Monday, October 30, 2006

உதடுகளில் உனது பெயர்! / காதல்பால்


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொருட்பால், அதிகாரம்: 43. அறிவுடைமை, குறள்: 423
யார் சொல்ல எதைச் கேட்டாலும் அந்த விஷயத்தில் உண்மை என்னவாக இருக்கும் என உணர்வதே அறிவாகும்.

காட்சி : 1 இடம் : காலேஜ் லைப்ரரி
ஜன்னலோர இருக்கையில் முழுநிலவு! உட்கார்ந்திருக்கிறாள் அவள். எதையோ ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கிறாள். வியர்க்க விறுவிறுக்க லைப்ரரிக்கும் நுழையும் தோழி, அவளை நோக்கி ஓடி வருகிறாள்!

“போச்சு.. எல்லாமே போச்சுடி!”

“ஏய் லூசு. என்னாச்சுடி உனக்கு? என்ன உளர்றே?”

“யாரு நானா லூசு! அவனை நம்பி மோசம் போனியே, நீதான் லூசுப்பொண்ணு. உன்னோட ஆசைக்காதலன் இருக்கானே அவன் உனக்கு மட்டும் காதலன் இல்லே. இன்னொருத்தியையும் லவ் பண்றான்டி”

“என்ன சொல்றே?”

“அவன் உன்ன நல்லா ஏமாத்திட்டு இருக்கான்னு சொல்றேன்”

கோபத்தில் நிலாப்பெண்ணின் முகம் ரத்தச் சிவப்பாகிறது!

“எவ அவ?”

“தெரியல, ஈவினிங் காலேஜ் பொண்ணுன்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் நெருக்கமா நின்னு பேசிக்கிட்டிருந்தத நானே என் கண்ணால பார்த்தேன்”

“எங்கே?”

“ரவுண்டானாவுக்குப் பக்கத்தில் இருக்க பார்க்ல. பேச்சென்ன பேச்சு.. கொஞ்சாத குறைதான். கருமம். இப்டியா பட்டப்பகல்ல ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் இருப்பாங்க!”

குபுகுபு கோபத்துடன், கூடவே வழியும் கண்ணீருடனும் எழுகிறாள் நிலா..

“எப்பப் பார்த்தே நீ?”

“ஜஸ்ட் நௌ.. இப்பத்தான். மறுபடியும் ஈவினிங் மீட் பண்ணலாம்னு சொல்லிக்கிட்டே பிரிஞ்சு போனாங்க. இன்னிக்கு ஈவினிங்கே நீ அங்கே போனாலும் அந்தக் கூத்தைப் பார்க்கலாம்”

ஆத்திரமும் அழுகையும் ஏமாற்றமுமாக இருகும் நிலாப்பெண்ணின் முகம் க்ளோசப்பில் கொதிக்கிறது.

காட்சி : 2 இடம் : காலெஜுக்கு எதிரே இருக்கும் இண்டர்நெட் ப்ரௌசிங் சென்டர்
மும்முரமாக வலையில் மூழ்கிப் போயிருந்தான் அவன், நிலாப் பெண்ணின் காதலன். வியர்க்க விறுவிறுக்க லைப்ரரிக்கும் நுழையும் (அதே)தோழி, அவனை நோக்கி ஓடி வருகிறாள்!

“போச்சு.. எல்லாமே போச்சுடி!”

“ஏய் லூசு. என்னாச்சு உனக்கு? என்ன உளர்றே?”

“யாரு நானா லூசு! அவளை நம்பி மோசம் போனியே, நீதான் லூசுப்பையன். உன்னோட ஆசைக்காதலி இருக்கானே அவன உனக்கு மட்டும் காதலி இல்லே. இன்னொருத்தனையும் லவ் பண்றா”

“நிறுத்து. பொண்ணா இருக்கதால அறையாமப் பேசுறேன். இல்லேன்னா இந்நேரம் வகுந்திருப்பேன்”

“அவ உன்ன நல்லா ஏமாத்திட்டு இருக்கான்னு சொல்றேன். நீ என்னடான்னா என்னை அடிப்பேன்னு சொல்றே!”

கோபத்தில் அவன் முகம் ரத்தச் சிவப்பாகிறது!

“அவளைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உன் மேல நான் வச்சிருக்க இமேஜைக் கெடுத்துக்காதே. ஓடிப்போ”

“ப்ரண்டாச்சே, பாவம்னு பார்த்த்தைச் சொல்லி ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் பாரு. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். எவனோ ஈவினிங் காலேஜ் பையன்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் ரவுண்டானாவுக்குப் பக்கத்தில் இருக்க பார்க்ல நெருக்கமா நின்னு பேசிக்கிட்டிருந்தத நானே என் கண்ணால பார்த்தேன்”

“வாயைக்கழுவு முதல்ல. நீயும் நானும் கூடத்தான் இப்ப நெருக்கமா உட்கார்ந்து பெசிக்கிட்டு இருக்கோம். அதுக்காக நாம லவ்வர்ஸ்னு சொல்லிடறதா?!”

“பேச்சென்ன பேச்சு.. கொஞ்சாத குறைதான் அங்கே அவங்க ரெண்டு பேரும். கருமம். இப்டியா பட்டப்பகல்ல ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் இருப்பாங்க!”

சொல்லியபோதே தன் தோளை அனிச்சையாக உரசிய அவளை கோபப்பார்வையால் எரிக்கிறான் அவன்.

“நீயும் நானும்கூட இப்ப உரசிக்கிட்டுதான் உட்கார்ந்திருக்கோம், தெரியும்ல!”

சட்டென விலகுகிறாள் அவள்.

“இங்க பார். என்னை நான் எவ்வளவு நம்புறேனோ அவ்வளவுக்கு என் காதலியையும் அவ காதலையும் நம்புறேன். அவ உதட்டால என் பேரைச் சொல்லி கூப்பிடுறப்ப, உயிரால கூப்பிடுறதாத்தான் உணர்றேன். மரியாதையா நீ இப்பவே இந்த இடத்தைவிட்டுப் போயிடு. இல்லே.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”

ஆத்திரமும் அழுகையும் ஏமாற்றமுமாக இருகும் தோழிப்பெண்ணின் முகம் க்ளோசப்பில் கொதிக்கிறது!

காட்சி : 3 இடம் : ரவுண்டானாவுக்கு அருகே இருக்கும் அந்தப் பூங்கா
காதலர்கள் இருவரும் ஒருவர் கையை இன்னொருவர் இருகப்பற்றி இருக்க, நெகிழ்ந்த கண்களுடன் தோழிப்பெண் நிற்கிறாள். பேசுகிறாள்..

“மன்னிச்சுக்கங்க! நான் செஞ்சது தப்புதான், தெரிஞ்சே செஞ்ச தப்புதான்! உங்க ரெண்டு பேரோட காதலையும் சும்மா டெஸ்ட் பண்ணிப்பார்க்க முடிவெடுத்தேன். இல்லாததையும் பொல்லாததையும் கதை கட்டிவிட்டு, இப்ப உங்ககிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதுவும் ஒருவகையில் நல்லதுக்குத்தான். இப்ப நான் ஒரு உண்மையை உணர்ந்திருக்கேன்”

பேசியபடியே நிலாப் பெண்ணின் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்கும் தோழி பஞ்ச் டயலாக் பேசுகிறாள்..

