Saturday, August 19, 2006

தேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது!


டிரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது!

கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரியா?’ என்று விகடன் தாத்தா கூப்பிட்டார்! விடுவேனா?

வீட்டில் ரொம்ப யோசித்தார்கள். “மெட்ராஸ் போய் விகடன்ல வேலை பார்த்துக்கிட்டே படிச்ச படிப்புக்காக இன்ஞினியர் வேலையை எப்படியாவது மெட்ராஸ்லயே தேடிக்கிறேன்” என்று பெற்றோரை சமாதானப்படுத்தி பெட்டி தூக்கிவிட்டேன்.

நிஜமாகவே நான் துறுதுறு காமெடியன்தான் அப்போது! ‘757 அண்ணா சாலை’ ஆனந்த விகடன் முகவரி. ‘657 அண்ணாசாலை’யிலேயே ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து, நம்பரை எண்ணிக்கொண்டே நடந்த அதி புத்திசாலி.

எப்படி என்கிறீர்களா.. ‘757’ இருப்பது அண்ணாசாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே. ‘657’ இருப்பது நந்தனம்! இடையே குறைந்தது மூன்று கிலோமீட்டர் தூரம்!!

தப்பித்தவறி கீழே விழுந்தால், வேறு யாரும் பார்ப்பதற்குள் பொசுக்கென எழுந்து வலியை விழுங்கியபடியே சுற்றும் முற்றும் பார்ப்பவர்களே நம்மில் அதிகம். நான் வேறு ரகம். ‘புதையல்’ எடுத்த கதையை ஊர்பூராவும் சொல்லி, அத்தனை பேரையும் சிரிக்கவைத்து அசடு வழியும் அப்பாவி கோயிந்து!

அப்படி ஒரு தமாஷ் சம்பவமே நான் சென்னை வருவதற்குக் காரணம் என்ற கதையை பின்னாளில் கேள்விப்பட்டு நானே வியந்திருக்கிறேன்.

அது என்ன கதை என்றால்.. பழனி மலை முருகன் மூலவர் சிலையை மாற்றப்போவதாக அப்போதைய அ.தி.மு.க.அரசு அறிவித்தது. ‘கூடாது. இது போகர் வடித்த நவபாஷாண சிலை’ என கோடானுகோடி பக்தர்கள் கொதித்தார்கள். குரல் கொடுத்தார்கள்.

அவுட்ஸ்டேண்டிங் மாணவ நிருபராக நான் தேர்வாகியதால், ‘இன்னும் ஆறு மாதங்களுக்கு நீங்கள் உங்கள் ஊரிலிருந்தே ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆக பணியாற்றலாம்’ என விகடன் எனக்கு போனஸ் கொடுத்திருந்த காலம் அது. கல்லூரிப் படிப்பை முடித்து சொற்ப வாரங்களே ஆகியிருந்ததன. பழனிக்குச் சென்று எல்லாத்தரப்பிலும் தகவல் திரட்டி, தெருவில் உட்கார்ந்து கட்டுரை எழுதி, அங்கிருந்தே ஃபேக்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தேன்.

“இதான்யா இந்த வார ஆனந்த விகடன் கவர் ஸ்டோரி. எம்.டி. சந்தேகம் ஏதாச்சும் கேட்டா சரியா க்ளியர் பண்ணனும். அதால நீ என்ன பண்றே.. அப்டியே பஸ் பிடிச்சு மெட்ராஸ் வந்து சேரு” என்றார் சுபா - எனது ஒருங்கிணைப்பாளர். அப்படியே செய்தேன்.

வந்து, எம்.டி. கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம் பதில் கொடுத்தேன். அதாவது எம்.டி. கூப்பிடுவார். சீனியர்கள் அவரது அறைக்குப் போவார்கள். எம்.டி. கேட்ட சந்தேகங்களுடன் வெளியே வருவார்கள். நான் பதில் சொல்வேன். அதை சுமந்து கொண்டு திரும்பவும் எம்.டி.யைச் சந்திப்பார்கள் சீனியர்கள். அட்டகாசமான கவர் ஸ்டோரியாக அது அந்த வார விகடனிலேயே வெளியானது.

அன்று இரவு அலுவலகத்தில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். மறுநாள் நான் திண்டுக்கல்லுக்கு திரும்புவதாகத் திட்டம். பாரிமுனை சரவணபவனில் இருந்து மெகா சைஸ் கேரியர்களில் சாப்பாடு விகடனுக்கு வரும். இலை போட்டு வெளுத்துக் கட்டிக் கொண்டிருப்பார்கள். அன்றைய ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.

சாப்பிட்டபடியே பழனி முருகனின் நிலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

பேச்சோடு பேச்சாக வெகு சாதாரணமாக நான் சொன்னேன்.. “பாவம் அவர். ஏற்கெனவே ஒரு காதைக் காணோம்!”

பதறிப்போய்க்கேட்டார் அப்போதைய விகடன் துணை ஆசிரியரான (இப்போது குங்குமம் ஆசிரியர்) ராவ் சார்.. “ஏன் என்னாச்சு?”

அதே வேகத்தில் சொன்னேன் நான்.. “அதத்தான் எம்.ஜி.ஆர். கடிச்சுத் தின்னுட்டாருங்குறாய்ங்க!”

ஒட்டு மொத்தப் பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியரான் அசோகனுக்கு அப்போது புரையேறியதாகக் கூட ஞாபகம்!

எம்.ஜி.ஆருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ குணமுள்ள நவபாஷாணம் என்பதால் மூலவரின் உடலைச் சுரண்டி எடுத்துக் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்.

வயிறு வலிக்கப் பேசிச் சிரித்து, சாப்பிட்டு, தங்கியிருந்த லாட்ஜுக்குப் புறப்படும்போது சொன்னார்கள்.. “நாளைக்கு ஊருக்குப் போக வேணாம். ரெண்டு நாள் இருந்துட்டுப் போய்யா! எம்.டி. உன்னைப் பார்க்கணும்னார். அவர் கொஞ்சம் பிஸி”

உற்சாகமாக “சரி” சொன்னேன். அடுத்த இரண்டு நாளும் குட்டி நாய் போல விகடன் அலுவலகத்தை வளைய வந்தேன். பெரிய நிருபர்களைத் தொந்தரவு செய்து அவர்கள் செய்திக்காக வெளியே செல்லும்போது கூடவே தொற்றிக் கொண்டேன். படு ஜாலியாக கற்றுக்கொண்டேன் பல விஷயங்கள்.

இரண்டு நாளானதும் “எம்.டி. கூப்பிடறாரு” என்றார்கள். பய பவ்யத்தோடு போனேன்.

“வாங்கோ” என எம்.டி. கூப்பிட்ட காட்சி இப்போதும் என் கண்ணுக்குள் நிற்கிறது.

“உங்களைப் பத்தி நிறையச் சொன்னாங்க நம்ம ஆசிரியர் குழுவுல எல்லாரும். மெட்ராஸுக்கு வந்துடுறிங்களா?” என்றார்.

ஆயிரம் பொற்காசுகள் கிடைத்த தருமி மாதிரி வேக வேகமாக தலையாட்டினேன். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் கௌதமா!

‘அதத்தான் எம்.ஜி.ஆர். கடிச்சுத் தின்னுட்டாருங்குறாய்ங்க!’ என்று நான் ஆசிரியர் குழுவில் பேசியிருந்ததை நினைவுபடுத்திப் பேசினார் எம்.டி. ஆஹா! அங்கே நான் அடித்த கமெண்ட் எம்.டி. காதுகளுக்கும் கொண்டு போகப்பட்டிருக்கிறது! என்னை சென்னைக்கு விகடனின் முழுநேர ஊழியனாக அழைக்கலாம் என்ற எண்ணத்தை எல்லோரிடமும் விதைத்திருப்பதே அந்த ‘எம்.ஜி.ஆர். கடி’தான்!

ஆச்சு! சென்னைக்காரனாயாச்சு!

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட் என மூன்று பத்திரிகைகள் விகடன் நிறுவனத்தில் இருந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. மூன்றிலும் எழுதுவேன்.

மேன்ஷன் வாழ்க்கை. விகடனின் இப்போதைய தலைமை புகைப்படக்காரரான குமரேசன் அப்போது எனக்கு செட் ஆகியிருந்தார். காலை ஏழு மணிக்கே மேன்ஷன் வந்து விடுவார். முழு நாளுக்கு ஆட்டோ பேசிக்கொள்வோம். குமரேசனுக்கு சென்னை அத்துபடி. எனக்கு எதையெல்லாம் செய்தியாக்கலாம் என்ற தொலைநோக்கு ஓரளவுக்கு அத்துபடி. வேட்டைக்கு கிளம்பிவிடுவோம்.

பகலெல்லாம் செய்தி சேகரிப்புக்காக ஓட்டம். பொழுது போனதும் அலுவலகத்துக்குத் திரும்பி விடுவேன்.

உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். கல்லூரியில் அன்றன்றைய பாடங்களை அன்றன்று படிக்கும் பழக்கமில்லை எனக்கு. ஆனால் விகடனில் வேலை பார்த்தபோது அப்படியில்லை. சுடச்சுட எழுதி வைத்து விடுவேன். அப்போதுதான் விடுபடல் ஏதும் இருக்காது என இப்போதும் நம்புகிறேன்.

விடிய விடிய எழுதுவேன். விடிந்ததும் கொஞ்சம்போலத் தூக்கம். தொடரும் மறுநாள் பணிகள் ஏழு மணி சுமாருக்கே.

அலுவலகத்தில் இருக்கும் இரவுகள் இப்போது நினைத்தாலும் இனிக்கும் இரவுகள்! குறிப்பாக இரவுப் பரபரப்பில் அலுவலகம் இருக்கும் இரவுகள்!!

வாரத்தில் மூன்று நாட்கள் அப்படி இருக்கும். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட் மூன்று பத்திரிகைகளுக்கும் இறுதிகட்டப் பணிகள் நடக்கும் மூன்று இரவுகள்.

ஒவ்வொரு அணியிலும் வெவ்வேறு ஆட்கள். கே.சுந்தரம், வேயெஸ்வீ என சூப்பர் சீனியர்கள் கொண்டது விகடன் அணி. அசோகன், பாலகிருஷ்ணன் போன்ற சீனியர் மாணவ நிருபர் படை ஜூ.வி. அணி. ஞானி, இரா.ஜவஹர், சுரேஷ்பால் மற்றும் சில விவாதப் பார்ட்டிகள் ஜுனியர் போஸ்ட் அணி.

