Thursday, September 28, 2006

தடாலடி போட்டி அல்ல! ஓர் அசத்தல்!!

முப்பெரும் தேவியரும் எங்கே போனாங்க? தெரிஞ்சுக்கணுமா இங்கே போங்க உடனே!


பின் குறிப்பு: அய்யா சாமி! எனக்கு எப்போதோ வந்து விழுந்த ஃபார்வர்டர்ட் மெயலில் இருந்த விஷயம்தான் இது. அட போட வச்சது. காப்பி பண்ணி வச்சுக்கிட்டேன். மத்தபடி இதையெல்லாம் காப்பிரைட் திருட்டு லிஸ்ட்ல சேர்த்துடாதீங்கோ!

தடாலடி போட்டி அல்ல! ஒரு மந்திரம்!!


எனது அனுபவத்தில் ('டேய்' என்னடா பெரிய அனுபவம்னு சவுண்ட் விட்றாதிங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!) நான் பட்டறிந்துகொண்ட ஒரு மந்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே! நீங்கள் கற்றுக் கொண்ட மந்திரத்தையும் மற்றவர்களுக்கு அங்கேயே பின்னூட்டமாகச் சொல்லலாமே!

தடாலடி போட்டி அல்ல! ஒரு சிந்தனை!


'நன்மை - தீமை, நல்லது - கெட்டது, சரி - தவறு, வெற்றி - தோல்வி.. இப்படி மனித வாழ்வின் எல்லா சவால்களும் சங்கடங்களும் இரண்டிரண்டாகவே இருக்கின்றன.'என்கிறார்கள்!

'இல்லை, மூன்றாக' என்கிறேன் நான்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!

இங்கே செல்லுங்கள். உங்கள் கருத்தை அங்கேயே சொல்லுங்கள்!

தடாலடி போட்டி அல்ல! ஒரு காவியம்!!


வரப்போகும் தீபாவளி சமயத்தில் திரைக்கு வரப்போகும் ஒரு புத்தம் புதிய பழைய தமிழ்ப்படத்தின் விமரிசனம் படிக்கத்தயாரா?

இங்கே போங்க! படிங்க! அங்கேயே உங்க கருத்தைப் பதிஞ்சுட்டு வாங்க!

தடாலடி போட்டி அல்ல! ஓர் அதிர்ச்சி!!


பத்திரிகையாளன் என்பவன் பெரும்பாலும் அதிர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவனாகவே இருக்க வேண்டும். இருப்பினும் அவனும் மனிதன்தானே ! எத்தனையோ அதிர்ச்சிகரமான நிஜங்களை துப்பறிந்து கட்டுரைகளாக எழுதி இருந்தாலும் என்னை அதிர்ச்சிப்படுத்திய கட்டுரைகளில் இது முக்கியமான ஒன்று.

எது என்பதை இங்கே சொடுக்கிப் படித்துப் பாருங்கள்! அங்கேயே உங்கள் கருத்தைப் பதிவு செய்துவிட்டு வாருங்களேன்!

தடாலடி போட்டி அல்ல! ஓர் அனுபவம்!!


ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு விண்ணப்பம் அனுப்பி, முதல் கட்டத்தில் தேர்வாகி, இரண்டாம் கட்டமாக மதுரையில் நடந்த எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டு, அதையும் கடந்து, மூன்றாம் கட்டமாக விகடன் அலுவலகத்தில் நடைபெற இருந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தேன்.

அப்புறம்?

கொஞ்சம் என் சுய புராணம் படிக்க ரெடின்னா இங்கே சொடுக்கிப் பாருங்க!
உங்க கருத்தையும் அங்கேயே பின்னூட்டமா பதிஞ்சுட்டு வாங்க!!

தடாலடி போட்டி அல்ல! ஒரு கதை!


'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்கிறது கீதை.

'கடமையைச் செய்தால் பலன் கிடைத்தே தீரும்' என்பதே இதை நான் படிக்கக் கிடைத்த பாதை!

சரி, யாருக்கு என்ன கடமை?

ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா?
கேட்டால் மட்டும் போதாது. உங்கள் கருத்தையும் அங்கேயே பின்னூட்டமாகப் பதிவு செய்துவிட்டு வாருங்கள் தோழர்களே!

பின் குறிப்பு: இது தடாலடி போட்டி அல்ல! ஹி..ஹி!

Tuesday, September 26, 2006

ம்க்கும்! இதுவும் வேணும்... / காதல் பால்



களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

-அறத்துப்பால், அதிகாரம்: 29. கள்ளாமை, குறள்: 283

பிறரை வஞ்சித்தலால் உண்டாகும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும், இறுதியில் அளவு கடந்த அழிவையே தரும்.

ல்லூரியின் எல்லா வகுப்புகளிலும் பாடம் நடத்தப்படும் சத்தமும் கூடவே கொட்டாவிக் குரல்களும். அவளும் தோழியும் மட்டும் யாருமில்லா மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர்!

“சொல்டி.. அப்டியென்னடி அவசர தகவல்? எதுக்காக இப்டி டென்ஷனோட இருக்கே?” என்றாள் தோழி.

விரல் நக விளிம்பைக் கடித்தபடியே பேசினாள் அவள்.. “இல்ல, நான் சொல்றத வேற யார்கிட்டயும் சொல்லிடக்கூடாது”

“அடச்சீ! சொல்டி கழுதை. எம்மேல அவ்வளவுதானா நம்பிக்கை! நீ கொலையே செஞ்சிருந்தாக்கூட வெளிய சொல்லமாட்டேன், போதுமா?”

“தேங்க்ஸ்டி” என்றவள் தொடர்ந்து தயக்கத்துடன் பேசலானாள்.. “போட்டிக்கு நீ அனுப்பிய கவிதையை எனக்காக விட்டுக் கொடுக்கணும்”

“புரியலயேடி, தமிழ் மன்றம் நடத்துற போட்டிக்காக நான் புனை பெயர்ல எழுதி அனுப்பிய கவிதையையா?”

“கரெக்ட். அது நீ எழுதுனதுதான்னு உனக்கும் எனக்கும் மட்டும்தானே தெரியும்?”

“ஆமா. ‘புனை பெயர்ல எழுதி அனுப்பு. பரிசு கிடைச்சா டிக்ளேர் பண்ணிக்கலாம்’னு நீ கொடுத்த ஐடியாதானேடி அது”

“அதேதான். அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு!”

“வாவ்!” - உற்சாகத்தில் துள்ளி, அடுத்த விநாடியே சுதி குறைந்தாள் தோழி.. “இப்ப என்ன பண்ணனும் நான்?”

உர் முகத்தோடு சொன்னாள் அவள்.. “அந்தக் கவிதைய எழுதினது நீதான்ங்கிறதை மறந்துடனும். நான் பரிசை வாங்கிக்கறேன்”

“அவ்வளவுதானே.. சரி, மறந்துட்டேன்” என காஷூவலாகச் சொன்னாள் தோழி. சின்ன யோசனையோடு தொடர்ந்தாள்.. “வேணும்னா அவன்கிட்ட மட்டும் நான்தான் எழுதினேன்னு சொல்லிக்கவா? ஏன்னா அந்தக் காதல் கவிதையை அவனை மனசுல வச்சுக்கிட்டுதான்டி எழுதினேன்.”

முகம் கருத்தாள் அவள். பிரச்னையே அவன்தானே! அவன்?

ஆரம்பகாலத்து அரவிந்தசாமி போல அழகான வாலிபன். கல்லூரியில் எல்லாப் பெண்களையுமே ஏங்கவைக்கும் இளைஞன். அவனோடு ஒரு வார்த்தையாவது பேச மாட்டோமா என லேடி புரஃபசர்களே தவம் கிடப்பதுண்டு! அப்படியே பேசினாலும் ‘ஆம், இல்லை, தெரியாது’ என்றுதான் அவன் பெரும்பாலும் பேசுவான். அப்படி ஒரு சங்கோஜி! கல்லூரி தமிழ் மன்றத்தின் செயலாளரும் அவனே.

அவனை ஒருதலையாக காதலிக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றிச் சொச்சம் பெண்களில் அவளும் அந்தத் தோழியும்கூட அடக்கம்.

அவனை அசத்தும் நோக்கத்துடனேயே கவிதை எழுதி போட்டிக்கான பெட்டியில் போட்டிருந்தாள் தோழி. அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கொடுத்த செய்தியை அறிவிப்பாக நோட்டிஸ் போர்டில் வெளியிட்டிருந்தார்கள். செயலாளர் என்ற முறையில் கவிதையை அழகாக விமர்சித்து, ‘புனை பெயரில் எழுதியிருப்பவரை நான் நேரில் தமிழ் மன்றம் ஆவலாக இருக்கிறது, நானும் கூட!’ என்று குறிப்பிட்டிருந்தான் அவன்.

அவனது அபிமானத்தைப் பெற துடிப்போடு இருந்த அவள் இந்த வாய்ப்பை கனகச்சிதமாகப் பிடித்துக் கொண்டாள். “ம்ஹூம். யார்கிட்டயும் சொல்லக்கூடாது. என் புனைப்பெயரில் நான் எழுதி அனுப்பிய கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைச்சிருக்கு. அதை வேணும்னா நீ எழுதினதாச் சொல்லிக்க” என்றாள்.

