Tuesday, December 19, 2006
காதல்பாலின் கடைசி பால்!
என் இனிய வலை நண்பர்களே!
அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங்கே கடைசிக்கதை.
குங்குமம் வார இதழில் தொடராகவும் வெளியானது.
பக்கப்பற்றாக்குறைக்காக இதழில் வெட்டப்பட்ட பாராக்களும் வலைப்பூவில் சுதந்திரமாக பதிவாகியிருக்கின்றன. தவிர, குங்குமத்தில் வெளிவராத ஓரிரு கதைகளும்கூட இங்கே பிரத்தியேகமாக பதிவாகியிருக்கின்றன!
ஜி போஸ்ட்டிலும் வெளியான கதைகள் மற்றும் குங்குமத்தில் பிரசுரமாகி இங்கே பதிவுசெய்யப்படாத கதைகள் தவிர இன்னும் சில புதிய கதைகளையும் சேர்த்து புத்தகமாக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
அதனால் இந்தக் கதையோடு காதல்பாலை முடித்துக்கொள்கிறேன் நண்பர்களே.
இன்னொரு முக்கியமான ரகசியம்..
நான் எழுதிய காதல்பால் கதைகள் அனைத்துமே நிஜக்கதைதான்! எல்லாவற்றிலும் ஒரு இருபத்தைந்து சதவீதமாவது நிஜம் கலந்திருப்பது உண்மை!
இந்தக் கடைசிக் கதையோ முழுக்க முழுக்க நிஜம், என் வாழ்க்கை!
நன்றி நண்பர்களே..
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு
- அறத்துப்பால், அதிகாரம்: 22. ஒப்புரவறிதல், குறள்: 211
நீரைக் கொடுக்கும் மேகங்களுக்கு உயிர்கள் செய்யும் கைமாறு என்ன? மேகம்போன்று இருப்பவர்கள் செய்யும் உதவிகளும் கைமாறு கருதிச் செய்யப்படுவனல்ல.
“ஹலோ”
பாசமும் நேசமும் வழிந்தோடும் அவளது ‘ஹலோ’வில் இந்த முறை பதட்டமும் பற்றியிருந்தது!
“என்னாச்சு? எனிதிங் ராங்?!” - பதில் பதட்டம் அவனது வார்த்தைகளில்!
“நான் வீட்டைவிட்டு கிளம்பி வந்துட்டேன். இப்ப மதுரை பஸ் ஸ்டாண்டுல இருக்கேன்.”
“என்ன சொல்றே? பி சீரியஸ்!”
“ஆமா, எக்ஸாம் முடிஞ்சதும் உங்களை நேர்ல வரவழைச்சு நம்ம காதல் பத்திப் பேசுறதா சொன்னார் அப்பா. ஆனா இப்ப என்னடான்னா.. அது என்னைச் சமாளிக்கச் சொன்ன பொய்னு தெரிஞ்சிடுச்சு. அதான் வேற வழி தெரியாம வீட்டை விட்டு வெளிய வந்துட்டேன். மதுரைக்கு வந்துசேர்ந்து அரைமணி நேரமாகுது”
முகம் வியர்த்தான் அவன்.
வியர்வையைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் அவள்.. “ஆத்திர அவசரத்துக்குன்னு நீங்க கொடுத்து வச்சிருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டு மட்டும்தான் இப்ப என் கையில் இருக்கு”
“இப்ப எங்கேர்ந்து பேசுறே?”
“பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருக்க டெலிபோன் பூத்ல”
“அங்கேயே இரு. ஒரு பத்து நிமிஷம் எனக்கு டயம் கொடு. மறுபடியும் பேசு”
பரபரவெனக் கழிந்தன அந்தப் பத்து நிமிடங்கள்..
“ஹலோ, நான்தாங்க”
“ரைட். நான் சொல்ற அட்ரஸை எழுதிக்கோ. ஒரு ஆட்டோ புடிச்சு அங்கே போயிடு. அவர் உனக்காக வெயிட் பண்றார். இன்னும் அரைமணி நேரத்துல அவரோட ஆபிசுக்கு போன் பண்ணி அடுத்து என்ன பண்றதுன்னு உன்கிட்ட நானே பேசுறேன்”
ஓட்ட நடையில் கடந்தன முப்பது நிமிடங்கள்..
“ஹலோ அண்ணே!”
