Wednesday, November 29, 2006

இந்தச் சட்டை தெரியுமா? இந்தச் சட்டை தெரியுமா?


உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

- பொருட்பால், அதிகாரம்: 108. கயமை, குறள்: 1079
பிறர் நண்றாக உடுப்பதையும் உண்பதையும் கண்டால், பொறாமை கொண்டு அவர்மீது குற்றம் காணத்துடிப்பான் கீழ்மகன்

வனைத்தேடி ஓடி வந்தாள் அவள்..

“நீ இங்கதான் இருக்கியா! எங்கெல்லாம் தேடுறது?”

“ஹாய்! சொல்லு, என்ன சேதி?”

“இருக்கு, ஸ்பெஷல் சேதி!”

“கமான் கமான்.. சஸ்பென்ஸ் வைக்காதே, சொல்லிடு! என்னது இது கிஃப்ட் பேக்? யாருக்கு?”

“ம், உனக்குத்தான்! இந்தா பிடி.. நாளை இனிய பிறந்த நாள் காணும் தோழனுக்கு இந்த அன்புத் தோழியின் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்!”

“வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ்! நாளைக்குத்தான் என் பர்த்டேனு எனக்கே நீ சொல்லித்தான் நினைவுக்கு வருது. அசத்திட்டே! ஆமா.. என் பர்த்டே உனக்கெப்படி தெரியும்? நான் இதுவரை யார்கிட்டயும் சொன்னதில்லையே?”

“தெரிஞ்சுக்கணும்னு நினைச்சுட்டா தன்னால தெரிஞ்சுடும், அந்த ஆராய்ச்சி இப்ப எதுக்கு? என் கிஃப்டை பிரிச்சுப் பார்..”

“சட்டை அட்டகாசமா இருக்கு! எப்படியும் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல இருக்கும். எதுக்கு இப்ப வீண் செலவு?”

“போடா இவனே.. அட்டகாசமா இருக்குல்ல, அணிந்து மகிழ்! நாளைக்கு காலேஜ் வர்றப்ப இந்த சட்டையோடதான் நீ வரணும்”

“அப்படின்னா..?”

“எனக்கு ஒரு செண்டிமென்ட் உண்டு. நான் யாருக்கு பர்த்டே ஷர்ட் ப்ரஸண்ட் பண்ணாலும் அவங்க எனக்கு பெஸ்ட் ஃப்ரண்டாயிடுவாங்க..”

“அப்படியா?!”

“எனக்கு மட்டுமில்ல, எங்கம்மாவுக்கும் இதே செண்டிமென்ட் உண்டு. அவங்ககூடப் படிச்ச பல நண்பர்கள் இன்னிக்கும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க தெரியுமா! இப்ப எல்லோரும் எங்க குடும்ப நண்பர்கள்!”

“அப்டிப்போட்டுத் தாக்கு! அப்ப.. நீ அவளோட குடும்ப நண்பனாகிட்டியாக்கும்?” - உதட்டளவில் உற்சாகமாகக் கேட்டான் அறைத் தோழன். உள்ளே பொறாமைப்புகை பொங்குவதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!

“அடப்போடா.. நண்பன்னுதானே சொன்னா, காதலன்னு சொல்லலியே...” - ஏக்கதோடு சொன்னான் பர்த்டே பையன்.

“அவசரப்படாதடா. இப்பத்தான் நட்புன்னு நெருங்கி வந்திருக்கா. கொஞ்சம் காத்திரு. கூடிய சீக்கிரமே அவ வாயாலேயே காதல்னு சொல்லவெச்சுடலாம்!”

“அப்படிங்குறே?”

“ஆமா நண்பா. நான் எதுக்கு இருக்கேன். சிந்திச்சு செயல்பட்டு எப்படியாவது உங்க நட்பை காதலாக்கிட மாட்டேனா..” என வார்த்தைகளாலும், ‘மவனே.. கிளி மாதிரி இருக்க இப்படி ஒரு ஃபிகரை குரங்குப்பய நீ கொத்திட்டு போறதையா நான் அனுமதிப்பேன். உன்னையும் அவளையும் நெருங்க விடாமப் பண்றதுக்காக நான் இதுவரை போட்ட எல்லாத் திட்டங்களும் போணியாகமப் போயிருக்கலாம். ஆனா இப்ப வெச்சிருக்கேண்டி அதிரடி ஐடியா! இன்னிக்கோட உங்க நெருக்கத்துக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்குறேன்’ என மனதாலும் சொன்னான் ‘தோழன்’!

அறைத் தோழனின் அழுக்கு மன ஓட்டத்தைக் கொஞ்சமும் அறியாத அப்பாவியாக ஆனந்தக் கண்ணீர் விட்டான் சட்டைக்காரன்..

“இப்படி ஒரு நண்பன் கிடைச்சது என் அதிர்ஷ்டம்டா!”

“இப்படி ஒரு ஷர்ட் கிடைச்சதும் உன் அதிர்ஷ்டம்தான்டா. பிராண்டட் அயிட்டம் தெரியுமா? அர்மானி... விலை எப்படியும் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேலதான் இருக்கும்” - வாய் பிளந்து ஆச்சர்யப்பட்டான் ‘தோழன்’.

“என்னது பத்தாயிரமா!!!” என மயக்கம் வராத குறையாக புருவம் உயர்த்தினான் அதிர்ஷ்டக்காரன்.. “நான் இதை ரெண்டாயிரம் ரூபாய் இருக்கும்னு தப்பா மதிப்பு போட்டுச் சொன்னப்பக் கூட அவ உண்மையைச் சொல்லலைடா” என்றும் சொன்னான், விலகாத வியப்போடு.

‘பரம்பரைப் பணக்காரன் நான். நானே இதுவரை வாங்காத காஸ்ட்லியஸ்ட் ஷர்ட் இது. நீ போட்டுட்டேன்னு வெச்சுக்க, அதுக்கப்புறம் நான் உயிர்வாழ்றதே வேஸ்ட்’ - மனதுக்குள் கருவிய ‘தோழன்’, “இன்னிக்கே.. இப்பவே.. இந்த நிமிஷமே ஒரு முடிவு பண்றேன்” என்றான்.

“சொல்டா என்னுயிர்த்தோழா” என அவனைக் கொஞ்சினான் அப்பாவி.

எதிரே இருக்கும் பாவி இரக்கமே இல்லாமல் தன் திட்டத்தைச் சொன்னான்.. “மச்சி நீ என்ன பண்றே.. இந்த சட்டையை அயர்ன் பண்ற சாக்குல பொசுக்கி டேமேஜ் பண்ணிடு. நாளைக்கு இந்த சட்டையோட உன்னை எதிர்பார்ப்பா அவ. நீ போட்டுட்டு போகலைன்னதும் கோபமாயிடுவா. கத்துவா. திட்டுவா. பயந்துடாதே! அவ உன்மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்குறத கண்டு பிடிக்கத்தான் இந்த டெக்னிக். எவ்வளவுக்கெவ்வளவு கத்துறாளோ அவ்வளவுக்கவ்வளவு அன்புன்னு அர்த்தம். அடுத்த ஸ்டெப் எடுத்துவைக்க இது நமக்கு உதவும்”

அவளது சட்டை செண்டிமெண்ட்டையும் பொசுக்கிப் போடும் குயுக்தியைச் சொன்னான் ‘தோழன்’. அதை அப்படியே நம்பினான் அப்பாவியும்!

“ஹே! என்னாச்சுப்பா நான் ப்ரஸண்ட் பண்ண ஷர்ட்? பர்த்டே பாய் இப்படியா சிம்ப்பிளா காலேஜுக்கு வர்றது?!”

“இல்ல, அயர்ன் பண்றப்ப மிஸ் ஆகிடுச்சு! ஷர்ட் பொசுங்கி பெருசா ஓட்டை விழுந்துடுச்சு! ஸாரி.. நீ ஆசையா வாங்கிக் கொடுத்தே.. அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு”

“அவ்வளவுதானே! கவலைய விடு.. இந்தா இதைப் போட்டுக்கோ”

“என்னது இன்னொரு புது ஷர்ட்டா?!”

“யெஸ். காலைல வீட்டுல இருந்து கிளம்புறப்பவே மனசுக்குள்ள ஏதோ ஒரு தடுமாற்றம். என்னமோ தெரியல, ‘இன்னொரு சட்டை வாங்கிட்டுப் போ’ன்னு மனசு சொன்னது. அதுக்கான காரணம் என்னன்னு இப்பத்தான் தெரியுது. நல்லவேளை என் செண்ட்டிமென்ட்டை என் மனசு காப்பாத்திடுச்சு!” - சந்தோஷப் பெருமூச்சு விட்டாள் அவள்.

சிலையானான் அவன்.

அதே இடத்தில் தான் அணிந்திருந்த பழைய சட்டையைக் கழட்டிவிட்டு, புதுச்சட்டை அணிந்து கொண்டான் அவன்.

“சூப்பர்!” எனக் கைகொடுத்த அவள் மெதுவாக அவன் காதுகளில் சொன்னாள்.. “எங்கம்மா லைஃப்லயும் அவங்க காலேஜ் படிக்கிறப்ப இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. அம்மா ப்ரஸண்டா கொடுத்த ஷர்ட் பொசுங்கிப் போயிடுச்சுன்னு வருத்தத்தோட சொல்லியிருக்கார் அவங்களோட பாய் ஃப்ரண்ட் ஒருத்தர். கையோட அவரைக் கூட்டிட்டுப் போய் புதுசா ஒரு ஷர்ட் மறுபடியும் வாங்கிக் கொடுத்தாங்கலாம் அம்மா”

“ம்”

“என்ன ‘ம்’? எங்கம்மா லைஃப்ல நடந்ததெல்லாம் அப்படியே என் லைஃப்லயும் நடக்குதேங்குற பரவசத்துல இருக்கேன் நான். எங்கம்மாகிட்ட ஒரே பர்த்டேக்கு ரெண்டு ஷர்ட் வாங்கின அந்த ஃப்ரண்ட்தான் எங்கப்பா!”


உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
, பல காதலுக்கு அவனே தூண்!

முந்தைய 'காதல்பால்' இங்கே!

Monday, November 27, 2006

எழுதுவது எப்படி?


எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!

இயல், இசை, நாடகம்.. இம்மூன்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கும் முன்னதாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்!

கலை - இலக்கியம் யாவும் மக்களுக்கே! அல்லது கலை கலைக்கே!! இந்த இரண்டு கருத்துக்களில் நீங்கள் எந்தக் கட்சி?

முதலாவது வகை ‘கே’க்கே உங்கள் ஓட்டு எனில் நீங்கள் என் கட்சி. தொடரலாம் வாருங்கள்..

ஒரு முழுமையான படைப்புக்கு ஆதாரம் என்ன தெரியுமா? நமது சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்புகள் படிப்பவரை அல்லது பார்ப்பவரை இலகுவாக கருத்தொருமிக்கச் செய்துவிட வேண்டும்.

