்போது இரண்டு அரசுகள் இருக்கின்றன.  கருணாநிதியை முதலமைச்சராகவும், அவருடைய மகன் மு.க. ஸ்டாலினை 
துணை முதலமைச்சராகவும் கொண்டு சென்னையில் ஓர் அரசு செயல்படுகிறது. 
மு.க. அழகிரியை தலைவராகக் கொண்டு வேறு ஓர் அரசு மதுரையிலிருந்து செயல்படுகிறது. 

தென் தமிழகத்தின் முதலமைச்சர் அழகிரி என்றால், """"பொட்டு"" சுரேஷ் துணை முதலமைச்சர். """"அட்டாக்"" பாண்டி, """"சொறி"" முருகன், """"ஹவுசிங் போர்டு கமிஷன்"" எஸ்.ஆர். பாபு, """"ஆட்டோ"" ரவி, உருளி, """"தாய் மூகாம்பிகை"" சேதுராமன், """"ஓச்சு"" பாலு, """"காட்டுவாசி"" முருகன், """"டிரைவர்"" ராஜேந்திரன், """"பாம்பு"" முருகன் போன்றவர்கள் எல்லாம் இங்கே அமைச்சர்கள்.  மதுரை தற்போது """"அழகிரி நாடு"" என்றும்; ஏதாவது காரணத்திற்காக ஸ்டாலின் மதுரை வர வேண்டும் என்றால், அண்ணன் அழகிரியிடம் விசா வாங்கிக் கொண்டு தான் வர வேண்டும் என்றும், இவர்களில் ஒருவர் வெளிப்படையாகவே தெரிவிக்கிறார்.  

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இது போன்ற குற்றச்சாட்டுகளை நான் சுமத்தவில்லை.  இந்த நாட்டு நலனில் அக்கறையுள்ள குடிமகள் என்ற முறையில் இந்தக் குற்றச்சாட்டுகளை நான் சுமத்துகிறேன்.  மிகுந்த மன வேதனையுடன் உங்களில் ஒருத்தியாகத் தான் இதைச் சொல்கிறேன்.

லீலாவதி கொலை வழக்கை நான் தற்போது உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் உண்மையான செயல் வீராங்கனை லீலாவதி. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிகளுக்காக போராடியவர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து திமுக-வைச் சேர்ந்த வள்ளி என்பவரை தோற்கடித்து மதுரை மாநகராட்சி உறுப்பினரானார் லீலாவதி.  தண்ணீர் கொள்ளையர்களுடன் போராடி வில்லாபுரம் மக்களுக்கு குழாய் மூலம் நீர் கிடைக்கக்கூடிய வசதியை செய்து தர முயற்சி செய்தார். இதற்கு பிரதிபலனாக அவருக்கு கிடைத்தது என்ன?  23 ஏப்ரல் 1997 அன்று மதுரையில் உள்ள வில்லாபுரம் பஜாரில் பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம் வள்ளியின் கணவர், வள்ளியின் சகோதரர் மற்றும் நான்கு தி.மு.க. பிரமுகர்கள் தான் லீலாவதி கொலைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.  இவர்கள் எல்லாம் சிறையில் இருக்க வேண்டியவர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் மதுரை உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன. சிறைக்குள் உள்ளவர்களை தேர்தல் வன்முறையில் ஈடுபட்டதாக எப்படி ஊடகங்கள் படம் எடுக்க முடியும்? உள்ளாட்சித் தேர்தலில் திமுக-விற்கு வேலை பார்ப்பதற்காக இந்த ரவுடிகள் அனைவரும் பரோலில் விடுவிக்கப்பட்டதாக சிறைத் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.  தற்போது இந்த 6 ரவுடிகளில் ஒருவர் இறந்துவிட்டார்.  மூன்று பேர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். கொலைக்காரர்களுடனும், கொடுங்கோலர்களுடனும் இது போன்ற தொடர்பு உடையவர்கள் தான் கருணாநிதி குடும்பத்தினர்.

அடுத்தபடியாக, தா. கிருட்டிணனை உங்களுக்கு எல்லாம் இந்தத் தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன். அனைவராலும் மதிக்கப்படக்கூடிய மென்மையான தி.மு.க. தலைவர் தா. கிருட்டிணன்.  நாடாளுமன்ற உறுப்பினராக பல ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார்.  1998 முதல் 2001 வரை மாநில அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார்.  20 மே 2003 அன்று காலை தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் முன்னாலேயே தி.மு.க. ரவுடிகளால் கத்தியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார் 

தா. கிருட்டிணன்.  அந்த சமயத்தில் அவரது மனைவி பத்மாவதி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தா. கிருட்டிணனுக்கு உள்ள ஒரே விரோதி அழகிரி தான் என்று கூறினார்.  
காவல் துறை இந்த வழக்கை விசாரித்தது. இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரும் எனது ஆட்சியில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்ற அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த சதித் திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு அழகிரி மீது சுமத்தப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அழகிரி துன்புறுத்தப்படுகிறார் என்று எனது அரசின் மீது அப்போது குற்றம் சுமத்தினார்  கருணாநிதி.  மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கண்ணால் பார்த்த சாட்சிகள் மற்றும் தா. கிருட்டிணனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைத்து சாட்சிகளும் மிரட்டப்பட்டு வேறு வழியின்றி பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். 
இந்தக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான எஸ்.ஆர். கோபி, அழகிரியின் வலது கரமாக தற்போது செயல்படுகிறார். லீலாவதி கொலை வழக்கின் குற்றவாளியான இவருடைய சகோதரர் மருது அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மைனாரிட்டி தி.மு.க. அரசால் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல்கிறேன் கேளுங்கள்.

1. மு.க. அழகிரி, மத்திய அமைச்சர்
2. பி.எம். மன்னன், துணை மேயர், மதுரை மாநகராட்சி
3. எஸ்.ஆர். கோபி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர்
4. கராத்தே சிவா, துணைத் தலைவர், ஆனையூர் நகராட்சி
5. ஈஸ்வரன், அவனியாபுரம் நகர மன்ற உறுப்பினர்
6. அட்டாக் பாண்டி, தலைவர், வேளாண் விற்பனை சங்கம்
7. கார்த்திகேயன், செயலாளர், திருப்பரங்குன்றம் ஒன்றியம், தி.மு.க.
8. முபாரக் மந்திரி, மதுரை 7-வது கோட்ட, தி.மு.க. செயலாளர்
9. இப்ராஹிம் சேட், அவனியாபுரம், தி.மு.க. நகரச் செயலாளர்
10. மணி, மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்
11. சீனிவாசன், மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்
12. ராஜா, மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்
13. பாலகுரு, மரியாதைக்குரிய தி.மு.க. உறுப்பினர்

இவர்களுடைய விடுதலையை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு எதையும் செய்யவில்லை.  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் அழகிரியை கைது செய்ய உத்தரவிட்டேன் என்றால், தா. கிருட்டிணனை கொலை செய்தது யார்? சாகும் வரை தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தா. கிருட்டிணன் இறந்துவிட்டார் என்று கருணாநிதி கூறுகிறாரா? தன்னுடைய நண்பர்களுடன் காலையில் நடப்பதற்காக சென்ற போது தா.கி. தற்கொலை செய்து கொண்டாரா? என பல கேள்விகள் எழுகின்றன.  இந்த கேள்விகளுக்கு எல்லாம் கருணாநிதியிடம் பதில்கள் இல்லை.

2007-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் நாளை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.  இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தயாநிதி மாறன் மற்றும் ஸ்டாலினை ஒப்பிடும் போது, அழகிரிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்ற அளவில் ஓர் ஆய்வறிக்கை கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் விளைவாக, 9 மே 2007 அன்று மதுரையில் உள்ள அந்தப் பத்திரிகை அலுவலகம் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது. அலுவலகக் கட்டடம் பெட்ரோல் குண்டுகள் வீசி எரிக்கப்பட்டது.  மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அந்தக் கட்டடத்தை சுற்றி இருந்தவர்களும், அந்த வழியாக சென்றவர்களும், அங்கு நடந்த கோரக் காட்சிகளைப் பார்த்தார்கள். தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் பட்டப் பகலில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.  நீங்கள் எல்லாம் இந்தக் கோரக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.  தாக்குதலை நடத்தியவர்களின் அடையாளம் தெளிவாக தெரிந்தது.  ஆனால், நடவடிக்கை எடுக்க காவல் துறை தயக்கம் காட்டியது.  இந்தத் தாக்குதலை அனைத்து ஊடகங்களும் கண்டித்தன.  இறந்து போன ஊழியர்களின் இல்லங்களுக்கு நாளிதழின் உரிமையாளர் கலாநிதி மாறன் சென்றார்.  இந்தத் தாக்குதலுக்கு அழகிரி தான் காரணம் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் """"நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்"" என்று கதறி அழுது கொண்டிருந்த உறவினர்களிடம் உறுதி அளித்தார் கலாநிதி மாறன்.
  
இந்த பத்திரிகை எரிப்புச் சம்பவம் குறித்து 2007 ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய கருணாநிதி """"அந்த நாளிதழும் ஏ.சி. நீல்சன் வழங்கும் மெகா சர்வே என்ற செய்தி அந்தப் பத்திரிகையிலே விளம்பரமாக வெளிவந்தவுடன் அதைப் பார்த்த நான் ‘தற்போது இதற்கு என்ன அவசியம் வந்தது?"" என்றும்; 
‘அது தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பும்’ என்றும்; எனவே அதனை வெளியிட வேண்டாம்’ என்றும்; அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்கு சொல்லி அனுப்பினேன்.  தொலைபேசியிலும் சொன்னேன்..."", என்று கருணாநிதி பேசியிருக்கிறார்.

அதாவது அழகிரியின் ஆட்கள் தான் இதை செய்து இருக்கின்றனர் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.  இருப்பினும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது.  இறுதியாக காவல் துறை நடவடிக்கை எடுத்தது.  அழகிரியின் நெருங்கிய கூட்டாளியான """"அட்டாக்"" பாண்டி மற்றும் சிலரை  காவல் துறை கைது செய்தது.  பின்னர் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை எடுத்துக் கொண்டது.  16 நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 86 சாட்சிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. ஆனால், இந்த சமயத்தில் திடீரென்று கருணாநிதியின் இதயம் இனித்தது.  கண்கள் பனித்தன.  சண்டையிட்டுக் கொண்ட, கருணாநிதி மற்றும் மாறன் குடும்பங்கள் இணைந்தன.

இதன் பின்னர் கருணாநிதியின் நாடகம் அரங்கேற்றப்பட்டது. கலாநிதி மாறன் உட்பட அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையினால் நிரூபிக்க முடியவில்லை.  எனவே அந்தப் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் பதவியை இழந்த தயாநிதி மாறனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது! மூன்று அப்பாவி ஊழியர்கள் உயிரிழக்க காரணமான அழகிரிக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது! இறந்த மூன்று நபர்களும் அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்கு தாங்களாகவே தீ வைத்து தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டனர்! அதாவது நடந்தது தற்கொலை!! இது கருணாநிதி அளித்த தீர்ப்பு!!!  கருணாநிதி போன்ற ஒரு நீதிமானை நீங்கள் உலகத்தில் வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது. என்ன கேலிக்கூத்து! என்ன ஜனநாயகம்! 

இது போன்ற கேளிக்கைகள் தொடர வேண்டுமா என்பதை வாக்களிக்கும் அதிகாரம் படைத்த மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.  இது தொடர்ந்தால் இன்னும் பல உயிர்கள் பலியாகக் கூடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  
உங்களுடைய சகோதரர் மதுரை மண்ணின் மைந்தர் பசும்பொன் பாண்டியன் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தற்போது முக்கியமான பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  இதன் ஒளிபரப்பை ரத்து செய்ய வலியுறுத்தி ஜெயா டி.வி.க்கு உடனடியாக தந்திகள் அனுப்பப்பட்டன.  இந்த மிரட்டலுக்கு ஜெயா டி.வி. பணியவில்லை. உடனே """"தா. கிருட்டிணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டால் அஞ்சா நெஞ்சனின் படை ஜெயா டி.வி. அலுவலகத்தை அழித்துவிடும்"", என்ற அளவில் மிரட்டல் கடிதங்கள் ஜெயா டி.வி. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றவுடன் அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்? மடியில் கனம் இருந்தால் தானே மனதில் பயம் வரும்?

என்னையும், ""மதுரைக்கு வராதே! வந்தால் கொடூரமாகக் கொல்லப்படுவாய்!"" என்று எச்சரித்து பல கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஏனெனில் மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்!  இதைக் கண்டு நானோ ஜெயா டி.வி.யோ அஞ்சவில்லை.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? இதற்கு நான் அஞ்சவில்லை.  அதனால் தான்  இன்று நான் உங்கள் முன் இதோ நிற்கிறேன். எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டத்தை ஜெயா டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. இந்த மிரட்டல்களில் இருந்து யாரோ ஒருவர் நம்மைக் கண்டு அஞ்சுகிறார் என்பது தெளிவாகிறது.

