Saturday, July 22, 2006

கிளியும் குரங்கும் / காதல் பால் 3

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
-அறத்துப்பால், அதிகாரம்: கூடா ஒழுக்கம், குறள்:271

கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தை பிறர் அறியவில்லை எனினும் அவனது உடலில் இருக்கும் ஐந்து பூதங்களும் அவனைக் கண்டு கொண்டு நகைக்கும்.

"ஏண்டி இன்னுமா ட்ரெஸ் எடுத்து வைக்கல?!'' - ஏக எரிச்சலோடுதான் பெட்ரூமுக்குள் நுழைந்தான் அவன். ஊருக்குப் புறப்பட்டாக வேண்டிய அவசரத்தால் பொத்துக் கொண்டு வந்த எரிச்சல் அது.

"இதோ... அஞ்சே நிமிஷத்துல ரெடி பண்ணிடுறேன் மாமா'' - ஒவ்வொரு ட்ரெஸ்ஸையும் பார்த்துப் பார்த்து சூட்கேஸுக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவனது மனைவி. கிளி மாதிரிப் பொண்டாட்டி!

என்ன புண்ணியம்! `குரங்கு' அங்கே ரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருக்குமே! அரேபியக் குதிரைவாகு அந்தக் குரங்குக்கு. ஐயாவின் ஆபீஸிலேயே ஸ்டோர் கீப்பர் உத்தியோகம் பார்ப்பவள். இந்த நிமிட உத்தியோகம் ஐயாவோட கீப்!

"சீக்கிரம் ஆகட்டும்டி. எங்க மேனேஜர் இந்நேரம் ஸ்டேஷனுக்கு வந்துருப்பார்.''

பாவம் அந்த அப்பாவி மேனேஜர், வேலை நேரம் முடிந்த பிறகும் அலுவ லகத்தில் `தான் உண்டு, தன் வேலை உண்டு' என்றிருந்தவர், அவன் சொன்ன பொய்யால் அந்த நிமிடம் புரையேறித் திணறினார்.

பாசம் பேசியது... "மாமா... சூடா கிச்சடி கிளறி வெச்சிருக்கேன். கொஞ்சமாச்சும் சாப்டுட்டுப் போங்களேன்.

'' வேஷம் `வள்' என்றது... "அதுக்கெல்லாம் டயம் இல்ல. ட்ரெய்ன்லயே சாப்டுக்கறேன்.''

"இல்ல.. ட்ரெய்ன்ல வாங்குறது டேஸ்ட்டாவே இருக்காது. உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொல்வீங்களே! அதான் உங்களுக்காகவே, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி குழைவான பதத்துல கிச்சடி பண்ணியிருக்கேன்.''

இத்தனைக்கும் அரைமணி நேரத்துக்கு முன்புதான்... அலுவலகத்திலிருந்து புறப்படும் போதுதான்... வீட்டுக்குப் போன் செய்து, `உடனடியாக நான் பெங்களூருக்குப் போக வேண்டும். அவசரமான ஆபீஸ் வேலை. நானும் எங்க மேனேஜரும் போறோம்' என்று `கதை' சொல்லியிருந்தான் அவன். அரை நாள் லீவு போட்டு விட்டு அந்த ஸ்டோர் `கீப்'பர் மதியமே தன் ஹாஸ்டலுக்குப் போய் விட்டாள். பகல் தூக்கம் போட்டு, புத்துணர்ச்சியோடு மாலையில் நேராக ஸ்டேஷனுக்குப் போய் விடுவாள் அவள். வழக்கம் போல் ஆபீஸ் நேரம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து, சூட்கேஸை எடுத்துக் கொண்டு அவனும் ரயில்வே ஸ்டேஷனில் சங்கமித்து விடுவான். ஓடும் ரயிலில்... ஏசி கூபேயில்... முன்னிரவுப் பயணத்திலேயே முதல் ரவுண்டு கிளுகிளுப்புகளை முடித்துக் கொள்வதாகத் திட்டம் தீட்டியிருந்தார்கள்.

அவன் சட்டைப்பையில் இருந்த பேப்பர்களையெல்லாம் டேபிள் மீது வைத்துவிட்டு, டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்றான். கண்ணாடியில் தன் முக அழகைச் சரிபார்த்துக் கொண்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் பெங்களூர் வாசம். கூடவே பெங்களூர் தக்காளியின் வாசமும்! நினைக்கும்போதே பரவசமாக இருந்தது அவனுக்கு.

"இந்தாங்க...'' - பாசக்காரச் சிறுக்கி தட்டோடு கொஞ்சம் கிச்சடியைக் கொண்டு வந்து நீட்டினாள். அவனது முக பல்பு `பொசுக்'கென ஃப்யூஸ் போனது.