‘எவ்வளவு பெரிய அநியாயம் இது. சர்வ சாதாரணமாகச் சொல்கிறாளே. இதற்கு முன் இவள் இப்படியெல்லாம் சின்னத்தனமாக நடந்து கொண்டதில்லையே!’ என்றெல்லாம் உள்ளுக்குள் யோசித்த தோழி, வெளியே காட்டிக் கொள்ளாமல் தலையசைத்தாள். பாவம், காதல் வெறி எவ்வளவு சின்னத்தனத்தையும் செய்யவைக்கும் என்பதை தோழி அறிந்திருக்கவில்லை.

முதல் சந்திப்பு அசத்தலாக அரங்கேறியது!

அறையில் அவனும் அவளும் மட்டுமே. வெட்கப் பெருமிதத்தோடு “அது நான் எழுதிய கவிதைதான்” என வெட்கமே இல்லாமல் சொன்னாள் அவள்.

“அட்டகாசமான கரு. அதைவிட அட்டகாசமான நடை. வாழ்த்துக்கள்” என்றவன், அனிச்சையாகக் கை குலுக்கினான். சிலிர்ப்பு அவளுக்குள் பரவிக் கிளைத்தது! சுதாரித்துக் கொண்டு தூண்டில் வீசினாள்.. “வெறும் வாழ்த்துக்கள் மட்டும்தானா?”

சட்டென வெட்கம் முளைத்தது அவனுக்கும். ஆண் வெட்கப்பட்டால்கூட அழகுதான் போலிருக்கிறது!

“ஈவினிங் நாலு மணிக்கு ஃப்ரீயா இருந்தா வாங்க கேண்டீன் போகலாம்” என்றான்.

மாலை மணி நான்கு. கேண்டீனில் எதிரெதிரே இருவரும்.
ஒரு பெண்ணுடன் அவன் இருப்பதை கேண்டீனே ஆச்சர்யத்தோடு பார்த்தது!

ஆச்சர்யங்களை ஓரக்கண்ணால் ரசித்தபடியே அவனையும் ரசித்தாள் அவள்.

“என் கவிதையை வார்த்தைக்கு வார்த்தையா ரசிச்சு விமர்சனம் பண்றிங்களே, கவிதைன்னா உங்களுக்கு அவ்வளவு பிரியமா?” என்றாள்.

“அந்தக் கவிதையை எனக்காக எழுதின கடிதம் மாதிரி உணர்ந்துக்கிட்டேன்.” என்றான் அவன்.

பழம் நழுவி பாலில் விழ ஆரம்பித்திருப்பதை புரிந்து கொண்டாள் அவள். இவ்வளவு சீக்கிரம் அது விழும் என அவளே எதிர்பார்த்திருக்கவில்லை!

“நீங்க யாரையாச்சும் காதலிக்கிறீங்களா?” என்று நேரடியாகவே கேட்டான் அவன்.

அவளும் நேரடியாகவே சொன்னாள்.. “இல்லை. உங்களை மாதிரி ஒரு ஹேண்ட்ஸம்முக்காக காத்திருக்கிறேன்”

அவனும் நோக்க, அவளும் நோக்க, சுற்றி இருந்த கேண்டீன்வாலாக்களும் நோக்க காதல் பட்டாசு வெடிச்சாச்சு!

டுத்த சந்திப்பு கடற்கரையில்.

கல்லூரியில் இத்தனை நாளாக ஊமைக்கோட்டானாக வலம் வந்த அவனை லொடலொட பேச்சாளனாகப் பார்க்க அவளுக்கே புதிதாக இருந்தது!

“ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?” என்றாள்.

“ம்.. கேளு” என்றான்.

“இதுவரை யாரையுமே நீங்க லவ் பண்ணினதில்லையா?”

சிரித்தான் அவன்.. “இல்ல்ல்லை! நீதான் முதல் ஆள்”

று மாதங்கள்.. இருபது நாட்கள்.. இருபத்தியோரு மணிகள்.. இரண்டு நிமிடங்கள்.. ஏழரை விநாடிகள் கடந்து அந்த எட்டாவது நொடியில் பால் செம்போடு முதல் இரவு அறைக்குள் நுழைந்தாள் அவள்!

உள்ளே.. காலியாக இருந்தது கட்டில்! ஒருகணம் செய்வதறியாமல் திகைத்தாள்!

கதவுக்குப் பின்னால் ஒளிந்திருந்த அவன், திடீரென ஓடிவந்து அவளை இருகக் கட்டிக் கொண்டான். வெட்கத்தோடு திமிறினாள் அவள்.

“என்ன இது விளையாட்டு, ச்சீ!” என சிணுங்கினாள்.

“இதென்ன விளையாட்டு, இப்பப் பாரு” என்றபடியே அவளை அலேக்காகத்தூக்கினான். கட்டிலுக்குக் கொண்டு போனான்.

“அட அதுக்குள்ள என்ன அவசரம். நான் வெட்கத்தைவிட்டு நிறைய பேசணும்னு ஆசையா வந்திருக்..” - அவள் பேசியதை அவன் கேட்கும் மனநிலையில் இல்லை. வெறி கொண்ட சிங்கமாக பாய்ந்தான்.

விடிய விடிய அவளை எதுவுமே பேசவிடவில்லை அவன். விதம் விதமாக அனுபவித்தான். விடிந்த பிறகும் விடுவதாயில்லை!

உடலும் மனதும் நிரம்பி வழியும் வலியோடு கிடந்தாள் அவள். அவள்மீது அவன். அவனது ராட்சஸ நடவடிக்கைகளால் மிரண்டு போயிருந்தாள் அவள்.

“ச்சே! என்ன பொண்ணு நீ, உன் வயசுக்கு என்னமா கம்பெனி கொடுக்கணும்! நீ என்னடான்னா இப்படி மிரள்றியே?” என எரிந்து விழுந்தான் அவன்.

அப்போதுதான் அவளுக்கும் பேச வாய்ப்புக் கிடைத்தது..“இதுக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணலேன்னு சொன்னீங்களே அன்னிக்கு”

அவன் சொன்னான்.. “ஆமா லவ் பண்ணலேன்னுதானே சொன்னேன். அனுபவிச்சதில்லேன்னா சொன்னேன்”

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்,
களவுக் காதலும்!

முந்தைய 'காதல் பால்'கள்: இங்கே!


Friday, September 22, 2006

காதல் வெள்ளி தடாலடி முடிவுகள்!!!!


‘காதல் வெள்ளி’ கண்ட அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் இதோ பரிசு!

நாள்: 22.09.2006 அதாவது இன்று
நேரம்: மாலை சரியாக 6:30 மணி
இடம்: எம்.எம்.ப்ரிவியூ தியேட்டர், 57 கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 17
தொலைபேசி: 28343813

(கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு மிக அருகில், பாலத்திலிருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில் இருக்கிறது)

அதுசரி வெற்றியாளர் யாரென்று கேட்கிறீர்களா?
முதல் பரிசுக்குரிய பதில்:
'காதல்..!!!'

[சூப்பர் ஸ்டாரின் அஜ்ஜுக்கு இன்னா அஜ்ஜுக்குத் தான்.. குமுக்கு இன்னா குமுக்குத்தான் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை ;)] என்று பிராக்கெட் கமெண்ட் கொடுத்திருக்கிறார் பரிசுக்குரியவரான பொன்ஸ்.

எனக்கு நினைவுக்கு வந்தது: A ROSE IS A ROSE IS A ROSE!

இந்த முறை இரண்டாம் பரிசுக்குரிய பதில் சொன்ன அத்தனை பேருக்கும் பரிசு தர முடிவெடுத்துள்ளேன்.

போட்டியில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் இரண்டாம் பரிசு!!!!

ஆக ஒரே ஒரு பதில் அனுப்பியிருந்தாலும் அவர் படம் பார்க்க வரலாம்!

சில விளக்கங்கள்:
  • ஒருவர் எத்தனை பதில்கள் அனுப்பி இருந்தாலும் தலைக்கு ஒரு டிக்கெட் மட்டுமே அனுமதி! பெண்ணாக இருப்பின் தன்னுடன் ஒருவரை அழைத்து வரலாம்!
  • Anonymous பதில் அனுப்பியவர்கள் 'ஆட்டையில்' சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்!
  • இருக்கை மற்றும் வரிசை முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!
  • வெளியூர் மற்றும் வெளிநாட்டு வலை நண்பர்கள்(போட்டியில் கலந்து கொண்டவர்கள் மட்டும்!) தங்கள் சார்பாக வேறு யாராவது ஒரு வலைப்பதிவாளரையோ அல்லது நண்பரையோ அனுப்பி வைக்கலாம்!

உற்சாகமாக உங்கள் அனனவரையும் வரவேற்கத் தயாராக இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் செங்கம் ஜஃபார் அவர்களுக்கு ஜே!