இப்படிப்பட்ட ஒரு நபருக்கு """"அஞ்சா நெஞ்சன்"" என்று ஒரு பட்டப் பெயர் வேறு! 2006-ஆம் ஆண்டுக்கு முன்பு இவர் எங்கிருந்தார்? தந்தை முதலமைச்சர்.  தந்தையின் செல்வாக்கினால் கொலை வழக்கிலிருந்து தப்பிவிட்டார். கோரப் படுகொலை செய்ததற்கு பரிசாக மத்திய அமைச்சர் பதவி!  இந்த செல்வாக்கினால் நாட்டின் வளத்தையும் மக்களின் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு மக்களை மிரட்டிக் கொண்டிருப்பவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டமா? யார் கொடுத்தது இந்தப் பட்டம்? இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார்கள் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்! இவர் எங்களைப் பார்த்து மிரட்டுகிறார்.

இவருடைய மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயந்தவள் அல்ல.  நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.  என்னை அரசியலில் இருந்து விரட்டி அடிப்பதற்காக எவ்வளவோ பொய் வழக்குகள் கருணாநிதியால் என் மீது போடப்பட்டன. என்னை கொலை செய்வதற்கான முயற்சிகளும் ஏற்கனவே நடந்தன.  அதைப் பற்றி எல்லாம் நான் என்றைக்குமே கவலைப்பட்டதில்லை.
  
கொலை மிரட்டல்களுக்கு என்றைக்குமே நான் கவலைப்படாதவள்.  இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கூட்டத்திற்கு எனது அருமை கழக உடன்பிறப்புகள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு தற்போது உங்கள் முன் உரையாற்றிக்கொண்டு இருக்கிறேன்.  யார் அஞ்சுகிறார்கள்? யார் அஞ்சவில்லை? என்பது உங்களுக்கே இன்று தெரிந்துவிட்டது.  உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பதை இன்று நிரூபித்துவிட்டேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் என்றைக்குமே அஞ்சாத சிங்கங்கள்! அழகிரியோ அஞ்சும் கோழை! ஒருவருக்கு ஒரு முறை தான் மரணம் ஏற்படும்.  அந்த மரணம் எனதருமை மக்களாகிய உங்கள் முன் ஏற்பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சியே என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த நேரத்தில் ஒன்றை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  கோவையில் அண்மையில் ஜூலை மாதத்தில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கழகத்தின் சார்பில் நடைபெற்றது.  அதில் நான் தலைமை ஏற்றேன்.  அந்தக் கூட்டத்தைக் கண்டு எனக்கே வியப்பாக இருந்தது.  இதனால் கருணாநிதி ஆத்திரமடைந்தார்.  அந்தக் கூட்டத்திற்கே மக்களை வரவிடால் எத்தனையோ தடைகளை ஏற்படுத்தினார்கள்.  காவல் துறையை வைத்துக் கொண்டு கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் என்னுடைய கோவை கூட்டத்திற்கு வந்த வாகனங்களை எல்லாம் கோவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டார்கள்.  ஆனால் அந்த 10 கிலோ மீட்டர் தொலைவையும் கடந்து மக்கள் நடந்தே வந்தார்கள்.  மிக பிரம்மாண்டமான கூட்டம் அங்கே திரண்டது.

அதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சியில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.  அதில், அதைவிட மிகப் பெரிய கூட்டம் திரண்டது.  திருச்சிக்கு உள்ளே நுழைய 8 வாயில்கள் இருக்கின்றனவாம்.  ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் ஒரு போலீஸ் படையைப் போட்டு மக்களை நுழையவிடாமல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, கோவையில் 10 கிலோ மீட்டர் என்றால், திருச்சியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் வண்டிகளை எல்லாம் நிறுத்திவிட்டார்கள்.  அப்போதும் கழகத் தொண்டர்களும், மக்களும் அசரவில்லை.  அவர்கள் இறங்கி வந்து அந்த 15 கிலோ மீட்டர் தூரத்தையும் நடந்தே வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  ஆக, கருணாநிதியின் அடக்குமுறை முயற்சிகள் எல்லாம் தோல்வியைக் கண்டன.  திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தைப் பார்த்து அன்று நானே பேசினேன்.  எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நான் கண்டதில்லை என்று பேசினேன்.

ஆனால் இன்றைக்கு மதுரைக்கு வந்து இந்த கூட்டத்தை இங்கே பார்க்கும் போது, உண்மையாகவே எனது கழக உடன்பிறப்புகள் சொன்னது போல் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஒரு நிகழ்வு என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
  
இந்தக் கூட்டத்திற்கும் ஏகப்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டன.  உங்களுக்கே தெரியும்.  கொலை மிரட்டல்கள் எக்கச்சக்கமாக வந்தன.  நான் புறப்படும் வரை, நேற்று வரை கொலை மிரட்டல்கள் வந்த வண்ணமே இருந்தன. காவல் துறையில் எங்களுக்கும் தகவல் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.  அழகிரி ஒரு கணக்கு போட்டார்.  இத்தனை மிரட்டல் கடிதங்களை அனுப்பினால் இந்த அம்மா பயந்துவிடுவார்.  மதுரைக்கு வரமாட்டார்.  கூட்டம் ரத்தாகிவிடும் என்று அழகிரி கணக்கு போட்டாராம்.  ஆனால் அதன் பிறகு பார்த்தால், ரத்து செய்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.  நானோ பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் என்ன நடந்தாலும் சரி, திட்டமிட்டபடி மதுரை கூட்டம் நடந்தே தீரும்.  நானும் வந்தே தீருவேன் என்று கூறிவிட்டேன்.

இன்னும் கூட்டத்திற்கு மூன்று நாட்கள் இருக்கின்ற ஒரு தருணத்தில், அழகிரி காவல் துறை உயர் அதிகாரிகளை அழைத்து, உளவுத் துறை அதிகாரிகளை அழைத்து, இந்த அம்மா கூட்டத்திற்கு வராமல் ரத்து செய்வது போல் தெரியவில்லை.  அதனால் கூட்டத்தை அங்கே சேரவிடாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி, முதலில் கோவையில் 10 கிலோ மீட்டர், திருச்சியில் 15 கிலோ மீட்டர் என்றால், மதுரையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும்.  25 கிலோ மீட்டர் தூரத்தை மக்கள் எப்படி நடந்து கடக்க முடியும் என்று கணக்குபோட்டார்கள்.  பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.  அப்படி நிறுத்தவில்லை.  அதற்கு பதிலாக என்ன செய்திருக்கிறார்கள் என்றால், வந்த வாகனங்களை எல்லாம் உள்ளே விட்டு ஒவ்வொரு சாலையிலும், உங்களுக்கே தெரியும்.  மதுரைக்குள் நுழைய வேண்டும் என்றால் ஏராளமான சாலைகள் இருக்கின்றன.  அத்தனை சாலைகளிலும் வண்டிகளை குறுக்கே விட்டு போக்குவரத்தை வரைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, நெறிப்படுத்துவதற்குப் பதிலாக காவல் துறையினர் குறுக்க குறுக்க வண்டிகளை விட்டு மூன்று வரிசை, நான்கு வரிசை என்று வண்டிகளை, வாகனங்களை நிறுத்தச் செய்து நானே வர முடியாமல் தவித்தேன்.  இப்படி ஏராளமான வண்டிகள், அவர்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் ஆங்காங்கே மக்கள் சாலைகளில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுடைய வாகனங்கள் வரமுடியவில்லை.

இது தான் இன்றைக்கு கருணாநிதியின் காவல் துறை அழகிரியின் உத்தரவின் பேரில் செய்த சதி.  அதையும் மீறி இவ்வளவு கூட்டம் இங்கே திரண்டிருக்கிறது.  விமான நிலையத்தில் இருந்து இந்தக் கூட்டம் நடக்கின்ற இடம் வரை உள்ள தூரம் 15.7 கிலோ மீட்டர்.  சாதாரணமாக 15.7 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு வாகனத்தில் கடக்க வேண்டும் என்றால் 20 நிமிடங்கள் பிடிக்கும் அவ்வளவு தான்.  ஆனால் இன்றைக்கு நான் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 2.07க்குப் புறப்பட்டேன்.  இங்கே வந்து சேருவதற்கு இரண்டேகால் மணி நேரம் எனக்குப் பிடித்தது.  வழிநெடுகிலும் அவ்வளவு கூட்டம்.  லட்சக்கணக்கான மக்களை வழிநெடுகிலும் சந்தித்தேன்.  இரண்டேகால் மணி நேரம் கழித்து தான் இங்கே வர முடிந்தது.

இதையெல்லாம் எற்காகச் சொல்கிறேன் என்றால், அழகிரி போட்ட கணக்கை முறியடித்தவர்கள் மக்களாகிய நீங்கள்.  திரும்பத் திரும்ப இந்த மிரட்டல்களில் என்ன குறிப்பிட்டிருந்தார்கள்.  ஜெயலலிதா கொல்லப்படுவார்.  அதோடு அவருடைய கூட்டமும் குண்டு வைத்து கொல்லப்படும் என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்கள் அந்த மிரட்டல் கடிதங்களில்.  என்னை மட்டும் குறிப்பிடவில்லை. கூட்டத்தையும் குறிப்பிட்டார்கள் எதற்காக? அங்கே குண்டு வெடிக்கும், மக்கள் சாவார்கள் என்ற பீதியை கிளப்பிவிட்டால் தொண்டர்களும் வரமாட்டார்கள், பொதுமக்களும் வரமாட்டார்கள், கூட்டம் சேராது என்று கணக்கு போட்டார்கள்.  ஆனால் வீரம்மிக்க என்னுடைய கழக உடன்பிறப்புகளும், வீரம்மிக்க தென்பாண்டி சீமை மக்களும் கருணாநிதியின் கணக்கை, அழகிரியின் கணக்கை முறியடித்து இங்கே கடலென திரண்டிருக்கிறீர்கள்.

கழகத் தொண்டர்களுடைய வீரத்திற்கும், பொதுமக்களின் துணிச்சலுக்கும், உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஜெயலலிதா பேசுகின்ற கூட்டத்திற்கு நாங்கள் சென்றே தீருவோம் என்று தைரியமாக வந்த அனைவருக்கும், அனைத்து மக்களுக்கும் என்னுடைய பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
         
தற்போது வழிப்பறிச் சம்பவங்கள் மதுரையை சுற்றி நடக்கின்றன. ஜூன் 
3-ஆம் தேதி மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள்.  பிறந்த நாள் முடிந்து ஒரு மாதம் கழித்து தந்தையின் பிறந்த நாளை கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆண்டிபட்டியில் கொண்டாடப் போவதாக அறிவித்தார், அழகிரி.  அன்று அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அழகிரி ஹார்லிக்ஸ் வழங்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் அளிக்கப்படும்; இனிப்புகள் வழங்கப்படும்; ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்; வேட்டி-சேலை வழங்கப்படும்; மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்; புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் முறையாக ஹார்லிக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அப்பொழுது தான் நான் கேள்விப்பட்டேன்.  மிகவும் விசித்திரமாக இருந்தது! அதே போன்று கடந்த ஜூலை 18-ஆம் தேதி 200 கிராம் எடை கொண்ட 8,700 ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் ஆண்டிப்பட்டியில் வழங்கப்பட்டன.  ஜூலை 20-ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் இதே 200 கிராம் எடை கொண்ட ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் காணாமல் போனது குறித்து ஒரு வழக்கு வந்தது.   காவல் துறையினர் புகார் வாங்கவே மறுக்கிறார்கள் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இதன் பிறகு தான் அதற்கு முன்பு ஜூலை 12-ஆம் தேதி ஹார்லிக்ஸ் கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கசிய ஆரம்பித்தது.  இந்த வழிப்பறி கொள்ளையில் அழகிரியைச் சார்ந்த கும்பலின் கைவரிசை இருந்ததால் தான் இந்த வழக்கை பதிவு செய்ய உள்ளூர் காவல் துறை மறுத்துவிட்டது என்று பலரும் சொல்கிறார்கள்.

