Friday, December 03, 2010

என் பேச்சை நானே கேட்க மாட்டேன்!!


“நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.. அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்!”

இந்த வசனத்தைக் கேட்டதும் எல்லோருக்கும் பறந்து பறந்து ’பஞ்ச்’ பேசும் ’போக்கிரி’ விஜய்தான் நினைவுக்கு வருவார். எனக்கோ நெஞ்சில் ஓர் ஆலயம்!

ஆம்.. கதாநாயகர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ் சினிமா காலத்தை திருப்பிப்போட்டு, இயக்குநர் பெயரைச் சொல்லி திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட வைத்த பெருமைக்குரிய இயக்குநர் ஸ்ரீதர்தான் என் நினைவுகளுக்குள் நிழலடிப்பார்.  

மிகச் சிறந்த படைப்பாளி. அறுபதுகளில் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஸ்ரீதர்.

அவரது கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் கொண்டாடுகிறது திரையுலகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சி அரிதானது.

மதுராந்தகம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீதர். நாடக வசனகர்த்தாவாக தனது படைப்பாளிப் பயணத்தை ஆரம்பித்தவர் ‘கல்யாணப்பரிசு’ மூலம் இயக்குநராக களம் இறங்கினார்.

வேறு எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத அவர் இயக்கிய அந்தப் படம், மிகப் பெரிய வெற்றியடைந்தது.

முதன்முதலில் புதுமுகங்களை மட்டுமே வைத்து `வெண்ணிற ஆடை', பத்து நாட்களில் ஒரே செட்டில் படமாக்கப்பட்ட `நெஞ்சில் ஓர் ஆலயம்', நடிகர்களுக்கு மேக்கப் போடாமல் `நெஞ்சிருக்கும் வரை', முதன்முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட `சிவந்த மண்', முதல் ஈஸ்ட்மென் கலர் படமான `காதலிக்க நேரமில்லை' என தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பல சாதனைகளைத் தொடங்கி வைத்தவர் இவர்தான்.

அவரது படங்கள் ரிலீஸாகும் போது பெரிய நடிகர்களே தங்கள் படங்களை ரிலீஸ் செய்யத் தயக்கம் காட்டினர். அந்தளவுக்கு தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார் ஸ்ரீதர்.

நான்கு சுவர்களுக்கு உள்ளேயே.. ஒரு ஆஸ்பத்திரிக்குள்ளேயே எடுக்கப்பட்ட ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம் தமிழில் விலை போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, ’தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கிக்காட்டி சாதனை படைத்தவர் ஸ்ரீதர்.

1961ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.

கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.

‘வாடா வெண்ணெய்’ என சென்னை என்னை ஏற்றுக்கொண்ட ஆரம்பகாலங்களில், யார் யாரையெல்லாம் நேரில் சந்தித்தாக வேண்டும் என ஒரு சின்ன லிஸ்ட் வைத்திருந்தேன். அந்த லிஸ்ட்டில் ஸ்ரீதரும் ஒருவர்.

பிரபலங்களைச் சந்தித்து அவர்களது ஒரு வார டைரிக் குறிப்புகளைக் கேட்டுவாங்கி ‘வி.ஐ.பி.டைரிக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன அப்போதைய ’ஜூனியர் போஸ்ட்’ வார இதழில். ’தொடருக்காக நான் சந்திக்க விரும்பும் வி.ஐ.பி.க்கள்’ என பலரது பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு லிஸ்ட் தயாரித்தேன். அதில் ஸ்ரீதரின் பெயரையும் சேர்த்தேன்.

ஜூனியர் போஸ்ட் உட்பட விகடன் குழும இதழ்களின் துணை ஆசிரியராக இருந்த ராவ் சாரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தேன்.

சில நிமிடங்களில்.. நான் அனுப்பிவைத்த ஃபைலைக் கையில் எடுத்துக்கொண்டு என் டேபிளுக்கே வந்தார் ராவ் சார். கடுகடு என அவர் முகம் இருந்தது!

“சினிமாக்காரங்களைத் தவிர வேறு யாரையும் வி.ஐ.பி.க்களா ஏத்துக்க மாட்டீங்களா.. நிறைய சினிமாக்காரங்களையே எழுதிக்கொடுத்திருக்கீங்க” என ஒரு அதட்டுப் போட்டார். ஃபைலையும் என் டேபிளில் போட்டார்.

