Monday, November 13, 2006

மறக்க 'முடியாதது'!


“உண்மையிலேயே தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒண் எது? சொல்லு பார்க்கலாம்?”- கேட்டது வேதாளம்!

பதில் சொல்ல முடியாமல் கெக்கே பிக்கே என விழித்தான் விக்ரமாதித்தன்!!

இப்படி ஒரு ஜோக் ‘கல்கி’யில் படித்து ரசித்துச் சிரித்திருக்கிறேன் நான். ஆக.. உண்மையில் எது நம்பர் ஒண் என்பதை விளக்கப் போகிறேனாக்கும் இங்கே என எண்ணிவிடாதீர்கள். ரசிப்புக்குரிய அந்தக் குழப்பம் அப்படியே இருக்கட்டும். இந்தக் கட்டுரையின் நோக்கம் வேறு.

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம்.. இந்த மூன்று நம்பர் ஒண் வார இதழ்களிலும் முழுநேரப் பணியாற்றிய வெகு வெகு வெகு சிலரில் நானும் ஒருவன்.

ஆமாம், குமுதத்திலும் கொஞ்ச காலம் நான் குப்பை கூட்டியிருக்கிறேன். அல்லது குப்பை கொட்டியிருக்கிறேன்!

எங்கெங்கோ சுற்றியடித்து கடைசியில் சொந்தமாக தொழில் நடத்தி தடுமாறியது வரையிலான என் சொந்தக் கதையை ஏற்கெனவே (ஒரு நண்பனின் நிஜம் இது!) பகிர்ந்து கொண்டிருக்கிறேன் உங்களிடம். சில நாட்களுக்கு முன் நான் எழுதிய ஒரு குட்டிக் கதை ‘தப்பிச்சுக்கோ’. சொந்தத் தொழில் நஷ்டகரமாகப் போய்க்கொண்டிருந்தபோது எனக்கு நான் சொல்லிக்கொண்ட வார்த்தைதான் அது!

'தப்பித்த' நான் போன இடம் ‘குமுதம்’. What to do மட்டுமல்ல, What not to do என்பதையும் அங்கே நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். பொருத்திப் பார்க்கும் நேரம் வரும்போது ஒவ்வொன்றாக எடுத்துவிடுகிறேன். இப்போது குமுதம் அலுவலகத்துக்குள் நான் அடியெடுத்து வைத்த முதல் நாளில் நடந்த ஒரு சம்பவம்..

சம்பிரதாயக் கைகுலுக்கள்கள் எல்லாம் முடிந்தபிறகு பக்கத்து இருக்கைத் தோழனிடம் நான் கேட்ட முதல் கேள்வி..

“லைப்ரரி எங்கே இருக்கு?”

குமுதத்தின் நிறுவன ஆசிரியரான அமரர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டதுண்டு.

பள்ளிக்காலத்தில் எனக்கு படிக்கக் கிடைத்த முதல் வார இதழ் (முத்து காமிக்ஸ், பூந்தளிர், இன்ன பிற பொடிசுகள் ஸ்பெஷல் தவிர) குமுதம்தான். பக்கத்துவீட்டு அக்கா காசு கொடுத்து கடையில் வாங்கி வரச் சொல்வார்கள்.வாங்கியதும் வீட்டுக்கு வந்துவிடமாட்டேன். வழியிலேயே எங்காவது ஒதுங்கிவிடுவேன்.

நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள். அரைமணி நேரத்திலேயே ஏறக்குறைய எல்லா பக்கங்களையும் படித்து விடுவேன்!வீட்டுக்குப் போனால் படிக்க முடியாதே. அம்மா கண்ணில் பட்டால் அம்புட்டுதான்! ‘முளைச்சு மூணு இலை விடலே, உனக்கு குமுதம் படிக்கச் சொல்லுதோ?’ என ரவுண்டு கட்டிடுவாங்க. காரணம்.. அப்போது நான் ஏழாவதுதான் படித்துக் கொண்டிருந்தேன்!

‘சிவாஜியால் சண்டைக் காட்சிக்காக காலைத்தூக்க முடியவில்லை. தொப்பை பிரச்னை’, ‘சில்க் ஸ்மிதா கடித்து வைத்த எச்சில் ஆப்பிள் ஏலம் போனது’, ஜெயலலிதாவின் நெஞ்சில் ஒரு கனல்.. இப்படி அந்தக் கால குமுதத்தில் படித்ததெல்லாம் இப்போது நினைவில் இருக்கிறது.

அதே குமுதத்தில் நானும் ஒருநாள் வேலை பார்ப்பேன் என அந்த அரை டிராயர் காலத்தில் நான் கொஞ்சமும் நினைத்ததில்லை!சில சமயம் இப்படித்தான் நினைக்காதவையும் வாழ்க்கையில் நடந்துவிடலாம்!

“லைப்ரரி எங்கே இருக்கு?”

“சரி வா”

அழைத்துக் கொண்டு போனான் பக்கத்து இருக்கைத் தோழன். நல்ல விசாலமான நூலகம்.

இந்த இடத்தில் ஒரு இடைச்செருகல்.. மூன்று நம்பர் ஒண் பத்திரிகைகளிலும் இப்படி ஒரு பக்காவான நூலகம் பராமரிப்பது குமுதத்தில் மட்டுமே! புத்தக மதிப்புரைக்காக வரும் ஒவ்வொரு நூலையும் தவறவிட்டுவிடாமல் நூலகத்தில் அடுக்கிவிடுவார்கள்.எஸ்.ஏ.பி. காலத்திலேயே இந்த பராமரிப்பு ஆரம்பமாகியது என்பார்கள். அவர் ஒரு நல்ல படிப்பாளியும் கூட.

