Thursday, July 20, 2006

பிணங்களின் மரணங்கள்/ தேன் கூடு(மரணம்) போட்டிக்காக

ணக்கங்க.
எம் பேரு செல்விங்க.
நா படிச்ச பள்ளிக்கூடத்துக்குப் போயி, 'தமிழ்ச்செல்வி'னு இப்பக்கேட்டாக்கூட வாட்ச்மேன் தாத்தால இருந்து ஹெட் மாஸ்டர் வரைக்கும் என்னக் கை காட்டிருவாங்க!

நீங்க நினனக்கிறமாதிரி என்னோட முழுப் பேரு தமிழ்ச்செல்வி இல்லைங்க. தமிழ்ல கதை, கவிதை, கட்டுரைன்னு எந்தப் போட்டி நடத்துனாலும் எங்க ஸ்கூல்ல நான்தான் முத ஆளா வருவேன். அதனால வந்த அடையாளப் பேருங்க அது.

எங்கப்பா சொந்தமா ரெண்டு ஒயின் ஷாப் வச்சிருந்தாரு. ஊருல பெரிய தலக்கட்டு. கோவம் வர்றப்ப எங்கப்பாவ நீங்க பார்க்கணுமே... அவரோட முறுக்கு மீசையப் பார்த்தாலே ஊருல பாதிப் பய பூமிய நனைச்சுருவான்! அம்புட்டு கோவம் வரும் அவருக்கு.

சரி எங்கதைய எங்க விட்டேன்... ஆங்... ஞாபகம் வந்துருச்சு. எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. அப்ப நா அஞ்சாப்பு படிச்சுட்டிருந்தேன். பள்ளிக்கூடத்துல பேச்சுப் போட்டி.

எனக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்! அதுதான் நா மொத மொதல்ல வாங்குன பரிசு. தமிழம்மாவுக்கு எம்மேல கொள்ள ஆசை. நா பரிசு வாங்குனத பாராட்டுறதுக்காக அவங்க கைக்காசுல எனக்கு சாக்லேட் மிட்டாய்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.

ஆசையோட வீட்டுக்குப் போனேன்.

'இந்தா பாருங்க நா வாங்குன ஃபர்ஸ்ட் ப்ரைஸ்'னு சொல்லிக் குதிச்சேன். பாக்கு உரல்ல வெத்தல இடிச்சுட்டிருந்த எங்க பாட்டிக்கிழவி வந்து, 'அடச்சீ! இத்தனாஞ்சூடு சோப்பு டப்பாவ வாங்கிட்டு வந்ததுக்கா இந்த ஆட்டம் போடுறவ'னு ஒரு அதட்டு போட்டுச்சு. அதக்கேட்டதும் எங்கப்பா, அம்மா, அண்ணன்காரன், வீட்டு வேலைக்காரங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க பாருங்க... அப்பதான் முதல் வாட்டி...

அப்பறம் நான் அதே பள்ளிக்கூடத்துலதான் பத்தாப்பு பாதிவரை படிச்சேன். என்னது... பாதிக்கு மேல ஏன் படிக்கலேனு கேக்குறீங்களா? சொல்றேன்.

அன்னிக்கு வெள்ளிக் கெழம... மாரியாத்தா கோயிலுக்கு எல்லாரும் கெளம்பிட்டிருக்கோம். அடி வயித்துல கோணி ஊசிய வச்சுத் தைய்க்கிற மாதிரி சுரீர்னு ஒரு வலி! கச கசனு ஆயிருச்சு!

அப்புடியே சுருண்டு படுத்துட்டேன். வேலைக்கார தாயம்மாதான் சத்தம் கேட்டு ஓடி வந்துச்சு. 'அடியாத்தி... புள்ள சமஞ்சிருச்சு'னு ஊரக் கூட்டிருச்சு!

சாதி சனம் மொத்தமும் சேர்ந்துருச்சு. கெடா வெட்டி திருவிழாவே கொண்டாடிட்டாய்ங்க. ஓலக் குடிசைக்கு அந்தப்பக்கம் நா உட்கார்ந்துருக்கேன். எனக்கு அசிங்கம் புடுங்கித் திங்கிது.

அப்பத்தான் கூட்டத்துல இருந்து யாரோ சொன்னாங்க... "எலே மாரியப்பா, அதான் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டாள்ல. பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறத நிறுத்திப்புடு. என்ன நாஞ்சொல்றது?''

'அய்யய்யோ வேணாம். நா படிக்கணும். நிறைய படிக்கணும்' னு நா உள்ள உக்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்கப்ப, எங்கப்பா சொன்னார் பாருங்க... "ஆமாமா... அடுத்த வீட்டுக்குப் போற பொட்டப் புள்ளைக்கு படிப்பெதுக்கு''னு அப்ப ஒரு வாட்டி...

பொம்ம மாதிரி வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடந்தேன். அடுத்த ஆறாவது மாசமே எங்க வீட்ல எனக்கு மாப்ள பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. தடுத்து நிப்பாட்டுறதுக்காக எவ்ளவோ போராடுனேன். எதுவும் செல்லுபடியாகல.

தினமும் நா அழுறதப் பார்த்துட்டு எங்கம்மா ஒரு நா அப்பாகிட்ட குசு குசுனு பேசிக்கிட்டு இருந்ததை நானும் தெரியாத்தனமா கேட்டுட்டேன். ''இவ கல்யாணம் வேணாம் வெணாம்னு அடம் பிடிக்குறதப் பார்க்குறப்ப எனக்கொரு சந்தேகம்ங்க. பள்ளிக்கூடத்துல கூடப்படிச்ச பய எவனயாச்சும் மனசுல முடிஞ்சு வச்சிருப்பாளோ''னு என்னப் பெத்த ஆத்தாவே சொன்னுச்சு பாருங்க... அப்ப ஒரு வாட்டி...

''அழாதடி செல்வி. கல்யாணத்துக்கு ஒத்துக்க. மாரியாத்தா புண்ணியத்துல வர்ற மாப்ள உன்னப் புரிஞ்சுக்குறவரா அமஞ்சுட்டா அவரே உன்னப் படிக்க வைக்கலாம்டி. அப்டித்தான் எங்க மாமா ஒண்ணு அது கட்டிக்கிட்ட பொஞ்சாதிய எம்.ஏ வரைக்கும் படிக்க வச்சது'' னு பக்கத்து வீட்டு மீனாட்சியக்கா புதுசா ஒரு நம்பிக்கை கொடுத்துச்சு. கல்யாணத்துக்கு சரின்னுட்டேன்.

ஆனா என்ன நடந்தது தெரியுமா? படிச்ச மாப்ளயா நா பார்க்கச் சொன்னாக்க பத்து ஒயின்ஷாப் நடத்துற ஒருத்தரப் புடிச்சார்ந்தாரு அப்பா!

'மாப்ளயப் புடிக்கலே'னு சொன்னதுக்கு விடிய விடிய நினச்சு நினச்சு அடிச்சாரு எங்கப்பா. விடிஞ்ச பிறகும் அழுதுச்சு எங்கம்மா. பாட்டிக் கெழவி
சாகப்போறேன்னு அரளி விதைய அரைச்சுக்கிட்டு இருக்கு இன்னொரு பக்கமா.

'அவ்வளவுதான்'னு நினைச்சுக் கிட்டு அந்த மாப்ளயவே கட்டிக்க சம்மதம் சொன்னேன் பாருங்க... அப்ப ஒரு வாட்டி...

சாட்சிக்காரன் கால்ல விழுறத விட சண்டைக்காரன் கால்லயே விழலாம்னு ஒரு நம்பிக்கை மனசுக்குள்ள இருந்துச்சு. முத ராத்திரியன்னிக்கு தயங்கித்தயங்கி எம் புருஷன்கிட்டயே படிக்கணுங்குற என்னோட ஆசையச் சொன்னேன்.

அம்புட்டுதான்!

'நல்ல கதையக்கெடுத்தே போ. உன்னக் கட்டிக்கிட்டது குடும்பம் நடத்துறதுக்காகத்தான். காலேஜூக்கு அனுப்பி உன்னக் கலெக்டராக்குறதுக்காக இல்லே. நா படிச்சது நாலாப்பு வரைக்கும்தான். அதுனால யாராச்சும் உன்கிட்ட கேட்டாக்க நீ மூணாப்பு வரைதான் படிச்சதா சொல்லணும் ஆமா'னு எம் புருஷன் சொன்னாரு பாருங்க... அப்ப ஒரு வாட்டி...

எனக்கு என்ன ஏதுன்னே புரியாம எல்லாமே நடந்தது எனக்கும் எம் புருஷனுக்கும்! படுத்துகுற வயசா அது?

வலிக்குதுன்னு நா அழுறத நிறுத்த வைக்க முடியாம, அழுகைச் சத்தத்தையாவது நிறுத்தனும்னு என் வாயில புடவை முந்தானையச் சொருகிட்டு மேல பாய்வாரு எம் புருஷன்.

அப்பல்லாம் விடிய விடிய நா அழுத ஒவ்வொரு வாட்டியும்...

ஒம்பதே மாஷத்துல எனக்கும் ஒரு புள்ள பொறந்துச்சு! பொறந்தது பொட்டையாப் போச்சேன்னு என்னத் தவிர எங்க குடும்பத்துல எல்லாருக்கும் வருத்தம்.

பச்ச உடம்போட என்னை ஆஸ்பத்திரில படுக்க வச்சுக்கிட்டு நா ஒருத்தி இருக்கேங்குறதயே மதிக்காம என் குழந்தய அந்த தங்கத்த கள்ளிப்பால் ஊத்திக் கொல்லலாமா இல்ல தூக்க மாத்திர கொடுத்துக் கொல்லலாமானு எம் புருஷனும் மாமியாகாரியும் பேசிக்கிட்டாங்க பாருங்க... அப்ப ஒரு வாட்டி...

