Monday, November 27, 2006
எழுதுவது எப்படி?
எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!
இயல், இசை, நாடகம்.. இம்மூன்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கும் முன்னதாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்!
கலை - இலக்கியம் யாவும் மக்களுக்கே! அல்லது கலை கலைக்கே!! இந்த இரண்டு கருத்துக்களில் நீங்கள் எந்தக் கட்சி?
முதலாவது வகை ‘கே’க்கே உங்கள் ஓட்டு எனில் நீங்கள் என் கட்சி. தொடரலாம் வாருங்கள்..
ஒரு முழுமையான படைப்புக்கு ஆதாரம் என்ன தெரியுமா? நமது சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்புகள் படிப்பவரை அல்லது பார்ப்பவரை இலகுவாக கருத்தொருமிக்கச் செய்துவிட வேண்டும்.
அதாவது நமது கருத்துக்கே அவர்களும் ‘ஆமாம்’ போடவேண்டும் என்பதல்ல இந்த இடத்தில் கருத்தொருமித்தலுக்கான அர்த்தம். படைப்பு வாயிலாக நாம் சொல்ல நினைக்கும் கருத்தினை அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளவேண்டும்! புரிந்த கருத்துக்கு ஏற்புடையதாகவோ மறுப்புடையதாகவோ மறு கருத்துச் சொல்வது அவரவர் பிறப்புரிமை.
ஆக எளிமையாகச் சொல்வதால் எதிரே இருப்பவரை வேகமான புரிந்து கொள்ளுதலுக்குத் தயார்ப் படுத்தலாம் என்பது உட்கருத்து.
இப்படி எளிமையாகச் சொல்வதால் இலக்கின் எல்லைகளும் விரிவாகும் என்பது தனிக் கருத்து!
இதழியலில் இதைத்தான் வெகு ஜன வாசிப்பு என்கிறோம். எழுத முற்படுவதை எளிமையான வகையில் எழுதுவதன்மூலம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான அடிப்படை இலக்கணம்.
இந்த இலக்கணப்படி எழுதப்படும் பத்திரிகைகளே வெகு ஜனப் பத்திரிகைகள்.
தமிழில் வெகு ஜன இதழியலில் மூத்த குடிமகன் என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அமரர் சி.பா.ஆதித்தனார்.
அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் நடை போடும் ‘தினத்தந்தி’ இன்றும் வெற்றி நடை போடுகிறது. டீக்கடை பென்ச்சுகளில் மட்டுமல்ல, நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறைகளையும் தனது செய்திகளால் நிரப்புகிறது.
‘எப்படி எழுத வேண்டும்?’ என இதழாளர்களுக்கு அவ்வப்போது ஆதித்தனார் சொல்லிய விஷயங்களைத் தொகுத்து ‘இதழாளர் கையேடு’ என்ற நூல் வெளியிட்டிருக்கிறது தினத்தந்தி. எளிமையாகவும் புரியும்படியும் எழுத நினைப்பவர்களுக்கு அது என்றும் பயனுள்ள புத்தகம்.
அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கச் சென்றதன்மூலமே ‘தினத்தந்தி’க்கும் எனக்குமான நேரடி தொடர்பு ஆரம்பமானது!
தினத்தந்திக்கு வரி விளம்பரங்கள் வாங்க உரிமம் பெற்ற விளம்பர நிறுவனம் (அதாவது Authorised Franchisee) நியமிக்கப் போவதை கேட்டறிய வாய்ப்புக் கிடைத்தது. ‘நுங்கம்பாக்கம்’ ஏரியாவுக்கென விண்ணப்பித்தேன். கடும் போட்டிக்கிடையில் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொஞ்ச காலம் அந்தப் பணியையும் செய்தேன்! அந்த வகையில் ‘தினத்தந்தியின் நேரடி அங்கீகாரத்தைப் பெற்றவனாக்கும்’ என நானும் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாமாக்கும்!