மூன்று அணியிலுமே நானும் உறுப்பினர்! அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்ப்பேன். விவாதிப்பேன். வாசகர் கடிதம் தேர்ந்தெடுத்துக் கொடுப்பேன். டயலாக்குகளைச் சரி செய்து கொடுப்பேன். போட்டோ தேடி எடுத்துக் கொடுப்பேன். கூடவே மிமிக்ரி செய்துகாட்டி எல்லோரையும் ரசிக்க வைப்பேன்!

கல்லூரியில் நான் நல்ல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். மேடையேறி எதையாவது கூத்தடித்துக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விட்டு குஷிப்படுத்துவேன்.

ஒரு சமயம் நான்ஸ்டாப் ஆக அந்தாதி மாதிரி ஐம்பது அறுபது சினிமா பாடல்களைப் பாடிக் காட்டி காமெடி பண்ணிய நாளில் வாயாரச் சிரித்தார் அன்றைய விருந்தினரான ஓவியர் அரஸ். பிறகு என்னைத் தனியே அழைத்து கரிசனத்தோடு சொன்னார்.. “உங்களைப் பார்த்தா என் தம்பி மாதிரியே இருக்கு. தப்பா எடுத்துக்காதிங்க. ஒரு அண்ணன் சொல்றதா நினைச்சுக்கங்க. பணக்கார வீட்டு பொமேரியன் நாய்க்குட்டி மாதிரி துறுதுறுன்னு இப்படி ஜாலியாவே இருக்கிங்களே. எனக்கு உங்க எதிர்காலத்தை நினைச்சா கவலையா இருக்கு!”

அந்த அளவுக்கு கோமாளி வாழ்க்கை!

எழுதும் கட்டுரைகளிலும் காமெடிக்கே முன்னுரிமை!

தலையில்லா முண்டம் வேஷம் போட்டுக் கொண்ட ஒருவரைக் கூட்டிக்கொண்டு நகர்வலம் வந்தேன். எம்.ஜி.ஆர். சமாதியில் திடுதிப் என ஒருவரை மயங்கி விழ வைத்து (ஆக்ட்!) எத்தனை பேர் உதவ வருகிறார்கள் என பார்த்து எழுதினேன். நடு ரோட்டில் போவோரை வழி மறித்து ‘என்ன வச்சிருக்கிங்க உங்க பர்ஸ்ல?’ என கத்தியில்லாமல் மிரட்டிக் கேட்டு எழுதினேன்.

ஒரு கட்டத்தில் அப்போதைய விகடன் இணை ஆசிரியரான மதன் சார், குறும்பு டீம் என ஒரு அணியை உருவாக்கி அதற்கு என்னையே பொறுப்பாளராக நியமித்தார்!

குரூப்பாகவே கலாய்க்க ஆரம்பித்தோம்.

விகடன் நடத்திய ‘ஸ்டார் ஜோக்ஸ்’ போட்டிக்கான பொறுப்பாளரும் நானே!

இவ்வளவு முன் கதைச்சுருக்கம் ஏனென்றால் இப்படியாக காமெடி கீமெடி பண்ணிக்கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்துக் கொண்டிருந்த என்னை வழிப்படுத்த வந்தவன் பற்றிச் சொல்வதற்காகத்தான். அவன் என் வாழ்வில் வந்தான். பெயர் திருப்பதிசாமி!

ப.திருப்பதிசாமி என்றால் விகடன் வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயர்.

எம்.எல். படித்தவன். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவன். விகடன் நடத்தி வென்ற பல பொதுநல வழக்குகளின் பின்புலம் அவன். கத்தரிக்கோல் சரஸ்வதி, பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஊழல், மதுரை பாண்டியம்மாள் கொலை (செய்யப்பட்டதாக ஜோடிக்கப்பட்ட) வழக்கு இப்படி அவனுடைய சட்ட அறிவும் ஆலோசனையும் சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகளில் விகடன் வென்றது.

கல்லூரிக் காலத்திலேயே கம்பன் கழகப் பேச்சாளன் அவன். எதைப்பற்றிப் பேசினாலும் மறுப்பது கடினம்.

சினிமா கனவுகள் அவனுக்கிருந்ததால் வக்கீல் தொழிலையும் செய்யாமல், தேடி வந்த விகடன் முழுநேர வேலையையும் ஏற்காமல் பகுதி நேர நிருபராகப் பணியாற்றி வந்தான்.

உற்சாகம் அவன் பேச்சில் எப்போதுமே நிரம்பி வழியும்! கேட்பவர்களையும் அது தொற்றிக் கொள்ளும்! நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த உருவம் அவன்.

வாரம் ஒருவர் அப்போது ஆனந்த விகடன் தயாரித்து வந்த நேரம். திருப்பதி தயாரித்த அந்த இதழ் ‘திகில் ஸ்பெஷல்’ என முடிவானது. ஐடியாக்களை அள்ளி விட்டேன் நான். ‘இதுதான் ஸ்பெஷல்’ என்று சொல்லிவிட்டால் போதும், பத்தே நிமிடங்களில் சிவகாசிப் பட்டாசு போல ஐடியாக்களை பொளந்து கட்டுவது என் ஸ்பெஷாலிடி!

வழக்கமான என் காமெடி வெடிகளுடன் நான் சொன்ன இன்னொரு ஐடியா.. ‘சங்கிலி மனிதர்கள்!’

ஏர்வாடி தர்ஹாவில் மனநல நோயாளிகளைக் குணமாக்குவதற்காக சங்கிலியில் கட்டி வைத்திருப்பார்களே. அதை புகைப்படங்களுடன் ரிப்போர்ட் செய்யலாம் என்பதே என் யோசனை.

“நல்ல யோசனை. நீயே இதைப் பண்ணிடு” என்றான் திருப்பதி.

“நானா?! அடப்போப்பா! நமக்கு காமெடிதான் வரும். இது நீ போய் பண்ணவேண்டிய கட்டுரை” என்றேன் நான்.

“ம்ஹூம். இதை நீதான் பண்றே. உன்னால முடியும். உன்கிட்ட விஷயம் இருக்கு. நீ மறைச்சு வச்சுக்கிட்டு காமெடியன் வேஷம் போடுறே. ஃபர்ஸ்ட் தாட்ல வர்ற வார்த்தைகளை விட்டுட்டு கொஞ்சம் சிரமப்பட்டு எழுது. இப்படியும் எழுத முடியும் உன்னாலன்னு மத்தவங்களுக்குப் புரிய வை” என்றான் அதீத நம்பிக்கையோடு திருப்பதி.

எங்களுக்கிடையே நடந்த வாத விவாதத்தில் வழக்கம்போல அவனே வென்றான்.

என் யோசனை ராவ் சார், அடுத்து மதன் சார் இருவரையும் கடந்து எம்.டி.யின் பார்வைக்குப் போனது.

கூப்பிட்டு அனுப்பினார் எம்.டி.

“இது நல்ல ஐடியாதான். ஆனால் நம்மால பண்ணமுடியாது. அந்தப் பிரச்னையை நாம் விமர்சிக்க முடியாது. இஸ்லாமிய அன்பர்களின் நம்பிக்கை அது. விமர்சிக்கும் சாக்கில் அவர்கள் மனம் புண்படும் விதமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. தவிர, அங்கேயெல்லாம் பத்திரிகையாளர்களை உள்ளே விட மாட்டார்கள். தேவையான தகவல் தர வாய்ப்பில்லை. புகைப்படம் எடுக்க முடியாது. அதனால் இந்த ஐடியாவை ட்ராப் செஞ்சுடலாம்” என்றார் எம்.டி.

என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வாதாடினான் திருப்பதி. “இல்ல சார், சரி தவறு என நாம் விமர்சிக்க வேண்டாம். இஸ்லாமிய நண்பர்கள் புண்படும் விதமாக கௌதம் எழுத மாட்டார். தேவையான தகவல்களையும் போட்டோக்களையும் சேகரித்துக்கொண்டு வருவதாக கௌதம் உறுதி சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே சார்!” என்றான்.

அரை மனதோடு சம்மதித்தார் எம்.டி.

எனக்கும் புகைப்படக்கார நண்பன் கே.ராஜசேகரனுக்கும் (இப்போது விகடனின் தலைமை புகைப்படக்காரன்) தெம்பு விதைக்கும் பேச்சை விதைத்தான் திருப்பதி. “உங்களால் முடியும். நம்புங்கள் முடியும்” இதுவே அவன் பேச்சின் மைய நரம்பு.

எங்களிருவரையும் மெரினா கடற்கரைக்கு அழைத்துப் போனான். ‘ஜொனாத்தன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ கதைகூடச் சொன்னான். பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்தோம்!

இரண்டு நாட்களில் நானும் ராஜசேகரும் ஏர்வாடி கிளம்பினோம். மனசுக்குள் தயக்கம் இருந்தது உண்மையே!

அங்கே நாங்கள் என்ன செய்தோம், எப்படிச் செய்தோம் என்பதெல்லாம் பகிரங்கமாக எழுத முடியாது. தொழில் ரகசியம் அது. சரியாகக்கூட புரிந்து கொள்ளப்படாமல் போகலாம். ஆனால் யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கவனத்துடனேயே செய்தி சேகரித்தோம். பேட்டிகள் எடுத்தோம். படங்கள் பிடித்தோம். சென்னைக்குத் திரும்பினோம்.

முதல் முறை எழுதிக் கிழித்துப் போட்டு, இரண்டாம் முறை எழுதி அதையும் கிழித்துப் போட்டு, மூன்றாம் முறை எழுதி திருப்பதியிடம் கொடுத்தேன்.

“சூப்பர்!” சொன்னான். அந்த 'சங்கிலி மனிதர்கள்' குறித்து வலியோடு கொஞ்சம் பேசினான்.

கட்டுரையையும் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு ராவ் சார், மதன் சார், எம்.டி. மூவரையும் சந்திக்கப் போனான்.

சில நிமிடங்களில் ‘தம்ஸ் அப்’ கைகளோடு வேகமாக வெளியே வந்தான்!

இதழ் விற்பனைக்கு வந்தது. ஒற்றைச் சாரள சூரிய வெளிச்சத்தில் கால்களில் கனமான இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு மன நோயாளியின் க்ளோஸ் அப் புகைப்படம் கட்டுரையின் ஹைலைட்களில் ஒன்று.

