Thursday, August 31, 2006

வெற்றிப் படமா வேட்டையாடு விளையாடு?

வேட்டையாடு விளையாடு வெற்றிப் படமா? வசூலை வாரிக் குவிக்கிறதா?
எனது முந்தைய பதிவு (கககபோ) ஒன்றுக்கு இன்று காலையில் வந்த பின்னூட்டம் இது:

'Gowtham,
Though VV suffered losses before release, we hear that the profits earned in first 3 days of release is close to 12 crores. Chennai, Coimbatore, Chengalpet matrum sila 'A' centregalilum, Kerala,Karnataka, US&Singaporilum padam bayangara vetriyaame? Unmaya? Konjam thelivu paduthungalen! '
எழுதியிருப்பவர் கிருஷ்ணா என்ற நண்பர்.

சரி, அவரது கேள்விக்கு கொஞ்சம் பதில் தேடினேன்.

விசாரித்த திசைகளில் எல்லாம் கிடைத்தது "YES".

படம் நன்றாக அறுவடை செய்து கொண்டிருக்கிறது. சென்னை சத்யம் தியேட்டர் மேனேஜரான முனி கண்ணையா, "டிக்கெட் கேட்டு போன் செய்யும் பிரபலங்களிடமிருந்து தப்பிக்க இது வரை எந்தப் படத்துக்கும் இந்த மாதிரி நான் தடுமாறியதில்லை. அவ்வளவு டிமாண்ட்" என்கிறார். வேறு எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்காமல் காசி'யில்தான் நான் பார்க்க நேர்ந்தது!

தயாரிப்பாளர் நாராயணனிடம் பேசியபோது, "எல்லா தியேட்டர்களிலும் நல்லா போய்ட்டு இருக்கதா சொல்றாங்க. வெளிநாடுகளிலும் இதே நிலைதான். மலேஷியாவில் மட்டுமே முப்பத்தாறு தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். இன்று வரை டிக்கெட்டுக்கு டிமாண்ட்தான். டிஸ்ட்ரிபியூட்டர்கள் சந்தோஷமாகச் சிரிக்கிறார்கள். அவ்வகையில் எனக்கும் சந்தோஷமே" என்றார் என்னிடம்.

அநேகமாக இவருக்கு மிஞ்சி இருப்பது இந்த சந்தோஷம் மட்டும்தானோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது!

காரணம்.. பேசியபடி பழைய தொகைக்கே டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் படத்தைக் கொடுத்துவிட்டார் நாராயணன். அதிக பட்சமாக இரண்டு கோடிகள் நஷ்டம் ஆகலாம். சரி, பரவாயில்லை. ரிலீஸ் செய்து விடலாம் என்ற எதிர்ப்பார்ப்போடு பேசப்பட்ட வியாபாரம் அது. ஆனால் இப்போது வந்து நிற்கும் நஷ்டக் கணக்கு.. சுமார் ஏழரைக்கோடிகள்!! முரட்டு சொத்துக்களைக்கூட விற்றுத்தான் படத்தை வெளியிட்டிருக்கிறார் நாராயணன்.

இவ்வளவு பணம் கூடுதலாக நஷ்டம். அதனால் முன்பு பேசிய தொகையைவிட கூடுதலாகத் தாருங்கள் என விநியோகஸ்தர்களிடம் கேட்கவில்லையாம் நாராயணன்.

அதனால் எவ்வளவுதான் கோடி கோடியாக லாபம் வந்தாலும் அதெல்லாம் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்குமே போய்ச்சேரும்.
தயாரிப்பாளருக்கு 'சந்தோஷம்' மட்டுமே!

இந்தி மற்றும் தெலுங்கு உரிமைகளும் சாட்டிலைட் டெலிவிஷன் உரிமையும் (அதிலும் ஒரு கோடி ரூபாயை காஜா மொய்தீன் முன் பணமாக் வாங்கிக் கொண்டு விட்டாராம் ஏற்கெனவே!) கையில் இருக்கிறதாம். அதில் கிடைக்கக் கூடும் ஒரிரு கோடிகள் ஏழரை நஷ்டத்தில் கொஞ்சம் லாபமாகலாம்!
தீமையில் துளி நன்மை!!

சொல்லால் அடித்த சுந்தரி! / காதல் பால்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
- அறத்துப்பால், அதிகாரம்: 13.அடக்கமுடைமை, குறள்: 129

‘தீயினால் சுட்ட புண்ணால் உருவான தழும்பு உடலில் மிச்சமிருந்தாலும் மனதில் அது ஆறிப்போகும். ஆனால் தீய சொல்லினால் உருவான தழும்பானது மனதில் ஒருபோதும் ஆறாது!’

‘கெட்டிமேளம்.. கெட்டிமேளம்!’

கல்யாணம். முடிந்தது முகூர்த்தம். அடுத்து சாந்தி முகூர்த்தம்..

பால் செம்புடனும் புதிதாக வந்து ஒட்டிக்கொண்ட அடர்வான நாணத்துடனும் அறைக்குள் காலடி எடுத்துவைக்கிறாள் அவள். உள்ளே.. காதல் கடந்த காமத்தோடு காத்திருக்கிறான் அவன்.

குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்கிறாள் அவள்.

“அய்யய்யோ! என்ன இது? உனக்கு வெட்கப்படக் கூடத் தெரியுமா?!”
- கிண்டலோடு கேட்கிறான் அவன். சத்தமில்லாமல் சிரித்துக் கொள்கிறாள்.

தோரணம் ‘தாம் தூம்’ என இருந்த கட்டிலில், விளிம்பில் அவன். அருகே சென்று நிற்கிறாள் அவள். அப்போதும் அவன் முகம் பார்க்கவில்லை. கட்டிலைப் போர்த்திக் கிடந்த மலர்க் கொடியைப் பார்த்தவாறே பால் செம்பை அவனிடம் நீட்டுகிறாள். அவள் பார்வை பட்ட அந்த மலர்கள் சொடுக்கிடும் நேரத்தில் விழித்து மலர்கின்றன.. ஆண் மலர்களாக இருக்கக் கூடும்!

பாலை வாங்கும் சாக்கில் அவள் கரத்தைத் தீண்டுகிறான் அவன்.
சுரீர்!
சிலிர்க்கிறாள் அவள்!

“ஏய்.. இங்க பார். என் முகத்தப் பார்த்து ஏதாச்சும் பேசு. நேத்துதான் பொண்ணு பார்த்து இன்னிக்கு கல்யாணமானமாதிரி அநியாயத்துக்கு டென்ஷனாகுறியே! நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தருக்கு ஒருத்தர் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கிட்டபோதே இதையெல்லாம் நான் தாண்டியாச்சு!”

அவன் வாய் இப்படி சொல்லியதே தவிர, குரல் கொஞ்சம் குழைந்துதான் இருந்தது.

ஒரே ஒரு மிடறு பாலைக் குடித்துவிட்டு செம்பை அவளிடம் நீட்டிகிறாள். அதை வாங்குகிற சாக்கில் அவனை ஏறிடுகிறாள் அவள். முகம் பூராவும் மூடுடன் அவன்!

பாலைப் பருக ஆரம்பிக்கிறாள். அடுத்தது அவனையா!

“போதும் போதும். முழுசாக் குடிக்கணும்னு கட்டாயமில்லை. வயிற்றை கொஞ்சம் காலியா வச்சுக்க. அப்பதான் வசதியா இருக்கும்” என்கிறான் நெட்டி முறித்தவாறே அவன்.

“ம்” சொல்கிறாள். செம்பை வைக்கிறாள். கொஞ்சம் சகஜமாகி விட்டாள். ஆனால் பேச வார்த்தைகள் இல்லை!

சடாரென எழுந்துவந்து அவள் இடையைப் பற்றுகிறான் அவன். தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. சிணுங்கலோடு சமாளிக்கிறாள். இடையை இணக்கமாக்குகிறாள்.

அப்படியே அவளைக் கட்டிலுக்குள் அழைத்துப் போகிறான் அவன். இருகக் கட்டியபடியே அவள் முகத்தை நுகர ஆரம்பிக்கிறான்.

முந்தைய கணம் வரை தன்னை மறந்திருந்தவள் அந்தத கணம் நிதானமாகிறாள்.. “அதுக்குள்ள என்ன அவசரம்? கிணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டுபோகப்போகுது?!”

‘சுருக்’கென தொட்டால் சிணுங்கி வேகத்தில் விலகுகிறான் அவன். கைகளைக் கட்டிக் கொள்கிறான். எதையோ தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட்டான்.

திடீர் வெறுமை சூழ்ந்தது! அதை உணர்ந்தும் கொண்டாள் அவள். லேசாகப் பதறுகிறாள்.. “என்னாச்சு கோவமா?”

“...”

“என்னங்க ஏதாச்சும் பிரச்னையா?”

“ம்.. இல்ல அந்த கோயில் மேட்டர் திடீர்னு ஞாபகத்துக்கு வந்துடுச்சு!”

“அத இன்னுமா மறக்கல நீங்க. ஆயிரம் தடவை ஸாரி கேட்டுட்டேன்லம்மா நான்” - அவன் முகத்தைக் கையில் தாங்கியபடியே பேசுகிறாள். முகம் வியர்க்கத் தொடங்கியிருக்கிறது!

அந்தக் கோயில் மேட்டர் அவள் நினைவுகளை ஆக்கிரமிக்கிறது..

யிலாப்பூர் கோயில். சாமி கும்பிட்டு, பிரகாரம் சுற்றி, மண்டபத்தில் உட்கார்ந்து பத்து நிமிடங்கள் பரஸ்பரம் பேசிவிட்டு, வெளியேறி, காலணி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கடைக்குப் போகும்போது தெருவோடு போன ஒரு கும்பல் விசிலடித்தது!

கும்பலில் ஒருவன் கூவினான்.. “இங்க பார்ரா.. சூப்பர் ஃபிகரு! ஹலோ மேடம் உங்க சைஸ் என்ன?”

கண்களில் நெருப்போடு திரும்பினான் அவள் கைகளைப் பற்றியபடியே நடந்த அவன். மொத்தம் ஆறு தடியர்கள். எதைக் குடித்திருந்தார்களோ.. நாற்றம் பிடுங்கியது. இரண்டு பேருக்கு முகத்தில் வெட்டுத் தழும்புகள்! தேர்ந்தெடுத்த ரவுடிகளாகத் தெரிந்தார்கள்.

“வா.. சீக்கிரம் நட. போயிடலாம்” என்றான் அவள் கரத்தை இறுக்கியபடியே!

“திமிர் பிடிச்சதுங்க. யாரும் தட்டிக் கேட்க மாட்டாங்கன்னு தைரியம்.” - முனகியவாறே நடந்தாள் அவள்.

பைக்கில் ஏறி உட்கார்ந்த பிறகும் அவள் கோபம் குறையவில்லை!

“இப்படி பயந்து ஓடி வந்திருக்கக் கூடாது நாம. ஆம்பளையா லட்சணமா நாலு சாத்து சாத்தியிருக்கணும் நீங்க”

“அவனுகளைப் பார்த்தியா.. ஆளும் முகரையும். கோர்ட் கேஸுக்கோ கொலைபாவத்துக்கோ பயப்படுற ஆளுங்களாத் தெரியல. மல்லுக்கட்டினா நமக்குத்தான் சங்கடம். சாக்கடையில காலை வச்சா நம்ம கால்தானே நாறும். அப்பா அம்மாக்குத் தெரியாம நாம கோயிலுக்கு வந்திருக்கோம் தெரியும்ல. அவனுகளை அடிக்கிறேன்னு போயி ஏதாச்சும் சிக்கலை இழுத்துக்கிட்டு அதனால நம்ம காதல் விஷயம் இப்பவே நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சு போயி..”

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் பேசினாள்.. “போதும்.. புலம்பலை நிறுத்திக்க. ச்சே! நீயெல்லாம் ஒரு ஆம்பளை!”

நிகழ்கால நினைவுகளுக்கு வரிகிறாள் அவள்.

“ப்ளீஸ்.. ஏதோ ஒரு எமோஷன்ல அப்படிக் கேட்டுட்டேன். இன்னும் அதை மறக்காம ஏன் இப்படி உங்களை வருத்திக்கிறீங்க? அன்னிக்கு உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பேன். அதான் பிராக்டிகல்”

“இல்ல ஆம்பளையானு நீ கேட்டது..”

அவள் வழி மறிக்கிறாள்.. “தப்புதான். அதான் வாழ்நாள் பூரா உங்ககிட்ட மன்னிப்பு கேட்க இதோ வந்துட்டேனே. போதுமா”

ஏதோ பேச வாயெடுத்தான் அவன். மறுபடியும் வழி மறிக்கிறாள்..

“மூச்! ஒண்ணும் பேசப்படாது!” அதட்டிகிறாள். அடுத்த நொடியே அவன் வாய் திறந்து பேசாதிருக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கத் தொடங்குகிறாள்..

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு,
காதலில் கொடிது அது!

முந்தைய 'காதல் பால்'கள்: இங்கே

Tuesday, August 29, 2006

படம் பார்த்து அதைச் சொல்லவும்!


நல்ல படம் கிடைத்தது. நான்கு வரிகளில் (கண்டிப்பாக!) 'நச்' என்று ஏதாவது எழுதுங்களேன் நண்பர்களே!

ரங்கராட்டினம்! / காதல் பால்

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
- அறத்துப்பால், அதிகாரம்: 30.வாய்மை, குறள்: 293


பொய்யென அறிந்த ஒன்றை பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை என எண்ணி ஒருவன் மறறத்தால் அவனது நெஞ்சே அவனை வருத்தும், வாட்டும்

.ஆர்.ரகுமானின் இசைப்புயல் அவனது மொபைல் போனில்!

எடுத்துப் பார்த்தான். வீட்டிலிருந்து அவன் மனைவி அழைத்துக் கொண்டிருந்தாள். எடுத்தான்.

“நான்தாங்க. சாயந்திரம் வர்றப்ப ஏ.டி.எம்.ல பணம் எடுத்துட்டு வர மறந்துடாதிங்க. எனக்கு பர்த்டே புடவை வாங்க தி.நகர் போகணும்!”

எரிச்சலோடு சொன்னான்... “சரி சரி”

எரிச்சலுக்கு அவன் தரப்புக் காரணம் அவளது அறியாமை. ‘கிரெடிட் கார்டுல வாங்கிட்டு, அப்புறம் பணம் கட்டிக்கலாம். அம்பது நாளுக்குள்ல கட்டிட்டா வட்டியே கிடையாது’ என அவன் சொல்வதை அவள் எப்போதுமே புரிந்து கொள்வதில்லை! கார்டைத் தேய்த்தாலே கடன் பூதம் வந்து பயமுறுத்துவதாக அவள் நினைப்பு!

‘ச்’சுக் கொட்டியபடியே கம்ப்யூட்டர் திரையைப்பார்த்தவன் அந்த நிமிடம் வந்து விழுந்திருந்த மெயிலைக் ‘க்ளிக்’கினான்.

‘ஹாய்! எப்டி இருக்கடா? நான்தான் வித்யா. காலேஜ்ல உன் ப்ராஜக்ட் மேட். நீதான் கிண்டல் பண்ணுவியே.. அதே தெத்துப் பல் அழகி!’

‘குபுக்’கென அவன் முகத்தில் பல்பு பிரகாசம்! ஃபேர்வெல் அன்று ஒரே நாளில் மட்டுமே பதினாறு லவ் லெட்டர்களை ரிஜெக்ட் செய்த அதி அழகி வித்யா மனசுக்குள் பாய்ந்து உட்கார்ந்தாள்! மறக்க முடியுமா அவளை!

கல்லூரிக் கட்டழகர்கள் அனைவரும் அவளது கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்க, சதா அவனையே வலம் வந்து கொண்டிருந்தவள். அன்பையும் நட்பையும் அள்ளிக் கொடுத்தவள். இருவரையும் சேர்த்துவைத்து கல்லூரிக் கிசுகிசுக்கள் கிளம்பியபோது லேசாக அவனுக்குள்ளும் காதல் ஆசை வந்தது. ஆனால் ‘எங்களுக்குள் காதல் இல்லை. நாங்கள் திக் ஃப்ரெண்ட்ஸ்’ என அறிவித்து அவனது மூக்கையும் உடைத்தாள் அவள்!

அந்த நிமிடம் முதல் அவன் மனக்குரங்கு மாறிவிட்டது! ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான நட்பு மழை நேரக் கவிதை போல அருமையான ஒன்றுதான். ஆனால் இருவரில் யாராவது ஒருவருக்கேனும் காதல் கனவு வந்துவிடுமானால் அந்த விநாடியில் இருந்து அந்த அருமை தொலைந்து போய்விடுகிறதே!

எந்த நேரத்திலாவது அவள் மனசு மாறிவிடாதா, ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட மாட்டாளா என்ற நப்பாசையிலேயே அவனது கல்லூரிக்காலமும் முடிந்து போனது. அதன் பிறகு காலம் தன் வேலையைச் செய்தது. அவள் வெளிநாட்டுக்குப் பறந்தாள் உயர் படிப்புக்காக. அவன் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கு வந்து விட்டான். அத்தோடு போச்சு அவர்கள் தோழமை.

இதோ பல வருடங்கள் கழித்து அவள் வந்திருக்கிறாள்!

தொக்கி நின்ற அவனது நப்பாசை மறுபடியும் விழித்துக்கொண்டது! ஆம்பளைக்குணம்!!

பதில் மெயிலினான்.. ‘எங்கிருக்கே வித்யா?’

‘இங்கதான் சிங்காரச் சென்னைல. உன்ட்ட பேசணும் நிறைய்ய. மொபைல் நம்பர், வீட்டு போன் நம்பர் எல்லாம் கொடுடா’ என பதிலுக்குப் பதில் கொடுத்தாள் அவள். நம்பர்களை அனுப்பினான். அடுத்த நிமிடமே அவள் பேசினாள்.

“சென்னை வந்து ஒரு வாரமாகுது. ஹஸ்பெண்ட் லண்டன்ல. அங்கதான் நானும் வொர்க் பண்றேன். இங்க அம்மாக்கு ஒரு ஆபரேஷன் அடுத்தவாரம். கூட இருக்கணும்னு தோணுச்சு. ஒரு மாசம் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன். எவ்ளோ சிரமப்பட்டு உன் மெயில் ஐ.டி.யப் பிடிச்சேன் தெரியுமா. எத்தன வருஷமாச்சு உன்னப்பார்த்து! வரியா? வீட்ல யாருமில்ல, மாங்காடு கோயிலுக்குப் போகியிருக்காங்க”

அவளது ‘வீட்ல யாருமில்ல’ அவன் மனக்குரங்குக்கு தீனி போட்டது. “ஆபிஸ் முடிஞ்சதும் ஓடி வரேன்” என்றான் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன்! மனைவியை மறந்தான்!