எனதருமை சகோதர சகோதரிகளே! இதில் உள்ள ஒற்றுமைகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.  லாரியில் உள்ள ஹார்லிக்ஸ் காணாமல் போனது கடந்த ஜூலை 12 ஆம் தேதி.  ஆண்டிபட்டியில் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது ஜூலை 18 ஆம் தேதி.  ஆண்டிபட்டியில் உள்ள மக்கள் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம்.  ஏன் அங்குள்ள அனைவருக்கும் ஹார்லிக்ஸ் கொடுக்கவில்லை? ஏன் 8,700 ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் மட்டும் வழங்கப்பட்டன? ஏனென்றால் கொள்ளையடிக்கப்பட்டது, அவ்வளவு தான். கொடுத்தது போக 
மிச்சம் மீதி இருந்ததை அழகிரியின் அடியாட்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்காக எடுத்துக்  கொண்டுவிட்டனர்.  இது தான் நடந்த உண்மை.  ஆனால், அழகிரியோ தான் ஹார்லிக்ஸ் வாங்கியதற்கு பில்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். ஹார்லிக்ஸை எங்கு வாங்கி இருக்கிறார் தெரியுமா? ‘பாலா வேலு காட்டன் கம்பெனி’-யிலிருந்து வாங்கி இருக்கிறார்.  அதாவது, பருத்தியை விற்கும் கம்பெனியிலிருந்து இவர் ஹார்லிக்ஸை வாங்கினாராம்! 
எப்படி இருக்கிறது கதை! விசாரணை நடத்தினால் முழு உண்மையும் வெளி வரும்.  இந்த வழக்கு திண்டுக்கல் காவல்  துறை கண்காணிப்பாளருக்கு மாற்றப்பட வேண்டும் 
என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், வழக்கு இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை. இதிலிருந்தே அழகிரி வைத்திருக்கும் பில்கள் எப்படிப்பட்டவை என்பது உங்களுக்கே புரிந்து இருக்கும்.  இது ஓரு புறம் இருக்க """"...நான் திருடியதாக ஒரு வாதத்திற்கு 
ஒப்புக் கொண்டாலும் கூட ஹார்லிக்ஸ் டப்பாக்களை ஏழை, எளிய மக்களுக்குத் தானே கொடுத்தேன்?"" என்று அழகிரி கூறியதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இதிலிருந்தே இது திருடப்பட்ட ஹார்லிக்ஸ் தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  
ஸ்பெக்ட்ரம், மணல், கிரானைட், ரேஷன் அரிசி மூலமாக கொள்ளையடித்த பணம், கருணாநிதி குடும்பத்தில் இருக்கிறதே! அதைத் திருடி ஏழைகளுக்கு கொடுக்க வேண்டியது தானே! எதற்கு வியாபாரிகளின் பொருட்களை திருடுகிறார் அழகிரி?

இதே போன்று பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிட்டாய் மற்றும் சாக்லெட்டுகளும் ஒரு மர்மக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. காவல் துறை புகாரை வாங்க மறுக்கிறது என்றால் இதில் அழகிரியின் தலையீடு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதைவிட வெட்கக்கேடு இருக்க முடியுமா?

அழகிரியை சொல்லி குற்றமில்லை.  தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே! இப்படிப்பட்ட அழகிரி, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் சேவை தொடரும் என்று கூறி இருக்கிறார். பதவியில் இல்லாத போது ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு பலவிதமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது தான் அழகிரியின் சேவை.  இதன் விளைவு தா. கிருட்டிணன் படுகொலை! பதவிக்கு வந்த பிறகு பத்திரிகை அலுவலக எரிப்பு மூலம் மூன்று பேர் பலி; வழிப்பறிக் கொள்ளைகள்; கிரானைட் கொள்ளை; மணல் கொள்ளை; ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சேவைகள் நடைபெறுகின்றன. கொலை, கொள்ளை சேவையை யார் கேட்டது? மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டாமா? அழகிரியின் சேவைக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

மதுரையில் அழகிரியை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது.  அப்படி கேட்டால் கேட்பவர்கள் மிரட்டப்படுவார்கள். ஆனால் டெல்லியில் நிலைமை வேறு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் அழகிரி ஓடி ஒளிந்து கொள்கிறார். பத்திரிகையாளர்களை கண்டால் பதுங்கிக் கொள்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தாலே அஞ்சா நெஞ்சன் அஞ்சுகிறார். அதை எப்படி புறக்கணிப்பது என்று சிந்திக்கிறார். அமைச்சர் பொறுப்பேற்று முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது.  பிரதமரின் அனுமதி இல்லாமல் தன் உள்ளூர் பரிவாரங்களுடன் தீவு ஒன்றினை வாங்குவதற்காக மாலத்தீவு சென்றுவிட்டார் அழகிரி. அந்தத் தீவில் RESORT அமைக்கப் போகிறாராம். இதை நான் சொல்லவில்லை. இது பத்திரிகைச் செய்தி.  மக்களவைக்குச் சென்றால் மக்கள் நலம் பற்றிப் பேச வேண்டும். இதைவிட முக்கியம் தன்னலம் என்று மாலத்தீவு சென்றுவிட்டார் அழகிரி.  

2009-ஆம் ஆண்டு இறுதியில் தன் குடும்பத்துடன் இந்தோனேஷியா மற்றும் ஹாங்காங்  நாடுகளுக்கு அழகிரி சென்றார்.  தன் துறை சம்பந்தமாக அங்கு செல்லவில்லை. அங்குள்ள தமிழ் மக்களிடம் கருணாநிதியின் சாதனைகளை சொல்வதற்குச் சென்றதாக தகவல்.  அன்றாடம் நடக்கும் ‘கொலை’, ‘கொள்ளை’ சம்பவங்கள் தான் கருணாநிதியின் சாதனைகள்.  இதைச் சொல்ல அழகிரி சென்றிருக்கிறார்.  பொருத்தமான நபரைத் தான் கருணாநிதி அனுப்பி வைத்திருக்கிறார்! 

அழகிரியின் பணி இத்துடன் நின்றுவிடவில்லை.  தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். இதனையடுத்து அழகிரியின் முயற்சி காரணமாக அங்குள்ள ஒரு நிறுவனம் 2,200 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அமைக்கப் போகிறது என்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன? இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்று விசாரித்த போது, இவர் தான் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வங்கியில் தொழில் செய்வதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி அந்த கம்பெனியை மூடிவிட்டு தலைமறைவானவர் என்பது தெரிய வந்தது.  இவர் இந்தோனேஷிய அரசால் தேடப்பட்ட ஒரு குற்றவாளி. 2008-ஆம் ஆண்டு தான் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் இவர் சரணடைந்தார்.   இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசால் நிலம் ஒதுக்கப்பட்டதோடு வங்கிக் கடனும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நபர் எவ்வளவு பணத்தை தமிழகத்தில் முதலீடு செய்து இருக்கிறார்? இந்தப் பணம் யாருடையது? இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? இந்த நிறுவனத்திற்கு கடனாக கொடுக்கப்படும் வங்கிப் பணம் தொழிற்சாலை அமைக்க பயன்படுமா? இல்லை கருணாநிதி குடும்ப கருவூலத்திற்குச் சென்றுவிடுமா?  என்ற விவரங்கள் எல்லாம் போகப் போகத்தான் தெரியும்.

நீங்கள் அனைவரும் ஒரு பழைய பாடலை கேட்டிருப்பீர்கள்.  ""போகப் போகத் தெரியும் - இந்தப் பூவின் வாசம் புரியம்"" அதை சற்று மாற்றி  போகப் போகத் தெரியும் - இந்த ஊழல் வாசம் புரியும்-என்று தான் பாடத் தோன்றுகிறது.  
  
அழகிரியின் பதுங்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ""அமைச்சர் எங்கே? அமைச்சர் எங்கே?"" என்ற கூக்குரல் எழுப்பினர்.  பின்னர் """"ஓடி ஒளியாதீர்கள்! ஓரிரண்டு வார்த்தைகளையாவது பேசுங்கள்"" என்று அழகிரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.  இதனையடுத்து இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசினார் அழகிரி!  என்ன பேசினார்? """"கேள்வி எண் 161. A முதல் E வரையிலான ஓர் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது"" என்று பேசினார்.  இது தான் அழகிரியின் கன்னிப் பேச்சு!

மத்திய அமைச்சர் ஆன பிறகு இரண்டு கின்னஸ் சாதனைகளை அழகிரி புரிந்து இருக்கிறார்.  ஒன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓராண்டிற்கு மேல் ஓடி ஒளிந்தது! மற்றொன்று நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகச் சிறிய கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியது! அழகிரி தான் உங்களுக்கு பிரச்சினை என்பதால் அவரைப் பற்றி அதிக நேரம் பேசிவிட்டேன்.  

இனி மதுரை மாவட்ட மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பார்ப்போம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு மிகவும் முக்கியமானது  முல்லைப் பெரியாறு அணை. நான் முதலமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.  இது மட்டுமல்லாமல் ஆய்வுக்கு பின்னர் படிப்படியாக 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

இதனை அடுத்து தமிழ்நாட்டில் உடனே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் உச்ச நீதிமன்ற ஆணையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.  பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார்.  மாநிலத்தில் மைனாரிட்டி திமுக ஆட்சி.  மத்தியில் கருணாநிதி தயவில் கூட்டணி ஆட்சி.  இருப்பினும் உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஏன் எடுக்கவில்லை? 

கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் 
பல தொழில்கள் கேரளாவில் நடைபெறுகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் சுரண்டப்படும் மணலும், ரேஷன் பொருட்களும் திமுக-வினரால் கேரளாவிற்கு தான் கடத்தப்படுகின்றன. இந்தத் தொழில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமே! குடும்ப வருமானம் குறைந்து போய்விடுமே, என்கிற சுயநலம் காரணமாகத் தான் கருணாநிதி முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கவில்லை. கேரள அரசின் மனம் கோணாமல் நடந்து கொள்வதில் உறுதியாக இருந்தார் கருணாநிதி. கருணாநிதியின் இந்த சுயநலப் போக்கு காரணமாக கேரள அரசு இப்போது புதிய அணை கட்ட நடவடிக்கை எடுத்துவிட்டது.  புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை தட்டிக் கேட்பதற்குக் கூட கருணாநிதிக்கு பயம்.  இதை எதிர்த்து நான் அறிக்கை விடுத்தவுடன் மத்திய அரசை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்.  ஏது, கருணாநிதி கூட  மத்திய அரசை எதிர்க்கிறாரே என்று நானும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் கருணாநிதியின் அறிவிப்பு ஒரு சில நாட்களிலேயே புஸ்வாணமாகிவிட்டது.
  
மத்திய அரசை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக கேரள அரசை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார்.  பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.  அதையும் கைவிட்டு விட்டார்.   கருணாநிதி ஒரே அடியாக கூட்டத்தையும் கைவிட்டுவிட்டார்; கண்டனத்தையும் கைவிட்டுவிட்டார்! முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தும் துணிச்சல் கூட கருணாநிதிக்கு இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றி கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். கபட நாடகங்களை நடத்தி உங்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்கும் கருணாநிதிக்கு வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களை அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்த முக்கியமான பிரச்சினை மின்வெட்டு. 2006 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த வரை மின்வெட்டு என்பதே தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்தோம்.  அதனால் அரசுக்கு கூடுதல் வருமானமும் கிடைத்தது. எப்படி இது சாத்தியமாயிற்று? 

எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து அனல் மின் நிலையங்களும் சிறப்பாக பராமரிக்கப்பட்டதால் இது சாத்தியமாயிற்று. தரமான நிலக்கரியை பயன்படுத்தியதால் இது சாத்தியமாயிற்று. மத்திய தொகுப்பிலிருந்து நமக்குள்ள உரிமையை போராடிப் பெற்றதால் 
இது சாத்தியமாயிற்று. சிறந்த பராமரிப்பிற்காக தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன.  எனது தலைமையிலான கழக ஆட்சியில் காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் முன்னிலையில் இருந்தது.

மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு என்ன நிலைமை? மோசமான பராமரிப்பு காரணமாக மின் நிலையங்கள் மாறி, மாறி பழுதடைகின்றன.  இதனால் மின் உற்பத்தி, குறைந்துவிட்டது.  இது மட்டுமல்லாமல் தரம் குறைந்த நிலக்கரியை மின்சார வாரியம் வாங்குகிறது. எங்கிருந்து வாங்குகிறது தெரியுமா? ஓர் திமுக அமைச்சரின் சகோதரர்  கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இந்தோனேஷியாவில் இயக்கிக் கொண்டு இருக்கும் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வாங்குகிறது.  இதுவும் மின்வெட்டிற்கு 
ஒரு காரணம்.  இதன் மூலம் மக்களுக்கு கஷ்டம்; மின் வாரியத்திற்கு நஷ்டம்; கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் லாபம்.  