இஸ்லாமிய சகோதரர்களின் மத நம்பிக்கையை விமர்சனம் செய்து விடாமல், மனித நேயத்தோடு எழுதப்பட்டிருந்தது கட்டுரை. கத்தி மேல் நடப்பது போன்ற சாமர்த்திய உத்தி. விகடன் கற்றுக்கொடுத்தது!

`அட நீயா இதை எழுதியது?!' என அலுவலகமே பாராட்டியது என்னை.

எம்.டி. கூப்பிட்டார் என்னையும், ராஜசேகரையும். போனோம்.
தன் பர்ஸிலிருந்து பணம் எடுத்து இருவருக்கும் தலா இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய் கொடுத்தார்!

"நான் `முடியாது' என்றேன். முடித்துக் காட்டியிருக்கிறீர்கள். அதனால் என் அன்புப் பரிசு'' என்றார். சிலிர்ப்போடு திரும்பினோம் நாங்கள் இருவரும்.

"நண்பா இது உனக்கான பரிசுடா'' என்றேன் நான் திருப்பதியைப் பிடித்து!

அப்பாவி போலச் சொன்னான்.... "உன் ஐடியா. நீ போனாய். நீ எழுதினாய். எனக்கெப்படி இது சொந்தமாகும்?'' சிங்கிள் டீ மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொன்னான்.

என் எழுத்து புதிய பரிணாமம் பெற்றது அதன்பிறகு. பல சந்தர்ப்பங்கள். பல்வேறு சவால்கள். நேரம் வரும் போது ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்குகிறேன்.

பொற்காலமாகக் கழிந்தன விகடன் நாட்கள்.

திடீரென ஒரு சமயம் ஜூனியர் போஸ்ட் பத்திரிகையின் (அறிவிக்கப்படாத) பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. இன்பமோ, துன்பமோ அதிர்ச்சிகள் திடுதிப்பெனத்தானே நிகழ்கின்றன.

குருவி தலையில் வைக்கப்பட்ட பனங்காய்! வைத்தவர்கள் மதன் சாரும், ராவ் சாரும். முறுக்கோடு தலையாட்டிவிட்டு வெளியேறியதும் புலம்ப ஆரம்பித்தேன்.

வந்தான் திருப்பதிசாமி!

"உன்னால முடியும்னு நான் அன்னிக்கே சொன்னேன்ல. நீ ஆஞ்சநேயர் மாதிரிடா. கலக்கு'' என்றான். டன் கணக்காக நம்பிக்கை கொடுத்தான்.

அத்தோடு நின்று விடவில்லை. கூடவே வந்தான்.
எனது ஆரம்பகால ஜூனியர் போஸ்ட்டுக்கு நிறைய பங்களிப்புச் செய்தான். எனக்கு தெம்பளிப்பும் கொடுத்தான்.

அவன் சொன்னதை நானே கொஞ்சம் நம்ப ஆரம்பித்தேன். ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயரைச் சந்திக்க முடியாத சனிக்கிழமைகளில் கண்ணாடியில் என் முகம் பார்த்துக் கொண்டேன்!

அந்தக் காலகட்டத்தில் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருந்தான் திருப்பதி. பெரும்பாலும் அவன் வேலை ஹைதராபாத்தில்தான். ஒரு ஷெட்யூலுக்கும் அடுத்த ஷெட்யூலுக்கும் இடையே கிடைக்கும் ஓரிரு நாட்களில் விகடன் அலுவலகம் வருவான். பேசுவோம். டீ குடிப்போம். பீச் போவோம்.

அடுத்த வீட்டுக்காரியின் விலகிய முந்தானை முதல் அமெரிக்காவின் அணுகுண்டு ஆராய்ச்சி வரை சகலத்தையும் விவாதிப்போம்.

வாழ்க்கைப் படகு ஒரே திசையிலா பயணிக்கிறது. திருப்பங்கள் நிகழத்தானே செய்கின்றன. அப்படி ஒரு பெரிய திருப்பம் என்னையும் வழி மறித்தது.

ஒரு சில காரணங்களால் விகடனை விட்டு நான் வெளியேற நேர்ந்தது! ஒரு வார சஸ்பென்ஸூக்குப் பிறகே எனது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. தெருவில் இறங்கி நடந்தேன்.

போன இடம் இண்டியன் எக்ஸ்பிரஸ்.

புது வீட்டுக்குக் குடி போயிருந்தேன் அப்போது. தேடி வந்தான் திருப்பதி.

"என்னடாது... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல'' என்றான்.

சொல்ல நினைத்ததையெல்லாம் சொன்னேன். முழுதாக சமாதானமான மாதிரி தெரியவில்லை அவன்.

ஆனாலும் தொலையாத நம்பிக்கையுடன் சொன்னான்... "இது உன் வாழ்க்கை. எது சரி எது தப்புன்னு மத்த எல்லாரையும்விட முடிவெடுக்கும் உரிமை உனக்குத்தான் இருக்கு. நீ செஞ்சதை நான் விமர்சிக்கலை. இனிமேல் விமர்சனம் செய்தும் அதனால் பயனில்லை. புதிய இடம். புதிய பதவி. உன்னால முடியும். தூள் கிளப்பு.''

நான் சொன்னேன்... "திருப்பதி, விகடனுக்கு நான் யாருன்னு நல்லாத் தெரியும். ஆனா, புது ஆபிஸுக்கு என்னை நான் யார்னு புரிய வைக்கணும். ஏதோ ஒரு நம்பிக்கையோட என்னைக் கூப்பிட்டிருக்காங்க. அந்த நம்பிக்கையை சாயம் வெளுக்காம காப்பாத்திடணும். நேத்துத்தான் தொழிலுக்கு வந்த புது ரிப்போர்ட்டர் மாதிரி ஓடணும்.''

மொட்டை மாடியில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் தெருச்சகதியில் குளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டைக் காட்டினான் திருப்பதி.

"இந்தச் சகதியே போதும் என திருப்திப்பட்டுக் கொண்டு அப்படியே சுகமாகக் கிடக்கும் எருமை மாடு மாதிரி யோசிக்காதே. அது என்றைக்கும் நல்ல தண்ணீர்க் குளத்தை நாடிப் போகாது. அதைத் தேடி அலைய வேண்டுமே என அங்கலாய்ப்போடு அப்படியே சோம்பிக் கிடந்துவிடும். நீ அப்படியல்ல, தேடு. தேடிக் கண்டு பிடி. மனச்சோர்வு அடையாதே. `நான் இவ்வளவு படித்தவன், விகடனில் நிறைய எழுதியிருக்கிறேன். நிறைய நிறையப் படித்திருக்கிறேன்' என்ற மமதையோடு சினிமாவுக்குப் போனால் எதையுமே எனக்குக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். நேத்துதான் மஞ்சள் பையோடு ஊரிலிருந்து வந்தவன் போல புதிதாகப் போனால்தான் எனக்கு லாபம். பூஜ்ஜியத்திலிருந்துதான் மறுபடியும் ஆரம்பித்தாக வேண்டும். உழைப்புக்கு யோசிக்காதே'' என்றான்.

நிம்மதியாகத் தூங்கினேன் அன்று இரவு.

அதன்பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், டெலிபோனில் தொடர்ந்தது எங்கள் நட்பு.

அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் உத்தியோகமும் நெடுநாள் நீடிக்கவில்லை எனக்கு. ஒரே வருடத்தில் வெளியேறினேன்.
ஒரு டீ, ஒரு சிகரெட்... காலையில் பதவி விலகல் கடிதம் கொடுத்து, மாலையில் வெளியேறி விட்டேன்!

அடுத்து என்ன எனத் தெரியாமல் தடுமாற்றத்தோடு நான் நின்றிருந்த காலம் அது. ஓடிவந்தான் திருப்பதி.
என் வாழ்வில் புதிய அத்தியாயத்தை அவனே துவக்கி வைத்தான்.

திருப்பதி, நான், ராஜசேகரன் (இப்போது விகடனின் தலைமை புகைப்படக்காரன்), அருணாச்சலம் (இவனும் விகடனின் முன்னாள் மாணவ நிருபரே, அந்தச் சமயத்தில் சன் டி.வி.யில் நியூஸ் ரீடராக இருந்தான். இப்போது நாலைந்து கேரவேன் வைத்திருக்கும் தொழிலதிபர். பிரஷாந்த் உட்பட பல திரைப் பிரபலங்களுக்கு மேனேஜர்), மற்றும் சுபா (மாணவ நிருபராக இருந்தபோது எனக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர் இப்போது ராடன் டி.வி.யில் கிரியேடிவ் ஹெட்) ஐந்து பேரும் சேர்ந்து ஒரு நிறுவனம் ஆரம்பித்தோம்.

சுரேஷ் கிருஷ்ணாவிடமிருந்து வெளியேறி தனியாக படம் இயக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான் திருப்பதி. அந்த நேரத்தில்தான் இந்தக் கூட்டணி.
டி.வி.க்கும், சினிமாவுக்கும் விளம்பரப் படங்கள் எடுத்துக் கொடுத்தோம். `நிஜம்' என்ற பெயரில் விஜய் டி.வி.க்காக ஒரு டெலி பத்திரிகை தயாரித்துக் கொடுத்தோம்.

டெலிவிஷன் என்னும் மீடியாவை எங்களுக்கு கற்றுக் கொடுத்தான் திருப்பதி. நல்ல பெயர் கிடைத்தது எங்கள் உழைப்புக்கும் படைப்புகளுக்கும்.

இந்நிலையில் குருட்டு அதிர்ஷ்டம் என்று சொல்வார்களே அப்படி ஒரு குருட்டு அடித்தது எனக்கு!
`என்னங்க சௌக்கியமா?' என்ற டெலிவிஷன் தொடரை விஜய் டி.வி.க்காக இயக்கித் தரும் வாய்ப்பு!
தயாரிப்பாளர் மூலிகை மணி வேங்கடேசன் என்ற பிரபல சித்த மருத்துவர். என் நலம் விரும்புவர்களில் முக்கியமானவர்.

"இதுஒரு டெலி ஹெல்த் பத்திரிகையாக வர வேண்டும். உன்னால் செய்து தர முடியுமா?'' என்றார்.
போனேன் திருப்பதியிடம். கைகளைப் பிசைந்தபடி நின்றேன்.