"அடச்சீ! போ அந்தப் பக்கம். எனக்கு டயமாச்சு''

அவளது மலர் முகம் வாடியது. வருத்தத்தை விழுங்கியபடி வழியனுப்பி வைத்தாள்... "பார்த்து சூதானமா போய்ட்டு வாங்க. ரயில்ல ஏறுனதும் செல்போன்ல இருந்து ஒரு வாட்டி போன் பண்ணுங்க மாமா''

"சரி சரி... பையன் ட்யூஷன்ல இருந்து வந்ததும் ரெண்டு நாள்ல அப்பா வந்துடுவார்னு சொல்லிடு'' - செருப்புக்குள் கால்களைக் கொடுத்தபடியே அவன் பேச, அப்போது "ஒரு நிமிஷம் மாமா'' என்றபடியே ஓடி வந்தாள் அவள். கையில் திருநீறு.

"உட்கார்ந்து சாமி கும்புடுறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்ல. நான் வர்றேன்.''

கறாராகக் கத்தியவன், `க்கும்.. இப்படி ஒரு கிராமத்தி கிறுக்கச்சிய என் தலைல கட்டிட்டானுக' எனப் புலம்பியபடியே நடையைக் கட்டினான்.

ஜிலு ஜிலுவென இருந்த அந்தக் கிளு கிளு குரங்கு கைக்கடிகாரத்தைக் காட்டி, அவனை முறைத்தாள்.

"இதான் வர்ற நேரமாக்கும்!''

"கோச்சுக்காத டார்லிங். நானென்ன ரஜினிகாந்த் மாதிரி சொல்லிக்கிட்டேயா இருந்தேன். விஜயகாந்த் மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட் டேன்ல!''

'உலகமகா' ஜோக் அடித்து, அவனாகவே அதற்கு சிரிசிரித்து, அவளைக் கூல் பண்ண முயன்றான். தோற்றான்.

"எனக்குக் கொலை பசி. இன்னும் பத்து நிமிஷத்துல ட்ரெய்ன் கிளம்பிடும். சாப்பிட பார்சல் ஏதாச்சும் வாங்கிக்கங்க. நான் போய் ஸீட்ல உட்கார்றேன்.''

விடுவிடுவென அவள் நடந்து போயே விட்டாள். ஐயாவின் கடைசி நேர கவுண்ட் டவுன் ஆரம்பமானது...இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன!

ஸ்டேஷனுக்குள்ளேயே இருந்த அசைவ ஓட்டலுக்குள் ஓடினான். அவளுக்கு ஜில்லோஜில் என்றுதான் தண்ணீர் இருக்க வேண்டும்.

...இன்னும் ஒன்பது நிமிடங்களே உள்ளன!

'ஜிலு ஜிலு'வுக்குப் பிடித்த ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் ஆர்டர் செய்தான். கூடவே மட்டன் பிரியாணி, சிக்கன் குருமா, கழுதை, குதிரையெல்லாம் ஆர்டர் பண்ணினான்.

'உடனடியா ரெண்டு இட்லி சாப்பிட்டால் தேவலை' என்று அவன் வயிறும் பசியோடு கேட்டது. நடக்கப் போகும் ரயில் பரவசத்தை நினைத்துக் கொண்டிருந்த சுகத்தில் மத்தியான சாப்பாட்டைக்கூட மிஸ் பண்ணியிருந்தான். காலையில் இரண்டரை தோசை சாப்பிட்டது. ரயிலில் ஏறியதும் முதல் காரியமாக சாப்பிட்டே ஆக வேண்டும் என சொல்லிக் கொண்டே நான்கு இட்லிகளையும் பார்சல் பண்ணச் சொன்னான்.

...இன்னும் ஏழு நிமிடங்களே உள்ளன!

நகம் கடித்தான். "சீக்கிரம் பண்ணச் சொல்லுங்க. ட்ரெய்னுக்கு நேரமாச்சு'' எனப் பதற்றத்தோடு அதட்டினான்.

...இன்னும் ஆறு நிமிடங்களே உள்ளன!

பார்சலை பிடுங்கிக் கொண்டு லாங்ஜம்ப் அடித்து வெளியே தாவினான். பழ வண்டியைத் தேடி அவளுக்குப் பிடித்த மலைவாழைப் பழம் அரை டஜன் வாங்கினான்.

...இன்னும் நான்கு நிமிடங்களே உள்ளன!

ஓடினான் ரயிலை நோக்கி. கிட்ட நெருங்கியதும்தான் ஜில் தண்ணீர் வாங்காதது மரமண்டைக்கு உரைத்தது.

...இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன!

திரும்ப ஓடி, பிளாட்ஃபாரக் கடையில் "வாட்டர் பாட்டில்'' கேட்டான். நாலைந்து பாட்டில்களைத் தொட்டுப் பார்த்து ஒன்றைத் தேர்வு செய்தான்.

