Friday, September 15, 2006

தமிழுக்கு இன்னொரு அழகு!

வேகமும் விவேகமும் கொண்ட சுறுசுறு இளைஞர் ஒருவர், பழுத்த அனுபவமும் ஆழமான அறிவும் கொண்ட துறுதுறு முதியவர் ஒருவர்.. இப்படி ஒரு காம்பினேஷனைப் பார்க்கும்போது ‘இளமை + முதுமை = புதுமையான முழுமை’ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது!

அந்த இளைஞர்.. நாகராஜன் என்ற கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அந்த அனுபவசாலி .. கபிலன் என்ற தமிழாய்ந்த அறிஞர். வித்தியாசமான சாதனைப்படை!

அப்படி என்ன சாதனை படைத்திருக்கிறது இந்தக் கூட்டணி?!

ஓரளவுக்கு கைகள் கட்டப்பட்டுக் கிடந்த கம்ப்யூட்டர் தமிழுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும்.

மனிதன் பெற்றெடுத்த கண்டுபிடிப்புக் குழந்தைகளில் ஈடு இணையற்றது கம்ப்யூட்டர். தொடர்ந்து இணையம் எனப்படும் இண்டர்நெட்.

கம்ப்யூட்டரிலும் இண்டர்நெட்டிலும் ஆங்கிலம் தறிகெட்டுப் பறக்கிறது என்றாலும் நம் தமிழும் இப்போது கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. சுந்தரத் தமிழிலேயே மெயில் எனப்படும் மின்னஞ்சல் அடிக்கலாம். அனுப்பலாம். பெறலாம். உலகம் முழுக்கப் பரந்து விரிந்திருக்கும் தமிழுலகைக் குறுக்கியுள்ளது.

என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இணையத்தில் தமிழுக்கான களம் சிக்கல்களோடுதான் இருக்கிறது!

தமிழில் ஒருவர் மெயில் அடித்து மற்றவருக்கு அனுப்பி வைப்பாரெனில் கூடவே அந்த எழுத்துரு(அதாவது Font) வையும் அனுப்பி வைத்தாகவேண்டும். அதைப் படிக்கும் நபர் திருத்தம் ஏதும் செய்ய முயன்றால் அது சாத்தியப்படாது. அனுப்பியவர் எந்த விசையொழுங்கில் (அதாவது Keyboard driver) டைப் செய்தாரோ அதே விசையொழுங்கை திருத்தம் செய்பவரும் தனது கம்ப்யூட்டரில் வாங்கி வைத்திருக்க வேண்டும்.

ஒரு எழுத்துரு குறிப்பிட்ட விசையொழுங்கில் மட்டுமே இயங்கும். ஒரு விசையொழுங்கு குறிப்பிட்ட மென்பொருளில் (அதாவது Software) மட்டுமே செயல்படும். தவிர ஒவ்வொரு விசையொழுங்குக்கும் வெவ்வேறான கீ போர்டு வடிவமைப்பு! தடுமாற்றத்துடன்தான் தமிழ் வளர்கிறது கம்ப்யூட்டர் உலகத்தில்!

“இந்தத் தடுமாற்றங்கள் எல்லாம் இனி இருக்காது!” என்கிறார் நாகராஜன். வரியுருமா என்ற தமிழ் மொழித்தளத்தை வடிவமைத்துள்ளார் இவர்.

நாகராஜனின் கம்ப்யூட்டர் அறிவும் தமிழரிஞர் கபிலனின் தமிழும் நிதியுதவியும் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.

மாயம் மந்திரமெல்லாம் செய்கிறது இந்த வரியுருமா!

“எந்த ஒரு எழுத்துருவிலும் அல்லது விசையொழுங்கிலும் அல்லது மென்பொருளிலும் யாராவது ஒருவர் டைப் செய்த தமிழை அதன் பிறகு வேறு யாரும் மறுபடியும் டைப் செய்யத் தேவையில்லை. தனக்குப் பிடித்த எழுத்துருவுக்கு மாற்றி விரும்பியபடி திருத்தம் செய்து கொள்ளலாம். எதிலிருந்தும் யுனிகோடுக்கும், யுனிகோடில் இருந்து எதற்கும் மாற்றிக்கொள்ளலாம்” என்கிறார் நாகராஜன். சுரதா கன்வெர்ட்டரால் செய்யமுடியாத பல ஜித்து வேலைகளையும் செய்கிறது!

“இன்னொரு முக்கியமான விஷயம்.. அவரவர் தங்களுக்குப் பிடித்தமான வகையில் கீ போர்டை நிறுவிக்கொள்ள முடியும். இந்த பட்டனைத் தட்டினால் இந்த எழுத்து என நாமே நமக்கேற்ப வடிவமைக்கலாம். இந்திய அளவில் இது முதல் முயற்சி” என்றார் கபிலன்.

தமிழே முதன்மையானதுதானே!

மேலும் விவரங்களுக்கு: வரியுருமா வலைத்தளம்
நாகராஜனின் மின்னஞ்சல் முகவரி: mrnags@gmail.com

6 comments:

SP.VR.சுப்பையா said...

It is really a good posting
Thanks for the information

newsintamil said...

நல்ல முயற்சி. ஆனால் இவ்வளவு விலை கொடுத்து சாதாரணப் பயனர்களால் வாங்கிப் பயன்படுத்த இயலுமா என்று தெரியவில்லை. நிறுவனங்கள் கூட வாங்கப் பயப்படும் அளவுக்கு விலை.

இவ்வளவு முன்னேற்றம் இல்லாவிட்டால் கூட யூனிகோடைப் பயன்படுத்தும் ஒரு கணினிப் பயனர் தனக்கான தேவையை ஈடு செய்கிற அளவில் இன்று திறவூற்று மென்பொருள்கள் கிடைக்கும் நிலையில் இந்த வணிக ரீதியான முயற்சி எந்த அளவு பரவலாகப் பயன்படுத்தப் படும் என்பது கேள்விக்குறி தான்.

அறிவுமதி said...

வரியுருமா படைத்த நாகராஜன் போன்ற மேலும் பல இளைஞர்கள் தமிழ் கணிணித் துறையில் நுழைய வேண்டும்.இவரைப் பற்றி் இந்தியா டுடே இதழில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் படித்ததாய் நினைவு.இவர்தானா அவர்?

செந்தழல் ரவி said...

இந்த நல்ல முயற்ச்சிக்கு உங்கள் பதிவு வழியாக என் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ILA(a)இளா said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் நாகராஜன்.

ரவிசங்கர் said...

தகவலுக்கு நன்றி. விற்பனைக்கே என்றாலும் அதை தமிழுக்காக செய்ய வந்துள்ளது பாராட்டத்தக்கது. ஆனால், இது விற்குமா என்பது கேள்வி. விலை மிகவும் அதிகம். தமிழ்த் திறவூற்று மென்பொருள்கள் வருங்காலத்தில் நிறைய வரும் வாய்ப்பு இருக்கிறது. ஒருங்குறியில் மடல் அனுப்பும் வசதி வந்த பிறகு, எழுத்துருவை மாற்றுவது எல்லாம் கற்காலத்தேவைக்கான கண்டுபிடிப்பு. ரொம்பத் தாமதாக வந்திருக்கிறது இம்மென்பொருள். எனினும் காலத்தேவைகளுக்கு ஏற்ப பல புதுப்புது மென்பொருள்களை உருவாக்க வாழ்த்துகிறேன்