“சத்தியமா சொல்வேன் இப்ப. நீ அவன் மேல வச்சிருக்க காதலைவிட அவன் உன்மேல வச்சிருக்க காதல் ரொம்ப பெருசு. உண்மையில நீ கொடுத்துவச்சவ!”

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
, அறியவேண்டியது காதல்!

முந்தைய காதல்பால் இங்கே!

வலிக்குதா கண்ணா?/எப்படி? எதற்கு? ஏன்?


ராமுவும் சோமுவும் பள்ளித் தோழர்கள். பக்கத்து வீட்டுக்காரர்களும் கூட.

விடுமுறை நாளில் தங்கள் அப்பாக்களின் சைக்கிளை எடுத்து ஓட்டிப்பழக ஆசைப்பட்டனர். பெற்றோரிடம் அனுமதி கேட்டனர்.

“வேண்டாம் நீங்கள் சின்னப் பையன்கள். சைக்கிள் உயரம்தான் உங்களுக்கு. இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு பெரிய சைக்கிள் ஓட்டலாம்” என்றார்கள் பெற்றோர்.

தங்கள் ஆசை ஏமாற்றத்தில் முடிவதை விரும்பாத பொடியன்கள் இருவரும் அவரவர் வீட்டிற்குத் தெரியாமல் அப்பாக்களின் சைக்கிள்களை லவட்டிக்கொண்டு வெளியேறினர். தட்டுத்தடுமாறியபடி ஓட்டப்பழகினர். பாவம், கீழே விழுந்து ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பினர்!

“சைக்கிளை எடுக்காதேன்னு சொன்னேன்ல, கேட்டியா? ராஸ்கல்.. இனிமே எடுப்பியா?” என்று அதட்டி ராமுவுக்கு நாலு அறை கொடுத்தனர் அவன் பெற்றோர்.

“பெரியவங்க சொல்பேச்சு கேட்காததால இப்படி ஆகிடுச்சு பார்த்தியா” என்று கண்டித்த சோமுவின் பெற்றோர், பையனின் காயத்தைப் பார்த்து பதறினர். “வலிக்குதா கண்ணா?” எனக்கேட்டு மருந்திட்டனர். “காயம் ஆறட்டும். அப்புறம் ஒரு நாள் அப்பாவைக் கூட்டிட்டு கிரௌண்டுக்குப் போயி சைக்கிள் ஓட்டிப்பழகலாம்” என்றாள் சோமுவின் அம்மா.

இதுவரை நடந்தது ஃப்ளாஷ்பேக்! இனி நிகழ்காலம்!!

ஒன்றாகவே கல்லூரிப் படிப்பு முடித்தனர் ராமுவும் சோமுவும். வேலை வாய்ப்பு தேடி அலைந்து அலுத்தனர்.

இருவரில் ஒருவன் துணிச்சலாக சொந்தத்தொழில் ஆரம்பித்து, போராடி ஜெயித்தான். மற்றவன் அந்தத் துணிச்சல் இல்லாமல் இன்னும் நியூஸ் பேப்பர் பார்த்து வெலை வாய்ப்புக்காக அப்ளிகேஷன் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

துணிச்சல்காரன் யார்? துணிச்சலுக்குக் காரணம் யார்? யூகிக்க முடிகிறதா?

?

?

?

?

?

?

?

யெஸ்.. சோமுதான் அந்த துணிவின் தோழன். தொழிலில் ஒருவேளை தான் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், ஆறுதல் சொல்லவும் வழிகாட்டவும் அருமைப் பெற்றோர் நம் அருகில் இருக்கிறார்களே என்ற நம்பிக்கை அவனுக்கு.!

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள் இங்கே!

Wednesday, October 25, 2006

தப்பிச்சுக்கோ! எப்படி?எதற்கு?ஏன்?


சை ஆசையாக அவன் ஆரம்பித்த தொழில் அது. ஆனால் வெற்றிக்கு ஆசை மட்டும் இருந்தால் போதுமா! போதுமான அனுபவமும் முதலீடும் இல்லாததால் தொடர்ந்து நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்தது.

எல்லா வழிகளிலும் போராடிப் பார்த்து, லாபக்கணக்கு எழுதமுடியாமல் திணறினான் அவன். ஆரம்பித்த தொழிலை பாதியில் அப்படியே நிறுத்தவும் மனமில்லாமல் தடுமாறினான். ‘ஊர் உலகம் ஏளனமாகப் பேசுமே’ என்ற கவலையும் அவனது மனக்குழப்பத்துக்கு இன்னொரு காரணம்.

இறங்குமுகத்தில் இருக்கும் தொழிலைச் சமாளிப்பதற்காக அடுத்தடுத்து கடன் வாங்கி, வட்டிக்கு மேல் வட்டியானது. கட்டமுடியாமல் திணறினான். நெருங்கிய நண்பன் ஒருவனைச் சந்தித்து ஆலோசனை கேட்க முடிவெடுத்தான். அதிகாலை நேரத்திலேயே வாக்கிங் போவதாக வீட்டில் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

வழியில் ஒரு அசம்பாவிதம்! திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது ஒரு வீடு! தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தனர் தீயணைப்புப் படை வீரர்கள்.

பதட்டத்தோடு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் அவனும் சேர்ந்துகொண்டான். நல்லவேளை.. உயிர்ச்சேதம் ஏதுமில்லை! கதறிக் கொண்டிருந்த குடும்பத்தினரை ஆட்டோவில் ஏற்றி எங்கோ அனுப்பிவைத்தார் வீட்டுக்குச் சொந்தக்காரர். போட்டது போட்டபடியே அப்படியே விட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி இருக்கவேண்டும் போலும், மேல் சட்டைகூட போடாமல் இருந்தார்.

“நகை, பணம், துணி.. எதையும் எடுக்க முடியலியா?” - கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

வீட்டுக்காரர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அவனும் ஆர்வமானான். எல்லாவற்றையும் நெருப்புக்குக் கொடுத்துவிட்டு நின்றஅந்த மனிதர் சொன்னது அவனது தொழில் குழப்பத்துக்கும் பதிலாக இருந்தது! நஷ்டத்தில் நடந்துகொண்டிருக்கும் தொழிலை அப்படியே நிறுத்திவிட்டு தப்பிக்கும் முடிவோடு திரும்பினான்!

அப்படி என்ன சொன்னார் அவர்?

?

?

?

?

?

?

?

“கிடைச்ச அவகாசத்துல என் குடும்பத்தினரை மட்டுமே காப்பாத்த முடிஞ்சது. நகை, பணம், துணியையெல்லாம் காப்பாத்த முயன்றிருந்தால் நானும் எரிந்து போயிருப்பேன்! நல்லவேளை இப்ப நான் உயிரோட இருக்கேன். இழந்ததையெல்லாம் சம்பாதிச்சுக்கலாம்ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள் இங்கே!

அம்மா அப்பா விளையாட்டு! / காதல் பால்


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
- அறத்துப்பால், அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை, குறள்: 136

ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை உணர்ந்து, அச்செயலைத் தவிர்த்து விடுவார்கள் அறிவுடையோர்.


“ஆமா.. ‘டேட்டிங் டேட்டிங்’னு சொல்றாங்களே! அப்படின்னா என்ன?” - அவளை ஓரக்கண்களால் பார்த்தபடியே கேட்டான் அவன்.

இரண்டு கண்களாலும் முறைத்தபடியே சொன்னாள் அவள்.. “என்னது.. கிண்டலா? தொலைச்சுப் புடுவேன், ஜாக்கிரதை!”

