Sunday, July 18, 2010

ஒரு துளி கடல் 4 - நாய்க்கு நேரமில்லை!

வால்களும் சங்கடங்களும் இன்னபிற சிக்கல்களும் வண்டி வண்டியாக நிறைந்ததுதான் பத்திரிகையாளன் பணி. என்றாலும்.. சுவாரசியங்களை அனுபவிக்க அதைவிடச் சிறந்த பணி இருப்பதாக என் சிற்றறிவுக்கு எட்டவில்லை!

பிள்ளையார் பிடிக்கக் கிளம்பிப்போய் பிள்ளையாரும் பிடிக்கலாம்; குரங்கையும் பிடிக்கலாம்; அல்லது வெறும்கையோடும் திரும்பி வரலாம். சமயங்களில் குரங்கு பிடிக்கப் புறப்பட்டுப்போனால் பிள்ளையாரேகூடக் கிடைக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம்.

பிள்ளையார், குரங்கு.. எதுவும் இல்லாத சமயங்களில் ஒரு கழுதையோ குதிரையோ அல்லது நாயோ கூட வழியில் வந்து வாலை ஆட்டலாம்!

ஆம்! இப்போது நான் சொல்லப்போவது ஒரு நாய்க்கதைதான்!

குமுதத்தில் அந்தக்காலத்தில் வெளியான ‘பொழுது போகாத பொம்மு’ பகுதியை படித்து – ரசித்து - படித்திருக்கிறேன் என் பள்ளிக்கூட நாட்களில். ‘அதிமுக்கிய தேவையான’ பிரச்னைகளை எடுத்துக்கொண்டு பொம்மு கேரக்டர் ஆராய்வதுதான் அந்தப்பகுதியின் இலக்கணம்.

’இத்தனாம் தேதி, இத்தனை மணி முதல், இத்தனை மணிவரை, மெரினா பீச்சுக்கு வந்த பெண்களில்.. காலேஜ் பெண்கள் இத்தனை பேர், கல்யாணமான(மாதிரி தெரிந்த) பெண்கள் இத்தனை பேர், தனி ஆளாக வந்தவர்கள் இத்தனை பேர், தள்ளிக்கொள்ளப்பட்டு வந்தவர்கள்(?!) இத்தனை பேர்’ என்ற புள்ளிவிவரத்தினைக் குறும்பு கொப்பளிக்கக் கொடுப்பார்கள் ஒரு வாரம். இதே பாணியில் வாராவாரம் ஒரு புள்ளிவிவரம்!

பின்னாளில்.. நானும் இளைஞனாகி ஆனந்த விகடனில் பணிக்குச் சேர்ந்தபோது, பொ.போ.பொ. மாதிரியான குறும்பினை வேறு விதமாகப் பண்ணினோம் - அதுவும் பிரம்மாண்டமாக. விகடன் என்றாலே பிரம்மாண்டம்தானே!

என்னைப்போன்ற நிருபர்கள் சிலரைக் கூப்பிட்டுக் கூறுகட்டி ‘விகடன் குறும்பு டீம்’ என நாமகரணம் சூட்டினார் (அப்போதைய) எங்கள் இணை ஆசிரியரான மதன் சார்.

’இந்தக் கூட்டத்துக்கு நீங்கதான் தலைவர்.. ம்.. ஜமாயுங்க.. என்ஜாய்.. ஜமாய்.. என்ஜமாய்..’ என்று உசுப்பேற்றியும் விட்டார் மதன் சார்!

’வானர சேனை’யுடன் களமிறங்கி, கலகலக்கி இருக்கிறோம் வாசகர்களை.

தலையில்லா முண்டம் போல ஒரு கெட் அப் அண்ட் செட் அப் பண்ணிக்கொண்டு சென்னை தெருக்களில் பயவலம் நடத்தினோம் ஒரு முறை. மக்களையும் பிரபலங்களையும் சந்தித்து பாராட்டுக்களையும் பல்புகளையும் வாங்கி, அதைக் கட்டுரையாக்கினோம். டி.ராஜேந்தரை பார்க்கப் போனபோது கொடுத்தார் பாருங்கள் ஒரு சூப்பர் பல்பு.. “ஹலோ.. நானெல்லாம் ச்சும்மா கதிகலங்குற மாதிரி செட்டுப்போட்டு படம் எடுக்குறவன் சார்.. என்கிட்டயே செட் போடுறீங்களா?!’. சொல்லாமல் கொள்ளாமல் ஜகா வாங்கிவிட்டோம்!

கூட்டமான ஞாயிற்றுக்கிழமையில்.. உச்சி வெயிலில்.. அண்ணா சமாதியில்.. பொத்தென மயக்கம் போட்டு தலை குப்புற விழுந்து - அதாவது மயக்கம் வந்ததுபோல ஆக்டிங் கொடுத்து.. எவனாவது தூக்கி விட மாட்டானா என நம்ம்ம்ப்ப்பி ஏமாந்து, அந்தக்கதையையும் எழுதியிருக்கிறோம்.