...இன்னும் இரண்டு விநாடிகளே உள்ளன!

முயல் வேகத்தில் மறுபடியும் ரயிலை நோக்கி ஓடி வந்தான். 'ப்ச்!' புயல் வேகமெடுத்திருந்தது அவன் போக வேண்டிய ரயில்! கண்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. ஒரு தம் பிடித்து ஓடினால் ஓடும் ரயிலுக்குள் ஏறிவிடலாம். உயிரை வெறுத்து ஓடினான்அவன். ஓடினான்... ஓடினான்... பிளாட்ஃபாரத்தின் விளிம்புக்கே ஓடினான்.

பசிக் கிறக்கமும் கூடச்சேர படக்கென கண்கள் இருண்டன. நிலை தடுமாறினான்.

கண்களைத் தொடர்ந்து ஒவ்வொரு புலனாக செயல் இழக்க ஆரம்பித்தன.

`அம்மா'வைக் கூப்பிடக்கூடத் திராணியில்லாத வனாக ரெயிலுக்கும், தண்டவாளத்துக்கும், பிளாட்ஃபாரத்துக்கும் நடுவே மயங்கிச் சரிந்தான்!

ணர்வு வந்தபோது அவன் கிடந்தது மருத்துவமனைக் கட்டிலில்.

அழுது வீங்கிய முகத்துடன் அருகே நின்றிருந்த அவன் மனைவியிடம் டாக்டர் சொல்வது அசரீரி மாதிரி கேட்டது அவனுக்கு...

"நல்லவேளை. உங்க ஹஸ்பெண்ட் வீட்ல விட்டுட்டுப் போன ட்ரெய்ன் டிக்கெட்டைக் கொடுக்கணும்னு நீங்க ஸ்டேஷனுக்கு போனீங்க பாருங்க. அதனாலதான் அவரை உடனடியாப் பார்த்து ஆஸ்பிடல்ல சேர்க்க முடிஞ்சது உங்களால!''

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும், காதல் கை கொடுக்கும்.

9 comments:

நாகை சிவா said...

நல்லா இருக்கு, யதார்த்தமாக எழுதி உள்ளீர்கள். பத்தி பிரித்து எழுதி இருக்கலாம்.

G Gowtham said...

ஸாரி சிவா, படுத்திட்டேன்!
மேட்டரை கம்போஸ் பண்ணி கட் அண்ட் பேஸ்ட் பண்ணும்போது பத்திகள் இணைந்து மிரட்டிவிட்டன.
தொந்தரவுகளை மீறி படித்து, பின்னூட்டமிட்டதற்கு மிக மிக நன்றி நண்பரே!

Geetha Sambasivam said...

நல்ல கருத்து. நல்ல முடிவு. நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள்.

G Gowtham said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா.
அடிக்கடி வந்து போங்க.

வல்லிசிம்ஹன் said...

கௌதம், ரொம்ப நல்லா பொருத்தமா(இந்தக்,அந்த,எந்தக் காலத்துக்கும்) எழுதிட்டீங்க.

கிளி பெண்டாட்டி தான் எப்போதுமே காப்பாத்தணும் போல இருக்கு. ரொம்ப ஆத்தாமையா இருந்தது அந்தப் பெண்ணைப் பார்த்டு.
நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.

G Gowtham said...

பின்னூட்டத்துக்கு நன்றி வள்ளி,
பயமுறுத்துறதுக்காக இப்படி கதைகள் எழுதுனாலும்
பெரும்பாலும் குரங்குகளே ஜெயித்து விடுவதாக என்னுடன் சண்டைக்கு வருகிறார் நண்பர் ஒருவர்!

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல கருத்து. நல்ல முடிவு. உங்களின் எழுத்து நடையும் அருமை.

திரு.சிவா சொன்னது போல பத்தி பிரித்து எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும், பரவா இல்லை அடுத்தமுறை சரி படுத்திக் கொள்ளவும்,

மிகவும் சிறப்பான பதிவு தொடர்ந்து எழுதவும்...




அன்புடன்...
சரவணன்,

இராம்/Raam said...

வசன உச்சரிப்புக்கள் எல்லாம் மிக யதார்த்தமா இருக்கு கெளதம்,ஆனாலும் தேவையில்லாதது ரஜினியை பற்றிய வரிகள்.

G Gowtham said...

Regarding Pathi. Sari seithuvitten Saravanan.

Nanbare Ram,
Asadu valiyuravan adicha kadi joke athu. Rajiniya naan kindal panninatha eduthukkathinga.
Nanum Rajini rasikanthan! Enga collegela enakku Kutti Rajininu pere undu!!!