ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
- பொருட்பால், அதிகாரம்:காலம் அறிதல், குறள்:484
விளக்கம்: 'காலத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப காரியங்களைச் செய்பவன் உலகை ஆள நினைத்தாலும் அது சாத்தியமே!'
அவன் எப்போதும் இப்படித்தான். வேலை விரும்பி! கம்ப்யூட்டருக்குள் புகுந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"சார்.. மணி பதினொண்ணு பத்து! டீ சாப்பிடப் போலயா?''
-உரிமையோடு கேட்டார் ஹெட் கிளார்க். அந்த அலுவலகத்தில் டீ டைம் பதினொரு மணி.
வேலையில் மூழ்கிப் போயிருந்த அவன் அப்போதுதான் வெளியே வந்தான்.
"ஆமா! மணி பதினொண்ணு பத்து!''
-தனக்குத்தானே சொல்லிக் கொண்டே அதே வேகத்தில் சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவனாக முகம் மலர்ந்தான். அதுவரை எதையோ மறந்திருந்ததற்காக தன் தலையைத் தானே செல்லமாகக் குட்டிக்கொண்டான்.
பரவசத்தோடு நகர்ந்து டெலிபோனை எடுத்தான்.
அவனது திடீர் சுறுசுறுப்பை வியந்து பார்த்தபடியே வந்தான் தன் வயிற்றுக்குப் பெட்ரோல் போடப் போயிருந்த பக்கத்து இருக்கைக்காரன். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவன். தன் இருக்கையில் உட்கார்ந்தான். மற்றவர்கள் போனில் பேசுவதை ஒட்டுக் கேட்பது அநாகரிகம் எனத் தெரிந்தும் அதைச் செய்யத் தயாரானான்...
"நான்தான்டா செல்லம்''
"...............''
"மெனி மெனி ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே டார்லிங்.''
"................''
"பார்த்தியா... இந்த வருஷமும் சரியா நீ பிறந்த அதே பதினொண்ணு பத்துக்கே உனக்கு வாழ்த்துச் சொல்லிட்டேன்!''
ஒரு கணவன் தன் மனைவிக்கு காதலோடு போனில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதை ஒட்டுக்கேட்பவனும் பக்கம் இருந்து தெரிந்து கொண்டான்!
அதை உணராமலேயே தன் காதல் பேச்சைத் தொடர்ந்தான் கணவன்...
"ஒ.கே.! ஊருக்குப் போன் பண்ணி உங்க அப்பா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க. மத்தியான நேர டி.வி. சீரியல்களுக்கெல்லாம் இன்னிக்கு லீவு கொடுத்துடு. கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ.''
".............''
"எதுக்கா? இன்னிக்கு நைட் நாம டின்னருக்கு வெளில போறோம்டா. வந்து படுக்க லேட்டாகிடும்ல... அதான்.''
"..................''
"ஹா.. ஹா. ஹா..''வென ரசித்துச் சிரித்து, ""ஒ.கே. டா'' எனச் சொல்லி, டெலிபோனைக் கட் செய்தான் அவன்.
மறுபக்கம் அவன் மனைவி என்ன ஜோக் அடித்திருப்பாள் என யூகிக்க முடியவில்லை பக்கத்து இருக்கைப் பார்ட்டியால்!
பகல் மணி ஒன்று.
அதுவரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அலுவலகம் ஒருமணி நேரம் ஒய்வெடுக்கும் நேரம்.
முக்காலே மூணு வீசம் பேரும் சாப்பாட்டுப் பைகளுடன் டைனிங் ஹாலுக்குப் போயிருக்க... அவனும் அந்த பக்கத்து இருக்கைக்காரனும் மட்டும்தான் இன்னும் சாப்பிடப் போகாத ஆட்கள்.
"எனக்குப் பசிக்கலை. லன்ச் சாப்பிடவே பிடிக்கல சார்'' என அவனிடமும், "பொண்டாட்டிகிட்ட அப்படி என்னதான் பேசுறான்னு உட்கார்ந்து கவனிச்சுக் கேட்டுட வேண்டியதுதான்'' என தனக்குள்ளும் சொன்னான் பக்கத்தான். அந்த மனக்கணக்கை அறியாமல், வாட்ச்சைப் பார்த்தபடியே வீட்டுக்கு மறு போன் போட்டான் காதல் கணவன். காதுகளைத் தீட்டிக் கொண்டான் பக்கத்தான்.
"என்னாச்சுடா... ஏன் போனை எடுக்க இவ்வளவு லேட்? தூங்கிட்டியா?''
"..................''
"அச்சச்சோ. திடீர்னு ஏன்டா தலைவலி?! அப்ப இன்னும் சாப்பிடலியா நீ?''
".....................''