வித்யாவின் வீட்டைக் கண்டுபிடித்து வாசலில் நிற்கும்போது மொபைல் போன் அலறியது. மனைவிதான். எடுத்து அவளைப் பேசவிடாமல் அவனே பேசினான்.. “அர்ஜெண்ட் மீட்டிங். எம்.டி. வீட்டுக்குப் போயிட்டிருக்கேன். வர லேட் ஆகும். நாளைக்கு ட்ரெஸ் வாங்கிக்கலாம்”

அவள் பேச்சைக் கேட்கக்கூட மாட்டாமல் போனைக் கட் செய்தான். வித்யா வீட்டின் காலிங் பெல் அடித்தான்.

கதவு திறந்தது அவள்தான். முகமெல்லாம் புன்னகையோடு வரவேற்றாள். அழகு கூடியிருந்தாள்.

“தொப்பை கொஞ்சம் போட்ருக்கே. மத்தபடி நீ அப்டியேதான் இருக்கே” என்றாள். அவனது இளம் தொப்பையில் கிண்டலாகக் குத்தினாள். ரங்க ராட்டினம் சுற்றியது அவனுக்குள். அதைக் கலைக்கும் விதமாக மொபைல் அலறியது!

எடுத்துப்பார்த்தான். வீட்டிலிருந்து! எரிச்சலோடு கட் பண்ணினான். “ஜி.எம். பேசறாரு. இருபத்தி நாலு மணி நேரமும் ஆபிஸ் வேலையே பார்த்துட்டிருக்க முடியுமா!” என வித்யாவிடம் கூசாமல் சொன்னான்.

“கூல் மேன். என்ன குடிக்குறெ? காபி? கூல்ட்ரிங்க்? இல்ல பியர்?” - கண்ணடித்தாள் அவள். அசடு வழிந்தான் அவன். “காபி” சொன்னான்.

அவள் சமையலறைக்குள் போனதும் மறுபடியும் அலறியது மொபைல். வீட்டிலிருந்துதான். கட் பண்ணினான். தொடர்ந்து போனை ஆஃப் பண்ணினான்!

காபியோடு வந்தாள் வித்யா. “எப்டி இருக்கு என் கை பட்ட உங்க ஊர் காபி. குடிச்சுச் சொல்லு!” என்றவாறே நீட்டினாள். ஜிலுஜிலுப்போடு வாங்கினான்.

அவள் வீட்டு டெலிபோன் அழைத்தது. ஓடிப்போய் எடுத்தாள். மலர்ந்த முகத்தோடு பேசினாள்.. “ம்.. ஐயா வந்தாச்சு. நீங்கதான் வரமாட்டேன்னுட்டிங்க. ஞாபகம் வச்சுக்கங்க. சண்டே என்ட்ட இருந்து தப்பிக்க முடியாது, ஆமா! பேசுறீங்களா?” என்றவள், அவனை அருகே அழைத்து ரிசீவரைக் கொடுத்தாள்.

உள்ளங்கையில் வியர்வைக் கசிவுடன் வாங்கினான்.. “ஹலோ”

மறுபக்கம் அவன் மனைவி நிம்மதிப் பெருமூச்சுடன் பேசினாள்.. “போய்ட்டீங்களா.. அப்பாடா! வித்யா எனக்கு மத்தியானமே பேசினாங்க. காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டாங்க. உங்களை சாயந்திரம் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கதச் சொல்லி, என்னையும் கூப்பிட்டாங்க. உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு கேட்டுக்கிட்டாங்க. ‘வீட்ல வேலை இருக்கு. ஞாயித்துக் கிழமை வரேன்’னு சொல்லிட்டேன். நீங்க ஃப்ரெண்ட்ஸ்.. பல வருஷம் கழிச்சு மீட் பண்றிங்க. என்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டு சகஜமா பேசமுடியாம இருக்குமேன்னுதான் நான் வரலைன்னுட்டேன். விஷயத்த உங்ககிட்ட சொல்லத்தான் போன் பண்ணேன். பேட்டரி தீர்ந்துடுச்சா? எங்கே உங்க எம்.டி.கிட்ட மாட்டிக்கிட்டிங்களோன்னு பதறிட்டேன். இன்கமிங் கால் லிஸ்ட்ல வித்யாவோட வீட்டு நம்பர் பார்த்து போன் செஞ்சேன். நீங்க எனக்காக வருத்தப் படாதிங்க. நாம நாளைக்குப் போய் புடவை வாங்கிக்கலாம். உங்க மேல நல்ல பாசம் வச்சிருக்காங்க. அவங்க அம்மாவுக்கு ஆபரேஷனாம். ஆதரவா பேசிட்டு வாங்க.”

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்,
காதல் கெடும்!

முந்தைய 'காதல் பால்'கள்:

Monday, August 28, 2006

கரும்பு தின்னக் கூலியும் கொடுத்த உலகத் தமிழ் நண்பர்கள்!

வணக்கம் நண்பர்களே!

கரும்பு தின்னக் கூலியும் கொடுத்திருக்கிறீர்கள்!
தேன்கூடு போட்டியில் இரண்டாம் பரிசு!!

என்னோடு வாழ்ந்து, என்னைச் செதுக்கிப்போன நண்பன் திருப்பதிசாமி பற்றி
உலகத்தமிழ் நண்பர்களுக்குச் சொல்லவேண்டும் என்பதே என் ஆசை.
அதை உருப்படியாகச் சொல்லியிருக்கிறேனா என்பது தெரியவில்லை.
ஓரளவுக்கு மனநிறைவடைந்தேன் என்பது உண்மையே.
இதைப் பலரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான்
தேன்கூடு போட்டியில் இணைத்தேன்.
படித்து நெகிழ்ந்த நீங்கள் இரண்டாம் பரிசுக்குரியதாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்!

இந்த வெற்றி எனக்கானது அல்ல.
நான் வெறும் கருவி மட்டுமே, நண்பன் திருப்பதிசாமியின் வெற்றி இது!

சினிமாவில் ஒருவன் எத்தனை வெற்றிகள் கொடுத்திருந்தாலும்
அவனது சமீபத்திய தோல்விதான் அவனைத் தீர்மானிக்கும். துரத்தியடிக்கும்.
கணேஷ், ஆஸாத் என இரு பெரும் வெற்றிப் படங்களை தெலுங்கில் இயக்கியிருந்தாலும்
நரசிம்மா என்ற சமீபத்திய தோல்விப் படத்தைக் கொடுக்க நேர்ந்ததால்
திருப்பதிசாமி என்ற சாதனையாளனை திரையுலகம் மறந்து விட்டது.

'ஒரு நண்பனின் நிஜம் இது' என்ற இந்த பரிசுக்குரிய படைப்பு மூலமாக
திருப்பதிசாமி சமீபத்திய வெற்றியையே விட்டுச் சென்றதாக நான் கருதுகிறேன்.
இந்த வெற்றி அவனுக்கே!
செத்தும் ஜெயித்தான் திருப்பதிசாமி!

வாக்களித்த நண்பர்களுக்கும்
தேர்ந்தெடுத்த நடுவர் குழுவினருக்கும்
வாய்ப்பளித்த தேன்கூட்டிற்கும் தமிழோவியத்திற்கும்
உலகம் காணக் களம் கொடுத்த தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டிற்கும்
என்னை எழுதத் தூண்டிய நண்பர் கடல் கணேசனுக்கும்
மற்றும்
பின்னூட்டத்தில் ஆறுதல் சொன்ன, ஆதரவுத் தோள் கொடுத்த, திருப்பதி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அத்தனை பேருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்!

உடன் பரிசு பெற்றிருக்கும் கொங்குராசா, ராசுக்குட்டி மற்றும் இளாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

முன்வரிசைக்கு வந்திருக்கும் படைப்புகளைப் பெற்றெடுத்த
Haranprasanna, குந்தவை வந்தியத்தேவன், (மறுபடியும்) RaasuKutti,
சுரேஷ் (penathal Suresh),ஜெஸிலா மற்றும் உமா கதிருக்கும் வாழ்த்துக்கள்.

கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

Friday, August 25, 2006

முதுகெலும்பைக் கவனியுங்கள்! / எதற்கு? ஏன்? ஏப்படி?

அவர்கள் இருவரும் நண்பர்கள். ஒருவர் உள்ளூர்க்காரர். மற்றவர் பக்கத்து ஊர்வாசி.

இருவரும் ஒன்றாகவே பொறியியல் படிப்பை முடித்தார்கள். ஒரே நிறுவனத்தில் தொழில் நுணுக்கம் கற்றுக் தேர்ந்தார்கள். சொந்தமாக தொழில் செய்யும் ஆசை வந்ததும் ஆளுக்கொரு திசையில் பிரிந்தனர். அவரவர் ஊர்களில் தொழில் தொடங்கினர்.

வெளியூர்க்காரருக்கு தொட்டதெல்லாம் வெற்றி. உள்ளூர்க்காரருக்கு ‘எல்லாம் தோல்வி மயம்!’.

ஒரு கட்டத்தில் தொழிற்சாலையை மூடி விடலாமா எனவும் யோசித்த உள்ளூர்வாசி தன் நண்பனுக்கு போன் போட்டார். சோகத்தைச் சொன்னார்.

“அவசரப்படாதே. யாரிடமாவது பொறுப்பைக் கொடுத்துவிட்டு இங்கே வந்து சேர். ஒரு மாதமாவது என்னுடன் இரு. இங்கே என்ன நடக்கிறது என வேடிக்கை பார். உன்பக்கம் என்ன தவறுகள் இருக்கின்றன என்பது தானாகவே புரியும். அவற்றைத் திருத்திக் கொள். நீயும் ஜெயிக்கலாம்!” என்றார் வெளியூர்க்காரர்.

“இங்கே ஒரு பயலும் சரியில்லை. யாரிடம் பொறுப்பைக் கொடுப்பது” என அங்கலாய்த்த உள்ளூர்வாசி ஒரு வழியாக தன் மனைவியிடமே நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அங்கே.. தொழிற்சாலையின் மாதாந்திரக் கூட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தார் வெளியூர் வெற்றியாளர். நண்பரையும் கூடவே அழைத்துக் கொண்டு போனார்.

அவர்களது சமீபத்திய வெற்றி ஒன்றைப் பற்றிப் பேசுவதாக அமைந்திருந்தது அந்தக் கூட்டம். அனைவரும் பேசி முடித்ததும் பேச எழுந்தார் முதலாளி, அதாவது வெளியூர்க்காரர்.

“இந்த ப்ராஜக்டை நமது கவனத்துக்கு கொண்டு வந்தது நமது பொது மேலாளர். ‘செயல்படுத்தலாம்’ என எனக்கு ஊக்கம் கொடுத்தது நமது சூபர்வைசர். நமது பணி தாமதப் படும்போதெல்லாம் நம்பிக்கை கொடுத்து என்னைத் துவளவிடமால் செய்தவர் என் உதவியாளர்..”

தொடர்ந்து இப்படியே பலரைக் குறிப்பிட்டுப் பேசினார் வெளியூர்க்காரர். அத்தனை பேரையும் மனமாரப் பாராட்டினார்.

கூட்டம் முடிந்து போகும்போது அனைவர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்! கூடவே இன்னும் சாதிப்பதற்கான வெறியும்!

ஒரு மாதம் இருப்பதற்காக வந்திருந்த உள்ளூர்க்காரர் உடனே ஊர் திரும்ப முடிவெடுத்தார். நண்பரின் வியாபார வெற்றிக்கான சூட்சுமம் இந்த ஒரே கூட்டத்திலேயே புரிந்து போனது அவருக்கு. உங்களுக்குப் புரிகிறதா?


?


?


?


?


?

?


‘உழைப்பவர்களை அங்கீகரியுங்கள்! உற்சாகமாகப் பாராட்டுங்கள்!’

'எதற்கு? ஏன்? எப்படி?' வரிசையில் முந்தைய பதிவுகள்:


Wednesday, August 23, 2006

லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!

இது ஆம்பளைங்க சமாச்சாரம். சமீபத்தில் என்னை 'ஷாக்'கிய சம்பவம்!! எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!!!

ரு பெரிய இடைவெளிக்குப் பிறகு பழைய நண்பர் ஒருவரைச் சந்திக்கப் போனேன்.

பழகுவதில் இனியவர் அவர். கல்யாண வயதில் மகன் - மகள் இருந்தாலும் குடும்பத்தை விட்டு வேலைக்காக சென்னையில் தனியே வசிக்கும் `பிரம்மச்சாரி'. இந்த வயதிலும் உழைப்பை நேசிப்பவர்.

பெயரைவிட விஷயம்தான் முக்கியம் என்பதால் ஒரு பேச்சுக்காக அவருக்கு இங்கே ராஜன் என பெயரிட்டுக் கொள்ளலாம்.

பேசிப் பல மாதங்கள் ஆனதால் நிறையக் கதைக்க வேண்டியிருந்தது. பேசி, சிரித்து,சண்டை போட்டு, புரிய வைத்து, புரிந்துகொண்டு.. பாதி இரவு கழிந்து போனது.

நள்ளிரவு நேரம். என்னுடன் பேசிக்கொண்டிருந்த ராஜன் திடீரென ஒரு கணத்தில் எழுந்தார். `எக்ஸ்க்யூஸ் மீ' கேட்டார்.

`ஆஃப்' பண்ணி வைத்திருந்த அவரது மொபைல் போனை `ஆன்' பண்ணிக் கொண்டார்.

"ஒரு காதலி எனக்காக இந்நேரம் காத்துக்கிட்டு இருப்பாங்க'' என்றவாறே போனை காதுக்குக் கொடுத்தார். ஆரம்பித்தார்...

"ஹாய் செல்லம்! ஸாரிடா... ஃப்ரண்டு ஒருத்தர் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கார். பேச்சுவேகத்துல கொஞ்சம் டயம் மிஸ் பண்ணிட்டேன்'' என்றார் என்னைப் பார்த்தபடியே.

மறுமுனையில் ஒரு பெண் குரல் கீச்சிடுவது அந்த இரவு நிசப்தத்தில் எனக்கும் கேட்டது.

நாகரிகம் கருதி "நா வேணா வெளில போயிட்டு வரட்டா'' எனக் கேட்டவாறே எழ முயன்றேன்.

"பரவாயில்ல இருக்கலாம்'' என்று எனக்கும், "ஒண்ணுமில்லம்மா. ஃப்ரண்டுதான்'' என போனிடமும் பேசினார் ராஜன். உட்கார்ந்து கொண்டேன் மறுபடியும்.

தொடர்ந்தது காதலர்களின் பேச்சுவார்த்தை. கிட்டத்ததட்ட அரைமணி நேரம் பேசினார்கள் இருவரும்.

இருபது வயதுக் காதலன் போல அவ்வளவு இனிக்க இனிக்கப் பேசினார் ராஜன் என்ற அந்த ஐம்பது வயதுக் கிழவன். ஆனால் பேச்சில் இருபதுக்குரிய விரசம் இல்லை! குடும்பத்தோடு காதல் சினிமா பார்க்கப் போவோமே, அப்படி இருந்தது அந்த ஜிலேபிப் பேச்சு.

"ஏன் காலைச் சாப்பாட்டைக் கட் பண்றே? அது ஆபத்தும்மா'' என்றார் அந்தப் பெண்ணிடம் அப்பாவின் பாசத்துடன்.

"பீரியட் சமயத்துல நைட்ல பால் குடிக்காம படுக்காதடி'' என்றார் அம்மாவின் கரிசனத்துடன்.

"ஐயய்யோ.. அந்த மாதிரி வெப்சைட்டையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டியா'' என்றார் தோழிச் சிரிப்புடன்.

"சரி டார்லிங், இந்த நாள் இனிய நாளா விடியட்டும். நிம்மதியா தூங்கு. ஸ்வீட் ட்ரீம்ஸ், குட்நைட்'' என்றார் பக்குவப்பட்ட காதலனாக.

பிரமிப்போடு சிலையாகி இருந்தேன் அத்தனை நேரமும். போனை கட் செய்துவிட்டு என்னை ஏறிட்டார். அவர் (என்னிடமும்!) பேசப் போவதைக்கேட்க மிக ஆர்வமாயிருந்தேன்.

"பி.ஏ. படிக்கிறாங்க. இங்கதான்.. சென்னையில்தான் படிக்கிறாங்க. ராத்திரி, தினம் ஒரு அரை மணி நேரமாவது என்ட்ட பேசாம தூங்க மாட்டாங்க. ஒரு புக் ஷாப்ல ஃப்ரண்ட்ஸானோம்" என்றார் ராஜன் அவராகவே.

"காதலின்னு சொன்னீங்களே?'' - நான் இழுவை போட்டேன்.

வாய்விட்டுச் சிரித்தார் ராஜன்.

"ரொம்ப தமிழ் சினிமா பார்க்காதீங்க. இந்தக் காதலுக்கு அர்த்தம் அளவற்ற அன்பு'' என்றார்.

எனக்குள் லேசான ஏமாற்றம்!

திடீரென ராஜனிடம் மறுபடி வேகம்! மறுபடியும் மொபைல் போனை எடுத்தார்!

"மணியாச்சு.. இவங்க இன்னொரு காதலி. `கால் சென்டர்'ல நைட் ஷிப்டு பார்க்கிறாங்க. என்னோட பேசணும்ங்கிறதுக்காக எனக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததே இவங்கதான்'' என்றபடியே போனில் அந்தக் காதலியைப் பிடித்தார்.

அதே உற்சாகத்துடன் பேச்சை ஆரம்பித்தார்...

"என்ன ஸ்வீட்டி. இன்னிக்கு சொன்ன நேரத்துக்கு பேசிட்டனா? நான் ஓல்டானாலும் கோல்டு. லேட்டா பேசினாலும் லேட்டஸ்ட்'' என்று கூறிச் சிரித்தார். மறுமுனையில் பேசிய ஸ்வீட்டியையும் சிரிக்க வைத்தார்.

தொடர்ந்தது அவர்கள் உரையாடல். இதில் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்தது. அந்தப் பெண்ணின் குடும்பக் கஷ்டம் ஒன்றுக்கு நீளமாக ஆலோசனை சொன்னார். தன்னம்பிக்கை டானிக் ஊட்டுவது போலிருந்தது ராஜனின் நீளநிமிடப் பேச்சு.

அந்த அகால நேரத்திலும் கொட்டாவி மறக்கும் அளவுக்கு ரசிப்புடன் பேச்சைக் கேட்டேன் நான்.

முடிந்தது!

மறுபடியும் ராஜன் என்னுடன் தன் உரையாடலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்...