“யேய் நிஜமாடா! என்ன நம்பு. என்னன்னு தெரியாமத்தானே கேட்குறேன். உனக்குத் தெரிஞ்சா விளக்கம் சொல்லு. இல்ல, ‘தெரியாது’ன்னு சொல்லு! இதுக்கு ஏன் லுக் விடுறே?”

“யாருக்கு? உனக்கா தெரியாது? என்னை நம்பச் சொல்றியாக்கும்? திருட்டு ராஸ்கல்!”

“முன்னே பின்னே செத்திருந்தாதானேம்மா சுடுகாடு தெரியும். நான் இதுவரை டேட்டிங் போனதே இல்லை. நல்லா சொல்றேன், கேட்டுக்கோ. இதுவரை நான் எவகூடவும் டேட்டிங், போட்டிங்னு எந்த தப்புத்தண்டாவும் பண்ணதில்லை”

“ஹை! டேட்டிங்னா என்னன்னே தெரியாதுன்னு போன நிமிஷம் சொன்னே. இப்ப என்னடான்னா தப்புத்தண்டான்னு அனர்த்தம் சொல்றே! இந்த ஜோலியெல்லாம் நம்மகிட்ட நடக்காது மகனே. நேரடியா மேட்டருக்கு வா! இப்ப என்னான்றே நீ?

“சரி சரி.. கமிங் டு த பாயிண்ட். என்கூட வெளியூருக்கு வர்றியா? ஒரு ஜாலி ட்ரிப்?”

இதைத்தான் கேட்கப் போகிறான் என அவன் இந்தப் பேச்சை எடுத்ததுமே யூகித்துவிட்டிருந்ததால் அதிர்ச்சி இல்லை அவளது முகத்தில். அதனால் ஏமாற்றம் அவன் முகத்தில்!

“ஏண்டீ.. ‘டேட்டிங் வா’ன்னு கூப்பிடறேன். நீ என்னடான்னா ஏதோ ‘டீ குடிக்க வா’ன்னு நான் கூப்பிட்டமாதிரி காஷூவலா ரியாக் ஷன் கொடுக்குறே!” என வெளிப்படையாகவே கேட்டுவிட்டான்.

அவனை முகத்துக்கு முகம் பார்த்தபடியே பேசினாள் அவள்.. “டேட்டிங்னா நீ சொன்னமாதிரி தப்பு தண்டாவெல்லாம் கிடையாது. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு மனம் விட்டுப் பழக, பேச, சிரிக்க ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.”

“ஓஹோ! அப்புறம்..?” - அவள் பேச்சை ரசித்தான் அவன்.

“ம்.. விழுப்புரம்! குறுக்கே பெசாம கேளு.. நீயும் நானும் மூணு வருஷமா லவ் பண்றோம். ஒருத்தர ஒருத்தர் ஏறக்குறைய நல்லாவே புரிஞ்சாச்சுன்னு நான் நம்பறேன். இப்ப எதுக்கு நமக்கு டேட்டிங்? நாம என்ன காலேஜ் பசங்களா! ரெண்டு பேரும் டீஸண்டான ஜாப்ல இருக்கோம்ங்குறதை மறந்துடாதே!”

“அடச்சீ! வேலை பார்க்குறதுக்கும் டீஸண்டுக்கும் டேட்டிங்குக்கும் என்ன சம்பந்தம்? ஏன் உளர்றே?” என்றான் அவன்.

இப்போது அவள் முறை.. “ஓஹோ! அப்புறம்..?” என்றாள்.

“வருவியா? வரமாட்டியா? வரலேன்னா உன் பேச்சு கா!” எனப்பாடினான்.

“நீ சின்னப் புள்ளைத்தனமா ஏதும் வரம்பு மீற மாட்டேன்னு ப்ராமிஸ் கொடுத்தா நான் உன்கூட எங்க வேண்ணாலும் வரத்தயார்” என்றாள் அவள்.

“ஏன் என் மேல அவ்வளவு பயமா?” - லேசான வெட்கத்துடன் திரும்பி நின்ற அவளின் இடுப்பைப் பிடித்து செல்லமாகக் கிள்ளியவாறே கேட்டான்.

“அப்படின்னு இல்லை” - செல்லமாகவே சிணுங்கினாள் அவள்.

தூண்டில் வீசினான் அவன்.. “அப்படியா ரொம்ப சந்தோஷம். அப்ப.. வா என்னோட”

“வந்து..?” - இந்தத் தூண்டில் அவளிடமிருந்து!

“வா! ரூம் போட்டு ஓடிப் பிடிச்சு விளையாடலாம் ரெண்டு பேரும்!” - குஷியோடு சொன்னான் அவன்.

வெட்கச் சிவப்போடும் பொங்கும் சிரிப்போடும் அவனை அடிக்க கையை ஓங்கினாள் அவள். பார்க் பெஞ்சில் இருந்து எழுந்து குழந்தைபோல ஓடினான் அவன்.

ந்த நாளும் வந்தது!

மகாபலிபுரம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த அரசுப் பேரூந்தின் கடைசி வரிசையில் ஜன்னலோரம் அவள். அவளோரம் அவன்!

அவனுக்கு நினைக்க நினைக்க ஜில்லென்று இருந்தது. அவளுக்கோ உஷ்ணப் பெருமூச்சு!

மெதுவாக அவள் காதுகளில் கிசுகிசுத்தான் அவன்.. “யேய் இப்ப சொல்! நிஜமாவே என்னை ஒண்ணும் பண்ணவிட மாட்டியா?”

“என்னது?” - காதில் எதுவும் விழாதவளாக நடித்தாள் அவள்.

அவன் மறு மொழிந்தான்.. “முத்தம் கொடுக்கக்கூட விடமாட்டியாடி? நான் பாவமில்லை!”

‘க்ளுக்’கென சிரித்தாள் அவள்.

“இந்தாங்க பாக்கி சில்லறை. நீங்கதானே ஐநூறு ரூபா நோட்டு கொடுத்தது?” என்றார் அருகே வந்த கண்டக்டர்.

கண்டக்டர் விலகிச் சென்றதும் மறுபடியும் ஏக்கத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான் அவன்.

அவனது வலது கையை எடுத்து தன் இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையில் வைத்துப் பொத்திக் கொண்டாள் அவள். அவன் முகத்தைப் பார்க்காமலேயே சொன்னாள்.. “நான் என்னிக்கு இருந்தாலும் உனக்கானவ. நீ ஆசைப்பட்டா இன்னிக்கே என்னை உனக்கு முழுசா தரவும் நான் தயார்”

அவன் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. ரத்தம் இரண்டு மடங்கானது போலிருந்தது!

“நிஜமாத்தான் சொல்றியா?”

“ம்”

வெட்கம் பிடுங்கித்தின்றது போக ஒரு எழுத்துப் பதிலை மட்டுமே சொல்ல முடிந்தது அவளால்! பிடிக்குள் இருந்த அவனது கையை இருக்கினாள்.

அதற்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை!

ரொம்பவே விசாலமானதாக இருந்தது அந்த கடற்கரையோர ரிசார்ட்..

