Thursday, March 22, 2007

நீங்க என்ன சொல்றீங்க?!


எழுத்தார்வம் மிக்க வலை நண்பர்களுக்கு வணக்கம்!

நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?

'பெண்ணே நீ' என்றொரு மகளிர் மாத இதழ் கடந்த ஆறு மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது, படித்திருக்கிறீர்களா?

வடிவமைப்பையும் உள்ளடக்கத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டு புதுப்பொலிவோடு இப்போது களம் இறங்குகிறது 'பெண்ணே நீ'. படித்துப் பார்க்க நேர்ந்தால் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடித்துப் போகும்.

இப்போது இந்த இதழுக்கு நான் ஆலோசகர்.
பத்திரிகையின் ஆசிரியர் என் தோழியும் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களின் வாரிசுமான கவிதா கணேஷ்.

வலையுலகத்தையும் வலைப்பூ எழுத்தாளர்களையும் தோழிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன்.

அடர்வான கருத்துக்களை கொஞ்சம் இலகுவான நடையில் இனி சொல்ல விரும்பும் 'பெண்ணே நீ' இதழில் நீங்கள் எழுதப்போகும் படைப்புகளை பிரசுரிக்கக் காத்திருக்கிறார் ஆசிரியர்.

உடனுக்குடன் சன்மானம் அளிக்கவும் தயாராக இருக்கிறார்.

உங்களுக்கு விருப்பம் இருப்பின் களம் புகத் தயாரா?

தயார் எனில்... இதோ ஐந்து விதமான வாய்ப்புகள்:

1. வரும் ஏப்ரல் மாத இதழில் விதம் விதமாக ஐம்பது துணுக்குச் செய்திகள் வெளியிட முடிவெடுத்துள்ளோம். பயனுள்ளதாக, வித்தியாசமாக, புதுமையானதாக, சுவாரசியமாக எதை வேண்டுமானாலும் எழுதலாம். கூடவே அதற்கான புகைப்படத்தையோ காட்சியையோ இணைத்து அனுப்பலாம்.

2. சிறுகதைப் போட்டி அறிவித்து, முடிவுகள் வெளியிட்டு, பரிசுக்குரிய கதைகளை தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருவதால் இப்போதைக்கு சிறுகதைகளை வெளியிட இயலாது. கட்டுரைகள் அனுப்பலாம். எழுதுவதற்கு முன்னர் 'இந்தத் தலைப்பிலான / கருப்பொருளில் அமைந்த கட்டுரையை எழுதலாமா' என ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு ஆசிரியரின் முன் அனுமதி வாங்கிவிட்டால் உங்கள் நேரவிரயத்தைத் தவிர்க்கலாம்.

3. வெறுமனே டெஸ்க் ஒர்க் மட்டுமே இல்லாமல், நேர்காணல் அல்லது களம் இறங்கி செய்யும் செய்தியாளர் பொறுப்பையும் கையில் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் எழுத்து தொடர்ந்து 'பெண்ணே நீ' யில் வெளிவருமானால் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கிச் சிறப்பிக்கவும் தயார்!

4. நகைச்சுவைத் துணுக்குகளும் எழுதி அனுப்பலாம்.

5. இப்படித்தான் என்ற வரையறை ஏதும் கிடையாது. அன்னையாக, சகோதரியாக, தோழியாக, மகளாக.. நம்மிடையே வாழும் பெண்களுக்குச் சொல்லவேண்டிய எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு குறிப்பு: சமையல், ஜோதிடம், சினிமா, தொலைக்காட்சி போன்ற பெண்களின் நேரத்தைக் கெடுக்கும் விஷயங்களை ஆறு வருடங்களாகவே தவிர்த்து வந்திருக்கிறது 'பெண்ணே நீ'. இனியும் அப்படித்தான்! ஒருவரியில் சொல்வதானால் 'இப்போதிருக்கும் நிலையில் இருந்து ஒருபடி உயர நினைக்கும் வெற்றிப் பெண்களுக்கான பத்திரிகை இது'. இதுவரை வேறெந்த ஊடகத்திலும் வெளிவராத உங்கள் படைப்புகளை மட்டுமே அனுப்புங்கள்.

ஆர்வமும் திறமையும் உள்ள சென்னைக்காரர்கள் 'பெண்ணே நீ'யின் ஆசிரியர் குழுவிலும் (பகுதி நேரமாக) இணைந்து கலக்கலாம்! இது குறித்து தொடர்பு கொள்ள என் மின்னஞ்சல் முகவரி: editorgowtham@gmail.com

என்ன சொல்றீங்க நீங்க?!

5 comments:

ராஜன் said...

தோ... ஆரம்பிச்சிட்டோமில்லே...

Anonymous said...

பத்திரிக்கை பேரை மாத்த மாட்டீங்களா?

✪சிந்தாநதி said...

இந்த அழைப்பு பெண்களுக்கு மட்டுமா இல்லை இருபாலருக்கும் சேர்த்தா?

வாரத்துக்கு ஒரு தடவையாவது வலைப் பதிய வாங்க என்று அன்புடன் அழைக்கிறேன்.

Kowsalya Subramanian said...

'பெண்ணே நீ' என்றொரு மகளிர் மாத இதழ் கடந்த ஆறு மாதங்களாக
^^^^^^^^^^^^^^^^
வெளிவந்து கொண்டிருக்கிறது, படித்திருக்கிறீர்களா?

'நேரத்தைக் கெடுக்கும் விஷயங்களை ஆறு வருடங்களாகவே தவிர்த்து'
^^^^^^^^^^^^^^^^^^^^

இது வரை படித்தது இல்லை. இண்த மாதம் கண்டிப்பாக படிக்கிறேன்.

சரண் said...

நல்ல முயற்சிண்ணே! நீங்களும் உங்களால் உருவாகப் போகும் ஆசிரியர் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?