"ஐயா சாமி, என்னை காமுகன்னு தப்பா அர்த்தம் பண்ணிக்காதப்பா. இதுவும் முதல்ல சொன்ன அதே அளவற்ற அன்பு டைப் காதல்தான்'' என்றார். எனக்கு ராஜன் மீது பொறாமை பொங்கியது உண்மையே!

அடுத்து எங்கள் வாதமும், விவாதமும் வேறு விஷயங்களில் மூழ்கின. அது ஒரு இலக்கிய சர்ச்சை. இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லாத ஒன்று.
பேச்சு சுவாரசியத்தில் விடிந்தது கூடத் தெரியவில்லை!

"அடடா விடிஞ்சிடுச்சே! இந்நேரம் அவங்க ஹஸ்பெண்ட் மார்னிங் டூட்டிக்குக் கிளம்பியிருப்பார். அவருக்கு சமைச்சுக் கொடுத்து ஆபீஸுக்கு அனுப்பி வெச்சுட்டு ஒரு மணி நேரமாச்சும் என்கிட்ட பேசுவாங்க என்னோட காதலி நம்பர் : மூணு'' என்றார் ராஜன்.

மறுபடியும் செல்போன் கொஞ்சல் ஆரம்பமானது! அதே அதே அதே 'இளமை இதோ இதோ' காதலனின் உற்சாகத்தோடு போனில் இருந்த முப்பது வயதுப் பெண்மணியைக் கொஞ்சினார் ராஜன்.

அது அடுத்தவர் மனைவி என்று தெரிந்தபோதும், ராஜன் மீது எனக்கு ஏற்பட்ட பொறாமை உணர்வு குறையவில்லை!

இந்தக் காதல் பேச்சு ரொம்ப அந்நியோன்யமாக இருந்தது. அரைமணி நேரம், முக்கால் மணி நேரத்தில் முடிவது போலத் தெரியவில்லை.
எனக்கு அதிகாலை வேலைகள் க்யூ கட்டி நின்றதால் உட்கார்ந்து கேட்க முடியவில்லை. ஜாடையிலேயே `அப்புறம் ஒருநாள் வர்றேன், டயமாச்சு' எனக் காட்டிவிட்டு ராஜனின் அறையைவிட்டு வெளியேறினேன்.

நான் செருப்புக்குள் என் கால்களைத் திணிக்கும்போது ஏறக்குறைய டி.எம். சௌந்தரராஜனாகவே ஆகியிருந்தார் ராஜன். "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. ம்ம்.. ம்ம்... ம்ம்ம்" என அவர் போனில் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது இந்தத் தொண்டைக்குள்ளும் இப்படி ஒரு தேனா என்ற வியப்பு வந்தது!

கணவனிடம் கிடைக்காத அந்த அளவற்ற அன்புக் கொஞ்சலுக்காக மாற்றானிடம் இப்படி ஒரு நேரம் காலம் தெரியாத நேரத்தில் மணிக்கணக்காகாப் பேசும் அந்தப் பெண்மணியைக் கோபிப்பதா, வரவேற்பதா எனப் புரியவில்லை.

குழப்பத்தோடு கதவைச் சாத்தினேன்.

ராஜனின் காதல்கள் சரியா தப்பா எனவும் தெரியவில்லை.

வெளியே தெருவில்.. அதிகாலைக் குளிர் காதுகளுக்குள் ஈட்டியாகப் புகுந்தது.

மனசு முழுக்க ஒரே ஒரு வரி படபடப்போடு ஓடிக் கொண்டிருந்தது - டி.வி.யில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடுமே அந்த மாதிரி.

அது...
`மனைவியை, மகளை, சகோதரியை, அம்மாவை, பாட்டியை.. உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரையும் லவ் பண்ணித் தொலைங்கடா ப்ளீஸ்!'


இதற்கு முந்தைய 'எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!'

Saturday, August 19, 2006

ஓ... திருப்பதி!


திருப்பதிசாமியின் மறைவை ஒட்டி நான் வெளியிட்ட துண்டுப் புத்தகத்தை (நகல் என்வசம் இல்லை) எனது கடந்த பதிவைப் பார்த்த ஒரு நண்பர் அனுப்பி வைத்து இருந்தார். அதை இங்கே உங்கள் பார்வைக்காகப் பதிவு செய்கிறேன்.

- ஜி.கௌதம்



ஐந்து வயது
குழந்தை கேட்கிறது...
"அப்பா சொல்றது
உண்மையாம்மா?''

எப்போதோ
எதற்கோ
சொல்லிக் கொடுத்ததை
எனக்கே சொல்கிறது...
"திருப்பதி அங்கிள்
சாமிகிட்ட போயிருக்காங்க.
திரும்பவும் வருவாங்க.
குட்டிப் பாப்பாவா பிறப்பாங்க.
அப்ப நாமபோயி கொஞ்சலாம்!''

நான் சொன்ன பொய்தான்,
நானே நம்புகிறேன்!

திருப்பதிசாமி
அவன் என் உயிர் நண்பன்.
ஓடும் ரயிலில்,
ஒரு நிமிடம் பேசியிருந்தாலும்
உங்களுக்கும்
அவன் உயிர்நண்பன்.

இப்போது உயிர்...?

நிறைய முகங்கள் அவனுக்கு.
சட்டம் படித்தவன்.
எது பேசினாலும்
அனல் பறக்கும்.
அவனோடு வாதாடி ஜெயிக்க
எவனாலும் முடியாது,

எமனால்...!

நிறைய முகங்கள் அவனுக்கு.
கம்பன் கழகம் கடந்த
கல்லூரி மாணவன்.
இயற்கையிலேயே
இலக்கிய ரத்தம்!

முண்டாசுக் கவி பாரதி
அவனது
ஆதர்ஷ புருஷன்.
`முப்பத்தொன்பது வயசுக்குள்ள
சாதிச்சுப்புட்டானே படவா'
என்பான்

முப்பத்தியிரண்டில் அவன்
சாதிக்க ஆரம்பித்த நேரத்தில்...!

நிறைய முகங்கள் அவனுக்கு.
உண்மையும்
வலிமையும் கலந்து
பேனா பிடித்த பத்திரிகையாளன்.

அவன் எழுதிக் கிழிந்த முகமூடிகள்
ஏராளம்.
அவனால்
எழுதக் கற்றவர்களும்
ஏராளம்.
அவன் தரும் உற்சாகம்
தாராளம்.
`மெரினா பீச்சை
விலைக்கு வாங்கப் போகிறேன்'
என்றால்கூட
`உன்னால் முடியும்' என்பான்.

மறுபடியும் அவன்
வர வேண்டும்.
அவனுக்கும் எனக்கும் பிடித்த
Life is Beautiful படம் பார்த்து
தேம்பித் தேம்பி அழவேண்டும்

Jonathan Livingston Seagull
கதையை இன்னொருமுறை
அவன் சொல்லக்கேட்டு
மிரள வேண்டும்!

தினம் தினம்
பத்துப் பதினைந்து தரமாவது
அவன் கேட்கும்
இளையராஜாவின்
`இந்தமான், உந்தன் சொந்தமான்'
பாடலை
இருவருமாய்க் கேட்க வேண்டும்.

இதற்கும் சொல்லடா திருப்பதி...
`உன்னால் முடியும்' என்று!

நிறைய முகங்கள் அவனுக்கு.
விளம்பர உலகிலும்
தனித்துப் பறந்தது
அவன் கொடி!

பத்து விநாடிப் படமென்றாலும்
அவன் வின்னர்
அவன் வின்னர்தான்!

சோறு தண்ணி
ஒதுக்கி வைப்பான்,
சொந்தபந்தம்
மறந்து உழைப்பான்.

விளம்பரப் படங்களுக்காக
ஓடிய காலத்தில் ஒருநாள்....
தலைமைச் செயலகத்துக்கு எதிரே
அந்த ஒற்றை மரத்தைக்
காட்டிச் சொன்னான்...
`எனக்குப் பிடித்த இடம்டா
இந்த மர நிழல்!'

அவன் மரித்த நிமிடம்
பார்த்த மரம்,
இப்போதும் இருக்கிறது
அதே இடத்தில் - உயிரோடு!

நிறைய முகங்கள் அவனுக்கு.
முதல் படத்துக்கே (கணேஷ்)
விருதுகள் வென்றெடுத்த
சினிமாக்காரன்.

கதை சொல்லச் சொல்ல
கண்மூடிக்
கொண்டால் போதும்.
படம் ஓடும்.

தமிழில் முதல் படம் நரசிம்மா.
தயாரிப்பில் இருக்கும்போதே
வியக்கிறது திரையுலகம்.

அதனாலும்தான்...
கண்ணீரும் கதறலுமாய்
திரண்டது கோடம்பாக்கம்.

அவனுக்காக கூடியவர்களை
அவன் பார்க்க முடியாதது
சோகம்.

வெற்றிக்கு
விழ வேண்டிய மாலைகள்
வழியனுப்பக் குவிந்தது
பாவம்!

நிறைய முகங்கள் அவனுக்கு.
தெரிந்தார்க்கினியன்.
நல்ல நண்பன்.

பரபரப்பு அவனை
பற்றியிராத காலம்.
அவனையும் சேர்த்து
ஏழெட்டு பேராகும்.
பேச்சிலர்ஸ் பாரடைஸ்...
ஞாயிற்றுக்கிழமைகளில்
அறை களை கட்டும்.
ஆட்டம், பாட்டு, சண்டை..

ஆம்,
மோதலால் காதலானவர்கள்தான்
அவனுக்கு அதிகம்.
சிண்டைப் பிடிக்காத குறையாக
சண்டைகள் உண்டு.
ஆனால்...
வெளியே பேசும்போது
விட்டுக் கொடுக்கவே மாட்டான்.

இப்போது விட்டுவிட்டுப்...

நிறைய முகங்கள் அவனுக்கு.
பொறுப்பான பிள்ளை.
பாண்டிச்சேரியிலிருந்து போன்...
விஷயத்தை
வெளியே சொல்லவில்லை.
அவனும் நானும்
அப்பா அம்மாவை
அழைத்துக்கொண்டு போகிறோம்.
வழியோடு வலியாக
கொஞ்சம் கொஞ்சமாக
சேதி சொல்கிறோம்.
தெருமுனை வந்ததும்தான்
அக்கா
இறந்ததைச் சொல்கிறோம்.

யானைக்கு மணியாக
வழிநெடுக
அவன் கொடுத்த
வார்த்தை ஒத்தடம்
இப்போது கிடைக்குமா
அவனை இழந்து
துடிக்கும் பெற்றோருக்கு?

நிறைய முகங்கள் அவனுக்கு.
இதுவரை
யாருக்குமே தெரியாத முகம் -
யாருமே பார்க்காத முகம்...

ஜூன் - 10
தூங்கிக் கொண்டிருக்கும்
அவனை தூக்கி வைத்திருக்கிறார்கள்.

அவன் அழைத்தபோதெல்லாம்
வரமுடியாத குருநாதர்
சுரேஷ்கிருஷ்ணா
ஓடிவந்து
உடைந்து கிடக்கிறார்.
பதினாறடி பாய இருந்த குட்டி,
நேற்றுதான்
குருவைச் சந்தித்து
கால்களில்
விழுந்து வந்திருக்கிறான்.

ஆசிர்வாதம் செய்து அனுப்பியவருக்கு
அதிகாலையில் அதிர்ச்சி!

எழுத்தைப் புடம் போட்ட
இன்னொரு குரு
மதன் வந்திருக்கிறார்
குமுறும் உணர்ச்சிகளுடன்
மல்லுக்கட்டுகிறார்.

பிறக்காத சகோதரனாய்
பதறித் தவிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

நொறுங்கிய மனிதராய்
வருந்திக் கலங்குகிறா
விஜயகாந்த்.
`ஃபைட் சீன்
திருப்தியா வரல
ரீ ஷுட் பண்ணலாம் சார்' என
நேற்று பேசிய
திருப்பதியா இது!

நேற்று இரவு
அவனைச் சந்திக்க முயன்று
`வேண்டாம் திருப்பதி.
நாளைக்குப் பார்க்கலாம்' என்று
போன் பேசிவிட்டுப் போன
நண்பர்கள் அலறுகிறார்கள்...

"ஒருவேளை
நேற்று சந்தித்திருந்தால்
உன் வழியும்
மாறியிருக்குமே நண்பா!''

படம் ரிலீஸானதும்
பப்ளிசிடிக்குப் பயன்படுத்தலாமென
போன மாதம்
எடுத்த போட்டோக்களை
நாளிதழ் நிருபர்களுக்கு
இறுக்கத்துடன் கொடுக்கிறான்
இன்னொரு நண்பன் -
புகைப்படக்காரன்.

`ஆள்
அழகாகத்தான் இருக்கான்.
படத்தில் நடிக்கலாமே' என
ஷங்கர் சொன்னதை
அவனிடம் சொல்லியதையும்,
வெட்கத்துடுன்
அவன் குதூகலத்ததையும்
மாய்ந்து மாய்ந்து கூறுகிறான்
வேறொரு நண்பன்.

"ஏம்ப்பா அவனுக்கு
திருப்பதிசாமின்னு
பேர் வச்சீங்க.
அந்த சாமியே
அவனை எடுத்துக்கிச்சே' என
கதறிக் கரைகிறாள் சகோதரி.

கடைசி நிமிடத்துக்கு
முந்தைய நிமிடங்களிலும்
உடனிருந்த உதவியாளர்கள்
புலம்புகிறார்கள்...
"போன வாரம் முழுக்க
பார்க்கிற ஆள்கிட்ட எல்லாம்
பிறப்பு, வாழ்வு, மரணம்
இதப்பத்தித்தான் பேசினார்''

எல்லோருக்கும்
தாமதமாகத் தெரிந்தது
அவனுக்கு மட்டும்
முன்பே தெரிந்திருக்கிறது!

எல்லாம் சொல்லியிருக்கிறான்
என்னிடம்.
கற்பு பறிபோகாமல்
தப்பி வந்த
கதை சொல்லியிருக்கிறான்.

கனவுப் படம் குறித்த
ஆசை சொல்லியிருக்கிறான்.
உள்ளுக்குள் ஒரு காதல்
மலர்ந்து
உதிர்ந்ததைச் சொல்லியிருக்கிறான்.

`எடுத்தவரை நரசிம்மா
கேப்டனுக்கும் பரம திருப்தி'
என்று சொல்லியிருக்கிறான்.

வீடு கட்டியபின்தான்
தாலி கட்ட வேண்டும்
என்பதைச் சொல்லியிருக்கிறான்.

பெண் பார்க்கச்
சொல்லியிருக்கிறான்.

ஜூலை 2-ம் தேதி
பிறந்த நாளன்று
ஒன்றாகச் சாப்பிட
வரச் சொல்லியிருக்கிறான்.

ஜூலை 5-ம் தேதி
படம் ரிலீசானதும்
ஒவ்வொரு தியேட்டராகப் போய்
பரபரப்பைப்
பார்க்கலாமென்று சொல்லி
இருக்கிறான்.

இப்போது...
அப்பா சொல்கிறார்,

எப்போதும் போலவே
அவன் முகத்தை
மடியில் கிடத்திக் கொண்டு
இப்போதும் சொல்கிறார்...
"புள்ள பாவம்யா...
எடிட்டிங் முடிச்சுட்டு
நைட் மூணு மணிக்குத்தான்யா
வந்து படுத்தான்.
அசந்து தூங்குறான்
அப்புறம் வாய்யா.''

உறக்கம் கலையும்வரை
காத்திருக்கிறேன் தோழா!

அதுவரை...
உனது நினைவுகளுடனும்
நமது நிழல்களுடனும்
நிஜமாயிருக்கிற உறவுகளையாவது
உயிருடன் வைத்திருக்கிறேன்.

தேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது!


டிரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது!

கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரியா?’ என்று விகடன் தாத்தா கூப்பிட்டார்! விடுவேனா?

வீட்டில் ரொம்ப யோசித்தார்கள். “மெட்ராஸ் போய் விகடன்ல வேலை பார்த்துக்கிட்டே படிச்ச படிப்புக்காக இன்ஞினியர் வேலையை எப்படியாவது மெட்ராஸ்லயே தேடிக்கிறேன்” என்று பெற்றோரை சமாதானப்படுத்தி பெட்டி தூக்கிவிட்டேன்.

நிஜமாகவே நான் துறுதுறு காமெடியன்தான் அப்போது! ‘757 அண்ணா சாலை’ ஆனந்த விகடன் முகவரி. ‘657 அண்ணாசாலை’யிலேயே ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து, நம்பரை எண்ணிக்கொண்டே நடந்த அதி புத்திசாலி.

எப்படி என்கிறீர்களா.. ‘757’ இருப்பது அண்ணாசாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே. ‘657’ இருப்பது நந்தனம்! இடையே குறைந்தது மூன்று கிலோமீட்டர் தூரம்!!

தப்பித்தவறி கீழே விழுந்தால், வேறு யாரும் பார்ப்பதற்குள் பொசுக்கென எழுந்து வலியை விழுங்கியபடியே சுற்றும் முற்றும் பார்ப்பவர்களே நம்மில் அதிகம். நான் வேறு ரகம். ‘புதையல்’ எடுத்த கதையை ஊர்பூராவும் சொல்லி, அத்தனை பேரையும் சிரிக்கவைத்து அசடு வழியும் அப்பாவி கோயிந்து!

அப்படி ஒரு தமாஷ் சம்பவமே நான் சென்னை வருவதற்குக் காரணம் என்ற கதையை பின்னாளில் கேள்விப்பட்டு நானே வியந்திருக்கிறேன்.

அது என்ன கதை என்றால்.. பழனி மலை முருகன் மூலவர் சிலையை மாற்றப்போவதாக அப்போதைய அ.தி.மு.க.அரசு அறிவித்தது. ‘கூடாது. இது போகர் வடித்த நவபாஷாண சிலை’ என கோடானுகோடி பக்தர்கள் கொதித்தார்கள். குரல் கொடுத்தார்கள்.

அவுட்ஸ்டேண்டிங் மாணவ நிருபராக நான் தேர்வாகியதால், ‘இன்னும் ஆறு மாதங்களுக்கு நீங்கள் உங்கள் ஊரிலிருந்தே ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆக பணியாற்றலாம்’ என விகடன் எனக்கு போனஸ் கொடுத்திருந்த காலம் அது. கல்லூரிப் படிப்பை முடித்து சொற்ப வாரங்களே ஆகியிருந்ததன. பழனிக்குச் சென்று எல்லாத்தரப்பிலும் தகவல் திரட்டி, தெருவில் உட்கார்ந்து கட்டுரை எழுதி, அங்கிருந்தே ஃபேக்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தேன்.