வரவேற்பறையில் இருந்து கூடவே நடந்து வந்து, அவர்களுக்கு ஒதுக்கிய அறையின் கதவைத் திறந்து கொடுத்தான் ரூம் பையன். விளக்குகளைப் போட்டான். ஏ.ஸி.யினை ஆன் செய்தான். ப்ரிட்ஜைத் திறந்து உள்ளே மினரல் வாட்டர் பாட்டில்கள் இருப்பதை உறுதிசெய்து கொண்டான். “எதுனா வேணும்னா போன் பண்ணுங்க சார். நம்பர்லாம் அதோ அங்கே இருக்கு” என்றபடியே டிரஸ்ஸிங் டேபிளின்மீது கிடந்த லேமினேடட் சார்ட்டைக் காட்டினான். கொஞ்சம் தயங்கி நின்று, தலை சொரிந்து, கொடுத்த டிப்ஸை வாங்கிக்கொண்டு வெளியேறினான்.

கதவை சத்தமில்லாமல் சாத்தினான் அவன். தாழ்ப்பாள் போட்டான். திரும்பினான். சுவற்றைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்த அவளை நோக்கி நடந்தான்.

அந்தக் கணம் இருவருக்குமே புத்தம் புதிதாக இருந்தது! மூன்று வருடக் காதல் காலத்தில் செக்ஸ் பற்றியெல்லாம் கூச்சமில்லாமல் விவாதித்தவர்கள்தான் இருவருமே. ஆனால் அதுதான் தங்களுக்குள் நடக்கப் போகிறது என்று தெரிந்த மாத்திரத்தில் அட்டையாக வந்து ஒட்டிக்கொண்டுவிட்டதே பாழாய்ப்போன இந்த வெட்கம்!

அருகே சென்றவன், அவள் முதுகை உரசியபடி நின்றான். சிலிர்த்தாள் அவள்.

தன் இரண்டு கைகளையும் கொண்டு அவள் இடுப்பை வளைத்து, இறுக்கிப் பிடிக்கும்போது சின்னதாக அலறியபடியே விலகினாள் அவள்.

“ஒரு நிமிஷம்” என்றாள், அறைக்குள்ளேயே இருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

தலையில் கை வைத்தபடியே வெளியே வந்தாள் அடுத்த சில நிமிடங்களில்..

“ப்ச்! பக்கத்துல எங்காச்சும் மெடிகல் ஷாப் இருக்குமா?” என்றாள்.

“ஏன்?” என்றான் லேசான கலவரத்துடன்.

“இல்ல.. நாப்கின் வாங்கித் தர முடியுமா? வழக்கமா அது வர்றதுக்கு இன்னும் நாலஞ்சு நாள் இருக்கு. ஆனா இன்னிக்கே வந்துடுச்சு!”

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து,
உடலறியும் உண்மைக்காதல்!

முந்தைய காதல்பால் இங்கே!

Friday, October 20, 2006

தோழர்களே! தோழியரே!


அன்புத்...தோழர்களுக்கும்
அருமைத் தோழியருக்கும்

என் நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, October 17, 2006

நிலா காயுது../எப்படி?எதற்கு?ஏன்?


ணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போய் வருபவர்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் விடுமுறை.

சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் வீட்டுக்குத் திரும்பும்போதே கணவனுக்கு காதல் மூடு வந்துவிடும். மனைவிக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கிக்கொண்டு வருவான். “சினிமாவுக்குப் போலாம்” என்பாள் அவள்.

வேண்டாவெறுப்புடன் வெளியே கூட்டிப்போவான். வேண்டுமென்றே சண்டையும் போடுவான். “விஜய் படம் போலாம்” என அவள் சொன்னால், “அஜித் படம் போலாம்” என அவன் சொல்வான். வாதங்களில் அவனே ஜெயிப்பான்.

விதண்டாவாதங்களுக்கான காரணம் ‘இரவு’ விவகாரம். சினிமா பார்த்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இரவு பத்து மணிக்குமேல் அலுப்போடு வீட்டுக்குள் நுழைவார்கள் இருவரும். ‘நான்ஸ்டாப் கொண்டாட்டம்’ நடத்தும் நோக்கத்தோடு மனைவி மீது அவன் பாய.. “ஸாரிங்க, ரொம்ப டயர்டா இருக்கு. இன்னிக்கு வேணாம்” என அவள் திரும்பிப் படுத்து விடுவாள்.

‘ம்ஹூம் இந்த சனிக்கிழமை ஏமாந்துபோகக் கூடாது!’

ஒரு முடிவோடு வீட்டுக்குள் நுழைந்தான் கணவன். வழக்கம் போலவே மனைவி கேட்டாள்.. “ஏங்க சினிமாவுக்குப் போலாமா?”

“வேண்டாம்”

அவ்வளவுதான்! சண்டை பிடித்து விட்டாள் மனைவி. சில நிமிடங்கள் ஆனதும் திட்டமிட்டபடியே தோற்றுப் போனான் அவன். இருவரும் சினிமாவுக்குக் கிளம்பினார்கள்.

வழியில் ஓடும் பைக்கிலேயே அடுத்த சண்டை! ‘த்ரிஷா படம் போலாமா - அஸின் படம் போலாமா?’

இந்த சண்டையிலும் திட்டமிட்டபடியே அவனே தோற்றான். அவள் இஷ்டப்படி அஸின் படத்துக்கே போனார்கள்.

தியேட்டர், ஹோட்டல் எல்லாம் முடித்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டான் அவன். தன்னிடம் இரண்டு முறை தோற்றுப்போனதுதான் அதற்குக் காரணம் என்று அவளுக்கும் தெரிந்தது!

அப்புறம் என்னாகி இருக்கும்?


?

?

?

?

?

?

?

வேறென்ன, அவன் எதிர்பார்த்த மாதிரியே அவன் ஜெயித்தான். இனிக்கும் இரவுதான்! இதைத்தான் சின்ன மீனை இழந்து விலாங்கு மீனைப் பிடிக்கும் டெக்னிக் என்பார்கள்!!

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' கள் இங்கே!

Monday, October 16, 2006

விளம்பரம்: குங்குமம் இந்த வாரம்..

குங்குமம் இந்த வாரம்!

சில்லுனு சினிமா, சிலுசிலுனு இலக்கியம்...
தீபாவளி சிறப்பிதழ் - இரண்டு புத்தகங்கள்

சில்லுனு சினிமா
  • ரஜினியும் நானும்! - வெற்றிப்பயணத்தை விவரிக்கிறார் ஷங்கர்
  • மணிரத்னம் அழைத்தால்கூட நடிக்க வரமாட்டீர்களா? - சானியாமிர்ஸா பிரத்தியேக பேட்டி
  • லவ் பண்ணுடா மகனே! - சிம்புவுக்கு விஜய டி.ஆர். காதல் டிப்ஸ்
  • நான் மிடில் க்ளாஸ் ஆளு - சிரஞ்சீவி பேசுகிறார்
  • ரயிலில் பிறந்த ஹீரோ - என்.சொக்கன் கட்டுரை
  • முன்னாபாய்-II - விமரிசனம்
  • இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அனுபவத் தொடர்
  • சிம்மாசனத்தை தொலைத்துவிட்டு அடையாளம் தேடும் திறமையான இசையமைப்பாளர் - ஒரு நிஜம்
  • 'முனி' கலகல கலாட்டா
  • புதுசா வருவான் போக்கிரி - இயக்குநர் பிரபுதேவா
  • தசாவதாரத்துக்காக கடலில் வீசப்பட்ட கமல்
  • ம்ணிரத்னத்தின் அடுத்த நாயகன்
  • இந்த தீபாவளிக்கு 7 வெடிகள் - சினிமா ஸ்பெஷல்
  • சிவப்பதிகாரம் ரவுண்ட் அப்
  • ரஜினி நம்மாளுய்யா - சாலமன் பாப்பையா
  • இளையராஜாவின் புதிய அவதாரம்
  • நிழல் ஹீரோவை நிஜத்தில் சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்
  • ஜெயம் ரவியின் தித்தீபாவளி