"உன்னால் முடியும். நம்பு. அடிச்சு தூள் கிளப்பு'' என்றான் என் மீது துளி நம்பிக்கையும் குறையாதவனாக.

கர்வத்தோடு களம் இறங்கினேன். இருபத்தாறு வாரங்கள் வெற்றிகரமாக வெளியானது `என்னங்க சௌக்கியமா?' எண்ணம், எழுத்து, இயக்கம்: ஜி.கௌதம்.

பல மாதப் போராட்டத்துக்குப் பின்னர் திருப்பதி சினிமா டைரக்டரானான். தெலுங்குத் திரையுலகம் அவனை அள்ளி அரவணைத்தது.
முதல் படம் `கணேஷ்'. வெங்கடேஷ், ரம்பா, மதுபாலா நடித்த அந்தப் படம் மாநில அரசின் ஏழு நந்தி விருதுகளை வாரிக் குவித்தது. ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனை விடவும் அட்டகாசமான படம்.

நாங்கள் பார்த்துக் கொள்ளும் நேரங்கள் அரிதானது.

ஒரு சுபயோக சுப தினத்தில் விகடனில் இருந்து அழைப்பு வந்தது எனக்கு!
`ஷாப்பிங் ப்ளஸ்' என விகடனுடன் இலவச இணைப்பாக வெளியான விளம்பர இதழை பொறுப்பேற்று நடத்தித் தர முடியுமா என்றார்கள்.

டெலிவிஷன் மீடியாவில் பண ருசி பார்த்துக் கொண்டிருந்த என்னால் முழு நேரப் பத்திரிகைப் பணிக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை.

"நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டே இந்த வேலையையும் பாருங்கள்'' என ஸ்பெஷல் அனுமதி கொடுத்தார் ஜே.எம்.டி. (இப்போது விகடன் பதிப்பாளர். எம்.டி.யின் புதல்வர்).

பகுதி நேரமாக ஷாப்பிங் ப்ளஸ் வேலைகளையும், மிகுதி நேரத்தில் டெலிவிஷன் வாய்ப்புகளையும் செய்து கொண்டிருந்தேன்.

டெலிவிஷனில் ஒரு ரன், இரண்டு ரன் என ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்த எனக்கு சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பையும் விகடனே கொடுத்தது.

'விகடன் பேப்பர்' ஆரம்பித்த சமயம்... அதற்கான டி.வி. விளம்பரம் எடுத்துத் தரச் சொன்னார்கள்.

ஐந்து லட்சம், எட்டு லட்சம் என யார் யாரோ வந்து பணம் கேட்டனர். `அதெல்லாம் முடியாது ஒரு லட்சம்தான் தருவேன். முடியுமா?' என்று கூறி திருப்பி அனுப்பினார் ஜே.எம்.டி.

விகடனில் எனது மறுபிரவேசத்துக்குக் காரணமான கே.பாலசுவாமிநாதன் (அப்போது விகடனின் ஜெனரல் மேனேஜர். இப்போது ஜெயா டி.வி.யில் வைஸ் பிரசிடெண்ட்) தான் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்.
விளம்பரத்துக்கான ஐடியாவை ஜே.எம்.டி.யிடம் சொல்லி, ஒப்புதல் வாங்கி, அலுவலகத்தில் முன்பணம் வாங்கி, நடிப்பதற்காக தலைவாசல் விஜய் உட்பட பலரிடம் பேசி நாள் குறித்து... விளையாட்டுப் போல எல்லாம் நடந்து விட்டது.
விடிந்தால் ஷூட்டிங். வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தேன் நான்!

ஒளிப்பதிவாளராக நான் தேர்ந்தெடுத்திருந்தது சினிமா (டும் டும் டும் உட்பட பல படங்கள்) ஒளிப்பதிவாளரான ராம்ஜி. P.C.SRIRAM சிஷ்யர்.

`அரைகுறை தொழில் நுட்பத்தோடு இவ்வள்வு பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டோமோ' என மனம் குழம்பிக் கொண்டிருந்த இரவு அது.

மூக்கு வியர்த்திருக்கக் கூடும். எங்கிருந்தோ போன் பண்ணினான் திருப்பதிசாமி.

"என்னடா என்ன பண்றே?'' நான் என் பயத்தைச் சொன்னேன்.

"உடனே கிளம்பு. வீட்டுக்கு வா. நான் இன்னைக்கு தான் ஹைதராபாத்ல இருந்து வந்தேன்'' என்றான். ராவோடு ராவாக தண்டையார்பேட்டையில் இருந்த அவன் வீட்டுக்குப் போனேன்.

கைவசம் நான் எடுத்துப் போயி இருந்த `ஸ்டோரி போர்டை' வாங்கிப் பார்த்தான்.

"அதான் பக்காவா ப்ளான் பண்ணியிருக்கியேடா. அப்புறம் ஏன் பயப்படுறே? உன்னால் முடியும். நம்பு. அடிச்சு தூள் கிளப்பு'' என்றான்.

டேபிளில் இருந்த ஒரு தெலுங்குப் பட வீடியோ கேசட்டை எடுத்து டெக்கில் ஓட விட்டான். ஸ்டோரி போர்டை ஒரு கையிலும், டி.வி. ரிமோட்டை மறு கையிலும் எடுத்துக் கொண்டு விளக்க ஆரம்பித்தான்.

"இதோ பார் இதுதான் டூ ஷாட். இது க்ளோஸப். இது மிட் க்ளோஸப். இது சஜஸ்சன் ஷாட்.''

ஒரு இரண்டு மணி நேரம் பாடம் நடந்தது.

"போடா போ. நாளைக்கு நான் வேற வேலை எதையும் வச்சுக்கல. வீட்லதான் இருப்பேன். நீ நம்பிக்கையோட ஷூட்டிங் நடத்து. எதுவாச்சும் டவுட்னா போன் பண்ணு. ஓடி வர்றேன்'' என்றான். தூங்கி விட்டான்.

விடியாத இருளில் நான் வீடு திரும்பினேன். குளித்து முடித்து சூரிய உதயம் பின்னணியில் ஷாட் வைக்கப் போய்விட்டேன்.

திருப்பதி என் பாக்கெட்டிலேயே இருப்பதாக ஒரு உணர்வு.

"ம் நடத்து. உன்னால முடியும்''

ஒரே நாளில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வெவ்வேறு விளம்பரங்கள் எடுத்து முடித்தேன்!

`பேக் அப்' சொல்லிவிட்டு திருப்பதிக்குப் போன் போட்டேன்.

"என்னடா கலக்கிப்புட்டியாம்ல'' என்றான்.

வெற்றிப் பெருமிதத்தோடு நிம்மதிப் பெருமூச்சும் கலந்து சிரித்தேன்.

அதன்பிறகு இரண்டு வருடங்கள் விகடன் நிறுவனத்தின் ஆஸ்தான விளம்பரப் பட இயக்குநர் நான்தான். இருபது படங்களுக்கு மேல் எடுத்துக் கொடுத்தேன். கோவை ஷோபா கார்னர், கேரளாவில் சபரி சோப் என சுமார் பத்து வெளி விளம்பரப் படங்களையும் இயக்கினேன்.

சில வருடங்களில்... மறுபடியும் வாழ்க்கைத் திருப்பம்!

ஒரு நன்றிக்கடன் தீர்ப்பதற்காக ஜெயா டி.வி.யின் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பதவி ஏற்றேன். தேடி வந்து கை குலுக்கினான் திருப்பதி.

"உன்னால் முடியும். அடிச்சுத் தூள் கிளப்பு.''

ஒரு வருடம் ஓடியது. பெயரோடும், புகழோடும் இருக்கும்போதே ஜெயா டி.வி.யிலிருந்து வெளியேறினேன். நேராக திருப்பதியிடம் வந்தேன்.

"டேய் என்னை உன் உதவி இயக்குரா சேர்த்துக்கோ'' என்றேன். `ஆஸாத்' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தான் அவன்.

"நீ எப்ப வேணும்னாலும் எங்கூட வரலாம். ஆனால், சினிமாவில் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமே. பணக் கஷ்டம் வரும். தாங்கிக்க முடியாது உன்னால். பிள்ளை குட்டிக்காரன் நீ. வீட்டுக்கு மாதம் முழுவதும் வருவது போல ஏதாவது பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு வாடா'' என்றான்.

பேங்க் பேலன்ஸ் எல்லாம் துடைத்தெடுத்து சொந்தமாக ஒரு தொழில் ஆரம்பித்தேன். திறப்பு விழாவுக்கு வர முடியாததால் அடுத்த வாரம் வந்து வாழ்த்தினான் திருப்பதி.

"உன்னால் முடியும். நம்பு''

ம்ஹும். என்னால் அது மட்டும் முடியாமல் போய்விட்டது.

தொழிலில் நஷ்டம்!
பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்த திருப்பதிக்கு போன் போட்டேன் உதவி கேட்டு.

"திருப்பதி உடனடியாக ஒரு லட்ச ரூபாய் பணம் வேணும். நாளைக்கு பேங்க்ல கட்டணும்''

"ஓடி வாடா'' என்றான். போனேன். எதுவும் பேசாமல் செக் எடுத்து நீட்டினான்.

"என்னாச்சுடா. தொழிலை கவனமா நடத்து. சினிமா கனவை கொஞ்சம் ஒத்திப் போடு. நான் எங்கேடா போகப் போறேன். நீ எப்ப வந்தாலும் என் ரெட் கார்பெட் உனக்கு'' என்று புத்தி சொன்னான்.
போராட்டமாகக் கழிந்தது வாழ்க்கை. திருப்பதியின் வாழ்க்கையும்தான்.
`மூன்றாவது படம் தமிழில்தான்' என கறாராக முடிவெடுத்து வாய்ப்புக்காக அலைந்தான். வென்றான்.

திருப்பதிக்கு `நரசிம்மா' படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
"தொழிலைக் கவனி. நிலைப்படுத்து. அடுத்த படத்தில் வந்து சேர்ந்து கொள்'' என்றான் திருப்பதி.

"ம்'' சொன்னேன்.

அவனிடம் நான் வாங்கியிருந்த கடன் கொஞ்சம் லேசாக எங்கள் அன்பை உரசிப் பார்த்தது! சிறு ஊடலுடன் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்த ஒரு சில நாட்கள் அவை.

அந்த கறுப்பு சனிக்கிழமையை இப்போது நினைத்தாலும் ஈரல் குலை நடுநடுங்குகிறது!