சிங்காரச்சென்னை முழுக்க பிளாஸ்டிக் குடம் விரித்து ஆடியது குடி நீர்ப்பஞ்சம். சூளை மேடு தெருக்களில் வியர்க்க விறுவிறுக்க நடந்து போய்.. ‘தவிச்ச வாய்க்கு கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?’ என கெஞ்சிக்கேட்டு, மக்களின் ரியாக்‌ஷனைத் தொகுத்து எழுதினோம்.

கூவத்தில் ராஜா ராணி வேடம் கட்டி படகு சவாரி பண்ணியது, வெள்ளைக்கார துரை போல இருக்கும் ஆங்கிலோ இந்திய ஆசாமியைக் கூட்டிக்கொண்டு அக்மார்க் தமிழ்ப் பொண்ணு வீட்டுக்குப் போய், ‘இவர் உங்க பொண்ணைக் காதலிக்கிறாராம்’ என டகால்டி பேசிப் பெண் கேட்டது, சும்மானாச்சுக்கும் ஒரு வீட்டுக் கதவைத்தட்டி ‘கங்கிராட்ஸ்.. உங்களுக்கு பரிசு கிடைச்சிருக்கு’ எனச் சொல்லி.. உருட்டிக்கொண்டுபோன நிஜ யானையைக் காட்டி திகிலடிக்க வைப்பது.. இப்படி ‘குறும்பு டீம்’ நடத்திய தெருவிளையாடல்கள் எக்கச்சக்கம்.

அச்சில் வந்தது தவிர வராததும் நிறைய அனுபவமாய் இருக்கிறது.

அப்படி ஒரு அனுபவத்தில் தெரு நாய் ஒன்றின் பின்னே சுற்றியதும் ஒரு ’ஆ’னுபவம்!

சென்னையில் கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஒரு தெரு நாயை குறி வைத்தேன். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரத்துக்கு அந்த நாயை கண்களுக்குள்ளேயே வைத்திருப்பது… இதுதான் என் திட்டம்.

’தெருநாய்களை தெருநாய்கள் என சொல்லாதீர்கள். இந்திய நாய்கள் எனச்சொல்லுங்கள். அல்லது அழகாக ஒரு பெயர் வைத்துக்கூப்பிடுங்கள்’ என உலகுக்கு சேதி சொல்லியிருக்கும் தானைத்தலைவி த்ரிஷாவின் சொல்பேச்சை மதித்து, இனி அந்த நாயை மணி எனக் குறிப்பிடலாம்!

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இற்றுப்போன சைக்கிள்கள் அருகேதான் மணிக்கும் எனக்குமான பந்தம் ஆரம்பம். சைக்கிள் ஒன்றை நோக்கி வெகுவேகமாக நடந்து போனது மணி. அருகே சென்றதும், கருவாட்டுக்கடையைக் கண்டதுபோல மூக்கை ஷார்ப்பாக்கிக்கொண்டு முகர்ந்து பார்த்தது.

சட்டென திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தது. பின்னங்காலைத்தூக்கி உச்சா போகத்தொடங்கியது. சும்மா கொஞ்சமே கொஞ்சம் போய்விட்டு நிறுத்தியது. எதையோ சாதித்துவிட்ட பெருமிதத்தோடு தலை உயர்த்திப் பார்த்தது.

சற்றுத்தொலைவில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கில் சாய்ந்தபடியே நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வெடுக் என தலை திருப்பி, சாலையின் எதிர் திசையில் ஒரு லுக் விட்டது. யாரையோ – எதையோ கண்டுபிடித்துவிட்டது போல ஒரு புலனாய்வுப் புலி லுக்!

அடுத்த நொடி எடுத்ததுபாருங்க ஒரு திடீர் ஓட்டம்.. வேகமாகப் பாய்ந்துபோய் தூரத்தில் கிடத்தியிருந்த குப்பைத் தொட்டியை முற்றுகையிட்டது! அருகே நின்றிருந்த ஒரு முதியவர், லேசாகப்பதறி, 
சிதறி விலகினார்.