"இப்படி ஒரு போட்டி நடத்திவிட்டேன். என் நண்பர்கள் நாலைந்து பேரை அனுமதிப்பீர்களா?" என தயாரிப்பாளரிடம் கேட்டேன். அப்போது மணி மாலை 4. அவர்தான் பெருந்தன்மையோடு, "பங்கேற்ற அத்தனை பேருக்கும் வாய்ப்புக் கொடுங்கள். வரவேற்க நான் தயார்" என்றார். முன்கூட்டியே திட்டமிடப்படாத நிகழ்வே இது!

நேரம் குறைவாக உள்ளதால் 6:45 வரை திரையிடலை நிறுத்திவைப்பதாகவும் தயாரிப்பாளர் கூறியுள்ளார். வாங்க சீக்கிரம்!

காதல் வெள்ளி! தடாலடி போட்டி!!

இந்த முறை எடுத்த எடுப்பில் பரிசு என்னவெனச் சொல்லிவிடுகிறேன்! ஒரு அட்டகாசமான க்ளாசிக் சினிமாவை இன்று (22.09,2006) மாலை 6:30 மணிக்கே பார்த்து ரசிக்கும் வாய்ப்பு!

அந்தப் படம்: அனார்கலி.
காலத்தால் அழியாத காவியமான Mughal-e-Azam இந்திப் படத்தின் தமிழ்ப்பதிப்பு இது. படம் பற்றிய விவரங்களுக்கு இணைப்பைச் சொடுக்கவும்! மேல் விவரங்களுக்கு இங்கே!!

1960ல் வெளியாகி அசத்தலான வெற்றி பெற்ற இந்த கருப்பு வெள்ளைப்படத்தை, ஒவ்வொரு ஃப்ரேமாக கலராக்கி 2004ல் வெளியிட்டார்கள் மறுபடியும். அதுவும் வெற்றி. இப்போது தமிழில் புத்தம் புது வண்ணத்தில்! வரும் தீபாவளி சமயத்தில் தியேட்டர்களுக்கு வரப்போகும் இப்படத்தை இன்று மாலையே நீங்கள் பார்க்க வாய்ப்பு!

முந்தைய இரண்டு தடாலடிப் போட்டிகளுக்கான விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். போட்டிக்கான கெடு நேரம் இன்று மாலை 4:30 மணி. இம்முறை வெற்றியாளர்களாக நான் தேர்ந்தெடுக்கப் போவது 4 நபர்களை!!

சரி போட்டிக்கு வருகிறேன்..
காதல்?
இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள், பரிசை வெல்லுங்கள்!

ரெடி ஜூட் நண்பர்களே!

Monday, September 18, 2006

கும்மாங்குத்து! - எப்படி? எதற்கு? ஏன்?



மிகுந்த பலசாலி அவன். குத்துச் சண்டை வீரனும்கூட!

போட்டி ஆரம்பித்த இரண்டாவது ரவுண்டிலேயே எதிராளியை நாக் அவுட் செய்துவிடும் அசாத்திய வெற்றிக்காரன்.

குத்துச் சண்டை மேடைகளில் தோல்வியையே சந்தித்திராத அந்த சூரன், ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் காலாற நடந்து போன சமயம்.. வழிப்பறித் திருடன் ஒருவனிடம் சிக்கிக் கொண்டான்!

பர்ஸையும் வாட்சையும் கழட்டிக் கொடுக்கச் சொன்னான் கத்தியுடன் குறுக்கே புகுந்த திருடன். மறுத்தான் வீரன்.

கைகலப்பு ஆரம்பமானது. ஓரிரு நொடிகளிலேயே முடிந்தும் போனது!

நூற்றுக்கணக்கான குத்துச் சண்டைப் போட்டிகளில் தோல்வியையே சந்தித்திராத அவன் குற்றுயிரும் குலையுயிருமாகத் தோற்றுப் போனான் அந்தத் திருடனிடம்!

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான் திருடன்.

மறுநாள் மருத்துவமனையில் அவனைச் சந்தித்த பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும் கேட்ட ஒரு கேள்வி.. “இவ்வளவு பலசாலியான நீங்கள் எப்படி ஒரு சாதாரண திருடனிடம் தோற்றுப் போனீர்கள்?!”

அதற்கு அவன் சொன்ன பதில் என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா?

?

?

?

?

?

?

“எனக்கும் என் மனைவிக்கும் நேற்று கடுமையான வாக்குவாதம். சுடு சொற்களால் என்னை பலமாக காயப்படுத்தி இருந்தாள் அவள். அந்த வலியுடன் இருந்த நான் தோற்றதில் ஆச்சர்யமேதும் இல்லை!” என்றான் வீரன்.

‘ஒருவனின் வெற்றிகளுக்கு மட்டுமல்ல, தோல்விகளுக்குப் பின்னாலும் ஒரு பெண்ணே இருக்கிறாள். குறிப்பாக மனைவி’ என பத்திரிகையாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள்: இங்கே

அடுத்த தடாலடி பரிசுப்போட்டி! - முடிவுகள்

நன்றி மக்களே நன்றி! ஜாலியான விளையாட்டுத்தான் என்றாலும் சீரியஸாக கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி! முதல் கமெண்ட் கொடுத்த வெட்டிப்பயல் அவர்களுக்கும் கட்டக் கடைசி கொடுத்த சின்னப்புள்ள அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!

இந்த முறை பரிசுக்குரிய கமெண்ட்டுகளாக இரண்டினைத் தேர்வு செய்துள்ளேன்.

அவை:

  1. Udhayakumar said...
    உன்னை அடிச்ச வாத்தியாருக்கு இன்னைக்கு பேக் பஞ்சராகப் போகுது., சீட்ல ஆணி வைச்சுட்டோம்ல...
  2. sivagnanamji(#16342789) said...
    நம்ம மிஸ்ஸுக்கு மீசை இருந்தா எப்டி இருக்கும்?

இன்னொரு ஸ்பெஷல் நியூஸ்! பரிசு பெறும் இந்த இரண்டு தவிர இன்னும் சில கமெண்ட்டுகளையும் தொகுத்து 'குங்குமம்' வார இதழில் வெளியிடவும் ஆசிரியர் குழுவின் பரிசீலணைக்கு அனுப்பியுள்ளேன்.

வெற்றி பெற்ற உதயகுமார் மற்றும் சிவஞானம்ஜி இருவருக்கும் இனிமேல் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறப்போகிற மற்றவர்களுக்கும் போட்டியில் பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

(கணினி கொஞ்சம் தகராறு செய்ததால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமாகிவிட்டது. மன்னிச்சுட்டீங்கதானே?!)

Saturday, September 16, 2006

மக்களே! மக்களுக்கும் மக்களான வலைப்பெருங்குடி மக்களே!

ஞாயிற்றுக் கிழமை, 12 மணி, கேடி, பத்து கட்டளைகள், ட்ரீட், பார்சல்!

இதெல்லாம் என்ன என்கிறீர்களா? வி.சி.ஆர். ல இருக்க மாதிரி ப்ளாக்கர்லயும் ரீவைண்ட் பட்டன் இருக்கதா நினைச்சுக்கிட்டு இங்கே சொடுக்கி அங்கே இருக்கும் புது தகவல்களைப் பாருங்களேன்!

Friday, September 15, 2006

தமிழுக்கு இன்னொரு அழகு!

வேகமும் விவேகமும் கொண்ட சுறுசுறு இளைஞர் ஒருவர், பழுத்த அனுபவமும் ஆழமான அறிவும் கொண்ட துறுதுறு முதியவர் ஒருவர்.. இப்படி ஒரு காம்பினேஷனைப் பார்க்கும்போது ‘இளமை + முதுமை = புதுமையான முழுமை’ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது!

அந்த இளைஞர்.. நாகராஜன் என்ற கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அந்த அனுபவசாலி .. கபிலன் என்ற தமிழாய்ந்த அறிஞர். வித்தியாசமான சாதனைப்படை!

அப்படி என்ன சாதனை படைத்திருக்கிறது இந்தக் கூட்டணி?!

ஓரளவுக்கு கைகள் கட்டப்பட்டுக் கிடந்த கம்ப்யூட்டர் தமிழுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும்.

மனிதன் பெற்றெடுத்த கண்டுபிடிப்புக் குழந்தைகளில் ஈடு இணையற்றது கம்ப்யூட்டர். தொடர்ந்து இணையம் எனப்படும் இண்டர்நெட்.

கம்ப்யூட்டரிலும் இண்டர்நெட்டிலும் ஆங்கிலம் தறிகெட்டுப் பறக்கிறது என்றாலும் நம் தமிழும் இப்போது கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. சுந்தரத் தமிழிலேயே மெயில் எனப்படும் மின்னஞ்சல் அடிக்கலாம். அனுப்பலாம். பெறலாம். உலகம் முழுக்கப் பரந்து விரிந்திருக்கும் தமிழுலகைக் குறுக்கியுள்ளது.

என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இணையத்தில் தமிழுக்கான களம் சிக்கல்களோடுதான் இருக்கிறது!

