Wednesday, July 12, 2006

தேன்கூடு போட்டிக்காக -'நானேநானா'

ஒரு பெட்: இந்தக் கதையை நிச்சயம் ஒரே மூச்சில் இரண்டு முறை படிக்கப் போகிறீர்கள்!

‘த்தூ!’

கண் விழித்துப் பார்க்கும்போது
எனக்கே என்னைப்பார்க்க அசிங்கம் பிடுங்கித் தின்கிறது!

ப்ளாட்ஃபாரத்தில் தலை வைத்து, தார் ரோட்டில் உடம்பை விரித்துக் கொண்டு நாள்பட்ட குடிகாரன் போல தாறுமாறாக கலைந்து கிடக்கிறேன். ஒரே ஒரு தடவை, அதுவும் நாலே நாலு க்ளாஸ் குடித்ததற்கே இப்படியா?

நகரம் விழித்தெழுந்து, வேகமெடுத்து வெகு நேரமாயிருக்கும்போல. 'வ்ர்ரூம்.. வ்ர்ரூம்' என என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், ஒரு பயலும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை!

சரி விடுங்கள், அவரவர் அவசரம் அவரவர்க்கு!

எனக்கு அதையெல்லாம்விட அவசர வேலையிருக்கிறது. தலை போகிற அவசரமில்லை, என் தங்கைக்கு தாலி போகிற அவசரம்!

இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு கல்யாணம்.

பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தபோது என் அப்பா ஜம்பமாக அளந்துவிட்ட இருபது பவுன் தங்கத்துக்காகத்தான் இப்படி நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கிறேன் நான். ஏழைக் குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்ததன் பாவப்பட்ட பலன் இது. அனுபவித்துத்தானே ஆகவேண்டும்!

அதற்காக நான் வருத்தப்பட்டே பாரம் சுமப்பதாகக் கருதிவிட வேண்டாம். என் குடும்பம் எனக்கு சுகமான சுமைதான்.

என் மீது அளவிடமுடியாத அளவில் நம்பிக்கை வைத்திருக்கும் அம்மா, விபத்தில் தன் இரண்டு கால்களையும் இழ்ந்து வீட்டோடு முடங்கிப்போன அப்பா, ‘ஊர்-உலகத்துக் கொடுத்த கல்யாணப் பத்திரிகைகள் அறிவித்தபடி அடுத்த வாரம் தனக்குத் திருமணம் நடக்குமா’ என்ற பதைபதைப்போடு காத்திருக்கும் அழகுத் தங்கை, ‘இன்னும் ஆறே மாசம்ணே, காலேஜ் படிப்பு முடிஞ்சுடும். யார் கால்லவாச்சும் விழுந்து ஒரு வேலை வாங்கிடுவேன். அதுக்கப்புறம் வீட்டுக்காக நீ படுற கஷ்டத்த நானும் பங்கு போட்டுக்குவேன்ணே’ என பாசக்குரல் கொடுக்கும் தம்பி...

ஒவ்வொருவராக நினைவுக்குவந்து புன்னகைப் பூ கொடுக்க, எனக்கு உடனே அவர்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!

அடச்சே! இன்னமும் ரோட்டிலேயே கிடக்கிறேனே!
வாரிச்சுருட்டிக் கொண்டு எழுகிறேன்.

மனசு கனமாக இருந்தாலும், உடல் காற்றுப்போலிருப்பதாகவே உணர்கிறேன். வழக்கமாக படுக்கையில் இருந்து எழும்போது கூடவே எழும் அந்த கொலைகார ஒற்றைத் தலைவலி இப்போது இல்லவே இல்லை.
நிஜம்தான். நண்பர்கள் சொன்னது மாதிரி ஆல்கஹால் என்பது எந்தவிதமான வலியையும் போக்கும் சர்வரோக நிவாரணிதான்!

‘குடிகாரா’ என்று கூப்பிட்டது மனக்குரல்!

கவனம் கொடுத்துக் கேட்கிறேன்.

‘ ‘காலேஜ்ல கூடப்படிச்ச ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் நல்ல நிலைமைல, பேங்க் வேலைல இருக்காங்க. சென்னைலதான் உத்தியோகம். ஒரு எட்டு போயி கொஞ்சம் பேசிப்பார்த்துட்டு வர்றேன். ஆளுக்குப் பத்தாயிரம் ரூபா கொடுத்தாக்கூட இந்த நேரத்துக்கு உதவியா இருக்கும்’னு வீட்ல சொல்லிட்டுத்தானே பஸ் பிடிச்சே! ஃப்ரெண்ட்ஸ் ஊத்தி விட்டுட்டாங்கன்னு சாராயம் குடிச்சுட்டு தெரு நாயாட்டம் நடு ரோட்டில் கவிந்துட்ட்டே. அது போதாதுன்னு, இப்ப ஆல்கஹால் புராணமே பாட ஆரம்பிச்சுட்டியா?’