“சினிமாவுக்குப் போகலாம்ங்குற ஆசை மனசுக்குள்ள இருந்தா அதை விட்ருங்க.. நல்ல பத்திரிகையாளர்னு பெயரெடுக்கும் வழியைப்பாருங்க” என கோபத்தோடு கர்ஜித்துவிட்டு கடந்து போனார் ராவ் சார். அன்றில் இருந்து இன்றுவரை அவர் அப்படித்தான்.. பத்திரிகையாளர்கள் சினிமாவுக்குப் போவது அவருக்குப் பிடிக்காது. ஆனால்.. நல்ல சினிமாவுக்கு அவர் என்றுமே ரசிகர்தான்.

இப்படிப் பலப்பல கொட்டுக்களையும் ஷொட்டுக்களையும் அவரிடமிருந்து வாங்கியருந்த அனுபவம் எனக்கு அதிகம் என்பதால் பத்தோடு பதினொன்றாக இதையும் சேர்த்து மனதில் பதிய வைத்துக்கொண்டு, டேபிளில் கிடந்த கோப்பினைக் கையிலெடுத்தேன்.

டிக் செய்யப்பட்டிருந்த ஒரு சிலரில் இயக்குநர் ஸ்ரீதரும் இருந்தார்! சத்தம் போடாமல் விசிலடித்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டேன்.

சிங்கிள் வடை, சிங்கிள் டீ சகிதமாக என் மகிழ்ச்சியை நானே கொண்டாடிவிட்டு, அலுவலகம் திரும்பி, டெலிபோன் டைரக்டரியையும் டெலிபோனையும் கையிலெடுத்தேன்.

“வணக்கம்.. ஸ்ரீதர் சார் வீடுங்களா?”

“ஆமாம்.. நீங்க?”

விவரத்தைச் சொன்னேன். மறுமுனையில் இருந்தது ஸ்ரீதரின் மனைவி தேவசேனா எனத் தெரிந்தது. கணவர் மருந்து சாப்பிட்டு, ஓய்வில் இருப்பதாகச் சொன்னார். மறுபடியும் அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உடல் நலம் மோசமாகி, சரியாகச் சாப்பிட இயலாமல், செயல்பட இயலாமல், மனைவியின் பராமரிப்பிலும் மருந்து மாத்திரைகளிலும் ஸ்ரீதரின் உலகம் இயங்கிக்கொண்டிருந்த காலம் அது.

மறுநாள் அழைக்கச் சொன்ன நேரத்தில் அழைத்தேன். போனை எடுத்த தேவசேனா, ஸ்ரீதரிடமே கொடுத்தார்.

“விகடன்ல இருந்து..” என்றதுமே “நேரில் வாங்களேன்.. பேசலாம்” என்றார். குரலில் நோய் நொடிகள் கொடுத்த பிசிறுகள் இருந்தாலும் கம்பீரமும் கட்டுக்குலையாமல் இருந்தது.

ஒரு மாலை நேரத்தில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நிறைய பிரமிப்புகள் கிடைத்தன எனக்கு.


’படித்த புத்தகம்? பார்த்த சினிமா?’ என பிரபலங்களிடம் கேட்டால், பெரும்பாலும் உண்மையைச் சொல்வதில்லை. நண்பர்களிடமோ அல்லது கேள்வியைக் கேட்ட செய்தியாளரிடமோ கலந்து பேசி, தன் இமேஜை உயர்த்திப் பிடிப்பது போன்ற (படிக்காத)புத்தகத்தையும் (பார்க்காத)சினிமாவையும் குறிப்பிடும் பிரபலங்கள்தான் இங்கே அதிகம் பேர்! ஆனால்.. தனது ஒரு வார நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே பகிர்ந்து கொண்டார் ஸ்ரீதர்.

அடிக்கடி மனைவியை அருகே அழைத்து, சம்பவங்களை நினைவு படுத்தி, உறுதி செய்துகொண்டார்.

திரைப்படம் இயக்குவதை நிறுத்தி பல வருடங்கள் ஆன ஒரு பழம்பெரும் இயக்குநராகத் தெரியவில்லை அவர் எனக்கு. திரைப்படத்தில், அரசியலில், தொலைக்காட்சியில், நாட்டுநடப்பில்.. அன்றைய நிகழ்வுகள் வரை விரிவாகப் பேசினார்.