தமிழில் ஒருவர் மெயில் அடித்து மற்றவருக்கு அனுப்பி வைப்பாரெனில் கூடவே அந்த எழுத்துரு(அதாவது Font) வையும் அனுப்பி வைத்தாகவேண்டும். அதைப் படிக்கும் நபர் திருத்தம் ஏதும் செய்ய முயன்றால் அது சாத்தியப்படாது. அனுப்பியவர் எந்த விசையொழுங்கில் (அதாவது Keyboard driver) டைப் செய்தாரோ அதே விசையொழுங்கை திருத்தம் செய்பவரும் தனது கம்ப்யூட்டரில் வாங்கி வைத்திருக்க வேண்டும்.

ஒரு எழுத்துரு குறிப்பிட்ட விசையொழுங்கில் மட்டுமே இயங்கும். ஒரு விசையொழுங்கு குறிப்பிட்ட மென்பொருளில் (அதாவது Software) மட்டுமே செயல்படும். தவிர ஒவ்வொரு விசையொழுங்குக்கும் வெவ்வேறான கீ போர்டு வடிவமைப்பு! தடுமாற்றத்துடன்தான் தமிழ் வளர்கிறது கம்ப்யூட்டர் உலகத்தில்!

“இந்தத் தடுமாற்றங்கள் எல்லாம் இனி இருக்காது!” என்கிறார் நாகராஜன். வரியுருமா என்ற தமிழ் மொழித்தளத்தை வடிவமைத்துள்ளார் இவர்.

நாகராஜனின் கம்ப்யூட்டர் அறிவும் தமிழரிஞர் கபிலனின் தமிழும் நிதியுதவியும் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.

மாயம் மந்திரமெல்லாம் செய்கிறது இந்த வரியுருமா!

“எந்த ஒரு எழுத்துருவிலும் அல்லது விசையொழுங்கிலும் அல்லது மென்பொருளிலும் யாராவது ஒருவர் டைப் செய்த தமிழை அதன் பிறகு வேறு யாரும் மறுபடியும் டைப் செய்யத் தேவையில்லை. தனக்குப் பிடித்த எழுத்துருவுக்கு மாற்றி விரும்பியபடி திருத்தம் செய்து கொள்ளலாம். எதிலிருந்தும் யுனிகோடுக்கும், யுனிகோடில் இருந்து எதற்கும் மாற்றிக்கொள்ளலாம்” என்கிறார் நாகராஜன். சுரதா கன்வெர்ட்டரால் செய்யமுடியாத பல ஜித்து வேலைகளையும் செய்கிறது!

“இன்னொரு முக்கியமான விஷயம்.. அவரவர் தங்களுக்குப் பிடித்தமான வகையில் கீ போர்டை நிறுவிக்கொள்ள முடியும். இந்த பட்டனைத் தட்டினால் இந்த எழுத்து என நாமே நமக்கேற்ப வடிவமைக்கலாம். இந்திய அளவில் இது முதல் முயற்சி” என்றார் கபிலன்.

தமிழே முதன்மையானதுதானே!

மேலும் விவரங்களுக்கு: வரியுருமா வலைத்தளம்
நாகராஜனின் மின்னஞ்சல் முகவரி: mrnags@gmail.com

Thursday, September 14, 2006

அடுத்த தடாலடி பரிசுப்போட்டி!


மகா ஜனங்களே!

'அடுத்த தடாலடி எப்போ?' என
என்னிடம் விசாரித்த
உங்களில் சிலரது ஆசையை
நிறைவேற்றுவதற்காகவும்,
மற்ற பலரது எழுத்துக்களைப்
படித்துப் பார்க்கும் ஆர்வத்துடனும்
இதோ நான் தரும் அடுத்த தடாலடிப் போட்டி!

போனமுறை போலில்லாமல்
கொஞ்சமேனும் அவகாசம் கொடுத்து
உங்களில் பலரையும் எழுதவைக்க
விருப்பம்.

ஆகவே தோழர்களே..
போட்டிக்கான இறுதி நாள்: 16.09.2006, சனிக்கிழமை
கெடு நேரம்: மாலை மணி நான்கு (இந்திய நேரப்படி)

என அறிவித்திருந்ததில் சிறு மாற்றம்!
தோழர் விவசாயி (பார்க்க பின்னூட்டம் எண்: 106) அவர்களின் வேண்டுகோளை ஏற்று கெடுவை 17.09.2006, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கிறேன்.

முடிவுகள் அறிவிக்கப் படுவது: 18.09.2006 திங்கட்கிழமை பகல் ஒரு மணிக்குள்
பரிசு: மூன்று சாய்ஸ் தருகிறேன், எது வேண்டுமோ வெற்றியாளரே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

முதல் சாய்ஸ்: யுவன் இசையில், ரவி கிருஷ்ணா-தமனா-இலியானா நடிப்பில், ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகப் போகும் 'கேடி' திரைப்படத்தைப் பார்க்க வாய்ப்பு!
இரண்டாம் சாய்ஸ்: எழுத்தாளனிடம் என்ன கிடைக்கும், எழுத்தைத் தவிர. நான் எழுதி, கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கும் 'பத்து கட்டளைகள்' புத்தகம்!
மூன்றாம் சாய்ஸ்: சென்னையில் ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்டில் அழகான ட்ரீட்!

மிக முக்கியமான விஷயம்.. போன போட்டியில் சொன்னமாதிரி வெளியூர் / வெளிநாட்டு நண்பர்களின் கவனத்துக்கு!! நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் சார்பாக இங்கே சென்னையில் பரிசைப் பெற்றுக் கொள்ள வேறு யாரேனும் ஒரு வலைப்பதிவாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்! (அல்லது தபால் செலவு கட்டுபடிக்குள் இருக்குமானால் இரண்டாம் சாய்ஸை நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்)

போட்டி இதுதான்..
'சின்னப் பையன் சின்னப் பெண்ணின் காதில் என்ன சொல்கிறான்?'

ஜாலியா யோசிங்க மக்களே!
ஆல் தி பெஸ்ட்!!

போட்டி முடிவுகள் : இங்கே

முந்தைய போட்டிக்கு இங்கே சொடுக்கவும்.

Tuesday, September 12, 2006

ஆனா ஆவன்னா... / தேன்கூடு போட்டிக்காக


நான்கு பேர் நாங்கள்
ஒன்றாகக் கூடினோம்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து
ஒன்றாகப் படித்தவர்கள்

கல்லூரிக் காலம்தான் எங்கள்
திசைகளைப் பிரித்தது.

திசைகள் வெவ்வேறென்றாலும் எங்கள்
விசைகள் ஒன்றே,
அது தமிழ்!

நான் பத்திரிகையாளன்,
தமிழில் போராட்டம்.

அடுத்தவன் திரைப்பாடலாசிரியன்,
தமிழில் கிச்சுமுச்சுக்காரன்.

இன்னொருவன் மெகாசீரியல் வசனகர்த்தா,
தமிழ்ப் பெண்களின் கண்ணீர் விரும்பி.

இன்னுமொருவன் எழுத்தாளன்,
தமிழே இவன் மூச்சு.

எல்லோருக்கும் தொழில்
எழுத்தே!
சோறு போடுவது
தமிழே!

சோறு மட்டுமா,
கையும் பையும் வழியவழிய
காசு பணமும் போடுகிறது
எங்கள் தமிழ்.

ஆனால், எங்களுக்கெல்லாம்
'அ' னா 'ஆ'வன்னாவென தமிழை
அறிமுகப்படுத்திய கண்ணாடி வாத்தியார்
சொற்ப சம்பளத்திலேயே
கடைசிவரை வாழ்ந்து
செத்தும் போனார்!

உயரம் தூக்கிகள்
உயரம் அனுபவிக்குமா என்ன?!

போட்டிக்கான இன்னொரு படைப்பு: இங்கே

சாமி போட்ட முடிச்சு / எப்படி? எதற்கு? ஏன்?


“சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!" - தயங்கித் தயங்கி, ஆனால் கறாராகவே கேட்டான் அந்தப் பையன்.

சொற்பொழிவை முடித்துவிட்டு புறப்படவிருந்த நவீன சாமியார் தலை திருப்பிப் பார்த்தார். அரைக்கால் சட்டை அணிந்திருந்த பையனைக் கண்டதும் ஆச்சர்யப் புன்னகையோடு கவனித்தார்.

“சொல்லுப்பா என்ன தெரிஞ்சாகணும் உனக்கு?”

தூரத்தில் இருந்து தன்னைப்பார்த்துவிட்டு ஓடிவரும் பெற்றோரை ஒரு கணம் மிரட்சியோடு பார்த்தான் பையன். சாமியாரிடம் வேகமாகச் சொன்னான்.. “ஸ்கூல்ல நா எந்தப் போட்டியில கலந்துக்கிட்டாலும் என்னால முதல் பரிசு வாங்க முடியல. பெரும்பாலும் ஆறுதல் பரிசுதான் கிடைக்குது.ரொம்ப ஃபீலிங்கா இருக்கு. நா முதல் பரிசு வாங்கவே முடியாதா?”