‘தப்புதாங்க மனசாட்சி. இதோ வீட்டுக்குக் கிளம்பிட்டேன்!’ என்று மனசாட்சியிடமும், ‘வெறும் இருபதாயிரம் ரூபாய் எதிர்பார்த்து வந்த எனக்கு ஒருலட்சம்வரை வட்டியில்லாக் கடன் கொடுப்பதாக, அதுவும் இரண்டே நாளில் கொடுப்பதாக என் நண்பர்கள் சொன்ன நல்ல சேதியை உடனே அப்பா-அம்மாவிடம் சொல்லவேண்டும்.’ என்று எனக்கு நானாகவும் சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் பறக்கிறேன்.

ண்ணில் தெரியுது வீடு. வாசல் கதவுகள் திறந்தே கிடக்கின்றன!
‘ஏன் இப்படி கதவைத் திறந்து போட்டிருக்கிறார்கள்’ என்ற கேள்விச் சிந்தனையோடு உள்ளே பாய்கிறேன்.

வீடு என்றதும் பெரிதாக எதையும் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டாம். மொத்தமே முந்நூற்றி ஐம்பது சதுர அடி இடம். ஒரு சமையல் ரூம், ஒரு ஹால், ஒரு ஓரத்தில் டாய்லெட்.. அவ்வளவே.

அந்த ஹால்தான் எங்களுக்கு எல்லாமுமே! ஒரு மூலையில் அப்பாவும் அவரது கட்டிலும் நிரந்தரமாக வாசம். எஞ்சியிருக்கும் சொச்ச இடம் எங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது பச்சோந்தியாக மாறிப் பயன் தரும். சாப்பிட உட்கார்ந்தால் டைனிங் ஹால், கருப்பு வெள்ளை டி.வி. பார்க்கையில் ரெக்ரியேஷன் ரூம், ‘அடுத்து என்ன பண்ணலாம், சொல்லுங்க’ என அப்பா கேட்கும் சமையங்களில் ஆளாளுக்குப் பேசும்போது டிஸ்கஷன் ரூம், ராத்திரியானால் பெட் ரூம், சுவரோடு சுவராக ஒரு சாமி ரூமும் (சாமி சுவர்)உண்டு!

‘பொசுக்’கென ஹால் பாதியாகக் குறைந்திருந்தது! அம்மாவின் கிழியாத புடவை ஒன்றை விரித்து திரை போல ஹாலின் குறுக்கே கட்டியிருந்தார்கள். இதெதற்கு?! ஒரு ரெண்டு மூனு நாள் வீட்டில் இல்லையென்றால் என்னென்னமோ நடந்துவிடுகிறது!

அடடா! அப்பாவின் கட்டில் என்னாச்சு? தரையில்... பாயில்... படுத்திருக்கிறாரே!

புயலே அடித்தாலும் ஷேவ் பண்ணாமல் இருக்கமாட்டார் அப்பா. இன்று என்னடாவென்றால் முள் தாடியுடன் காய்ந்த கருவாடாக சுருண்டு கிடக்கிறார்.

‘அப்பா...’

அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். என் குரல் அவரை எதுவும் செய்யவில்லை.

பாவம், தூக்கத்தில் இருக்க மாட்டார். கவலை மயக்கத்தில்தான் இருப்பார்.
மகளை எப்படி மகன் கரையேற்றப் போகிறான் என்ற கவலை.

‘கவலை வேண்டாம் அப்பா, உதவிக்கு ஓடி வர என் ஆருயிர் நண்பர்கள் ரெடியாக இருக்கிறார்கள்’ என்று சொல்லி அப்பாவை எழுப்ப வாய் பரபரத்தது.

வேண்டாம், முதலில் இந்த சந்தோஷச் செய்தியை அம்மாவிடம்தான் சொல்ல வேண்டும்.

அப்பாவைக் கடந்து திரும்புகிறேன். அட! இங்குதான் இருக்கிறான் என் சகோதரன்!

‘என்னாச்சு? காலேஜ் போகலையா?’

என்னைக் கவனிக்கும் நிலையில் அவனில்லை. வாய்ப்பக்கம் ஒரு ஈ நெருக்கமாகப் பறப்பதுகூடத் தெரியாமல் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருக்கிறான்.

