Wednesday, October 11, 2006

சட்னு சொல்! / காதல் பால்


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வா யெல்லாஞ் செயல்
- அறத்துப்பால், அதிகாரம்: 4. அறன் வலியுறுத்தல், குறள்: 33

அறச் செயல்களைச் செய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் தவறாது செய்துவிட வேண்டும்.

கிர்ர்ர்ர்ரீச்!’

ஆட்டோ வேகமாக வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் ஆவலோடு வாசலுக்கு ஓடினாள் அவள். அதற்குள் அவன் படியேறிக் கொண்டிருந்தான்!

“நேரமாச்சும்மா! எங்கே சூட்கேஸ்?” என்றான் அவளைப் பார்த்த ஜோரில்.

“ரெடியாத்தான் இருக்கு, வாங்க வீட்டுக்குள்ள. ஏன் வாசல்லயே நின்னு பேசணும்” - செல்லமாக அவனைக் கடிந்தாள்.

“அம்மா தாயே உட்கார்ந்து பேச நேரமில்ல எனக்கு. உடனே ஓடணும். ஏற்கெனவே எங்க எம்.டி. கொடுத்த வழவழா லெக்சரால ஃப்ளைட்டை மிஸ் பண்ணிட்டேன். இந்த கடைசி ட்ரெயினையும் விட்டுட்டா அப்புறம் டப்பா பஸ்தான். செத்து சுண்ணாம்பாயிடுவேன்!” - ஷூ கால்களோடு அப்படியே வீட்டுக்குள் ஓடினான். பின்னாலேயே ஓடினாள் அவளும்.

ஹாலைக் கடக்கும்போது டைனிங் டேபிளில் இருந்துவந்த கமகம அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.

“உன் சமையலை மெச்சறேன். ஆனா சாப்டுட்டு போக நேரமில்லம்மா. ப்ளீஸ்.. விட்டுடேன்!” - கெஞ்சினான். முதலில் முறைத்து, தொடர்ந்து புன்சிரிப்புக் கொடுத்தாள் அவள்.

“தேங்க்ஸ்டா” என்றபடியே பெட்ரூமுக்குப் பறந்தான்.

திரும்ப வரும்போது அவன் கையில் சூட்கேஸ். எதிர்ப்பட்ட அவள் கையில் ஏதோ ஒரு பொட்டலம்!

“இந்தாங்க போற வழில சாப்டுக்கங்க. ஏதோ எனக்குத் தெரிஞ்ச மாதிரி பேக் பண்ணியிருக்கேன். திட்டாதீங்க”

“சரி கொடு”

லேசான எரிச்சலோடு வாங்கிக் கொண்டு, டாட்டா பைபை சொல்லிவிட்டு, வெளியே உறுமலோடு காத்திருந்த ஆட்டோவுக்குள் பாய்ந்தான்.

“என்ன சார் அம்மா டிபன் கட்டிக் கொடுத்தாங்களா?” என்றார் ஆட்டோக்காரர். “ம்” சொன்னான். நெற்றி நிறைய விபூதியுடன் டிப் டாப் ஆக இருந்தார் அந்த நடுத்தர வயது ஆசாமி.பார்சலை அவர் கையில் கொடுத்துவிடலாமா எனவும் ஒரு கணம் யோசித்தான். ஒருவேளை வாங்கிக்கொள்ளா விட்டால்?

“நா வேண்ணா வண்டிய ஜாக்கிரதையா ஓட்றேன். நீங்க பொட்டலத்தைப் பிரிச்சு சாப்டுங்க சார்” என்றார் ஆட்டோக்காரர்.

“இல்ல.. எதுக்குங்க சிரமப்பட்டுக்கிட்டே சாப்பிடணும். ட்ரெய்னுக்கு நேரமாச்சு, வேகமா போலாமே” என்றான் அவன்.

“அட சாப்பிடுற நமக்கே சிரமம்னா சமைச்ச உங்க சம்சாரத்துக்கு எவ்ளோ சிரமமா இருந்திருக்கும்னு நெனச்சுப் பாருங்க சார்! சும்மா பிரிச்சு சாப்டுங்க. உங்களை டயத்துக்கு ட்ரெய்ன்ல ஏத்திவிடுறக்கு நானாச்சு”

பதிலேதும் சொல்லாமல் பொட்டலத்தைப் பிரித்தான் அவன்.

“சாம்பார் சாதமா சார்? மணம் தூக்கியடிக்குதே!” - திரும்பிப் பார்க்காமலேயே சொன்னார் ஆட்டோக்காரர்.

“ம்” என்றபடியே வியப்போடு அவரைப் பார்த்தான் அவன். ஆட்டோ நிதானமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

சாதத்தை ஒரு வாய் எடுத்து வாயில் போட்டதும் மனக்கண்ணில் மனைவி சிரித்தாள். அவசரத்தில் செய்திருந்தாலும் அட்டகாசமாகவே சமைத்திருந்தாள்! நல்ல பசிவேறு. மளமளவென சாப்பிடலானான்.

“என்ன சார் சத்தத்தையே காணோம். வாய் திறந்து பேசவிடாம பொட்டலத்தை ஒரே மூச்சில் காலி பண்ணச் சொல்லுதோ அம்மா சமையல்!”

திரும்பிப் பார்த்துக் கேட்டார் ஆட்டோக்காரர். அப்போதுதான் sநினனத்துக் கொண்டான். “அச்சச்சோ உங்ககிட்ட ஒரு வார்த்தைகூட கேட்காம சாப்பிட்டுட்டேனே!” என்றான்.