“சொல்லுப்பா. சகோதரி இங்கதான் இருக்காங்க. தைரியம் சொல்லிட்டு இருக்கேன்”
“அண்ணே ரொம்ப..”
“அடப்போய்யா நீ வேற, நன்றி கின்றின்னு கெட்ட வார்த்தை சொல்லி அசிங்கப்படுத்திடாதே! இப்ப என்ன பண்றது அடுத்து?”
அதட்டுப்போட்ட அண்ணனுக்கு அடுத்ததைச் சொன்னான் அவன்.. “இன்னும் ஒரு மணி நேரத்துல என் ஃப்ரெண்டு அங்கே வந்திருவாண்ணே. மத்ததை அவன் பார்த்துக்குவான்”
“சரி. நீயும் தைரியமா இரு. இந்தா சகோதரிகிட்ட போனைக் கொடுக்குறேன். காலைல இருந்து சாப்பிடலையாம். இப்பத்தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சிருக்கேன். நீயும் ஒரு வார்த்தை சொல்லிடு. போராடி ஜெயிக்கணும்னா உடம்பு முக்கியம்”
“சரிண்ணே”
ஒன்றரை மணி நேரம் கழிந்தது..
மறுபடியும் மதுரை பஸ் ஸ்டாண்ட். மறுபடியும் அதே டெலிபோன் பூத்.
பழகிய முகமானதால் பூத் பெண்ணைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்தாள் அவள். கூடவே உதவிக்கு ஓடி வந்திருந்த அவனது நண்பன். பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்திருப்பான்போல, கசங்கிப் போயிருந்தான்.
பர்ஸை எடுத்தாள் அவள். சற்று நேரத்துக்கு முன்னர் அண்ணன் வலுக்கட்டாயமாகக் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் இப்போது அவள் பர்ஸில்!
“போன் பண்ணிட்டு அப்புறம் பணம் கொடுத்தாப் போதும்ங்க” என்றாள் பூத் பெண். ஏதோ ஒரு ஞாபகத்தில் பணம் எடுத்து நீட்டியதற்காக அசடு வழிந்துகொண்டாள் அவள். அவளிடம் நம்பரை வாங்கி டயல் பண்ணினான் நண்பன்.
“டேய். நாங்க பஸ் ஸ்டாண்ட் வந்துட்டோம்டா”
“நல்லதுடா. சென்னைக்கு ரெண்டு டிக்கெட் ஏற்பாடு பண்ணுடா சீக்கிரம். நீ டிக்கெட்டைக் கையில் வாங்குறதுக்குள்ள என் தம்பி அங்கே வந்திடுவான். ரெண்டு பேரையும் பத்திரமா வண்டியேத்திட்டு போன் பண்ணுடா”
“தம்பியா?”
“சொந்தத் தம்பி இல்லடா, தம்பி மாதிரி ஆபத்துக்குதவ வந்தவன்”
“சரிடா. பணம் எதுவும் கொடுத்தனுப்பவா?”
“இல்லடா, பரவாயில்லை. போனை அவகிட்டே கொடு”
மறுநாள் விடிந்தது சென்னையில்..
தி.நகர் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கிய அவளையும் உடன்வந்த அந்தத் தம்பியையும் வியப்போடு பார்த்தான்
“சரி வாங்க ரூமுக்குப் போகலாம்”
“நீங்க தங்கியிருக்குற பேச்சுலர் ரூமுக்கா?”
சிரித்தான் அவன். இதுதான் சாக்கென்று அவள் லேசாக வெட்கப் பட்டுக் கொண்டாள்!
அறைக்கதவைத் திறந்ததும் பலூன்கள் பறந்தன!
ப்ளைவுட்டில் ‘வெல்கம்’ கூட பெயரோடு வருவியிருந்தார்கள். பாசக்காரப் பயலுக, அதிகாலையில் பஸ் ஸ்டாண்டுக்கு அவன் புறப்பட்டபோதுகூட இந்த ஜோடனைகளெல்லாம் இல்லை. அதற்குப் பிறகு நடந்திருக்கிறது ‘ஆர்ட் டைரக்டர்’ வேலை!
முகம் பூராவும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் அறைத்தோழர்கள். இப்போது அவனுக்கும் வெட்கம் ஒட்டிக்கொண்டது!