“ஒரு க்ரியேட்டர் தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி சினிமா ஃபீல்டில் காணாமல் போயிடுவோம்” என்றார். முதல் படம் எடுத்துவிட்டு, இரண்டாம் படம் எடுக்கக் காத்திருக்கும் துறுதுறுப்புடனேயே பேசினார் 57 படங்களை எடுத்திருந்த அந்த க்ரியேட்டர்.

சுமார் பத்து வருடங்களாக படுத்த படுக்கையில் இருக்கும் உடம்புதான் அவருக்கு வில்லன். மனசு அப்படியே இருந்தது.

“இன்னும் ஒரு படம் இயக்கிப் பார்க்கணும். அது, சினிமா உலகத்தையே திருப்பிப் போடணும். எழுந்து நடமாடுற அளவுக்கு இந்த உடம்பு சரியாகிறப்ப ’ஷாட் ரெடி’ன்னு ஷூட்டிங் கிளம்பிடுவேன்”

ஸ்ரீதர் இப்படிச் சொன்னதும் என்னையும் அறியாமல் நான் நெகிழ்ந்து விட்டேன். பொதுவாக இரும்பு நெஞ்சத்துடன் செய்தி சேகரிக்கச் செல்லும் என்போன்ற பத்திரிகையாளர்கள், நெகிழ்ச்சி வயப்படுவதெல்லாம் எப்போதாவது இப்படி அபூர்வமாக நிகழ்வதுண்டு.

வியப்போடு அவரை வைத்தகண் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“வெரிகுட் ஸ்க்ரிப்ட்டுக்கான ஐடியா இருக்கு. ஜாகிர் உசேன் ஹீரோ. மாதுரி தீட்சித் ஹீரோயின். அட்டகாசமான மியூசிகல் சப்ஜெக்ட்.”

ஏ.ஆர்.ரஹ்மான் சிகரம் ஏற ஆரம்பித்திருந்த நேரம் அது.

“படத்துக்கு மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மான்” என்றார் ஸ்ரீதர்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அருகே உட்கார்ந்திருந்த தேவசேனா, லேசாகக் கலங்க ஆரம்பித்திருந்த கண்களை என்னிடம் இருந்து மறைப்பதற்காகவோ என்னவோ எழுந்து போய்விட்டார்.

“ரஹ்மான்கிட்ட பேசியாச்சு. மாதுரி தீட்சித்கிட்ட பேசியாச்சு. ஜாகிர் உசேன்கிட்டயும் பேசியாச்சு. அவர்தான் ரொம்ப தயங்கினார்.. ’ஒரு தபேலா இசைக்கலைஞனான நான் விளம்பரப் படத்துல நடிச்சதே பெரிய விஷயம். சினிமாவுல எப்படி’ன்னு தயங்கினார். நான் நம்பிக்கை கொடுத்து சம்மதிக்க வெச்சிருக்கேன். எப்படியும் அடுத்த வருடத்துல ப்ராஜக்டை ஆரம்பிச்சுடுவேன்”

கண்களில் ஆர்வமும் வெறியும் கொப்பளித்தது அவரிடம்.

“மியூசிகல் சப்ஜெக்ட்ங்குறதால மறுபடியும் சூப்பர் ஹிட் பாடல்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்” – ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசி வைத்தேன்.

“ஷ்யூர்” சொன்னார் ஸ்ரீதர். “வெரி குட் ஸ்க்ரிப்ட் சார்” என்றார்.

”அப்ப ஸ்டோரியை ரகசியமா வெச்சிருப்பீங்க” – முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல கேட்டுவிட்டேன்.

பதறிவிட்டார் ஸ்ரீதர்.

“நோ நோ.. என்னைப் பத்தி உங்களுக்கு தெரியலை. ஸ்க்ரிப்ட் வேணும்னா தனி மனிதனோட சொத்தா இருக்கலாம். சினிமாங்கிறது பொதுச் சொத்து. ஊர் கூடித்தான் தேரிழுக்கணும்.