சிலுசிலுனு இலக்கியம்

  • முகம் பார்க்கலாம்.. - மதன் எழுதும் '!' தொடர்
  • படையெடுத்த கவிஞர்.. பதறிய தேசங்கள்
  • சுஜாதாவின் விடுபட்டுப்போன ஸ்ரிரங்கத்துக் கதை
  • நிறங்கள் - ராஜேஷ் குமார் சிறுகதை
  • ம்.செ. வின் தூரிகையில் அனுராதா ரமணன் சிறுகதை
  • கிரேஸி மோகனின் கிச்சு முச்சு
  • எஸ்.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை
  • பகீரதப் பிரயத்தனம் - சுகி சிவம்
  • அழகே அனார்கலி
  • மு.வ. பற்றி அவரது பேரன்
  • அழகிய பெரியவன் கட்டுரை
  • பரமசுகம் - சிறப்புச் சிறுகதை கி.ராஜநாராயணன்

இன்னும் இன்ன்ன்னும்.. இப்போது விற்பனையில்!

குங்குமம் - பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!

குங்குமத்துக்கு தீபாவளி பரிசு!

டந்த வாரம் வெளியாகி இருக்கும் IRS எனப்படும் INDIAN READERSHIP SURVEY முடிவுகளின்படி குங்குமம் வார இதழே இப்போதும் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' என தீர்ப்பளித்திருக்கிறார்கள் தமிழ் வாசகர்கள். இருபத்தாறு லட்சத்து முப்பதாயிரம் வாசகர்களுடன் இந்திய அளவில் தமிழ் வார இதழ்களில் முதல் இடத்தில் இருக்கிறது குங்குமம் (இந்திய அளவில் அனைத்து மொழிகளில் வரும் இதழ்களைக் கணக்கெடுத்துக் கொண்டால் நான்காவது இடம்). மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்..

Wednesday, October 11, 2006

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தடாலடி!


மக்களே! மக்களுக்கும் மக்களான வலைப்பெருங்குடி மக்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அடுத்த தடாலடி போட்டி..

இம்முறை பரிசுக்குரியவர்களாக நான் தேர்ந்தெடுக்கப் போவது 2 பேரை.

பரிசு: கொஞ்சம் சஸ்பென்ஸ், அது என்னவென்பதை கடைசியில் சொல்கிறேனே! வேண்டுமானால் ஒரு க்ளூ: சூப்பர் ஸ்டார்களை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு!

வழக்கம்போலவே கடந்த போட்டிகளுக்கான விதிமுறைகளே இதற்கும் பொருந்தும்.
இதோ போட்டிக்கான கேள்விச் சங்கிலி ஆரம்பம். சும்மா ஜாலியா ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க! கெடு நேரம்: 14.10.2006, 12 Noon வரை மட்டுமே!

முக்கியமாக ஒரு விஷயம்.. நீங்கள் என் வலைப்பூவை ஓரளவுக்காவது படித்திருந்தால் மட்டுமே பரிசை அடைய முடியும்!!

முதல் கேள்வி: 'ஜி போஸ்ட்'டின் முதல் பதிவின் தலைப்பு என்ன?
(சரி என நீங்கள் கருதும் விடையின் மீது சொடுக்கவும்)
அ. ஹலோ
ஆ. வணக்கம்
இ. என் இனிய வலைத்தமிழ் மக்களே

மங்களம் உண்டாகட்டும்/எப்படி?எதற்கு?ஏன்?


கிராமத்து ஆலமரம். ஊர்ப்பெருசுகள் பலரும் ஒன்றாகக் கூடி உள்ளூர் விவகாரங்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.

புதிதாக வந்து சேர்ந்தார் கோயில் கணக்காளர். அவர் முகத்தில் வருத்தக் களை!

“என்னாச்சு? பொண்ணுக்கு வரன் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு டவுனுக்குப் போனியே! ஏதாச்சும் பிரச்னையா?” என்று கேட்டார் ஊர்ப் பெரியவர். எதைச் சொன்னாலும் சரியாகவே சொல்வார் என்பதால் ஊருக்குள் அவரது பேச்சுக்கு மவுசு அதிகம்.

“இல்லிங்க. எம் பொண்ணுக்குப் பொருத்தமான வரன் அமையல!” - வருத்தத்துடன் சொன்னார் கணக்கு.

“ஏன்யா நீயும் ரெண்டு வருஷமா மாப்பிள்ளை பார்க்குறே. இன்னுமா அமையல?!” என்றார்கள் உடனிருந்தவர்கள்.

மற்றவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு பெரியவர் பேசினார். நாலைந்து பக்கத்து ஊர்களின் பெயர்களைச் சொல்லி, “இங்கெல்லாம் போய்ப் பார்த்தியா?” என்றார்.

“இல்லை. அந்த ஊர்க்காரங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் சரிப்பட்டு வராதுங்குறது என் எண்ணம்” என பதில் சொன்னார் கணக்கு.

“உள்ளூர்ல எந்தப் பையனையும் பிடிக்கலையா? டவுன் மாப்பிள்ளைதான் வேணும்னு முடிவா?” என்றார் பெரியவர்.

“படிச்ச பொண்ணுல்ல. அதனால உள்ளூர் மாப்பிள்ளை சரிப்பட்டு வராதுங்குறது பொண்ணு நினனப்பு” என்றார் கணக்கு.

“ம்.. உன் பொண்ணுக்கு இன்னும் மாப்பிள்ளை கிடைக்காததுக்கு நீயும் உன் பொண்ணுமே காரணம்” என்ற பெரியவர், “அங்கே பார்” என தூரத்தில் எதையோ கை நீட்டிக் காட்டினார்.

அங்கே.. கோழி ஒன்று குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது! கோழிக்கும் குப்பைக்கும் கணக்கப்பிள்ளைக்கும் முடிச்சுப் போட்டு தன் கருத்தைக் கூறினார் பெரியவர். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அது..?


?

?

?

?

?

?

?

“குப்பைதானே என குறைவாக எண்ணாமல் தன்னோட தேடலைச் செய்யுது கோழி. நம்பிக்கைதானே வாழ்க்கை. அந்த நம்பிக்கையே கோழிக்கு அது தேடும் தானியத்தைக் காட்டும். உனக்குத் தெரியுமா, எந்தக் குப்பையில் இருந்தும் தானியம் கண்டுபிடிக்கும் சாமர்த்தியம் கோழிக்கு உண்டு. ஆனா நீயும் உன் பொண்ணும் ‘இதெல்லாம் குப்பை’ன்னு உங்க முன்னாடி இருக்கும் பல வாய்ப்புகளை உதாசீனப்படுத்திடறீங்க!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' கள் இங்கே!

சட்னு சொல்! / காதல் பால்


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வா யெல்லாஞ் செயல்
- அறத்துப்பால், அதிகாரம்: 4. அறன் வலியுறுத்தல், குறள்: 33

அறச் செயல்களைச் செய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் தவறாது செய்துவிட வேண்டும்.

கிர்ர்ர்ர்ரீச்!’