திடுதிப்பென பாய்ச்சலோடு வெளியே இருந்து ஓடி வந்தான் இன்னொரு தோழன்.. “மாப்ளே, சிஸ்டரோட வீட்டுல உன்மேல சந்தேகம் வந்திருச்சு. யாரோ ஒருத்தர் அவங்க அண்ணன்னு சொல்லிட்டு வாசல்ல உன் பேரச் சொல்லி விசாரிச்சுட்டு இருக்கார்டா..”
தடாலடி படத்தின் அதிரடி க்ளைமாக்ஸ் போல அறை பரபரப்பானது அடுத்த நொடியிலேயே!
“ம். சீக்கிரம். நீங்க இங்கேர்ந்து போயாகணும்”
எஸ்கேப்!
தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தார் அவர். வாசலில் அவனும் அவளும் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் தூக்கம் தொலைத்தார்!
“உள்ளே வாங்க”
சுடச்சுட காபி போட்டுக் கொண்டு வந்து நீட்டினார் அவரது மனைவி.
“குளிச்சுட்டு சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கங்க. அப்புறம் ஆற அமர உட்கார்ந்து பேசிக்கலாம்”
பொறுமையாகச் சொன்னார் அவர். ஆனால் அவனுக்குப் பொறுமை இல்லை! நடந்தது எல்லாவற்றையும் கடகடவெனச் சொன்னான்.
“அப்படியாம்மா? இவன் சொல்றதுல உனக்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்குதா?” என்றார் அவர்.
“இல்லை” என்றாள் அவள்.
நெருப்பு வேகத்தில் காட்சிகள் மாறின, மாறிக்கொண்டே இருந்தன!
வீட்டில் அவனும் அவளும் துணைக்கு சுவர்க்கடிகாரத்தின் சத்தமும்!
கண்கள் கலங்கியிருந்தாள் அவள்.. “கொஞ்சம் பயமா இருக்குங்க”
பயப்படாதவன் போல தன்னைக் காட்டிக்கொண்டு கேட்டான் அவன்.. “பயமா? கவலையா?”
“தெரியல”
“எண்ணித் துணிக கருமம்னு வள்ளுவர் சொன்னதுதான். நாம இப்பத் துணிஞ்சுட்டோம். மறுபடி திரும்ப யோசிச்சா பயமும் கவலையும்தான் வரும்”
“ம்”
டெலிபோன் கூப்பிட்டது.
“ஹலோ”
மறு முனையில் இருந்தது அவனது அறைத்தோழன்.
“நாளைக்கு காலைல உங்களுக்கு கல்யாணம்”
அதற்காகத்தான் ஆசைப்பட்டான் என்றாலும் தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.. “என்னடா சொல்றே?”
“ஆமாண்டா. மயிலாப்பூர் கோயில்ல மேரேஜ். முடிச்சதும் ரிஜிஸ்டர் ஆபிஸ் போறோம்”
“டேய் இப்ப என் கைல பணம்னு பார்த்தா ஆயிரம் ரூபாய்கூட தேறாதுடா. எப்படிடா இதெல்லாம் நடக்கும்?”
“போடா இவனே! மாப்ளையா லட்சணமா கல்யாணத்துக்கு கரெக்டா வந்து சேர்ந்திடு. பணமெல்லாம் கைக்கு வந்தாச்சு”
“யார் கொடுத்தா?”
இன்னொரு அறைத்தோழனின் பெயரைச் சொன்னான் அந்தத்தோழன்.
“பைக் வாங்குறதுக்காக அவன் ஆசை ஆசையா சேர்த்துவச்ச பணமாச்சேடா அது?!”
நெகிழ்ச்சியோடு போனை வைத்தான் அவன்.
நேரமும் நெகிழ்ச்சியும் கூடிக்கொண்டே போனது!
விளக்கு வெளிச்சமும் கல்யாணக் களையும் சூழ்ந்தது விட்டை!
“மாப்ளையும் பொண்ணும் எப்படி இருக்கீங்க? முகத்துல ஜோர் வந்திடுச்சு போல!”
அங்கே இல்லாத உற்றார் உறவினரை ஈடு செய்வதுபோல கூட்டமாக வீட்டுக்குள் நுழைந்தனர் அலுவலக சகாக்கள் பலர்.
அமைதிப் புன்னகையும் அதிக வெட்கமும் பொண்ணு மாப்ளையிடம்.