என்னமோ ஏதோ பண்ணப்போகிறது மணி எனப்பார்த்தால்.. ப்ச்! உற்றுப்பார்த்தல், மோப்பம் பிடித்தல், கொஞ்சம் உச்சா போதல் (அடப்பாவமே அதற்குள்ளாக மறுபடியுமா? பாவம் மணிக்கு நீர்க்கடுப்பு போல என நினைத்துக்கொண்டேன்!)… முடித்துவிட்டு மறுபடியும் தலை நிமிரப்பார்க்க ஆரம்பித்து. அப்படியே ஆடி அசைந்தபடியே நடக்கலானது.
நானும் ரோட்டைக் கடந்து  மணியை பின் தொடர்ந்தேன்.
என்ன நினைத்ததோ தெரியவில்லை.. சடக்கென மறுபடியும் ஓட்டம் பிடித்தது. நானும் நடையில் வேகமெடுத்தேன். இருந்தாலும் நாலுகால் வேகம் எடுக்க முடியவில்லை!

மணியைக் கண்களால் பின் தொடர்ந்தபடியே, திரும்ப ஓடிவந்து பைக்கை உதைத்தேன்.

அதற்குள் மணி தெரு முனையைக் கடந்திருந்தது. பைக்கை விரட்டினேன். தெருவைக்கடந்து, பைக்கைத் திருப்பி மணியைத் துளாவினேன். தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
நான் மோட்டார்பைக்கின் கியரை மாற்றிய அதே நொடியில் மணி தன் கால்களுக்கு பிரேக் போட்டது! புலனாய்வுப் புலி எதையோ துப்பறிந்துவிட்டார்!

மணிக்கு சில அடி தூரம்வரை பைக்கில் சென்று, நிறுத்தி நிதானித்து, என் வேலை(?!)யைத் தொடர்ந்தேன்.

குனிந்து தரையை மோப்பம் பிடித்தது மணி. அதே மூக்குடன் அப்படியே நடந்து போய், ஓரத்தில் இருந்த டெலிபோன் ஜங்ஷன் பாக்ஸை முற்றுகையிட்டது.

சரிதான்.. மணிப்பார்வைக்கு ஏதோ சிக்கிக்கொண்டுவிட்டது என நினைத்தபடியே சுவாரசியமானேன்.

அடுத்தடுத்த நொடிகளில்.. உ.பா., மோ.பி., கொ.உ., மறுபடியும் உ.பா.. என ஏற்கெனவே ஒவ்வொரு இடத்திலும் என்னவெல்லாம் செய்ததோ அதையே முன்னும் பின்னுமாகச் செய்தது மணி!

’அடச்சே’ சொல்லியபடியே எனக்கு நானே வலிக்காமல் தலையிலடித்துக்கொண்டு சிரித்தேன். 

அதற்கு மேல் மணியைத் தொடர மனசும் பொறுமையும் இல்லாததால் அலுவலகம் வந்துவிட்டேன்.

டெலிபோனில் எனக்காக தயாராக இருந்தார் என் சீனியர்.. ’எங்கே போனீங்க? உங்களை ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கேன். வண்ணாரப்பேட்டையில் எவனோ ஒரு நாய் நம்ம தேசியக்கொடிய தலைகீழா பறக்கவிட்டிருக்கானாம். உடனே போய் போட்டோவோட நியூஸ் கவர் பண்ணிட்டு வாங்க. இந்த வார ஜூனியர் விகடன்ல பெரிசா போடணும்’ என எரிந்து விழுந்தார் சீனியர்.

எனக்குத் தெரியும் இது ஒரு கப்ஸா அயிட்டம்தான்! உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தே இருக்காது! நடந்திருந்தாலும் அது என்றோ நடந்த ஆறிப்போன செய்தியாக இருக்கும். ஆறிப்போகாத செய்தியாக இருந்தாலும் அதை எழுதிக்கொடுத்தால் நிச்சயம் பத்திரிகையில் இடம்பெறவும் செய்யாது. என்போன்ற இளம் நிருபர்களுக்கு காலை வேலைகளில் இப்படி ஏதாவது ஒரு கப்ஸா அயிட்டத்தை அசைன்மெண்ட்டாகக் கொடுத்து எங்காவது துரத்திவிடுவதில் அந்த சீனியர் ரொம்பவே எக்ஸ்பர்ட்.

‘சாவு கிராக்கி.. காலங்கார்த்தால இப்படி கொடுமைப்படுத்துறானே காலேஜ் ராக்கிங் மாதிரி!’ என கருவிக்கொட்டியபடியே என் போன்றவர்கள் ’வண்ணாரப்பேட்டை’களுக்குப் போய்வருவோம். பின்னாளில் சென்னையின் மூலை முடுக்குகளெல்லாம் எனக்கு அத்துப்படியானதற்கும், எந்த நேரமும் சுறுசுறுப்பாக நான் எதையாவது ஆக்கப்பூர்வமாக செய்துகொண்டே இருப்பதற்கும் இப்படி ஊர் சுற்றிய அனுபவங்கள்தான் கைகொடுத்தன. என்றாலும் அனுபவித்து அல்லலுற்ற காலத்தில் கண்டமேனிக்கு அந்த சீனியரைத் திட்டித்தீர்த்தென்னமோ நிஜம்.