அதாவது நமது கருத்துக்கே அவர்களும் ‘ஆமாம்’ போடவேண்டும் என்பதல்ல இந்த இடத்தில் கருத்தொருமித்தலுக்கான அர்த்தம். படைப்பு வாயிலாக நாம் சொல்ல நினைக்கும் கருத்தினை அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளவேண்டும்! புரிந்த கருத்துக்கு ஏற்புடையதாகவோ மறுப்புடையதாகவோ மறு கருத்துச் சொல்வது அவரவர் பிறப்புரிமை.

ஆக எளிமையாகச் சொல்வதால் எதிரே இருப்பவரை வேகமான புரிந்து கொள்ளுதலுக்குத் தயார்ப் படுத்தலாம் என்பது உட்கருத்து.

இப்படி எளிமையாகச் சொல்வதால் இலக்கின் எல்லைகளும் விரிவாகும் என்பது தனிக் கருத்து!

இதழியலில் இதைத்தான் வெகு ஜன வாசிப்பு என்கிறோம். எழுத முற்படுவதை எளிமையான வகையில் எழுதுவதன்மூலம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான அடிப்படை இலக்கணம்.

இந்த இலக்கணப்படி எழுதப்படும் பத்திரிகைகளே வெகு ஜனப் பத்திரிகைகள்.

தமிழில் வெகு ஜன இதழியலில் மூத்த குடிமகன் என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அமரர் சி.பா.ஆதித்தனார்.

அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் நடை போடும் ‘தினத்தந்தி’ இன்றும் வெற்றி நடை போடுகிறது. டீக்கடை பென்ச்சுகளில் மட்டுமல்ல, நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறைகளையும் தனது செய்திகளால் நிரப்புகிறது.

‘எப்படி எழுத வேண்டும்?’ என இதழாளர்களுக்கு அவ்வப்போது ஆதித்தனார் சொல்லிய விஷயங்களைத் தொகுத்து ‘இதழாளர் கையேடு’ என்ற நூல் வெளியிட்டிருக்கிறது தினத்தந்தி. எளிமையாகவும் புரியும்படியும் எழுத நினைப்பவர்களுக்கு அது என்றும் பயனுள்ள புத்தகம்.

அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கச் சென்றதன்மூலமே ‘தினத்தந்தி’க்கும் எனக்குமான நேரடி தொடர்பு ஆரம்பமானது!

தினத்தந்திக்கு வரி விளம்பரங்கள் வாங்க உரிமம் பெற்ற விளம்பர நிறுவனம் (அதாவது Authorised Franchisee) நியமிக்கப் போவதை கேட்டறிய வாய்ப்புக் கிடைத்தது. ‘நுங்கம்பாக்கம்’ ஏரியாவுக்கென விண்ணப்பித்தேன். கடும் போட்டிக்கிடையில் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொஞ்ச காலம் அந்தப் பணியையும் செய்தேன்! அந்த வகையில் ‘தினத்தந்தியின் நேரடி அங்கீகாரத்தைப் பெற்றவனாக்கும்’ என நானும் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாமாக்கும்!

கூடவே, ஆதித்தனாரின் நேரடி அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் பெற்ற மூத்த பத்திரிகையாளர்கள் சிலருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பெருமையும் எனக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளலாம்!

அப்படி ஒரு அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் ஒருவர். என்னைச் செதுக்கியவர்களில் அவருக்கும் பெரும்பங்கு இருக்கிறது. தினத்தந்தியில்தான் அவரது பத்திரிகையுலகப் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது. அதுவும் படிக்கிற காலத்திலேயே!

ஆதித்தனார் அவர்கள் தனது செய்தியாளர்களுக்கு சின்னச் சின்ன விஷயங்களையும் எப்படி எளிமையாகச் சொல்லித்தந்தார் என்பதை அடிக்கடி அவர் விவரிப்பார். ஆர்வமுடன் இப்போதும் நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.

பணிக்குச் சேரும் பயிற்சி நிரூபர்களுக்கும் உதவி ஆசிரியர்களுக்கும் முதல் நாளிலேயே செய்தி ஆசிரியர் கொடுக்கும் பத்து கட்டளைகள் குறித்தும் அவர் சொன்னதுண்டு. ‘நம் ஆசிரியர் ஆதித்தனாரின் பத்து கட்டளைகள்’ என்று தலைப்பிட்டு தன் கைப்படவே எழுதிக் கொடுப்பாராம் செய்தி ஆசிரியர். ஆதித்தனாரின் நேரடி பயிற்சிக்கு முன்னதாக இந்த கட்டளைகள் மணி ஓசைப் பயிற்சியாக!

பல வருடங்களுக்கு முன்பு தனக்கு(ம்) கொடுக்கப்பட்ட அந்த பத்து கட்டளைகளின் நகலை வீட்டிலிருந்து தேடி எடுத்துவந்து கொடுத்தார் அவர் இன்று.

‘வெகு ஜன இதழாளர்களுக்கு’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நிச்சயம் நமது எழுத்துக்களை எளிமைப்படுத்திக் கொள்ளப் பயன்படும்! ‘இதழாளர்களுக்கு மட்டும் இல்லை’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும் நிச்சயம் எல்லோருக்குமே பயன்படும். எழுதுவது, பேசுவது.. இப்படி எல்லாவிதமான தகவல் தொடர்பு பரிமாணங்களுக்கும் இது பொருந்தும்.. எனக்குக் கிடைத்தது, நீங்களும் சாப்பிடுங்கள்!

ஆதித்தனாரின் பத்து கட்டளைகள்

1. சிறு சிறு வாக்கியமாக எழுதுங்கள்.
2. எழுத்தில் எளிய சொற்களே இருக்கட்டும்.
3. புரியும் சொற்களில் மட்டுமே எழுதுங்கள்.
4. தேவையற்ற சொற்களை கட்டாயமாக நீக்குங்கள்.
5. வாசகர்களைக் கவரும் வகையில் சொற்களில் துடிப்பு இருக்க வேண்டும்.
6. வாசகர்களுடன் நேரில் பேசுவதுபோல எழுதுங்கள்.
7. படம் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து இருக்க வேண்டும்.
8. உங்கள் எழுத்து வாசகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
9. உங்கள் எழுத்தில் தரம் இருக்க வேண்டும்.
10. வாசகர்களுக்கு விளக்குவதற்காக எழுதுங்கள்.

முடிவல்ல ஆரம்பம்! / எ-எ-ஏ?


ஜோடியாகப் பறந்து திரிந்தன இரண்டு கிளிகள். மப்பும் மந்தமுமாக இருந்த ஒரு துக்க தினத்தில் கிளி ஜோதிடக்காரன் ஒருவனிடம் சிக்கிக்கொண்டது பெண் கிளி!

தப்பிவிடாமல் இருப்பதற்காக அதன் சிறகுகளை ஒடித்தான் ஜோதிடன். சுய நினைவுக்கு வந்த கிளி பறக்க முயற்சித்துத் தோற்றது.

சில நாட்களில் மறுபடியும் சிறகுகள் முளைத்தன. மறுபடியும் அவற்றை ஒடித்தான் ஜோதிடன். மறுபடியும் பறக்க முயற்சித்துத் தோற்றது கிளி!

இப்படியே மறுபடி மறுபடி சிறகுகள் முளைப்பதும், அதனை இழந்து பறக்க முடியாமல் கிளி தவிப்பதும் பல முறை நடந்தது. அவ்வளவுதான்.. தான் பறக்கும் சக்தியை இழந்துவிட்டதாக நம்பியது அந்தப் பெண்கிளி! அதன்பிறகு அது பறந்து பார்க்கவே முயலவில்லை!

இனிமேல் இது பறக்க முயற்சிக்காது என்ற முடிவுக்கு வந்த ஜோதிடனும் அதன் பிறகு சிறகுகளை ஒடிப்பதை நிறுத்தி விட்டான்.

ஜோடியைக் காணாமல் தவித்த ஆண் கிளி ஆறேழு மாதங்களுக்குப் பின்னர் ஒரு சுப யோக சுப தினத்தில் பெண் கிளியைக் கண்டது. ஜோதிடக்காரனின் கூண்டுக்குள் வேகாத அரிசியைத் தின்று விதி வந்தால் சாவதற்குக் காத்திருந்த பெண் கிளியைப் பார்த்ததும் அதற்கு துக்கம் தாளவில்லை!

ஜோதிடக்காரன் அசரும் சமய சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது ஆண் கிளி. அவகாசம் கிடைத்ததும், “அடிமை வாழ்வு போதும். வா.. தப்பிவிடலாம்!” என பெண் கிளியை அழைத்தது.

“என்னால் பறக்க முடியாதே, எப்படித் தப்பிப்பது?” எனப் பதறியது பெண்.

“உன்னால் முடியும்.. பற” என்றது ஆண்.

“இல்லை, இதுவரை அறுபது முறை முயற்சித்து விட்டேன். பறக்கும் சக்தி என்னிடம் இப்போது இல்லை!” என்றது பெண்.

“போடி லூசு! உன்னால் முடியும்.. பற” என்று அதட்டியது ஆண்.

புதிய இறகுகளுடன் பறந்தது பெண்!

வெகுதூரம் பறந்துபோனதும் ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்காக மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன கிளிகள் இரண்டும். அப்போது பெண்ணிடம் ஆண் சொன்னது நமக்கும்தான்! அது...?


?

?

?

?

?

?

?

?

“எத்தனை முறை தோற்றாய் என்பதை நினைத்துப் பார்ப்பதால் பயம்தான் உண்டாகும். ‘போனமுறை தோற்றேன், இந்தமுறை ஜெயிப்பேன்’ என்ற சிந்தனைதான் வெற்றிக்கான வழி!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' : இங்கே!

Saturday, November 25, 2006

என்ன நியூஸ்? / தடாலடிப்போட்டி!


வணக்கம் வலைமக்களே!

புதுசா ஒரு ஜி போஸ்ட் ( நியூ) ஆரம்பிச்சுருக்கேன்ல, அதன் நினைவுபடுத்தலா இந்த வார தடாலடி போட்டி! ஹி..ஹி!

நியூஸ் பேப்பர் படிச்சுட்டு இருக்குறது நம்ம ஊரு கோயிந்துன்னு நினைச்சுக்கங்க! அப்படி என்ன நியூஸ் படிச்சுட்டு இந்த அதிர்ச்சி காட்டுறாரு மனுஷன்?!

இதான் போட்டி, நிஜமோ கற்பனையோ புகுந்து வெள்ளாடுங்க..

மற்ற விவரங்கள் வழ்க்கம்போல்தான். போட்டியில் கலந்துகொள்வதற்கான கெடு நேரம்: 27.11.2006 திங்கள் மாலை 6மணி (இந்திய நேரப்படி).

Thursday, November 23, 2006

சிரிச்சுட்டு சிந்தியுங்க!

ரயில் தண்டவாளத்தில் பிணம் கிடக்கிறது!

இறந்தது 'யார்? எப்படி?' என்ற ஆராய்ச்சிகளுக்கு முன்னால் போலீஸார் வந்து வழக்குப் பதிவு செய்தாக வேண்டும். அதில்தான் பிரச்னையே!