கூடவே, ஆதித்தனாரின் நேரடி அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் பெற்ற மூத்த பத்திரிகையாளர்கள் சிலருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பெருமையும் எனக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளலாம்!
அப்படி ஒரு அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் ஒருவர். என்னைச் செதுக்கியவர்களில் அவருக்கும் பெரும்பங்கு இருக்கிறது. தினத்தந்தியில்தான் அவரது பத்திரிகையுலகப் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது. அதுவும் படிக்கிற காலத்திலேயே!
ஆதித்தனார் அவர்கள் தனது செய்தியாளர்களுக்கு சின்னச் சின்ன விஷயங்களையும் எப்படி எளிமையாகச் சொல்லித்தந்தார் என்பதை அடிக்கடி அவர் விவரிப்பார். ஆர்வமுடன் இப்போதும் நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.
பணிக்குச் சேரும் பயிற்சி நிரூபர்களுக்கும் உதவி ஆசிரியர்களுக்கும் முதல் நாளிலேயே செய்தி ஆசிரியர் கொடுக்கும் பத்து கட்டளைகள் குறித்தும் அவர் சொன்னதுண்டு. ‘நம் ஆசிரியர் ஆதித்தனாரின் பத்து கட்டளைகள்’ என்று தலைப்பிட்டு தன் கைப்படவே எழுதிக் கொடுப்பாராம் செய்தி ஆசிரியர். ஆதித்தனாரின் நேரடி பயிற்சிக்கு முன்னதாக இந்த கட்டளைகள் மணி ஓசைப் பயிற்சியாக!
பல வருடங்களுக்கு முன்பு தனக்கு(ம்) கொடுக்கப்பட்ட அந்த பத்து கட்டளைகளின் நகலை வீட்டிலிருந்து தேடி எடுத்துவந்து கொடுத்தார் அவர் இன்று.
‘வெகு ஜன இதழாளர்களுக்கு’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நிச்சயம் நமது எழுத்துக்களை எளிமைப்படுத்திக் கொள்ளப் பயன்படும்! ‘இதழாளர்களுக்கு மட்டும் இல்லை’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும் நிச்சயம் எல்லோருக்குமே பயன்படும். எழுதுவது, பேசுவது.. இப்படி எல்லாவிதமான தகவல் தொடர்பு பரிமாணங்களுக்கும் இது பொருந்தும்.. எனக்குக் கிடைத்தது, நீங்களும் சாப்பிடுங்கள்!
ஆதித்தனாரின் பத்து கட்டளைகள்
1. சிறு சிறு வாக்கியமாக எழுதுங்கள்.
2. எழுத்தில் எளிய சொற்களே இருக்கட்டும்.
3. புரியும் சொற்களில் மட்டுமே எழுதுங்கள்.
4. தேவையற்ற சொற்களை கட்டாயமாக நீக்குங்கள்.
5. வாசகர்களைக் கவரும் வகையில் சொற்களில் துடிப்பு இருக்க வேண்டும்.
6. வாசகர்களுடன் நேரில் பேசுவதுபோல எழுதுங்கள்.
7. படம் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து இருக்க வேண்டும்.
8. உங்கள் எழுத்து வாசகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
9. உங்கள் எழுத்தில் தரம் இருக்க வேண்டும்.
10. வாசகர்களுக்கு விளக்குவதற்காக எழுதுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
‘இதழாளர் கையேடு’ ஆரம்பநிலைப் பயிற்சிக்கு மிக அவசியமானது. பயிற்சி பெற்றவர்களுக்கும் சுய பரிசோதனைக்கு உதவக்கூடியது.
பலரும் பலவிதமாக விமர்சித்தாலும் தமிழ் வாசகனை உருவாக்கியதில் தினத்தந்தியின் பங்கு மிகப்பெரியது.