ஆங்... இப்போதுதான் ஞாபகம் வருகிறது, இந்த வாரம் ஏதோ தேர்விருப்பதாக கூறியிருந்தான். ராத்திரி பூராவும் கண் விழித்துப் படித்திருப்பான். அதான் பகலிலும் தூக்கம்!

புடவைத்திரைக்கு மறுபுறம் சன்னமாகக் கேட்கும் விசும்பல் சத்தம் பொளேரென என்னை அறைகிறது.

நடுங்கும் ஈரல் குலைகளுடன் திரையை விலக்குகிறேன். தங்கை!
தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறாள். குலுங்கும் முதுகு அவள் ஆற்றமாட்டாமல் அழுவதைக் காட்டுகிறது.

‘ஏன் அழுகிறாய் என் சகோதரி? பணம் வாங்கி வரப்போன அண்ணன் அப்படியே ஓடிபோய்விட்டான் என முடிவு செய்து அழுகிறாயா? இதோ வந்தேனடி என் தங்கமே!’
-தங்கையைத் தூக்கி இப்படியெல்லாம் பேசி மாரோடு சேர்த்துக்கொள்ள ஆசைதான். ஆனால் முடியாதே! வயதுக்கு வந்த பெண்ணை அவள் அண்ணனாக இருந்தாலும் தொட்டுப் பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதே.

அப்பா, தம்பி, தங்கை... எல்லோரும் எனக்கு ஓரே ஒரு நிமிட அவகாசம் கொடுங்கள். நான் கொண்டு வந்திருக்கும் இனிப்புச் செய்தியை அம்மாவிடம் சொல்லி, அதை அம்மா உங்கள் அனைவரிடமும் சொல்லி, இந்த வீடே கொஞ்ச நேரத்தில் ஆனந்தக் கூத்தாடப்போகிறது பாருங்கள்.

‘அம்மா..!’

சமையல்கட்டுக்குத் தாவினேன். தேடினேன். அம்மாவைக்காணோம்.

திரும்ப வெளியே வந்தபோதுதான் கவனித்தேன் சாமி சுவற்றுக்குப் பக்கத்தில் அம்மா! கையில் ஏதோ நியூஸ் பேப்பர்.

'அட நீ இங்கேயா இருக்கிறாய்.. நான் தேடுவது தெரியவில்லையா?'

அருகே உட்கார்ந்து ஆசையோடு அவள் தோளைத் தொடுகிறேன். சலனமின்றி, சாமி படங்களையே வெறித்துக் கொண்டிருக்கிறாள். நான் வந்துவிட்டது அவளுக்குத் தெரியவில்லை!

'ச்சே! நீயுமா உன் பிள்ளையை நம்பவில்லை?! இதோ வந்துவிட்டேன் அம்மா!'

அம்மாவின் நிலை குத்திய பார்வை இருக்கும் திசையைப் பார்க்கிறேன். சுவற்றில் எல்லா சாமி படங்களுக்கு நடுவே புதிதாக பூவோடும் பொட்டோடும் என் புகைப்படம்!

அம்மாவின் கையில் இருக்கும் நியூஸ் பேப்பரில், ‘குடி போதையில் ரோட்டைக் கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி அதே இடத்தில் இறந்தார்’ என்ற செய்தியோடு என் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது!!

10 comments:

Anonymous said...

அட போட வைத்தாலும் மனசு வலிக்குது கௌதம்.

கடல்கணேசன் said...

பந்தயத்தில் ஜெயித்து விட்டீர்கள்.. (இரண்டாவது முறை வாசிக்க வைத்த பந்தயத்தில்..).. எங்கேயாவது வார்த்தைகளில் கோட்டை விட்டிருக்கிறீர்களா என்று 'குற்றம்' கண்டுபிடிக்கத்தான்(பழக்கதோஷம்- இன்னும் விடமாட்டேன் என்கிறது பத்திரிக்கையாளன் புத்தி!..) இரண்டாவது வாசிப்பு. மிக ஜாக்கிரதையாக வார்த்தைகள் தேர்வு செய்து எழுதியிருக்கிறீர்கள்(ஏமாற்றியிருக்கிறீர்கள்).. "வீட்டுக்குப் பறக்கிறேன்"-உதாரணம்...
//ப்ளாட்ஃபாரத்தில் தலை வைத்து, தார் ரோட்டில் உடம்பை விரித்துக் கொண்டு நாள்பட்ட குடிகாரன் போல தாறுமாறாக கலைந்து கிடக்கிறேன்//
//நகரம் விழித்தெழுந்து, வேகமெடுத்து வெகு நேரமாயிருக்கும்போல. 'வ்ர்ரூம்.. வ்ர்ரூம்' என என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், ஒரு பயலும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை//
வீட்டில் அம்மா கையில் உள்ள செய்தித்தாளில் புகைப்படத்துடன் செய்தி வந்துவிட்டதே.. அத்தனை நாள் வரை இன்னுமா ரோட்டில்(உடல்) கலைந்து கிடக்கமுடியும்-என்று கடைசியில் சந்தேகம் வந்தது.. ஆனால் எத்தனை நாள் கழித்து (பறந்து !) வீட்டுக்கு வந்து சேர்ந்ததாக(புத்திசாலித்தனமாகக்) குறிப்பிடாமல் விட்டு அந்த இடத்திலும் 'எஸ்கேப்' ஆகிவிட்டீர்கள்..
உங்களுக்கு பாராட்டெல்லாம் எழுதமாட்டேன்.. நீங்கள் எழுதினால் ஏமாற்றமா கிடைக்கும் .. உங்கள் பதினைந்து வருட எழுத்துக்களை படித்திருக்கும் உரிமையில்- போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ப்ரியன் said...