“உங்களுக்கு விஷயம் தெரியுமா.. இன்னிக்கு நம்ம ஆபிஸ்ல வேற வேலை எதுவும் நடக்கலை. அத்தனை ஸ்டாஃபுக்கும் உங்க கல்யாணம்தான் இன்றைய ஸ்பெஷல். தேடி வந்த பொண்ணு வீட்டுக்காரங்களை சமாளிக்குறதுக்காக ஒரு டீம். மாப்ளை வீட்டுக்காரங்களை சமாளிக்க ஒரு டீம். நிதி உதவி சேர்க்க ஒரு டீம், கோயில்ல கல்யாண ஏற்பாடுகளைக் கவனிக்க ஒரு டீம், ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் வேலைகளுக்காக ஒரு டீம், அப்புறம் இன்விடேஷன் கமிட்டி, பர்ச்சேஸ் கமிட்டி அது இதுன்னு ஆளாளுக்கு வேலையைப் பிரிச்சுக்கிட்டு பட்டையக் கிளப்பிட்டாங்க!"
நெகிழ்ச்சியான தருணம் அது.
“ஆஹா! இப்பத்தான் நம்ம வீடு அட்டகாசமா இருக்கு. எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா? என்ன சொல்றாங்க புதுமணத்தம்பதிகள்?” என்றபடியே உள்ளே வந்தார் காலையில் கிளம்பிப் போன வீட்டுக்காரர். கை நிறைய பார்சல் பைகள்!
“பொண்ணு மாப்ளைக்கு புது ட்ரெஸ் எடுத்தாச்சு. தாலியும் வாங்கியாச்சு. பொறுமையா செய்யவேண்டிய வேலைல்ல, அதான் நானே போய்ட்டு வந்துட்டேன்”
எல்லோரும் என்னென்னமோ பேசினார்கள். அன்பு மட்டும் நிலையாக இருந்தது!
எப்போதும் போலத்தான் விடிந்தது அன்றைய வானமும். அதற்கென்ன, கல்யாணமா காதுகுத்தா?!
அழுக்கு உள்ளாடைகளுடனும் புத்தம்புது மேலாடைகளுடனும் மாப்பிள்ளை தயார்!
அவனையும் அவளையும் ஆட்டோவில் பாதுகாப்பாக கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போக ஒரு டீம் தயாராக இருந்தது. ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் வழி நெடுக நேற்று முழுக்க யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பதை வியப்போடு விவரித்துக்கொண்டே வந்தார்கள் நண்பர்கள்.
அலுவலகத்தில் அவனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பலரும்கூட உதவிக்கு ஓடிவந்தவர்கள் வரிசையில் இருந்தனர்!
அமளிதுமளிப்பட்டது அதிகாலைக் கோயில். ஒரே இரவில் எப்படித்தான் அத்தனை பேருக்கும் சேதி சொன்னார்களோ, அலுவலக நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு ஆஜராகியிருந்தனர்!
உற்சாகக் கைகுலுக்கல்களும் சந்தோஷச் சிரிப்பலைகளுமாய் பொழுதுகள் பறந்தன.
அலுவலகத்தின் முதலாளியும் வந்தார்! மிக மிக அரிதான சந்தர்ப்பம் அது!!
பாசத்தோடு அவர் எடுத்துக்கொடுத்த தாலிக்கயிறை அவன் அவள் கழுத்தில் கட்டினான்..
“நான்தான் பொண்ணுக்கு அப்பா ஸ்தானம்” என்றார் அந்தப் பொறுமை மனிதர்.
“நான் மாப்பிள்ளைக்கு அக்கா” என்று முன்வந்தார் ஒரு பெண். இதுவரை அந்தப்பெண்ணை மாப்பிள்ளை பார்த்ததே இல்லை! அவனது நண்பருக்கு நண்பி அவர்!
ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவுத் திருமணமும் நடந்து முடிந்தது!
யார் பணம் கொடுத்தது என அவனுக்கும் தெரியாது. எல்லோரும் கல்யாணச் சாப்பாடு முடித்து வாசலுக்கு வந்தாரகள்.
அலுவலகத்தில் அவனோடு பணிபுரியும் தோழியின் கணவர் அவன் அருகே வந்தார்.. “எங்கே தங்கப்போறீங்க?”
“இன்னும் அதப்பத்தி யோசிக்கலை”
“இந்தாங்க” என்றவர் கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிரகப்பிரவேசம் நடத்திய அவரது சொந்த வீட்டின் சாவி!
“ஒண்ணும் அவசரமில்லை. நாலைஞ்சு மாசம்கூட எடுத்துக்கங்க. பொறுமையா செட்டில் ஆகி, வேற வீடு பார்த்துட்ட பிறகு, நீங்க வீட்டைக் கொடுத்தாப்போதும்”
நடப்பது என்ன என அவன் நிதானிப்பதற்குள் சாவியைக் கொடுத்தவர் எங்கோ போயிருந்தார்!
கடற்கரைக் காற்று சூழ்ந்திருந்த வீடு.
தம்பதி போய்ச் சேர்ந்தபோது அங்கேயும் காத்திருந்தது ஒரு டீம்!
“வாங்க, வாங்க”
ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
வருவதாகச் சொன்ன பொறுமைசாலி மனிதர் அங்கே இல்லை. “நேத்து கல்யாண பர்ச்சேஸ் செய்றப்ப ஆட்டோவில் ஒரு விபத்து. பலமான உள்காயம். யாரிடமும் சொல்லாம சமாளிச்சிருக்கார் மனுஷன். இப்பத்தான் வலி அதிகமானதால ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கார்” என்று தகவல் சொன்னான் அங்கிருந்த ஒரு தோழன்.
“பாத்திரங்கள், பலசரக்கு சாமான்கள், மண்ணெண்ணெய் ஸ்டவ்.. இப்போதைக்கு கொஞ்சம் பொருள்தான் வாங்கியிருக்கோம். நாளைக்கு மத்ததையெல்லாம் வாங்கிக்கலாம்” என்றாள் தோழிப்பெண்.
வீட்டின் வரவேற்பறையைக் கடந்ததும் மல்லிகைப்பூ வாசம் எதிர்ப்பட்டது! பூ, பழம், பால், புதுப்பாய், தலையணை.. சினிமாக்களில் மட்டுமே பார்த்திருந்த முதலிரவு அறை!
“சரி நீங்க ரெஸ்ட் எடுத்துக்கங்க. நாளைக்கு காலைல நாங்க வர்றோம்” என்று குறும்போடு சொன்னாள் தோழி. தோழனையும் இழுத்துக்கொண்டு வெளியேறினாள்.
பேசவும் வார்த்தைகளின்றி அவனும் அவளும் உட்கார்ந்தனர். அலையின் இரைச்சல் உரத்து ஒலிப்பதாகத் தோணியது!
போன நிமிடம் குறும்போடு வெளியேறிய அந்தத் தோழி முதல் ஒவ்வொருவராக அவன் மனத்திரைக்குள் ஓடி வந்தார்கள். ரீவைண்ட் ஆனது அந்த இரண்டு நாட்களும்!
வாய்விட்டுப் புலம்பினான் அவன்.. “எதற்காக இத்தனை பேரும் நமக்கு உதவி செய்யவேண்டும். பணம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம். ஆனால் இப்படி அன்பைக் கொடுத்தவர்களுக்கு எதைக் கொடுப்பது கைமாறாக?”
அவள் சொன்னாள்.. “நான் நன்றி சொன்னப்ப மதுரையில அந்த அண்ணன் சொன்னதுதான் இப்ப ஞாபகத்துக்கு வருது”
“என்ன சொன்னார்?”
“உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நீங்க நன்றி சொல்லனும்னு அவசியமில்லைம்மா. அது தேவையுமில்லை. இப்படி ஒரு தம்பதிக்குத்தான் கல்யாணம் பண்ணிவச்சோம்னு நாங்க எல்லோரும் எப்பவும் பெருமைப்படுற மாதிரி வாழ்ந்துகாட்டுங்க. அது போதும்!”
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு, காதலில் பழகு!
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
'குங்கும'த்தில் படித்தபொழுதே நினைத்தேன்...இது உண்மை+சொந்தக்கதையோ னு!
வாழ்த்துகள்!
//“உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நீங்க நன்றி சொல்லனும்னு அவசியமில்லைம்மா. அது தேவையுமில்லை. இப்படி ஒரு தம்பதிக்குத்தான் கல்யாணம் பண்ணிவச்சோம்னு நாங்க எல்லோரும் எப்பவும் பெருமைப்படுற மாதிரி வாழ்ந்துகாட்டுங்க. அது போதும்!”//
டச் பண்ணீட்டீங்க சார்.