“அட நீங்கவேற! வண்டிய நிறுத்திட்டு நானும் உங்களோட உட்கார்ந்து சாப்பிட முடியுமா? உங்க சம்சாரம் ஆசையா கட்டிக்கொடுத்ததை திருப்தியா சாப்டீங்கள்ல, அது போதும்! இந்தாங்க தண்ணி. சுடவச்சு வடிகட்டுன நல்ல தண்ணிதான். ஒண்ணும் பண்ணாது. பயப்படாம குடிங்க” - காஷூவலாகச் சொன்னபடியே பாட்டில் தண்ணீரை நீட்டினார் ஆட்டோக்காரர்.

தான் சாப்பிட்டதற்காக இவர் ஏன் சந்தோஷப்படணும் என்ற யோசனையுடனேயே பாட்டிலை வாங்கினான் அவன்.

“சாப்பாட்டையும் சமைச்சுத் தர்ற பொண்டாட்டியையும் சாதாரணமா நினைக்கக் கூடாது சார். நானெல்லாம் என் பொண்டாட்டி வந்தப்புறம்தான் அரிசி சாதமே சாப்பிட்டேன். இந்த ஆட்டோகூட அவ மிச்சம் பிடிச்சு கொடுத்த பணத்தை அட்வான்ஸா போட்டு வாங்கின கடன்தான்.”

ஆச்சர்யத்தோடு ஆட்டோக்காரர் சொல்வதைக் கேட்டான் அவன்.

“ஆமா சாப்பாடு நல்லா இருந்துச்சா சார். அதைச் சொல்லவே இல்லியே” என்றார் திடீரென ஆட்டோக்காரர்.

“ம்.. நல்லா இருந்தது. உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். நீங்க கம்பெல் பண்ணலேன்னா சாப்பிட்டிருக்க மாட்டேன். ஓடுற ஆட்டோல சாப்பிட்டது எனக்கு புது அனுபவம்” - புன்சிரிப்போடு அவரைப் பார்த்தபடியே சொன்னான் அவன்.

“அட என்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம் சார். சமைச்சுக்கொடுத்த வொஃய்ப்கிட்ட போன் பண்ணிச் சொல்லுங்க”

அப்போதுதான் சார்ஜ் செய்வதற்காக எடுத்து வைத்த மொபைல் போனை அப்படியே விட்டுவிட்டு வந்தது அவனுக்கு உரைத்தது!

“அடச்சே! செல்போனை மறந்துட்டேன்!” என்றான். வாட்சைப் பார்த்துக் கொண்டான்.

“சார் ட்ரெயினுக்கு இன்னும் பதினாறு நிமிஷம் இருக்கு. கரெக்டா கொண்டு போய்ச் சேர்த்துருவேன் நான். டென்ஷனாகாதீங்க.” என்ற ஆட்டோக்காரர் தன் மொபைல் போனை எடுத்து நீட்டினார்.. “இந்தாங்க. வீட்டம்மாவுக்கு போன் போட்டு ‘சாப்பாடு சூப்பர்’னு ஒரு தடவை பாராட்டிடுங்க. சந்தோஷப்படுவாங்கள்ல” என்றார்.

போனை வாங்கத் தயங்கினான் அவன். “அட பரவாயில்ல பிடிங்க சார். பேசுங்க” என்றார் ஆட்டோக்காரர். தொடர்ந்தார்..

“நான் ஏன் சொல்றேன்னா.. சாப்பாட்டுல உப்போ உரைப்போ கூடப்போயிடுச்சுன்னா எத்தனை தடவை உடனே போன் போட்டு உங்க மனைவியை திட்டி இருப்பீங்க. அதே மாதிரிதானே நல்லா இருக்குறப்ப பாராட்டுறதும். சட்னு பண்ணிடனும். நல்லா இருக்குறப்ப பாராட்டாத எந்த புருஷனுக்கும் நல்லா இருக்காதப்ப திட்ட உரிமை கிடையாது. இது சாப்பாட்டுக்குத்தான்னு இல்லை, புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்குற எல்லா சமாச்சாரத்துக்கும் பொருந்தும்”

நெகிழ்ச்சியோடும் அதிர்ச்சியோடும் மொபைல் போனைக் கையில் வாங்கினான் அவன்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வா யெல்லாஞ் செயல்
,
இன்சொல் இல்லறம்!
முந்தைய காதல்பால் இங்கே!

4 comments:

ILA (a) இளா said...

சட்டுனு மனசுல ஒட்டிக்க வைக்கிற விஷயத்தை சொல்லி இருக்கீங்க. பாராட்டுனா அன்பு மிஞ்சிபோகுமா?

த.அகிலன் said...

கெட்டதுக்கு கோபப்படகிறது மனசு நல்லதை பாராட்ட மட்டும் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறது இல்லையா
அன்புடன்
த.அகிலன்

krishjapan said...

என்னாபா இது. நல்ல மேட்டர போட்டுட்டு, அத படிக்க முடியாம பண்ணிட்டியே...

Anonymous said...

/// "நல்லா இருக்குறப்ப பாராட்டாத எந்த புருஷனுக்கும்.....///

இதை படிச்சப்புறமாவது ஆண்கள் திருந்தினா சரி, கெளதம் நல்ல படைப்பு. வாழ்த்துக்கள், நன்றி.