கலக்கல் ஜி போஸ்ட்...அருமையாக வார்த்தை பிரயோகம் , அருமையான நடை..

இரண்டு முறையல்ல அதற்கு மேலும் வாசித்தேன் எனபதே உண்மை

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

in my case u lost ur bet Mt.Goutham. :-( moreover i could guess the story from the beginning.

but Nice narrating style.
(i read very slowly (tackle 2nd time reading)& carefully for the loopholes but you escaped. :-))

good luck for winning the competition.

பொன்ஸ்~~Poorna said...

கௌதம்,
பெட்ல தோத்துட்டீங்க.. எனக்கு முதல் வாசிப்பிலயே புரிஞ்சிடுச்சு.. தலைவலி இல்லைன்னதுமே தெளிவாகிடுச்சு.. வழக்கமா ஒரு முறை கமென்ட் போடும் போது திரும்பி வாசிச்சி, எங்க புரிஞ்சுதுன்னு பார்க்க முயற்சி பண்ணுவேன்.. இப்போ அதுகூட இல்லாம எழுதிகிட்டு இருக்கேன்.. ;)

G Gowtham said...

எட்வர்ட்,
வலி போயிருச்சா?
ஆமா உங்க ப்ளாக் காலியாவே இருக்கே?!

நன்றி கணேசன்,
அடுத்த இடுகை நண்பன் திருப்பதிசாமி பற்றியது.

ப்ரியன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
நல்ல கதைகள் எழுத முயல்கிறேன்.

guru,
என் தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி.

பொன்ஸா கொக்கா?!
தொடர்ந்து என்னைத் தோற்கடிக்க வாழ்த்துக்கள்!

Anonymous said...

thalaivarE vaNakkam.

inththa type kathaikaLai viduththu nalla tharamaana kathai tharavENdumaay ungkaLaik kEddukk koLkiREn.

ithu pOl kathai ezutha blog-il niRaiya pER irukkiRaarkaL. nIngkaLum athil oruvaRaaka aakividakkUdaathenRa nalla eNNaththil solkiREn.

nanRikaL maRRum vaNakkangkaLudan
anaani.

Maraboor J Chandrasekaran said...

U made me know the climax, in the very first lines. Gowtham, how r u? J.Chandrasekaran (old Vikatan friend). Ganesan gave your link to me. Nice to get back pal :)

கடல்கணேசன் said...

ஜிஜி,
பலர் முடிவை முன்கூட்டியே யூகிக்க முடிந்தது பற்றி வருத்தமே படாதீர்கள். அதற்குக் காரணம் "மரணம்" என்ற போட்டித் தலைப்பிற்காக எழுதியதால் தான். இதே கதையை வேறு இடத்தில் படித்திருந்தால் யூகிப்பது அவ்வளவு சுலபமாக இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

G Gowtham said...

என் மேல் நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி anani அவ்ர்களே!
உங்கள் பின்னூட்டத்தை மனதில் கொண்டுதான் ஒரு கதை எழுதி இருக்கிறேன்.
http://gpost.blogspot.com/2006/07/blog-post_115341086153222953.html
படித்துப் பார்த்து க்ருத்துக் கூறவும்.
நன்றி நண்பரே.

ஜெய. சந்திரசேகரன்,
தாய் வீட்டு சொந்தத்தைச் சந்தித்த சந்தோஷம்!
பெட்டில் என்னைத் தோற்கடித்ததிலும் சந்தோஷமே!

நன்றி கூற வேண்டாம் என நீங்கள் சொன்னதால் Thanks கணேசன்