அதிகாலை மணி மூன்றரை இருக்கும். செல்போன அலறியது. எடுத்தேன். தூக்கம் தூக்கிலிட்டுக் கொண்டது!

"நம்ம திருப்பதி...''

"என்னாச்சு திருப்பதிக்கு?''

"நைட் நடந்த ஆக்ஸிடண்ட்ல இறந்துட்டார். ஸ்பாட்லேயே எக்ஸ்பயர்ட்!''

செத்துப் போனான் என் நண்பன். கூடவே என் எதிர்காலமும் என் மேல் எனக்கிருந்த நம்பிக்கையும்!

இனி யார் சொல்வார் என்னிடம்... "உன்னால் முடியும். நம்பு'' என்று?!

இங்கே... இப்போது வலைப்பூவில் நான் பலரை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து தோழி அனிதா பவன்குமார் எனக்கொரு மெயில் அனுப்பியிருக்கிறார்.
"மத்தவங்களை உற்சாகப்படுத்துவது ஒரு டேலண்ட். அது உங்ககிட்ட நிறைய இருக்கு கௌதம்''

என்னை நான் நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன். திருப்பதிசாமி என்னில் கொஞ்சம் இருக்கிறான். அவனைச் சாக விட மாட்டேன் நான் சாகும் வரை!

நண்பர்களே! கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் உங்களை. உங்களுக்குள் இருக்கும் திருப்பதி சாமியையும், உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பதிசாமியையும்கூட சாக விட்டு விடாதீர்கள்.

போதும் நண்பர்களே.. இதற்கு மேல் என்னால் என்னில் கரை புரளும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொஞ்சம் தனிமை வேண்டும் எனக்கு. இன்று சனிக்கிழமை... வீங்கிப்போன முகத்தோடு நாளைக் காலையில் உங்களைச் சந்திக்கிறேன்!

திருப்பதிசாமி பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்..

முந்தைய 'எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்' : இங்கே

57 comments:

மாயவரத்தான் said...

திருப்பதிசாமியுடன் அதிக தொடர்பில்லை. 'பாட்ஷா' திரைப்படத்தின் போது சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் ஓரிரு முறை 757 அண்ணா சாலையில் சந்தித்திருக்கிறேன். (பாட்ஷா படத்தில் ரஜினியின் அருகில் இருந்த ஆளுயர நாய் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுடையது...ஒருநாள் கிருஷ்ணாவைப் பார்க்க வந்து இயலாமல் திரும்பிய தெலுங்கு ரசிகர்களை ரஜினி பார்த்து ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த சம்பவம் என்று சுவாரசியமான செய்தி ஜூ.போ.வில் வந்திருந்த சமயம் அது).

நல்ல மனிதர். தெரியாத ஆளையும் பிடித்திழுத்து பேசுவார்.

நல்ல மனிதர்களை காலம் விரைவில் விழுங்கி விடுகிறது.

மேலே உள்ள கட்டுரையை முழுதும் படிக்க எனக்கு முடியவில்லை. புகைப்படத்தைப் பார்த்த உடனே எனக்கு கண்ணீர் வந்து விட்டது. ஸாரி.

நிலாரசிகன் said...

அழ வைத்துவிட்டீர்கள் கெளதம்...
இவன் தான் நண்பன்.

//"இந்தச் சகதியே போதும் என திருப்திப்பட்டுக் கொண்டு அப்படியே சுகமாகக் கிடக்கும் எருமை மாடு மாதிரி யோசிக்காதே. அது என்றைக்கும் நல்ல தண்ணீர்க் குளத்தை நாடிப் போகாது. அதைத் தேடி அலைய வேண்டுமே என அங்கலாய்ப்போடு அப்படியே சோம்பிக் கிடந்துவிடும். நீ அப்படியல்ல, தேடு. தேடிக் கண்டு பிடி. மனச்சோர்வு அடையாதே. //

எவ்வளவு நிதர்சனம்...

மனம் வலிக்கிறது...இப்படி ஒரு உன்னத நண்பரை இழந்ததற்கு...

ஜயராமன் said...

அற்புதமாக ஒரு தனி மனித போராட்ட நிஜத்தை எழுதியிருந்தீர்கள். விருவிருப்பாக படித்தேன். இறுதியில் மனது கனத்து விட்டது. திருப்பதி மாதிரி மனிதர்கள் அபூர்வம். அவர் நட்பு கிடைத்தது தங்களுக்கு ஒரு பெரிய பலம். நன்றி

கதிர் said...

இதுதான் நான் உங்கள் வலைப்பூவுக்கு முதல் வருகை.

கோர்வையான எழுத்துக்கள் இழுத்ததனால் இவ்வளவு நீளமான பதிவையும் படித்து முடித்து விட்டேன்.

உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அன்புடன்
தம்பி

நாகை சிவா said...

நெகிழ வைத்தது கெளதம்.

Anonymous said...

திருப்பதிசாமி.... பெயரை அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்போதுதான் சிறிதாவது அறிந்து கொள்ள முடிந்தது.
நல்ல நண்பன் தகப்பனுக்கு சமானம்.
தந்தையை இழந்த வேதனை...என்னால் புரிந்துக் கொள்ள முடியும்.

Anonymous said...

மனதை என்னவோ செய்கிறது.
படித்த எனக்கே இப்படி எனில்...
பழகிய உங்கள் நிலை எண்ணிப்பார்க்கவே சங்கடமாகவே இருக்கு...

Anonymous said...

மனதை என்னவோ செய்கிறது.
படித்த எனக்கே இப்படி எனில்...
பழகிய உங்கள் நிலை எண்ணிப்பார்க்கவே சங்கடமாகவே இருக்கு...

Jazeela said...

நிஜத்தை நிஜமாக எழுதி இருக்கிறீர்கள். நண்பரின் இழப்பு ஈடுகட்ட முடியாததுதான். உணர்ச்சிவசப்பட்டு முடிக்காமல் ஒழுங்காக முடித்திருக்கலாம்.

Unknown said...

கை வேலைகளயும் மறந்து கண்ணீரோடு படித்து முடித்தேன். ப.திருப்பதிசாமியைப் பற்றி பல முறை படித்திருக்கிறேன் - குறிப்பாக, அவர் தந்தை, மகன் மறைந்த பிறகு கொடுத்த பேட்டி - மறக்கவே முடியாது.

உங்கள் வாழ்க்கையும் சரி, ப.திருப்பதிசாமி அவர்களின் வாழ்க்கையும் சரி, inspirational. வாழ்த்த வயதிருந்தும் வணங்கத் தான் தோன்றுகிறது.

ILA (a) இளா said...

;(, படித்துவிட்ட பிறகு எழுத எதுவுமே தோணாமல் கண்களில் கண்ணீர் ததும்பியபடி

நண்பன்
இளா

Prabu Raja said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

உருக்கமான நிஜம்.

திருப்பதி சாமி அவர்களை இதுவரை ஒரு சினிமாக்காரராக மட்டும்தான் தெரியும்.

சிறில் அலெக்ஸ் said...

Excellent... reminded me.. I need to call my friends!!

(sry. no Tamil)

An amzing article. Congrats.

Anonymous said...

nanba...

today i read your blog.excellent!!!

unnaipolave innum un ezhuthum maravillai.

mediasiva

செல்வநாயகி said...

திருப்பதிசாமியை நான் நேரிடையாக அறிந்தவளில்லை. ஆனால் என் தோழியர் இருவருக்கு அவர் நல்ல நண்பர். எனவே அவர் குறித்தும், அவரின் மரணம் குறித்தும் அறிய நேர்ந்தது. என் தோழியும் நானும் அந்த மரணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நாள் வலியானது. அவர் பற்றிக் கொஞ்சம் செவிவழியாகவேனும் அறிந்தவள் என்ற முறையில் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்பதிவுக்கு நன்றி.

Anu said...

Your friend is still alive within you. He will be encouraging you always in your thoughts.

நவீன் ப்ரகாஷ் said...

நெகிழவைத்துவிட்டீர்கள் கெளதம் !!

G Gowtham said...

பின்னூட்டத்திலும் போனிலும் நேரிலும் பேசிய சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஒவ்வொருவரிடமும் விரிவாகப் பேசுமுன் ஒரு சில தகவல்களை சொல்லிவிடுகிறேன்!

"அந்த ஒரு லட்சத்தை திருப்பிக் கொடுத்துட்டியா?" என நண்பர்கள் இருவர் எனக்கு போன் பண்ணிக்கேட்டார்கள்.
"கொடுத்துட்டிங்களா, அப்படின்னா அதை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு விடுங்கள்" என்றார் நண்பரும் நலம் விரும்பியுமான வெங்கட். சுபா இவரது மனைவி. சுபாமூலமே அறிமுகம் என்றாலும் அவரைவிட எனக்கு நெருக்கமாகிப் போனவர்!
ஒரு சம்பவம்... மயிலாப்பூர் கோவிலில் திடீர்க்கல்யாணம் செய்துகொண்டு வெளியே வந்த்போது வாழ்த்த வந்த வெங்கட்,"எங்கே தங்கப் போகிறீர்கள்?" என்றார்.
"தெரியல" என்றேன்.
ஒரு வாரத்துக்கு முன்பு கிரஹப்பிரவேஷம் நடத்திய புது பங்களாவின் சாவியை தூக்கி என் கையில் கொடுத்தவர் வெங்கட். இன்னும் இருக்கு நிறைய, தனியே பதிகிறேன் இவர் பற்றி.

ஆக, அந்த ஒரு லட்சம் குழப்பத்துக்கு இதோ விளக்கம்..
திருப்பதியிடம் கற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுக்க இயலாதே!
பெற்றுக் கொண்டதைக் கொடுத்து விட்டேன்.

அந்த சமயத்தில் ராஜசேகரன் வழியாகவே நானும் திருப்பதியும் பேசிக்கொள்வோம் (தில்லானா மோகனாம்பாள் 'சொல்லுங்க மாமா' பாணியில்). ராஜசேரன் மூலமாகவே பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

'இவ்வளவு நெருக்கமான நட்பை கடன் உரசிவிட்டதா?!' எனவும் ஆதங்கத்தோடு சிலர் கேட்டனர்.

