திருப்பதிசாமியின் மறைவை ஒட்டி நான் வெளியிட்ட துண்டுப் புத்தகத்தை (நகல் என்வசம் இல்லை) எனது கடந்த பதிவைப் பார்த்த ஒரு நண்பர் அனுப்பி வைத்து இருந்தார். அதை இங்கே உங்கள் பார்வைக்காகப் பதிவு செய்கிறேன்.
- ஜி.கௌதம்
ஐந்து வயது
குழந்தை கேட்கிறது...
"அப்பா சொல்றது
உண்மையாம்மா?''
எப்போதோ
எதற்கோ
சொல்லிக் கொடுத்ததை
எனக்கே சொல்கிறது...
"திருப்பதி அங்கிள்
சாமிகிட்ட போயிருக்காங்க.
திரும்பவும் வருவாங்க.
குட்டிப் பாப்பாவா பிறப்பாங்க.
அப்ப நாமபோயி கொஞ்சலாம்!''
நான் சொன்ன பொய்தான்,
நானே நம்புகிறேன்!
திருப்பதிசாமி
அவன் என் உயிர் நண்பன்.
ஓடும் ரயிலில்,
ஒரு நிமிடம் பேசியிருந்தாலும்
உங்களுக்கும்
அவன் உயிர்நண்பன்.
இப்போது உயிர்...?
நிறைய முகங்கள் அவனுக்கு.
சட்டம் படித்தவன்.
எது பேசினாலும்
அனல் பறக்கும்.
அவனோடு வாதாடி ஜெயிக்க
எவனாலும் முடியாது,
எமனால்...!
நிறைய முகங்கள் அவனுக்கு.
கம்பன் கழகம் கடந்த
கல்லூரி மாணவன்.
இயற்கையிலேயே
இலக்கிய ரத்தம்!
முண்டாசுக் கவி பாரதி
அவனது
ஆதர்ஷ புருஷன்.
`முப்பத்தொன்பது வயசுக்குள்ள
சாதிச்சுப்புட்டானே படவா'
என்பான்
முப்பத்தியிரண்டில் அவன்
சாதிக்க ஆரம்பித்த நேரத்தில்...!
நிறைய முகங்கள் அவனுக்கு.
உண்மையும்
வலிமையும் கலந்து
பேனா பிடித்த பத்திரிகையாளன்.
அவன் எழுதிக் கிழிந்த முகமூடிகள்
ஏராளம்.
அவனால்
எழுதக் கற்றவர்களும்
ஏராளம்.
அவன் தரும் உற்சாகம்
தாராளம்.
`மெரினா பீச்சை
விலைக்கு வாங்கப் போகிறேன்'
என்றால்கூட
`உன்னால் முடியும்' என்பான்.
மறுபடியும் அவன்
வர வேண்டும்.
அவனுக்கும் எனக்கும் பிடித்த
Life is Beautiful படம் பார்த்து
தேம்பித் தேம்பி அழவேண்டும்
Jonathan Livingston Seagull
கதையை இன்னொருமுறை
அவன் சொல்லக்கேட்டு
மிரள வேண்டும்!
தினம் தினம்
பத்துப் பதினைந்து தரமாவது
அவன் கேட்கும்
இளையராஜாவின்
`இந்தமான், உந்தன் சொந்தமான்'
பாடலை
இருவருமாய்க் கேட்க வேண்டும்.
இதற்கும் சொல்லடா திருப்பதி...
`உன்னால் முடியும்' என்று!
நிறைய முகங்கள் அவனுக்கு.
விளம்பர உலகிலும்
தனித்துப் பறந்தது
அவன் கொடி!
பத்து விநாடிப் படமென்றாலும்
அவன் வின்னர்
அவன் வின்னர்தான்!
சோறு தண்ணி
ஒதுக்கி வைப்பான்,
சொந்தபந்தம்
மறந்து உழைப்பான்.
விளம்பரப் படங்களுக்காக
ஓடிய காலத்தில் ஒருநாள்....
தலைமைச் செயலகத்துக்கு எதிரே
அந்த ஒற்றை மரத்தைக்
காட்டிச் சொன்னான்...
`எனக்குப் பிடித்த இடம்டா
இந்த மர நிழல்!'