நல்லவேளை... பேசினதோட விட்டுட்டாங்க. என் மகளைக் கொல்லல!
அதுக்காக நா இன்னிவரைக்கும் போகாத கோயில் இல்ல. நன்றி சொல்லாத சாமி இல்ல.

இதோ இப்பக்கூட முனீஸ்வரன் கோயிலுக்குப் போயிட்டுதான் வீட்டுக்குள்ள நுழையுறேன்.

ஐயோ!

நடு வீட்டுக்குள்ள வச்சு எம் பொண்ணை தன்னோட பெல்ட்டால அடிச்சுக்கிட்டிருக்காரு எம் புருஷன்!

''ஐயோ சாமி... ஏங்க புள்ளயப் போட்டு இப்டி அடிக்குறீங்க. தொளுக்கு மேல வளர்ந்துட்ட புள்ளைங்க. அவள அடிக்காதிங்க.''னு அழுகுறேன் நான்.

என்னப்பார்த்து முறைச்சுக்கிட்டே அவர் சொல்றாரு...''எல்லாம் நீ கொடுக்குற செல்லம்டி. புள்ளயாம்ல புள்ள... அன்னிக்கே கள்ளிப்பால ஊத்தியிருக்கனும்டி இவளுக்கு. டவுனுக்குப் போயி காலேஜ்ல படிக்கணுமாம். சேர்த்து விடலைனா மருந்தக் குடிச்சுட்டு செத்துடுவாளாம். அடுத்த வீட்டுக்குப் போற பொட்டக் கழுதைக்கு படிப்பெதுக்குடி? அந்தக் காசுக்கு நாலு காளைமாடு வாங்கி விட்டாக்கக்கூட வயல உழுதுக்கிட்டிருக்கும்''

கண்களைத் துடைச்சுக்கிட்டு நா சொல்றேன்... ''இல்லங்க அவ சொல்றதுதான் சரி. அவ மேல படிக்கட்டும்''

பொளேர்னு ஒரு அறை. வெறியோட கத்துனார் எம் புருஷன்...''ஆத்தாளயும் மகளையும் ஒன்ணா தல முழுகிருவேன். என்னது இத்தன வ்ருஷமா இல்லாத வாயி... திடீர்னு! கொன்னுருவேன் கொன்னு!''

எங்கே இருந்துதான் அம்புட்டு வேகம் எனக்கு வருதுன்னு தெரியலங்க... பொங்க ஆரம்பிக்கிறேன்... எம்புட்டு வருஷமா உள்ள கிடக்குற வலி... ''அதயும் பார்த்துரலாம் வாய்யா. கொன்னுருவாராம்ல... அடச்சீ செத்த பொணத்த எத்தன வாட்டிடா கொல்லுவீங்க. எம் புள்ளை மேல கையவச்சிங்க... அவ வாழ்க்கயயும் கெடுக்க நினச்சீங்க... வக்காலி, அம்புட்டு பேரயும் வெட்டிச் சாச்சுருவேன்... தைரியம் இருந்தா வாங்கடா..''

ஒரு கைல எம் பொண்ணு. இன்னோரு கைல வெட்டருவா... ஊரே என்னப்பார்த்து திகைச்சு நிக்குது!

9 comments:

Anonymous said...

Really Good Gowtham. The title suits very well. Selvi "Break the rules"

பெருசு said...

சும்மா சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி தட தட ன்னு ஓடுது


வாழ்த்துக்கள்

Anonymous said...

what to say.. no words to match how i feel..

Selvi

G Gowtham said...

பெயரில்லாமல் வந்த முதல் கமெண்ட்டுக்கு,
காலம் மாறிக் கொண்டிருக்கிறது
என நாம் எவ்வளவுதான் சொல்லிக்கொண்டாலும்
செல்விகள் இப்போதும் அப்ப்டியே அழுது கொண்டுதான் இருக்கிறார்கள்.

நன்றி பெருசய்யா!

//Anonymous said...
what to say.. no words to match how i feel..

Selvi//
இந்த பின்னூட்டத்தைப் படித்ததும் உயிர் வலித்தது.
இரவு தூங்க வெடுநேரமானது.

Anonymous said...

நிஜத்தைச்சொல்லும் கதை. நிறைய யோசிக்கவைத்தது.
பரிசுகிடைக்க வாழ்த்துக்கள்

G Gowtham said...

பரிசு பிரதானமல்ல,
நீங்கள் எல்லோரும் படித்தாலே சந்தோஷம்!
தேன் கூடு பக்கங்களில் இந்தக்கதைக்கு இணைப்பு இயங்கவில்லை என்பதற்காக தனி இடுகை இட்டிருந்தேன்.
தனிப்பட்ட மெய்ல் மூலம் இளவ்ஞ்சியிடமும் உதவி கேட்டிருந்தேன். உடனடியாக தனது வலைப்பதிவில் இணைப்பைச் சரி செய்த இளவஞ்சி அவர்களுக்கு இந்த இடத்திலும் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Anonymous said...

:>(

Prabu Raja said...

che!
mothallaye padichchiruntha, oru vottu kandippa pottiruppen.

G Gowtham said...

Chee!
Oru Vottu miss agiduche!