Tuesday, March 15, 2011

குரங்குக் குட்டிகளும் யானைத் தந்தங்களும்..

விமரிசனம் எழுதவேண்டும் என்ற நோக்கத்தில் சினிமா பார்த்ததெல்லாம் விகடனில் பணிபுரிந்த காலத்தோடு போயாச்சு! கும்பலாக சினிமா பார்க்கக் கிளம்பிப்போவோம். ஆளாளுக்கு எழுதிக் கொடுப்பதை, நேர்த்தியாகத் தொகுத்து.. ‘விகடன் விமரிசனக்குழு’வின் கருத்தாக வெளியாகும்.

அன்றும் சரி.. இன்றும் சரி.. சினிமாக்காரர்கள் தங்கள் செலவில் திரையிடும் ப்ரிவியூ காட்சிகளுக்குச் சென்று படம் பார்த்ததில்லை விகடன் விமரிசனக்குழுவினர். சொந்தக்காசில் - மக்களோடு மக்களாகத்தான் படம் பார்ப்போம். டிக்கெட்டைக் கொடுத்தால் விகடன் அலுவலகத்தில் செலவு செய்த பணத்தை திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.

மொத்தமாக டிக்கெட்டுகள் முன் பதிவு செய்த பின்னர் - ‘நான் வரலை ஆட்டைக்கு’ என சக தோழர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள் சில சமயங்களில்.  அப்போதெல்லாம் தனி ஆளாகப் போய், பாக்கெட் நோட்டும் கையுமாகப் பயபக்தியோடு சினிமா பார்த்து, என்னை நானே ‘விகடன் விமரிசனக்குழு’வின் ஏகபோகமாக ஃபீல் பண்ணிக்கொண்டு, ஒட்டியும் வெட்டியும் விவாதம் செய்துகொள்வேன். ஏழை ஜாதி, பொன்னுமணி போன்ற இன்னும் சில படங்களின் விமரிசனங்களுக்கு இப்படி தனி ஆவர்த்தனம் செய்திருக்கிறேன் (மதுரைக்கு வந்த சோதனை?!).

அதன் பின்னர் சினிமா தயாரிப்பினை - அதன் சிரமங்களை - ஏகப்பட்ட நிர்ப்பந்தங்களினால் வேறுவழியின்றி காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் படைப்பாளிகளின் சோகத்தை.. அருகே இருந்து பார்க்க நேர்ந்தபின்னர் என் விமரிசனப்பார்வையை மாற்றிக் கொண்டேன். விமரிசனம் என்ற பெயரில் நல்லதைச் சொல்லும் சாக்கில் அல்லதையும் சொல்லியாக வேண்டுமே என்பதால் சினிமா விமரிசனம் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.  வருத்தப்பட்டுப் படம் எடுத்தவர்களை மென்மேலும் வருத்தப்படுத்த வேண்டுமா என்ற எண்ணம்தான் காரணம்.

தோழி விஜய பத்மா இயக்கியிருக்கும் ‘நர்த்தகி’ திரைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. படம் முடிந்த வேகத்தில் வந்துவிட்டேன்.

‘என்னாச்சு.. ரெண்டு நாளாச்சே.. என் படம் பத்தி உங்க கருத்தைச் சொல்லலியே’ என விஜயபத்மாவும் விரட்டிப் பிடித்து கேட்டுவிட்டார். இனியும் டபாய்க்க முடியாது என்பதால் இதோ ‘நர்த்தகி’ பற்றிய என் கருத்தினை இங்கே பதிவு செய்கிறேன். இது என் கருத்து மட்டுமே.. விலாவாரியாகச் சொல்லும் சினிமா விமரிசனம் அல்ல!


Well begun is half done! அந்த வகையில் இது மிக நல்ல முயற்சி! ஆணாகப் பிறந்து, ஒரு கட்டத்தில் தன்னைப் பெண்ணாக உணரும் இருதலைக் கொள்ளி பிறவி பற்றிய களத்தை தன் முதல் படத்திலேயே தைரியமாக எடுத்துக்கொண்ட விஜயபத்மாவை நிச்சயமாகப் பாராட்டலாம். விஜி மீதும், அவரது ஸ்க்ரிப்ட் மீதும் நம்பிக்கை வைத்து படத்தைத் தயாரித்த புன்னகைப்பூ கீதாவுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே.