பத்திரிகையுலகில் மிகப் பிரபலமான 'நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல, நாயை மனிதன் கடித்தால் தான் செய்தி' என்ற வரிகளின் மூலம் 'செய்தி என்றால் என்ன' என்பதை எளிய விஷயமாக எல்லாருக்கும் புரியும் விதம் விவரித்தவர் ஆதித்தனார். (முற்றுப் புள்ளியே இல்லாமல் இவ்வளவு பெரிய வாக்கியம் அமைப்பது அவரது கொள்கைக்கு ஒத்து வராது).
இன்றைய பத்திரிகையாளர்களாகட்டும், பத்திரிகை வாசகர்களாகட்டும்.. அனைவருக்கும் ஆதித்தனார் ஒரு வழிகாட்டி.
உண்மை மிஸ்டர் கெளதம்
அந்தப் பத்துக் கட்டளைகளையும் உள் அடக்கிய எழுத்து எல்லா வயதினரையும் சென்றடையும். அதில் சந்தேகமில்லை! வெற்றிகரமான எழுத்தாளராவதற்கு அது முக்கியம்!
அன்பிற்கினிய கௌதம் " எழுதுவது எப்படி" என்ற இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பாசமுடன்
என் சுரேஷ், சென்னை
நல்ல கட்டுரை கௌதம்..
‘இதழாளர் கையேடு’ இப்போதும் கிடைக்கிறதா? எங்கே கிடைக்கும்?
உடனடியாக ஒரு இதழாளர் கையேடு வாங்கிவிட வேண்டியது தான்.
தினத்தந்தி அலுவலகங்களில் இதழாளர் கையேடு கிடைக்கும்.(பிரதிகள் இருந்தால்.)
நான் வாங்கியபோது 15 ரூ. இப்போது விலை தெரியவில்லை.
தினத்தந்தி ஏஜெண்டுகளிடம் சொல்லிக்கூட வாங்கிக் கொள்ளலாம்.
சிந்தாநதி சொல்வதை வழிமொழிகிறேன்.
புதிய பதிப்பு வெளியிட்டிருப்பதாக சமீபத்தில் ஒரு விளம்பரம் தினத்தந்தியில் பார்த்த ஞாபகம்.
பயனுள்ள பதிவு. நன்றி!
அரசியல் பத்தின ஆதித்தனார் கருத்து ஏதாவது இருக்கா?...அறிய ஆசை...
இந்த இதழாளர் கையேட்டைப் போன்றே சன் டி.வி.யின் துணை செய்தி ஆசிரியர் கோமல் அன்பரசன் அண்மையில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அருமையானதொரு புத்தகம். அதையும் படித்திருக்கிறீர்களா கெளதம்?!
//இந்த இதழாளர் கையேட்டைப் போன்றே சன் டி.வி.யின் துணை செய்தி ஆசிரியர் கோமல் அன்பரசன் அண்மையில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அருமையானதொரு புத்தகம். அதையும் படித்திருக்கிறீர்களா கெளதம்?! //
மாயு!
அந்த புத்தகம் பற்றி தனியாக ஒரு பதிவு போடுங்கள்.... எங்கே கிடைக்கும் என்ற விபரத்தையும் சொல்லுங்கள்....
//அரசியல் பத்தின ஆதித்தனார் கருத்து ஏதாவது இருக்கா?//
என்னங்க இவ்வளவு லேசா கேட்டுட்டீங்க?
'நாம் தமிழர்' இயக்கம் நடத்தியவர் அமரர் ஆதித்தனார். சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்திருக்கிறார். அரசியலில் தீவிர பற்று உடையவர். எளிமை விரும்பி - அடிப்படையில் வழக்கறிஞர்.
புதிதாக எழுதும் என்னைப்போன்றவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.
"படம் பார்பதை போல எழுதவேண்டும்"-கவனத்தில் கொள்கிறேன்.
நன்றி
//மாயு!
அந்த புத்தகம் பற்றி தனியாக ஒரு பதிவு போடுங்கள்.... எங்கே கிடைக்கும் என்ற விபரத்தையும் சொல்லுங்கள்....//
sure..