"அப்படியில்ல, பசி இருந்தாகல்கூட தலைவலி வந்திருக்கலாம். ஏதாவது கொஞ்சமாச்சும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோயேன்.''
'மனைவிக்குத் திடீர் தலைவலி என்றதும் என்னமாய்ப் பதறுகிறான் இவன்' என தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான் ஒட்டுக்காதுப் பார்ட்டி.
பதறியவன் ஒரு முடிவுக்கு வந்தான்..
"சரி.. நீ சிரமப்படாதே. ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு இதோ நானே வீட்டுக்கு வர்றேன். ஒரு இருபது நிமிஷத்துல அங்க இருப்பேன். ஒரு எட்டு போயி டாக்டரைப் பார்த்துட்டே வந்துடலாம். சரியா... இதோ வந்துடறேன்டா'' என்று பாசத்தோடு பேசி அரக்கப்பரக்க போனை வைத்தான்.
படக்கென வேறு திசையில் பார்ப்பவன் போல முகம் திருப்பிக்கொண்டான் பக்கத்தான்.
"என் வொய்ஃபுக்கு திடீர்னு தலைவலி வந்துடுச்சாம். பாவம்... இன்னிக்கு அவளோட பர்த்டே வேற. நான் உடனே வீட்டுக்குக் கிளம்புறேன். மேனேஜர் லன்ச் முடிச்சுட்டு வந்ததும் அரைநாள் லீவு சொல்லிடுங்க எனக்கு.'' - ஒரே மூச்சில் பேசியவன், முகத்தில் முளைத்திருந்த வியர்வையைத் துடைத்த படியே வெளியேறினான்.
அவன் போவதைப் பார்த்தபடியே அந்தப் பக்கம் வந்தார் ஹெட் க்ளார்க். அதுவரை நடந்தது எதுவுமே தெரியாதவராய் அந்தப் பக்கத்து இருக்கைக்காரனிடம் சொன்னார்...
"இதோ போறாரே ஆவருதான் நம்ம ஆபீஸ்லயே கொடுத்துவச்ச மனுஷன். அவர் உட்கார்னு சொன்னா மறுபேச்சே பேசாம உட்காருவாங்க அவரோட வொய்ஃப். அப்படி என்னதான் சொக்குப்பொடி போடுவாரோ பொண்டாட்டிக்கு?!''
'எனக்குத் தெரியும்' என தனக்குள் சொல்லிக் கொண்டான் பக்கத்து இருக்கைக்காரன்.
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின், மனைவி எம்மாத்திரம்!
8 comments:
sir kalakunga ..nalla iruku..thodarndhu eluthungal.
purilayey :-(
மன்னிச்சுக்கங்க யாத்ரீகன்,
அந்தக் குறளோட அர்த்தத்தைப் போட மறந்துட்டேன்.
இப்ப சரி பண்ணிடுறேன்.
'காலத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப காரியங்களைச் செய்பவன் உலகை ஆள நினைத்தாலும் அது சாத்தியமே!'
கொடுக்கவேண்டிய அன்பை மனைவிக்குச் சரியான சமயங்களில் கொடுத்து, செய்யவேண்டிய காரியங்களை காலம் தாழ்த்தாமல் செய்பவன் மனைவியை ஆளத் தகுதியானவன்.
'காலத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப காரியங்களைச் செய்பவன் உலகை ஆள நினைத்தாலும் அது சாத்தியமே!'
கொடுக்கவேண்டிய அன்பை மனைவிக்குச் சரியான சமயங்களில் கொடுத்து, செய்யவேண்டிய காரியங்களை காலம் தாழ்த்தாமல் செய்பவன் மனைவியை ஆளத் தகுதியானவன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
யாதும் உறே யாவரும் கேளிர் என்ற வரியைதான் அனைவரும் கூறுவார்கள். தீதும் நன்றும் பிறர் தரவாரா என்ற வரியை நீங்கள் வலைப்பூவில் காட்டி இருப்பதை பாராட்டுகிறேன். இன்னும் நிறைய எழுதுங்க.
hmm.. kalyaanam anavunga.. viraivil aaga poravunga therinjuka vendiyathu.. out of syllabuspa :-D
பாலசந்தர் கணேசன்,
தமிழ்ல எனக்குப் பிடிச்ச வார்த்தைகள் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.
அருமையான கருத்து! அது உங்களுக்கும் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி நண்பரே.
யாத்ரீகன்,
அப்டியெல்லாம் தப்பிச்சு ஓடலாம்னு தப்புக்கணக்கு போடாதீங்க. எல்லாரும் ஒரு நாள் சம்சாரக்கடல்ல தொபுக்கடீர்தானுங்க!
it is nice to see you here
anbuselvan.R.
Post a Comment