கருணாநிதியின் தன்னலம் காரணமாக விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இரைக்க மின்சாரம் இல்லை.  நெசவுத் தறியை இயக்க மின்சாரம் இல்லை. மாணவ-மாணவியர் உட்கார்ந்து படிக்க மின்சாரம் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாடு இருளில் மூழ்கி இருக்கிறது. தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் நிதி இல்லை.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மின் உற்பத்தியாளர்கள் மின்சாரம் தருவதை நிறுத்தினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இந்த நிலைமையிலும் பணம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த மைனாரிட்டி திமுக ஆட்சியை வீழ்த்த நீங்கள் தயாராக வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மற்றுமொரு முக்கியமான பிரச்சினை விலைவாசி உயர்வு.  தமிழ்நாடு வளம் கொழிக்கும் மாநிலம்.  இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ளன. மனித வளம் இருக்கின்றது. அறிவுத் திறன் இருக்கின்றது.  ஆனால் இன்று உங்கள் பாக்கெட் காலி.  உங்கள் வயிறும் காலி.  அத்தியாவசியத் தேவைக்கு வேண்டிய பொருட்களை வாங்க போதுமான பணம் உங்களிடத்தில் இல்லை.  உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகள் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டன. 

நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு பொன்னி புழுங்கல் அரிசியின் விலை கிலோவுக்கு 13 ரூபாயாக இருந்தது. இன்று 42 ரூபாய். சாம்பார் வைப்பதற்கான பருப்பின் விலை 1 கிலோ 32 ரூபாயாக இருந்தது.  இன்று 84 ரூபாய்.  34 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சமையல் எண்ணெயின் விலை இன்று 100 ரூபாய்.  நமக்குத் தேவையான ஒவ்வொரு உணவுப் பொருளின் விலையும் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு இருந்தததை விட இன்று மூன்று மடங்கு நான்கு மடங்கு வரை உயர்ந்துவிட்டன.  காய்கறிகள், சிமெண்ட், செங்கல், மணல் என அனைத்துப் பொருட்களின் விலைகளும், கடுமையாக உயர்ந்துவிட்டன. இதற்கு என்ன காரணம்? தன்னலத்திற்காக தமிழ் நாட்டிற்கு உரிய நதி நீரை அண்டை மாநிலங்களில் இருந்து கேட்டுப் பெறாதது; காசுக்காக வரம்பு மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் இல்லாமல் போனது; கடுமையான மின்வெட்டு; விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவது; பதுக்கல் கடத்தல் தொழில்களை ஊக்குவிப்பது என விலைவாசி உயர்விற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தன் குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக கருணாநிதி அண்டை மாநிலங்களில் நிலங்களை வாங்குகிறாரே தவிர, நமக்குரிய நதிநீரினை கேட்டுப் பெறுவதாக தெரியவில்லை.

கருணாநிதியின் இந்த தன்னலம் காரணமாக விவசாய உற்பத்தி குறைந்துவிட்டது.  இது விலைவாசி உயர்விற்கு முதல்  காரணம்.  அண்டை மாநிலங்களில் இருந்து தான் நீரை பெற முடியவில்லை.  இங்குள்ள நிலத்தடி நீரை வைத்தாவது விவசாயம் செய்யலாம் என்றால் அதிலும் தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளது.  இதற்கு பல காரணங்கள் உள்ளன.  பாறைகள் தெரியும் அளவுக்கு 15 அடிக்கும் மேல் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆற்றுப் படுகைகளில் இருந்து திமுக-வினரால் மணல் வரம்பு மீறி அள்ளப்படுகிறது. வேளாண் உற்பத்தி குறைந்து விலைவாசி உயர்ந்ததற்கு இது இரண்டாவது காரணம்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வரம்பு மீறி மணல் அள்ளப்படுவதை அறிந்த  சென்னை உயர் நீதிமன்றம் அந்தப் பகுதியில் மணல் அள்ளத் தடை விதித்துள்ளது.  சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் என்ன கூறியிருக்கிறது தெரியுமா? """"எந்தவித அதிகாரமும் இல்லாமல் தமிழக அரசின் பொதுப்பணித் துறை தனியாருக்கு வரம்பு மீறி மணல் அள்ள உரிமை அளித்ததால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது"" என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. இதன் பிறகு இது குறித்து விசாரிக்க ஒரு வல்லுநர் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. இதன்படி இந்த வல்லுநர் குழு தாமிரபரணி ஆற்றுப் படுகைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது.

இந்த ஆய்வுக் குழு தற்போது என்ன அறிக்கை கொடுத்து இருக்கிறது தெரியுமா? """"தாமிரபரணி ஆற்றுப் படுகைகள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப ஐந்தாண்டுகள் ஆகும்; எனவே இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது"" என்று தெரிவித்திருக்கிறது. மைனாரிட்டி திமுக ஆட்சியில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு இதைவிட சிறந்த சான்று தேவையில்லை. மணல் கொள்ளை மூலம் மட்டும் கருணாநிதி குடும்பத்தினர் இதுவரை 80,000 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிவிட்டனர் 
என்று கூறப்படுகிறது. 

சில இடங்களில் நிலத்தடி நீர் இருந்தும் மின்வெட்டு காரணமாக விவசாயம் செய்ய முடியவில்லை. ஏரிகளும், குளங்களும் தூர் வாரப்படுவதில்லை. இதன் காரணமாக வேளாண் உற்பத்தி குறைந்துவிட்டது.  விலைவாசி உயர்விற்கு இது மூன்றாவது காரணம். எனது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்புத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. இது நான்காவது காரணம்.     

விலைவாசி உயர்வுக்கு மற்றுமொரு முக்கிய காரணம் பதுக்கல் மற்றும் கடத்தல். செயற்கை பற்றாக்குறையை உருவாக்குவதற்காக அத்தியாவசியப் பொருட்களை சிலர் பதுக்கி வைக்கின்றனர்.  விலை உயரும் போது தங்கள் வசம் உள்ள பொருட்களை அதிக லாபத்திற்கு விற்கிறார்கள். இது போன்ற பதுக்கல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் ஆளும் தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள். இதே போன்று ரேஷன் பொருட்கள் கடத்தலிலும் ஆளும் 
திமுக-வினர் தான் ஈடுபடுகின்றனர். இந்த சட்டவிரோதச் செயல்கள் மூலம் கருணாநிதி குடும்ப கருவூலத்திற்கு இதுவரை 25,000 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் இதற்குக் காரணமானவர்கள் மீது மைனாரிட்டி தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அடிக்கடி நிகழும் பெட்ரோல், டீசல், விலை உயர்வும் விலைவாசி உயர்விற்கு முக்கியமான காரணமாகும்.  அண்மையில் கூட பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுவிட்டது.  அதாவது பெட்ரோல் விலையை உயர்த்த இப்போது மத்திய அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை.  இனி இந்த நிலைமை தொடரும்.  இதே நிலைமை டீசலுக்கும் ஏற்பட இருக்கிறது. அரிசி, பருப்பு விலைகள் ஏறுவதைப் போல, பெட்ரோல், டீசல் விலையும் இனி உயர்ந்து கொண்டே செல்லும். இதற்கு மத்திய அரசு தானே காரணம், என்று நீங்கள் கூறலாம்.  ஆனால் மத்திய அரசில் திமுக-வும் அங்கம் வகிக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.  இந்த விலை உயர்விற்கு தன்னுடைய முழு ஆதரவை தன் மகன் அழகிரி மூலம் சொல்லி அனுப்பியவர் கருணாநிதி என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, கருணாநிதி விலைவாசியை கட்டுப்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

இவ்வாறு விண்ணை முட்டும் அளவுக்கு அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர வழி வகுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 
இந்த அளவுக்கு அடித்த கொள்ளை போதாது என்று கிரானைட் கொள்ளை வேறு! தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த சட்டவிரோதமான கிரானைட் கொள்ளை மூலம் ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82,000 கோடி ரூபாய்!   இதைப் பற்றி செய்தி வெளியிடுகின்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கைது நடவடிக்கையில் இருந்து கிரானைட் கொள்ளை மூலம் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். 

இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கின்ற மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது நிச்சயம் இருக்காது. எனது ஆட்சிக் காலத்தில் பெருமை வாய்ந்த துறையாக விளங்கிய காவல் துறை தற்போது முழுவதும் சீரழிந்துவிட்டது. ஒவ்வொரு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கவுன்சிலரும், திமுக நிர்வாகியும் காவல் துறையை ஆட்டிப்படைக்கின்றனர். காவல் துறை நியமனங்களில் கருணாநிதி குடும்பத்தினர் காசு பார்க்கின்றனர் என்று வெளிப்படையாக பேசப்படுகிறது. அதாவது சட்டம்-ஒழுங்கு காவல் துறையிடம் இல்லை. கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கைக்கு சென்றுவிட்டது. 

அண்மையில் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில், உள்ளூர் தி.மு.க. தொண்டர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளரை முரட்டுத்தனமாக தாக்கி இருக்கிறார்.  பொதுமக்கள் முன்பு தங்கள் அதிகாரி தாக்கப்பட்டு கீழே தள்ளப்படுவதை 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் வேடிக்கை பார்த்தனர்.  ரவுடிகளைக் கண்டு இன்று காவல் துறை அஞ்சுகிறது.  அப்பாவி பொதுமக்களை துன்புறுத்துகிறது. இதற்கு ஒரு சிறிய உதாரணத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

 சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் கீழ உரப்பனூரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து திருமங்கலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.  புதுக்குளம் பிரிவு அருகே கன்னியாகுமரி மாவட்ட ளு.ஞ. பயணம் செய்த வாகனம் அசுர வேகத்தில் வந்து வினோத்குமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது.  இந்த விபத்தில் வினோத்குமார் இறந்துவிட்டார். ஆனால் இறந்து போன வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  என்ன கொடுமை! வினோத்குமார் இறந்தது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்குச் சேர வேண்டிய இழப்பீடும் இல்லாமல் போய்விட்டது.  ரவுடிகளின் சகவாசத்தால் அதே துர்குணம் காவல் துறைக்கும் வந்துவிட்டது.  இது தான் தமிழக காவல் துறையின் தற்போதைய செயல்பாடு!

இந்த திமுக ஆட்சியைக் கண்டு நீதிபதிகளே அஞ்சுகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தை சமாளிக்க காவல் துறை அழைக்கப்பட்ட போது, வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும், காவல் துறை வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது.  இதை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள். தலையில் ரத்தக் காயத்துடன் வாகனத்தில் ஏற்றப்பட்ட நீதிபதி அழுது கொண்டே """"அவர்கள் என்னை தாக்கினார்கள், அவர்கள் என்னை தாக்கினார்கள் ..."" என்று கதறிய காட்சி இன்னும் நம் மனதை விட்டு நீங்கவில்லை. ஆனால், அதே நீதிபதி விசாரணை ஆணையத்தின் முன்பு கழிவறையில் வழுக்கி விழுந்ததன் காரணமாக தலையில் தனக்கு காயம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார்.  எந்த அளவுக்கு அந்த நீதிபதி மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இது போல் பல நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர்.  மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை மிரட்டியதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இன்னும் ஒரு தகவலை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.  ஹார்லிக்ஸ் திருட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் நிலைமை இப்போது என்ன தெரியுமா? பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கு அந்த நீதிபதி மாற்றப்பட இருக்கிறார். நீதிபதிகளுக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். 

கடந்த சில நாட்களில் மட்டும் 15 கொலைகள் மதுரையில் நடைபெற்று இருக்கின்றன. 500 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் உங்களுக்கும் பாதுகாப்பில்லை.  எனக்கும் பாதுகாப்பில்லை.  காவல் துறையினருக்கும் பாதுகாப்பில்லை. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லை.  வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பில்லை.  மொத்தத்தில் 
இது ரவுடிகளின் அரசாக விளங்குகிறது. கருணாநிதி குடும்பம் மட்டும் பாதுகாப்பாக இருக்கிறது.  இந்த ரவுடி ராஜ்ஜியத்தை வீழ்த்த நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

இந்த ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்ட சமுதாயம் மீனவ சமுதாயம். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் இறந்துவிட்டனர்.  100-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுகின்றனர்.  அவர்களுடைய வலைகள், படகுகள் மற்றும் இதர உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்களின் கண்ணீர் கடலின் உப்புத் தன்மையை அதிகரித்துவிட்டது.  மத்திய அரசின் வரைவுச் சட்டம் வேறு மீனவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.  தற்போது கடல் அட்டைகளை மீனவர்கள் பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.  மீறி பிடித்தால் தண்டனை விதிக்கப்படுகிறது.