கணவன் - மனைவிக்கிடையேதான் விவாகரத்து நடக்கிறது. காதலர்களுக்கிடையேதான் ஊடல் நுழைகிறது! நெருக்கமான நண்பர்களுக்கிடையேதான் தம்மாத்துண்டு மேட்டருக்காக விரிசல் ஏற்படுகிறது! எங்களுக்கும் அதுவே நிகழ்ந்தது...

வாங்கிய கடனைத்திருப்பிக் கொடுக்க நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. வேறு ஒரு நண்பன் தான் நடத்திவந்த தொழிலின் லாபக்கணக்கை தனியே பிரித்தெடுக்கும் நோக்கத்தில், என் நிறுவனத்தின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக் கொண்டான். அதைப் பற்றி அரைகுறையாக கேள்விப் பட்ட ஒரு 'இடைச்செருகல்' திருப்பதியிடம் சென்று, "உங்க ஃப்ரெண்டு பணம் இல்லாம கஷ்டப்படுறாருனு நீங்கதான் சொல்லிக்கறிங்க. அவர் ரகசியமா நிறைய பிசினஸ் நடத்துறார்" என 'கதை'த்துவிட்டான்.
திருப்பதியின் துர்க்குணங்களில் ஒன்று.. அவசரம்! என்னிடம் விளக்கம் கேட்காமல் அவசரப்பட்டு விலகிவிட்டான். எங்கே போகப் போகிறான் விட்டுப் பிடிக்கலாம் என நானும் இருந்துபோனேன். அவன் இறந்துபோனான்!

என்னிடம் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி..'தேன்கூடு போட்டிக்கு இந்தப் பதிவு தேவைதானா?'
தேன்கூடு போட்டிக்கு இது அனுப்பப்பட்டிருக்கக் கூடாதுதான்.
ஒப்புக்கொள்கிறேன்! இது நான் தெரிந்தே செய்தது.
பொய்மையும் வாய்மையாகும் குறள் நிலையை ஒத்தது என் செயல்.

நான் வலைப்பூ ஆரம்பித்து பல நாளாகியும் என்னை வந்து படிக்காத பலர் தேன்கூடு போட்டிக்காக நான் அனுப்பிய படைப்புகள் வாயிலாகவே எனக்குப் பரிச்சயமானார்கள்.

திருப்பதி என்ற ஒருவன் வாழ்ந்தான் என்பதை நிறயைப் பேர் படிக்கவேண்டும் என நினைத்தேன். தேன்கூடு போட்டிக்கான படைப்புகளை மட்டுமே படித்துப்போகும் நபர்களையும் வாசிக்கவைக்க ஆசைப்பட்டேன்.

தவிர பல இடங்களில் சொடுக்குக்கு இந்தப் பதிவினை கிடைக்கச் செய்யவும் முடிவெடுத்தேன்.
தேன்கூடுதான் அதற்கான எனக்குத்தெரிந்த தளம். நண்பர் பாலாவிடமும் இது குறித்து விவாதித்தேன். (இப்போதெல்லாம் பதிவிடுவதற்கு முன் யாராவது ஒருவரிடமேனும் கருத்து கேட்டுவிடுகிறேன்!)
பின்னூட்டத்தில் இதை ஏன் தேன்கூடு போட்டிக் களத்தில் சேர்த்தேன் என சொல்லிவிடுங்கள் என்றார் பாலா.
இதோ சொல்லிவிட்டேன்.

அடுத்த விஷயம். எனக்குக் கொடுத்தார்கள் நீங்களும் சாப்பிடுங்கள் தொடருக்காக நான் எழுத நினைத்த பதிவு இது. திருப்பதியும் சேர்ந்து போனதால் இரு பாகங்கள் ஒன்றாகிவிட்டன. திருப்பதியை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் எனது கோமாளித்தனங்கள் குறித்தும் சொல்லியாக வேண்டுமே. அதாவது இந்தப் படத்தில் இண்டர்வெல் வரை எம்.டி.தான் ஹீரோ. அவர் அன்புப் பரிசு கொடுத்ததும் திருப்பதி எண்ட்ரி.. இண்டர்வெல் கார்டு!

அப்புறம் உடன்பட்டோ படாமலோ இதைபோட்டிக்கென அனுப்புவதால் அதற்கான இலக்கணத்தையும் (ஒரு படைப்பாக) நான் பூர்த்திசெய்தாக வேண்டும், செய்ய முயற்சி செய்ததால் சுய தம்பட்டம் தவிர்க்க முடியாமல் போய்விட்டது! என்பார்வையில் எழுதப்பட்டுவிட்டது!

மிக முக்கியமாக ஒரு சேர்க்கை.
"எம்.டி. பிஸி என்று சொல்லி என்னை இரண்டு நாட்கள் சென்னையில் தங்க வைத்தார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிச் சொல்லி அந்த இரண்டு நாட்களில் என்னை கூர்ந்து கவனித்தார்கள். ஆசிரியர் குழுவினர் எனக்கு வைத்த ரகசிய தேர்வு அது. பையன் தேறுவானா என நடை உடை செயல் பார்த்து எம்.டி.க்கு ரிப்போர்ட் கொடுத்தார்கள் அந்த இரு நாட்களில் என பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

இவ்வளவு நீளமான பதிவை நான் செய்வேன் என நான் கற்பனையிலும் நினைத்திருக்கவில்லை. பொறுமையுடன் படித்து விமர்சனம் செய்த, ஆறுதல் சொன்ன, கேள்விகள் கேட்ட, நம்பிக்கை கொடுத்த அத்தனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

Anu said...

Gowtham
Meetings and Partings are happenings of the world
I knwo its easily said but difficult to practise..
But the thing is you are continuining what your friend used to do and by doing so you are keeping your friend alive.

கார்த்திக் பிரபு said...

என்னவென்று பின்னூட்டமிடுவது...நான் உங்களிடம் தொலைபேசியிலேயே பேசிக்கொள்கிறேன்

Anonymous said...

Gowthan Ji,

I've no words to comment this post but should say its an excellent stuff ...

வலைஞன் said...

விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தை ஆரம்பம் முதலே ரசித்து வந்திருப்பவன் நான். ஒவ்வோராண்டும் யார் அவுட்ஸ்டாண்டிங் நிருபர் எனவும் பிற தேர்வுகளையும் ஆவலோடு எதிர்நோக்குவேன். புதிய மாணவ நிருபர் பட்டியலில் நம்ம பகுதிக்கு யார் என்று தேடிப்பார்ப்பதும் வழக்கம். பின்னாளில் விகடன் மாணவ நிருபர்கள் விகடனில் சேர்ந்திருப்பதையும் பிற நிறுவனங்களில் சாதனைகள் புரிவதையும் சிலிர்ப்போடு பார்த்து ரசித்திருக்கிறேன். திருப்பதிசாமியின் மரணம் குறித்த செய்தி வந்தபோது திரைப்பட இயக்குநர் என்பதைவிட விகடன் மாணவ நிருபர் என்பதே என்னை அதிகம் பாதித்தது.

சமீபத்தில் ஒரு எழுத்து என்னை கலங்க வைத்து என்றால் உங்கள் கட்டுரை தான். தலைப்பை இன்று காலையிலேயே பார்த்தபோதும் வாசிக்காமல் விட்டு விட்டேன். இப்போது வாசிக்கத் தோன்றியது. இதை வாசிக்காமல் விட்டிருந்தால் நான் என்ன வாசகன். சே!

நகைச்சுவை கலந்த உங்கள் நடை ரசிக்கவைத்தது. ஆனால் நிறைவில் கலங்க வைத்தது. நன்றி. ஒரு நல்ல நண்பனுக்காக...!

G Gowtham said...

'இவ்வளவு திறமைசாலியான திருப்பதிசாமி எப்படி நரசிம்மா என்ற தோல்விப்படத்தை எடுத்தார்?!'
இந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.

தெலுங்கில் இரண்டு வெற்றிப்படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழில் படம் பண்ண ஆதங்கத்தோடு இருந்தான் திருப்பதி. பல மாதப் போராட்டத்துக்குப் பிறகே நரசிம்மா வாய்ப்புக் கிடைத்தது.
முதல் படம் போலத்தான் இதுவும்!

நிறைய பிரச்னைகளை சந்தித்தான் திருப்பதி.

நிறைய வசனம் பேச ஆசைப்பட்டார் விஜயகாந்த். மறுத்து சண்டை போட்டு பட வாய்ப்பை இழக்க விருப்பவில்லை திருப்பதி. அவர்கள் ஆசைப்பட்டதையும்கூட படம் பிடித்தான்.

இறுதிகட்டத்தில் எடிட்டிங் டேபிளில் சரியை மட்டும் வைத்து, சரியில்லாதவற்றைப் புரியவைத்து
வெற்றிப்படமாக்கும் நம்பிக்கையில் இருந்தான்.

ஆனால் படப்பிடிப்பு முடிவதற்குள் இறந்து போனதால் இருக்கும் காட்சிகளைவைத்து அவர்களே எடிட் செய்து தங்களுக்குப் பிடித்தாற்போல் படமாக்கி விட்டார்கள்.

திருப்பதி இருந்து படம் ரிலீஷாகி இருந்தால் நரசிம்மா வெற்றிப்படமே!

இன்னொரு வியப்பையும் நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அன்றைக்கு (19.08.2006 சனிக்கிழமை) இந்தப் பதிவை செய்துவிட்டு, அலுவலகத்தைவிட்டு வெளியேறி... வீட்டுக்குள் காலெடுத்து வைக்கும்போது மணி அதிகாலை(?!) 1:30.
மனநிலையை மாற்றும் நோக்கத்தோடு டி.வி.யை ஆன் செய்தேன். வழக்கமாக சன்னோ, விஜய்யோ ஓடி வரும் என் வீட்டு டி.வி.யில் அன்று முந்திக்கொண்டு வந்தது ஜெமினி டி.வி.!
அதில் திருப்பதியின் கணேஷ் படம் ஓடிக்கொண்டிருந்தது!!
அப்பாவையும் தங்கையையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு கதறி அழுது கொண்டிருந்தார் கதாநாயகன் வெங்கடேஷ்!!!
இதை என்னவெனச் சொல்வது?!

வெண்பா said...

நெகிழ வைத்த பதிவு. ஏற்றத்திலும் தாழ்விலும் ஊக்கமளிக்க ஒரு நண்பன் இருந்தால் யாருமே கலங்கி நிற்க மாட்டார்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கண்களில் ஈரம்
இதயத்தில் பாரம்

உறவினர்களின் இழப்பைவிடவும் நண்பர்களின் இழப்பு மனதை மிகவும் காயப்படுத்தி விடுகின்றது.