பையன் கேட்டு முடிக்கவும், பெற்றோர் ஓடிவந்து சேரவும் சரியாக இருந்தது. ஏதாவது அதிகப்பிரசங்கித்தனம் செய்திருப்பானோ என்ற சந்தேகத்தில் பையனை அதட்ட முயன்றாள் அம்மா. தடுத்து நிறுத்திவிட்டு பையனை கனிவோடு அருகே அழைத்துக் கொண்டார் சாமி.

டேபிள் மீது பாதி குடிக்கப்பட்டு மீதி தண்ணீரோடு இருந்த கண்ணாடி டம்ளரைக் காட்டினார் பையனிடம்.. “இதைப்பார்த்ததும் என்ன தெரிகிறது?”

“பாதி டம்ளர் தண்ணி இல்லாம காலியா இருக்கு” என்றான் பையன்.

“அதுதான் தம்பி உன் பிரச்னை” என்ற சாமி தொடர்ந்து டம்ளர் தண்ணீருக்கும் பையனின் பிரச்னைக்கும் ஒரு முடிச்சுப் போட்டார். அதை அவன் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துரைத்தார்.

சாமி போட்ட முடிச்சு என்ன தெரிகிறதா?

?

?

?

?

?

?

“பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் காலியாக இருக்கும் மீதி டம்ளர் மட்டுமே உன் கவனத்துக்குப் படுகிறது! அதனால்தான் உனக்கு வருத்தமாக இருக்கிறது. கிடைக்காததை எண்ணிக் கவலைப்படாதே. அந்த மகிழ்ச்சியே கிடைக்காததையும் கிடைக்கச் செய்யும்!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள்: இங்கே

Monday, September 11, 2006

ஓடிப்போலாமா?! / காதல் பால்



சென்னையில் இருந்து பெங்களூருக்கு போன் அழைப்பு... ""நண்பா நான்தான்.''

"சொல்லு. நல்லா இருக்கியா? எப்டி இருக்கா என் தங்கச்சி, அதாண்டா உன் காதலி?''

"நானும் நல்லா இல்ல. அவளும் நல்லா இல்ல.''

"என்னடா... ஏதாச்சும் பிரச்னையா? விஷயத்தச் சொல்லு முதல்ல.''

"வீட்டைவிட்டு கிளம்பி வந்துட்டா அவ. இப்ப என்கூடத் தான் இருக்கா. நாளைக்கு ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ்ல கல்யாணம். எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு. எனக்கு டென்ஷனா இருக்குடா. நீ இப்பவே கிளம்பி வரணும்.''

"அடக்கடவுளே! போனை அவகிட்ட கொடு.''

போன் கைமாறியது.

"எத்தனை மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினே நீ?''

"காலைல ஒன்பது மணிக்கு. யுனிவர்சிடி வரை போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன்.''

கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான் நண்பன். பகல் இரண்டு.

"தேங்க் காட்! போனைக் கட் பண்ணு, மேனேஜர்ட்ட லீவ் சொல்லிட்டு இப்பவே சென்னைக்கு ஃப்ளைட் பிடிக்கிறேன்.''

சென்னை. காந்தி மண்டபம். அவனும் அவளும் நண்பனும் பதற்றத்தோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

"ஏன்மா நீதான் எம்.ஏ. படிக்கப் போறேன்னு சொன்னியே. ஓடிவந்து கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இப்ப என்ன வந்தது?'' அவளைப் பார்த்துப் பேசியவன் அவன் பக்கமும் திரும்பினான்..."இப்பதான் வேலைல சேர்ந்து நாலு மாசமாகுது. நாலாயிரம்தானே உன் சம்பளம். பெத்தவங்களை விட்டு தனியா வந்து இந்தப் பணத்துல குடும்பம் நடத்திட முடியுமா உன்னால. கேஸ் சிலிண்டர் விலை என்னன்னு தெரியுமா உனக்கு இப்ப?''

எல்லோரும் அமைதியானார்கள்.

அவள்தான் மௌனம் கலைத்தாள். "எங்க காதல் மேட்டர் வீட்ல அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு. எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான்...''

அவன் தொடர்ந்தான்... "நான் எங்க வீட்ல விஷயத்தைச் சொல்லிட்டேன். `ரெண்டு வருஷம் போகட்டும், பார்க்க லாம்'னு அப்பா சொல்லிட்டார்.''

"ம்ம்ம்...''-பெருமூச்சோடு பேசினான் நண்பன்... "அவசரப்பட்டுட்டிங்க!''

"அவங்கப்பா பார்க்குற மாப்பிள்ளைக்கு அவ கழுத்த நீட்டி இருக்கணும்ங்குறியா நீ?!'' - காதலன் டென்ஷனானான்.

"இல்ல... இன்னும் கொஞ்சம் போராடிப் பார்த்திருக்கணும் நீங்க ரெண்டு பேருமே.''

இருவரும் அதிர்ச்சியானார்கள். அவளை ஏறிட்டவாறே சொன்னான் நண்பன்... "நீ ஒருத்தனை லவ் பண்றேன்னு தெரிஞ்சும், அவங்க உனக்கு மாப்பிள்ளை பார்க்குறது உனக்குப் பிடிக்கலைனு தெரிஞ்சும் உன்னை சந்தேகப்படாம தனியா வீட்டை விட்டு அனுப்பியிருக்காங்க பார்த்தியா உங்க பேரண்ட்ஸ். அந்த நம் பிக்கையைப் பொய்யாக்கணுமா?''

மறுபடியும் மௌனம் ஓரிரு நிமிடங்களுக்கு.

"இப்ப என்னதான் பண்ணணும்ங்கிறே நீ?'' -எரிச்சலோடு கேட்டான் காதலன். மருள மருளப் பார்த்துக் கொண்டிருந்தாள் காதலி.

"கிளம்புங்க'' என்றான் நண்பன்.

"எங்கே?'' என்றார்கள் இருவரும்.

"பொண்ணு வீட்டைவிட்டுப் போயிட்டாள்னு இவங்கப்பா அம்மா உணர்றதுக்கு
முன்னாடி இவளை அவங்க வீட்ல கொண்டு போய் விட்டாகணும்.''

தவு திறந்தது.
"என்னாச்சுடி... மதியம் லன்ச் சுக்கு வந்திருவேன்னு சொல்லிட்டு வீட்டைவிட்டுப் போனவ! இப்ப மணி என்னன்னு பார்த்...'' - மகளின் முதுகுக்குப் பின்னால் நின்றிருந்த இரு இளைஞர்களைக் கண்டதும் பேச்சை பாதியிலேயே நிறுத்தினாள் அவளது அம்மா.

விலகினாள். அவள் முன்னே செல்ல, அழையா விருந்தினர்களாக மற்ற இருவரும் உள்ளே நுழைந் தார்கள். ஜாக்கிரதையாக வலது காலை எடுத்து வைத்தான் அவன்!

மகளின் கையை இறுகப் பிடித்தாள் அம்மா.. "என்னடி நடக்குது இங்கே? யார் இவங்க?'' - கிசுகிசுப்போடு தன் எரிச்சலைக் காட்டினாள். அந்த இருவரில் ஒருவனே தன் மகளின் காதலன் என்பதை சட்டென உணர்ந்து கொண்டது அவள் மனம்.

நண்பன் ஆரம்பித்தான்.. "அப்பா இல்லிங்களா வீட்ல?''

"அவங்க வெளியே போயிருக்காங்க. என்ன விஷயம் சொல்லுங்க'' என்றாள் அம்மா. அவள் முதுகுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள் மகள்.

"அது வந்து.. உங்க பொண்ணு விரும்பறது இதோ இவனைத்தான். என் நண்பன். நல்லவன். கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. இவனுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்க பொண்ணோட தான். வீட்ல வேற மாப்பிள்ளை பார்க்குறதா தெரிஞ்சதும் இவங்க கொஞ்சம் அவசரப்பட்டு முடி வெடுத்துட்டாங்க. வீட்டைவிட்டு கிளம்பி வந்துட்டாங்க உங்க பொண்ணு. இவன்தான் வரச் சொல்லியிருக்கான். கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சு. நல்லவேளை எனக்கு விஷயம் தெரிஞ்சதும் ஓடிவந்துட்டேன். `பொறுமையா உட்கார்ந்து ‘இது தப்பு'ன்னு எடுத்துச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டாங்க. இன்னும் கொஞ்ச காலம் உங்க சம்மதத் துக்காகக் காத்திருக்கலாம்னு இவங்களுக்கு நான் சொல்லி யிருக்கேன். அதான் உங்க பொண்ணை பத்திரமா கொண்டு வந்து வீட்ல சேர்க்குறதுக்காக வந்திருக்கோம்.''

தே நேரம்.. அங்கே காதலனின் வீட்டிலும் ஒரு களேபரம் நடந்து கொண்டிருந்தது!

"வணக்கம்ங்க. நான்தான் உங்க பையன் காதலிக்கிற பொண் ணோட தகப்பன்காரன்'' என்ற படியே வாசலில் நின்றிருந்தவரை உள்ளே வரச் சொல்வதா வேண்டாமா எனத் தடுமாறி னார்கள் பையனின் பெற்றோர்.

"வழி விடுங்க வீட்டுக்குள்ள போயி பேசுவோம்.'' என்றார் வந்தவர். அவராகவே வீட்டுக்குள் நுழைந்தார். சோபாவில் உட்கார்ந்தார். பேசலானார்..