சரி.. இப்போது என் வண்ணாரப்பேட்டை பயணத்துக்கு வருகிறேன்.
அது அலுவலகப் பரபரப்பு நேரம். அந்த நேரத்தில் சென்னை டிராஃபிக் பற்றி சொல்லவா வேண்டும்! பாதசாரிகளாகவும்,சைக்கிள்வாசிகளாகவும், டூவீலர் பார்ட்டிகளாகவும், பஸ் பயணிகளாகவும், ஆட்டோ அவசரக்காரர்களாகவும்.. விழுந்தடித்து அவரவர் வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தனர் எதிர்ப்பட்ட எல்லோருமே!

என்னைக் கடந்துபோன மனிதர்களில் தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் பேருக்கும் அன்று அதிகாலையில் நான் பார்த்த மணிக்கும் ஒரு ஒற்றுமை இருப்பது பல வருடங்கள் கடந்தபின்னர்தான் – பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்குக் கிடைத்தபின்னர்தான் எனக்கு உரைத்தது.

கால்நடை மருத்துவத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஒய்வு பெற்று தற்போது மதுரையில் வசித்துவரும் உறவினரான டாக்டர் சிவகாமிநாதனை ஒரு குடும்ப விழாவில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு ஏதேச்சையாக நம் கதாநாயகன் மணி பற்றித் திரும்பியது. மணியின் திடீர் நடவடிக்கைகளுக்கான விளக்கம் கிடைத்தது டாக்டரிடம்.

“தெரு நாயைப் பொறுத்தவரை எல்லா நாய்களும் எல்லா ஏரியாக்களிலும் திரியாது. ஒரு நாயானது தனது ஊர்சுற்றலுக்கான எல்லையினை முதலில் வரையறுத்துக் கொள்ளும். குறிப்பிட்ட அந்த ஏரியாவை விட்டு வெளியே போய் வாலாட்டாது! எதுவரை தனது சாம்ராஜ்யம் என அடையாளம் கண்டுகொள்ளவே ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக யூரின் போய்வைக்கும். அந்த யூரின் வாசத்தை முகர்ந்து பார்த்து, ‘ரைட்.. இது நம்ம ஏரியாதான்’ என கண்டுகொள்ளும். வேறு வாசம் உணர்ந்தால் ‘ஓஹோ.. இது வேறு நாயின் யூரின். இது அதனுடைய ஏரியா. நாம உள்ளே போகக்கூடாது’ என ஜகா வாங்கிவிடும். இதற்காகத்தான் அப்படி புலனாய்வு செய்திருக்கிறது நீங்கள் பார்த்த மணி” என்றார் டாக்டர் சிவகாமிநாதன்.

ஆக.. தனது ஏரியாவை தான் உறுதி செய்துகொள்ளவும், அடுத்த நாய் தனது ஏரியாவுக்குள் வாலெடுத்து வைத்தால் அதைக் கண்டு உறுமவும் மட்டுமே தெருவுக்குதெரு திடுதிப் ஓட்டம் நடத்துகிறது நாய். அதன் குட்டிக்குட்டி மராத்தான் ஓட்டங்களுக்கு பெரும்பாலும் இது மட்டுமே காரணமாக இருக்கிறது. வேறெந்த லட்சியமோ இலக்குகளோ குறிக்கோள்களோ நாய்க்குக் கிடையாது.

அடித்துப்பிடித்துக்கொண்டு அலுவலகத்துப்போய், நேரத்துக்குள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, ‘அப்பாடா.. இது போதும். நல்லவேளை வெறெந்த நாயும் என் ஸீட்டில் உட்கார்ந்துவிடவிலை, என் ஏரியாவை நான் உறுதிசெஞ்சாச்சு’ என்ற நிம்மதியோடு, ’இன்றைக்கு என் லட்சியம் இது – இன்று மாலைக்குள் என் இலக்கு இது – இன்றைக்கு வீடு திரும்புவதற்குள் நான் முடிக்கப்போகும் வேலைகள் இவை என்ற குறிக்கோள்’ எதுவுமின்றி ஜென்மசாபல்யம் அடையும் வேடிக்கை மனிதர்களுக்கும் நம் மணிக்கும் என்னைப்பொறுத்தவரையில் எந்தவொரு வித்தியாசமும் கிடையவே கிடையாதுங்கறேன்!!


நன்றி: சூரிய கதிர் - மாதமிருமுறை இதழ்


முந்தைய ‘ஒரு துளி’கள்:
ஒரு துளி கடல் 1 - அதே இடம்; வெவ்வேறு நேரம்!
ஒரு துளி கடல் 2 - சித்தெறும்பு என்னைக் கடிச்சது! 
ஒரு துளி கடல் 3 - தலைக்கு மேலே உயிர்!

No comments: