Thursday, November 23, 2006
இப்பத்தான் உண்மை தெரியுது!
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்
- அறத்துப்பால், அதிகாரம்: 12. அமைச்சியல், குறள்: 116
மனம் நடுவு நிலைமையில் இருந்து விலகி, முறையல்லாதவற்றைச் செய்ய நினைக்குமானால் ‘போச்சு, நான் கெட்டுவிடுவேன்’ என ஒருவன் பயத்தோடு அறிந்து கொள்வானாக.
“அப்ப நீ நிஜமாவே அவளை லவ் பண்ணலியா மச்சான்?” - வியப்போடு கேட்டான் நண்பன். கூடவே கொஞ்சம்போல ஏமாற்றமும்!
“முட்டாள். என் லைஃப்ல நான் சந்திச்ச பெஸ்ட் ஃப்ரண்ட் அவதான். அதுபோல அவ லைஃப்ல நான். நல்ல நண்பர்களாத்தான் பழகிக்கிட்டு இருக்கோம். காதல் பண்ற ஐடியாவெல்லாம் கிடையவே கிடையாது, போதுமா?” - மிதமான புன்னகை முகத்தில் இருந்தாலும் வார்த்தைகளில் கோபத்தையே காட்டினான் அவன்.
“பார்க்கலாம்டி.. எத்தனை நாள் இப்படியே இருக்கப் போறீங்கன்னு! ஒருநாள் இல்ல ஒருநாள் என்கிட்ட வந்து ‘எங்க நட்பு இப்ப காதலா ஆகிடுச்சு’ன்னு சொல்லத்தாண்டி போறீங்க” - சாபமிட்டபடியே விலகிப் போனான் நண்பன்.
குழப்பத்தோடும் கோபத்தோடும் நண்பன் நடந்து போவதையே பார்த்துக் கொண்டு நின்றான் அவன்!
பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் இருவரும் பஸ் ஸ்டாப்பில் இருந்தார்கள்.
அவன் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளைப் படித்துவிட்டாள் அவள். பெண் புத்தி வேண்டுமானால் பின் புத்தியாக இருக்கலாம் (அடிக்க வராதீங்க தாய்க்குலங்களே.. இல்லாமலும் இருக்கலாம்!), ஆனால் முகம் பார்த்து அகம் யூகிக்கும் சாதுர்யத்தில் பெண்ணுக்கு நிகர் பெண்ணே!
“நமக்குள்ள இருக்குறது வெறும் நட்புதானா.. இல்ல காதலா?”
அந்த அதிரடியை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை! “ஹேய்.. என்னாச்சுடா உனக்கு? பைத்தியம் பிடிச்சுடுச்சா?” என்றபடியே அவன் தலையில் தட்டினாள். அவனுக்குப் பிடித்த வயலெட் கலரில் புடவை கட்டியிருந்தாள் அவள்.
“இல்ல.. நாம காதலர்கள்தான்னு காலேஜ்ல எல்லாப் பயலும் பேசிட்டான், பேசிக்கிட்டும் இருக்கான். இன்னிக்கு என்கிட்டயே தைரியமாவே ஒருத்தன் கேட்டுட்டான்”
“சரி, அதுக்கு நீ என்ன சொன்னே?” – புன்னகை மாறா முகத்துடன் கேட்டாள் அவள். நண்பனுக்குத் தான் சொன்ன பதிலை அவளிடம் சொன்னான். காற்றில் அவளது ‘வயலெட்’ படபடத்தது.
சிரித்துக்கொண்டாள்.. “சரி விடு. மத்தவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு நமக்கெதுக்கு கவலை”. படபடத்த ‘வயலெட்’ மாராப்புப் பகுதியில் விலகி விலகி, உள்ளே மறைந்திருக்கும் அழகுகளை வெளிக் காட்டியது!
‘அவளது புன்னகை ரியாக் ஷன்வேறு அவனை லேசாக கிறங்கடித்தது. அதனால்தானோ என்னவோ இதுவரை தெரியாத கோணத்தில் அவன் பார்வைக்குப் பட்டது அவளது விலகிய மாராப்பு!
அவனையும் அறியாமல் கண்கள் அங்கே நிலைகுத்தின..
“டேய்! என்ன பண்றே நீ?” - திடீரென அவளது ஸ்பீக்கர் அலறியது!. மாராப்பை வேகமாகச் சரி செய்து கொண்டாள்.
ஷாக் அடித்தது அவனுக்கு. அவன் ‘அதையே’ பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துவிட்டாள்!
“டேய் நான் உன் காதலி இல்ல, ஜஸ்ட் ஃப்ரண்டுதான். இப்படி தப்பான நோக்கத்தோட பார்க்காதே” என சீரியஸ் முகத்தோடு அதட்டினாள்.
“இல்லை. நான் பார்க்கலை. நம்பு” என்றான் வேக வேகமாக. வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள் அவள்.
மண்டை காய்ந்து போனான்!
“ஏன் சிரிக்குறே? நான் சொன்னதை நம்பலியா நீ?”
“பாதி நம்பறேன், பாதி நம்பலை” என்றாள். அவனது மண்டைக்காய்ச்சல் அதிகரித்தது!
“என்னதான் நாம நண்பர்கள்னு நமக்குத் தெரிஞ்சாலும் நம்ம உடம்புக்கு அது தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை. மனசு வேற, உடம்பு வேற! உன் உடம்பைப் பொருத்தவரை நான் ஒரு பொண்ணுதான். அதுவும் அழகான பொண்ணு. அதனாலதான் என்னோட மாராப்பு விலகுனதும் உன் மனசையும் மீறி நீ பார்த்துட்டே. ஆனா உன் பார்வை தப்பான நோக்கத்து போகலை. ‘இது தப்பு’ன்னு உன் மனசு சொன்னதை உன் உடம்பும் கேட்டுக்குச்சு. அதான் நீ பதறிப்போய் ‘நான் பார்க்கலை’ன்னு ஜகா வாங்குறே. இதான் நடந்தது. ஆக நீ பார்த்தது நிஜம், தப்பான நோக்கத்துல பார்க்கலைங்குறதும் நிஜம். மனசுக்கும் உடம்புக்குமான நடுக்கோட்டை நீ தாண்டலை! அதனால நீ ஜெண்டில்மேன்”
அவள் நீளமாகப் பேசி முடித்ததும், ‘அப்பாடா’ என நீளமாகப் பெருமூச்சு விட்டான் அவன்.
குறும்போடு தொடர்ந்தாள் அவள்.. “ஆனா என்னைப் பொருத்தவரை நீ நடுக்கோட்டை தாண்டினாக்கூட ஜெண்டில்மேன் தான்”
புரிந்தும் புரியாமலும் அவன் அவளையே பார்க்க, அவள் வெட்கத்தோடு கேட்டாள்.. “போரடிக்குதுடா நட்பு. நாம பேசாம லவ் பண்ணிடலாமா?”
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின், அதுவரை ஆண்மகன்!
முந்தைய 'காதல்பால்' இங்கே!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சூப்பர் தலை. கிட்டத்தட்ட இதே மாதிரி அனுபவம் எனக்குண்டு. உங்களுடைய காதல் பாலில் வரும் சம்பவங்கள் எல்லாம் என் வாழ்க்கையிலோ அல்லது எனக்குத் தெரிந்தவர்கள் வாழ்க்கையிலோ நடந்ததாகவே இருக்கிறது.
ம்..அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள்!
Post a Comment