சம்பவ இடத்துக்கு விரைந்துவரும் ரயில்வே போலீஸார், "பிணம் தண்டவாளத்தில் இல்லை. அதனால் நாங்கள் வழக்கைப் பதிவு செய்ய முடியாது" என்று ஜகா வாங்கிவிட்டனர்!

அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லப்படுகிறது. வருகிறார்கள் தொந்தியும் தொப்பையுமான இரண்டு கான்ஸ்டபிள்கள்.

பிணத்தைப் பார்த்ததும் சுதாரித்துக் கொள்கிறார்கள். "தண்டவாளத்துக்கு இந்தப் பக்கம் கிடந்தால்தான் இது எங்க கேஸ். இப்ப தண்டவாளத்துக்கு அந்தப்பக்கம்ல இருக்கு. கேஸ் எங்க லிமிட்ல வராது" என்று கூறிவிட்டு எஸ்கேப்!

அந்தப்பக்கமிருந்து இரண்டு போலீஸார் வருகிறார்கள். வந்த வேகத்தில், "ரயில்ல அடிபட்டு இந்தப்பக்கம் எகிறிவிழுந்த பாடி இது. அதனால ரயில்வே போலீஸ்தான் கேஸ் பதியணும்" என்றார்கள்!

என்ன காமெடியாக இருக்கிறதா? பத்திரிகை நிரூபராக இருந்த போது நான் துணுக்குச் செய்தியாக்கிய நிஜச் சம்பவம் இது!

"அதெல்லாம் என் வேலை இல்லே" - இந்த மனோபாவம் இது!

நம்மில் பலர் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அல்லது சொல்லித் தப்பிக்கும் வார்த்தைகள்தான் இவை!

இனி இந்த வார்த்தைகளை உபயோகிக்கும் முன் கொஞ்சம் யோசிப்பதற்காக உங்களுக்கு ஒரு சிரிப்புக் காட்டவா!

வாங்க புத்தம் புதிய ஜி போஸ்ட்டுக்கு!!

இப்பத்தான் உண்மை தெரியுது!


கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்
- அறத்துப்பால், அதிகாரம்: 12. அமைச்சியல், குறள்: 116

மனம் நடுவு நிலைமையில் இருந்து விலகி, முறையல்லாதவற்றைச் செய்ய நினைக்குமானால் ‘போச்சு, நான் கெட்டுவிடுவேன்’ என ஒருவன் பயத்தோடு அறிந்து கொள்வானாக.


ப்ப நீ நிஜமாவே அவளை லவ் பண்ணலியா மச்சான்?” - வியப்போடு கேட்டான் நண்பன். கூடவே கொஞ்சம்போல ஏமாற்றமும்!

“முட்டாள். என் லைஃப்ல நான் சந்திச்ச பெஸ்ட் ஃப்ரண்ட் அவதான். அதுபோல அவ லைஃப்ல நான். நல்ல நண்பர்களாத்தான் பழகிக்கிட்டு இருக்கோம். காதல் பண்ற ஐடியாவெல்லாம் கிடையவே கிடையாது, போதுமா?” - மிதமான புன்னகை முகத்தில் இருந்தாலும் வார்த்தைகளில் கோபத்தையே காட்டினான் அவன்.

“பார்க்கலாம்டி.. எத்தனை நாள் இப்படியே இருக்கப் போறீங்கன்னு! ஒருநாள் இல்ல ஒருநாள் என்கிட்ட வந்து ‘எங்க நட்பு இப்ப காதலா ஆகிடுச்சு’ன்னு சொல்லத்தாண்டி போறீங்க” - சாபமிட்டபடியே விலகிப் போனான் நண்பன்.

குழப்பத்தோடும் கோபத்தோடும் நண்பன் நடந்து போவதையே பார்த்துக் கொண்டு நின்றான் அவன்!

பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் இருவரும் பஸ் ஸ்டாப்பில் இருந்தார்கள்.

அவன் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளைப் படித்துவிட்டாள் அவள். பெண் புத்தி வேண்டுமானால் பின் புத்தியாக இருக்கலாம் (அடிக்க வராதீங்க தாய்க்குலங்களே.. இல்லாமலும் இருக்கலாம்!), ஆனால் முகம் பார்த்து அகம் யூகிக்கும் சாதுர்யத்தில் பெண்ணுக்கு நிகர் பெண்ணே!

“நமக்குள்ள இருக்குறது வெறும் நட்புதானா.. இல்ல காதலா?”

அந்த அதிரடியை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை! “ஹேய்.. என்னாச்சுடா உனக்கு? பைத்தியம் பிடிச்சுடுச்சா?” என்றபடியே அவன் தலையில் தட்டினாள். அவனுக்குப் பிடித்த வயலெட் கலரில் புடவை கட்டியிருந்தாள் அவள்.

“இல்ல.. நாம காதலர்கள்தான்னு காலேஜ்ல எல்லாப் பயலும் பேசிட்டான், பேசிக்கிட்டும் இருக்கான். இன்னிக்கு என்கிட்டயே தைரியமாவே ஒருத்தன் கேட்டுட்டான்”

“சரி, அதுக்கு நீ என்ன சொன்னே?” – புன்னகை மாறா முகத்துடன் கேட்டாள் அவள். நண்பனுக்குத் தான் சொன்ன பதிலை அவளிடம் சொன்னான். காற்றில் அவளது ‘வயலெட்’ படபடத்தது.

சிரித்துக்கொண்டாள்.. “சரி விடு. மத்தவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு நமக்கெதுக்கு கவலை”. படபடத்த ‘வயலெட்’ மாராப்புப் பகுதியில் விலகி விலகி, உள்ளே மறைந்திருக்கும் அழகுகளை வெளிக் காட்டியது!

‘அவளது புன்னகை ரியாக் ஷன்வேறு அவனை லேசாக கிறங்கடித்தது. அதனால்தானோ என்னவோ இதுவரை தெரியாத கோணத்தில் அவன் பார்வைக்குப் பட்டது அவளது விலகிய மாராப்பு!

அவனையும் அறியாமல் கண்கள் அங்கே நிலைகுத்தின..

“டேய்! என்ன பண்றே நீ?” - திடீரென அவளது ஸ்பீக்கர் அலறியது!. மாராப்பை வேகமாகச் சரி செய்து கொண்டாள்.

ஷாக் அடித்தது அவனுக்கு. அவன் ‘அதையே’ பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துவிட்டாள்!

“டேய் நான் உன் காதலி இல்ல, ஜஸ்ட் ஃப்ரண்டுதான். இப்படி தப்பான நோக்கத்தோட பார்க்காதே” என சீரியஸ் முகத்தோடு அதட்டினாள்.

“இல்லை. நான் பார்க்கலை. நம்பு” என்றான் வேக வேகமாக. வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள் அவள்.

மண்டை காய்ந்து போனான்!

“ஏன் சிரிக்குறே? நான் சொன்னதை நம்பலியா நீ?”

“பாதி நம்பறேன், பாதி நம்பலை” என்றாள். அவனது மண்டைக்காய்ச்சல் அதிகரித்தது!

“என்னதான் நாம நண்பர்கள்னு நமக்குத் தெரிஞ்சாலும் நம்ம உடம்புக்கு அது தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை. மனசு வேற, உடம்பு வேற! உன் உடம்பைப் பொருத்தவரை நான் ஒரு பொண்ணுதான். அதுவும் அழகான பொண்ணு. அதனாலதான் என்னோட மாராப்பு விலகுனதும் உன் மனசையும் மீறி நீ பார்த்துட்டே. ஆனா உன் பார்வை தப்பான நோக்கத்து போகலை. ‘இது தப்பு’ன்னு உன் மனசு சொன்னதை உன் உடம்பும் கேட்டுக்குச்சு. அதான் நீ பதறிப்போய் ‘நான் பார்க்கலை’ன்னு ஜகா வாங்குறே. இதான் நடந்தது. ஆக நீ பார்த்தது நிஜம், தப்பான நோக்கத்துல பார்க்கலைங்குறதும் நிஜம். மனசுக்கும் உடம்புக்குமான நடுக்கோட்டை நீ தாண்டலை! அதனால நீ ஜெண்டில்மேன்”

அவள் நீளமாகப் பேசி முடித்ததும், ‘அப்பாடா’ என நீளமாகப் பெருமூச்சு விட்டான் அவன்.

குறும்போடு தொடர்ந்தாள் அவள்.. “ஆனா என்னைப் பொருத்தவரை நீ நடுக்கோட்டை தாண்டினாக்கூட ஜெண்டில்மேன் தான்”

புரிந்தும் புரியாமலும் அவன் அவளையே பார்க்க, அவள் வெட்கத்தோடு கேட்டாள்.. “போரடிக்குதுடா நட்பு. நாம பேசாம லவ் பண்ணிடலாமா?”

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின், அதுவரை ஆண்மகன்!

முந்தைய 'காதல்பால்' இங்கே!

Wednesday, November 22, 2006

இதுதான் கடைசி! / எப்படி?எதற்கு?ஏன்?

"ச்சே! நீ இப்படி நடப்பேன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலே. இனிமே உன் சங்காத்தமே எனக்கு வேணாம்..” - கோபாவேசமாகச் சொல்லிவிட்டு வெளியேறினான் ரமேஷ்.

அவனை எரித்துப் பார்த்தபடியே சொன்னான் சுரேஷ்.. “போடி போ! கோடி ரூபா கொடுத்தாலும் உன் ஃப்ரெண்ட்ஷிப் எனக்கு வேணாம். விட்டது பீடை..”

அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மொத்தம் நாற்பது பேர். ரமேஷையும் சேர்த்து சுரேஷோடு சண்டை போட்டுப் பிரிந்து போனவர்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு!

மிச்சம் இருக்கும் முப்பத்தொன்பதாவது ஆள்.. விகேஷ் மட்டுமே!

தனியே உட்கார்ந்து யோசித்தபோது அதிர்ந்தான் சுரேஷ். தனக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் ஆறுதலாகப் பேச அந்த அலுவலகத்தில் இருப்பது விகேஷ் மட்டும்தான் என்ற உண்மையை உணர்ந்ததால் பயம் வந்தது அவனுக்கு.

விலகாத பயத்துடன் விகேஷைச் சந்திக்க ஓடினான்.

“என்னாச்சு? ஏன் இப்படி வியர்க்க விறுவிறுக்க ஓடி வர்றே?” என்று கேட்டான் விகேஷ்.

“இந்த ஆபிஸ்ல என்கூட சிரிச்சுப்பேசுற ஒரே ஒரு ஆள் நீ மட்டும்தான். ஆனா உனக்கு இங்க இருக்கும் அத்தனை பேருமே ஃப்ரெண்ட்ஸ். யாருமே உன்கூட சண்டை சச்சரவுன்னு போடுறதில்லை. அதெப்படி உனக்கு மட்டும் எல்லாருமே இணக்கமான ஆளாயிடுறாங்க? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லித்தர முடியுமா?” என்று கெஞ்சலோடு கேட்டான் சுரேஷ்.