அவன் மரித்த நிமிடம்
பார்த்த மரம்,
இப்போதும் இருக்கிறது
அதே இடத்தில் - உயிரோடு!
நிறைய முகங்கள் அவனுக்கு.
முதல் படத்துக்கே (கணேஷ்)
விருதுகள் வென்றெடுத்த
சினிமாக்காரன்.
கதை சொல்லச் சொல்ல
கண்மூடிக்
கொண்டால் போதும்.
படம் ஓடும்.
தமிழில் முதல் படம் நரசிம்மா.
தயாரிப்பில் இருக்கும்போதே
வியக்கிறது திரையுலகம்.
அதனாலும்தான்...
கண்ணீரும் கதறலுமாய்
திரண்டது கோடம்பாக்கம்.
அவனுக்காக கூடியவர்களை
அவன் பார்க்க முடியாதது
சோகம்.
வெற்றிக்கு
விழ வேண்டிய மாலைகள்
வழியனுப்பக் குவிந்தது
பாவம்!
நிறைய முகங்கள் அவனுக்கு.
தெரிந்தார்க்கினியன்.
நல்ல நண்பன்.
பரபரப்பு அவனை
பற்றியிராத காலம்.
அவனையும் சேர்த்து
ஏழெட்டு பேராகும்.
பேச்சிலர்ஸ் பாரடைஸ்...
ஞாயிற்றுக்கிழமைகளில்
அறை களை கட்டும்.
ஆட்டம், பாட்டு, சண்டை..
ஆம்,
மோதலால் காதலானவர்கள்தான்
அவனுக்கு அதிகம்.
சிண்டைப் பிடிக்காத குறையாக
சண்டைகள் உண்டு.
ஆனால்...
வெளியே பேசும்போது
விட்டுக் கொடுக்கவே மாட்டான்.
இப்போது விட்டுவிட்டுப்...
நிறைய முகங்கள் அவனுக்கு.
பொறுப்பான பிள்ளை.
பாண்டிச்சேரியிலிருந்து போன்...
விஷயத்தை
வெளியே சொல்லவில்லை.
அவனும் நானும்
அப்பா அம்மாவை
அழைத்துக்கொண்டு போகிறோம்.
வழியோடு வலியாக
கொஞ்சம் கொஞ்சமாக
சேதி சொல்கிறோம்.
தெருமுனை வந்ததும்தான்
அக்கா
இறந்ததைச் சொல்கிறோம்.
யானைக்கு மணியாக
வழிநெடுக
அவன் கொடுத்த
வார்த்தை ஒத்தடம்
இப்போது கிடைக்குமா
அவனை இழந்து
துடிக்கும் பெற்றோருக்கு?
நிறைய முகங்கள் அவனுக்கு.
இதுவரை
யாருக்குமே தெரியாத முகம் -
யாருமே பார்க்காத முகம்...
ஜூன் - 10
தூங்கிக் கொண்டிருக்கும்
அவனை தூக்கி வைத்திருக்கிறார்கள்.
அவன் அழைத்தபோதெல்லாம்
வரமுடியாத குருநாதர்
சுரேஷ்கிருஷ்ணா
ஓடிவந்து
உடைந்து கிடக்கிறார்.
பதினாறடி பாய இருந்த குட்டி,
நேற்றுதான்
குருவைச் சந்தித்து
கால்களில்
விழுந்து வந்திருக்கிறான்.
ஆசிர்வாதம் செய்து அனுப்பியவருக்கு
அதிகாலையில் அதிர்ச்சி!
எழுத்தைப் புடம் போட்ட
இன்னொரு குரு
மதன் வந்திருக்கிறார்
குமுறும் உணர்ச்சிகளுடன்
மல்லுக்கட்டுகிறார்.
பிறக்காத சகோதரனாய்
பதறித் தவிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
நொறுங்கிய மனிதராய்
வருந்திக் கலங்குகிறா
விஜயகாந்த்.
`ஃபைட் சீன்
திருப்தியா வரல
ரீ ஷுட் பண்ணலாம் சார்' என
நேற்று பேசிய
திருப்பதியா இது!
நேற்று இரவு
அவனைச் சந்திக்க முயன்று
`வேண்டாம் திருப்பதி.
நாளைக்குப் பார்க்கலாம்' என்று
போன் பேசிவிட்டுப் போன
நண்பர்கள் அலறுகிறார்கள்...