ஆட்டோ வேகமாக வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் ஆவலோடு வாசலுக்கு ஓடினாள் அவள். அதற்குள் அவன் படியேறிக் கொண்டிருந்தான்!

“நேரமாச்சும்மா! எங்கே சூட்கேஸ்?” என்றான் அவளைப் பார்த்த ஜோரில்.

“ரெடியாத்தான் இருக்கு, வாங்க வீட்டுக்குள்ள. ஏன் வாசல்லயே நின்னு பேசணும்” - செல்லமாக அவனைக் கடிந்தாள்.

“அம்மா தாயே உட்கார்ந்து பேச நேரமில்ல எனக்கு. உடனே ஓடணும். ஏற்கெனவே எங்க எம்.டி. கொடுத்த வழவழா லெக்சரால ஃப்ளைட்டை மிஸ் பண்ணிட்டேன். இந்த கடைசி ட்ரெயினையும் விட்டுட்டா அப்புறம் டப்பா பஸ்தான். செத்து சுண்ணாம்பாயிடுவேன்!” - ஷூ கால்களோடு அப்படியே வீட்டுக்குள் ஓடினான். பின்னாலேயே ஓடினாள் அவளும்.

ஹாலைக் கடக்கும்போது டைனிங் டேபிளில் இருந்துவந்த கமகம அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.

“உன் சமையலை மெச்சறேன். ஆனா சாப்டுட்டு போக நேரமில்லம்மா. ப்ளீஸ்.. விட்டுடேன்!” - கெஞ்சினான். முதலில் முறைத்து, தொடர்ந்து புன்சிரிப்புக் கொடுத்தாள் அவள்.

“தேங்க்ஸ்டா” என்றபடியே பெட்ரூமுக்குப் பறந்தான்.

திரும்ப வரும்போது அவன் கையில் சூட்கேஸ். எதிர்ப்பட்ட அவள் கையில் ஏதோ ஒரு பொட்டலம்!

“இந்தாங்க போற வழில சாப்டுக்கங்க. ஏதோ எனக்குத் தெரிஞ்ச மாதிரி பேக் பண்ணியிருக்கேன். திட்டாதீங்க”

“சரி கொடு”

லேசான எரிச்சலோடு வாங்கிக் கொண்டு, டாட்டா பைபை சொல்லிவிட்டு, வெளியே உறுமலோடு காத்திருந்த ஆட்டோவுக்குள் பாய்ந்தான்.

“என்ன சார் அம்மா டிபன் கட்டிக் கொடுத்தாங்களா?” என்றார் ஆட்டோக்காரர். “ம்” சொன்னான். நெற்றி நிறைய விபூதியுடன் டிப் டாப் ஆக இருந்தார் அந்த நடுத்தர வயது ஆசாமி.பார்சலை அவர் கையில் கொடுத்துவிடலாமா எனவும் ஒரு கணம் யோசித்தான். ஒருவேளை வாங்கிக்கொள்ளா விட்டால்?

“நா வேண்ணா வண்டிய ஜாக்கிரதையா ஓட்றேன். நீங்க பொட்டலத்தைப் பிரிச்சு சாப்டுங்க சார்” என்றார் ஆட்டோக்காரர்.

“இல்ல.. எதுக்குங்க சிரமப்பட்டுக்கிட்டே சாப்பிடணும். ட்ரெய்னுக்கு நேரமாச்சு, வேகமா போலாமே” என்றான் அவன்.

“அட சாப்பிடுற நமக்கே சிரமம்னா சமைச்ச உங்க சம்சாரத்துக்கு எவ்ளோ சிரமமா இருந்திருக்கும்னு நெனச்சுப் பாருங்க சார்! சும்மா பிரிச்சு சாப்டுங்க. உங்களை டயத்துக்கு ட்ரெய்ன்ல ஏத்திவிடுறக்கு நானாச்சு”

பதிலேதும் சொல்லாமல் பொட்டலத்தைப் பிரித்தான் அவன்.

“சாம்பார் சாதமா சார்? மணம் தூக்கியடிக்குதே!” - திரும்பிப் பார்க்காமலேயே சொன்னார் ஆட்டோக்காரர்.

“ம்” என்றபடியே வியப்போடு அவரைப் பார்த்தான் அவன். ஆட்டோ நிதானமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

சாதத்தை ஒரு வாய் எடுத்து வாயில் போட்டதும் மனக்கண்ணில் மனைவி சிரித்தாள். அவசரத்தில் செய்திருந்தாலும் அட்டகாசமாகவே சமைத்திருந்தாள்! நல்ல பசிவேறு. மளமளவென சாப்பிடலானான்.

“என்ன சார் சத்தத்தையே காணோம். வாய் திறந்து பேசவிடாம பொட்டலத்தை ஒரே மூச்சில் காலி பண்ணச் சொல்லுதோ அம்மா சமையல்!”

திரும்பிப் பார்த்துக் கேட்டார் ஆட்டோக்காரர். அப்போதுதான் sநினனத்துக் கொண்டான். “அச்சச்சோ உங்ககிட்ட ஒரு வார்த்தைகூட கேட்காம சாப்பிட்டுட்டேனே!” என்றான்.

“அட நீங்கவேற! வண்டிய நிறுத்திட்டு நானும் உங்களோட உட்கார்ந்து சாப்பிட முடியுமா? உங்க சம்சாரம் ஆசையா கட்டிக்கொடுத்ததை திருப்தியா சாப்டீங்கள்ல, அது போதும்! இந்தாங்க தண்ணி. சுடவச்சு வடிகட்டுன நல்ல தண்ணிதான். ஒண்ணும் பண்ணாது. பயப்படாம குடிங்க” - காஷூவலாகச் சொன்னபடியே பாட்டில் தண்ணீரை நீட்டினார் ஆட்டோக்காரர்.

தான் சாப்பிட்டதற்காக இவர் ஏன் சந்தோஷப்படணும் என்ற யோசனையுடனேயே பாட்டிலை வாங்கினான் அவன்.

“சாப்பாட்டையும் சமைச்சுத் தர்ற பொண்டாட்டியையும் சாதாரணமா நினைக்கக் கூடாது சார். நானெல்லாம் என் பொண்டாட்டி வந்தப்புறம்தான் அரிசி சாதமே சாப்பிட்டேன். இந்த ஆட்டோகூட அவ மிச்சம் பிடிச்சு கொடுத்த பணத்தை அட்வான்ஸா போட்டு வாங்கின கடன்தான்.”

ஆச்சர்யத்தோடு ஆட்டோக்காரர் சொல்வதைக் கேட்டான் அவன்.

“ஆமா சாப்பாடு நல்லா இருந்துச்சா சார். அதைச் சொல்லவே இல்லியே” என்றார் திடீரென ஆட்டோக்காரர்.

“ம்.. நல்லா இருந்தது. உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். நீங்க கம்பெல் பண்ணலேன்னா சாப்பிட்டிருக்க மாட்டேன். ஓடுற ஆட்டோல சாப்பிட்டது எனக்கு புது அனுபவம்” - புன்சிரிப்போடு அவரைப் பார்த்தபடியே சொன்னான் அவன்.

“அட என்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம் சார். சமைச்சுக்கொடுத்த வொஃய்ப்கிட்ட போன் பண்ணிச் சொல்லுங்க”

அப்போதுதான் சார்ஜ் செய்வதற்காக எடுத்து வைத்த மொபைல் போனை அப்படியே விட்டுவிட்டு வந்தது அவனுக்கு உரைத்தது!