சொன்னான் அந்த ரகசியத்தை விகேஷ். என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா?


?

?

?

?

?

?

?

“ஆரம்பத்தில் எனக்கும் உன் போல சண்டைக்குணம் இருந்தது. ஒரு கட்டத்தில் திருந்தினேன். யாருடன் பேசினாலும் ஒவ்வொருமுறையும், ‘ஒருவேளை இது நாங்கள் இருவரும் கடைசியாகப் பேசிக்கொள்ளும் வாய்ப்பாகக்கூட இருக்கலாம்’ என எனக்குள் சொல்லிக்கொள்வென். அதன் பிறகு நட்பு மட்டுமே என் வார்த்தைகளாகும்!”

Monday, November 20, 2006

நோ டென்ஷன் ப்ளீஸ்..


டென்ஷன் பார்ட்டியா நீங்கள்?
சரி, உங்கள் டென்ஷனின் அளவு என்ன?
கண்டுபிடிக்கலாம் வர்றிங்களா..

சுட்டியைச் சொடுக்கி தோன்றும் படங்களைப் பார்க்கவும்.

அனிமேஷன் மேஜிக் எதுவுமில்லை, சாதாரண இரு பரிமாணப் படங்களே. நீங்கள் பார்க்கும்போது படங்கள் ஆடி அசைந்தால் உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகவே அர்த்தம்.

லெஸ் ஆட்டம்; லெஸ் டென்ஷன்!

படங்கள் : இங்கே!

மணிரத்னத்தின் 'குரு' - நல்லவரா? கெட்டவரா?


'அச்சச்சோ! அடுத்த படமும் இந்திதானாமே? தமிழ்ல எப்ப மணியான படம் பண்ணப்போறீங்க?' - 'இந்தி'ப் படம் இந்திய இந்திய இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திக்கும் கோலிவுட்காரர்கள் பலரும் அவரிடம் இப்போது கேட்கும் கேள்வி இதுதான்.

மும்பையில் நடைபெற்ற 'குரு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட நான்கைந்து தமிழ் சினிமா விரும்பிகள் மணிரத்னத்திடம் இதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்!

'சோனி' நிறுவனம் நடத்திய விழா அது. கடந்த பல மாதங்களாக சதா உழைப்பும் உழைப்பு சார்ந்த டென்ஷனோடும் இருந்த மணி, விழாவில் கொஞ்சம் புன்னகைக்குத் திரும்பியிருந்தார். அளவோடு பேசினாலும் அழகாகச் சிரித்தார்.

'நியூ'ஸுக்கு வருவோம். எல்லோரும் கேட்பதால் கூடிய சீக்கிரமே தனது 'குரு'வை தமிழ் பேசவைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம் மணி. சந்தோஷம்.. இன்னும் திரைக்கு வராத 'குரு' படத்தின் கேரக்டர்கள் தங்களைப்பற்றி இப்போதே 'அறிமுக'த் தமிழ் பேசினால் எப்படி இருக்கும்?

இதோ இப்படித்தான்.. சொடுக்கிப் பாருங்க!

Saturday, November 18, 2006

குரங்கு திங்கிங்!/ தடாலடிப்போட்டி

போட்டிக்கான கால அவகாசம் நிறைவடைய இன்னும் 3 மணி நேரமே இருக்கிறது, அதாவது இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணி..

இந்த வார தடாலடிப்போட்டி இந்தாங்க..

கும்னு குந்திக்கிட்டிருக்குற குரங்காருக்கு ஒரு மனசு இருக்குதுன்னு வச்சுக்கங்க. அந்த மனசுல என்ன 'திங்க் பண்ணிக்கிட்டிருப்பார்ங்குறதுதான் நம்ம போட்டி!

குரங்கா மாறி (ஆஹா, மனிதனில் இருந்து குரங்குக்கு மறுபடியும்!) சிந்திச்சு 'பன்ச் கொடுங்க பார்க்கலாம்..

ஒரே ஒரு பன்ச்சுக்கு மட்டும் முதல் பரிசு. தவிர ரசிப்புக்குரிய மற்ற பல பங்களிப்புகளுக்கு ஆறுதல் பரிசு!

என்ன 'மாற' ரெடியா?

Wednesday, November 15, 2006

அப்பவே சொன்னேன்ல! / எப்படி?எதற்கு?ஏன்?

கணவன் - மனைவி இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பினார்கள். இருவருமே அலுவலகப் பணி புரிபவர்கள்.

வெளியே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது!

“மழை வரப்போகிற மாதிரி தெரியுதே. வானிலை அறிக்கைலகூட சொன்னாங்கள்ல. கொஞ்சம் பொறு, நான் போய் என் ரெய்ன் கோட்டை எடுத்துட்டு வந்துடறேன்” - கணவன்.

“ம்க்கும். இவங்க வானிலை அறிக்கைப்படி என்னிக்குத்தான் நடந்திருக்க்கு? நான் சொல்றேன், மழையெல்லாம் வராது. கோட்டு எடுக்குறதுக்காக பூட்டின வீட்டை எதுக்கு திறந்துக்கிட்டிருக்கணும். ஆபிசுக்கு நேரமாச்சு, வாங்க போயிடலாம்” – மனைவி.

பைக்கை உதைத்தான். பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்தாள் மனைவி.

வழியில்.. முன் ஜாக்கிரதையுடன் ஓரிருவர் ரெயின் கோட்டுடனேயே பைக் பயணம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னாள் மனைவி.. “ஏங்க, எதுக்கும் நீங்க ரெயின் கோட்டை எடுத்துட்டு வந்திருக்கலாம்”

மனைவியை அவளது அலுவலகத்தில் ட்ராப் செய்துவிட்டு தன் அலுவலகம் போய்ச்சேர்ந்தான் கணவன். சாப்பாட்டு நேரத்தில் இருவரும் மொபைல் போனில் பேசிக்கொண்டனர்.

“வானம் அப்படியேதான் இருக்கு. மழையக் காணோம்” – கணவன்.

“நான் அப்பவே சொன்னேன்ல. ச்சும்மா பயமுறுத்துது மேகம்” – மனைவி.

மாலையானதும் பிடித்துக் கொண்டது பெருமழை!

ஆட்டோ பிடித்து வீட்டுக்குக் கிளம்பினாள் மனைவி. மொபைல் போனில் கணவனை அழைத்தாள்..

“நான் ஆட்டோல வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்..”

“ரெயின் கோட் எடுத்துட்டு வராததால நான் ஆபீஸ்லயே மாட்டிக்கிட்டேன்”

“என்னங்க நீங்க. நான்தான் அப்பவே சொன்னேன்ல ‘நீங்க எதுக்கும் கோட்டை எடுத்துட்டு வந்திருக்கலாம்’னு”

“அடிப்பாவி! நீதானேடி வேண்டாம்னே!”

“ம்.. நானேதானே எடுத்துட்டு வந்திருக்கலாம்னும் சொன்னேன். சரி, உங்களுக்கு எங்கே போச்சு அறிவு?!”

எரிச்சலோடு போனைக் கட் பண்ணினான் கணவன்.

இந்தச் சம்பவக் கதையிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய்து என்ன என்பது தெரிகிறதா?


?


?

?

?

?

?

?

தம்பதிகளுக்கிடையே சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டுமானால் இருவரும் தவிர்க்க வேண்டிய பல பேச்சுக்களில் மிக முக்கியமானது – “ நான் அப்பவே சொன்னேன்ல..”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' இங்கே!

Tuesday, November 14, 2006

முக்கிய அறிவிப்பு

அன்பர்களே! நண்பர்களே! 'ஜி போஸ்ட்'டில் புதிய பதிவுகள் வெளியாகும்போது உடனுக்குடன் உங்களுக்குச் சொல்லப்படவேண்டுமா? இதோ இந்தச் சுட்டியை சொடுக்குங்கள்.

யானைக்கும் அடி வலிக்கும்! /காதல்பால்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
- பொருட்பால், அதிகாரம்: 60. ஊக்கம் உடைமை, குறள்: 599

பெரிய உடம்பையும் கூர்மையான கொம்புகளையும் உடையதாயினும் புலி தாக்குமானால் அச்சப்படும் யானை.

முகத்தில் வீசப்பட்ட ஃபைலில் இருந்து விசிறியடிக்கப்பட்ட காகிதங்களைப் பொறுக்கிக்கொண்டு மேனேஜரின் அறையைவிட்டு வெளியேறினார் ஹெட் க்ளார்க்!

நட்ட நடு ஹாலில் நின்று, எல்லோருக்கும் கேட்கும்படி அதே சமயம் சன்னமான குரலில் கிசுகிசுத்தார்.. “யானைக்கு மதம் பிடிச்சிடுச்சு. ஒரு அரைமணி நேரத்துக்காவது யாரும் கிட்டே நெருங்கிடாதீங்க!”

எச்சரிக்கை ரிப்போர்ட்டுக்கு எல்லோரும் உஷாரானார்கள். ‘இந்த ராட்சஸன் அறைப்பக்கம் என்னை அனுப்பிடாதே ஆண்டவா’ என மனசுக்குள் ஒரு நிமிடப் பிரார்த்தனை நடத்திக் கொண்டவர்களும் ஒரு சிலர்!

இருந்தாலும் எல்லோரையுமா காப்பாற்றிவிட முடியும் ஆண்டவனால்? அக்கவுண்டன்ட் டேபிளில் இண்டர்காம் அலறியது. மேனேஜரின் அழைப்பு.. “யோவ்.. வாய்யா இங்கே”

எல்லோரது பரிதாபப் பார்வைகளையும் அள்ளிக் கொண்டு மேனேஜரின் அறைக்குள் நடுநடு அடியெடுத்துவைத்தார் அக்கவுண்டன்ட்.

“எக்ஸ்க்யூஸ்மி சார்..”

“யோவ். உன்கிட்ட நான் என்ன சொன்னேன், நீ என்ன பண்ணியிருக்கே?!” - யானையாகப்பட்ட மேனேஜர் காட்டுக்கத்தல் போட்டார்!

“இல்ல சார்.. நீங்க சொன்னத நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போல. வேணும்னுட்டு எதும் பண்ணல”

“நிறுத்துய்யா. சுபீரியர் திட்டுனா வாங்கிக்கணும். எதிர்த்துப் பேசாதே! தொலைச்சுப்புடுவேன்”

பேச்சில் மட்டுமல்ல, நிஜத்திலும் தொலைச்சுப்புடும் ஆசாமிதான் மேனேஜர். தன்னை எதிர்த்துப் பேசியதற்காக ஒரே மாதத்தில் ஆறு பேர்களை அலுவலகத்தைவிட்டு துரத்தியடித்திருக்கிறார். முதலாளிகளுக்கு எப்போதுமே ‘ஆறு பேரை’விட இப்படிப்பட்ட ‘மேனேஜர்’கள்தானே முக்கியம்! மேனேஜர் பேச்சுக்கு மறு பேச்சு கிடைக்காது நிர்வாகத்திலிருந்து!