“இதான்யா இந்த வார ஆனந்த விகடன் கவர் ஸ்டோரி. எம்.டி. சந்தேகம் ஏதாச்சும் கேட்டா சரியா க்ளியர் பண்ணனும். அதால நீ என்ன பண்றே.. அப்டியே பஸ் பிடிச்சு மெட்ராஸ் வந்து சேரு” என்றார் சுபா - எனது ஒருங்கிணைப்பாளர். அப்படியே செய்தேன்.

வந்து, எம்.டி. கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம் பதில் கொடுத்தேன். அதாவது எம்.டி. கூப்பிடுவார். சீனியர்கள் அவரது அறைக்குப் போவார்கள். எம்.டி. கேட்ட சந்தேகங்களுடன் வெளியே வருவார்கள். நான் பதில் சொல்வேன். அதை சுமந்து கொண்டு திரும்பவும் எம்.டி.யைச் சந்திப்பார்கள் சீனியர்கள். அட்டகாசமான கவர் ஸ்டோரியாக அது அந்த வார விகடனிலேயே வெளியானது.

அன்று இரவு அலுவலகத்தில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். மறுநாள் நான் திண்டுக்கல்லுக்கு திரும்புவதாகத் திட்டம். பாரிமுனை சரவணபவனில் இருந்து மெகா சைஸ் கேரியர்களில் சாப்பாடு விகடனுக்கு வரும். இலை போட்டு வெளுத்துக் கட்டிக் கொண்டிருப்பார்கள். அன்றைய ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.

சாப்பிட்டபடியே பழனி முருகனின் நிலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

பேச்சோடு பேச்சாக வெகு சாதாரணமாக நான் சொன்னேன்.. “பாவம் அவர். ஏற்கெனவே ஒரு காதைக் காணோம்!”

பதறிப்போய்க்கேட்டார் அப்போதைய விகடன் துணை ஆசிரியரான (இப்போது குங்குமம் ஆசிரியர்) ராவ் சார்.. “ஏன் என்னாச்சு?”

அதே வேகத்தில் சொன்னேன் நான்.. “அதத்தான் எம்.ஜி.ஆர். கடிச்சுத் தின்னுட்டாருங்குறாய்ங்க!”

ஒட்டு மொத்தப் பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியரான் அசோகனுக்கு அப்போது புரையேறியதாகக் கூட ஞாபகம்!

எம்.ஜி.ஆருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ குணமுள்ள நவபாஷாணம் என்பதால் மூலவரின் உடலைச் சுரண்டி எடுத்துக் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்.

வயிறு வலிக்கப் பேசிச் சிரித்து, சாப்பிட்டு, தங்கியிருந்த லாட்ஜுக்குப் புறப்படும்போது சொன்னார்கள்.. “நாளைக்கு ஊருக்குப் போக வேணாம். ரெண்டு நாள் இருந்துட்டுப் போய்யா! எம்.டி. உன்னைப் பார்க்கணும்னார். அவர் கொஞ்சம் பிஸி”

உற்சாகமாக “சரி” சொன்னேன். அடுத்த இரண்டு நாளும் குட்டி நாய் போல விகடன் அலுவலகத்தை வளைய வந்தேன். பெரிய நிருபர்களைத் தொந்தரவு செய்து அவர்கள் செய்திக்காக வெளியே செல்லும்போது கூடவே தொற்றிக் கொண்டேன். படு ஜாலியாக கற்றுக்கொண்டேன் பல விஷயங்கள்.

இரண்டு நாளானதும் “எம்.டி. கூப்பிடறாரு” என்றார்கள். பய பவ்யத்தோடு போனேன்.

“வாங்கோ” என எம்.டி. கூப்பிட்ட காட்சி இப்போதும் என் கண்ணுக்குள் நிற்கிறது.

“உங்களைப் பத்தி நிறையச் சொன்னாங்க நம்ம ஆசிரியர் குழுவுல எல்லாரும். மெட்ராஸுக்கு வந்துடுறிங்களா?” என்றார்.

ஆயிரம் பொற்காசுகள் கிடைத்த தருமி மாதிரி வேக வேகமாக தலையாட்டினேன். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் கௌதமா!

‘அதத்தான் எம்.ஜி.ஆர். கடிச்சுத் தின்னுட்டாருங்குறாய்ங்க!’ என்று நான் ஆசிரியர் குழுவில் பேசியிருந்ததை நினைவுபடுத்திப் பேசினார் எம்.டி. ஆஹா! அங்கே நான் அடித்த கமெண்ட் எம்.டி. காதுகளுக்கும் கொண்டு போகப்பட்டிருக்கிறது! என்னை சென்னைக்கு விகடனின் முழுநேர ஊழியனாக அழைக்கலாம் என்ற எண்ணத்தை எல்லோரிடமும் விதைத்திருப்பதே அந்த ‘எம்.ஜி.ஆர். கடி’தான்!

ஆச்சு! சென்னைக்காரனாயாச்சு!

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட் என மூன்று பத்திரிகைகள் விகடன் நிறுவனத்தில் இருந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. மூன்றிலும் எழுதுவேன்.

மேன்ஷன் வாழ்க்கை. விகடனின் இப்போதைய தலைமை புகைப்படக்காரரான குமரேசன் அப்போது எனக்கு செட் ஆகியிருந்தார். காலை ஏழு மணிக்கே மேன்ஷன் வந்து விடுவார். முழு நாளுக்கு ஆட்டோ பேசிக்கொள்வோம். குமரேசனுக்கு சென்னை அத்துபடி. எனக்கு எதையெல்லாம் செய்தியாக்கலாம் என்ற தொலைநோக்கு ஓரளவுக்கு அத்துபடி. வேட்டைக்கு கிளம்பிவிடுவோம்.

பகலெல்லாம் செய்தி சேகரிப்புக்காக ஓட்டம். பொழுது போனதும் அலுவலகத்துக்குத் திரும்பி விடுவேன்.

உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். கல்லூரியில் அன்றன்றைய பாடங்களை அன்றன்று படிக்கும் பழக்கமில்லை எனக்கு. ஆனால் விகடனில் வேலை பார்த்தபோது அப்படியில்லை. சுடச்சுட எழுதி வைத்து விடுவேன். அப்போதுதான் விடுபடல் ஏதும் இருக்காது என இப்போதும் நம்புகிறேன்.

விடிய விடிய எழுதுவேன். விடிந்ததும் கொஞ்சம்போலத் தூக்கம். தொடரும் மறுநாள் பணிகள் ஏழு மணி சுமாருக்கே.

அலுவலகத்தில் இருக்கும் இரவுகள் இப்போது நினைத்தாலும் இனிக்கும் இரவுகள்! குறிப்பாக இரவுப் பரபரப்பில் அலுவலகம் இருக்கும் இரவுகள்!!

வாரத்தில் மூன்று நாட்கள் அப்படி இருக்கும். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட் மூன்று பத்திரிகைகளுக்கும் இறுதிகட்டப் பணிகள் நடக்கும் மூன்று இரவுகள்.

ஒவ்வொரு அணியிலும் வெவ்வேறு ஆட்கள். கே.சுந்தரம், வேயெஸ்வீ என சூப்பர் சீனியர்கள் கொண்டது விகடன் அணி. அசோகன், பாலகிருஷ்ணன் போன்ற சீனியர் மாணவ நிருபர் படை ஜூ.வி. அணி. ஞானி, இரா.ஜவஹர், சுரேஷ்பால் மற்றும் சில விவாதப் பார்ட்டிகள் ஜுனியர் போஸ்ட் அணி.

மூன்று அணியிலுமே நானும் உறுப்பினர்! அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்ப்பேன். விவாதிப்பேன். வாசகர் கடிதம் தேர்ந்தெடுத்துக் கொடுப்பேன். டயலாக்குகளைச் சரி செய்து கொடுப்பேன். போட்டோ தேடி எடுத்துக் கொடுப்பேன். கூடவே மிமிக்ரி செய்துகாட்டி எல்லோரையும் ரசிக்க வைப்பேன்!

கல்லூரியில் நான் நல்ல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். மேடையேறி எதையாவது கூத்தடித்துக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விட்டு குஷிப்படுத்துவேன்.

ஒரு சமயம் நான்ஸ்டாப் ஆக அந்தாதி மாதிரி ஐம்பது அறுபது சினிமா பாடல்களைப் பாடிக் காட்டி காமெடி பண்ணிய நாளில் வாயாரச் சிரித்தார் அன்றைய விருந்தினரான ஓவியர் அரஸ். பிறகு என்னைத் தனியே அழைத்து கரிசனத்தோடு சொன்னார்.. “உங்களைப் பார்த்தா என் தம்பி மாதிரியே இருக்கு. தப்பா எடுத்துக்காதிங்க. ஒரு அண்ணன் சொல்றதா நினைச்சுக்கங்க. பணக்கார வீட்டு பொமேரியன் நாய்க்குட்டி மாதிரி துறுதுறுன்னு இப்படி ஜாலியாவே இருக்கிங்களே. எனக்கு உங்க எதிர்காலத்தை நினைச்சா கவலையா இருக்கு!”

அந்த அளவுக்கு கோமாளி வாழ்க்கை!

எழுதும் கட்டுரைகளிலும் காமெடிக்கே முன்னுரிமை!

தலையில்லா முண்டம் வேஷம் போட்டுக் கொண்ட ஒருவரைக் கூட்டிக்கொண்டு நகர்வலம் வந்தேன். எம்.ஜி.ஆர். சமாதியில் திடுதிப் என ஒருவரை மயங்கி விழ வைத்து (ஆக்ட்!) எத்தனை பேர் உதவ வருகிறார்கள் என பார்த்து எழுதினேன். நடு ரோட்டில் போவோரை வழி மறித்து ‘என்ன வச்சிருக்கிங்க உங்க பர்ஸ்ல?’ என கத்தியில்லாமல் மிரட்டிக் கேட்டு எழுதினேன்.

ஒரு கட்டத்தில் அப்போதைய விகடன் இணை ஆசிரியரான மதன் சார், குறும்பு டீம் என ஒரு அணியை உருவாக்கி அதற்கு என்னையே பொறுப்பாளராக நியமித்தார்!

குரூப்பாகவே கலாய்க்க ஆரம்பித்தோம்.

விகடன் நடத்திய ‘ஸ்டார் ஜோக்ஸ்’ போட்டிக்கான பொறுப்பாளரும் நானே!

இவ்வளவு முன் கதைச்சுருக்கம் ஏனென்றால் இப்படியாக காமெடி கீமெடி பண்ணிக்கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்துக் கொண்டிருந்த என்னை வழிப்படுத்த வந்தவன் பற்றிச் சொல்வதற்காகத்தான். அவன் என் வாழ்வில் வந்தான். பெயர் திருப்பதிசாமி!

ப.திருப்பதிசாமி என்றால் விகடன் வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயர்.

எம்.எல். படித்தவன். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவன். விகடன் நடத்தி வென்ற பல பொதுநல வழக்குகளின் பின்புலம் அவன். கத்தரிக்கோல் சரஸ்வதி, பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஊழல், மதுரை பாண்டியம்மாள் கொலை (செய்யப்பட்டதாக ஜோடிக்கப்பட்ட) வழக்கு இப்படி அவனுடைய சட்ட அறிவும் ஆலோசனையும் சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகளில் விகடன் வென்றது.

கல்லூரிக் காலத்திலேயே கம்பன் கழகப் பேச்சாளன் அவன். எதைப்பற்றிப் பேசினாலும் மறுப்பது கடினம்.

சினிமா கனவுகள் அவனுக்கிருந்ததால் வக்கீல் தொழிலையும் செய்யாமல், தேடி வந்த விகடன் முழுநேர வேலையையும் ஏற்காமல் பகுதி நேர நிருபராகப் பணியாற்றி வந்தான்.

உற்சாகம் அவன் பேச்சில் எப்போதுமே நிரம்பி வழியும்! கேட்பவர்களையும் அது தொற்றிக் கொள்ளும்! நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த உருவம் அவன்.

வாரம் ஒருவர் அப்போது ஆனந்த விகடன் தயாரித்து வந்த நேரம். திருப்பதி தயாரித்த அந்த இதழ் ‘திகில் ஸ்பெஷல்’ என முடிவானது. ஐடியாக்களை அள்ளி விட்டேன் நான். ‘இதுதான் ஸ்பெஷல்’ என்று சொல்லிவிட்டால் போதும், பத்தே நிமிடங்களில் சிவகாசிப் பட்டாசு போல ஐடியாக்களை பொளந்து கட்டுவது என் ஸ்பெஷாலிடி!

வழக்கமான என் காமெடி வெடிகளுடன் நான் சொன்ன இன்னொரு ஐடியா.. ‘சங்கிலி மனிதர்கள்!’

ஏர்வாடி தர்ஹாவில் மனநல நோயாளிகளைக் குணமாக்குவதற்காக சங்கிலியில் கட்டி வைத்திருப்பார்களே. அதை புகைப்படங்களுடன் ரிப்போர்ட் செய்யலாம் என்பதே என் யோசனை.

“நல்ல யோசனை. நீயே இதைப் பண்ணிடு” என்றான் திருப்பதி.

“நானா?! அடப்போப்பா! நமக்கு காமெடிதான் வரும். இது நீ போய் பண்ணவேண்டிய கட்டுரை” என்றேன் நான்.

“ம்ஹூம். இதை நீதான் பண்றே. உன்னால முடியும். உன்கிட்ட விஷயம் இருக்கு. நீ மறைச்சு வச்சுக்கிட்டு காமெடியன் வேஷம் போடுறே. ஃபர்ஸ்ட் தாட்ல வர்ற வார்த்தைகளை விட்டுட்டு கொஞ்சம் சிரமப்பட்டு எழுது. இப்படியும் எழுத முடியும் உன்னாலன்னு மத்தவங்களுக்குப் புரிய வை” என்றான் அதீத நம்பிக்கையோடு திருப்பதி.

எங்களுக்கிடையே நடந்த வாத விவாதத்தில் வழக்கம்போல அவனே வென்றான்.

என் யோசனை ராவ் சார், அடுத்து மதன் சார் இருவரையும் கடந்து எம்.டி.யின் பார்வைக்குப் போனது.

கூப்பிட்டு அனுப்பினார் எம்.டி.

“இது நல்ல ஐடியாதான். ஆனால் நம்மால பண்ணமுடியாது. அந்தப் பிரச்னையை நாம் விமர்சிக்க முடியாது. இஸ்லாமிய அன்பர்களின் நம்பிக்கை அது. விமர்சிக்கும் சாக்கில் அவர்கள் மனம் புண்படும் விதமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. தவிர, அங்கேயெல்லாம் பத்திரிகையாளர்களை உள்ளே விட மாட்டார்கள். தேவையான தகவல் தர வாய்ப்பில்லை. புகைப்படம் எடுக்க முடியாது. அதனால் இந்த ஐடியாவை ட்ராப் செஞ்சுடலாம்” என்றார் எம்.டி.

என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வாதாடினான் திருப்பதி. “இல்ல சார், சரி தவறு என நாம் விமர்சிக்க வேண்டாம். இஸ்லாமிய நண்பர்கள் புண்படும் விதமாக கௌதம் எழுத மாட்டார். தேவையான தகவல்களையும் போட்டோக்களையும் சேகரித்துக்கொண்டு வருவதாக கௌதம் உறுதி சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே சார்!” என்றான்.

அரை மனதோடு சம்மதித்தார் எம்.டி.

எனக்கும் புகைப்படக்கார நண்பன் கே.ராஜசேகரனுக்கும் (இப்போது விகடனின் தலைமை புகைப்படக்காரன்) தெம்பு விதைக்கும் பேச்சை விதைத்தான் திருப்பதி. “உங்களால் முடியும். நம்புங்கள் முடியும்” இதுவே அவன் பேச்சின் மைய நரம்பு.

எங்களிருவரையும் மெரினா கடற்கரைக்கு அழைத்துப் போனான். ‘ஜொனாத்தன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ கதைகூடச் சொன்னான். பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்தோம்!

இரண்டு நாட்களில் நானும் ராஜசேகரும் ஏர்வாடி கிளம்பினோம். மனசுக்குள் தயக்கம் இருந்தது உண்மையே!

அங்கே நாங்கள் என்ன செய்தோம், எப்படிச் செய்தோம் என்பதெல்லாம் பகிரங்கமாக எழுத முடியாது. தொழில் ரகசியம் அது. சரியாகக்கூட புரிந்து கொள்ளப்படாமல் போகலாம். ஆனால் யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கவனத்துடனேயே செய்தி சேகரித்தோம். பேட்டிகள் எடுத்தோம். படங்கள் பிடித்தோம். சென்னைக்குத் திரும்பினோம்.

முதல் முறை எழுதிக் கிழித்துப் போட்டு, இரண்டாம் முறை எழுதி அதையும் கிழித்துப் போட்டு, மூன்றாம் முறை எழுதி திருப்பதியிடம் கொடுத்தேன்.

“சூப்பர்!” சொன்னான். அந்த 'சங்கிலி மனிதர்கள்' குறித்து வலியோடு கொஞ்சம் பேசினான்.

கட்டுரையையும் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு ராவ் சார், மதன் சார், எம்.டி. மூவரையும் சந்திக்கப் போனான்.

சில நிமிடங்களில் ‘தம்ஸ் அப்’ கைகளோடு வேகமாக வெளியே வந்தான்!

இதழ் விற்பனைக்கு வந்தது. ஒற்றைச் சாரள சூரிய வெளிச்சத்தில் கால்களில் கனமான இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு மன நோயாளியின் க்ளோஸ் அப் புகைப்படம் கட்டுரையின் ஹைலைட்களில் ஒன்று.

இஸ்லாமிய சகோதரர்களின் மத நம்பிக்கையை விமர்சனம் செய்து விடாமல், மனித நேயத்தோடு எழுதப்பட்டிருந்தது கட்டுரை. கத்தி மேல் நடப்பது போன்ற சாமர்த்திய உத்தி. விகடன் கற்றுக்கொடுத்தது!

`அட நீயா இதை எழுதியது?!' என அலுவலகமே பாராட்டியது என்னை.

எம்.டி. கூப்பிட்டார் என்னையும், ராஜசேகரையும். போனோம்.
தன் பர்ஸிலிருந்து பணம் எடுத்து இருவருக்கும் தலா இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய் கொடுத்தார்!

"நான் `முடியாது' என்றேன். முடித்துக் காட்டியிருக்கிறீர்கள். அதனால் என் அன்புப் பரிசு'' என்றார். சிலிர்ப்போடு திரும்பினோம் நாங்கள் இருவரும்.

