Wednesday, August 23, 2006

லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!

இது ஆம்பளைங்க சமாச்சாரம். சமீபத்தில் என்னை 'ஷாக்'கிய சம்பவம்!! எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!!!

ரு பெரிய இடைவெளிக்குப் பிறகு பழைய நண்பர் ஒருவரைச் சந்திக்கப் போனேன்.

பழகுவதில் இனியவர் அவர். கல்யாண வயதில் மகன் - மகள் இருந்தாலும் குடும்பத்தை விட்டு வேலைக்காக சென்னையில் தனியே வசிக்கும் `பிரம்மச்சாரி'. இந்த வயதிலும் உழைப்பை நேசிப்பவர்.

பெயரைவிட விஷயம்தான் முக்கியம் என்பதால் ஒரு பேச்சுக்காக அவருக்கு இங்கே ராஜன் என பெயரிட்டுக் கொள்ளலாம்.

பேசிப் பல மாதங்கள் ஆனதால் நிறையக் கதைக்க வேண்டியிருந்தது. பேசி, சிரித்து,சண்டை போட்டு, புரிய வைத்து, புரிந்துகொண்டு.. பாதி இரவு கழிந்து போனது.

நள்ளிரவு நேரம். என்னுடன் பேசிக்கொண்டிருந்த ராஜன் திடீரென ஒரு கணத்தில் எழுந்தார். `எக்ஸ்க்யூஸ் மீ' கேட்டார்.

`ஆஃப்' பண்ணி வைத்திருந்த அவரது மொபைல் போனை `ஆன்' பண்ணிக் கொண்டார்.

"ஒரு காதலி எனக்காக இந்நேரம் காத்துக்கிட்டு இருப்பாங்க'' என்றவாறே போனை காதுக்குக் கொடுத்தார். ஆரம்பித்தார்...

"ஹாய் செல்லம்! ஸாரிடா... ஃப்ரண்டு ஒருத்தர் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கார். பேச்சுவேகத்துல கொஞ்சம் டயம் மிஸ் பண்ணிட்டேன்'' என்றார் என்னைப் பார்த்தபடியே.

மறுமுனையில் ஒரு பெண் குரல் கீச்சிடுவது அந்த இரவு நிசப்தத்தில் எனக்கும் கேட்டது.

நாகரிகம் கருதி "நா வேணா வெளில போயிட்டு வரட்டா'' எனக் கேட்டவாறே எழ முயன்றேன்.

"பரவாயில்ல இருக்கலாம்'' என்று எனக்கும், "ஒண்ணுமில்லம்மா. ஃப்ரண்டுதான்'' என போனிடமும் பேசினார் ராஜன். உட்கார்ந்து கொண்டேன் மறுபடியும்.

தொடர்ந்தது காதலர்களின் பேச்சுவார்த்தை. கிட்டத்ததட்ட அரைமணி நேரம் பேசினார்கள் இருவரும்.

இருபது வயதுக் காதலன் போல அவ்வளவு இனிக்க இனிக்கப் பேசினார் ராஜன் என்ற அந்த ஐம்பது வயதுக் கிழவன். ஆனால் பேச்சில் இருபதுக்குரிய விரசம் இல்லை! குடும்பத்தோடு காதல் சினிமா பார்க்கப் போவோமே, அப்படி இருந்தது அந்த ஜிலேபிப் பேச்சு.

"ஏன் காலைச் சாப்பாட்டைக் கட் பண்றே? அது ஆபத்தும்மா'' என்றார் அந்தப் பெண்ணிடம் அப்பாவின் பாசத்துடன்.

"பீரியட் சமயத்துல நைட்ல பால் குடிக்காம படுக்காதடி'' என்றார் அம்மாவின் கரிசனத்துடன்.

"ஐயய்யோ.. அந்த மாதிரி வெப்சைட்டையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டியா'' என்றார் தோழிச் சிரிப்புடன்.

"சரி டார்லிங், இந்த நாள் இனிய நாளா விடியட்டும். நிம்மதியா தூங்கு. ஸ்வீட் ட்ரீம்ஸ், குட்நைட்'' என்றார் பக்குவப்பட்ட காதலனாக.

பிரமிப்போடு சிலையாகி இருந்தேன் அத்தனை நேரமும். போனை கட் செய்துவிட்டு என்னை ஏறிட்டார். அவர் (என்னிடமும்!) பேசப் போவதைக்கேட்க மிக ஆர்வமாயிருந்தேன்.