தொபுகடீர் என தரையில் விழுந்தார் அக்கவுண்டன்ட்.. “இனிமே இப்படி நடக்காது. மன்னிச்சுடுங்க. நான் புள்ளகுட்டிக்காரன்”

“சரி சரி போய்த்தொலைங்க” - எரிச்சலோடு சொன்னார் மேனேஜர்.

யானை புகுந்த சோளக்காடு மாதிரி கந்தலான மனசோடு வெளியேறினார் அக்கவுண்டன்ட்.

‘எவன் எவனுக்கோ எது எதுவோ நடக்குது. இவனுக்கு எதுவும் நடக்க மாட்டேங்குதே. யானைனு இவனுக்கு பேர் வச்சிருக்காங்களே, அது தப்பு. காட்டு யானைதான் சரி’ - பொங்கிப் புலம்பியபடியே தளர் நடையோடு இருக்கைக்கு வந்தார்.

நெக்ஸ்ட்..!

பதறியபடியே மேனேஜரின் அறைக்குள் புகுந்தாள் ரிசப்ஷனிஸ்ட். சும்மா சொல்லக்கூடாது பேரழகி அவள். ஆனானப்பட்ட ஆண்களெல்லாம் அவளைப் பார்த்தமாத்திரத்தில் சொக்கிப்போய் சைலண்டாகி விடுவார்கள். ஆனால் ம்ஹூம், நம்ம யானையார் மட்டும் விதிவிலக்கான ஆண்! ‘அழகி’ப்பாச்சாவெல்லாம் அவரிடம் பலிக்காது!

“என்ன ட்ரெஸ் போட்டுட்டு வந்திருக்கே நீ? இதென்ன வருஷத்துக்கு நாப்பது கோடி டர்ன் ஓவர் பண்ற ஆபிஸா, இல்ல அழகிப்போட்டி நடத்துற க்ளப்பா? உன் வயசுக்கு முழுசா போத்திக்க மனசு வராதுதான். அதுக்காக முழுசா தொறந்துடாதே! போ!”

கலங்கிய கண்களோடு வெளியே வந்தவளைப் பார்த்த அத்தனை ஆண்களுக்கும் மனசு வலித்தது! (வலிக்காதா பின்னே?!) யாராவது ஒரு வீரன் தோன்றி இந்த யானை மேனேஜரை பெண்டு கழட்ட மாட்டானா என ஏங்கினார்கள் எல்லாருமே!

அடுத்தடுத்த சில அசம்பாவிதங்களுக்குப் பிறகு வழக்கம் போலவே அன்றும் சாயந்திரமானது! எல்லோரும் அலுவலகத்தில் இருந்து ‘ஒரு நாள் கழிந்தது’ என எஸ்கேப் ஆனார்கள்.

யானையாரும் தன் வீட்டுக்குக் கிளம்பினார்.

வீட்டுக்குள் நுழையும்போதே ஒரே ஹாரனுக்கு கதவைத் திறந்துவிடாத வாட்ச்மேன் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டான்!

போர்டிகோவில் வழுக்கிக்கொண்டு நின்றது கார். சிடுசிடு முகத்தோடு இறங்கினார் அவர், மேனேஜர்.

வீட்டின் கதவு இன்னும் திறக்கப்படவில்லை. சிடுசிடு முகம் கடுகடுவானது!

‘ச்சே… யெழவெடுத்தவ! கேட் திறக்குற சத்தம் கார் நுழையுற சத்தம், கேட்டும் இன்னும் வந்து வீட்டுக் கதவைத் திறக்கலியே’ - மனைவியைச் சபித்தபடியே காலிங்பெல்லில் கைவைத்தார்.

விநாடிகள் கடந்தன.. நிமிடங்கள் குடைந்தன. காலிங்பெல்லை திரும்பத் திரும்ப அழுத்திக்கொண்டே இருந்தார் அவர். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துச் சிதறின.

திடும் எனத் திறந்தது கதவு!

கலைந்த தூக்கத்தோடும் கலையாத கோபத்தோடும் கதவுக்குப் பின் நின்றாள் மிஸஸ் யானை! அடிபட்ட புலியாக கர்ஜித்தாள்.. “யோவ்வ்வ்! கையை வச்சுக்கிட்டு சும்மா நிற்க முடியாதா. மனுஷி நடந்து வரவேணாமா? துரை வெட்டி முறிச்சுட்டு வீடு வந்துட்டாருங்குறதுக்காக மாடில இருந்து பறந்தா வர முடியும்”

சர்வமும் அடங்கி சைலண்டாகி இருந்தார் மேனேஜரானையார்!

“இல்லம்மா... அது.. வந்து..”


பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின், கேளாய் காதலா!

முந்தைய 'காதல்பால்' இங்கே!

Monday, November 13, 2006

வாழ்த்துக்கள் வலைப்பதிவாளர்களே!

ஏற்கெனவே நான் அறிவித்திருந்தபடி 'மழை'ப்போட்டி, அதாவது லேட்டஸ்ட் தடாலடிப்போட்டியில் இரண்டாம் சுற்றில் தேர்வான ஒன்பது பங்களிப்புகளும் இந்த வார குங்குமம் வார இதழில் பிரசுரமாகியுள்ளன!

தவிர, இந்த வார குங்குமத்தில் அட்டைப்படக் கட்டுரையின் நாயகனும் நமது வலலபதிவாளர்களில் ஒருவரே! அவர்.. பழூர் கார்த்தி. பூனாவில் நடைபெற்ற 'சிவாஜி' படத்தின் படப்பிடிப்பை பிரத்தியேக படங்களுடன் நெரடி ரிப்போர்ட் செய்திருக்கிறார் கார்த்தி.

இதழ் இப்போது கடைகளில் விற்பனைக்கு!

வாழ்த்துக்கள் வலைப்பதிவாளர்களே..

மறக்க 'முடியாதது'!


“உண்மையிலேயே தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒண் எது? சொல்லு பார்க்கலாம்?”- கேட்டது வேதாளம்!

பதில் சொல்ல முடியாமல் கெக்கே பிக்கே என விழித்தான் விக்ரமாதித்தன்!!

இப்படி ஒரு ஜோக் ‘கல்கி’யில் படித்து ரசித்துச் சிரித்திருக்கிறேன் நான். ஆக.. உண்மையில் எது நம்பர் ஒண் என்பதை விளக்கப் போகிறேனாக்கும் இங்கே என எண்ணிவிடாதீர்கள். ரசிப்புக்குரிய அந்தக் குழப்பம் அப்படியே இருக்கட்டும். இந்தக் கட்டுரையின் நோக்கம் வேறு.

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம்.. இந்த மூன்று நம்பர் ஒண் வார இதழ்களிலும் முழுநேரப் பணியாற்றிய வெகு வெகு வெகு சிலரில் நானும் ஒருவன்.

ஆமாம், குமுதத்திலும் கொஞ்ச காலம் நான் குப்பை கூட்டியிருக்கிறேன். அல்லது குப்பை கொட்டியிருக்கிறேன்!

எங்கெங்கோ சுற்றியடித்து கடைசியில் சொந்தமாக தொழில் நடத்தி தடுமாறியது வரையிலான என் சொந்தக் கதையை ஏற்கெனவே (ஒரு நண்பனின் நிஜம் இது!) பகிர்ந்து கொண்டிருக்கிறேன் உங்களிடம். சில நாட்களுக்கு முன் நான் எழுதிய ஒரு குட்டிக் கதை ‘தப்பிச்சுக்கோ’. சொந்தத் தொழில் நஷ்டகரமாகப் போய்க்கொண்டிருந்தபோது எனக்கு நான் சொல்லிக்கொண்ட வார்த்தைதான் அது!

'தப்பித்த' நான் போன இடம் ‘குமுதம்’. What to do மட்டுமல்ல, What not to do என்பதையும் அங்கே நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். பொருத்திப் பார்க்கும் நேரம் வரும்போது ஒவ்வொன்றாக எடுத்துவிடுகிறேன். இப்போது குமுதம் அலுவலகத்துக்குள் நான் அடியெடுத்து வைத்த முதல் நாளில் நடந்த ஒரு சம்பவம்..

சம்பிரதாயக் கைகுலுக்கள்கள் எல்லாம் முடிந்தபிறகு பக்கத்து இருக்கைத் தோழனிடம் நான் கேட்ட முதல் கேள்வி..

“லைப்ரரி எங்கே இருக்கு?”

குமுதத்தின் நிறுவன ஆசிரியரான அமரர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டதுண்டு.

பள்ளிக்காலத்தில் எனக்கு படிக்கக் கிடைத்த முதல் வார இதழ் (முத்து காமிக்ஸ், பூந்தளிர், இன்ன பிற பொடிசுகள் ஸ்பெஷல் தவிர) குமுதம்தான். பக்கத்துவீட்டு அக்கா காசு கொடுத்து கடையில் வாங்கி வரச் சொல்வார்கள்.வாங்கியதும் வீட்டுக்கு வந்துவிடமாட்டேன். வழியிலேயே எங்காவது ஒதுங்கிவிடுவேன்.

நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள். அரைமணி நேரத்திலேயே ஏறக்குறைய எல்லா பக்கங்களையும் படித்து விடுவேன்!வீட்டுக்குப் போனால் படிக்க முடியாதே. அம்மா கண்ணில் பட்டால் அம்புட்டுதான்! ‘முளைச்சு மூணு இலை விடலே, உனக்கு குமுதம் படிக்கச் சொல்லுதோ?’ என ரவுண்டு கட்டிடுவாங்க. காரணம்.. அப்போது நான் ஏழாவதுதான் படித்துக் கொண்டிருந்தேன்!

‘சிவாஜியால் சண்டைக் காட்சிக்காக காலைத்தூக்க முடியவில்லை. தொப்பை பிரச்னை’, ‘சில்க் ஸ்மிதா கடித்து வைத்த எச்சில் ஆப்பிள் ஏலம் போனது’, ஜெயலலிதாவின் நெஞ்சில் ஒரு கனல்.. இப்படி அந்தக் கால குமுதத்தில் படித்ததெல்லாம் இப்போது நினைவில் இருக்கிறது.

அதே குமுதத்தில் நானும் ஒருநாள் வேலை பார்ப்பேன் என அந்த அரை டிராயர் காலத்தில் நான் கொஞ்சமும் நினைத்ததில்லை!சில சமயம் இப்படித்தான் நினைக்காதவையும் வாழ்க்கையில் நடந்துவிடலாம்!

“லைப்ரரி எங்கே இருக்கு?”

“சரி வா”

அழைத்துக் கொண்டு போனான் பக்கத்து இருக்கைத் தோழன். நல்ல விசாலமான நூலகம்.

இந்த இடத்தில் ஒரு இடைச்செருகல்.. மூன்று நம்பர் ஒண் பத்திரிகைகளிலும் இப்படி ஒரு பக்காவான நூலகம் பராமரிப்பது குமுதத்தில் மட்டுமே! புத்தக மதிப்புரைக்காக வரும் ஒவ்வொரு நூலையும் தவறவிட்டுவிடாமல் நூலகத்தில் அடுக்கிவிடுவார்கள்.எஸ்.ஏ.பி. காலத்திலேயே இந்த பராமரிப்பு ஆரம்பமாகியது என்பார்கள். அவர் ஒரு நல்ல படிப்பாளியும் கூட.