"நண்பா இது உனக்கான பரிசுடா'' என்றேன் நான் திருப்பதியைப் பிடித்து!

அப்பாவி போலச் சொன்னான்.... "உன் ஐடியா. நீ போனாய். நீ எழுதினாய். எனக்கெப்படி இது சொந்தமாகும்?'' சிங்கிள் டீ மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொன்னான்.

என் எழுத்து புதிய பரிணாமம் பெற்றது அதன்பிறகு. பல சந்தர்ப்பங்கள். பல்வேறு சவால்கள். நேரம் வரும் போது ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்குகிறேன்.

பொற்காலமாகக் கழிந்தன விகடன் நாட்கள்.

திடீரென ஒரு சமயம் ஜூனியர் போஸ்ட் பத்திரிகையின் (அறிவிக்கப்படாத) பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. இன்பமோ, துன்பமோ அதிர்ச்சிகள் திடுதிப்பெனத்தானே நிகழ்கின்றன.

குருவி தலையில் வைக்கப்பட்ட பனங்காய்! வைத்தவர்கள் மதன் சாரும், ராவ் சாரும். முறுக்கோடு தலையாட்டிவிட்டு வெளியேறியதும் புலம்ப ஆரம்பித்தேன்.

வந்தான் திருப்பதிசாமி!

"உன்னால முடியும்னு நான் அன்னிக்கே சொன்னேன்ல. நீ ஆஞ்சநேயர் மாதிரிடா. கலக்கு'' என்றான். டன் கணக்காக நம்பிக்கை கொடுத்தான்.

அத்தோடு நின்று விடவில்லை. கூடவே வந்தான்.
எனது ஆரம்பகால ஜூனியர் போஸ்ட்டுக்கு நிறைய பங்களிப்புச் செய்தான். எனக்கு தெம்பளிப்பும் கொடுத்தான்.

அவன் சொன்னதை நானே கொஞ்சம் நம்ப ஆரம்பித்தேன். ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயரைச் சந்திக்க முடியாத சனிக்கிழமைகளில் கண்ணாடியில் என் முகம் பார்த்துக் கொண்டேன்!

அந்தக் காலகட்டத்தில் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருந்தான் திருப்பதி. பெரும்பாலும் அவன் வேலை ஹைதராபாத்தில்தான். ஒரு ஷெட்யூலுக்கும் அடுத்த ஷெட்யூலுக்கும் இடையே கிடைக்கும் ஓரிரு நாட்களில் விகடன் அலுவலகம் வருவான். பேசுவோம். டீ குடிப்போம். பீச் போவோம்.

அடுத்த வீட்டுக்காரியின் விலகிய முந்தானை முதல் அமெரிக்காவின் அணுகுண்டு ஆராய்ச்சி வரை சகலத்தையும் விவாதிப்போம்.

வாழ்க்கைப் படகு ஒரே திசையிலா பயணிக்கிறது. திருப்பங்கள் நிகழத்தானே செய்கின்றன. அப்படி ஒரு பெரிய திருப்பம் என்னையும் வழி மறித்தது.

ஒரு சில காரணங்களால் விகடனை விட்டு நான் வெளியேற நேர்ந்தது! ஒரு வார சஸ்பென்ஸூக்குப் பிறகே எனது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. தெருவில் இறங்கி நடந்தேன்.

போன இடம் இண்டியன் எக்ஸ்பிரஸ்.

புது வீட்டுக்குக் குடி போயிருந்தேன் அப்போது. தேடி வந்தான் திருப்பதி.

"என்னடாது... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல'' என்றான்.

சொல்ல நினைத்ததையெல்லாம் சொன்னேன். முழுதாக சமாதானமான மாதிரி தெரியவில்லை அவன்.

ஆனாலும் தொலையாத நம்பிக்கையுடன் சொன்னான்... "இது உன் வாழ்க்கை. எது சரி எது தப்புன்னு மத்த எல்லாரையும்விட முடிவெடுக்கும் உரிமை உனக்குத்தான் இருக்கு. நீ செஞ்சதை நான் விமர்சிக்கலை. இனிமேல் விமர்சனம் செய்தும் அதனால் பயனில்லை. புதிய இடம். புதிய பதவி. உன்னால முடியும். தூள் கிளப்பு.''

நான் சொன்னேன்... "திருப்பதி, விகடனுக்கு நான் யாருன்னு நல்லாத் தெரியும். ஆனா, புது ஆபிஸுக்கு என்னை நான் யார்னு புரிய வைக்கணும். ஏதோ ஒரு நம்பிக்கையோட என்னைக் கூப்பிட்டிருக்காங்க. அந்த நம்பிக்கையை சாயம் வெளுக்காம காப்பாத்திடணும். நேத்துத்தான் தொழிலுக்கு வந்த புது ரிப்போர்ட்டர் மாதிரி ஓடணும்.''

மொட்டை மாடியில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் தெருச்சகதியில் குளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டைக் காட்டினான் திருப்பதி.

"இந்தச் சகதியே போதும் என திருப்திப்பட்டுக் கொண்டு அப்படியே சுகமாகக் கிடக்கும் எருமை மாடு மாதிரி யோசிக்காதே. அது என்றைக்கும் நல்ல தண்ணீர்க் குளத்தை நாடிப் போகாது. அதைத் தேடி அலைய வேண்டுமே என அங்கலாய்ப்போடு அப்படியே சோம்பிக் கிடந்துவிடும். நீ அப்படியல்ல, தேடு. தேடிக் கண்டு பிடி. மனச்சோர்வு அடையாதே. `நான் இவ்வளவு படித்தவன், விகடனில் நிறைய எழுதியிருக்கிறேன். நிறைய நிறையப் படித்திருக்கிறேன்' என்ற மமதையோடு சினிமாவுக்குப் போனால் எதையுமே எனக்குக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். நேத்துதான் மஞ்சள் பையோடு ஊரிலிருந்து வந்தவன் போல புதிதாகப் போனால்தான் எனக்கு லாபம். பூஜ்ஜியத்திலிருந்துதான் மறுபடியும் ஆரம்பித்தாக வேண்டும். உழைப்புக்கு யோசிக்காதே'' என்றான்.

நிம்மதியாகத் தூங்கினேன் அன்று இரவு.

அதன்பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், டெலிபோனில் தொடர்ந்தது எங்கள் நட்பு.

அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் உத்தியோகமும் நெடுநாள் நீடிக்கவில்லை எனக்கு. ஒரே வருடத்தில் வெளியேறினேன்.
ஒரு டீ, ஒரு சிகரெட்... காலையில் பதவி விலகல் கடிதம் கொடுத்து, மாலையில் வெளியேறி விட்டேன்!

அடுத்து என்ன எனத் தெரியாமல் தடுமாற்றத்தோடு நான் நின்றிருந்த காலம் அது. ஓடிவந்தான் திருப்பதி.
என் வாழ்வில் புதிய அத்தியாயத்தை அவனே துவக்கி வைத்தான்.

திருப்பதி, நான், ராஜசேகரன் (இப்போது விகடனின் தலைமை புகைப்படக்காரன்), அருணாச்சலம் (இவனும் விகடனின் முன்னாள் மாணவ நிருபரே, அந்தச் சமயத்தில் சன் டி.வி.யில் நியூஸ் ரீடராக இருந்தான். இப்போது நாலைந்து கேரவேன் வைத்திருக்கும் தொழிலதிபர். பிரஷாந்த் உட்பட பல திரைப் பிரபலங்களுக்கு மேனேஜர்), மற்றும் சுபா (மாணவ நிருபராக இருந்தபோது எனக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர் இப்போது ராடன் டி.வி.யில் கிரியேடிவ் ஹெட்) ஐந்து பேரும் சேர்ந்து ஒரு நிறுவனம் ஆரம்பித்தோம்.

சுரேஷ் கிருஷ்ணாவிடமிருந்து வெளியேறி தனியாக படம் இயக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான் திருப்பதி. அந்த நேரத்தில்தான் இந்தக் கூட்டணி.
டி.வி.க்கும், சினிமாவுக்கும் விளம்பரப் படங்கள் எடுத்துக் கொடுத்தோம். `நிஜம்' என்ற பெயரில் விஜய் டி.வி.க்காக ஒரு டெலி பத்திரிகை தயாரித்துக் கொடுத்தோம்.

டெலிவிஷன் என்னும் மீடியாவை எங்களுக்கு கற்றுக் கொடுத்தான் திருப்பதி. நல்ல பெயர் கிடைத்தது எங்கள் உழைப்புக்கும் படைப்புகளுக்கும்.

இந்நிலையில் குருட்டு அதிர்ஷ்டம் என்று சொல்வார்களே அப்படி ஒரு குருட்டு அடித்தது எனக்கு!
`என்னங்க சௌக்கியமா?' என்ற டெலிவிஷன் தொடரை விஜய் டி.வி.க்காக இயக்கித் தரும் வாய்ப்பு!
தயாரிப்பாளர் மூலிகை மணி வேங்கடேசன் என்ற பிரபல சித்த மருத்துவர். என் நலம் விரும்புவர்களில் முக்கியமானவர்.

"இதுஒரு டெலி ஹெல்த் பத்திரிகையாக வர வேண்டும். உன்னால் செய்து தர முடியுமா?'' என்றார்.
போனேன் திருப்பதியிடம். கைகளைப் பிசைந்தபடி நின்றேன்.

"உன்னால் முடியும். நம்பு. அடிச்சு தூள் கிளப்பு'' என்றான் என் மீது துளி நம்பிக்கையும் குறையாதவனாக.

கர்வத்தோடு களம் இறங்கினேன். இருபத்தாறு வாரங்கள் வெற்றிகரமாக வெளியானது `என்னங்க சௌக்கியமா?' எண்ணம், எழுத்து, இயக்கம்: ஜி.கௌதம்.

பல மாதப் போராட்டத்துக்குப் பின்னர் திருப்பதி சினிமா டைரக்டரானான். தெலுங்குத் திரையுலகம் அவனை அள்ளி அரவணைத்தது.
முதல் படம் `கணேஷ்'. வெங்கடேஷ், ரம்பா, மதுபாலா நடித்த அந்தப் படம் மாநில அரசின் ஏழு நந்தி விருதுகளை வாரிக் குவித்தது. ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனை விடவும் அட்டகாசமான படம்.

நாங்கள் பார்த்துக் கொள்ளும் நேரங்கள் அரிதானது.

ஒரு சுபயோக சுப தினத்தில் விகடனில் இருந்து அழைப்பு வந்தது எனக்கு!
`ஷாப்பிங் ப்ளஸ்' என விகடனுடன் இலவச இணைப்பாக வெளியான விளம்பர இதழை பொறுப்பேற்று நடத்தித் தர முடியுமா என்றார்கள்.

டெலிவிஷன் மீடியாவில் பண ருசி பார்த்துக் கொண்டிருந்த என்னால் முழு நேரப் பத்திரிகைப் பணிக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை.

"நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டே இந்த வேலையையும் பாருங்கள்'' என ஸ்பெஷல் அனுமதி கொடுத்தார் ஜே.எம்.டி. (இப்போது விகடன் பதிப்பாளர். எம்.டி.யின் புதல்வர்).

பகுதி நேரமாக ஷாப்பிங் ப்ளஸ் வேலைகளையும், மிகுதி நேரத்தில் டெலிவிஷன் வாய்ப்புகளையும் செய்து கொண்டிருந்தேன்.

டெலிவிஷனில் ஒரு ரன், இரண்டு ரன் என ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்த எனக்கு சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பையும் விகடனே கொடுத்தது.

'விகடன் பேப்பர்' ஆரம்பித்த சமயம்... அதற்கான டி.வி. விளம்பரம் எடுத்துத் தரச் சொன்னார்கள்.

ஐந்து லட்சம், எட்டு லட்சம் என யார் யாரோ வந்து பணம் கேட்டனர். `அதெல்லாம் முடியாது ஒரு லட்சம்தான் தருவேன். முடியுமா?' என்று கூறி திருப்பி அனுப்பினார் ஜே.எம்.டி.

விகடனில் எனது மறுபிரவேசத்துக்குக் காரணமான கே.பாலசுவாமிநாதன் (அப்போது விகடனின் ஜெனரல் மேனேஜர். இப்போது ஜெயா டி.வி.யில் வைஸ் பிரசிடெண்ட்) தான் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்.
விளம்பரத்துக்கான ஐடியாவை ஜே.எம்.டி.யிடம் சொல்லி, ஒப்புதல் வாங்கி, அலுவலகத்தில் முன்பணம் வாங்கி, நடிப்பதற்காக தலைவாசல் விஜய் உட்பட பலரிடம் பேசி நாள் குறித்து... விளையாட்டுப் போல எல்லாம் நடந்து விட்டது.
விடிந்தால் ஷூட்டிங். வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தேன் நான்!

ஒளிப்பதிவாளராக நான் தேர்ந்தெடுத்திருந்தது சினிமா (டும் டும் டும் உட்பட பல படங்கள்) ஒளிப்பதிவாளரான ராம்ஜி. P.C.SRIRAM சிஷ்யர்.

`அரைகுறை தொழில் நுட்பத்தோடு இவ்வள்வு பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டோமோ' என மனம் குழம்பிக் கொண்டிருந்த இரவு அது.

மூக்கு வியர்த்திருக்கக் கூடும். எங்கிருந்தோ போன் பண்ணினான் திருப்பதிசாமி.

"என்னடா என்ன பண்றே?'' நான் என் பயத்தைச் சொன்னேன்.

"உடனே கிளம்பு. வீட்டுக்கு வா. நான் இன்னைக்கு தான் ஹைதராபாத்ல இருந்து வந்தேன்'' என்றான். ராவோடு ராவாக தண்டையார்பேட்டையில் இருந்த அவன் வீட்டுக்குப் போனேன்.

கைவசம் நான் எடுத்துப் போயி இருந்த `ஸ்டோரி போர்டை' வாங்கிப் பார்த்தான்.

"அதான் பக்காவா ப்ளான் பண்ணியிருக்கியேடா. அப்புறம் ஏன் பயப்படுறே? உன்னால் முடியும். நம்பு. அடிச்சு தூள் கிளப்பு'' என்றான்.

டேபிளில் இருந்த ஒரு தெலுங்குப் பட வீடியோ கேசட்டை எடுத்து டெக்கில் ஓட விட்டான். ஸ்டோரி போர்டை ஒரு கையிலும், டி.வி. ரிமோட்டை மறு கையிலும் எடுத்துக் கொண்டு விளக்க ஆரம்பித்தான்.

"இதோ பார் இதுதான் டூ ஷாட். இது க்ளோஸப். இது மிட் க்ளோஸப். இது சஜஸ்சன் ஷாட்.''

ஒரு இரண்டு மணி நேரம் பாடம் நடந்தது.

"போடா போ. நாளைக்கு நான் வேற வேலை எதையும் வச்சுக்கல. வீட்லதான் இருப்பேன். நீ நம்பிக்கையோட ஷூட்டிங் நடத்து. எதுவாச்சும் டவுட்னா போன் பண்ணு. ஓடி வர்றேன்'' என்றான். தூங்கி விட்டான்.

விடியாத இருளில் நான் வீடு திரும்பினேன். குளித்து முடித்து சூரிய உதயம் பின்னணியில் ஷாட் வைக்கப் போய்விட்டேன்.

திருப்பதி என் பாக்கெட்டிலேயே இருப்பதாக ஒரு உணர்வு.

"ம் நடத்து. உன்னால முடியும்''

ஒரே நாளில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வெவ்வேறு விளம்பரங்கள் எடுத்து முடித்தேன்!

`பேக் அப்' சொல்லிவிட்டு திருப்பதிக்குப் போன் போட்டேன்.

"என்னடா கலக்கிப்புட்டியாம்ல'' என்றான்.

வெற்றிப் பெருமிதத்தோடு நிம்மதிப் பெருமூச்சும் கலந்து சிரித்தேன்.

அதன்பிறகு இரண்டு வருடங்கள் விகடன் நிறுவனத்தின் ஆஸ்தான விளம்பரப் பட இயக்குநர் நான்தான். இருபது படங்களுக்கு மேல் எடுத்துக் கொடுத்தேன். கோவை ஷோபா கார்னர், கேரளாவில் சபரி சோப் என சுமார் பத்து வெளி விளம்பரப் படங்களையும் இயக்கினேன்.

சில வருடங்களில்... மறுபடியும் வாழ்க்கைத் திருப்பம்!

ஒரு நன்றிக்கடன் தீர்ப்பதற்காக ஜெயா டி.வி.யின் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பதவி ஏற்றேன். தேடி வந்து கை குலுக்கினான் திருப்பதி.

"உன்னால் முடியும். அடிச்சுத் தூள் கிளப்பு.''

ஒரு வருடம் ஓடியது. பெயரோடும், புகழோடும் இருக்கும்போதே ஜெயா டி.வி.யிலிருந்து வெளியேறினேன். நேராக திருப்பதியிடம் வந்தேன்.

"டேய் என்னை உன் உதவி இயக்குரா சேர்த்துக்கோ'' என்றேன். `ஆஸாத்' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தான் அவன்.

"நீ எப்ப வேணும்னாலும் எங்கூட வரலாம். ஆனால், சினிமாவில் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமே. பணக் கஷ்டம் வரும். தாங்கிக்க முடியாது உன்னால். பிள்ளை குட்டிக்காரன் நீ. வீட்டுக்கு மாதம் முழுவதும் வருவது போல ஏதாவது பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு வாடா'' என்றான்.

பேங்க் பேலன்ஸ் எல்லாம் துடைத்தெடுத்து சொந்தமாக ஒரு தொழில் ஆரம்பித்தேன். திறப்பு விழாவுக்கு வர முடியாததால் அடுத்த வாரம் வந்து வாழ்த்தினான் திருப்பதி.

"உன்னால் முடியும். நம்பு''

ம்ஹும். என்னால் அது மட்டும் முடியாமல் போய்விட்டது.

தொழிலில் நஷ்டம்!
பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்த திருப்பதிக்கு போன் போட்டேன் உதவி கேட்டு.

"திருப்பதி உடனடியாக ஒரு லட்ச ரூபாய் பணம் வேணும். நாளைக்கு பேங்க்ல கட்டணும்''

"ஓடி வாடா'' என்றான். போனேன். எதுவும் பேசாமல் செக் எடுத்து நீட்டினான்.

"என்னாச்சுடா. தொழிலை கவனமா நடத்து. சினிமா கனவை கொஞ்சம் ஒத்திப் போடு. நான் எங்கேடா போகப் போறேன். நீ எப்ப வந்தாலும் என் ரெட் கார்பெட் உனக்கு'' என்று புத்தி சொன்னான்.
போராட்டமாகக் கழிந்தது வாழ்க்கை. திருப்பதியின் வாழ்க்கையும்தான்.
`மூன்றாவது படம் தமிழில்தான்' என கறாராக முடிவெடுத்து வாய்ப்புக்காக அலைந்தான். வென்றான்.