தூரன் குணா said...

அன்புள்ள கொளதம்,

துயரப்படுத்திவிட்டீர்கள்....

தூரன் குணா.

இப்னு ஹம்துன் said...

அன்பு ஜி.ஜிஜீ,
ஆனந்தவிகடன் வாசகனாக திருப்பதிசாமி மிகவும் பரிச்சயமான பெயர். (அப்போது நானும் கல்லூரி மாணவனே.). அவருடனான உங்கள் நட்பின் நினைவலைகள் கலங்கவைக்கின்றன.

உங்களுக்கு எங்களூர் ரகோத்தமனையும் தெரிந்திருக்குமே! (தூரத்திலிருந்தே நான் பார்த்தேன், எனக்கு அதிகம் தெரியாது, ஊர்க்காரர் என்பதால் தான் கேட்கிறேன் :-)

சுபமூகா said...

சாதிக்க நினைத்து வெற்றி நடை போடும் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சுவாரசியமானவை. உங்கள் நினைவுகள் கரை புரண்டோடும் ஒரு காட்டாறாக மனதை நிறைத்தது. 'உன்னால் முடியும்' என்று ஊக்குவித்து கரையேற்றும் ஒரு நண்பனின் இழப்பு மிகக் கொடியது தான்.
முன் பின் பழக்கமில்லாத திருப்பதி சாமி இறந்த செய்தியை நான் முன்பு அறிந்த போது மிக வேதனைப் பட்டேன். இப்போது தங்களது இந்த இரண்டு படைப்புகளால் அந்த வேதனை இன்னும் பன்மடங்காகிப் போனது. ஏனெனில், திருப்பதி சாமியுடன் மிக நெருங்கிய பழக்கம் கொண்ட ஒரு உணர்வை இந்த படைப்புகள் ஏற்படுத்தி விட்டன.

SP.VR. SUBBIAH said...

திருப்பதிசாமியை எங்கள் நெஞ்சிலும் உட்காரவைத்து விட்டீர்களே கெளதம் - அது உங்கள் எழுத்தின் மேன்மையால் நடந்ததா - அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்பதிசாமி கிடைத்தால் எப்படியிருக்கும் என்று ஆதங்கப்பட்டதால் நிகழ்ந்ததா - சொல்லத்தெரியவில்லை - கண்ணீர் திரையிட்டு விட்டது!

ப்ரியன் said...

என்னவென்று பின்னூட்டமிடுவது கெளதம்.பதிவிட்ட அந்தநாளெ படித்துவிட்டு பாலாவிடம் சொன்னேன் மனம் கனத்தது இதயம் வலித்தது கண்கள் பனித்தது என்று.

நல்ல நண்பர்கள் நம்மை செதுக்குகிறார்கள் என்பது உங்கள் விடயத்தில் எவ்வளவு உண்மை.

இறைவன் தனக்கு பிடித்தமானவர்களை உடனடியாக உலகத்திலிருந்து கூட்டிக் கொள்கிறான் என சொல்வது வழக்கம் திருப்பதிசாமி விசயத்தில் அது முற்றிலும் உண்மை.

Anonymous said...

கெளதம், ஜெ.சந்திரசேகரன் எழுதிக்கொள்வது. சுசி.கணேசன், கல்பனா செட்! து.கணேசன் சொல்லித்தான் நீங்களும் வலையில் பின்னுவதை தெரிந்து கொண்டேன். முதலில் படிக்கையில் கோபம் கோபமாக வந்தது! விகடன் பட்டறை ஆள் இப்படி, நீளமாக சுய சரிதம் எழுதுகிறாரே? என்று!! உறவுகள் பற்றி எங்கே சொல்ல வருகிறீர்கள் என பொறுமை இழந்து தேடுகையில், திருப்பதிசாமி பற்றிய குறிப்பு வந்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தேன்! அவரது அகால மரணம் பற்றி தெரிந்ததும் பல நாட்கள் துக்கித்திருந்தேன்! பணி நிமித்தம் வடநாட்டிலேயே பல காலம் இருக்கவேண்டிய கட்டாயத்தினாலும், நடுத்தர வர்க்கத்து அத்தனை நிர்பந்தங்களுக்கு நானும் இரையானதாலும், மீண்டும் பத்திரிகைக்க்கோ, எழுத்துலகத்துக்கோ, இல்லை கலைகள் பக்கமோ வருவோமா என்று பயந்த எனக்கு, உயிர் மீட்பு செய்தது இந்த இணையங்களில் எழுதுவதே! தற்சமயம் சென்னை வாசி. எனவே, உங்கள் சுயசரிதமும் தி.சாமியின் நம்பிக்கை வார்த்தைகளும் என்னையே புதுப்ப்பித்துக் கொள்ள வைத்தன! மீண்டும் வரைய ஆரம்பித்துள்ளேன், உங்களை சந்திப்பதிலும் விருப்பம்.

பழூர் கார்த்தி said...

நிறைய நிகழ்வுகளுடன் நன்றாக விவரித்திருக்கிறீர்கள், முன்கதையை சற்று குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது !

RAANA MONAA said...

வணக்கம் சார்,

திருப்பதியண்ணன் பற்றிய கட்டுரையை படித்துவிட்டு உடனடியாக பதிலெழுத நினைத்து பலவாறு முயன்றும் கனத்த மனத்தினால் முடியவில்லை.
எனக்கு நன்றாக நினைவில் நிற்கிறது அந்த நாட்கள்.நீங்கள் "நிஜம்" தொகுக்க சுனில் சாரின் டெலிம்ஜும்முக்கு வந்த அந்த நாள்தான் என் வாழ்க்கையின் திருப்பம் நிகழ்ந்த நாள்.கல்வி வியாபாரத்தில் விரும்பியதை வாங்க வழியின்றி,வாழ்க்கையில் "டார்கெட்" இல்லா தறுதலையாய் சுற்றி திரிந்த என்னை தத்தெடுத்து எழுத கற்றுத்தந்த அந்த நாட்க்ள் நினைவிருக்கிறதா? அப்பொது உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.திருப்பதி,ராஜசேகர்,
சுபாக்கா,பொன்ஸி..
எல்லொரும் இப்போது மீடீயாவை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.

திருப்பதியண்ணன் இருந்திருந்தால் அவர்கூட இந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்திருப்பார்.அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாததே.

திருப்பதிக்கு பிடித்ததே கற்றுக்கொடுப்பதுதான் என்று நீங்கள் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.

இப்போழுது நீங்களும் அந்த பணியைதான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.என்னுடைய இன்றைய உயர்வுக்கு நீங்கள் அன்று பிடித்து வைத்த பேனாதான் காரணம்.
உங்களிடம் பயிற்சி பெற்ற எத்த்னையோ பேர் இன்று மீடியாவில் கலக்கிகொண்டிருக்கிறார்கள்.
கற்றுக்கொடுப்பது உங்கள் நண்பன் திருப்பதிக்கு பிடிக்குமேனில் கற்றுக்கொடுப்பதின் மூலம் அவரின் கனவை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறிர்கள் என்பதே "நிஜம்"

-ராஜ் மோகன் ( ராணாமோனா)

www.petaraap.blogspot.com

G Gowtham said...

நான் வலைப்பூ உலகத்துக்குள் வந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நான் சாய்ந்து கொள்ள இத்தனை தோள்களா என்பதை நினைத்து மகிழ்வாக இருக்கிறது!

கட்டுரையை முழுதும் படிக்க முடயாமல் அழுதிருக்கும் மாயவரத்தான் முதல்
இதோ முந்தைய பின்னூட்டம் இட்ட ராஜ்மோகன் வரை
ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேச விரும்புகிறேன். குங்குமம் இதழ் தயாரிப்பின் இறுதிப்பணிகளில் இருப்பதால் இந்த வார இறுதி நாட்களில் அத்தனை பேருக்கும் பதிலிடுகிறேன்.

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே!

துளசி கோபால் said...

ஒண்ணும் எழுதக் கைவரலை கெளதம்.

சினிமாக்காரங்களில் நல்ல நண்பர்களும் இருக்காங்க.
இல்லே நல்ல நண்பர்கள் சினிமாக்காரர்களா?

G Gowtham said...

மாயவரத்தான்,
//நல்ல மனிதர். தெரியாத ஆளையும் பிடித்திழுத்து பேசுவார்.//
நண்பா திருப்பதியின் குணம் அவனை ஓரிரு முறை சந்தித்த உன்னையும் (மற்ற வலை பதிவாளர்கள் என்ன இவன் ஒருமையில் அழைக்கிறானே என அதிர்ச்சி அடைய வேண்டாம். மாயவரத்தானும் நானும் ஒரே வருடம் விகடன் மாணவ நிரூபர்களாக இருந்தோம். வலைப்பக்கம் வரும் முன்னரே என் நண்பன் மாயவரத்தான்) கவர்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.
ஆமாம், இன்னும் முழுதாகப் படிக்கவில்லையா நண்பா?

நிலா ரசிகன்,
//மனம் வலிக்கிறது...இப்படி ஒரு உன்னத நண்பரை இழந்ததற்கு... //
திருப்பதியிடம் ஒரே ஒரு முறை பேசியிருந்தாலும் அவனை மறக்க முடியாது யாராலும்.
நிறைய உற்சாகம் கொடுப்பான்.
நிறைய சொல்லிக் கொடுப்பான்.
பொறாமை இல்லாமல் பழகுவான்.

ஜயராமன்,
//அற்புதமாக ஒரு தனி மனித போராட்ட நிஜத்தை எழுதியிருந்தீர்கள். //
திருப்பதி சினிமாவில் சீக்கிரம் ஜெயிக்க ஆசைப்பட்டான். மிகக் கடுமையாகப் போராடினான்.
காரணம் கிட்னி பழுதடைந்து அவதிப்பட்ட தன் சகோதரியை எவ்வளவு செலவழித்தாவது காப்பாற்றிவிட நினைத்திருந்தான். ஆனால் அவனுக்கு பணம் கிடைத்த நேரம் சகோதரி இறந்து போயிருந்தார்.
கடுகடும் போராட்டத்துக்குப் பிறகே ஜெயித்தான் திருப்பதி. ப்ச்!