"எனக்கு ஒரே பொண்ணுங்க. பெரிய இடத்துல சம்பந்தம் பார்த்துட்டு இருக்கேன். திடீர்னு ஒரு நாள் என் பொண்ணு என்கிட்ட வந்து உங்க பையனை விரும்புறதா சொன்னா. சின்னஞ் சிறுசுக விவகாரம் பார்த்திங்களா.. நாமளும் அடி, உதைன்னு அவசரப்பட்டுரக்கூடாதுன்னு விட்டுப் பிடிச்சுட்டு இருக்கேன். சாதி, சனம், அந்தஸ்து, ஆஸ்தி.. எப்படிப் பார்த்தாலும் ரெண்டு குடும்பத்துக்கும் சரிப்பட்டு வரவே வராதுங்க. அதான் உங்ககூட பேசிட்டுப்போலாம்னு வந்திருக்கேன். நான் என் பொண்ணை எப்படியாவது சமாதானப்படுத்திக்கிறேன். நீங்க உங்க பையனுக்கு இதையெல்லாம் புரியவச்சு இந்தப் பிரச்னைல நம்ம ரெண்டு குடும்பத்தோட மானத்தையும் காப்பாத்தணும்.''

அவர் கையில் இருந்த மொபைல் போன் அடித்தது. எடுத்தார். மறுமுனையில் மனைவி!

அங்கே வீட்டில் நடந்ததை யெல்லாம் சொன்னார் மனைவி. இடி விழுந்த முகத்தோடு அமைதியாகக் கேட்டார் அவர். ""சரி, பொண்ணை எதுவும் திட்டாதே. நான் வந்துர்றேன்'' என்று போனை வைத்தார்.

நடப்பது எதுவுமே புரியாமல் எதிரே நின்றுகொண்டிருந்தனர் பையனின் பெற்றோர்.

`பெண்ணின் தகப்பன்' இப்போது பெருமையோடு பேச ஆரம்பித்தார்..
"நான் இதுவரை பேசுனத எல்லாம் மறந்துடுங்க. சாதி, சனம், அந்தஸ்து, ஆஸ்தி.. எது எப்படி இருந்தாலும் எனக்குக் கவலை இல்லிங்க. பாவம் சின்னஞ்சிறுசுக. ஆசைப்பட் டுட்டாங்க. நம்ம சம்மதத் தோடதான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைக்குறாங்க. நாமதானேங்க பெரிய மனசு பண்ணி சேர்த்து வைக்கணும்.''

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்(, காதலில் நண்பன்)
- பொருட்பால், அதிகாரம்: 45 பெரியாரைத் துணைக்கோடல், குறள்: 442

ஒருவனது துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்குபவராகவும் அத்துன்பங்கள் வராதபடி முன்கூட்டியே கணித்துக் காப்பாற்றும் தன்மையுடையவராகவும் உள்ளவரைத் துணையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்(, காதலில் நல்ல நண்பனே அத்தகைய துணையாக இருப்பான்)

முந்தைய காதல்பால்கள்: இங்கே!

Friday, September 08, 2006

மகிழ்ச்சிக்குரிய இரண்டு சேதிகள்!

செய்தி ஒன்று!

திண்டுக்கல்லில் இருந்து பழனி போகும் வழியில் இருக்கிறது பி.எஸ்.என்.ஏ. பொறியியற் கல்லூரி. பஸ்ஸிலோ ரயிலிலோ அந்தப்பக்கம் போகும்போது கவனித்திருக்கிறீர்களா.. பிரம்மாண்டமாய் கடந்து போகும்! அங்கேதான் நான் படித்தேன்!

நான் படிக்கும் காலத்தில் வெறும் பொறியியற் கல்லூரி மட்டுமே. இன்று அசத்தலான ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. எம்.ஈ., எம்.பி.ஏ., பி.டெக்., என நிறைய கோர்ஸ்கள் கற்றுத்தரும் மெகா கல்வி நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.

கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் செகரட்டரி அடியேன்தான். தமிழ் மன்றத்துக்கு முதல் செயலாளரும் நானே!

அந்தக் கல்லூரியில் இந்த வருடம் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் சார்பாக பெரிய அளவில் கலை விழா நடந்து கொண்டிருக்கிறது. க்ளைமாக்ஸ் நிகழ்ச்சியில் CHIEF GUEST ஆக மேடையேறி சிறப்புரை(?!) ஆற்றி பரிசுகளை வழங்கப்போவது உங்கள் நண்பன் ஜி.கௌதம்!!!!

கூடப்படித்த இரண்டு சகாக்களையும் கூட்டிக் கொண்டு கல்லூரிக்குப் போகிறேன். 'ஹ்ம்ம்ம்.. ஆட்டோகிராப்'தான்!

இது எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

அடுத்தது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்!

தொடர்ந்து சில நாட்களுக்கு பயணத்திலேயே இருக்கப்போவதால் தடாலடி பரிசுப் போட்டியோ, அடாவடிப் பதிவுகளோ இன்னும் ஒரு வாரத்துக்காவது உங்களைத் தொந்தரவு செய்யாது!

போய்ட்டு வரேன் நண்பர்களே!

ஏதாச்சும் உருப்படியான செய்திகளை எதிர்பார்த்து இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை சுயபுராணத்தோடு திருப்பி அனுப்ப மனசு வரலை. அதனால் சூடாக இரண்டு சினிமா விமரிசனங்கள் தருகிறேன்.

இன்னும் சில நிமிடங்களில் பெட்டியைத் தூக்க வேண்டும் என்பதால் கொஞ்சமே கொஞ்சம் மட்டுமே எழுத அவகாசம்.

படம் : 1. சில்லுனு ஒரு காதல்
  • நமது உடல் உறுப்புதான் என்றாலும் நகத்தை வெட்டுவதில்லையா.. அப்படி ஒரு இருபது நிமிடத்தை படத்திலிருந்து வெட்டிக் கடாசினால் இன்னொரு மௌனராகமாக ஆகி இருக்க வேண்டிய படம்! குப்பாச்சு குழப்பாச்சு வரிசையில் சேர்ந்துவிட்டது. குறிப்பாக பூமிகா திரும்ப வரும் முழுநீளமும் கொட்டாவிக்கு டிக்கெட்!

படம் : 2. எம்-டன் மகன்

  • 'ஆஹா ஓஹோ' என படம் வருவதற்கு முன்னரே படா படா பில்ட்-அப்கள் கொடுக்கப்பட்டது. சேரன் இழுத்து இழுத்துச் சொன்ன தவமாய் தவமிருந்துவை நச்னு சொல்லி இருக்காங்களாம் என பேச்சைப் பரப்பினார்கள். படம் பார்த்துவிட்டு வருபவர்கள் தங்கள் அப்பாவைத் தேடி ஓடுவார்கள் என்றார்கள். இந்தப் பேச்சுக்களையெல்லாம் நம்பிப் படம் பார்க்கப் போனால் எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும் அப்பா நாசர் மீது கடும் கோபத்தோடுதான் வெளிவருவீர்கள்!

Wednesday, September 06, 2006

இதோ முடிவு!

அசத்திட்டிங்க நண்பர்களே!
இரண்டரை மணி நேரத்தில் 124 பின்னூட்டங்கள்! நூற்றுக்கும் மேற்பட்ட பங்களிப்புகள்!!

இறுதி கட்டத்துக்கு வந்த படைப்பாளர்கள் மூன்று பேர்.
அந்த மூவரில் வெற்றியாளர்.. லக்கி லுக். வாழ்த்துக்கள்!

அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து படைப்புகள் அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றியோ நன்றி!

பரிசுக்குரிய கமெண்ட்: 'கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்'

தடாலடி பரிசுப்போட்டி!!!

சென்னைவாழ் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு தடாலடி பரிசுப்போட்டி!

மத்தவங்களும் இதில் கலந்து கொள்ளலாம். ஆனால்.. வெற்றி பெற்றால் அவர் சார்பாக இங்கே சென்னையில் பரிசைப் பெற்றுக் கொள்ள வேறு யாரேனும் ஒரு வலைப்பதிவாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்!

என்ன சரியா?

போட்டி இதுதான். இந்தப் படத்துக்கு நச்னு ஒரு வரி (ஒரே ஒரு வரி மட்டுமே!) கமெண்ட் அடிக்க முடியுமா?

மணி இப்போ இந்திய நேரப்படி பகல் ஒன்று முப்பது. மாலை நான்கு மணிதான் கொடுக்கப்படும் அவகாசம். அதற்குள் பரிசுக்குரிய கமெண்ட்டை அடிப்பவர்களுக்கு இன்று மாலை ஆறு மணிக்கே பரிசு வழங்கப்படும்!

பரிசு என்னன்னு சொல்றேன். சினிமா பிடிக்காதவங்க திட்டாதிங்க. ஒருவேளை நீங்க ஜெயிச்சா உங்க நண்பரான வேறு வலைப்பதிவாளருக்கு பரிசை மாத்திவிட்ருங்க!