திருப்பதிக்கு `நரசிம்மா' படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
"தொழிலைக் கவனி. நிலைப்படுத்து. அடுத்த படத்தில் வந்து சேர்ந்து கொள்'' என்றான் திருப்பதி.

"ம்'' சொன்னேன்.

அவனிடம் நான் வாங்கியிருந்த கடன் கொஞ்சம் லேசாக எங்கள் அன்பை உரசிப் பார்த்தது! சிறு ஊடலுடன் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்த ஒரு சில நாட்கள் அவை.

அந்த கறுப்பு சனிக்கிழமையை இப்போது நினைத்தாலும் ஈரல் குலை நடுநடுங்குகிறது!

அதிகாலை மணி மூன்றரை இருக்கும். செல்போன அலறியது. எடுத்தேன். தூக்கம் தூக்கிலிட்டுக் கொண்டது!

"நம்ம திருப்பதி...''

"என்னாச்சு திருப்பதிக்கு?''

"நைட் நடந்த ஆக்ஸிடண்ட்ல இறந்துட்டார். ஸ்பாட்லேயே எக்ஸ்பயர்ட்!''

செத்துப் போனான் என் நண்பன். கூடவே என் எதிர்காலமும் என் மேல் எனக்கிருந்த நம்பிக்கையும்!

இனி யார் சொல்வார் என்னிடம்... "உன்னால் முடியும். நம்பு'' என்று?!

இங்கே... இப்போது வலைப்பூவில் நான் பலரை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து தோழி அனிதா பவன்குமார் எனக்கொரு மெயில் அனுப்பியிருக்கிறார்.
"மத்தவங்களை உற்சாகப்படுத்துவது ஒரு டேலண்ட். அது உங்ககிட்ட நிறைய இருக்கு கௌதம்''

என்னை நான் நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன். திருப்பதிசாமி என்னில் கொஞ்சம் இருக்கிறான். அவனைச் சாக விட மாட்டேன் நான் சாகும் வரை!

நண்பர்களே! கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் உங்களை. உங்களுக்குள் இருக்கும் திருப்பதி சாமியையும், உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பதிசாமியையும்கூட சாக விட்டு விடாதீர்கள்.

போதும் நண்பர்களே.. இதற்கு மேல் என்னால் என்னில் கரை புரளும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொஞ்சம் தனிமை வேண்டும் எனக்கு. இன்று சனிக்கிழமை... வீங்கிப்போன முகத்தோடு நாளைக் காலையில் உங்களைச் சந்திக்கிறேன்!

திருப்பதிசாமி பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்..

முந்தைய 'எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்' : இங்கே

குங்குமம் அடுத்த வாரம்

குங்குமம் அடுத்த வாரம்...
27.08.2006 தேதியிட்ட, அதாவது அடுத்த வார, அதாவது 20.08.2006 அன்று கடைக்கு வரும் குங்குமம் இதழில்..

‘வலைப்பூவாளி’ பகுதியில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் வலைப்பதிவாளர்கள்:
மழலை / mazhalaitalk.blogspot.com
கென் / thiruvilayattam.blogspot.com
ஜெஸிலா ரியாஸ் / jazeela.blogspot.com
கார்த்திக் பிரபு / bharathi-kannamma.blogspot.com

குங்குமத்துக்காக பிரத்தியேகப் படைப்பளித்த வலைப்பதிவாளர்கள்:
சிறுகதை - நிலா

ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள். ஆர்வத்தோடு பங்களிப்பைச் செய்து அடுத்தடுத்த வாரங்களில் குங்குமத்தில் இடம்பெறப் போகும் மற்ற நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

இந்த 5 பேரும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும். இதழ் விற்பனைக்கு வந்ததும் உங்கள் படைப்பு வெளியான பக்கங்களை HIGH RESOLUTIONல் ‘பொம்மை’யாக்கி அனுப்பி வைக்கிறேன். படைப்புகளுக்கான சன்மானத்தை இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்க இயலும். எந்தப் பெயரில் காசோலை எடுக்கப்பட வேண்டும், எந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதை உடனடியாக மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.

நன்றியுடனும் நட்புடனும்
ஜி.கௌதம்

27.08.2006 தேதியிட்ட இதழில் இடம்பெறும் ஒருசில பகுதிகளுக்கான முன்னோட்டம் இதோ..

  • 'மனித மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் உலகின் எந்த மூலையிலாவது இருக்கிறார்களா?' என்று உங்கள் குழந்தைகள் கேட்டால், தயங்க வேண்டியதில்லை. 'இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் இலங்கையிலும் பெரிய தலைவர்களாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் மனிதக் கறி, அதிலும் குழந்தைகளின் கறி என்றால் அவர்களுக்குத் தின்னுவதற்கு மிகவும் பிடிக்கும்' என்று தயங்காமல் பதில் சொல்லுங்கள்.

கிருஷ்ணா டாவின்ஸி எழுதும் சிறப்புக் கட்டுரை: குழ்ந்தைகளைத் தின்னும் மனிதர்கள்!

கூடவே,

  • 'நின்னு விளையாட'ப்போகும் 'வேட்டையாடு விளையாடு'
  • சோனியா அகர்வாலுக்கு ரஜினி வாழ்த்து!
  • சூர்யா-ஜோதிகா களை கட்டும் கல்யாணம்! கடைசி நேர திருப்பங்கள்!
  • மதன் எழுதும் மாவீரன் நெப்போலியன் தொடர்
  • சென்னை தோசைக்கு லண்டனில் கிராக்கி! ஒரு சக்சஸ் ஸ்டோரி
  • அனாதை இல்லங்களுக்கு கோடிகள் தருவதாகக் கூறி பகீர் மோசடி!
  • மேக் அப் இல்லாத நயன்தாரா!
  • பாகிஸ்தான் வானில் பதறவைத்த நிமிடங்கள்! ஒரு கமாண்டரின் அனுபவம்!
  • பா.விஜய் எழுதும் தேவதைகளின் தேசத்தில் 'அலுவலகக் காதல்'
  • வ.உ.சி. பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
  • கடலைக்காதலிக்கும் முதல் இந்தியப் பெண்!
  • 'எம்டன் மகன்' படத்துக்காக இயற்கையே இசையமைத்த புதுமை!
  • பெங்களூருக்கு ஆபத்து! என்.சொக்கனின் அபாய அறிவிப்பு

Friday, August 18, 2006

உற்றுப்பார்.. நீ யார்? / எதற்கு? ஏன்? எப்படி?

டந்தது நேர்முகத்தேர்வு. காலியாக இருக்கும் ஏழு இடத்துக்காக 299 பேர் விண்ணப்பித்திருந்தனர்!

ஒவ்வொருவராக நேர்முகம் நடக்கும் அறைக்குள் பயபக்தியுடன் போய், சஸ்பென்ஸ் முகத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தனர். அடுத்ததாக அவன் முறை.

மிடுக்கோடு உள்ளே சென்றான். உட்காரச் சொன்னார்கள். உட்கார்ந்தான்.

அவனது கோப்பினை பொறுமையாகப் பார்த்தார் எதிரே இருந்த அதிகாரி. தான் தேடிய ஆளைக் கண்டு கொண்ட திருப்தி தெரிந்தது அவர் விழிகளில். ஆனால் ஒரு சிக்கல்!

பல துறைகளில் அனுபவம் பெற்றிருந்தான் அவன். ஆழ அகலமான அறிவு அவனுக்கிருப்பதாக உணர்ந்தார் அதிகாரி. எந்தப் பணி கொடுத்தால் அவனது திறமையை முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதை அவனிடமே கேட்க முடிவெடுத்தார். கேட்டார்.

“அப்ளிகேஷன் ஃபார் சூடபிள் ஜாப். இதை என் கவரிங் லெட்டர்லயே குறிப்பிட்டிருக்கிறேனே. என் திறமைக்கும் தகுதியான வேலையை நீங்களே தீர்மானிக்கலாம்” என்றான் அவன்.

அதிகாரி கேட்டார்.. “உங்களை உங்களுக்கு எத்தனை வருடங்களாகத் தெரியும்?”

“இருபத்தி மூன்று வருடங்களாக” என்றான் அவன். அது அவனது வயது.

“இருபத்தி மூன்று வருடங்களாக உங்களை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படியும் உங்களுக்குப் பொருத்தமான வேலை என்னவென உங்களால் குறிப்பாகச் சொல்லமுடியவில்லை எனும்போது, ஒரு சில நிமிடங்களில் மட்டுமே உங்களைத் தெரிந்து கொண்டு என்னால் என்ன கூறிவிட முடியும்?!” - தீர்க்கமாகச் சொன்னார் அதிகாரி.

அதுவரை புரியாத கோணம் இப்போது அவனுக்குப் புரிந்தது. அது என்ன?


?

?

?

?

?


?


?


அதைத்தான் தலைப்பிலேயே சொல்லியாச்சே! ‘உற்றுப்பார்.. நீ யார்?’


Thursday, August 17, 2006

பழம் நீயப்பா! / எதற்கு? ஏன்?எப்படி?

வியாபாரத்தில் பெருத்த லாபம். ‘ஆஹா ஓஹோ’ என தொட்டதெல்லாம் பொன்னானது அந்த வியாபாரிக்கு!

வெற்றிமேல் வெற்றிகளாக தனக்கு வந்து குவியும் அதிசயத்தைச் சொல்லி மகிழ்வதற்காக தான் மதிக்கும் மகான் ஒருவரைக் காணச் சென்றான் அவர்.

அங்கே அவருக்கு முன்னால் இன்னொரு நபரும் மகானுக்காகக் காத்திருந்தார். தொழிலில் கொழுத்த நஷ்டத்தைச் சந்தித்த சோகத்தைப் புலம்பித் தீர்த்துக்கொள்வதற்காக வந்திருந்தார் அவர்!

பூஜை முடித்து பார்வையாளர்களைச் சந்தித்தார் மகான்.

“எல்லையில்லா சந்தோஷத்தில் இருக்கிறேன் நான். இப்போது என்னிடம் இருக்கும் செல்வத்தால் இந்த ஊரைக்கூட என்னால் விலைக்கு வாங்க முடியும்” என்று குதூகலித்தார் ‘வெற்றி’ வியாபாரி.

“ஐயோ.. வேதனையைத் தாள முடியவில்லை. சாகலாம் போலிருக்கிறது” என அழுது புலம்பினார் ‘தோல்வி’ மனிதர்.

இருவரையும் ஊடுருவிப்பார்த்த மகான் இருவருக்க்கும் ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து ஆசிர்வதித்தார்.

ஏன் எனத் தெரிகிறதா?

?

?

?

?

?

?

?

காயாக இருக்கும்போது சரி, பழமாக மாறும்போதும் சரி.. ஒரே சுவையைத் தருவது எலுமிச்சம்பழம். அதுபோல துன்பத்தால் துவளாமலும், இன்பம் கண்டு குதிக்காமலும் இருக்கக் கற்றுக் கொள்வதே வாழச் சிறந்தது!

Wednesday, August 16, 2006

தீர்ந்துபோன வார்த்தைகள்! / காதல் பால்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
-பொருட்பால், அதிகாரம்: தெரிந்து செயல்வகை, குறள்: 466

செய்யத்தகாதவற்றை செய்வதாலும் கேடு உண்டாகும். அதுபோலவே செய்யத்தக்கவற்றைச் செய்யாததாலும் கேடு உண்டாகும்

தோ சொல்ல நினைக்குற மாதிரி தெரியுது. என்னன்னுதான் சொல்லிடேன்!” -ஏக்கம் ப்ளஸ் செல்லக் கோபத்துடன் கேட்டாள் அவள்.

குறும்புச் சிரிப்பைச் சிந்தினான் எதிரே கை கட்டியபடி நின்றிருந்த அவன்.

அவனுக்கும் அவளுக்கும் இடையே இருப்பது அழகான கெமிஸ்ட்ரி! அரை ட்ராயர் பருவத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். எல்.கே.ஜி. முதல் இன்ஞினியரிங் வரை ஒன்றாகவே படித்து வந்திருப்பவர்கள். எதிரெதிர் வீடு.

படிப்பில் இருவருக்கும் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி இருக்கும். இப்போதும் போட்டிதான். காதலை யார் வாயிலிருந்து யார் முதலில் வரவழைப்பது என்ற போட்டி!

நல்ல நட்புதான் அவர்களிடையே இருந்த உறவு. ஆனால் நட்பு காதலாகக் கூடாது என்ற கட்டாயமா என்ன! பிசைந்த மண் எந்தக் கணத்தில் பானையாக மாற ஆரம்பிக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. அப்படித்தான் இவர்கள் நட்பு காதலாகப் பூத்ததும்!

முதலில் சொல்ல விடாமல் வெட்கம் தடுக்கிறது அவளுக்கு. அவனோ கிராதகன். அவளது கண்களில் காதலைப் படித்துவிட்டாலும் கண்டுக்காதவனாக நடிக்கிறான். என்னதான் நெருக்கமாகப் பழகினாலும் கொஞ்சம் கள்ளத்தனத்தையும் கற்றுக் கொடுத்து விடுகிறதே இந்தக் காதல்!

“ஒண்ணுமில்லையே!” என்றான் அவன் அவள் முகத்தில் மின்னலடித்த ஏமாற்றத்தை ஓரக்கண்களால் பார்த்தபடியே. “ஆமா.. நீ ஏதோ சொல்ல விரும்புற மாதிரி தெரியுதே?” என்று தூண்டில் வேறு போட்டான்.

“ம்கூம். ஒண்ணுமில்லை” என்றாள் அவளும் மென்று விழுங்கியபடியே.

சட்டென நினைவு வந்தவனாக, “நாளைக்கு இண்டர்வியூ இருக்கு நமக்கு, தெரியும்ல?” என்றான் அவன்.

“ஆமால்ல. விடியோ கான்ஃபரன்ஸிங்லதானே! நல்ல வேளை ஞாபகப்படுத்தினே. நெஜமாவே மறந்துட்டேன்.”

“சரி வா. வீட்டுக்குப் போகலாம். நாம வீட்டை விட்டு வந்து ரொம்ப நேரமாகுது. சீக்கிரம் போனா இண்டர்வியூவுக்கு ச்சும்மா கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிக்கலாம்.”

“அதென்ன மாயமோ தெரியல. ‘அவன்கூட சேர்ந்து ஆம்பளைப்பயலாட்டம் ஊர் சுத்தப்படாது’னு காலைல என்ட்ட மல்லுக்குவந்த எங்கம்மா நீ வீட்டுக்கு வந்து ‘ஆண்ட்டி நானும் உங்க பொண்ணும் கொஞ்சம் வெளில போகணும்.’னதும் ஒரு பேச்சுப் பேசாம அனுப்பி வச்சுட்டாங்க. அப்டி என்னதான் சொக்குப்பொடி போட்டியோ எங்கம்மாவுக்கு!”

-இப்படி அவள் சொன்னது அவன் மனக்காதுகளுக்கு இப்படித்தான் கேட்டது.. “நம்ம காதலுக்கு எங்க அம்மா க்ரீன் சிக்னல் கொடுத்துட்டா!”

மனதோடு சிரித்துக் கொண்டான்!

ட்சத்திர ஹோட்டல். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான இண்டர்வியூ நடந்தது. வீடியோ திரையில் நாலைந்து வெள்ளைக்காரர்கள் கேள்விகள் கேட்க, கேமராவுக்கு முன்பிருந்து உயிர்ப்போடு பதில் பேசியாக வேண்டும்.

அவன், அவள் தவிர இன்னும் எட்டு பேர் வந்திருந்தனர்.

முதலில் அவன் முறை. தீவிர யோசனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் பேசிய விதமே வெள்ளைப்பார்ட்டிகளுக்குப் பிடித்துப் போனது.

“யு.எஸ். வர விருப்பமா?” என்றார்கள் கட்டக்கடைசியாக.

அவனுக்கு இன்ப அதிர்ச்சி! அந்த நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்காகவே தேர்வு நடத்துவதாகக் கூறப்பட்டது. அமெரிக்க அழைப்பு அவன் எதிர்பாராதது. அவன் மனதுக்குள் அமெரிக்கக் கனவே இருந்தது. அதனால்தான் கேம்பஸ் இண்டர்வியூவில் தானாகக் கிடைத்த சென்னை, பெங்களூர் வாய்ப்புகளுக்கும் பாராமுகமாய் இருந்துவிட்டான். இந்த இடத்துக்குக்கூட சீரியஸாக அவன் வரவில்லை. வெட்டியா வீட்டில் பொழுது போக்குவதற்குப் பதில் ஒரு இண்டர்வியூ பயிற்சி, அவ்வளவே!

“டபுள் ஓ.கே.” சொன்னான் கடைசிக் கேள்விக்கு, அந்த நிமிடம் அவளை மறந்துபோய்!

“ச்சே! போடா! நீ என்கிட்ட என்ன சொல்லி இங்கே கூட்டிட்டு வந்தே? இப்ப என்ன பண்ணி வச்சிருக்கே?” -நிஜமான கோபத்தில் சத்தம் போட்டாள் அவள்.

‘ச்சும்மா லுலுலுவாச்சுக்கும் அட்டெண்ட் பண்ணிட்டு வரலாம் வா’ என்று அவளை அழைத்து வந்ததே அவன்தான். இப்போது ‘அமெரிக்காவுக்கு வரியா’ என்றதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ரெடியாக இருக்கிறானே!

எங்கே அவனைப் பிரிந்து விடுவோமோ என்ற பதைபதைப்பு அவளிடத்தில் தெரிந்ததை ரசித்தான் அவன்.

ஒரே மாதத்தில் எல்லாம் எதிர்பாராத வேகத்தில் மள மளவென நடந்து முடிந்தது!

சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்ப ஒரு மினி கும்பலே கூடியிருந்தது. செமத்தியான சம்பளம். அமெரிக்க வேலை.
“ஒரு ரெண்டு வருஷம் அங்க இருந்துட்டா லைஃப் ஸ்டைலே மாறிடும் ஆண்ட்டி” -அவளைப் பார்க்காதவனாக ஆக்ட் கொடுத்தபடியே அவளது அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் அவன். எதிர் வீடு, குடும்ப நட்பு இதுகளுக்காக அவளுடைய குடும்பமும் வழியனுப்ப வந்திருந்தது.