"பி.ஏ. படிக்கிறாங்க. இங்கதான்.. சென்னையில்தான் படிக்கிறாங்க. ராத்திரி, தினம் ஒரு அரை மணி நேரமாவது என்ட்ட பேசாம தூங்க மாட்டாங்க. ஒரு புக் ஷாப்ல ஃப்ரண்ட்ஸானோம்" என்றார் ராஜன் அவராகவே.

"காதலின்னு சொன்னீங்களே?'' - நான் இழுவை போட்டேன்.

வாய்விட்டுச் சிரித்தார் ராஜன்.

"ரொம்ப தமிழ் சினிமா பார்க்காதீங்க. இந்தக் காதலுக்கு அர்த்தம் அளவற்ற அன்பு'' என்றார்.

எனக்குள் லேசான ஏமாற்றம்!

திடீரென ராஜனிடம் மறுபடி வேகம்! மறுபடியும் மொபைல் போனை எடுத்தார்!

"மணியாச்சு.. இவங்க இன்னொரு காதலி. `கால் சென்டர்'ல நைட் ஷிப்டு பார்க்கிறாங்க. என்னோட பேசணும்ங்கிறதுக்காக எனக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததே இவங்கதான்'' என்றபடியே போனில் அந்தக் காதலியைப் பிடித்தார்.

அதே உற்சாகத்துடன் பேச்சை ஆரம்பித்தார்...

"என்ன ஸ்வீட்டி. இன்னிக்கு சொன்ன நேரத்துக்கு பேசிட்டனா? நான் ஓல்டானாலும் கோல்டு. லேட்டா பேசினாலும் லேட்டஸ்ட்'' என்று கூறிச் சிரித்தார். மறுமுனையில் பேசிய ஸ்வீட்டியையும் சிரிக்க வைத்தார்.

தொடர்ந்தது அவர்கள் உரையாடல். இதில் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்தது. அந்தப் பெண்ணின் குடும்பக் கஷ்டம் ஒன்றுக்கு நீளமாக ஆலோசனை சொன்னார். தன்னம்பிக்கை டானிக் ஊட்டுவது போலிருந்தது ராஜனின் நீளநிமிடப் பேச்சு.

அந்த அகால நேரத்திலும் கொட்டாவி மறக்கும் அளவுக்கு ரசிப்புடன் பேச்சைக் கேட்டேன் நான்.

முடிந்தது!

மறுபடியும் ராஜன் என்னுடன் தன் உரையாடலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்...

"ஐயா சாமி, என்னை காமுகன்னு தப்பா அர்த்தம் பண்ணிக்காதப்பா. இதுவும் முதல்ல சொன்ன அதே அளவற்ற அன்பு டைப் காதல்தான்'' என்றார். எனக்கு ராஜன் மீது பொறாமை பொங்கியது உண்மையே!

அடுத்து எங்கள் வாதமும், விவாதமும் வேறு விஷயங்களில் மூழ்கின. அது ஒரு இலக்கிய சர்ச்சை. இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லாத ஒன்று.
பேச்சு சுவாரசியத்தில் விடிந்தது கூடத் தெரியவில்லை!

"அடடா விடிஞ்சிடுச்சே! இந்நேரம் அவங்க ஹஸ்பெண்ட் மார்னிங் டூட்டிக்குக் கிளம்பியிருப்பார். அவருக்கு சமைச்சுக் கொடுத்து ஆபீஸுக்கு அனுப்பி வெச்சுட்டு ஒரு மணி நேரமாச்சும் என்கிட்ட பேசுவாங்க என்னோட காதலி நம்பர் : மூணு'' என்றார் ராஜன்.

மறுபடியும் செல்போன் கொஞ்சல் ஆரம்பமானது! அதே அதே அதே 'இளமை இதோ இதோ' காதலனின் உற்சாகத்தோடு போனில் இருந்த முப்பது வயதுப் பெண்மணியைக் கொஞ்சினார் ராஜன்.

அது அடுத்தவர் மனைவி என்று தெரிந்தபோதும், ராஜன் மீது எனக்கு ஏற்பட்ட பொறாமை உணர்வு குறையவில்லை!

இந்தக் காதல் பேச்சு ரொம்ப அந்நியோன்யமாக இருந்தது. அரைமணி நேரம், முக்கால் மணி நேரத்தில் முடிவது போலத் தெரியவில்லை.
எனக்கு அதிகாலை வேலைகள் க்யூ கட்டி நின்றதால் உட்கார்ந்து கேட்க முடியவில்லை. ஜாடையிலேயே `அப்புறம் ஒருநாள் வர்றேன், டயமாச்சு' எனக் காட்டிவிட்டு ராஜனின் அறையைவிட்டு வெளியேறினேன்.

நான் செருப்புக்குள் என் கால்களைத் திணிக்கும்போது ஏறக்குறைய டி.எம். சௌந்தரராஜனாகவே ஆகியிருந்தார் ராஜன். "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. ம்ம்.. ம்ம்... ம்ம்ம்" என அவர் போனில் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது இந்தத் தொண்டைக்குள்ளும் இப்படி ஒரு தேனா என்ற வியப்பு வந்தது!

கணவனிடம் கிடைக்காத அந்த அளவற்ற அன்புக் கொஞ்சலுக்காக மாற்றானிடம் இப்படி ஒரு நேரம் காலம் தெரியாத நேரத்தில் மணிக்கணக்காகாப் பேசும் அந்தப் பெண்மணியைக் கோபிப்பதா, வரவேற்பதா எனப் புரியவில்லை.

குழப்பத்தோடு கதவைச் சாத்தினேன்.

ராஜனின் காதல்கள் சரியா தப்பா எனவும் தெரியவில்லை.

வெளியே தெருவில்.. அதிகாலைக் குளிர் காதுகளுக்குள் ஈட்டியாகப் புகுந்தது.

மனசு முழுக்க ஒரே ஒரு வரி படபடப்போடு ஓடிக் கொண்டிருந்தது - டி.வி.யில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடுமே அந்த மாதிரி.

அது...
`மனைவியை, மகளை, சகோதரியை, அம்மாவை, பாட்டியை.. உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரையும் லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!'


இதற்கு முந்தைய 'எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!'

30 comments:

நாமக்கல் சிபி said...

Very Nice Atricle Gouthamji.

வினையூக்கி said...

Nice one

t.h.u.r.g.a.h said...

அந்த கடைசி வரிகள் உண்மையில் அற்புதம்!

கார்த்திக் பிரபு said...

sir idhai na erkenvey engayo padichiriukane..gugumathila???

இராம்/Raam said...

//"லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!" //

இதுவரைக்கும் பொண்ணுங்க ஒன்னுகூட கிடைக்கலை கெளதம்.... ஹீஹீ....

அருள் குமார் said...

கொளதம் சார்,
சீரியஸாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்படி நானும் பல பேரைப் பார்த்திருக்கிறேன். தங்கள் வீட்டுப் பெண்களிடம் இவர்கள் அவ்வளவு அக்கரையாகப் பேசுவதில்லை! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், மனோதத்துவ ரீதியில் இதை அனுகவே கேட்கிறேன்... உங்கள் நண்பர் உங்களுடன் இருந்த அந்தப் பொழுதுகளில், தன் மனைவியிடமோ மகளிடமோ அப்படி அக்கரையாகப் பேசினாரா?

நவீன் ப்ரகாஷ் said...

//மனைவியை, மகளை, சகோதரியை, அம்மாவை, பாட்டியை.. உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரையும் லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!' //

:)))

கதிர் said...

ஆச்சரியமா இருக்குங்க நீங்க சொல்ற விஷயம்!!

மயிலாடுதுறை சிவா said...

"கணவனிடம் கிடைக்காத அந்த அளவற்ற அன்புக் கொஞ்சலுக்காக மாற்றானிடம் இப்படி ஒரு நேரம் காலம் தெரியாத நேரத்தில் மணிக்கணக்காகாப் பேசும் அந்தப் பெண்மணியைக் கோபிப்பதா, வரவேற்பதா எனப் புரியவில்லை..."

பாழாய் போன மனது அதனை வரவேற்க்கதான் செய்யும்...அதே சமயத்தில் நம்வீட்டு அம்மணி அதனை தப்பாக எடுத்துக் கொள்ள கூடாது...

மொத்ததில் உங்கள் ஓரு நாள் அனுபவம் சூப்பர்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

சமீபத்திய பதிவுகளில் மிக முக்கியமான அருமையான அவசியமான அக்கறையான பதிவு.