தம்பி,
//கோர்வையான எழுத்துக்கள் இழுத்ததனால் இவ்வளவு நீளமான பதிவையும் படித்து முடித்து விட்டேன்//
நான் எப்படி இவ்வளவு பெரிய பதிவை இட்டேன் என என்னாலே நம்ப முடியவில்லை!

நாகை சிவா,
//நெகிழ வைத்தது கெளதம்.// நெகிழ்ந்ததால் நெகிழவைத்திருக்கிறேன்.
எல்லாப் புகழும் திருப்பதிக்கே!

சினிமாக்காரன்,
//avan maranam namakku gnanaththai tharattum //
தரும்!

மதுரன்,
//நல்ல நண்பன் தகப்பனுக்கு சமானம்.
தந்தையை இழந்த வேதனை...என்னால் புரிந்துக் கொள்ள முடியும். //
உங்களுக்கு என் ஆறுதல் தோழரே.
திருப்பதியும் அவன் தந்தையும் நிஜமாகவே ஆத்மார்த்தமான நண்பர்களே! இப்போதும் அவன் நினைப்பிலேயே விரக்தியோடு இருக்கிறார் திருப்பதியின் தந்தை.

ஜெஸிலா,
//உணர்ச்சிவசப்பட்டு முடிக்காமல் ஒழுங்காக முடித்திருக்கலாம். //
போட்டிக்கான ஒரு படைப்பாக மட்டுமே பார்த்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. உண்மை எழுதியதால் வசப்பட்டதை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

kekke pikkuni,
//வாழ்த்த வயதிருந்தும் வணங்கத் தான் தோன்றுகிறது. //
உங்கள் வணக்கத்துக்குரியவனாக வாழ முயற்சி செய்கிறேன், நன்றி

ILA(a)இளா,
//கண்களில் கண்ணீர் ததும்பியபடி //
கவலைப்படாதே சகோதரா
நமது செயல்களால் நாமே திருப்பதியை உயிர்ப்பாக வைக்க முயல்வோம்.

பிரபு ராஜா,
//உருக்கமான நிஜம்.//
ஒன்று தெரியுமா உங்களுக்கு,
நான், அருணாசலம், திருப்பதி, சுபா, ராஜசேகரன் அனைவரும் சேர்ந்து விஜய் டி.வி.க்காக தயாரித்த டெலி மேகஸின் தலைப்பு 'நிஜம்'
அதன் வெற்றிக்காக இண்டியா டுடே எங்களை பேட்டி கண்டது. அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றுதான் பதிவில் நான் சேர்த்திருப்பது.

சிறில் alex,
//Excellent... reminded me.. I need to call my friends!!//
மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவான ஓ திருப்பதி யின் கடைசி வரிகளில் அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்

sivakumae,
//unnaipolave innum un ezhuthum maravillai.//
இறந்து போன திருப்பதி மற்றும் இருக்கும் உன் போன்ற நண்பர்களே அதற்குக் காரணம் சிவா. நன்றி.

செல்வநாயகி,
//அவர் பற்றிக் கொஞ்சம் செவிவழியாகவேனும் அறிந்தவள் என்ற முறையில் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.//
புரியும்படி எழுதிவிட முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்ததாலேயே பல நாட்களாக இந்தப் பதிவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்!

anitha pavankumar,
//Your friend is still alive within you. He will be encouraging you always in your thoughts. //
அதுதான் என் நம்பிக்கையும் அனிதா

Naveen Prakash,
//நெகிழவைத்துவிட்டீர்கள் கெளதம்//
நானே நெகிழ்ந்திருந்ததால் இது சாத்தியமாகி விட்டதென எண்ணுகிறேன்.

VSK said...

மற்ற வேலைகளின் காரனமாக அத்தனை போட்டிப் படைப்புகளையும் படிக்க முடியாமல், இன்றுதான் முடிவுகள் வந்ததும் இதைப் படித்தேன் எனும் உண்மையை வெட்கமின்றி ஒப்புக் கொள்கிறேன்!

வெற்றிக்குத் தகுதியான படைப்பு!

"பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"

எனும் கவிஞரின் வைர வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

அழகாக எழுதிய படைபினை அள்ளிக் கூறு போட்டு, "பணத்தைத் திருப்பிக் கொடுத்தாயா?" போன்ற தனிக் கேள்விகளும் கேட்டு, அதன் மூலம் உங்கள் நட்பில் ஏற்பட்டிருந்த விரிசலையும் சொல்ல வைத்து, இப்பதிவின் நோக்கத்தை கொச்சைப் படுத்தியவர்களை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!

படைப்பாளியின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் செயல் அல்ல இது!

வாழ்த்துகள்!

மாயவரத்தான் said...

//ஆமாம், இன்னும் முழுதாகப் படிக்கவில்லையா நண்பா?//

இந்தப் பதிவின் பக்கம் வந்தாலே அந்தப் புகைப்படம் கண்ணில் பட்டு திருப்பதிசாமியின் நினைவு மனதை பிசைகிறது தலைவா.

இரண்டாம் பரிசு பெற்ற பதிவு என்றாலும் நான் இதை படிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை ஸாரி. (பின்னூட்டங்கள் அனைத்தையும் இன்று தான் படித்தேன். விரைவில் பதிவையும் படிக்க முயலுகிறேன்)

ராசுக்குட்டி said...

கௌதம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நண்பர்களை பிரிவதே வேதனை தரும் ஒன்று, அதும் இப்படி ஒரு நண்பரை... என் ஆறுதல்களும்!

மயிலாடுதுறை சிவா said...

மனம் கலங்குகிறது கெளதம்.

தி சா நிச்சயம் சினிமாவில் வெற்றி பெறுவார் என்று நானும் கனவு கொண்டு இருந்தேன். காலம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

அவர் ஊற்றிய அந்த தன்னம்பிக்கை ஊற்றை நீங்கள் விடாமல இருப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலி...

மயிலாடுதுறை சிவா....

மா.கலை அரசன் said...

இப்படி ஒரு அரபமைடான தோழரை, வழிகாட்டியை பறிகொடுத்து தவிக்கும் தங்களை ஆற்றுவிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.
காலம் மட்டுமே உங்களுக்கு மருந்திட முடியும்.

மாதங்கி said...

ஜி. கௌதம்,

தேன்கூடு போட்டியில் பரிசு பெற்ற ஆக்கங்களை படிக்க எதேச்சையாக வந்தபோது,...

ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.

ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு
நட்பு, போராட்டம், அன்பு, குடும்பம், கெரியர் எல்லாக் கோணங்களிலும்
வாழ்த்துக்களுடன்
மாதங்கி

Anonymous said...

Dear gowtham,

Its really very sad event to lose a true friend and that too in such a painful accident.

True, we will get another director , ie., mr.gowtham as director in tamil and telugu cinemas if thirupathy is with us.

Anyway, God will send more guides and friends for us to show the way of life!!

with regards,
anbusra.

மதுமிதா said...

மனம் நெகிழச் செய்த பதிவு கௌதம்.
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. உயிருடன் இழப்பதின் சோகம் கொடியது.

///நண்பர்களே! கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் உங்களை. உங்களுக்குள் இருக்கும் திருப்பதி சாமியையும், உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பதிசாமியையும்கூட சாக விட்டு விடாதீர்கள்.///

எங்கோ இருக்கும், எங்கிருந்தோ ஒலிக்கும் இது போன்ற வார்த்தைகள்
எத்தனையோ பேரை இன்னும் உயிர்ப்புடன் வாழவைக்கின்றன, தனிப்பட்ட சோகங்களையெல்லாம் தாண்டி.

மனமார்ந்த நன்றி கௌதம்.

லக்கிலுக் said...

:-(

நிஜமா நல்லவன் said...

திருப்பதிசாமி பற்றி படித்திருக்கிறேன்.
மனம் நெகிழ வைக்கிறது உங்கள் பதிவு.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அன்பு நண்பா,
எனது பள்ளித் தோழனின் பக்குவப் பாதை இன்றே தெரிந்தது.
திருப்பதி சாமியின் திடீர் மறைவு பற்றி ஊடகங்களில் படித்திருந்தாலும் இன்னொரு புதிய பரிமாணம்!
எதையோ தேடப் போய் இது படிக்கக் கிடைத்தது.
வாழ்வும் அப்படித்தானே...
நிறைய மீள்நினைவு...

MANO நாஞ்சில் மனோ said...

நானும் உங்க ஜோதியில வந்துட்டேன் நண்பா....

MANO நாஞ்சில் மனோ said...

நான் இப்பதான் உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன். விகடன் ஆளுன்னா சும்மாவா சும்மா நச்சின்னு எழுதி இருக்கீங்க நான் பதிமூன்று வருஷமா ஆனதவிகடன் ஜூனியர் விகடன் படித்து வருகிறேன்...

Anonymous said...

padithu mudithadhum kankalil idhal nanaitha aruvi

மணிஜி said...

நெகிழ்ச்சியாக இருக்கிறது கௌதம்.. ஒரு நல்ல இயக்குனாராக வந்திருக்க வேண்டியவர்:-( மீனும் கொடுத்து, மீன் பிடிக்க கற்றும் கொடுத்த தோழமை.. கிரேட்!!

ambalam said...

உன்னதம் என்கிற ஒரு வார்த்தையை தவிர என்னால் ஒன்றும் எழுத முடியவில்லை.

Puunai said...

மிக முக்கியமாக.. என்று தொடங்கும் சேர்க்கை தன்னை தானே காட்டிக் கொடுத்து விடுகிறது, கவுதம். தவிர்த்து இருக்கலாம். நிறுவனங்கள் இல்லாமலும் நீங்கள் முக்கியமான ஆள்.

Osai Chella said...

இன்று இதை உங்கள் அறிமுகத்தோடு முகநூலில் ஷேர் செய்திருக்கிறேன் ! காலம்கடந்து நிற்கும் ஆவணங்களில் இதுவும் ஒன்று !

G Gowtham said...

திருப்பதியின் நினைவேந்தலுக்கு தோள் கொடுத்த பழைய / புதிய நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்..

Buy Cycles Online said...

Good News.. Awesome Story...

K. ASOKAN said...

உங்கள் தளத்தில் முதல் நுழைவில், உங்களது ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கையின் யதார்த்தமும், போராட்டக்களமுமே முன்நிற்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்பதை நண்பர் திருப்பதிசாமி போன்றவர்களால் மிளிரும் என்பது அசைக்கமுடியாத ஒன்று