‘நீ ஆம்பளை சிங்கம்டா’ என சொல்லிச் சொல்லியே தன் பிள்ளையை வளர்க்கும் பெற்றோர், அவன் தனக்குள் உணரும் பெண்மையைச் சொல்லும்போது பிரம்பெடுத்து விளாசும் யதார்த்தக் கொடுமையைச் சொல்லி சொல்லியிருக்கும் படம். ‘இதை நான் உங்ககிட்ட சொல்லாம வேறு யார்கிட்ட சொல்லுவேன்ப்பா.. சொல்லுவேன்மா’ என அந்தப் பையன் கதறும்போது, அப்படி அவர்களைப் படைத்த கடவுள்மீதுதான் முதல் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தை இறுதிவரை அப்படியே கொண்டுவந்து, சமுதாயத்தின் மீது சவுக்கடி கொடுத்திருக்க வேண்டிய கதை! அடுத்தடுத்த கோர்வையற்ற - இடைச்செருகல் காட்சிகளால் முழுமை இல்லாமல் போய்விட்டது!! கதை - திரைக்கதையில் இளமைக்காலத்தைச் சொல்வதற்கு காட்டிய நேர்த்தியை இறுதிவரை கடைப்பிடிக்காததுதான் குறை.


கதைநாய கனின் / கியின் இளம் வயது தோற்றங்களில் நடித்திருக்கும் பெண்மை தெரியும் ஆண் பையன்களும், ஆண்மை தெறிக்கும் இளம்பெண்ணும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மைனா படத்தின் பின்னணி வில்லியான ’ஜெயிலர் மனைவி’க்கு நல்ல கேரக்டர். நிறைவாகவே செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் அழகாகப் பொருந்துகிறார் கிரிஷ் கர்னாட். மற்ற கேரக்டர்களிடம் அடிக்கடி நாடக வாடை!

ஆணின் அடையாளத்தை அறுத்தெறியும் அந்தக் கட்டம்தான் திருநங்கைகளின் வாழ்க்கையில் மிகக் கொடூரமான நிகழ்வு. அந்தக் கொடுமை சென்சார் தொந்தரவால் வலி உணரத்தக்க வகையில் பதிவு செய்யப்படவில்லை எனக்கருதுகிறேன். (இது குறித்து நான் பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையினை இங்கே க்ளிக்கி படிக்கவும். இதய பலகீனமுள்ளவர்கள் படிக்க வேண்டாம்..)

நல்ல தமிழோடு நா.முத்துக்குமார் ஒத்துழைத்த அளவுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையால் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் பிரகாஷ்.

மும்பை காட்சிகள் - திருநங்கைகளின் தினப்படி வாழ்க்கை - சடங்குகள் - சம்பிரதாயங்கள் இயல்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஓர் உலகம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே எல்லோரும் இந்தப்படத்தை ஒரு முறை பார்க்கலாம். கதையின் கட்டாயமாக இந்தியைத் திணிக்கும் மும்பை காட்சிகளில் தமிழ் சப் டைட்டில் போட்டு ரிலீஸ் பண்ணுவது சிறப்பாக இருக்கும்.


மண் பானை செய்யும் காதலி.. அருகே வந்து உட்கார்ந்து தன் கைகளையும் அவள் கைகளோடு பின்னிப்பினைக்கும் காதலன்.. மண் மனம் மாறி மன்மத நிலை அடையும் காட்சி.  இன்றளவும் மிகச் சிறந்த ரொமான்ஸ் காட்சிகளைப் பட்டியலிட்டால் முதல் பத்து இடத்துக்குள் வந்து நிற்கும் கோஸ்ட் ஆங்கிலப்படத்தில் வரும் இந்த அழகான காட்சி. அதை இமிடேட் செய்யும்வகையில் ஒரு காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. புதுமையான ஓர் இசைக்கருவையை கல்கி இசைக்க, அருகே வந்து உட்காரும் கணவன் அப்படியே கூடலுக்குக் கூட்டிப்போக.. இந்தக்காட்சி பிள்ளையார் பிடிக்கப் போய் பரிதாபமாகச் சிக்கிக்கொண்ட குரங்காகவே படத்தில் வந்திருக்கிறது. இப்படி இன்னும் ஒரு சில குரங்குகளும் குரங்குக் குட்டிகளும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

கூடவே.. மடமடவென ஒரே பாடலில் அழகான கவிதையாகக் கடந்துபோகும் க்ரிஷ் கர்னாட் எபிசோடும், கோயில் உச்சியில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் சிருங்கார சங்கோஜப் பாடல்காட்சியும், பையனுக்கு அப்பா சிலம்பம் சொல்லித்தரும் சிருங்காரக் காட்சியும், அப்பாவின் கோபத்தை ஒரு சொம்புத்தண்ணீரில் அம்மா கரைக்கும் யதார்த்தமும், கோபத்தோடு ஒரே அடியில் மும்பை மைனரைச் சாய்க்கும்போது ‘நீ வீரண்டா’ என அப்பாவின் குரல் ஒலிக்கும் நகாசுக் காட்சியும்.. இப்படி நிறைய யானைத் தந்தங்களும்கூடத்தான் படத்தில் இருக்கின்றன.