//இது ஆம்பளைங்க சமாசாரம்//

இல்லைங்க. பொம்பளைங்க சமாசாரமும்தான்.

அது
`கணவனை, மகனை, சகோதரனை அப்பாவை தாத்தாவை உங்கள் வீட்டு ஆண்கள் எல்லாரையும் லவ் பண்ணித் தொலைங்கடீ ப்ளீஸ்!'

உலகில் எல்லாருமே அடுத்தவரின் அன்பிற்கும் அக்கறையான வார்த்தைகளுக்காகவும் மட்டுமே ஏங்குகிறார்கள். இதில் ஆண் பெண் பேதம் ஏதுமில்லை.

'நம் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் நண்பியை/நண்பனை..' என்று கூட தயங்காமல் சேர்த்திருக்கலாம்.

SP.VR. SUBBIAH said...

அடடே மிஸ்டர் கௌதம் போட்ட தலைப்பா இது என்ற கேள்வியுடன் பதிவிற்குள் நுழைந்தேன் - கடைசி இரண்டு வரிகளில் தான் தெரிந்தது - கௌதம் தப்பாகப் ப்திவு போடமாட்டார் என்பது - பதிவிற்குப் பார்ரட்டுக்கள்

G Gowtham said...

தமிழ் வீரன் அவர்களே,
நீங்களும் நானும்கூட ஒரே கட்சியில்தான் இருக்கிறோம்!
எனது ஆதங்கமும் அதேதான்!
தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்களா?!

லிவிங் ஸ்மைல் said...

அன்பு, பாசம், பரிவு, காதல் என்ற அரிய பொக்கிசங்கள் அனைத்தையும் பணம் தேடி பணத்தால் தொலைத்து கொண்டே வருகிறோம்...

// உங்கள் நண்பர் உங்களுடன் இருந்த அந்தப் பொழுதுகளில், தன் மனைவியிடமோ மகளிடமோ அப்படி அக்கரையாகப் பேசினாரா? //

ஞாயமான கேள்வி..

சீரியஸாக உக்காந்து விவாதிக்க வேண்டிய விசயம்... I mean அவரவர், அவரவர் குடும்பம் குட்டியுடன்..

இங்கே எத்தனை பேர் தன் குடும்ப உறுப்பினர்களிடம், மனம் திறந்து பேசிகிறார்கள்..?

rite...?!

பொன்ஸ்~~Poorna said...

கௌதம், அருளுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க என்று தெரிந்து கொள்ள ஆவல்.. மற்றபடி, இந்தக் கட்டுரை ஏனோ கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்ட நிஜம் என்றே தோன்றுகிறது

கோவை ரவீ said...

ரொம்ப நல்லாயிருக்கு உங்க புலம்பல்.

Anonymous said...

//உங்கள் நண்பர் உங்களுடன் இருந்த அந்தப் பொழுதுகளில், தன் மனைவியிடமோ மகளிடமோ அப்படி அக்கரையாகப் பேசினாரா?//

:-))

அருள்குமார் என்ன கேட்க வருகிறார் என்பதை கொஞ்சம் தெளிவாக கேட்டிருக்கலாம்.. அது எப்படி ஒரே சமயத்தில் அவர் வெளியிலும்.. தன் குடும்பத்தினருடனும் பேச முடியும்???

அருள் குமார் said...

//அது எப்படி ஒரே சமயத்தில் அவர் வெளியிலும்.. தன் குடும்பத்தினருடனும் பேச முடியும்???//

அனானி, கொளதம் தன் நண்பருடன் ஒரு நாளின் மாலைப் பொழுதிலிருந்து அடுத்த நாள் காலைவரை இருந்த நேரத்தில் தன் தோழிகளுடன் அவர் பேசியதை குறிப்பிட்டார். அவர்களுள் அவர் குடும்ப உருப்பினர்கள் யாரும் இல்லை என்பது கவணிக்கப்படவேண்டிய விஷயம் என்பதைத்தான் சொன்னேன்..! (இவ்வளவு விளக்கம் தேவையா?!)

Anonymous said...