“இவர் நம்ப ஜோதில புதுசா கலந்திருக்கார். இன்னிக்குதான் ட்யூட்டில சேர்ந்திருக்கார். லைப்ரரி கார்டு போட்ருங்கோ. நான் ஜவாப்தாரி கையெழுத்து போட்டுத் தர்றேன்” என என்னை நூலகரிடம் அறிமுகப் படுத்திவிட்டுப் போனான் நண்பன்.

மிலிடரி மிடுக்கோடு இருந்தார் நூலகர். வயதில் பழம்! அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்கவேண்டும். கேட்டதும், “ஆமாம், கன்னிமரா லைப்ரரியில் பணிபுரிந்தவன்” என்றார்.

“செக் ஷன் வாரியாக புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். நீங்க பாருங்க. ஹெல்ப் வேணும்னா கேளுங்க” என்றும் சொன்னார்.

“டிக் ஷ்னரி எங்கே இருக்கு?” என்று கேட்டேன்.அவருக்கு சரியாக கேட்கவில்லையோ அல்லது சந்தேகமோ தெரியவில்லை. இன்னொருமுறை கேட்டு உறுதி செய்து கொண்டார்.

தனியே இருந்த ஒரு கண்ணாடி அலமாரியியைக் காட்டினார்.சிறிதும் பெரிதுமாக பத்துக்கும் மேற்பட்ட டிக் ஷ்னரிகள் இருந்தன.

பழசு பட்டுப் போயிருந்த நான்கைந்து அகராதிகளை மொத்தமாக அள்ளிக் கொண்டேன்.டேபிளுக்கு கொண்டு போனேன்.

அதற்குமேல் பரபரப்பைத் தாங்க முடியவில்லை. வேக வேகமாக முதல் அகராதியை விரித்தேன். பக்கங்களைப் புரட்டினேன்.

அட ஆமாம்! அந்தப் பக்கத்தைக் காணோம்!

அடுத்த அகராதியை புரட்டினேன். அட அதிலும் காணோம்!

அத்தனை அகராதிகளிலும் அந்தப் பக்கத்தைக் காணவே காணோம்!

அந்த ஒரு பக்கம் மட்டும் கிழிக்கப்பட்ட தடம் இருந்தது!!

எப்போதோ கேள்விப்பட்ட சேதிதான் என்றாலும் அனுபவித்துப் பார்க்க்கும்போது பரவசம் ஏற்பட்டதென்னவோ உண்மையே!

அந்தச் சேதி.. ‘எஸ்.ஏ.பி.க்கு இங்கிலீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை IMPOSSIBLE. அகராதிகளில் அந்த வார்த்தை இருக்கும் பக்கத்தை கிழித்துவிடுவார் அதை வாங்கியதுமே!’

முந்தைய 'எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!' : இங்கே!

அதற்கு முந்தையவை: இங்கே!

Thursday, November 09, 2006

'மழை'ப்போட்டி இறுதி முடிவுகள்


luckylook said...
"எத்தினி வாட்டி சொன்னேன். கேட்டியா? இப்போ பாரு என்னாச்சின்னு"

"நான் எப்பவோ பண்ணுனதுக்கு இப்போ ஏம்மா திட்டுறே"

"எப்பவோ பண்ணாலும் அவஸ்தை இப்போ தானேடி"

"அம்மா... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க... நான் செஞ்சது தப்பு தான்"

"இதே தப்பை உனக்கு பொறக்கப் போறதும் செஞ்சுத் தொலைக்கப் போவுது... கவனமா இரு"

"சரிம்மா"

"சனியனே.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். அரிசி தின்னாதே... அரிசி தின்னாதேன்னு... இப்போ பாரு தாலி கட்டுற நேரத்துக்கு கூட மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வர முடியலை"

வெளியே செம மழை!

லக்கிலுக் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பேசப்படுவதை அழகாக கதையாக்கி இருக்கிறீர்கள்! இருப்பினும் மூட நம்பிக்கைக்கு கொடி பிடிப்பதால் உங்களுக்கு(ம்) இரண்டாவது பரிசுதான்! (ம்'க்குக் காரணம் இன்னும் இருவரும் இரண்டாவது பரிசைப் பங்கு போட்டுக் கொள்கிறார்).

SP.VR.SUBBIAH said...
உன்வீடு போனாலென்ன
என்வீடு போனாலென்ன
மழைநீருக்கோ இடம் வேண்டும்!

அடித்த பண மழையில்
ஏரி, குளங்களெல்லாம்
குடியிருப்பானது!

இப்போது குடியிருப்புகளெல்லாம்
குளங்களாகிவிட்டன
அவ்வப்போது அடிக்கும் மழையால்!

பதிலுக்குப் பதில்
உனக்கு மட்டும்தான் தெரியுமா?
இல்லை-
இயற்கைக்கும் அது தெரியும்!

ஐயா, மழை என முடியுமாறு கொடுக்கப்பட்ட வரையறைக்குள் வராவிட்டாலும் எடுத்துக் கொண்ட சேதிக்காக உங்களுக்கு ஆறுதல் பரிசு!

கார்த்திக் பிரபு said...
இரவில் மின்சாரம் தடைபடும்
கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிடும்த
வளைகள் பாம்புகளை வம்புக்கிழுக்கும்
குழந்தைகள் அழுகுரல் ஓயாது ஒலிக்கும்
தூங்கிப் போன பின்னரவில்
திடீரென வரும் மின்சாரம்
முழிப்பு தட்டிய நிமிடங்களில்
நீர்ச் சொட்டும் ஜன்னல்களின் வழியே
தெருவை பார்க்கும் போது
யாருமில்லாமம் தனியே பெய்துக் கொண்டிருக்கும் மழை!

வாழ்த்துக்கள் கார்த்திக், இரண்டாம் பரிசுக்குரிய மூன்று படைப்பாளிகளில் நீங்களும் ஒருவர்! இன்னும் கொஞ்சம் கைவைத்திருந்தால் மிக மிக அருமையாக வந்திருக்கும்!

TAMIZI said...
நனையாத சூரியன் !!
நல்லவரா! கெட்டவரா? இந்த மழை!?

தமிழி! படிச்சதும் பளிச்னு பிடிச்சுப்போச்சு. ஆனாலும் ஏதோ ஒண்ணு உதைக்குது. (சில சமயம் ஏன் எதுக்குனு விவரம் சொல்லாம மனசுக்கு ஏதோ தோணும்ல, அப்படி!) அதனால் உங்களுக்கு(ம்) இரண்டாம் பரிசு!

luckylook said...
மாரி மாரி
அடிக்குது மாரி
இன்னிக்காவது குளிடா
சோமாரி!

மன்னிக்கவும் லக்கிலுக்! மழை என முடியுமாறு கொடுக்கப்பட்ட வரையறைக்குள் வராவிட்டாலும் வார்த்தை விளையாட்டு பிடித்ததால் பத்தில் ஒன்றாக செமி ஃபைனலுக்கு தேர்ந்தெடுத்தேன். ஆனால் 'மாரி மாறி' குழப்பம் இருப்பதால் (நன்றி ஜி.ராகவன்) ஃபைனலுக்கு நஹி! ஆனாலும் ஆறுதல் பரிசு உண்டு! ஏன்னா மெய்யாலுமே எனக்குப் புட்ச அய்ட்டம்ல இதும் ஒண்ணு, அக்காங்!

Kowsalya said...
நீ நகர்ந்த பின்னும் நீங்காத
உன் வாசம் போல்
மேகம் நகர்ந்த பின்னும் மரத்தடியில்
பெய்கிறது மழை!

கலக்கிட்டிங்க கௌசல்யா. முதல் பரிசுக்குரிய இரண்டு படைப்புகளில் உங்களோடதும் ஒண்ணு. வாழ்த்துக்கள்!

Kowsalya said...
ஆண் - கோபம் - வெய்யில்
பெண் - அழுகை - மழை

நச்னு இருக்கு கௌசல்யா. முதல் பரிசு வாங்கிய இரண்டு படைப்புகளில் உங்களோடதும் ஒண்ணு என்பதால் இதுக்கு ஆறுதல் பரிசு!

sivagnanamji(#16342789) said...
விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்
பெண்ணல்ல........
மழை!

ஐயா சிவஞானம் அவர்களே! இன்னும் இளமையாவே வச்சிருக்கிங்க உங்க
கற்பனைகளையும் எழுத்துக்களையும்! முதல் பரிசுக்குரிய இரண்டு படைப்புகளில் இதுவும் ஒன்று! வாழ்த்துக்கள்!

அருட்பெருங்கோ said...
விடிந்தும் விடியாத இன்றைய அதிகாலைப் பொழுது.
இரவு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த என்னறை மின்விசிறி மெல்லத் தன் சுழற்சியை நிறுத்தியது.
எப்போதும் அதன் "விர்ர்ர்ர்ர்ர்ர்" சத்தத்திற்குப் பழகிப் போன என் தூக்கம் மெல்லக் கலைகிறது.
எங்கும் மின்சாரம் இல்லாததால் ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.
மெல்ல எழுந்து கதவைத் திறந்து பால்கனி செல்கிறேன்.
குளிர்ச்சி உடல் முழுவதும் படர்கிறது.வெளியே மழை!
அது, சட சட வெனப் பொழியும் பேய் மழையும் இல்லை.
இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் இல்லை.
காற்றோடு போராடி சுழன்றடிக்கும் புயல் மழையும் இல்லை.

எங்கே நிலத்துக்கு வலிக்குமோ என வானத்தில் இருந்து மெது மெதுவாய் இறங்கும் காதல் மழை!.

கொஞ்ச நேரம் கண்மூடி மழையை செவிக்குள் சேமிக்கிறேன்.
குளிர் தாங்காமல் மீண்டும் வந்து படுத்துக்கொள்கிறேன்.
தூங்கினேனா, இல்லைப் படுத்தேக் கிடந்திருந்தேனாத் தெரியவில்லை.
மறுபடியும் எழுந்து பார்த்தபோது அறைத்தோழர்கள் எல்லாம் அலுவலகம் போயிருக்க, மழை மட்டும் எனக்காகக் காத்திருந்தது.

அருட்பெருங்கோ அவர்களே! அட்டகாசமான முயற்சி இது. ஆனால் 'பசு மாட்டைக் கொண்டு போய் பனை மரத்தில் கட்டுவதை'க் கட் பண்ணிவிட்டு உங்கள் படைப்பைச் 'சிறு'க்கிச் சுருக்கிப் பார்த்தேன். (தப்புன்னா மன்னிச்சுக்கோங்க!). இப்போது மழை என முடியுமாறு கொடுக்கப்பட்ட வரையறைக்குள் வராததால் கற்பனை நயத்துக்காக உங்களுக்கு ஆறுதல் பரிசு!