உர்ரென்று இருந்தாள் அவள். அவளுக்கும் அதே நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் வேலை கிடைத்திருந்தது. நாளடைவில் அவளும் அமெரிக்கா போய் அவனுடன் சேர வழியுண்டு என்பதால் கொஞ்சம் குறைவான சம்பளம் என்றாலும் வேலைக்கு ஒப்புக்கொண்டிருந்தாள் அவள்.

எல்லோரிடமும் பேசி விடைபெற்று நடக்கும்போது திரும்பி அவள் கண்களைப் பார்த்தான்.

‘ஏதோ சொல்ல நினைக்குற மாதிரி தெரியுது. என்னன்னுதான் சொல்லிடேன்.’ என கெஞ்சின அவள் கண்கள்! சட்டென உடைந்து போனான். தடுமாறி நின்றான்.

கண்கள் கசிய கை காட்டிக் கொண்டிருந்த அவனது அம்மா, “மனசுக்குள்ள எதையும் வச்சுக்காம போய்ட்டு வாப்பா” என்றாள் விசும்பலுடன். மகன் தங்களைப் பிரிவதை மட்டும் நினனத்தே தடுமாறுவதாக எண்ணிக்கொண்டாள் அவள்.

ஒரு கணம் நிதானித்து விழி நீரை மறித்துக் கொண்டு, புன்னகை காட்டி, திரும்பி நடந்தான் அவன்.

‘எங்கே போகப் போகிறாள்? யு.எஸ். போய் செட்டிலானதும் போன்ல சத்தம் போட்டு, ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கலாம்!’ - இது அவனது மனக்கணக்கு!

‘நிஜமாவே என் காதலை அவன் புரிஞ்சுக்கலியோ? எதுவும் சொல்லாம போறானே!’ -இது அவளது மனக்கணக்கு!

காலம் வேறு ஒரு கணக்குப் போட்டது!!

விமானம் இறங்கியதும் முதல் காரியமாக தன் வீட்டுக்கு போன் போட்டான் அவன். அப்பாதான் எடுத்தார்.

“ஜர்னியெல்லாம் நல்லா இருந்ததா?” என நலம் விசாரித்துவிட்டுச் சொன்னார்.. “இங்க உன் ஃப்ரெண்டு அதான் எதிர்த்த வீட்டு வாலு இருக்காளே அவளைப் பெண் பார்க்க வராங்களாம் நாளைக்கு. என்ன அவசரமோ தெரியல, கால்ல நெருப்பக் கட்டிக்கிட்டு ஏற்பாடு பண்ணிட்டான் அவங்கப்பன். நீ ஒரு போன் போட்டு அவளுக்கு விஷ் பண்ணிடேன்”

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்,
சொல்லாக் காதலாய்



Saturday, August 12, 2006

முஹம்மது(ஸல்)நபியின் மன உறுதி - எதற்கு? ஏன்? எப்படி?

போர்க்களம் அது!

இறைத்தூதர் அண்ணல் முஹம்மது(ஸல்) நபியும் அவரது சஹாபி(பின்பற்றி நடப்பவர்கள்)க்களும் கொஞ்சமும் எதிர்பாராத ஒரு நேரத்தில் தாக்குதலுக்கு வருகிறார்கள் எதிரிகள்.

கொலைவெறியோடு அவர்கள் வருவதைக் கேள்விப்பட்டதும் யோசிக்க சிறிது அவகாசம் வேண்டி மறைந்திருக்க முடிவெடுத்தனர் அண்ணல் முஹம்மது(ஸல்) தலைமையிலான அனைவரும். அதன்படியே புதர் ஒன்றில் பதுங்கினர், பாயத்தயார்ப்படுத்திக் கொள்ளும் புலிபோல.

கொலைகாரர்கள் குதிரைகளில் வந்தனர். கையில் பயங்கரமான ஆயுதங்கள்!

மறைந்திருந்தவர்களில் ஒரு சஹாபி சற்றே பயத்துடன் கேட்டார்.. "எதிரிகள் நம்மைக் கண்டு கொண்டால் என்ன செய்வ்து? இன்றே நாம் மடிந்துவிடுவோமா?"

அதற்கு அண்ணல் முஹம்மது(ஸல்) சொன்ன பதிலில் அவரது மன உறுதி தெரிந்தது. கூட இருந்த அத்தனை பேருக்கும் அந்த மன உறுதி பற்றிக்கொண்டது!

அப்படி என்ன சொன்னார் தெரியுமா அண்ணல் முஹம்மது(ஸல்) நபி அவர்கள்?

?

?

?

?

?

?

?

"நான் அல்லாஹ்வின் தர்மத்தை இவ்வுலகில் நிலை நிறுத்தும் பொருட்டு வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும்வரை எனக்கு மரணமில்லை. என்னுடன் இருப்போர் தாங்களும் இதே நோக்கோடு வந்திருப்பதாக நம்புங்கள். பயப்படாதீர்கள். நம் காரியம் நிறைவேறும்வரை யாருக்கும் மரணமில்லை!"

குங்குமம் - வலைப்பூ எழுத்தாளர்கள் - அறிவிப்பு

விற்பனையில் இருக்கும் 13.08.2006 தேதியிட்ட
குங்குமம் வார இதழில் தங்கள் படைப்பினை
இடம் பெறச்செய்த நண்பர்களான
1. நிலவுநண்பன்,
2. ஜொள்ளுப் பாண்டி,
3. விழியன்,
4. பொன்ஸ்,
5. ஜெஸிலா,
6. நிலா,
7. அனிதா பவன்குமார்,
8. ராசுகுட்டி

அடுத்த வார / 20.08.2006 தேதியிட்ட இதழில்
வலைப்பூவாளி பகுதியில் இடம் பிடித்த நண்பர்களான
1. மயூரேசன்,
2. தமிழ்சிறுவன்,
3. கஸ்தூரிப்பெண்,
4. காழியன்,
5. ஜொள்ளுப்பாண்டி
மற்றும் 6. கவிதா கெஜானன்

அனைவரும் சன்மானம் (காசோலை) எடுப்பதற்கான பெயரையும்
அனுப்பிவைப்பதற்கான முகவரியையும்
kungumambest@gmail.com என்ற மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்கவும். உங்களில் ஓரிருவர் மட்டுமே இதுவரை அனுப்பிவைத்ததாகத் தெரிகிறது.

மேலும் விவரங்களுக்கு.. சொடுக்கவும்.

Friday, August 11, 2006

தண்ணி 'கருத்து'ருக்கு! / எதற்கு? ஏன்? எப்படி?

"நாட்டாமை தீர்ப்பை தெளிவாச் சொல்லு!''

- அண்ணன், தம்பி இருவரும் ஒரே குரலில் சத்தமாகச் சொன்னார்கள். ஊரே கூடி நிற்க, பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது.

வேடிக்கை என்னவென்றால், ஒரே குரல் கொடுத்த அந்த அண்ணனுக்கும், தம்பிக்கும்தான் தகராறு!

"இவர் வயதில் மூத்தவராக இருக்கலாம். அதற்காக நல்ல விஷயங்களை நான் சொன்னால்கூட வயதைக் காரணம் காட்டி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்'' என்றான் தம்பி.

"இவனுக்கு அனுபவம் போதாது. நான் நல்லது எதைச் சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியாக வெளியே விட்டுவிடுகிறான்'' என்றான் அண்ணன்.

இருவரையும் புரிந்துகொண்ட நாட்டாமை ஒரு மண் பானை, ஒரு தட்டு, ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் மூன்றையும் கொண்டு வரச் சொன்னார்.

அண்ணனை அருகே அழைத்தார். பானையைத் தட்டினால் மூடிவைத்து, டம்ளர் தண்ணீரை பானைக்குள் ஊற்றச் சொன்னார்.

"அதெப்படிங்க! மூடியிருக்கும் பானைக்குள் தண்ணீர் ஊற்ற முடியாதே'' ஊன்றான் கேலிச் சிரிப்புடன் அண்ணன்காரன்.

பானையின் அடிப்பாகத்தில் பெரிதாக ஒரு ஓட்டை போட்டார் நாட்டாமை. தம்பியை அழைத்தார். டம்ளர் தண்ணீரை பானைக்குள் ஊற்றச் சொன்னார்.
கிண்டலாகச் சிரித்தான் அவனும்.

"ஓட்டைப் பானைக்குள் எதை ஊற்றினாலும் தங்காதே'' என்றான்.

அப்புறம் என்ன?
கதையை நீங்களே முடிச்சு வையுங்கள் நண்பர்களே?!

குளிக்குறப்ப ஒளிஞ்சிருந்து பார்த்தியா? - காதல் பால்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
- அறத்துப்பால், அதிகாரம்: கள்ளாமை, குறள்: 282
பிறரது பொருளை அவர் அறியாதபடி வஞ்சித்துக் கொள்ள நினைப்பதுகூட பாவம்தான்.

லோ...”

“ஹாய்! ஹலோ! உனக்கு இருநூறு வயசு.. இப்பத்தான் உன்னை நினைச்சுக்கிட்டே இருக்கேன்!!”

“சும்மா கதை விடாதே.”

“இல்லடா, நிஜம்”

“தொலைஞ்சு போ! ஆமா அதென்ன இருநூறு வயசு?!”

“என் நூறையும் சேர்த்துக் கூட்டின கணக்கு அது. சரி மேடம் போன் பண்ணிய நோக்கம்?”

“விளையாடாதே. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம இப்படியே பார்க்ல உட்கார்ந்து புல்லைப் பிடுங்கிகிட்டே காதலிக்கிறது? போரடிக்கலை உனக்கு?”

“ஓ.கே. அப்ப இனிமே செடி நட்டு வச்சுக்கிட்டே காதல் பண்ணலாம்!”

“இப்பத்தானே சொன்னேன் விளையாடாதேன்னு. கேட்ச் மை பாயிண்ட்”

“பிடிச்சாச்சு டார்லிங். சொல்லு.. சொல்லு..”

“நாம கொஞ்சம் சீரியஸா உட்கார்ந்ந்து பேசியாகணும். இன்னிக்கே. இப்பவே!”

“உத்தரவு தாயி! எங்க வரட்டும்? இல்ல நீ வரியா?”

“சட்னு கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துசேர். இன்னும் அரை மணி நேரம்தான் உனக்கு நான் கொடுக்குற டைம்”

“ஹே! என்னாச்சு உனக்கு இன்னிக்கு.. தைரியமா உன் காதலனை, அதுவும் அழகான இளம் வாலிபனை வீட்டுக்கே கூப்புடறே? யாரும் இல்லியா அக்கட?!”

“ வீட்ல எனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுட்டாங்க! குரோம்பேட்டை வரை போயிருக்குது பெரிசுங்க எல்லாம். எவனோ ஒரு ஜோசியனப் பார்க்கணுமாம். கைல பத்து ஜாதகத்தோட இப்பத்தான் புறப்பட்டது படை. நல்லா சாப்டுட்டு, தூங்கி எழுந்து, ஜம்னு ரெடியா இருக்கணுமாம் நான். சாயந்திரம் அடையாறுல இருந்து ஒரு அசடு என்னைப் பெண் பார்க்க வருதாம். அதிரடியா இதைச் சொல்லி, ஆபிஸுக்கு லீவ் போட வச்சுட்டாரு எங்கப்பா”

“அச்சச்சோ.. மேட்டர் நிஜமாவே ரொம்ப சீரியஸ்தான்!”

“அதான் சொல்றேன்..”

“தோ.. அரை மணி நேரம்!”

மொபைல் போனைக் கட் பண்ணிவிட்டு பைக்கை உதைத்த அவனுக்கு வயது முப்பதுக்கு மூன்று கம்மி. அந்தப்பக்கம் இருந்த அவளுக்கு அதைவிட மூன்று கம்மி.

இருவரும் மூன்று வருடமாக காதலர்கள்.

அடிக்கடி பார்த்துக் கொள்வதில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் சரியானபடி புரிந்து கொண்டிருந்ததால் காதல் ஆழமாகவே வளர்ந்திருந்தது. அதாவது ஆழமாக வளர்ந்திருப்பதாகவே இருவரும் நம்பினர்!

சரி, வாங்க. நாமும் வீட்டுக்குப் போவோம்!

காலிங் பெல்’ அடித்த அவனுக்கு கதவு திறந்தாள் அவள்.

விளையாட்டுப் பேச்சு இப்போதும் அவனிடத்தில்... “சொல்டா என்ன பண்ணலாம்.. ஓடிப்போயிடலாமா?” என்றான் கண் சிமிட்டியபடியே!

“அடி பின்னிடுவேன் ராஸ்கல்.” என்று அதட்டுப் போட்டாள் அவள். “இப்டி பத்து நிமிஷம் உட்காரு. டி.வி. பார்த்துட்டு இரு. குளிச்சுட்டு வரேன்” என்றவாறே ஓடினாள்.

சோபாவில் சாய்ந்தான் அவன். ரிமோட்டை எடுத்தான்.

‘ப்ளக்!’

உயிர்த்தெழுந்த டி.வி. பெட்டியில் காலைக்காட்சியாக ஏதோ ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது.

அசுவாரசியத்துடன் பார்த்தவன் சேனலை மாற்ற முயற்சிக்கும் நொடியில் திரரயில் காட்சி மாறியது. தள தள ஹீரோயின் ஒருத்தி ஹிட்டான சினிமா பாடல் ஒன்றை முணுமுணுத்தபடியே குளிக்க முயன்று கொண்டிருந்தாள்! குளீயலறைக் காட்சி!!

அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு பக்கவாட்டில்தான் அந்த வீட்டின் குளியலறையும் இருந்தது. உள்ளேயிருந்து கேட்ட ஷவர் சத்தமும் டி.வி. திரையில் ஓடிக்கொண்டிருந்த குளியல் காட்சியும் சாத்தனை அவன் பக்கம் இழுத்து வந்தது நொடிப் பொழுதில். அவன் மனக்கண்ணுக்கு அவள் குளிப்பதை கற்பனை பண்ணிக் காட்டினான் சாத்தான்!

'வீட்டில் வேறு யாரும் இல்லை. போடா.. போய் அவ குளிக்குறத சாவித்துவாரம் வழியா பார்த்து ரசிச்சுக்கோ. அவ என்னிக்குன்னாலும் உன் ஆளுதான்!’ என ஜால்ரா போட்டான் சாத்தான்.

திருட்டுத்தனத்துடன் எழுந்தான் அவன்.

அவன், அவள், காதல், இடம், பொருள், சூழல் எல்லாம் மங்கலானது அவனுக்குள்! கருமம் பிடிச்ச காமம்!

டி.வி. வால்யூமை கூட்டினான். மெதுவாக நடந்தான். ஷவரில் இருந்து நீர் கொட்டும் சத்தம் நின்றுவிட்டிருந்தது இப்போது.

குளியலறைக்கதவின் சாவித்துவாரம் தேடினான். குனிந்து, கால்களை மடக்கி, ‘ஆஹா என்ன ஒரு சுகந்தமான வாசம்!’ என சிலிர்த்தபடியே சாவித்துவாரத்துக்கு கண்களைக் காட்டியபோது... கதவு திறந்தது!

வெலவெலத்துப் போனான் அவன். அவள் முகத்திலும் கரும்கும்!

“ச்சே! போயும் போயும் உன்னப்போய் காதலிச்சேனே! என் புத்திய செருப்பால அடிக்கணும்!”

“சரி விடு. இப்ப என்ன நடந்து போச்சுன்னு இந்தக் குதி குதிக்குறே? சத்தியமா நான் எதையும் பார்க்கல. போதுமா?”

“உனக்கொண்ணு தெரியுமா.. அடிக்கிறவனை விட அடிக்க முயற்சி செய்றவனுக்குத்தான் பெரிய தண்டனை. அந்த அடி படாத இடத்துல பட்டுச்சுன்னா அது கொலையாக்கூட முடிஞ்சுடலாம்.”

“ஒரு சின்ன மேட்டர். அதப்போயி கொலை கிலைனு கம்பேர் பண்ணி ஏன் கன்ஃப்யூஸ் பண்றே? நீ எனக்குப் பொண்டாட்டியா ஆகப்போறவதானேங்குற உரிமைல அப்படி செஞ்சுட்டேன். ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா?”

“இல்லை!”

“என்ன சொல்றே நீ?!”

“லுக் மிஸ்டர். நீ என்னதான் சாக்கு சொன்னாலும் இது கடைஞ்செடுத்த பொறுக்கித்தனம். நான் இப்ப உனக்குச் சொந்தமானவ இல்லை. இன்னும் எங்க அப்பாவோட பொண்ணுதான். என்னிக்கு நீ என் கழுத்துல தாலி கட்றியோ அன்னிக்குதான் நான் உனக்குச் சொந்தம். அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை திருட்டுத்தனமா பார்க்கணும்னு நீ நினைச்சதே என்னைப் பொறுத்தவரை கொலைக்குச் சமம்.”

“... ... ”

“இந்த மூணு வருஷத்துல என்னால உன் சுயரூபத்தைக் கண்டுபிடிக்க முடியாமப் போயிடுச்சேனு வெட்கப்படுறேன். நல்லவேளை இப்பவாச்சும் முடிஞ்சதேனு சந்தோஷப்படுறேன்.”

“... .. ..”
“நமக்குள்ள நடந்ததா நாம நினைச்சுக்கிட்டிருந்த காதலை இத்தோட மறந்துடு. குட் பை!”

கையெடுத்துக் கும்பிட்டாள் அவள். எதிர்த்தோ குறுக்கே புகுந்தோ எதுவும் பேசத் திராணியில்லாத குற்ற உணர்ச்சியுடன் பிணம் போல வெளியேறினான் அவன்.

இன்னும் எத்தனை நாளாகுமோ அவள் கோபம் தணிய...

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல், அடேய் காதலா!

Thursday, August 10, 2006

வலைப்பயணிகளின் கனிவான கவனத்துக்கு...

மூன்று விஷயங்கள்.

முதல்..
இந்த வார(13.08.2006) குங்குமம் வார இதழில் படைப்புப் பங்களித்திருக்கும் வலை நண்பர்கள் கவனத்துக்கு. முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! வாய்ப்புக்கு வழிவகுத்த யெஸ்.பாலபாரதிக்கும், அன்புடன் குழுமத்துக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்!

அடுத்ததாக..
உங்கள் படைப்புக்கு சன்மானமாக பொன்னையே அள்ளிக் கொடுக்கலாம் என்றாலும் எங்கள் (குங்குமம்) குல வழக்கப்படி கொஞ்சம் பூவையாவது கொடுக்க வேண்டாமா?! எந்தப் பெயருக்கு காசோலை எடுக்கப்பட வேண்டும்?
எந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்?