ஒரு முடிவை எடுக்கிறதுக்கு முன்னாடி எவ்வளவு வேணும்னாலும் யோசிக்கலாம். மாத்திக்கலாம். ஆல்டர் பண்ணிக்கலாம். எல்லாம் சரி பண்ணி, செயல்ல இறங்கிட்டா.. நான் ஸ்டாப் வேகத்துல பயணம்தான்.

ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டேன்னா.. எனக்குள்ளேயே வெச்சுப் பூட்டி வெச்சுக்க மாட்டேன். குறைஞ்சது ஆயிரம் பேருக்காவது சொல்லிடுவேன். ஒவ்வொருத்தர் சொல்ற கருத்தையும் கவனமாக் கேட்டுப்பேன். அதுக்கு ஒட்டியும் வெட்டியும் எனக்குள்ளேயே டிபேட் பண்ணிப்பேன். ஸ்க்ரிப்ட்ல இருக்கும் ஓட்டை உடைசல்களை ஈகோ பார்க்காம சரி செஞ்சுப்பேன்.

பக்கா பண்ணிய பிறகு.. நோ சேஞ்சஸ். ஒரு முடிவை எடுத்துட்டேன்னா’ஷாட் – கட்’னு போய்க்கிட்டே இருப்பேன்.

நாம ரொம்ப நேரம் பேசிட்டோம்னு நினைக்கிறேன். உங்க அட்ரஸ் கொடுத்துட்டுப் போங்க. முழு ஸ்க்ரிப்டும் ரெடியானதும் தகவல் தரேன். வந்து, படிச்சுப் பார்த்துட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க..” என்றார்.

விடைபெற்று அவர் வீட்டைவிட்டு வெளியேறினேன். அதன் பிறகு தகவலைத் தர அவர் உடல் நலம் அவரை அனுமதிக்கவில்லை. என்றாலும் அவர் அன்று தந்த தகவல் இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

காரியம் எதுவாக இருந்தாலும்சரி, முடிவெடுப்பதற்கு முன் என்னைச் சுற்றி இருக்கும் எல்லோரிடமும் அதைப்பற்றிக் கூறிவிடுவேன். அவர்கள் கருத்தை – விமரிசனத்தைக் கேட்டுக்கொள்வேன்.

பின்னாளில் அது செயலாகாமல் போனால் அத்தனை பேருக்கும் அசடு வழியப் பதில் சொல்லியாக வேண்டுமல்லவா.. அதனாலேயே நிச்சயம் அந்தக் காரியத்தை செயலாக்கியே தீருவேன். அல்லது செயலாக்கத் தகுதியான காரியத்தைத்தான் ஊர் உலகத்துக்குச் சொல்வேன்.

'செயலில் இறங்கிவிட்டால்.. இளைப்பாறவும் திரும்பிப்பார்க்கவும் முடிவை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பே இல்லை! என் பேச்சைக்கூட நான் கேட்க மாட்டேன்!' என்றுதான் எனக்குள் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொள்கிறேன்!!

நன்றி: சூரிய கதிர் மாதமிருமுறை  

4 comments:

Unknown said...

இந்தியில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் குருதத்...அவரின் திரைப்படங்களில் மென்சோகமும் காவியத் தன்மையும் இருக்கும். தமிழில் ஸ்ரீதர் எல்லா விதமான உணர்வுகளையும் அடையச் செய்யும் திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். நகைச்சுவை, காதல், சோகம் என்று அவர் தொட்டவை வெவ்வேறு களங்கள்...அனைத்திலும் அவரின் முத்திரை வெளிப்படும். இன்று நாம் அடைந்திருக்கும் முன்னேற்றங்களின் முன்னோடி அவரே....

நெகிழ்ச்சியான பதிவு கெளதம். பகிர்வுக்கு நன்றி

butterfly Surya said...

Excellent post. I love Sridhar. Thanx for sharing.

அமைதி அப்பா said...

மிக நல்ல பதிவு.

நம்முடைய முடிவுகளை மற்றவர்களிடம் தெரிவிப்பதால் நமக்கு அந்தச் செயலை முடிக்க வேண்டுமென்கிற நிர்பந்தம் வந்து விடுவதால் அதை நிச்சயம் முடிப்போம் என்பது உண்மையே!

நன்றி சார்.

THOPPITHOPPI said...

மறக்க முடியாத இயக்குனர்