"ஒருவேளை
நேற்று சந்தித்திருந்தால்
உன் வழியும்
மாறியிருக்குமே நண்பா!''
படம் ரிலீஸானதும்
பப்ளிசிடிக்குப் பயன்படுத்தலாமென
போன மாதம்
எடுத்த போட்டோக்களை
நாளிதழ் நிருபர்களுக்கு
இறுக்கத்துடன் கொடுக்கிறான்
இன்னொரு நண்பன் -
புகைப்படக்காரன்.
`ஆள்
அழகாகத்தான் இருக்கான்.
படத்தில் நடிக்கலாமே' என
ஷங்கர் சொன்னதை
அவனிடம் சொல்லியதையும்,
வெட்கத்துடுன்
அவன் குதூகலத்ததையும்
மாய்ந்து மாய்ந்து கூறுகிறான்
வேறொரு நண்பன்.
"ஏம்ப்பா அவனுக்கு
திருப்பதிசாமின்னு
பேர் வச்சீங்க.
அந்த சாமியே
அவனை எடுத்துக்கிச்சே' என
கதறிக் கரைகிறாள் சகோதரி.
கடைசி நிமிடத்துக்கு
முந்தைய நிமிடங்களிலும்
உடனிருந்த உதவியாளர்கள்
புலம்புகிறார்கள்...
"போன வாரம் முழுக்க
பார்க்கிற ஆள்கிட்ட எல்லாம்
பிறப்பு, வாழ்வு, மரணம்
இதப்பத்தித்தான் பேசினார்''
எல்லோருக்கும்
தாமதமாகத் தெரிந்தது
அவனுக்கு மட்டும்
முன்பே தெரிந்திருக்கிறது!
எல்லாம் சொல்லியிருக்கிறான்
என்னிடம்.
கற்பு பறிபோகாமல்
தப்பி வந்த
கதை சொல்லியிருக்கிறான்.
கனவுப் படம் குறித்த
ஆசை சொல்லியிருக்கிறான்.
உள்ளுக்குள் ஒரு காதல்
மலர்ந்து
உதிர்ந்ததைச் சொல்லியிருக்கிறான்.
`எடுத்தவரை நரசிம்மா
கேப்டனுக்கும் பரம திருப்தி'
என்று சொல்லியிருக்கிறான்.
வீடு கட்டியபின்தான்
தாலி கட்ட வேண்டும்
என்பதைச் சொல்லியிருக்கிறான்.
பெண் பார்க்கச்
சொல்லியிருக்கிறான்.
ஜூலை 2-ம் தேதி
பிறந்த நாளன்று
ஒன்றாகச் சாப்பிட
வரச் சொல்லியிருக்கிறான்.
ஜூலை 5-ம் தேதி
படம் ரிலீசானதும்
ஒவ்வொரு தியேட்டராகப் போய்
பரபரப்பைப்
பார்க்கலாமென்று சொல்லி
இருக்கிறான்.
இப்போது...
அப்பா சொல்கிறார்,
எப்போதும் போலவே
அவன் முகத்தை
மடியில் கிடத்திக் கொண்டு
இப்போதும் சொல்கிறார்...
"புள்ள பாவம்யா...
எடிட்டிங் முடிச்சுட்டு
நைட் மூணு மணிக்குத்தான்யா
வந்து படுத்தான்.
அசந்து தூங்குறான்
அப்புறம் வாய்யா.''
உறக்கம் கலையும்வரை
காத்திருக்கிறேன் தோழா!
அதுவரை...
உனது நினைவுகளுடனும்
நமது நிழல்களுடனும்
நிஜமாயிருக்கிற உறவுகளையாவது
உயிருடன் வைத்திருக்கிறேன்.
11 comments:
துயரப்படுத்திவிட்டீர்கள்.....
தூரன் குணா.
துயரபடுத்திவிட்டீர்கள்,
தூரன் குணா.
//"ஏம்ப்பா அவனுக்கு
திருப்பதிசாமின்னு
பேர் வச்சீங்க.
அந்த சாமியே
அவனை எடுத்துக்கிச்சே' என
கதறிக் கரைகிறாள் சகோதரி.//
மனது கனக்கின்றது நண்பா!
கண்களில் கண்ணீர்த் துளிகளுடன்....