நண்பர்கள் (நிலவுநண்பன், ஜொள்ளுப் பாண்டி, விழியன், பொன்ஸ், ஜெஸிலா, நிலா, அனிதா பவன்குமார், ராசுகுட்டி) தங்கள் பெயரையும் முகவரியையும் kungumambest@gmail.com என்ற மெய்ல் முகவரிக்கு அனுப்பி வைத்து உதவவும்.
'மனசோசை'யில் தோழி சந்திரவதனா //ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. ஒரு படைப்பாளி தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். // இப்படிக்
குறிப்பிட்டிருக்கிறார். நியாயமான ஆதங்கமே! ஆக்வே நண்பர்கள் தங்கள் முகவரியை அனுப்பினால் என் செலவிலேயே படைப்பு பிரசுரமான இதழை அனுப்பி வைக்க ஆசைப்படுகிறேன்.

மூன்றாவதாக
ஒரு முன் அறிவிப்பு! அடுத்த வாரம் கடைக்கு வரும் (20.08.2006 தேதியிட்ட) இதழில் வலைப்பூவாளி பகுதிக்காக தேர்வாகி இருக்கும் படைப்புகளுக்குச் சொந்தக்கார வலை நண்பர்கள்.. மயூரேசன், தமிழ்சிறுவன், கஸ்தூரிப்பெண், காழியன்,ஜொள்ளுப்பாண்டி மற்றும் கவிதா கெஜானன். வாழ்த்துக்கள்.

இதழ் தயாரிப்பில் இருக்கிறது.

நன்றி!

Wednesday, August 09, 2006

பெரியாரை சினிமாவுக்குப் பிடித்துவிட்டது!

'பெரியாருக்கு சினிமா பிடிக்காது,ஆனால் 'பெரியாரை' சினிமாவுக்குப்பிடித்துவிட்டது தெரிகிறது!' என்கிறார் தமிழ்மகன்.
காரைக்குடியில் நடக்கும் 'பெரியார்' படப்பிடிப்பை அழகாகப் பதிவு செய்துள்ளார் தனது கட்டுரையில்.

கட்டுரையைப் படித்துவிட்டு கைப்பேசியில் தமிழ்மகனை அழைத்த சத்யராஜ், "விகடனில் இதுவும் ஒரு சினிமா என்ற வகையில்தான் செய்தியாக்கி உள்ளனர். உங்கள் கட்டுரை (குங்குமம்) ஒரு வரலாறு படமாக்கப்படுவதைப் பதிவு செய்திருக்கிறது!" என மனமாரப் பாராட்டியுள்ளார்.

நீங்கள் கட்டுரையைத் தவறவிடக்கூடாது என்பதற்காக இங்கே இணைப்பு கொடுத்துள்ளேன். சொடுக்கிப் பாருங்கள்.

SCOOP! சிவாஜி படம் பார்க்குறீங்களா?

உஸ்ஸ்ஸ்... சத்தம் கித்தம் போடாதீங்க! சிவாஜி படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரும் குரூப் டான்ஸர்களும் ஆடும் ஆட்டம் (வீடியோ!) பார்க்கத் தயாரா நண்பர்களே!

வெளிவரப் போகிறது கமலின் வேட்டையாடு விளையாடு

ஒரு வழியாக ரிலீஸாகப் போகிறதாம் கமலின் வேட்டையாடு விளையாடு!
அது குறித்து படத்தின் தயாரிப்பாளர் செவென்த் சேனல் நாராயணன் என்னிடம் சொன்னது இந்தப் (கககபோ) பதிவின் பின்னூட்டத்தில்!

Tuesday, August 08, 2006

யாராச்சும் இருக்கிங்களா?

“கண்கள் எதுக்காக இருக்கு தெரியுமா சார்?”

கேட்கிறார் அவர். அவரே பதிலையும் சொல்கிறார்... “பார்க்குறதுக்காகவும் அழறதுக்காகவும்தான். ஆனா என் கண்களுக்கு அந்த ரெண்டு உபயோகமும் இல்ல. விரலின் விளிம்புகளே எனக்குக் கண்கள், தடவிப்பார்த்துதானே எதையும் உணருகிறேன் நான். அப்புறம்.. இப்படி ஒரு கஷ்டத்தை எனக்குக் கொடுத்துட்டியே ஆண்டவான்னு நான் எப்பவும் அழுதது கிடையாது. அழுது என்னாகப் போகுது சார்!”

பள்ளிக்காலத்தில் பார்வை இழந்த அவர் பெயர் ஜெயபால். ஒரு கவிஞர். மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நண்பர்களின் உதவியால் பி.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். தொடர்ந்து படிக்க ஆசை. ஆனால் வறுமை வழிதர மறுக்கிறதே!

“பிச்சை எடுத்தாவது கற்கை நன்றுன்னு திருவள்ளுவர் சொல்லியிருக்கார். எத்தனையோ நண்பர்கள் உதவி செஞ்சதாலதான் இந்த அளவுக்கு நான் வந்திருக்கேன். வயிற்றுப் பாட்டையும் பார்த்தாகணுமே. சோப்புக்கும் சீப்புக்கும் தினசரி சாப்பாட்டுக்கும் அடுத்தவங்களிடம் எதிர்பார்க்கலாமா” எனக் கேட்கும் ஜெயபால் ஒரு சினிமா பாடலாசிரியரும் கூட!

30-07-2006 தேதியிட்ட குங்குமம் வார இதழில் அவர் பற்றிய கட்டுரை வெளியாகி உள்ளது. பார்க்கவும். எந்த வகையிலாவது அவருக்கு உதவ முடிந்தால் கரம் நீட்டவும். குறைந்தபட்சம் ஒரு ஆறுதல் போனாவது போடலாமே!

பக்கம் எண்: 74
பக்கம் எண்: 75
பக்கம் எண்: 76

ஜெயபால் மொபைல் எண்: +91 98948 29212

Monday, August 07, 2006

மனசாட்சியோடு ஒரு மல்லுக்கட்டு!

மூன்று பதிவுகளுக்கு முன்பே போஸ்ட் செய்திருக்கவேண்டிய பதிவு இது. அதனாலென்ன, ரிவர்ஸ் கியர் எடுத்து கொஞ்சம் பின்னாடி போயி அப்புறம் முன்னாடி வாங்க தோழர்களே, தோழியரே...

‘டேய் நான் தெரியாமத்தான் கேக்குறேன். உன் மனசுல உன்னப்பத்தி என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?’

“யார் பேசுறது?”

‘நீதாண்டா பேசுறே கய்தே!’

“வாணாம். விதண்டாவாதம் பேசாத. இதெல்லாம் நாங்க பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷன்ல எப்பவோ தமிழ் சினிமாவுல பார்த்தாச்சு. நீ தைரியமான ஆம்பளைன்னா டகல் காட்டாம நேர்ல வந்து நின்னு பேசு பார்க்கலாம்”

‘சரி வரேன், வாயத்தொற!’

“நீ வர்றதுக்கும் நான் வாயத்தொறக்குறதுக்கும் என்ன சம்பந்தம்?!”

‘அடங்கொக்கமக்கா... நாந்தான்டா உன் மனசாட்சி. உள்ள இருந்து வெளிய வர வேணாமா..’

“ஓஹோ.. வாய் வழியாதான் வருவிங்களோ?!”

‘அப்டினு இல்ல, உடம்புல இருக்க ஒன்பது ஓட்டைகள்ல எதுனாச்சும் ஒண்ணு வழியா வரமுடியும். என் சாய்ஸ் வாய். உனக்கெப்படி வசதி?’

“அடக்கஷ்டமே! வாய் வழியாவே வந்துடு. மத்ததெல்லாம் நினைச்சுப் பார்க்கவே கொடூரமா இருக்கு மை டியர் மனசாட்சி”

‘சரி ஜீ பூ ம் பா’

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ப்ளக்! (மனசாட்சி வெளியேவருவதற்கான சவுண்ட் எஃபெக்ட்டுங்க!)

‘தோ.. வந்துட்டேன்! நல்லா பார்த்துக்க, எப்டி இருக்கேன்.. உன்னைவிட அழகா இருக்கேனா?’

“கிழிஞ்சது போ! அழகப்பத்தியெல்லாம் நாம பேசக்கூடாது. மேட்டருக்கு சட்னு வா. இப்ப எதுக்காக இந்த குபீர் விஜயம்?”

‘வலையைவிட்டுப் போறதா ஃபிலிம் காட்டி இருக்கியே, அதுபத்தி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்’
“ம்ம்”

‘யார்ரா நீ?’

“ஹேய்.. கிவ் ரெஸ்பெக்ட். அண்ட் டேக் ரெஸ்பெக்ட். நான் கௌதம், ஜி.கௌதம்”

‘ம்க்கும். ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல்ல பேரச் சொல்லிக்கிட்டா பெரிய ஆள்னு நினைப்பாக்கும்! கௌதம்ங்குறது உன் பேரு. நீ யார்டா?’

“இந்தப் பழைய கதையெல்லாம் இங்க விடாத மகனே. அது ராமகிருஷ்ணரோட பாப்புலர் கதை. சொந்தக்கதையா எடுத்து விடு!”

‘ஓ.கே. கூல். ஸேம் ஸைடுல கோல் போட்டுக்க வேண்டாம். மேட்டருக்கு வரேன். ஜூன் மாசம் 29ம் தேதி வலைப்பூ ஆரம்பிச்சவன் நீ. ஒரே மாசத்துல ஐயாயிரம் ஹிட்ஸ் கொடுத்திருக்காங்க வலைத்தமிழ் மக்கள் உன்னயும் ஒரு பொருட்டா மதிச்சு. ஆனா பாரு.. பழம் தின்னு கொட்டை போட்ட, கொட்டை தின்னு பழம் போட்டவங்க எல்லாம் அமைதியா இருக்கப்ப நீ என்னடான்னா வீடு கட்டிக்காட்டுறே? உன்னையெல்லாம் பொருட்டா மதிச்சவங்களை நீ மதிக்கக் கத்துக்க முதல்ல’

“ஆக்சுவலி நான் ஏன் கோபப்பட்டேன்னா..”

‘அடச்சீ நிப்பாட்டு. அதான் ‘யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. பெரிது படுத்த வேண்டாம்’னு ஜயராமன் சொல்லிட்டார்ல. அப்புறம் எதுக்கு விளக்கம்ங்குறேன்?’

“அப்படிங்குறே?!”

‘ஆமாம்ங்குறேன். கோவாலு, லிவிங் ஸ்மைல் வித்யா, கார்த்திக் பிரபு, நன்மனம், கோவி.கண்ணன், வவ்வால், சிறில் alex, உங்கள் நண்பன், நிலா, மாயவரத்தான், தருமி, பொன்ஸ், ஹரிஹரன், மகேந்திரன்.பெ, மகேஸ், துளசி கோபால், ராம், கஸ்தூரிப்பெண், அப்புறம் அந்த அனானி எல்லார் சொன்னதையும் கவனமா கேட்டியா?’

“ஓ.. பரவாயில்ல. நமக்கும் நல்லது கெட்டது சொல்ல ஒரு பத்தொன்பது பேர் இந்த வலை உலகத்துல இருக்காங்கன்னு தோணுச்சு. மகிழ்ச்சியா இருந்தது.”

‘மடையா. நல்லா பாரு இருபது பேர். ஜயராமனையும் கணக்குல சேர்த்துக்கோ’

“வேண்டாம்னு நினைக்குறேன்”

‘நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோ. அது உன் இஷ்டம். ஆனா நினைக்குறதுக்கு முன்னாடி நான் சொல்றதயும் கொஞ்சம் கேட்டுக்க’

“ம்ம் சொல்லு”

‘குழந்தை, ஞானி, பைத்தியம்னு மனுஷனுக்கு மூணு மனநிலை. இடம், பொருள், சூழலுக்கு ஏற்ப ஏதாச்சும் ஒரு மனநிலையை மனிதன் அடைவான். அந்த நேரத்தில் அவனோட பேச்சும் செயலும் அந்தந்த மனநிலையைத்தான் பிரதிபலிக்கும். வலையுலகத்துல என்ன சிக்கல்னா.. இந்த மனநிலை சமாச்சாரம்தான்.’

“புரியல?”

‘கவனமா கேளு.. ஒரு ஆள் எந்த மன நிலைல இருக்காரோ அந்த மனநிலைலயே ஊட்டமோ பின்னூட்டமோ போட்டுடலாம் இங்கே. அடுத்த நிமிடமே அதும் பப்ளிஷ் ஆகிடும்! அதே ஆள் கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து யோசிச்சார்னா, அப்ப வேற மனநிலைகூட ஏற்படலாம்.’

“இப்ப புரியுது நீ எங்கே வரேன்னு.”

‘குட். எனக்கு முன்னாடியே தெரியும் உனக்குப் புரிஞ்சுடும்னு. இதுக்காக 'வலை வேண்டாம் போ'னு சொல்றது எவ்வளவு பெரிய குழந்தைத்தனம்னு இப்ப தெரியுதா. இன்னொரு சேதி அந்த ஜயராமனேகூட ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்தான் உனக்குத் தெரியுமா ’

"ஓஹோ"

'தப்ப தப்புன்னு சொல்லு, தப்பே இல்லை. உன்னால முடிஞ்ச வரை வலை உலகத்துல நிறையப்பேரை உற்சாகப்படுத்து. ஏதோ தப்பு செஞ்சவன் மாதிரி நீ வெளியேறினா அது பெரிய தப்பு'

“ ஒரு வாரம் ஒரே ஒரு வாரம்தான் போஸ்ட் எதுவும் போடலை. ஆனா செம டென்ஷனாயிடுச்சுப்பா.”

‘அதத்தான் அந்த அனானி கொஞ்சம் முன்னெச்சரிக்கையோட சொல்லியிருக்கார். உள்குத்து, வெளிக்குத்து இதிலெல்லாம் போய் மாட்டிக்குவேனு’

“அவருக்கு நான் வலைல எழுதுறதுல விருப்பம் இல்லை. அந்த நேரத்துல வேற ஏதாச்சும் தமிழ் இலக்கிய உலகத்துக்கு செய்னு சொல்றாரு”

‘விட்டா சந்துல சிந்து பாடிக்குவியே! அவர் ‘இலக்கிய’னு சொல்லலை. அதை நீயா சேர்த்துக்கிட்டே..’

“சரீ சரீ... ஸ்லிப் ஆஃப் த டங். போதுமா”

‘பத்தாது, மேலே சொல்லு’

“அந்த அனானி சொன்னமாதிரி இங்கே வெறும் ஆயிரம் பேர் மட்டும் இருக்கலாம். என் எழுத்தைப் படிக்கலாம். ஆனா இவங்க ஒவ்வொருத்தரும் ஆயிரம் பேருக்குச் சமம்னு நான் நினைக்கிறேன். ரொம்ப முக்கியமா ஒரு ரகசியம்.. என் வாழ்க்கையில ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்காங்க இந்த வலைப்பூ நண்பர்கள். அது என்னன்னு நேரம் வர்றப்ப சொல்றேன். அதுக்காகவாச்சும் நான் இந்தப் புதிய நண்பர்கள் எல்லோருக்கும் விசுவாசமான நண்பனா இருந்தே ஆகணும்”

‘யேய் யேய்.. போதும் நிறுத்து. பத்து ரூபா வாங்கிக்கிட்டு அம்பது ரூபாய்க்கு ஆக்ட் குடுக்காதே! அதெல்லாம் ‘அவர்’ ஒருத்தராலதான் முடியுங்கறேன்!’

“அவர்தான் இப்ப இல்லியே, அந்த எடத்த நான் புடிக்கக் கூடாதா?”

‘ஓ.. மனசுக்குள்ள அப்டி ஒரு நெனப்பா! ‘இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டிங்களே’னு ஒரு ரசிகர் சொன்னதா நம்ம சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டார். அத்தோட நிறுத்திக்கோ’

“ஓகே. ஓகே. காம்ப்ரமைஸா போயிடலாம். முடிவா என்னதான் சொல்ற நீ?”

‘இன்னும் உன்கிட்ட பேச என்ன இருக்கு?! ஸ்டார்ட் த மியூசிக்.. த்டுங்கு டுங்கு.. த்டுங்கு டுங்கு.. த்டுங்கு டுங்கு..’

“ஸ்டாப் த மியூசிக்!”

‘என்னாத்துக்கு?!’

“ஏதொ ஒரு படத்துல ‘பூ மிதிக்க வாங்க’னு கூப்பிட்டு நம்ம கவுண்டமணியை நெருப்புக்குள்ள எறக்கி விடுறப்ப பேக்கிரவுண்டுல இதே மியூசிக்தான் போடுவாங்க!”

‘அப்ப உனக்குப் பிடிச்ச மியூசிக்க நீயே ப்ளே பண்ணிக்க’

“அதுவும் சர்தான். இதெப்படி இருக்கு பாரு.. டகடக் டக்டக்.. டகடக் டக்டக்.. டகடக் டக்டக்..”

‘ம்.. நடத்து’

“டகடக் டக்டக்.. டகடக் டக்டக்.. டகடக் டக்டக்..
ஹே... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..”

கககபோ!


பெரியார் வேடம் கட்டியிருக்கும் சத்தியராஜை ‘கககபோ’ (கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டாய் போ! நன்றி: இம்சை அரசன் 23ம் புலிகேசி) செய்துவிட்ட என் இனிய வலை மக்களே... முகத்தில் (என்னால்) பேண்டேஜ் போடப்பட்ட இந்த பிரபலம் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

அதாவது யார் வேடத்துல யாரு? அவங்களுக்கு என்ன பேரு?

ஒரு க்ளு: நாடு, மதம் கடந்து யோசியுங்கள் மக்கா!

Saturday, August 05, 2006

இதனால எல்லாத்துக்க்கும் தெரிவிச்சுக்குறது என்னன்னா...

'ம்க்கும்! நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தியாக்கும்!' என யாரும் அடிக்க வரவேண்டாம் மக்களே! 'இப்ப இல்லாட்டி எப்போ' என மீடியாக்களால் வதந்தியாகப் பரப்பப்பட்ட சூரயா - ஜோதிகா கல்யாணம் வருகிற செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதி நடக்கப் போகிறது நிஜமாகவே. சூர்யாவின் அப்பா சிவகுமாரின் அதிகாரபூரவமான அறிவிப்பு இது...

Thursday, August 03, 2006

இவர் யார் தெரிகிறதா?

ஒரு பெரிய முன்னுரை(?!)யுடன்தான் உங்கள் முன்னால் வந்து நிற்கவேண்டும் என இருந்தேன். அட்டகாசமாக இந்தப்படம் சிக்கியதால் முன்னுரையை 'அப்பால' தந்துவிடலாம் என்ற முடிவோடு தோ... வந்துட்டேன்!

இவர் யார்னு தெரியுதா? சட்னு சொல்லுங்க!