“அடச்சே! செல்போனை மறந்துட்டேன்!” என்றான். வாட்சைப் பார்த்துக் கொண்டான்.

“சார் ட்ரெயினுக்கு இன்னும் பதினாறு நிமிஷம் இருக்கு. கரெக்டா கொண்டு போய்ச் சேர்த்துருவேன் நான். டென்ஷனாகாதீங்க.” என்ற ஆட்டோக்காரர் தன் மொபைல் போனை எடுத்து நீட்டினார்.. “இந்தாங்க. வீட்டம்மாவுக்கு போன் போட்டு ‘சாப்பாடு சூப்பர்’னு ஒரு தடவை பாராட்டிடுங்க. சந்தோஷப்படுவாங்கள்ல” என்றார்.

போனை வாங்கத் தயங்கினான் அவன். “அட பரவாயில்ல பிடிங்க சார். பேசுங்க” என்றார் ஆட்டோக்காரர். தொடர்ந்தார்..

“நான் ஏன் சொல்றேன்னா.. சாப்பாட்டுல உப்போ உரைப்போ கூடப்போயிடுச்சுன்னா எத்தனை தடவை உடனே போன் போட்டு உங்க மனைவியை திட்டி இருப்பீங்க. அதே மாதிரிதானே நல்லா இருக்குறப்ப பாராட்டுறதும். சட்னு பண்ணிடனும். நல்லா இருக்குறப்ப பாராட்டாத எந்த புருஷனுக்கும் நல்லா இருக்காதப்ப திட்ட உரிமை கிடையாது. இது சாப்பாட்டுக்குத்தான்னு இல்லை, புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்குற எல்லா சமாச்சாரத்துக்கும் பொருந்தும்”

நெகிழ்ச்சியோடும் அதிர்ச்சியோடும் மொபைல் போனைக் கையில் வாங்கினான் அவன்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வா யெல்லாஞ் செயல்
,
இன்சொல் இல்லறம்!
முந்தைய காதல்பால் இங்கே!

Tuesday, October 03, 2006

ஆகட்டும்டா தம்பி ராஜா / எப்படி?எதற்கு?ஏன்?


ழக்கம்போலவே ஆடி அசைந்துகொண்டு பத்து மணிக்கு மேல்தான் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்கள் பணிபுரிபவர்கள் அனைவருமே!

பலமுறை கோபப்பட்டுக் கண்டித்தும் பலனில்லாத்தை நினைத்து வருந்தினார் மேனேஜர். ரொம்ப நேரம் யோசித்து ஒரு காரியம் செய்தார்.

அதன்படி அன்று மாலையே கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்தார். அலுவலக நேரத்தில்தான் கூட்டம் நடைபெற்றது என்பதால் அத்தனை பணியாளர்களும் தவறாமல் ஆஜராகி இருந்தனர்.

பேச அழைக்கப்பட்டிருந்த சொற்பொழிவாளர் எடுத்த எடுப்பில் ஒரு கேள்வியை எடுத்து வீசினார்.. “ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல முடியும் என வைத்துக் கொள்ளுங்கள். நூறு கிலோ மீட்டர் தொலைவில் சொர்க்கம் இருப்பதாகவும் கற்பனை பண்ணிக் கொள்வோம். உங்களால் எத்தனை நாட்களில் சொர்க்கத்தை அடைய முடியும்?” என்றார்.

ஒன்றாம் வகுப்பு பொடியனிடம் கேட்க வேண்டிய கேள்வியை இங்கு வந்து கேட்கிறாரே என கேலிச்சிரிப்பைக் காட்டியது கூட்டம்!

“உங்கள் அனைவரது சார்பில் யாராவது ஒருவர் மேடைக்கு வந்து என் கேள்விக்கு பதில் சொல்லவும்” என்றார் சொற்பொழிவாளர்.

பலர் எழுந்தனர். ஒருவர் மேடையேறினார். “பத்து நாட்களில் சொர்க்கத்தை அடைந்து விடுவோம். சிறு பிள்ளைத்தனமான கேள்வி இது!” என்றார் கிண்டலாக.

“இல்லை. நீங்கள் சொன்னது தவறு. இருபது நாட்களாவது ஆகும்!” என்றார் சொற்பொழிவாளர். தொடர்ந்து அவர் சொன்ன விளக்கத்தான் அது உண்மை எனப் புரிந்துகொண்டு தலை கவிழ்ந்தனர் பணியாளர்கள் அனைவருமே.

அப்படி என்ன விளக்கம் சொன்னார் அவர்?!


?

?

?

?

?

?

?

“ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டர் என கணக்கெடுத்துக் கொண்டால் பத்து நாட்களில் சொர்க்கத்தை அடைந்துவிடலாம் என்பது சரிதான். ஆனால் வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் உங்களுக்கு விடுமுறை. அதைக் கழித்துவிட்டால் பன்னிரெண்டு நாட்களாகும் நீங்கள் நடக்க. அப்புறம் ஒவ்வொரு வாரமும் தவறாமல் நீங்கள் அலுவலகத்துக்கு விடுமுறை போடுவதையும், வழக்கமாக அலுவலகத்துக்கு தாமதமாக வருவதையும் கணக்கெடுத்துக் கொள்ளவேண்டும். அதே தாமதத்தோடுதான் எழுந்து நடக்க ஆரம்பிப்பீர்கள். எல்லோரும் பத்து நாளில் அடையும் சொர்க்கத்தை கண்டிப்பாக நீங்கள் அடைய இருபது நாட்களாவது ஆகிவிடும்!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள் இங்கே!

சீச்சீ! நான் மாட்டேன்! / காதல் பால்


ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
- பொருட்பால், அதிகாரம்: 98. பெருமை, குறள்: 974

கற்புடைய பெண்களைப் போல எவனொருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடப்பானாயின் அவன் பெருமைக்குரியவனே!

ட்டம் சூடு பிடித்தது. விசில் சத்தம் கூரையைக் கிழித்தது!

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை அதுவரை ‘இந்தப் பூனையா பால் குடிக்கப் போகிறது’ என யோசிக்கவைத்திருந்த அந்த அழகுப் பெண் தன் ஆடைகளை விலக்க ஆரம்பித்து விட்டாள்!

புகையும், கூத்தும், கும்மாளமுமாக கூக்குரல் கொடுத்த கூட்டம் உற்சாகப் பெருங்குரலெடுத்து ஆர்ப்பரித்தது. ‘திடும் திடும்’ என ஸ்பீக்கர் ஸ்பீடும் ஏகத்துக்கு எகிறிப் போயிருந்தது.

அப்படியும் இப்படியுமாக தளர்த்திக் காட்டிய தன் மேலாடையை சட்டென உருவி, கூட்டத்தை நோக்கி வீசினாள் ஆட்ட நாயகி!

திறந்த வாய் மூடாமல் வெறித்தனமாக அவளை விழுங்கிக் கொண்டிருந்தன கூட்டத்துக் கண்கள்.

“மச்சி.. கொடுத்த பணத்துக்கு சரியான மேட்டர்டா!” என்றான் ஒருவன்.

“மெரட்டிட்டாடா! இன்னிக்கு தூக்கம் போச்சு போ!” என்றான் இன்னொருவன்.

“உஸ்.. சத்தம் போடாம வந்த காரியத்தைக் கவனிங்கடா. டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்றான் மூன்றாவது ஆள்.