அன்புடன்...
சரவணன்.
உங்கள் துயரத்தின் ஆழம் உங்கள் நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது. சொல்ல வார்த்தைகள் சில சமயம் கிடைக்காது இது அது போன்ற ஒரு சூழ்நிலை.
nan edirparkkun andha posting innum varalaye?
அன்பின் கெளதம்..... உங்களுடைய வலைபதிவை தற்பொழுதுதான் படித்தேன்...... திருப்பதிசாமி பற்றிய உங்களுடைய நிஜக்கதையும், அந்நாளிலேயே வெளியான கவிதையும்..... உட்கார்ந்த இடத்திலேயே கதறி விட்டேன்..... நெஞ்சு கணம் இன்னும் குறையவில்லை.....கசிய வைத்து விட்ட எழுத்துக்கள்....
அன்பின் கெளதம்..... உங்களுடைய வலைபதிவை தற்பொழுதுதான் படித்தேன்...... திருப்பதிசாமி பற்றிய உங்களுடைய நிஜக்கதையும், அந்நாளிலேயே வெளியான கவிதையும்..... உட்கார்ந்த இடத்திலேயே கதறி விட்டேன்..... நெஞ்சு கணம் இன்னும் குறையவில்லை.....கசிய வைத்து விட்ட எழுத்துக்கள்....
அன்பின் கெளதம்..... உங்களுடைய வலைபதிவை தற்பொழுதுதான் படித்தேன்...... திருப்பதிசாமி பற்றிய உங்களுடைய நிஜக்கதையும், அந்நாளிலேயே வெளியான கவிதையும்..... உட்கார்ந்த இடத்திலேயே கதறி விட்டேன்..... நெஞ்சு கணம் இன்னும் குறையவில்லை.....கசிய வைத்து விட்ட எழுத்துக்கள்....
இந்தியா டுடே ஆசிரியராக இருந்த போது திருப்பதிசாமியைச் சந்தித்தது நினைவில் நிழலாடுகிறது.அப்போது அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்தார் என்று எண்ணுகிறேன்.தேர்தல் முறை குறித்தோ, தேர்தல் சட்டங்கள் குறித்தோ அவர் மேற்கொண்டிருந்த ஆய்வு தொடர்பு சம்பந்தமாக என்னை சந்திக்க வந்திருந்தார். சட்ட மாணவர் என்ற நோக்கில்தான் அவருடன் பேச ஆரம்பித்தேன். பேசப் பேச அவருள் இருந்த இலக்கிய வாசம் வெளியில் தெரியவந்தது.அவரும் பாரதியின் சீடர் என்பது அதைத் தொடர்ந்து அறியக் கிடைத்தது.
நான் பணி புரிந்த இடங்களில் என் அறையில் எப்போதும் ஒரு பாரதி படம் இருக்கும். அறைக்குள் நுழைந்ததும் அவர் பார்வை பாரதியின் மீது பதிந்தது.ஆனால் பாரதியைப் பற்றி அப்போது ஏதும் பேசவில்லை. ஆனால் போகப் போக அவரால் பாரதியைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.
அவர் ஜூவியை விட்டு சினிமாவிற்குப் போகிறார் என்று அறிந்ததும் ஏன் பத்திரிகைத் துறைக்கு ஆர்வத்தோடும், லட்சியங்களோடும் வரும் இளைஞர்கள் சினிமாவை நோக்கி ஓடுகிறார்கள் என்று ஒரு கேள்வியும் வருத்தமும், எழுந்தது. என் வருத்தத்தை என்னுடன் பணியாற்றியவரும், திருப்பதியின் தலைமுறையைச் சேர்ந்த பத்திரிகையாளருமான கல்பனாவிடமும், மற்றொரு பத்திரிகையாளரான செளபாவிடமும் பகிர்ந்து கொண்டேன். " சார், பார்த்துக்கிட்டே இருங்க, அவன் சினிமாவில பெரிய ஆளா வருவான், நீங்க ரொம்பகாலமா சொல்லிக்கிட்டு இருக்கிற மாதிரி சினிமாவிற்கும் இலக்கியத்திற்குமொரு பாலம் போடுவான்" என்றார் செளபா.
அந்தப் பாலத்தைக் கால வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
மாலன்
nostalgic...
Post a Comment