//அனானி, கொளதம் தன் நண்பருடன் ஒரு நாளின் மாலைப் பொழுதிலிருந்து அடுத்த நாள் காலைவரை இருந்த நேரத்தில் தன் தோழிகளுடன் அவர் பேசியதை குறிப்பிட்டார். அவர்களுள் அவர் குடும்ப உருப்பினர்கள் யாரும் இல்லை என்பது கவணிக்கப்படவேண்டிய விஷயம் என்பதைத்தான் சொன்னேன்..! (இவ்வளவு விளக்கம் தேவையா?!)//

கண்டிப்பாக தேவை!
பொதுவாகவே ஊருக்குள் நல்லபெயர் எடுக்கும் ஆண்கள் வீட்டில் அப்படி எடுப்பதில்லை.
//மனசு முழுக்க ஒரே ஒரு வரி படபடப்போடு ஓடிக் கொண்டிருந்தது - டி.வி.யில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடுமே அந்த மாதிரி.

அது...
`மனைவியை, மகளை, சகோதரியை, அம்மாவை, பாட்டியை.. உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரையும் லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!'
//
இது மனோரீதியாக அனுக வேண்டிய பிரச்சனை தான்.

Jazeela said...

நல்ல பதிவு. உங்க நண்பர் மீதோ அல்லது அந்த பெண்கள் மீதோ எந்த தப்புமில்லை. எல்லோரும் செய்யக்கூடிய விசயம்தான். சிலர் வெளிப்படையாக சிலர் மறைமுகமாக. சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கும். சிலருக்கு கிடைக்காது.

Maraboor J Chandrasekaran said...

கவுதம், அது சரீரீரீ.. ராத்திரி முழுக்க அப்படி இலக்கிய லொள்ளு செய்ய போம மச்சான் ராத்திரி பூரா திரும்பி வரலைன்னு உங்க வீட்டம்மா மறுநாள் உங்களுக்கு டோஸ் விட்டாங்களா, இல்ல இந்த பத்திரிகை காரனுங்களே இப்படித்தான்னு மொத்த இனதுக்கே ஒரு குத்து (உள், வெளி எல்லாஞ்சேர்த்து) விட்டாங்களா ? ;) சொல்லுங்க கவுதம், சொல்லுங்க!

ILA (a) இளா said...

கல்யாணம் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்ட மக்களுக்காக (இரு பாலருக்கும்).. லவ் பண்ணித்தொலைங்க ப்ளீஸ்

Anonymous said...

//கணவனிடம் கிடைக்காத அந்த அளவற்ற அன்புக் கொஞ்சலுக்காக மாற்றானிடம் இப்படி ஒரு நேரம் காலம் தெரியாத நேரத்தில் மணிக்கணக்காகாப் பேசும் அந்தப் பெண்மணியைக் கோபிப்பதா, வரவேற்பதா எனப் புரியவில்லை//...

ஆரம்பத்தில் படிக்கும்போது என்னதான் நியாயம் கற்பித்துக் கொண்டாலும் 'ராஜன்' செயல்கள் நியாயமானவையாகத் தோன்றவில்லை.. அன்பு , பரிவு, ஆறுதல்- இப்படி என்ன வேண்டுமென்றாலும் பேர் வைத்துக் கொள்ளட்டும்.. தொலைபேசியில் பேசும்வரையில் பரவாயில்லைதான்.. ஆனால், இன்னொரு மிக பலவீனமான நேரத்தில், அது எல்லை மீறக் கூடிய சந்தர்ப்பம் எல்லா உதாரணங்களிலும் உள்ளது.. அப்படியொரு பலவீனமான சந்தர்ப்பத்தில் அவர்கள் சந்திக்க நேர்ந்தால், ராஜனோ அந்தப் பெண்களோ தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனத்திடம் கொண்டவர்களா?.

நான் இந்தக் கட்டுரையிலிருந்து புரிந்து கொண்டது ஒரு விஷயம் தான்.. ஆதலினால் இனிமேலாவது..

-//`மனைவியை, மகளை, சகோதரியை, அம்மாவை, பாட்டியை.. உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரையும் லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!'//
- இல்லையென்றால் அவர்களும் இதேபோல் அன்புக்காக ஏங்கி 'ராஜன்'களைத் தேடும் நிலைக்குப் போய்விடுவார்கள்.. சரியா திரு. கௌதம்...

மஞ்சூர் ராசா said...