தகவலுக்கு நன்றி மாயவரத்தான்,
நானும் மேல் விவரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் புத்தகத்தின் தலைப்பு : "செய்திகள் நிஜமும், நிழலும்'.
பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் ஒரு செய்தியை எப்படித் தயாரிப்பது, அதன் பின் உள்ள பல விஷயங்களை அலசி, ஆராய்ந்து, காய்ச்சி, வறுத்து எடுத்துள்ளார் ஆசிரியர்.
சுவாரசியமான புத்தகம். பல இடங்களில் ஆதித்தனாரின் கையேட்டை நியாபகப் படுத்தும் என்றாலும், இதில் நடப்பு செய்திகளை ஒப்பிட்டு எழுதியிருப்பது ஒரு விதத்தில் சுவாரசியமாக இருக்கிறது. (ஒரு 5 வருஷத்துக்கு அப்புறம் எடுத்து படிச்சா ரொம்ப பழசான செய்திகளா இருக்குமோ?!)
படங்களும் வெளியாகியிருக்கின்றன.
ஆசிரியர் : கோமல் ஆர்.கே. அன்பரசன் (சன் டி.வி. துணை செய்தி ஆசிரியர்)
பக்கம் 190, விலை ரூ. 75
கோமதி புத்தகாலயம்
10 சூடியம்மன் தெரு முதல் தளம்
சைதாப்பேட்டை
சென்னை 600 010
செவி வழிச் செய்தி : கடந்த ஆண்டு விகடன் மாணவப் பயிற்சியாளர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு விகடனலிருந்து இந்தப் புத்தகம் பயிற்சியின் போது வழங்கப்பட்டத்தாகத் தெரிகிறது. (எந்த அளவிற்கு உண்மை என்று உறுதி செய்து கொள்ளவில்லை)
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=38&products_id=38002
இங்கே சென்று இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்.
//கோமதி புத்தகாலயம்
10 சூடியம்மன் தெரு முதல் தளம்
சைதாப்பேட்டை
சென்னை 600 010//
தகவலுக்கு நன்றி மாயவரத்தான் அவர்களே!
ஆனாலும் நீங்கள் கொடுத்த தகவல் எந்த அளவுக்கு சரியானது என்று தெரியவில்லை.
சைதாப்பேட்டையில் சூடியம்மன் கோயில் தெரு நான் கேள்விப்பட்டதே கிடையாது. லேண்ட்மார்க் ஏதாவது தெரிந்தால் சொல்லவும்.
அதுமட்டுமல்ல சென்னை-10 என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சென்னை-10 கீழ்ப்பாக்கம்!
சைதாப்பேட்டை, சென்னை-15
அப்படியா?!
தற்போது மேற்படி புத்தகம் என் கைவசம் இல்லை. வழக்கம் போல இரவல் வாங்கிச் சென்றவர் திருப்பவில்லை.
முகவரியை கூகுளில் தேடி எடுத்தேன். ம்..
AnyIndian-ல் கிடைக்கிறது.
புத்தகத்தை பார்த்தவுடன் மேலதிக தகவல் தெரிவிக்கிறேன்.
கெளதம்,
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
அறிமுக நண்பன் கௌதம் அவர்களுக்கு!
எனக்கு வாசித்தவுடன் வளம்சேர்த்த ஆக்கங்களில் இதுவும் ஒன்று. எதிர்பார்க்கும் விடயங்கள் ஆக்கங்களாக வெளிவருவது அரிது. ஆயினும் நான் எதிர்பார்த்த சில விடயங்களை உங்கள் ஆக்கத்தின் மூலமாக அறிந்துகொண்டேன்.
நன்றி.
அன்புடன் "வானம்பாடி" -கலீஸ்-
கலக்கல், உருப்படியாக எழுத முயலும் எங்களுக்கு இது போன்ற ஒரு வழிகாட்டி பதிவு தேவைதான்...
உங்களுக்கு கிடைத்ததை சாப்பிடத் தந்தமைக்கு நன்றி.
தேவையான பதிவு
- சென்னைத்தமிழன்
Post a Comment