ஆண்களே விஞ்சி நிற்கும் திரையுலகில்.. ஒரு பெண்.. எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் களமிறங்கி.. உடன் பணிபுரியும் பலரது முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு.. ஒரு துணிச்சலான கதையைச் சொல்லியிருக்கும்.. விஜய பத்மா நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான்.

இந்தி ரீமேக் குக்காக நல்ல விலை கொடுத்து படத்தை வாங்கி விட்டதாகக் கேள்விப்படுகிறேன். அதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!

படத்தின் ட்ரெய்லர் பார்க்க.. இங்கே ‘க்ளிக்’கவும் 

13 comments:

சி.பி.செந்தில்குமார் said...

1st shot

சி.பி.செந்தில்குமார் said...

>>விமரிசனம் என்ற பெயரில் நல்லதைச் சொல்லும் சாக்கில் அல்லதையும் சொல்லியாக வேண்டுமே என்பதால் சினிமா விமரிசனம் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

o.. பெரிய ஃபிளாஷ்பேக்கே இருக்கு போல.. ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

>>>மைனா படத்தின் பின்னணி வில்லியான ’ஜெயிலர் மனைவி’க்கு நல்ல கேரக்டர். நிறைவாகவே செய்திருக்கிறார்.

அட. அவரா.. நல்ல ஃபிகராச்சே,,

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க சொல்றதைப்பார்த்தா படம் கம்ர்ஷியலா போகாது.. விமர்சகர்கள் பார்வைய்யில் குவாலிட்டி படம்..?

சமுத்ரா said...

நல்ல விமர்சனம்..இப்போ விகடன்ல இல்லையா நீங்க?

Athisha said...

ரொம்ப நல்ல விமர்சனம். கோபமா கோபமில்லாம எப்படி எழுதறீங்க?

G Gowtham said...

//நீங்க சொல்றதைப்பார்த்தா படம் கம்ர்ஷியலா போகாது.. விமர்சகர்கள் பார்வைய்யில் குவாலிட்டி படம்..?//

அப்படி ஓரம் கட்டி வைக்கமுடியாத - கூடாத படம் செந்தில். கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். நடுநிசி நாய்கள் போல அருவருப்பான காட்சிகளோ - வலியத்திணித்த ஆபாச வசனங்களோ இல்லை! :-)

G Gowtham said...

//நல்ல விமர்சனம்..இப்போ விகடன்ல இல்லையா நீங்க?//

விகடன் கடந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்து, மறுபடியும் விகடன் புகுந்து, ஜெயா டிவி கடந்து, குமுதம் கடந்து, மின் பிம்பங்கள் கடந்து, குங்குமம் கடந்து, மக்கள் தொலைக்காட்சி கடந்து.. அதாச்சு ரொம்ப நீளமான பயணம்! பத்தாங்கிளாஸ் ஃபெயிலா, இல்லை எட்டாங்கிளாஸ் பாஸா என்பதை எதிர்காலம்தான் முடிவாச் சொல்லணும்.. :-)

G Gowtham said...

//ரொம்ப நல்ல விமர்சனம். கோபமா கோபமில்லாம எப்படி எழுதறீங்க?//

தம்ப்பி.. இப்ப சந்தோஷமா உங்களுக்கு?!

ILA (a) இளா said...

//கடந்து.. அதாச்சு //
நடுவுல ஒன்னு ரெண்டு மிஸ்ஸிங் போல. ITயை விட நிறைய ஜம்ப் அடிச்சி, எங்க மானத்தை காப்பாத்திட்டீங்க. படம், வந்தா பார்ப்பேன். லிவிங் ஸ்மைல் வித்யா புத்தகத்தை படிச்சதிலிருந்தே இப்படி ஒரு படம் வராதான்னு இருந்தேன்.

Roaming Raman said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க என்று சொன்னால்- நாயர் கடை டீ நல்லா இருக்கும்னு சொல்றா மாதிரி இருக்கும். திருநங்கைகள் குறித்த ஒரு கதையை குறும்படமாக நண்பர் பிலால் என்பவருடன் சேர்ந்து பண்ணுவதற்காக எழுதி வைத்திருந்தேன்..அதற்காகவேனும்,இந்தப் படம் கண்டிப்பாகப் பார்ப்பேன்.
உங்கள் பதிவில் நர்த்தகியின் டைட்டில் இமேஜ் போட்டிருந்தால், அது மனசில பதிஞ்சிருக்குமே!!

(மீண்டும் முழு வேகத்தோடு வந்திருப்பதால் விரைவில் பரிசுப் போட்டிகள் வரும் என்று எதிர்பார்க்கலாமா?)

- ரோமிங் ராமன்

அமைதி அப்பா said...

இப்படி ஓர் உலகம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே எல்லோரும் இந்தப்படத்தை ஒரு முறை பார்க்கலாம். //

பார்த்துடுவோம்.

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

காப்பாத்தினதுக்கு நன்றி..! உங்களது விமர்சனமே எனது விமர்சனம்..!