சென்ஷி said...
\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ .............................மழை!

சென்ஷி! செமை ஃபைனலுக்கு நான் தேர்ந்தெடுத்தாலும் ஃபைனலில் குங்குமம் ஆசிரியர் குழு வடிகட்டிவிட்டதால் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

குங்குமம் ஆசிரியர் குழு இங்கு எதற்கு வருகிறது என்கிறீர்களா? அடுத்தவார குங்குமத்தில் பரிசுக்குரிய மற்றும் ஆறுதல் பரிசுக்குரிய படைப்புகள் பிரசுரமாகின்றன. அதுதான் ஆறுதல் பரிசு!

அப்போ பரிசு? சட்னு தோணலைங்க! இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுங்க, திரும்ப வந்து சொல்றேன்!
அல்லது யாராச்சும் என்ன பரிசு கொடுக்கலாம்னு ஐடியா கொடுங்க நண்பர்களே..

மறுபடியும் ஒருமுறை போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவது உங்கள் நண்பன் ஜி.கௌதம்.. கௌதம்.. தம்.. ம்..

Wednesday, November 08, 2006

'மழை'ப்போட்டி முடிவுகள்..


போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!

இதோ முதல் கட்டத்தேர்வில் அடிச்சு வந்த படைப்புகள் பத்து இங்கே!

பத்திலிருந்து பரிசுக்குரிய இரண்டு நாளை காலையில்.

தொ..ட..ரு..ம்!

luckylook said...
"எத்தினி வாட்டி சொன்னேன். கேட்டியா? இப்போ பாரு என்னாச்சின்னு""நான் எப்பவோ பண்ணுனதுக்கு இப்போ ஏம்மா திட்டுறே""எப்பவோ பண்ணாலும் அவஸ்தை இப்போ தானேடி""அம்மா... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க... நான் செஞ்சது தப்பு தான்""இதே தப்பை உனக்கு பொறக்கப் போறதும் செஞ்சுத் தொலைக்கப் போவுது... கவனமா இரு""சரிம்மா""சனியனே.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். அரிசி தின்னாதே... அரிசி தின்னாதேன்னு... இப்போ பாரு தாலி கட்டுற நேரத்துக்கு கூட மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வர முடியலை"---- வெளியே செம மழை.....

SP.VR.SUBBIAH said...
உன்வீடு போனாலென்னஎன்வீடு போனாலென்னமழைநீருக்கோ இடம் வேண்டும்!அடித்த பண மழையில்ஏரி, குளங்களெல்லாம்குடியிருப்பானது!இப்போது குடியிருப்புகளெல்லாம்குளங்களாகிவிட்டனஅவ்வப்போது அடிக்கும் மழையால்!பதிலுக்குப் பதில்உனக்கு மட்டும்தான் தெரியுமா?இல்லை-இயற்கைக்கும் அது தெரியும்!

கார்த்திக் பிரபு said...
இரவில் மின்சாரம் தடைபடும்கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிடும்தவளைகள் பாம்புகளை வம்புக்கிழுக்கும்குழந்தைகள் அழுகுரல் ஓயாது ஒலிக்கும்தூங்கிப் போன பின்னரவில்திடீரென வரும் மின்சாரம்முழிப்பு தட்டிய நிமிடங்களில்நீர்ச் சொட்டும் ஜன்னல்களின் வழியேதெருவை பார்க்கும் போதுயாருமில்லாமம் தனியே பெய்துக் கொண்டிருக்கும் மழை

TAMIZI said...
நனையாத சூரியன் !!நல்லவரா! கெட்டவரா? இந்த மழை!?

luckylook said...
மாரி மாரிஅடிக்குது மாரிஇன்னிக்காவது குளிடாசோமாரி(குறிப்பு : மாரி என்றாலும் மழை என்றே பொருள். மாரி என இந்த மரபுக் கவிதையை முடித்திருப்பதால் இதையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்)

Kowsalya said...
நீ நகர்ந்த பின்னும் நீங்காத உன் வாசம் போல்மேகம் நகர்ந்த பின்னும் மரத்தடியில்பெய்கிறது மழை

Kowsalya said...
ஆண் - கோபம் - வெய்யில்பெண் - அழுகை – மழை

சென்ஷி said...
\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ \ \ \ \ \ \ \ \ .................................................மழை.

sivagnanamji(#16342789) said...
விரும்பி வேண்டுகையில்விலகிப் போவதுவும்வெறுத்து ஒதுக்குகையில்வீம்பாய்க் கொட்டுவதும்பெண்ணல்ல........மழை!

அருட்பெருங்கோ said...
மழை - ஓர் அனுபவம்!!!விடிந்தும் விடியாத இன்றைய அதிகாலைப் பொழுது.இரவு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த என்னறை மின்விசிறி மெல்லத் தன் சுழற்சியை நிறுத்தியது.எப்போதும் அதன் “விர்ர்ர்ர்ர்ர்ர்” சத்தத்திற்குப் பழகிப் போன என் தூக்கம் மெல்லக் கலைகிறது.அணைத்துக் கொண்டு படுத்திருந்தக் காதலைக் கொஞ்சம் தள்ளி விட்டு போர்வையை விலக்கி பார்க்கிறேன்.முழுவதுமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது மின்விசிறி.எங்கும் மின்சாரம் இல்லாததால் ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.அப்போது கொஞ்சம் கொஞ்சமாக காதுக்குள் ஒரு மெல்லிய இசை நுழையப் பார்க்கிறது.“சில்…சில்…சில்…”நானும், நன்றாக உற்றுக் கேட்கிறேன்.ஒன்றும் பிடிபடவில்லை.பிறகு,மெல்ல எழுந்து கதவைத் திறந்து பால்கனி செல்கிறேன்.அங்கு,ஒரு குளிர்ச்சி உடல் முழுவதும் படர்கிறது.வெளியே மழை!அது, சட சட வெனப் பொழியும் பேய் மழையும் இல்லை.இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் இல்லை.காற்றோடு போராடி சுழன்றடிக்கும் புயல் மழையும் இல்லை.எங்கே நிலத்துக்கு வலிக்குமோ என வானத்தில் இருந்து மெது மெதுவாய் இறங்கும் காதல் மழை!.கொஞ்ச நேரம் கண்மூடி மழையை செவிக்குள் சேமிக்கிறேன்.குளிர் தாங்காமல் மீண்டும் வந்து படுத்துக்கொள்கிறேன்.தூங்கினேனா, இல்லைப் படுத்தேக் கிடந்திருந்தேனாத் தெரியவில்லை.மறுபடியும் எழுந்து பார்த்தபோது அறைத்தோழர்கள் எல்லாம் அலுவலகம் போயிருக்க, மழை மட்டும் எனக்காகக் காத்திருந்தது.காதலுக்கு ஏற்ற அந்த ரம்மிய நேரத்தில் பால்கனியில் அமர்ந்து காதல் பயணத்தின் ஒன்பதாவது பகுதியை எழுதுகிறேன்.முடித்தவுடன் மழை நின்றது.குளித்துக் கிளம்பி அலுவலகத்தை இணைக்கும் அந்த முக்கியசாலைக்கு வந்து சேர்கிறேன்.அந்த இடத்தில் இருந்து அலுவலகத்துக்கு எப்போதும் ஆட்டோவில் செல்லும் நான் , இன்று மட்டும் ஏன் நடந்தே வந்தேன் என்று இப்போது கூட எனக்குத் தெரியாது!எல்லோரும் கார்களில் வழுக்கிக் கொண்டு செல்லும் அந்த சாலையில் நான் மட்டும் காதலில் வழுக்கிக் கொண்டு செல்கிறேன்.அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டு திரும்பி வெளியே எட்டிப்பார்க்கிறேன், மறுபடியும் ஆரம்பித்து இருந்தது மழை!

Thaடாlaடி போட்டி!


யார் சொன்னது நம்ம 'தடாலடி போட்டி'ன்னா அது வெள்ளிக்கிழமைதான் இருக்கும்னு?!

இங்கே சென்னையில் மழை. அதான் டாபிகலா போட்டியப் போட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டேன். தோ.. வந்துட்டேன்!

என்னை வெளியே போகவிடாமல் இருக்கையிலேயே கட்டிப்போட்டிருக்கும் சென்னை மழை எப்ப முடியும்னு தெரியல. நீங்க 'மழை' என்று முடியும்படியாக எதையாவது எழுதுங்கள். அது கவிதை, குட்டிக்கதை, ஜோக்கு, கடி, கமெண்ட்.. எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.

ஆனா என் பரிசு ரெண்டு பேருக்கு மட்டுமே. என்ன பரிசுன்னு இப்ப முடிவு பண்ணல. (நிச்சயமா குடை இல்லிங்கோ) போட்டிக்கான அவகாச நேரம் 8.11.2006 இந்திய நேரப்படி மாலை 5 மணி வரை. அதுக்குள்ள என்ன பரிசுங்குற முடிவோட வந்துடறேன் வலை மக்களே!

போட்டி முடிவுகள்: இங்கே!

Tuesday, November 07, 2006

ஆச்சர்ய அதிர்ச்சி!

இந்தியன் ஆர்மியில் வருடத்துக்கு சுமார் நூறு தற்கொலைகள் நடக்கின்றன! ஆச்சர்ய அதிர்ச்சியாக இருக்கிறதா.. ராய்டர் தரும் செய்திக் குறிப்பைப் பாருங்கள்!!

Indian Army suffers 100 suicides a year

ReutersPosted online: Saturday, November 04, 2006 at 2016 hours ISTSrinagar, November 4:

At least 100 Indian soldiers are committing suicide every year and are mainly those fighting militants in Kashmir and the northeastern states, according to India's Army chief.

Dozens of soldiers, including officers, have also been killed by their colleagues in Kashmir. Early this week a soldier shot dead an officer at an army camp in Srinagar in the fourth such incident in little more than a week.

"On average we have been having about 100 suicide cases a year in the past four to five years, so this year has been the same," General J J Singh said in Srinagar on Friday.

"Mainly it (suicide) is in such (insurgency-hit) areas, but they are also happening in areas where there is no insurgency," local newspapers reported him as saying on Saturday.

நினைத்தால் சுடும்! /எப்படி?எதற்கு?ஏன்?


சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினான் ஒருவன். கடுமையான தவம் புரிந்து கடவுளைக் கண்டான்!

“பக்தா உன் தவத்தை மெச்சினோம். என்ன வேண்டும் கேள்” என்றார் கடவுள்.

“எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் அவரது மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அறியும் சக்தி எனக்கு வேண்டும்” என்றான் பக்தன்.

“தந்தேன் போ” எனச் சொல்லிவிட்டு மறைந்தார் இறைவன்.

வீட்டை நோக்கி நடந்தான் பக்தன். வழியில் எதிர்ப்பட்ட நண்பன், “என்னாச்சு உனக்கு? ரொம்ப நாளா ஆளையே காணோமே! என்னமோ ஏதோன்னு நான் பயந்துட்டேன்!” என்றான். ‘நீ இன்னும் சாகலியா? ஊருக்கும் உறவுக்கும் பயன்படாத உனக்கெல்லாம் உயிர் ஒரு கேடா?’ என அவனது மனம் கேட்டதையும் அறிந்தான் பக்தன். கோபத்தோடு அவனைவிட்டு விலகி நடந்தான்.