பரிசு.. இன்றைக்கு மாலையே சூர்யா-ஜோதிகா கல்யாணத்தைப் பார்க்க வாய்ப்பு! அதாவது அவங்க கல்யாணக்காட்சி இடம்பெறும் 'சில்லுனு ஒரு காதல்' படம் பார்க்க வாய்ப்பு!! (படம் எட்டாம் தேதிதான் உலகத்துக்கு ரிலீஸ்!)

கால அவகாசம் குறைவா இருக்கதால பரிசைத் தீர்மானிக்க ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

என்ன ரெடியா? ஜூட்!

வெற்றியாளர் இங்கே.

Tuesday, September 05, 2006

வலைப்பதிவாளர் சந்திப்பு!

ஆகவே தோழர்களே.. இந்தப் படத்தைப் பார்த்த ஜோரில் பளிச்னு எனக்குள்ள ஒரு கமெண்ட் தோணுச்சு!

அது..
'வலைப்பதிவாளர் சந்திப்பு!'

உங்களுக்கு ஏதாச்சும் தொணுதா?
ஒரு வரில சொல்லுங்க பார்க்கலாம்!

Monday, September 04, 2006

லிஃப்டாவது கிடைக்குமே! / தேன்கூடு போட்டி

ஒரு முன் குறிப்பு:பலகீனமான இதயமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாமே!
.
ன் பைக் உதைபடவிருந்த அந்த விநாடியில் ஜோடியாக வந்து நின்றன இரண்டு வண்டிகள்.
.
"என்னாச்சு எல்லாரும் ஆபிஸைவிட்டு வெளியேரும்போது நீங்க என்னடான்னா புதுத் தக்காளிமாதிரி ஜம்னு புன்னகையோட வந்து நிற்குறீங்க?!" என்றேன்.
வந்தவர்கள் இருவரும் என் நண்பர்கள். அலுவலகத்தில் என் இருக்கைக்கு இடதும் வலதுமாக இருப்பவர்கள். முக்கியமாக ஒரு சங்கதி.. இருவரும் காதலர்கள்!
.
"ஆபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்கு" என்றாள் அவள்.
.
"கொஞ்சற வேலையா?" என நான் அச்சுப்பிச்சுத் தனமாக ஜோக்'கடி'த்ததை அவர்கள் ரசித்தது மாதிரி தெரியவில்லை. அவர்கள் கவனம் வேறு எதிலோ இருந்தது!
.
"நல்ல வேளை 'ஜஸ்ட் மிஸ்'ல தப்பிச்சேன்!" என்றான் அவன்.
.
"ஏன்? என்னாச்சு?"
.
"வர்ற வழில ஒரு பார்ட்டி லிஃப்ட் கேட்டது. கொடுக்கலாம்னு நானும் என் பைக்கை ஓரம் கட்டினேன். அப்பத்தான் பார்த்தேன்.. அது ஒரு அலி! ஆம்பளை டிரெஸ், பொம்பள ஸ்டைல், ரெண்டுங்கெட்டான் தோற்றம். 'ஸாரி'னு சொல்லி கியரை மாத்திட்டேன். "
.
தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் அவன்.
எனக்கு லேசாக வருத்தம் எட்டிப்பார்த்தது.. "அப்படின்னா நீயாச்சும் லிஃப்ட் கொடுத்திருக்கலாமேம்மா" என்றேன் அவளிடம்.
.
'க்ளுக்'கெனச் சிரித்தாள் அவள். "என்ன கிண்டலா?" என்றாள்.
அந்த விநாடி என் நினைவுகள் பின்னோக்கிப் பறந்தன..
.
யரே பௌர்ணமி நிலா.
.
தொலைவில் தெரு நாய்களின் ஊளைச் சத்தம். ஊருக்கு ஒதுக்குப்புறமான குடிசைவீடு!
.
டூரிங் டாக்கீஸில் செகண்ட் ஷோ முடிந்து கூட்டம் கலைவதை,
நாய்களின் ஊளைச்சத்தம் உறுதிப்படுத்தியது.
.
என் கையைப் பிடித்துக் கூட்டிப் போனாள் அவள். வயதை யூகிக்க
முடியாதபடி வளர்ந்திருந்த அரவாணி!
குடிசைக்குள் இருவருமாக நுழைந்தோம்.
பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜ்ஜோதியாக ஒளிர்ந்தது உள்ளே.
.
நீளமான ஹால்போல இருந்த அந்தக் குடிசை வீட்டில், பனி மூட்டம் கட்டியது போல மண்டிக் கிடந்தது ஊதுபத்திப் புகை.
.
"வாங்க!'' - ஒருசேர வரவேற்றார்கள் ஏற்கனவே அங்கிருந்த ஆறு
அரவாணிகளும். பகல் வெளிச்சத்தில் பார்த்ததை விடவும் `பளபள'வென
இருந்தார்கள் அனைவரும்.
.
எனக்காகவே வாங்கிப் போட்டிருந்த பிளாஸ்டிக் சேரைக் கை
காட்டினார்கள். உட்கார்ந்தேன். கூரைக் குடிசையை அளவெடுத்தேன்
பார்வையில்.
.
சின்னதாக ஒரு பெண் தெய்வத்தின் போட்டோவை சுவற்றில் சாய்த்து
வைத்து, மாலை போட்டிருந்தார்கள்.
.
"அதுதான் எங்க சாமி. பௌஜ் மாத்தா'' என்றாள் என்னருகே வந்து
நின்றுகொண்ட `வழிகாட்டி' அரவாணி.
.
கட்டிக் கற்பூரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பு வெளிச்சத்தில் பௌஜ் மாத்தா பயமுறுத்தினாள்!
.
குடிசையின் நட்ட நடுவே ஆறடி நீளத்துக்கு ஆழமாக வெட்டப்
பட்டிருந்த குழியை அப்போதுதான் கவனித்தேன். தோண்டிக் குவித்த
மண்மேடு பீதி கொடுத்தது.
.
"என்ன வேண்ணாலும் நடக்கலாம் இல்லையா. அதான் குழி வெட்டிருவோம். வாச்சா போச்சா வாழ்க்கை'' -வழிகாட்டி சொன்னது புரியாததால் விளக்கம் கேட்டேன்.
.
சொன்னாள்... "ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுட்டா நறுக்குனதை வெத்தல, பாக்கு, பழம் சுத்தி அடக்கம் பண்ணுவோம். தப்புத் தண்டாவா நடந்துருச்சுன்னா
கண்ணும் காதும் வச்சமாதிரி சவத்த அடக்கம் பண்ணிருவோம். வாச்சா போச்சான்னா, `வந்தா வாழ்க்கை -போனா சாவு'ன்னு அர்த்தம்.''
.
"சரி சரி, வெரசா ஆகட்டும். நேரமாச்சு'' என குண்டோதரி சைஸில் இருந்த அந்த
தலைமை அரவாணி அதட்டல் போடவும், ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டிருந்த ஆறு அரவாணிகளும் ஒன்று கூடினர்.
.
"கூட்டிட்டு வாங்கடி'' - குண்டோதரியின் குரலுக்குப் பணிந்து
என்னை அம்போவென விட்டுவிட்டு வெளியே ஓடினாள் வழிகாட்டி.
ஓரிரு நிமிடங்களில் அவள் திரும்ப வரும்போது கூடவே ஒரு இளைஞன்.
.
இருபது வயதிருக்கும் அவனுக்கு. மிரள மிரள வந்தான்.
அத்தனை அரவாணிகளும் அவனை மொய்த்துச் செல்லம் கொஞ்சினார்
கள். திருஷ்டி சுற்றினார்கள். தைரியம் சொன்னார்கள். ஆடைகளை அவிழ்த்தார்கள்!
வெட்டிய குழியின் விளிம்பில் அவனை நிறுத்தினார்கள்.
.
குழியை ஒரு சில விநாடிகள் குனிந்து பார்த்த அவன், நிமிர்ந்து எதிரே இருந்த என்னையும் பார்த்தான். `வெடுக்'கென தலை சிலுப்பிக் கொண்டான்.
.
வழிகாட்டி என்னருகே வந்தாள்... "பூஜை ஆரம்பமாகப் போவுது. உணர்ச்சிவசப்பட்றக் கூடாது. என்னோட பதினைஞ்சு வருஷ லைஃப்ல இப்படி ஒரு ஆள வேடிக்கை பார்க்க கூட்டி வர்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். கைல
கால்ல விழுந்து சம்மதிக்க வச்சிருக்கேன். இருந்தமா பார்த்தமான்னு எந்திருச்சு போயிரணும். போட்டோ கீட்டோ பிடிச்சாக்க... எங்காளுங்க பொல்லாதவளா
யிடுவாளுங்க.'' -சொல்லிவிட்டு ஜோதியில் கலந்தாள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தேன்.
.
"மாத்தா கி...ஜே, மாத்தா கி... ஜே!'' - பஜனைக் கோஷம் எடுத்த எடுப்பில் சூடுபிடித்தது.
.
கற்பூரம் தீரத்தீர புதுக் கற்பூரத்தை நெருப்புக்குள் செருகினாள் ஒரு அரவாணி.
.
உதிரிப்பூக்களைக் கிள்ளி பௌஜ் மாத்தாபடத்துக்குப் பூஜித்தாள் தலைமை
அரவாணி.
.
இரண்டு கைகளிலும் புகையும் ஊதுபத்திக் கொத்துகளைப் பிடித்தபடி அங்கும் இங்குமாக அலைந்தாள் வழிகாட்டி.
.
இன்னொரு அரவாணி மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்றவைத்து, நல்லெண்ணெய் நிரம்பிய அலுமினியப் பாத்திரத்தை அடுப்பின் தலையில் வைத்தாள்.