பொதுவாக அரிய வகை மீன்களை பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.  ஆனால் கடல் அட்டை அரிய வகை மீன் அல்ல என்று CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE என்ற மத்திய அரசு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இருப்பினும் இந்திய அரசு தடை விதித்து இருக்கிறது. ஆனால் இலங்கை அரசு இதற்கு தடை விதிக்கவில்லை. இதன் காரணமாக இந்த வகை மீன்களை இலங்கை மீனவர்கள் பிடித்துச் செல்கிறார்கள். அதே சமயத்தில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் இந்த வகை மீன்களை கடத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.  இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.  அதே சமயத்தில் அப்பாவி மீனவர்கள் சாதாரண மீன்களை பிடிக்கும் போது இந்த வகை மீன்கள் பிடிபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். தாங்க முடியாத கொடுமைகளை மீனவ சமுதாயம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.  மீனவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய கருணாநிதியோ தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிப்பதால் தான் இலங்கை கடற்படை அவர்களை தாக்குகிறது என்று கூறுகிறார் யோசித்துப் பாருங்கள்.  பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ள ஒரு குடும்பத்தின் தலைவர் குடிசையில் வாழ்ந்து கொண்டு; தினம், தினம் உயிரை பணயம் வைத்து நடுக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைப் பார்த்து ""பேராசை பிடித்தவர்கள்"" என்று கூறுகிறார்!  இது நியாயமா? இது அடுக்குமா?

இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சருக்கு வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நீங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கல்வியையும் கருணாநிதி குடும்பத்தினர் விட்டு வைக்கவில்லை. கருணாநிதியின் ஆட்சியில் கல்வித் துறை வியாபாரமாக மாறிவிட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு பெருகிவிட்டது. கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று நான் அடிக்கடி கூறி வந்தேன். ஆனால் கருணாநிதி அதை 
கண்டுகொள்ளவில்லை. சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்றவுடன் பள்ளி கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதாகக் கூறி நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் கருணாநிதி. அந்தக் குழுவும் 10,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அறிக்கை அளித்தது.  நீதியரசர் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் அனைத்துப் பள்ளிகளும் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு நடந்தது என்ன? வசூல் வேட்டை! கருணாநிதி குடும்ப கருவூலத்திற்குச் சேர வேண்டிய தொகை சேர்ந்துவிட்டது என்று கூறப்படுகிறது. அதனால் தான் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களால் புகார்கள் கொடுக்கப்பட்டும் மைனாரிட்டி தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 
நீதியரசர் கோவிந்தராஜன் குழு அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மைனாரிட்டி தி.மு.க. அரசு அலட்சியமாகவே நடந்து கொண்டது. குழு அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததற்கு இது தான் காரணம்.  இந்தத் தடையை எதிர்த்து உடனடியாக APPEAL செய்யாமல் நாட்களை கடத்தியது மைனாரிட்டி தி.மு.க. அரசு.  கடைசியாக இந்த அரசை நம்பி பயனில்லை என்று பெற்றோர்கள் சார்பில் APPEAL செய்யப்பட்டது. தற்போது என்ன நிலைமை?

தனியார் பள்ளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை நீதியரசர் கோவிந்தராஜன் குழு நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிவினை அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்தப் பணிகள் முடிவடைவதற்குள் கருணாநிதியின் ஆட்சிக் காலம் முடிவடைந்துவிடும். கருணாநிதியை பொறுத்தவரையில் அவருடைய கபட நாடகம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. கல்விக் கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு தான் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை.  கூடுதல் கட்டணம் கட்டியதன் மூலம் பெற்றோர்களுக்கு இழப்பு! கருணாநிதி குடும்பத்திற்கு கப்பம் கட்டியதன் மூலம் பள்ளி நிர்வாகங்களுக்கு இழப்பு! பலனடைந்தது கருணாநிதியின் குடும்பம் மட்டும் தான்.  கட்டணத்தில் தான் குழப்பம் என்றால் படிப்பிலும் குழப்பம்.  நடப்பு ஆண்டில் 
முதல் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிக் கூடங்களில் அரசு நிர்ணயித்த புத்தகங்களை வைத்து பாடம் சொல்லித் தராமல் அவர்கள் வேறு புத்தகங்களை நிர்ணயித்து பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. எதை படிப்பது என்று தெரியாமல் மாணவ-மாணவியர் குழம்பிப் போயிருக்கின்றனர்.  இதை மைனாரிட்டி தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை.   
உயர் கல்வியில் நிலைமை இதைவிட மோசம். துணை வேந்தர் நியமனத்தில் இருந்து அனைத்து நியமனங்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினரால் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது.  பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் கலைக் கல்லூரிகளும் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் தி.மு.க-வினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.  தமிழகம் முழுவதும் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது. கருணாநிதி குடும்பத்திற்குச் செல்ல வேண்டியது சென்றுவிட்டது என்று கூறப்படுகிறது. அவ்வளவு தான்! 
இது போதாது என்று அழகிரி தன் பங்கிற்கு தன் மனைவி பெயரில் திருமங்கலத்தில் ஒரு கல்லூரியை கட்ட ஆரம்பித்து இருக்கிறார்.  மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையில் சம்பாதித்த பணம் போதாது என்று கல்லூரி ஆரம்பித்து மேலும் கொள்ளையடிக்கப் போகிறார் என்று மக்கள் பேசுகின்றனர். அழகிரியை பற்றி இன்னுமொரு தகவல்.  மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசு அறிவித்தது.  ஆனால் இதற்கான பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகின்றன.  என்ன காரணம் தெரியுமா? அழகிரியின் பெயரில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நிலத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.  இந்த இடத்தை பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழகிரி வாடகைக்கு விட்டிருக்கிறார்.  இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வாடகையாக மாதா மாதம் அழகிரிக்கு வருகிறது.

அரசு சார்பில் கட்டப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டால் பல நிறுவனங்கள் அங்கு சென்றுவிடும்.  அழகிரியின் இடத்திற்கு கிராக்கி இருக்காது.  அதனால் அழகிரியின் வருமானம் குறைந்துவிடும்.  அரசு வருவாய் இழப்பு பற்றி அழகிரிக்குக் கவலை இல்லை.  தன் குடும்ப வருமானம் தடைபடக் கூடாது என்று நினைக்கிறார்.  அவர் வந்த வழி அப்படி.  வளர்க்கப்பட்ட விதம் அப்படி.  இது மட்டுமல்லாமல் அழகிரியின் கட்டடம் இருக்கும் இடம் திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும் கூறப்படுகிறது.  கோயில் சொத்து கொள்ளை போகிறது! இப்படிப்பட்ட கோடீஸ்வர அழகிரிக்கும், அழகிரியின் மனைவிக்கும் சொந்தமான பல ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் வேறு வழங்கப்படுகிறது! அதுவும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்! இதன் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு வருவாய் இழப்பு சுமார் 
34 லட்சம் ரூபாய்.  அழகிரி என்ன ஏழையா? அரசு பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
  
திரைப்படத் துறை இதைவிட மோசமாக சென்று கொண்டிருக்கிறது.  AVM, கவிதாலயா, சுரேஷ் ஆர்ட்ஸ், தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் திரைப்படத் துறையில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தன.  இப்பொழுது இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டன; இல்லை - ஒதுக்கப்பட்டுவிட்டன. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான கலாநிதி, உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி, குணாநிதி என ஒரு நீதியற்ற நிதிக் கூட்டம் திரைப்படத் துறையையே அபகரித்துக் கொண்டுவிட்டது.  உங்கள் ‘நிதி’யை வைத்து நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டது. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், நைன் கிளவுட்ஸ், மோகனா மூவீஸ் போன்றவை இந்த ‘நிதி’களின் நிறுவனங்கள்.  கருணாநிதி குடும்பத்தினரின் தமிழ்ப் பற்றுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது, பார்த்தீர்களா?

தற்போது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை மீறி யாரும் திரைப்படம் தயாரிக்கவோ, விநியோகிக்கவோ, திரையிடவோ முடியாது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது - இல்லை --உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இதே நிலைமை தான்.  இவையெல்லாம் அவர்கள் திறமையால் சாதித்தது அல்ல.  அதிகார துஷ்பிரயோகத்தினால் சாதித்தது.  இதை விரிவாக ஒரு பத்திரிகை வெளியிட்டது.  இந்தச் செய்தி மக்களை சென்றடையக் கூடாது என்ற நோக்கில் அந்தப் பத்திரிகையின் பிரதிகள் அனைத்தையும் கருணாநிதி குடும்பத்தினரே வாங்கி தீயிட்டுக் கொளுத்தி அச்செய்தியையே இருட்டடிப்பு செய்துவிட்டனர். 

பத்திரிகை சுதந்திரம் என்பது தமிழ்நாட்டில் தற்போது அறவே இல்லை.  பெரும்பாலான பத்திரிகைகளையும், ஊடகங்களையும், கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வைத்து இருக்கின்றனர்.  ஒரு சில பத்திரிகைகள் இவர்களை எதிர்த்து செய்தி வெளியிட்டால் அந்த நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. அந்த பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படுகின்றன. பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.  சில பத்திரிகை நிறுவனங்களில் கருணாநிதியே குழப்பம் ஏற்படுத்தி அதில் குளிர் காய்கிறார்.  தமிழகத்தில் ஜனநாயக ஆட்சியா நடைபெறுகிறது? பத்திரிகைச் சுதந்திரம் என்ற ஒன்று தமிழ் நாட்டில் இன்று இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  

மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து கடந்த ஜூலை மாதம் கோவையில் எனது தலைமையில் எட்டு லட்சம் பேர் திரண்ட மிகப் பெரிய கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட போது, அது குறித்து பத்திரிகைகள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.  பிரம்மாண்டமான கூட்டம், மகத்தான மக்கள் வெள்ளம் அங்கே திரண்டது என்று அனைத்து பத்திரிகைகளும் செய்திகளை பிரசுரித்தன. இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, அனைத்துப் பத்திரிகைகளையும் மிரட்டி இருக்கிறார்.  இதன் விளைவு அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் திருச்சியில் நடைபெற்ற எனது தலைமையிலான கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு வரலாறு காணாத வகையில் 18 லட்சம் மக்கள் திரண்டு வந்திருந்தும் அதை அனைத்துப் பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்துவிட்டன.  அவ்வப்போது என்னைச் சந்தித்தும் என்னுடன் தொலைபேசியிலும் பேசும் வடநாட்டு அரசியல் தலைவர்களும், பிற மாநில தலைவர்களும், கோவையில் நடைபெற்ற மகத்தான பொதுக்கூட்டம் பற்றி கேள்விப்பட்டு செய்தி அறிந்து அதற்காக பாராட்டு தெரிவித்து பேசுகிறார்களே தவிர; அதைவிட பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற திருச்சி பொதுக்கூட்டத்தைப் பற்றி அவர்களில் யாருக்கும் தெரியவில்லை.  காரணம் தமிழ் - ஆங்கில நாளேடுகள் அனைத்துமே திருச்சி பொதுக்கூட்ட செய்திகளையே வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டன. 

கருணாநிதியின் கெடுமதி எண்ணம் இத்துடன் நின்றுவிடவில்லை.  எனது கூட்டங்களுக்கு மக்கள் வருவதற்கு வாகனங்களை தரக்கூடாது என தனியார் வாகன உரிமையாளர்களை மிரட்டி இருக்கிறார். இதனால் கழகத் தொண்டர்களும், மக்களும், தங்களுடைய சொந்த வாகனங்களில் வந்தனர்.  அவர்களது வாகனங்கள் 15 கிலோ  மீட்டருக்கு முன்பே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.  திருச்சி கூட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கருணாநிதி சொன்னாரே அது எதற்காக? என்னுடைய பாதுகாப்பிற்காக அல்ல.  மக்களை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்காகத் தான்.  எங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கை மூடி மறைக்கும் தில்லுமுல்லு வேலைகளைத் தான் கருணாநிதி செய்தார்.

இத்தனை தடைகளையும் மீறி கோவைக்கும், திருச்சிக்கும், மக்கள் வெள்ளமென திரண்டு வந்தனர். ஆனால், திமுக-வால் போட்டியாக நடத்தப்பட்ட கோவை கூட்டமோ ‘புஸ்வாணம்’ ஆகிவிட்டது. திருச்சி கூட்டம் அந்த மாதிரி ஆகிவிடக் கூடாதே என்பதற்காக பணத்தை அள்ளி வீசினார் கருணாநிதி.  பிரியாணி பொட்டலங்களைக் கொடுத்தார்.  மதுபான பாட்டில்களை கொடுத்தார்.  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  3000 அரசுப் பேருந்துகளை தி.மு.க. கூட்டத்திற்கு திருப்பிவிட்டார்.  அப்படியும் அந்த அளவுக்குக் கூட்டம் வரவில்லை. அரசு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்களை திண்டாட வைத்தது தான் மிச்சம். இருந்தாலும் பத்திரிகைகளை விட்டு கூட்டத்தைப் பற்றி ‘ஆஹா, ஓஹோ’ என்று எழுதச் சொன்னார்.  பத்திரிகைகளும் கட்டாயத்தின் பேரில் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன.  தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதை அவர்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும்.  எனது தினசரி அறிக்கைகளையும் ஆங்காங்கே கழகத்தின் சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் பற்றிய செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு, புதிய வரலாறு படைத்த எனது பிரம்மாண்டமான திருச்சி கூட்டத்தைப் பற்றி உண்மையை வெளியிட துணிச்சல் இல்லாமல் போய்விட்டது.  அந்த அளவிற்கு மிரட்டல்.  பத்திரிகைகள் கருணாநிதியின் மிரட்டலுக்கு அடிபணிந்துவிட்டன.

இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் புதிய வரலாறு படைத்துள்ள இந்த பிரமிக்கவைக்கும் மதுரை கூட்டத்தைப் பற்றி உண்மை செய்தியை வெளியிடுவார்களா? நாளைய பத்திரிகைகளைப் பார்த்தால் தான் தெரியும். 

பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், என்னுடைய ஆட்சிக் காலத்திலும், மக்கள் ஆதரவு மட்டுமே எங்களுக்கு உண்டு.  பத்திரிகை ஆதரவு என்பது எங்களுக்கு என்றைக்குமே இருந்ததில்லை.  ஊடகங்களை நம்பி நாங்கள் இல்லை.  மக்களை நம்பித் தான் நாங்கள் இருக்கிறோம்.  கருணாநிதி, தனது திருச்சி கூட்டம் பிரம்மாண்டமானது என்றும், அதனால் தன்னுடைய ஆட்சி திரும்பவும் வரும் என்றும், கூறி இருக்கிறார். அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.  தேர்தல் வரட்டும்.  அப்போது தான் மக்கள் முடிவு என்ன என்பது அவர்களுக்கும் தெரியும் - எல்லோருக்கும் தெரியும்.         

கருணாநிதி குடும்பத்தினர் 6 சினிமா தயாரிப்பு நிறுவனங்களை வைத்து இருக்கின்றனர்.  இந்த ஆண்டு, ஜனவரி மாதம் முதல், அக்டோபர் மாதம் வரை 69 தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.  இவற்றில் 34 திரைப்படங்கள், கருணாநிதி குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டோ அல்லது விநியோகிக்கப்பட்டோ இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் விநியோகத்திற்கு எடுத்துக் கொள்ளாததன் காரணமாக இந்தப் படங்கள் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி இருக்கின்றன.  அதாவது, இந்த திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.  இதற்குக் காரணம் தங்களின் அனுமதி இல்லாமல் இந்தத் திரைப்படங்களை யாரும் திரையிடக் கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களை கருணாநிதி குடும்பம் எச்சரித்து இருக்கிறது! இது தான் தமிழ் திரைப்படத் துறையின் தற்போதைய நிலைமை. தி.மு.க-வினாலோ அல்லது அரசினாலோ நடத்தப்படும் விழாக்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்தித் தர வேண்டும் என்ற 

தி.மு.க-வினரின் நிர்ப்பந்தத்தை துணிச்சலுடன் எதிர்த்த முன்னணி திரைப்பட நடிகர் கருணாநிதியின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்டார்.  அரசியலில் நுழைவது குறித்து பரிசீலிக்கப் போகிறேன் என்று கூறிய மற்றொரு பிரபல நடிகர் கருணாநிதியின் குடும்ப திரைப்படங்களுக்கு நடித்துக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.   அவர் நடித்த ஒவ்வொரு படமும் தோல்வி என்பதை கருணாநிதி குடும்பம் உறுதி செய்தது. HERO-க்களை ZERO ஆக்குவதும் தன் குடும்பத்தில் உள்ள 
ZERO-க்களை HERO ஆக்குவதும் தான் கருணாநிதி குடும்பத்தினரின் வேலையாக இருக்கிறது. திறமைக்கு மதிப்பில்லை.

இந்த அளவிற்கு சுதந்திரத்தை தமிழ் திரைப்படத் துறையினர் தற்போது இழந்துள்ளனர்.  தொலைக்காட்சி விநியோகத்திற்கான பிரத்யேக உரிமை கருணாநிதி குடும்பத்திடம் உள்ளது.  கருணாநிதி குடும்பத்தினரின் அனுமதி இருந்தால் மட்டுமே தமிழக மக்கள் எந்தத் தொலைக்காட்சி சேனலையும் பார்க்க முடியும்.  இந்த மதுரை பொதுக்கூட்டம் ஜெயா தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் கருணாநிதி குடும்பத்தினரின் கட்டளைகளுக்கு இணங்க தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இந்த நிகழ்ச்சி கேபிள் ஆப்பரேட்டர்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.  கேபிள் ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை இது தான்.  

ஏதோ பல இடையூறுகளை சமாளித்து எப்படியோ JEYA TV இன்னும் தாக்குப் பிடித்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.  JAYA TV-ஐ அடியோடு முடக்கி செயல்படவிடாமல் மூடிவிட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த மாநில அரசிலும் மத்திய அரசிலும் உள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி கருணாநிதி விடா முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.  நானும் இன்னமும் உங்கள் முன் வந்து கொண்டிருக்கிறேன்.  என்னையும் அரசியலை விட்டே விரட்டிவிடவும் ஏன் -- என்னையே அடியோடு ஒழித்துக் கட்டவும் பலவிதமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

JAYAR TV மட்டும் தான் என்னைப் பற்றிய செய்திகளையும், கழகச் செய்திகளையும் காண்பிக்கிறது.  
JAYA TV மட்டும் தான் மைனாரிட்டி திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகளை தைரியமாக ஒளிபரப்புகிறது.  மற்ற அனைத்து TV சேனல்களும் இருட்டடிப்பு செய்கின்றன.


JAYA TV தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
எனது தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் 
புரட்சித் தலைவர் MGR ஆட்சியை அமைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?  

இதற்கெல்லாம் அடுத்த சட்டமன்றத் தேர்தல் மூலம் தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் -நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.  திரைப்படத் துறையில் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இப்பொழுது தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் என்ற அளவில் இருக்கிறது. இப்படியே போனால் இன்னும் சில நாட்களில் வசனம், இசையமைப்பு, டைரக்ஷன் போன்றவற்றிலும் கருணாநிதி குடும்பத்தினர் நுழைந்து விடுவார்கள்.  இவையெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.   மிரட்டி காசு கொடுத்து தங்களின் பெயர்களை போட்டுக் கொண்டு விடுவார்கள்.  கடைசியாக நடிப்புத் தொழிலிலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை புகுத்திவிடுவார்கள்.  ஏற்கனவே சிலரை புகுத்தி உள்ளார்கள்.  அது இன்னும் அதிகரிக்கும்.  கதைக்கு பஞ்சமில்லை.  உதயகுமார் என்ற மாணவனின் பிணத்தின் மீது டாக்டர் பட்டம் பெற்றதில் இருந்து துணை வேந்தர் தாக்குதல் வரை பல சம்பவங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் கதையாக்கினாலே போதும்!

காமெடிக்கு கருணாநிதியே இருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் இருந்த மூன்று மணி நேர உண்ணாவிரத காமெடி அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது.  இதைப் போலவே பல கபட நாடகங்கள் உள்ளன.  எல்லாமே காமெடி நாடகங்கள் தான்.  சண்டைக் காட்சிகளுக்கு அழகிரி இருக்கவே இருக்கிறார்.  கொலை, கொள்ளை, வழிப்பறி, எரிப்பு காட்சிகள் எல்லாம் உண்மையாகவே இருக்கும். திரைப்படங்களில் வில்லன்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற கதாநாயகர்கள் எல்லாம் இன்று ‘நிஜ வில்லன்களிடம்’ மாட்டிக் கொண்டு தவியாய்த் தவிக்கிறார்கள். திரைப்படத் துறையில் உள்ளவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்திற்கு எடுபிடிகளாக இருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை தான் தற்போது. 
கருணாநிதி குடும்பத்தினரின் அட்டகாசம் இத்துடன் நின்றுவிடவில்லை. தமிழ் நாட்டில் உள்ள பாதி நிலங்கள் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடமும், தி.மு.க-வினரிடமும் தான் இருக்கின்றன.  SATTELITE சேனல் கேபிள் டிவி-யிலும் இவர்களுடைய ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆகாய விமானங்களை வாங்கி KAL AIRWAYS என்ற நிறுவனத்தை கருணாநிதி குடும்பத்தினர் உருவாக்கி இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்திலும் கருணாநிதி குடும்பத்தினருக்கு பங்கு இருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவத்தின் 37 சதவீத பங்குகளை 750 கோடி ரூபாய் கொடுத்து கருணாநிதி குடும்பம் வாங்க இருக்கிறது.  இதுவரை 17.72 சதவீத பங்குகள் வாங்கப்பட்டுவிட்டன. GO AIR என்ற விமான நிறுவனத்தின் பங்குகளையும் வாங்க இருக்கின்றனர். கருணாநிதியின் ஆட்சி இனியும் தொடர்ந்தால் எங்கு பார்த்தாலும் அவருடைய வாரிசுகளின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடக் கூடிய நிலைமை உருவாகிவிடும். இப்படிப்பட்டதொரு துர்ப்பாக்கிய நிலைமை தமிழ் நாட்டிற்கு ஏற்படாமல் இருக்க எதேச்சாதிகார குடும்ப ஆட்சியை கூண்டோடு ஒழித்துக் கட்டும் வகையில் வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கருணாநிதிக்கு நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

திமுக-வை குடும்பமாக்க விரும்பினார் பேரறிஞர் அண்ணா. கருணாநிதியோ தன் குடும்பத்திற்கு அடிபணியும் இயக்கமாக திமுக-வை ஆக்கிவிட்டார்.  இன்று கருணாநிதி குடும்பம் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய ஆதிக்கத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறது.  ஆக்டோபஸ் என்ற உயிரினத்திற்கு நிறைய கைகள் இருக்கும்.  
அந்த உயிரினம் இரையை தேடிச் சென்று பிடிக்க வேண்டிய அவசியமில்லை.  தான் இருந்த இடத்தில் இருந்தே தனது பல கைகளை எந்த அளவிற்கு விரிவடையச் செய்ய வேண்டுமோ   அந்த   அளவிற்கு  நீட்டி  விரிவடையச்  செய்து  இருந்த  இடத்தில் இருந்தே இரையை பிடித்துக் கொள்ளும்.  அதன் பல கைகள் எந்த திசையிலும் நீளும்.  அதன் பிடியிலிருந்து சுற்றுப்புறத்தில் உள்ள வேறு எந்த உயிரினமும் தப்ப முடியாது.  அப்படிப்பட்ட ரத்தத்தை உறிஞ்சக் கூடிய ஆக்டோபஸ் போல் கருணாநிதி குடும்பத்தினர் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.  தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி.  இளைய மகன் ஸ்டாலின் துணை முதலமைச்சர். இரண்டாவது மகன் அழகிரி மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர்.  பேரன் தயாநிதி மாறன் மத்திய ஜவுளித் துறை அமைச்சர். மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர்.   உலகில் இதை போன்று அரசியல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குடும்பத்தை வேறு எங்கேயாவது இருப்பதாக உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா? இது போன்ற சாதனைகளை நிகழ்த்தியதாக, ஹிட்லர், முஸோலினி, இடி அமீன் போன்றவர்கள் கூட, பெருமையடித்துக் கொள்ள முடியாது.  மனைவி, துணைவி, மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட, மிகப் பெரிய குடும்பம், கருணாநிதியின் குடும்பம். இது தவிர, உடன்பிறந்தாரின் மகள்கள், மகன்கள், பேரன்கள், பேத்திகள் வேறு.  ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஒரு அதிகார மையமாக, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஒருவரிடம், நெருக்கமாக இருந்தால் தான், அமைச்சர் பதவிகள் கிடைக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள, தற்போதைய தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும், இந்த வழியில் தான் பதவிகளை பெற்றுள்ளனர்.  கள்ளச் சாராயம், போலி மருந்து, லாட்டரி சீட்டு விற்பனை, மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல் என, ஒவ்வொரு சட்ட விரோதச் செயலும், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின், துணையோடு தான் நடக்கிறது.   இது அவர்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள உரிமை. சட்ட விரோதத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள, கருணாநிதி குடும்பத்திற்கு, கப்பம் கட்ட வேண்டும். அப்பொழுது தான், அதிகாரிகளின் தடையின்றி, அவர்கள் தங்கள், சட்ட விரோதச் செயல்களை செய்ய முடியும். 