“நான் கிளம்புறேன். எனக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கல. ‘ட்ரிங்க்ஸ் பார்ட்டி’னு பொய் சொல்லி என்னை இங்கே கூட்டிட்டு வந்ததுக்காக இன்னும் ஒரு வாரத்துக்காச்சும் உங்களோட நான் பேசப்போறதில்லை” என்றான் அவன், நாலாவது ஆள், நம் கதையின் நாயகன்.

அவன் விருட்டென வெளியே கிளம்ப, எரிச்சலோடு எழுந்து பின்னே ஓடினார்கள் மற்ற மூன்று நண்பர்களும்.

கேபரே கொண்டாட்டத்தை முழுதுமாக அனுபவிக்க முடியாத கோபத்தோடு அவனைப்பிடித்து நிறுத்தினார்கள்.. “சரி வந்துதொலை. குடிக்கப் போலாம்”

அவசரக் குடியர்கள் எல்லாம் எழுந்து அவரவர் திசைகளுக்குப் போய்விட பாரில் இவர்கள் நான்கு பேர் உட்பட ஒரு சில மொடாக்குடிகாரர்கள் மட்டுமே இருந்தனர்.

“ச்சே.. என்ன ஒரு அழகு! அசத்திப்புட்டாடா அந்த கேபரே டான்ஸர். பார்த்ததெல்லாம் அப்டியே கண்ணுக்குள்ள இருக்கு” என்றான் முதலாவது ஆள்.

அதட்டுப் போட்டான் அடுத்தவன்.. “அடச்சீ. என்னது சின்னப்புள்ளத்தனமாட்டம்? ஏதோ காணாததக் கண்டமாதிரில்ல இந்த வழி வழியுறே!”

வழி மொழிந்தான் மூன்றாமவன்.. “ஆமால்ல.. அப்ப பிடிச்சு அந்த ஆட்டக்காரி அழகையே புகழ்ந்துட்டு இருக்கான் இவன். டேய் மாப்ளை, இந்தமாதிரி இடத்துக்கெல்லாம் வந்தமா பார்த்தமா போனமானு இருக்கணும். அளவுக்கு மிஞ்சி ஜொள் விடக்கூடாடது. மீறினா தங்கச்சிகிட்ட போட்டுக் கொடுத்துடுவோம், ஜாக்கிரதை!”

எட்டிப் பார்த்த கோபத்தோடு கடுகடுப்பாகக் கேட்டான் நான்காவதாக இருந்த அவன்.. “கல்யாணமாகி பிள்ளை குட்டி பெத்தவன் மாதிரியா பேசுறீங்க? அதத்தவிர வாழ்க்கைல வேற எதுவுமே இல்லையா?”

கெக்கே பிக்கே எனச் சிரித்தார்கள் அனைவரும்.

“இங்க பாருங்கடா நம்ம சாமியார் என்ன சொல்றார்னு! டேய்.. நீ சொன்னியே பிள்ளை குட்டி அதெல்லாம் எப்புடி பொறக்குதாம். இப்படி நாலு இடத்துக்குப் போயி நாலையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டாத்தான் எப்பவும் படுக்கையில கும்னு இருக்கலாம் தெரிஞ்சுதா..” எனக் கிண்டலடித்தான் ஒரு நண்பன்.

“ஓஹோ அதான் இவன் அஞ்சு வருஷத்துல நாலு பிள்ளை பெத்த ரகசியமா!” என பதில் கிண்டல் கொடுத்தான் இன்னொரு நண்பன்.

மூன்றாமவன் எல்லை கடந்தான்.. “ஆமா உன் முதல் இரவு எப்டி மச்சி நடந்தது? எவ்வளவு நேரம் தாக்குப் பிடிச்சே நீ?”

பெருமையோரு பேசலானான் முதலாமவன்.. “அதையேன் கேட்கறீங்க. அவ கொண்டு வந்த பால் பழத்தையே விடிஞ்ச பிறகுதான் குடிச்சோம்னா பார்த்துக்கங்க” என்றான். தொடர்ந்து தன் முதல் இரவு அனுபவத்தை விலாவாரியாக விவரித்தான்.

அவன் முடித்ததும் இரண்டாவது ஆள் ஆரம்பித்தான்.. “லைட்டை அணைக்கவே விடமாட்டேன்னுட்டா என் பொண்டாட்டி. இருட்டு அவளுக்குப் பிடிக்காதாம். அப்றம் என்ன.. விளக்கு வெளிச்சத்திலேயே..”

அடுத்தது மூன்றாவது ஆளின் முறை. பொதுக்கூட்டத்துக்கு பேசப்போகிறவன் மாதிரி தொண்டையைக் கணைத்துக் கொண்டு கொட்டத் தொடங்கினான்.. “அந்த விஷயத்துல நான் கொடுத்து வச்சவன்டா. என் வொய்ஃப் என்னைவிட வேகமா இருந்துட்டா. அவதான் எனக்கு முதல் கிஸ் கொடுத்தா..”

மூன்று பேரும் பேசி அடங்கியதும் அவன் பக்கம் திரும்பினார்கள்.

“என்னடா சாமியார். உன் ஃபர்ஸ்ட் நைட் எப்டி நடந்தது? இல்ல.. நிஜமாவே நடந்ததா?”

கொல்லெனச் சிரித்தார்கள் அனைவரும். மிச்சம் மீதமிருந்த மதுக் கோப்பைகளை ஒரே மூச்சில் காலியாக்கினார்கள்.

அதுவரை தன் காதுகளை அடைத்து வைத்திருந்த பஞ்சுத் துகள்களை வெளியே எடுத்தான் அவன்.

“பேசி முடிச்சுட்டிங்களா உங்க அநாகரிகத்தையெல்லாம்?”

“அப்ப இவ்வளவு நேரம் நாங்க எங்க முதல் இரவு பத்தி சொன்னதையெல்லாம் நீ கேட்கவே இல்லியா?”

“இல்ல!”

“ஏன்?”

“அந்த காதல் கொலையை நானும் செய்ய விரும்பல”

எல்லோரும் அமைதியானார்கள். தொடர்ந்தான் அவன்.. “ நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு எத்தனையோ தடவை வந்திருக்கீங்க. என் மனைவியையும் பார்த்திருக்கீங்க. அஃப்கோர்ஸ் அவளை நீங்க எப்பவும் தப்பா நினைச்சதில்லைன்னாலும் எங்க கட்டில் வாழ்க்கை பத்தி நா உங்களோட பேசினேன்னா.. அது உங்களை தப்பா யோசிக்க வெச்சுடும். நான் என்னைப்பத்தி சொல்றப்ப, நீங்க என் மனைவியையும் சேர்த்தே கற்பனை பண்ணிக்குவீங்க. என் மனைவியை அரை குறை உடைகளோட உங்க கற்பனைப் பொருளாக்க நானே உடந்தையா இருக்கணுமா? ஒரு மனைவியோட காதலை மட்டுமல்ல கட்டிலையும் மத்தவங்ககூட பகிர்ந்துக்க எந்தவொரு நல்ல கணவனும் விரும்பமாட்டான். அது நிஜத்தில்தான் என்றில்லை, கற்பனையிலும்!”

சொல்லிவிட்டு எழுந்து பெருமையோடு நடக்கலானான் அவன். குடித்ததெல்லாம் வடிந்து போன உணர்வோடு சிலையாக நின்றார்கள் நண்பர்கள் மூவரும்.


ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
, தன் காதலையும் கொண்டொழுகின்!

முந்தைய காதல்பால் இங்கே!