“இவர் நம்ப ஜோதில புதுசா கலந்திருக்கார். இன்னிக்குதான் ட்யூட்டில சேர்ந்திருக்கார். லைப்ரரி கார்டு போட்ருங்கோ. நான் ஜவாப்தாரி கையெழுத்து போட்டுத் தர்றேன்” என என்னை நூலகரிடம் அறிமுகப் படுத்திவிட்டுப் போனான் நண்பன்.

மிலிடரி மிடுக்கோடு இருந்தார் நூலகர். வயதில் பழம்! அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்கவேண்டும். கேட்டதும், “ஆமாம், கன்னிமரா லைப்ரரியில் பணிபுரிந்தவன்” என்றார்.

“செக் ஷன் வாரியாக புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். நீங்க பாருங்க. ஹெல்ப் வேணும்னா கேளுங்க” என்றும் சொன்னார்.

“டிக் ஷ்னரி எங்கே இருக்கு?” என்று கேட்டேன்.அவருக்கு சரியாக கேட்கவில்லையோ அல்லது சந்தேகமோ தெரியவில்லை. இன்னொருமுறை கேட்டு உறுதி செய்து கொண்டார்.

தனியே இருந்த ஒரு கண்ணாடி அலமாரியியைக் காட்டினார்.சிறிதும் பெரிதுமாக பத்துக்கும் மேற்பட்ட டிக் ஷ்னரிகள் இருந்தன.

பழசு பட்டுப் போயிருந்த நான்கைந்து அகராதிகளை மொத்தமாக அள்ளிக் கொண்டேன்.டேபிளுக்கு கொண்டு போனேன்.

அதற்குமேல் பரபரப்பைத் தாங்க முடியவில்லை. வேக வேகமாக முதல் அகராதியை விரித்தேன். பக்கங்களைப் புரட்டினேன்.

அட ஆமாம்! அந்தப் பக்கத்தைக் காணோம்!

அடுத்த அகராதியை புரட்டினேன். அட அதிலும் காணோம்!

அத்தனை அகராதிகளிலும் அந்தப் பக்கத்தைக் காணவே காணோம்!

அந்த ஒரு பக்கம் மட்டும் கிழிக்கப்பட்ட தடம் இருந்தது!!

எப்போதோ கேள்விப்பட்ட சேதிதான் என்றாலும் அனுபவித்துப் பார்க்க்கும்போது பரவசம் ஏற்பட்டதென்னவோ உண்மையே!

அந்தச் சேதி.. ‘எஸ்.ஏ.பி.க்கு இங்கிலீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை IMPOSSIBLE. அகராதிகளில் அந்த வார்த்தை இருக்கும் பக்கத்தை கிழித்துவிடுவார் அதை வாங்கியதுமே!’

முந்தைய 'எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!' : இங்கே!

அதற்கு முந்தையவை: இங்கே!

11 comments:

G Gowtham said...

பின்னூட்டம் பதிய இயலாமல் இருந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி லக்கிலுக்..

லக்கிலுக் said...

//“உண்மையிலேயே தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒண் எது? சொல்லு பார்க்கலாம்?”- கேட்டது வேதாளம்!

பதில் சொல்ல முடியாமல் கெக்கே பிக்கே என விழித்தான் விக்ரமாதித்தன்!!//

:-))))))))

பொன்ஸ்~~Poorna said...

தலைப்பு தான் பிரச்சனையா?

லதா said...

அல்வா நன்றாக இருந்தது:-)))

G Gowtham said...

அய்யா luckylook

//:-)))))))) //
நான் வரலை இந்த ஆட்டைக்கு! :-)

ஆமாம் பொன்ஸ்
'தலை'ப்பைக் கட் பண்ணியதும் எல்லாம் சரியாகிவிட்டது!

லக்கிலுக் said...

////“உண்மையிலேயே தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒண் எது? சொல்லு பார்க்கலாம்?”- கேட்டது வேதாளம்!

பதில் சொல்ல முடியாமல் கெக்கே பிக்கே என விழித்தான் விக்ரமாதித்தன்!!////

ABC சொல்கிறது ஆ.வி. முதலிடம் என்று.

NRS சொல்கிறது குங்குமம் முதலிடம் என்று.


எது முதலிடம் என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்.

கார்த்திக் பிரபு said...

interesting post..wishes sir..when ll the poems of all blogerrs get published?

G Gowtham said...

கார்த்திக் பிரபு,
//when ll the poems of all blogerrs get published? //
Already published in the current issue of kungumam (on stand now).
Vaazhthukkal

G.Ragavan said...

கௌதம், நல்லதொரு தகவல். ஒரு பழைய பத்திரிகையாளரின் ஒரு பழக்கத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். சிறுகதை போல. மிகவும் ரசித்தேன். கோர்வை அருமை. சமயத்தில் நல்ல எழுத்துகளைப் படிக்கையில் இப்படித்தான் பரவசம் வந்து தொலைக்கிறது. :-)

நம்பர் ஒன் பத்திரிகையா.....விகடனை வேண்டுமானால் சொல்லலாம். குங்குமம் சுமார்தான். ஆனாலும் கலைமகளை மறக்க முடியவில்லை. :-(

SP.VR.சுப்பையா said...

நம்பர் ஒன் வார இதழ் எது?
சந்தேகமில்லாமல் குமுதம்தான் - எஸ்.ஏ.பி அவர்கள் இருந்தவரை!

இன்று விகடன் தான் - நம்பர் ஒன்!

சிறில் அலெக்ஸ் said...

சுவாரஸ்யமான தகவல். ரெம்ப நல்ல சொல்லியிருக்கீங்க கௌதம். நன்றி.