பாலபாரதி இதை படிங்க முதல்ல
சென்ஷி
ஹாய் கெளதம்,
அப்பாபாபாபாபா........ எவ்வளவு த்ரில்லிங்கா......... இருக்கு...........
//"எதற்காக இத்தனை பேரும் நமக்கு உதவி செய்யவேண்டும்"//
உங்க நண்பர்கள் சொன்ன மாதிரி நீங்க கடைசி வரைக்கும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் உங்களுக்கு உதவி செய்த எல்லாருக்கும் நீங்க காட்டும் நன்றி.
கௌதம் நிஜமாவே நடந்ததுன்னா ரொம்பவே நன்றாக இருக்கு
பகிர்ந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி
நன்றாக அன்புடன் நலத்துடன் மகிழ்வுடன் சிறந்து வாழ வாழ்த்துகள்
கடைசிப்பாலாக இல்லாமல் காதல்பால் வாழ்வில் இனிமையாய் தொடர வாழ்த்துகள்
சூப்பர்.
/“உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நீங்க நன்றி சொல்லனும்னு அவசியமில்லைம்மா. அது தேவையுமில்லை. இப்படி ஒரு தம்பதிக்குத்தான் கல்யாணம் பண்ணிவச்சோம்னு நாங்க எல்லோரும் எப்பவும் பெருமைப்படுற மாதிரி வாழ்ந்துகாட்டுங்க. அது போதும்!”
/
சத்தியமான வார்த்தைகள்!!!
உங்கள் வாழ்வில் என்றென்றும் காதல் பால் பொங்கிவழியட்டும்!!!!
வாழ்த்துக்களுடன்,
அருட்பெருங்கோ.
!
அழகான கதை
மேலும் மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்!! :)
ஒரே விறுவிறு.....
கதையாக இருந்தாலும் சரி வாழ்க்கையில் நடந்த சம்பவமாக இருந்தாலும் சரி ரொம்ப டச்சிங்கா இருக்குது என்பதுதான் உண்மை... வாழ்த்துக்கள்..
காதலுக்கு மரியாதை செஞ்ச உங்களை 'இணைய தளபதி'ன்னு பட்டம் கொடுத்து கூப்பிடப் போறேன்..புடிங்க கௌதம் சார்!
என்ன ஆச்சு கௌதம்? எல்லாம் கடைசி.. தடாலடி, காதல் பால்.. வலைப்பூ விட்டுட போறீங்களா?
எனக்கு நீங்க தான் இன்ஸ்பிரேஷன்..
I hope these ends are a beginning of other new series of posts.
காதலுக்கு மரியாதை செஞ்ச உங்களை 'இணைய தளபதி'ன்னு பட்டம் கொடுத்து கூப்பிடப் போறேன்..புடிங்க கௌதம் சார்!
No No.. ஒத்துக்க மாட்டேன். பெற்றோர்கள் சம்மதத்தையும் பெற்று ஜெயிக்கிற காதலுக்கு தான், Fazil அந்த Title குடுத்திருக்கிறார்
கலக்கல் ஜி... ரொம்பவே டச்சிங்.. விறுவிறுப்பான கதை..
/“உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நீங்க நன்றி சொல்லனும்னு அவசியமில்லைம்மா. அது தேவையுமில்லை. இப்படி ஒரு தம்பதிக்குத்தான் கல்யாணம் பண்ணிவச்சோம்னு நாங்க எல்லோரும் எப்பவும் பெருமைப்படுற மாதிரி வாழ்ந்துகாட்டுங்க. அது போதும்!”
/
மிக நெகிழ்வான வார்த்தைகள்.. நிகழ்காலத்தில் இது சாத்தியம் என்பதற்கான ஒரு சான்று உங்கள் வாழ்வு எனும் போது நெஞ்சம் நெகிழ்கிறது...
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
கெளசல்யா சொன்னதுபோல் நீங்கள் எப்படியும் ஏதாவது ஒருவிதத்தில் மற்றவர்களுக்கு ஒரு ஊக்குவிக்கும் காரணியாக இருந்திருப்பீர்கள் என்ற கூற்றும் மெய்ப்படுகிறது..
உங்கள் முடிவு நிச்சயம் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்...
Last but not least, We (I) Miss You Gowtham Ji....
romba arumaiyeaa irukkunga...kadaisee varigal arumai..
Post a Comment