அடுத்து போலி லாட்டரி சீட்டு விற்பனை. லாட்டரி சீட்டின் மூலம் பெரும்பாலான ஏழை எளிய குடும்பங்கள் சீரழிகின்றன என்பதை அறிந்து எனது ஆட்சிக் காலத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை நான் தடை செய்தேன்.  இன்றும் அந்தத் தடை அப்படியே இருக்கிறது.  இருப்பினும் தமிழ்நாடு முழுவதிலும் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செழிப்பாக நடைபெற்று வருகிறது. லாட்டரி சீட்டுகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனங்கள் மூலம் கடத்தப்படுகின்றன. அந்த வாகனங்களில் கருணாநிதி வசனம் எழுதியதாக கூறப்படும் """"பெண் சிங்கம்"" திரைப்படத்தின் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த வாகனங்களை காவல் துறையினர் சோதனையிடுவதில்லை.  இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை செய்யும் கோவையைச் சேர்ந்த மார்டின் என்பவருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை நான் குறிப்பிடவில்லை. ஆதாரத்துடன் தான் குறிப்பிடுகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மார்டின் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி.  இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் வரை மார்டின் சென்றார்.  அப்போது அதை கடுமையாக எதிர்த்தது மைனாரிட்டி தி.மு.க. அரசு.  பின்னர் கருணாநிதிக்கும் மார்டினுக்கும் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை! மார்டின் வழக்கு மீது மைனாரிட்டி தி.மு.க. அரசு தீவிரம் காட்டுவதை நிறுத்திக் கொண்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் மார்டின் பெயர் விடுபட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் மர்மம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.  வழக்கிலிருந்து விடுவித்ததோடு கருணாநிதி நின்றுவிடவில்லை. மார்டினை கவுரவப்படுத்த ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி. 

கோவையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல் வரிசையில் ஒரு அமைச்சருக்கு அருகில் மார்டினுக்கு இடம் அளிக்கப்பட்டது.  அண்மையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் ஒரு குழுவில் மார்டின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  கருணாநிதி கதை, வசனம் எழுதியதாக கூறப்படும், ‘இளைஞன்’, ‘பொன்னர் சங்கர்’ போன்றவற்றை மார்ட்டின் திரைப்படமாக தயாரித்து வருவதாகவும்; கதை, வசனம் எழுதியதற்காக மார்டினிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் சம்பளத்தை கருணாநிதி பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தவிர கருணாநிதி குடும்பத்திற்கு பல வழிகளில் மார்டின் பேருதவியாக இருந்து வருகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. அண்மையில் பூடான், சிக்கிம் லாட்டரி சீட்டுகள் மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தால் சிவகாசியில் அச்சிடப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படும் தகவல் கேரள அரசுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து கேரள அரசு தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக தமிழக எல்லையில் உள்ள கேரள சோதனை சாவடியில் 
அரசு உரிமை பெறாத லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களில் மட்டும் 3,500 கோடி ரூபாய்க்கு மேல் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனே பூடான் சிக்கிம் லாட்டரி விற்பனைக்கு கேரள அரசு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் மார்டின். இந்த வழக்கில் மார்டினுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் யார் தெரியுமா? தமிழக அரசின் ADVOCATE GENERAL. 
தமிழக மக்களை பாதிக்கிற கல்விக் கட்டண வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது ADVOCATE GENERAL-ஐ அனுப்பவில்லை கருணாநிதி. ஆனால் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்கு தமிழக அரசின் ADVOCATE GENERAL செல்கிறார். கருணாநிதிக்கும், லாட்டரி மாஃபியாவுக்கும் உள்ள நெருக்கம் தெரிகிறதா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1977 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முடிக்கப்படாமல் இருந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தை முடித்துக் கொடுப்பதற்காக நடித்தார். அப்போது """"முதலமைச்சராக இருந்து கொண்டு நடிக்கக் கூடாது"" என்று வேறு ஒருவர் மூலம் வழக்கு போட வைத்தார் கருணாநிதி.  ஆனால் இன்று கருணாநிதி என்ன செய்து கொண்டு இருக்கிறார்?  கதை, வசனம் என்று எதையோ கிறுக்கி அதை வைத்து காசு பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவருடைய கதை வசனத்தை வைத்து திரைப்படம் எடுத்தால் படம் ஓடாது. திரைப்படம் எடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். அதனால் தான் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை பயன்படுத்திக் கொள்கிறார். முதலமைச்சருக்கான பணியை கருணாநிதி செய்வதே கிடையாது.  தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நல அரசா? அல்லது ‘தன்’ மக்கள் நல அரசா? என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது தான் இன்றைய தமிழகத்தின் நிலைமை. 

இது போதாது என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இலவச வேட்டி-சேலைத் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக தகவல் வருகிறது. 
திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் துன்பங்களை ஆகஸ்ட் 14-ந் தேதி அன்று நான் எடுத்துரைத்தேன்.  உடனே விவசாயிகளை கவருவதற்காக இலவச பம்பு செட் திட்டத்தை மறு நாள் காலையிலேயே ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று அறிவித்தார் கருணாநிதி.  தங்கு தடையின்றி மின்சாரத்தை அளிக்க வழியில்லை.  இதில் இலவச பம்பு செட் திட்டம் வேறு.  இந்தத் திட்டம் அறிவித்த உடனேயே ஓர் ஆண்டிற்கு 10,000 விவசாயிகளுக்கு தான் தர முடியும் என்று ஒரு தகவல் வந்தது.  அப்படி என்றால் 
19 லட்சம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் 190 ஆண்டுகள் பிடிக்கும்.  யாரை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி என்று தெரியவில்லை.
அடுத்ததாக கருணாநிதி அறிவித்துள்ள திட்டம், வீட்டு வசதித் திட்டம்.  ஏழை, எளிய குடிசை மக்களை எல்லாம் அகற்றும் பணியில் ஒரு புறம் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  கடன் கொடுத்து வீடு வாங்கியவர்களின் வீடுகள் ஜப்தி செய்யப்படுகின்றன.  மறு புறம் வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக இது போன்ற அறிவிப்பு.  இதை கவனியுங்கள்.  ஒரு குடிசை வீட்டை கான்க்ரீட் வீடாக மாற்றுவதற்கு 75,000 ரூபாய் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார்.  75,000 ரூபாயில் வெறும் கழிவறை மட்டும் தான் கட்ட முடியும். சாதாரணமாக ஒரு குடும்பம் வாழ்வதற்கு குறைந்தபட்சம் 400 சதுர அடியாவது கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். ஒரு சதுர அடிக்கு மிகவும் குறைவாக 750 ரூபாய் ஆகும் என்றால் 400 சதுர அடி வீடு கட்ட 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிலைமை இவ்வாறிருக்க 75,000 ரூபாயில் எப்படி கான்க்ரீட் வீடு கட்டித் தர முடியும்?  தேர்தலுக்காக இது போன்ற தில்லுமுல்லு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.  எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதில் தான் கருணாநிதியின் கவனம் இருக்கிறது.
  
எனது அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!  
ஒரு குடும்பம் நம்மை எல்லாம் முட்டாள்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.  ஒரு குடும்பம் தமிழ் நாட்டையே சுரண்டிக் கொண்டிருக்கிறது.  இந்தக் குடும்பத்தினர் 
25 தொலைக்காட்சி சானல்கள், பல பத்திரிகைகள், கேபிள் நிறுவனங்கள், கல்லூரிகள், நான்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், பல திரையரங்குகள், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தோட்டங்கள், எஸ்டேட்டுகள், வணிக வளாகங்கள், அச்சு நிறுவனங்கள், ஆகாய விமானங்கள் என தங்களுக்குள் பலவற்றை சொந்தமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வளவும் அரசியல் மூலம் தமிழக மக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சம்பாதித்த பணம். இன்றைக்கு 
யார் கருணாநிதியை கேள்வி கேட்டாலும் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். கருணாநிதியின் கட்டளைக்கு அடிபணியாதவர்களும் அவர்களது நிறுவனங்களும், வருமான வரித் துறையின் சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றன. அவரை எதிர்க்கத் துணிந்தவர்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
  
வழக்கறிஞர்கள் கூட சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.  கருணாநிதி குடும்பத்தினரை எதிர்த்து யார் கேள்விகள் கேட்டாலும் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டார்கள்.  கருணாநிதி குடும்பமோ அனைவரின் வாயிலும் மண்ணைப் போட்டு தான் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறது.   இப்படி ஊரை வளைத்து ஊழல் புரிந்து உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கருணாநிதி சொத்தை கணக்கெடுத்துப் பார்ப்பதற்கு கணித மேதை ராமானுஜம் வந்தாலும் முடியாது.  ஒரு கம்ப்யூட்டரிடம் கொடுத்து கருணாநிதி சொத்துகளை கொஞ்சம் கணக்குப் பார்த்து சொல் என்று கேட்டால் அதற்கும் கிறுக்கு பிடித்துவிடும். CALCULATOR இடம் கொடுத்து கணக்குப் பார்க்கச் சொன்னால் கால்குலேட்டரே கிறுகிறுத்து விழுந்துவிடும். அந்த அளவுக்கு ஊர் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது கருணாநிதி குடும்பம்.  கருணாநிதி குடும்பத்தினரின் நடவடிக்கையை பார்த்தால், 
""""கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான் 
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
""""படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை."" 
என்ற புரட்சித் தலைவர் MGR-ன் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.  
இது ஒரு ஆபத்தான நிலைமை.  ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமை மிகு மாநிலமாக விளங்கிய தமிழ் நாடு இன்று தரம் தாழ்ந்துவிட்டது. தமிழ் நாட்டைப் பார்த்து இந்தியாவே வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மட்டும் திமுக-விற்கு 1,90,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.   சட்ட விரோத கிரானைட் கற்கள் மூலம் 82,000 கோடி ரூபாய்.  மணல் கொள்ளை மூலம் 80,000 கோடி ரூபாய். ரேஷன் பொருட்கள் கடத்தல் மூலம் 25,000 கோடி ரூபாய்.
  
கருணாநிதி குடும்பத்தின் அதிகாரப்பூர்வமான சொத்துக்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இது தவிர அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, லண்டன் போன்ற இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,00,000 ரூபாய்க்கு மேல் கொடுக்கலாம். அப்படி கொடுத்தாலும் அவர்களிடம் இன்னும் ஏராளமான பணம் இருக்கும்.  அது எல்லாமே உங்களுடைய பணம் தான்!

தமிழ் நாட்டின் நலனுக்காக நமது நலனுக்காக இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.  இதைச் செய்யக் கூடிய சக்தி மக்களாகிய உங்களிடத்தில் தான் இருக்கிறது.  தன்னிடம் உள்ள லஞ்சப் பணத்தைக் கொடுத்து உங்களை எல்லாம் அடிமையாக்க நினைக்கிறார் கருணாநிதி.
 ‘நதி எங்கே போகிறது - கடலைத் தேடி’ 
என்ற பாடலை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். ஆம்! அனைத்து நதிகளும் கடலைத் தேடித் தான் செல்கின்றன. ஆனால் ஒரே ஒரு நதி மட்டும் கடைசியில் கடலோடு கலக்காமல் ஒரு கண்மாயோடு நிறைவுற்று விடுகிறது. அந்த ஒரே நதி இதோ இங்கே ஓடிக் கொண்டு இருக்கும் வைகை நதி.  என்ன காரணம் என்று கேட்டால்  """"தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று வணங்கும் ஈசனுக்கு அமிர்தம் என்ற பெயரால் ஆலகால விஷத்தைக் கொடுத்தது இந்தக் கடல் தான். எனவே நான் கடலோடு கைகுலுக்கவே மாட்டேன்"" என்று அந்த நதி சொல்கிறதாம்.  இப்படி நதிக்கு கூட ரோஷமும், வீரமும் உள்ள மண் மதுரை.  நதியைப் போலவே மக்களாகிய நீங்களும் தீய சக்தியின் ஜனநாயகப் படுகொலைச் செயலுக்கு துணை போக மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கான கவுண்ட் டவுன் முன்பே தொடங்கிவிட்டது.  அடுத்த ஆண்டு கழகத்தின் ஆட்சி அமைந்த சில மணி நேரங்களிலேயே மதுரை மக்களுக்கு பூரண விடுதலை கிடைக்கும் விதத்தில்; மீண்டும் பழைய மதுரையினுடைய அமைதியை நிலைநாட்டும் விதத்தில்; மதுரை மக்களின் நிம்மதியை குலைக்கின்ற தீய சக்திகள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும்.  மீண்டும் அழகிய மதுரை மாநகரம் நிர்மாணிக்கப்படும். இப்பொழுது தமிழகத்து மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது.  முடிவு எப்படி எடுக்கப் போகிறார்கள் என்பது ஏறத்தாழ நமது தீயசக்தி கருணாநிதிக்கும் தெரிந்து விட்டது. அவர் நம்புவது எல்லாம் பணத்தைத் தான்.  கோடி கோடியாய் சுருட்டி வைத்திருக்கும் கொள்ளைப் பணத்தை கட்டவிழ்த்து கொடுத்தால் தமிழக வாக்காளர்கள் தனக்கு அடி பணிந்து மீண்டும் வாக்களிப்பார்கள் என்று மக்களின் மீதான ஏளனமான நம்பிக்கையை கருணாநிதி வைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த மதுரை மண்ணில் நின்று கொண்டு நான் இன்றைக்கு சொல்கிறேன். தமிழ் நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே அருமருந்து ""இரட்டை இலை"" என்னும் பச்சிலை மருந்து தான் 
என்ற தீர்க்கமான முடிவிற்கு மக்கள் வந்துவிட்டார்கள்.  நாம் ஆயத்தமாக வேண்டும்.  
கூட்டணி எப்படி இருக்குமோ என்கிற ஒரு சின்ன சந்தேகம் உங்களிடம்  இருக்கலாம். அதை ஒரு சிறிய கதையின் மூலம் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
  