எத்தனையோ பெண்களுக்கு நல்ல புரிதலுடன் கூடிய ஆண் நண்பர்களும், அதே போல ஆண்களுக்கு பெண் நண்பிகளும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

சிலர் தங்கள் குடும்பத்தினரிடம் வைத்திருக்கும் அதே அன்பை மற்றவர்களிடமும் காட்டுகிறார்கள். இதில் தவறேதும் இல்லை. அடுத்து சொந்த வீட்டிலேயே அனைவரிடமும் அன்பிருந்தாலும் சகஜமாக சிலரால் பழகமுடிவதில்லை. நண்பர்களிடம் சகஜமாக பழுகுவார்கள்.

இதில் பெண்களுடன் பேசுகிறார் என்பதால் தான் இவ்வளவும் கேள்விகளும், பதில்களும், இதே ஆண் நண்பர்களுடன் பேசியிருந்தால் கேட்கப்படுமா அல்லது இந்தக் கட்டுரைக்கு அவசியம் இருக்கிறதா என்பதும் யோசிக்க வேண்டிய விசயம்.

எப்படி இருந்தாலும் நல்லெண்ணத்துடன் பழகும் வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதே உண்மை.

முத்தமிழ் said...

எத்தனையோ பெண்களுக்கு நல்ல புரிதலுடன் கூடிய ஆண் நண்பர்களும், அதே போல ஆண்களுக்கு பெண் நண்பிகளும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

சிலர் தங்கள் குடும்பத்தினரிடம் வைத்திருக்கும் அதே அன்பை மற்றவர்களிடமும் காட்டுகிறார்கள். இதில் தவறேதும் இல்லை. அடுத்து சொந்த வீட்டிலேயே அனைவரிடமும் அன்பிருந்தாலும் சகஜமாக சிலரால் பழகமுடிவதில்லை. நண்பர்களிடம் சகஜமாக பழுகுவார்கள்.

இதில் பெண்களுடன் பேசுகிறார் என்பதால் தான் இவ்வளவும் கேள்விகளும், பதில்களும், இதே ஆண் நண்பர்களுடன் பேசியிருந்தால் கேட்கப்படுமா அல்லது இந்தக் கட்டுரைக்கு அவசியம் இருக்கிறதா என்பதும் யோசிக்க வேண்டிய விசயம்.

எப்படி இருந்தாலும் நல்லெண்ணத்துடன் பழகும் வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதே உண்மை.

Anonymous said...

what rajan does is nothing but flirting...அது "அன்பு" ன்னு சொல்லி கொச்சைப் படுத்தாதீங்க...இதே மாதிரி பண்ற பொம்பளங்கலும் இருக்காங்க.they conveniently call it friendship...how sick!!

Anonymous said...

//
ராம் said...
//"லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!" //
இதுவரைக்கும் பொண்ணுங்க ஒன்னுகூட கிடைக்கலை கெளதம்.... ஹீஹீ....
//

இப்படி எல்லாம் சிரிக்ககூடாது.ஆமா சொல்லிபுட்டேன்.
அண்ண பயந்துருவாரு..

J.P Josephine Baba said...

நல்ல விடயங்களை சொல்லி சென்றுள்ளீர்கள்!

MEENAKSHI SUNDARAM SOMAYA said...

நேசம் பாராட்டுக்குரியது .......வாழ்க்கை துணைஅறியா எண்ண நெருக்க நேசம் எல்லை விளிம்பில் உள்ளது ...உளவியல் ரீதியாக இது GRAPE WINE உற்சாகம் தரக்கூடியது ...எல்லை விளிம்பு வரை செல்வது என்றும் நல்லது அல்ல .

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி. இப்படியும் இருக்கிறார்கள்.

Gopinath Jambulingam said...

`மனைவியை, மகளை, சகோதரியை, அம்மாவை, பாட்டியை.. உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரையும் லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!'
#உண்மைதான். நாம் இதில் தவறுவது, வேறொரொருவர், நம் உறவுகளுக்குள் மூக்கை நுழைக்க ஒரு வாய்ப்பாக மாறிவிடுகிறது.

அதே சமயம், ராஜன் விஷய்த்தில் ஒரு சந்தேகம் எழாமலில்லை. மூன்று காதலிகளுடன் இப்படி மணிக்கணக்கில் தினமும் மொக்கை போட இவரால் எப்படி முடிகிறது? அப்படியெனில், இவருக்கென்று ஒரு குடும்பம் இல்லையா? அல்லது, அவர்களிடம் ஒரு முகம், அடுத்தவர்களிடம் வேறு முகம் என்ற ரீதியில் இவர் ஒரு ஹிப்போக்ரைட் ஆக இருப்பாரோ?