வீடு எதிர்ப்பட்டது. நுழைந்தான். ஓடிவந்து கட்டிக் கொண்டாள் மனைவி. “உங்களைத் தேடாத நாளில்லை. நல்லவேளை நான் கும்பிட்ட தெய்வமெல்லாம் என்னைக் கைவிடலை. நீங்க எனக்கு திரும்பக் கிடைச்சுட்டீங்க!” என்றாள் மனைவி. அவள் மனமோ, ‘அடப்பாவி. நீ திரும்ப வரவே மாட்டேன்னு நினைச்சு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சுட்டேனே. உசுரோட வந்து நிக்கிறியே’ என்றது.

கலங்கி விட்டான் பக்தன். அன்று இரவே மறுபடியும் வீட்டைவிட்டு வெளியேறினான். மறுபடியும் கடுந்தவம். மறுபடியும் கடவுள் தோன்றினார்.

“பக்தா மறுபடியும் உன் தவத்தை மெச்சினோம். என்ன வேண்டும் கேள்” என்றார். ‘அடச்சே! அதே லொள்ளுப் பார்ட்டியா? மறுபடியும் வந்துட்டியா? உன்கூட ஒரே பேஜாராப் போச்சு போ! சரிசரி, என்ன வரம் வேணும்னு சீக்கிரம் கேட்டுத்தொலை’ என்றது கடவுளின் மனம்!

நொறுங்கிப் போனான் பக்தன். அவன் என்ன வரம் கேட்டிருப்பான்?


?

?

?

?

?

?

?

“எதிரே இருப்பவர் தன் மனதில் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் இவ்வுலகில் யாரோடு யாருமே நட்பாக இருக்கமுடியாது என்ற உலக உண்மையை உணர்ந்து கொண்டேன் இறைவா. எனக்கு நீங்கள் கொடுத்த பழைய வரத்தை கேன்சல் செய்துவிடுங்கள் உடனடியாக!” என்றான் பக்தன்.

முந்தைய 'எப்படி?எதற்கு?ஏன்?'

Monday, November 06, 2006

சிக்னல் கிடைச்சாச்சு! / காதல்பால்


மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்

- பொருட்பால், அதிகாரம்: 70. அமைச்சியல், குறள்: 692

மன்னர் விரும்பும் பொருளை தான் விரும்பாத ஒருவனுக்கு அம்மன்னரால் நிலையான செல்வம் வந்து சேரும்.

ன்னும் பஸ் வந்துசேரவில்லை. எரிச்சல் ஒவ்வொரு நிமிடமும் கூடிக்கொண்டே போனது அவனுக்கு.

‘ச்சே! இன்னிக்குன்னு பார்த்து சதி பண்றானே இந்த பஸ்காரன்!’ அலுத்துக் கொண்டே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்பதாவது முறையாக பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் வாட்சைப் பார்த்துக் கொண்டான்.

எவனோ ஒருவன் தன்னை உற்று உற்றுப் பார்க்கிறானே என மிரண்டுபோன அந்தப் பெண்ணும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்பதாவது முறையாக அவனை முறைத்துக் கொண்டாள்!

முறைப்பைப் பொருட்படுத்தும் மனநிலையில் அவன் இல்லை. ‘அம்மா தாயே, நான் இன்னிக்கு வாட்ச் கட்ட மறந்துட்டேன். அதான் உன் கையைப் பார்க்குறேன். கையை மட்டும்தான் பார்க்குறேன்’ என்றெல்லாம் அவளிடம் விளக்கம் சொல்லத் தோனவில்லை அவனுக்கு. காரணம்.. தேர்வு நேரப் பதட்டம்!

இந்த செமஸ்டரின் முதல் தேர்வு. விடியவிடிய விழித்திருந்து படித்தான். வாசலுக்கு வந்து விழுந்த பால் பாக்கெட்டை எடுத்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிட்டுத்தான் அவனையுமறியாமல் கண் அசந்தான். தடாலென உணர்வு வந்து, தடதடாலென கிளம்பி, தடதடதடாலென பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்தால்.. பஸ்ஸைக்காணோம்! எரிச்சல் கோபமாக மாறி, மாறிமாறி நகம் கடித்துத் துப்பலானான்.

நல்லவேளை, அவன் தன் விரலைக் கடித்துத் துப்புவதற்குள் பஸ் வந்துவிட்டது!

‘உட்கார ஒரு இடம் கிடைத்தால் தேவலை’ என்ற நினைப்போடு படியேறினான். விடிய விடியப் படித்ததை ஒரு தரம் வேகமாக திருப்பிப் பார்த்துக் கொள்ள விரும்பினான்.

அந்த ‘ஒரு இடமும்’ அவன் தன் மீது உட்காருவதில் விருப்பமாகத்தான் இருந்தது போல. ஒரே ஒரு ஸீட் மட்டுமே காலியாக இருந்தது. ஓடிப்போய் உட்கார்ந்தான்.

முட்டி மோதிக்கொண்டு அவனுடனேயே பஸ்ஸுக்குள் ஏறிய மற்ற பலரில் அந்த ஒற்றை இருக்கையைக் குறிவைத்து ஓடிவந்த ஒருசிலர் ஏமாந்துபோய் விலகி நின்றார்கள். ‘ச்சே’ கொட்டியபடி அருகே வந்து நின்றாள் ஒரு பெண். நிமிர்ந்து முகம் பார்த்தான் அவன். ‘முறை’த்தாள். அதே கடிகாரப் பெண்!

‘அட! எவ்வளவு அழகாக இருக்கிறாள்?’ என அப்போதுதான் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

‘அடச்சீ! அரைமணி நேரமா உன் பக்கத்துலதானே நின்று கொண்டிருந்தாள். அப்ப இவள் அழகை ரசிக்காம விட்டுட்டு இப்ப வழியுறியே!’ என்றது அவனது மனசாட்சி.

‘அப்ப பஸ் வரலேன்னு டென்ஷன்ல இருந்தேன். அதான்பா அழகை ரசிக்க முடியலே’ என்றான் மனதுக்குள் மனசாட்சியிடம்.

‘உன் ரசனை இருக்கட்டும், அங்கே பார்.. எப்படியாவது உட்கார்ந்துவிடலாம் என்ற பெரிய நம்பிக்கையோடு இருந்திருப்பாள் போலும். முகம் வாடிவிட்டாள்! பார்.. அவளும் உன்னைப்போல் கல்லூரி மாணவிதான். கையில் புத்தகம் வைத்திருக்கிறாள்’ - இது மனசாட்சி.

‘ஆமாம். ஆனால் இவ எங்க காலேஜ்ல படிக்கலியே. இத்தனை நாளா இவளை இந்த பஸ்ல பார்த்ததும் இல்லியே’ - இது அவன்.

‘ம்க்கும். ஒருவேளை இவ உங்க காலேஜுக்கு புதுசா வந்திருக்கும் லெக்சரரா இருப்பாளோ?’ - ‘வல்லவன்’ சிம்பு போல வம்பு செய்தது மனசாட்சி. ‘இருக்காது.

படிப்பதற்காக புத்தகத்தை விரித்தான். ஆனால் மனமும் மனசாட்சியும் புத்தக எழுத்துக்களில் அவன் பயணிப்பதை அனுமதிக்கவில்லை. ‘அவளைப்பார்! அவள் வாடிய முகத்தைப்பார்’ என்று அவனை மிரட்டி அடித்தன!

ஐந்து நிமிடங்கள் தாக்குப்பிடித்திருப்பான், அதற்கு மேல் ம்ஹூம்!

“எக்ஸ்க்யூஸ் மீ”

தலை உயர்த்தி அவன் பார்க்க, தலை திருப்பினாள் அவள். முகம் மட்டும் என்னமோ ஏதோவென முறைப்பிலேயே இருந்தது.

“நீங்க வேணும்னா உட்கார்ந்துக்கங்க. பரவாயில்லை” - சொல்லியபடியே அவன் எழுந்தான்.

“வேண்டாம் பரவாயில்லை” - சொல்லியபடியே அவள் உட்கார்ந்தாள்! உட்கார்ந்த வேகத்தில் கையில் இருந்த புத்தகத்தைப் பிரித்து மும்முரமாகப் படிக்கலானாள்.

‘அடேய் நான் சொல்லலே, இவளும் எக்ஸாமுக்குப் படிக்கிறா பாரு’ என்றது குதித்து வந்து நின்ற மனசாட்சி.

நின்றபடியே தன் புத்தகத்தை எடுத்தான் அவனும். அவள் பக்கம் பார்க்க அலைபாய்ந்த மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஏதோ முடிந்தமட்டும் பாடம் படிக்க முயன்றான். அப்படியே படிப்பில் மூழ்கிப் போனான்.

“காலேஜ் ஸ்டாப்பெல்லாம் இறங்குங்க” கண்டக்டரின் குரலுக்கு அவனும் இறங்கினான். கூடவே அவளும்!

காற்றில் பறக்கும் புடவைத் தலைப்பு மேலே உரசும் அளவுக்கு நெருக்கமாக அவனருகே வந்தாள் அவள். முகம் முழுக்க மின்னல் போல ஒரு புன்னகையோடு “தேங்க்ஸ்” சொன்னாள். அதே மின்னலாக விலகி வேகமாக நடந்து போனாள்.

“மச்சான் உனக்கு மச்சம்டா”

திரும்பிப் பார்த்தான் அவன். முதல் பஸ்ஸில் வந்திறங்கி, காலேஜுக்குள் நுழைவதற்கு முன் கடைசி தம் அடிப்பதற்காக ஒதுங்கியிருந்த தோஸ்த் கண்ணடித்தபடியே சொன்னான்.

“ஆமா யார்ரா இந்தப் பொண்ணு? புதுசா இருக்கே?!” என்றான் அவன்.

“மச்சான் நீ ரெண்டு நாளா காலேஜுக்கு வரலே. அந்த கேப்ல நம்ம க்ளாசுக்கு வந்த தேவதைடா இவ. அவங்கப்பனுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபராம். நம்ம காலேஜோட டெல்லி பிரான்ச்ல படிச்ச பொண்ணாம்” என்ற தோஸ்த் தொடர்ந்தான்.. “எப்பப் பாரு எல்லாப்பயலையும் முறைச்சுக்கிட்டே இருக்காடா. கிட்டே நெருங்கி கடலை வறுக்க ஒரு பயலுக்கும் துணிச்சல் இல்லே. பார்ட்டிய பிராக்கெட் போட நம்ம பசங்களுக்குள்ள செம போட்டி. ஆனா அவ என்னடான்னா உன்னைப்பார்த்து லுக்கும் ஸ்மைலும் கொடுத்துட்டுப் போகுது!”

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்
, காதலில் கடைக்கண் பார்வை!

முந்தைய காதல்பால்: இங்கே!