Friday, August 25, 2006

முதுகெலும்பைக் கவனியுங்கள்! / எதற்கு? ஏன்? ஏப்படி?

அவர்கள் இருவரும் நண்பர்கள். ஒருவர் உள்ளூர்க்காரர். மற்றவர் பக்கத்து ஊர்வாசி.

இருவரும் ஒன்றாகவே பொறியியல் படிப்பை முடித்தார்கள். ஒரே நிறுவனத்தில் தொழில் நுணுக்கம் கற்றுக் தேர்ந்தார்கள். சொந்தமாக தொழில் செய்யும் ஆசை வந்ததும் ஆளுக்கொரு திசையில் பிரிந்தனர். அவரவர் ஊர்களில் தொழில் தொடங்கினர்.

வெளியூர்க்காரருக்கு தொட்டதெல்லாம் வெற்றி. உள்ளூர்க்காரருக்கு ‘எல்லாம் தோல்வி மயம்!’.

ஒரு கட்டத்தில் தொழிற்சாலையை மூடி விடலாமா எனவும் யோசித்த உள்ளூர்வாசி தன் நண்பனுக்கு போன் போட்டார். சோகத்தைச் சொன்னார்.

“அவசரப்படாதே. யாரிடமாவது பொறுப்பைக் கொடுத்துவிட்டு இங்கே வந்து சேர். ஒரு மாதமாவது என்னுடன் இரு. இங்கே என்ன நடக்கிறது என வேடிக்கை பார். உன்பக்கம் என்ன தவறுகள் இருக்கின்றன என்பது தானாகவே புரியும். அவற்றைத் திருத்திக் கொள். நீயும் ஜெயிக்கலாம்!” என்றார் வெளியூர்க்காரர்.

“இங்கே ஒரு பயலும் சரியில்லை. யாரிடம் பொறுப்பைக் கொடுப்பது” என அங்கலாய்த்த உள்ளூர்வாசி ஒரு வழியாக தன் மனைவியிடமே நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அங்கே.. தொழிற்சாலையின் மாதாந்திரக் கூட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தார் வெளியூர் வெற்றியாளர். நண்பரையும் கூடவே அழைத்துக் கொண்டு போனார்.

அவர்களது சமீபத்திய வெற்றி ஒன்றைப் பற்றிப் பேசுவதாக அமைந்திருந்தது அந்தக் கூட்டம். அனைவரும் பேசி முடித்ததும் பேச எழுந்தார் முதலாளி, அதாவது வெளியூர்க்காரர்.

“இந்த ப்ராஜக்டை நமது கவனத்துக்கு கொண்டு வந்தது நமது பொது மேலாளர். ‘செயல்படுத்தலாம்’ என எனக்கு ஊக்கம் கொடுத்தது நமது சூபர்வைசர். நமது பணி தாமதப் படும்போதெல்லாம் நம்பிக்கை கொடுத்து என்னைத் துவளவிடமால் செய்தவர் என் உதவியாளர்..”

தொடர்ந்து இப்படியே பலரைக் குறிப்பிட்டுப் பேசினார் வெளியூர்க்காரர். அத்தனை பேரையும் மனமாரப் பாராட்டினார்.

கூட்டம் முடிந்து போகும்போது அனைவர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்! கூடவே இன்னும் சாதிப்பதற்கான வெறியும்!

ஒரு மாதம் இருப்பதற்காக வந்திருந்த உள்ளூர்க்காரர் உடனே ஊர் திரும்ப முடிவெடுத்தார். நண்பரின் வியாபார வெற்றிக்கான சூட்சுமம் இந்த ஒரே கூட்டத்திலேயே புரிந்து போனது அவருக்கு. உங்களுக்குப் புரிகிறதா?


?


?


?


?


?

?


‘உழைப்பவர்களை அங்கீகரியுங்கள்! உற்சாகமாகப் பாராட்டுங்கள்!’

'எதற்கு? ஏன்? எப்படி?' வரிசையில் முந்தைய பதிவுகள்:


4 comments:

Anu said...

very true
without encouragement and motivation success cannot be achieved

Ken said...

உற்சாகம் எல்லோரிடமும் பரவிட்டால் கண்டிப்பாக கடமையை தவறாமல் செய்வார்கள்
உண்மையான வார்த்தைகள் அண்ணா

SP.VR. SUBBIAH said...

// ‘உழைப்பவர்களை அங்கீகரியுங்கள்! உற்சாகமாகப் பாராட்டுங்கள்!’ //
நல்ல பதிவு.
பாராட்டுக்கள்!

நாகை சிவா said...

சத்தியமான வார்த்தைகள் கெளதம். வெற்றிகளை பகிர்ந்து அளித்தால் நம் தோல்விகளும் தானாக பகிர்ந்து எடுத்துக் கொள்ளப்படும்.