ஒரு ஊரில் விஞ்ஞானம் வளராத காலத்தில் 3 கிலோ மீட்டர் நீளம் உள்ள 
பாலம் ஒன்றை கட்டினார்கள்.  இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி புகழ் பெற்ற பொறியாளரின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது.  வெள்ளோட்ட ஏற்பாடுகள் நடந்தன.  அந்த பொறியாளர் அதிகாரிகளை கூப்பிட்டு இந்தப் பாலத்தின் மொத்த எடை தாங்கும் சக்தி 30 டன்.  
30 டன்னுக்கு மேலே ஒரு குண்டூசி அளவுக்கு எடை கூடினாலும் பாலம் இடிந்து விழுந்துவிடும்.  அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறினார்.  பின்னர் லாரியில் சரக்குகள் ஏற்றப்பட்டன. லாரி எடையுடன் 30 டன் எடை இருக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டது. லாரி புறப்படத் தயாரானது. பாலத்தின் மறுமுனையில்  மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்த் துறை அதிகாரிகள் கட்டுமானப் பணியிலே ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் என ஒரு பெரிய கூட்டம் லாரியின் வெள்ளோட்டக் காட்சியை பார்ப்பதற்காக கூடியிருந்தது.  பின்னர், பச்சைக் கொடி ஆட்டப்பட லாரி புறப்பட்டது.  ஒரு கிலோ மீட்டர் கடந்து ஒன்றரை கிலோ மீட்டர் கடந்து 2 கிலோ மீட்டர் தொட்டு இரண்டரை கிலோ மீட்டரையும் கடந்து விட்டது.  பாலத்தின் மறுமுனையை லாரி எட்டும் சமயத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த பத்து புறாக்கள் லாரியின் மீது ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் மீது உட்கார கூடி நின்ற கூட்டம் எல்லாம் ""அய்யோ"" என்று அலறியது. ஆனால் நல்ல வேளை பாதுகாப்பாக லாரி பாலத்தின் மறுமுனைக்கு, வந்து சேர்ந்துவிட்டது.  கூடியிருந்த கூட்டம் பாலம் தப்பித்ததே என்று உணர்ச்சி கொந்தளிக்க கை தட்டினார்கள்.  ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த சில மாணவர்கள் அந்தப் பொறியாளரிடம் சென்று """"அய்யா, உங்களிடம் ஒரு கேள்வி"" என்றார்கள்.  ""கேளுங்கள்"" என்றார் அவர்.  ""நீங்கள் தானே இந்தப் பாலத்தைக் கட்டினீர்கள்?"" என்று மாணவர்கள் கேள்வி கேட்டனர். """"ஆமாம்"" என்றார் பொறியாளர்.
""""30 டன்னுக்கு மேலே ஒரு குண்டுமணி அளவிற்கு எடை கூடினாலும் பாலம் இடிந்துவிடும் என்று எச்சரிக்கை செய்தது நீங்கள் தானே?"" என்று கேட்டனர் மாணவர்கள்.  """"ஆமாம்"" என்றார் பொறியாளர்.  ""சரி இப்பொழுது உங்கள் கணக்கும் கணிப்பும் பொய்யாகிவிட்டதே?"" என்று மாணவர்கள் ஏளனமாய் அவரைப் பார்த்து கேட்க அவர் சிரித்தபடியே """"இல்லை, இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே என் கணக்கும் கணிப்பும் சரியாகத் தான் இருக்கும்"" என்று அவர் சாதித்தார்.  """"எப்படி?"" என்று கேட்டனர் மாணவர்கள்.  """"30 டன்னுக்கு மேல் எடை ஏற்றினால், பாலம் இடியும் என்ற சொன்னீர்கள்.  ஒடிவந்த லாரியில் 10 புறாக்கள் உட்கார்ந்தன.  ஏன் பாலம் இடியவில்லை?  உங்கள் கணக்கு தவறு தானே?"" என்று விடாப்பிடியாக கேள்வியை தொடுத்தனர் மாணவர்கள். அந்த அனுபவம் உள்ள பொறியாளர் சிரித்துக் கொண்டே, """"உண்மை தான் தம்பிகளே புறாக்கள் உட்கார்ந்ததன் காரணமாக எடை கூடினாலும் 30 டன் எடை ஏற்றப்பட்ட லாரி இரண்டரை கிலோ மீட்டரை கடந்து வந்ததால் டேங்கில் உள்ள டீசலின் எடை  குறைந்திருக்கும்.  ஆக இன்னும் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து இருந்தாலும் அதன் எடை டீசல் எடையைவிட குறைவான எடையாகத்தான் இருக்கும்.  எனவே பாலம் இடியாது.  இப்பொழுது புரிகிறதா? என் கணக்கும், கணிப்பும் சரி தானே?"" என்றார்.  அந்த மாணவர்களும் தங்களது சந்தேகம் தீர்ந்துவிட்டது என்று கை குலுக்கி சென்றுவிட்டனர். அந்தப் பொறியாளரின் கணக்கும், கணிப்பும் எப்படி சரியாக இருந்ததோ, அதே போன்று நம்முடைய கூட்டணிக் கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும். அதை நான் துல்லியமாக கணித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அந்தப் பொறியாளரின் இடத்தில் இருந்து கொண்டு நான் உங்களுக்கு சொல்கிறேன். 2011-ல், கோட்டையை பிடிக்கப் போகிற ஒப்பற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். 

என் உயிரினும் மேலான கழகத்தின் கண்மணிகளே! உங்கள் உழைப்பை 100 சதவீதம் கொடுப்பதற்கு இந்த நிமிடம் முதல் நீங்கள் உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்.  வெற்றிக் கனியை கொய்கிற வித்தையை நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன்.  

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாய் நம் புரட்சித் தலைவர் MGR அன்று பாடினாரே--
""""தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் 
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்"" 
என்ற பாடல் வரிகளை மனதில் கொண்டு விழிப்போடு களப்பணியாற்ற தயாராகுங்கள்.   
""""நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,  
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"" 
என்கிற புரட்சித் தலைவர் MGR-ன் பாடலை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து, 
""""சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்.  
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை, 
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.  
எதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்""
என்ற புரட்சித் தலைவர் MGR-ன் பாடலை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
சகோதர, சகோதரிகளே, இப்போது தான் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது.  மதுரையில் மாலை 4 மணியில் இருந்து கரண்ட் கட் செய்யப்பட்டுள்ளது.  கரண்ட்டுக்கு இன்னொரு பெயர் பவர்.  கருணாநிதியின் புத்தி இப்படித் தான் போகும் என்று நினைத்தேன்.  என்னுடைய கணக்கும், கணிப்பும் சரியாக இருந்தது.  இன்றைக்கு நான் பேசுகின்ற இந்தக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக கருணாநிதி மதுரையில் பவரை கட் செய்திருக்கிறார்.  அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கருணாநிதியின் பவரை கட் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)   
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கும் அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், குறிப்பாக, மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு,
அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!
என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்."" என்று வீர முழக்கமிட்டார்கள். 

நிறைவாக, மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எம். ஜெயராமன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 
பொதுக்கூட்டம் முடிந்தவுடன் மேடையில், கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு, கழகப் பொருளாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அவர்கள் வெள்ளி செங்கோல் வழங்கினார்.  
மொத்தத்தில், இன்று மதுரையில் நடைபெற்ற மிக பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரையை கேட்பதற்காக மக்கள் லட்சக்கணக்கில் அலைகடலெனத் திரண்டு வந்து மதுரையை கதிகலங்க வைத்தது, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் அமைய இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.  
கழகப் பொதுச் செயலாளர்                     
புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது.
                  தலைமைக் கழகம்,
                   அனைத்திந்திய அண்ணா தி.மு. கழகம்.

மதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அப்படியே இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது! எனது உள்நோக்கம் எதுவுமில்லீங்கோ!!

6 comments:

மதுரை சரவணன் said...

thanks for sharing. great work .

Anonymous said...

அன்புள்ள ஐயா,

அம்மா அவர்கள் பேசியதை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. முழுவதும் வாசித்தேன். சிறப்பாக எழுதி வாசித்துள்ளார்கள். ஆளும் கட்சிகளின் தவறுகளை அதிகமாக பட்டியலிடுவது சகஜம் தான் எனினும் தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்ற செய்தியினை எங்கும் காணவில்லை. பாவம் நீங்கள் இதற்கு பதில் சொல்ல இயலாது. பகிர்ந்த பாவத்திற்கு பதில் இடும் கொடுமையை நான் உங்களுக்கு தரமாட்டேன்!:-) மக்கள் திரண்டு வருவதை காண்கின்றபோது இந்த கூட்டம் ஓட்டு எண்ணிக்கைகளாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டியவை உலகில் பல! மாற்றம் என்ற ஒன்றை மக்கள் விரும்புகிறார்கள் என்று தான் தோன்றுகிறது இருப்பினும் ஆட்சிக்கு வருவது கூட்டணி கணக்கில் ஒற்றுமை இதோ என்ற எண்ணிக்கை தானே! ஆகட்டும் பார்க்கலாம் என்ற கர்மவீரரின் உபதேசம் என் காதில் ஒலிக்கின்றது! நல்லதே நடக்கட்டும். ஒருவருக்கொருவர் மதிக்கின்ற அரசியல் தலைவர்கள் நமக்கு வரும் பொற்காலம் வரட்டும்! அதற்கு இறைவனின் கருணை பொழியட்டும்!

அன்புடன்
என் சுரேஷ்

G Gowtham said...

அன்புள்ள சுரேஷ்..

//பாவம் நீங்கள் இதற்கு பதில் சொல்ல இயலாது. பகிர்ந்த பாவத்திற்கு பதில் இடும் கொடுமையை நான் உங்களுக்கு தரமாட்டேன்!:-)//
பத்திரிகையாளன் பழி பாவத்துக்கு அஞ்சலாமா.. இதோ பதில்!

உங்கள் கேள்வியை அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் போனில் கேட்டேன். இதோ அவர் சொன்ன பதில் ஐயா..

“இது மைனாரிடி தி.மு.க. அரசின் அராஜகங்களைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். அதனால்தான் அம்மா அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று பட்டியலிடவில்லை. தேர்தல் நேரத்தில்தான் அதையெல்லாம் சொல்வார்."

G Gowtham said...

'காதில் ஒலிக்கும் கர்மவீரரின் உபதேசம்’ பற்றி கருத்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கருத்துக் கேட்கலாம் என நினைக்கிறேன். ஆனால் எந்த கோஷ்டி பிரமுகரிடம் கேட்பது என தெரியவில்லையே...?!

சரி ‘நல்லதே நடக்கட்டும். ஒருவருக்கொருவர் மதிக்கின்ற அரசியல் தலைவர்கள் நமக்கு வரும் பொற்காலம் வரட்டும்! அதற்கு இறைவனின் கருணை(யும்) பொழியட்டும்!’

Anonymous said...

ஐயா நன்றி....

கர்மவீரர் அவர்கள் காங்கிரஸிற்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல என்று இன்னுமா தற்போதைய காங்கரிஸிற்குள்ளேயே பிரிந்து நிற்கும் பிரிவினர்களுக்குத் தெரியவில்லை!

என் சுரேஷ்

Anonymous said...

அன்புள்ள ஐயா,

விரைவில் தேர்தல் வர இருப்பதாலும், தற்போது ஆட்சி செய்யும் கட்சியினரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டாம் என்றும் அம்மா எச்சரிக்கை செய்யும்போதும், அம்மாவின் ஆட்சியில் இனி என்னென்ன புதிய சிறப்புகள் நடக்கப் போகிறது என்ற ஒரு சாமானியனின் எதிர்பார்ப்பைத் தான் நான் பதிவு செய்தேன். நீங்களும் சரியாக கேட்டுள்ளீர்கள். ஆனால் பதில் தான்....!