.
மற்ற மூன்று அரவாணிகளும் வெட்டப்பட்டிருந்த குழியின்
தலைமாட்டில் கால்களை விரித்தபடி நின்றிருந்த அந்த இளைஞனைச்
சுற்றி! இரண்டு தோள்களை இரண்டுபேரும், பின்புறம் நின்றபடியே கழுத்தை மூன்றாவது அரவாணியும் இறுகப் பிடித்திருந்தனர்.
.
"மாத்தா கி... ஜே, மாத்தா கி... ஜே!'' - நேரமாக ஆக பஜனைக்
குரலில் உக்கிரம்!
.
அரவாணிகளின் தலைகளில் செருகப்பட்டிருந்த பூச்சரங்கள் கலைந்து, தாறுமாறாகக் காற்றில் அல்லாடி அலைந்தன. உடலைச்சுற்றியிருந்த புடவை, உடலுடனான தொடர்பை அற்றுக்கொண்டு காற்றில் துழாவியது.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
குரலும் கூக்குரலும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக்கொண்டே போனது. ஊர் மறந்து, உறவுகள் மறந்து, சுற்றி நடப்பதை மறந்து,அடிவயிற்றுக்குள்ளிருந்து கோஷம் போட்டான் அந்த இளைஞனும்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
கூரை கிழிய, தரை அதிர... கோஷமும் ஆட்டமும் தொடர்ந்து கொண்டிருந்த அதேநேரம் மாத்தாவின் படத்துக்குக் கீழே தண்ணீர்ப் பாத்திரத்தில் குளித்துக்
கொண்டிருந்த ஏதோ ஒரு பொருளைக் கையிலெடுத்தாள் குண்டோதரி
அரவாணி. விளக்கு ஒளியில் டாலடித்த அது... ஒரு ஆக்ஸா பிளேடு!
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
நேரம் நெருங்கிவிட்டது போலும்! அத்தனை அரவாணிகளும் அதைப் புரிந்துகொண்டு விட்டதாகத் தெரிந்தது. இப்போது பாடலுடன் ஆடலும் சேர்ந்தது. கோஷமாய்ப் பாடியபடியே அந்த இளைஞனைச் சுற்றிச் சுற்றி
குதியாட்டம் போட ஆரம்பித்தனர்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
`சொத்'தென்று அவன் நெஞ்சில் ஓங்கி அறைந்தாள் குண்டோதரி. அவளது மற்றொரு கையில் ஆக்ஸா பிளேடு!
.
சுற்றிச் சுற்றி மற்ற அரவாணிகள் அவன் முதுகில், தோள்களில்,
மார்பில், தொடைகளில் படார் படாரென அறைய ஆரம்பித்தனர். அத்தனை பேரும் கோஷம் போடுவதை மட்டும் நிறுத்துவதாயில்லை.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!'' மண்டியிட்டு அவன் அருகே உட்கார்ந்தாள் குண்டோதரி.
.
தன்னை மறந்த அமானுஷ்ய உணர்வில் இருப்பது போலத் தெரிந்தான் அந்த இளைஞன். தொடர்ந்து அடி வாங்கிய உடம்பு மரத்துப் போயிருக்கும்!
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
மாத்தாவின் கண்களில் நிலை குத்திப் போயிருந்தன அவனது கண்களும். குபீரென `கெட்டிமேள' வேகமெடுத்தது பஜனைச் சத்தம்.
.
அந்த நொடியில்... தன் இடது கையில் அவனது ஆண் உறுப்பை `வெடுக்'கெனப் பற்றினாள் குண்டோதரி. பிளேடுடன் இருந்த வலக்கையை உயர்த்தினாள். இடது கை இழுத்துப் பிடித்தது. வலது கை... ஒரே இழு!
.
வேரோடு நறுக்கப்பட்ட ஆண் அடையாளம் கையோடு வந்தது!
கோஷமும் அடிகளும் வெறித்தனம் எடுத்தன.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
அவன் கால்களுக்கிடையே குவிக்கப்பட்டிருந்த மண்மேடுரத்தக் களறியானது.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
குண்டோதரி நீட்டியதைக் `கண்'படாமல் கைகளில் வாங்கி, மஞ்சள் துணியில் சுற்றினாள் வழிகாட்டி.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
`அந்தப் பையனின் குரலில் மட்டும் உத்வேகம் வடிந்திருந்தது.
.
`வெட்டுப்பட்ட இடத்தின் வலியைப் பொருட்படுத்தாமல் இருப்பதற்காகத்தான்
மாறி மாறி அறைந்து உடம்பில் மத்த இடங்களிலும் வலி ஏற்படுத்துவோம்' என வழிகாட்டி அரவாணி ஏற்கெனவே சொன்னது நினைவுக்கு வந்தது.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
"பலமா அடிங்கடி. தூங்க விட்றாதீங்க. அப்புறம் உயிர் போயிரும்'' - அதட்டல் போட்டாள் குண்டோதரி. பளார் பளாரென அந்த அறுபட்ட ஆணின் முகத்திலும் அறைய ஆரம்பித்தனர் அரவாணிகள் அத்தனை பேரும்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
`தளதள'வெனக் கொதித்த எண்ணெய்ப் பாத்திரத்தைக் கரித்துணியால் எடுத்தாள் குண்டோதரி.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
சூழ்ந்திருந்த அரவாணிகள் அவனை மண்மேட்டிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். .
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
கிழிந்த பாயில் படுக்க வைத்தார்கள்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
"சுக்குத் தூளை எடுங்கடி'' -குண்டோதரியின் குரலைத் தொடர்ந்து, ஓரத்தில் இருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள் வழிகாட்டி. கை நிறைய சுக்குத்தூளை, அறுபட்ட இடத்தில் `பொத்'தென அடித்துப் பூசினாள்!
சுர்ர்ர்ர்ர்!
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
அப்படியே சுக்குத் தூள் கையால் அந்த இடத்தை கெட்டியாக அழுத்திப் பிடித்துக்கொண்டாள் வழிகாட்டி.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
மயக்கமும், முனகலும், எரிச்சலும், வலியுமாக... செருகிய கண்களுடன் கோஷத்தை முனகிக்கொண்டிருந்தான் அவன்.
.
"மா...த்...தா..கி...ஜே!''
.
தலைமுடியைப் பிடித்து உலுப்பினாள் குண்டோதரி... "தூங்காத ராசாத்தி. கண்ணுல்ல. கொஞ்ச நேரம் பொறுத்துக்க.'' -பேசியபடியே அவள் அடுத்துச் செய்த காரியம்...
.
கொதி கொதித்த நல்லெண்ணெயை டம்ளரில் மொண்டு அறுபட்ட அந்த இடத்தில் ஊற்றினாள்! கண்களை இறுக மூடிக்கொண்டு ஓரிரு விநாடிகளுக்கு
தலை சிலுப்பிப் பதறிக்கொண்டேன் நான்.
.
"இன்னும் கொஞ்சம்... ஊத்துக்கா'' என்று கெஞ்சினான் அவன்.
.
"எரிச்சலுக்கு எண்ணெயின் சூடு இதமாக இருக்கும்!'' - குரல் எனக்கு மிக அருகே கேட்டதும் கண்களைத் திறந்தேன். சுக்குத் தூளும், ரத்தச் சேறும் கலந்த
கலவைக் கையுடன் என்னை ஒட்டிக்கொண்டு வந்து நின்றாள் வழிகாட்டி அரவாணி.
.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் திண்டுக்கல் மாவட்ட அரவாணிகள் சங்கத் தலைவியான சேவியரம்மாவிடம் நான் பார்த்த குடிசை வீடு ஆபரேஷன் குறித்து மேல்விவரம் கேட்டேன்.
.
"மும்பை, திண்டுக்கல்னு ஒரு சில இடங்கள்ல வலியில்லாம ஆபரேஷன் மூலமா வெட்டி எடுக்குற அலோபதி டாக்டர்கள் இருக்காங்க. ஆனா அதுக்கு கொள்ளப்பணம் செலவாகும். அதாலதான் பெரும்பாலும் இப்படி நாங்களே அறுத்துக்குவோம்'' என்றார் காஷுவலாக.
.
"ஏன்?'' என்றதும் அவர் காட்டமாகச் சொன்னது இன்னும் என் காதுகளுக்குள்ளேயே இருக்கிறது..
.
"எங்களைக் கேட்டா? ஆம்பள உடம்போடயும் பொம்பள மனசோடயும் எங்களைப் படைச்ச அந்தக் கடவுளைத்தான் கேட்கணும்! எங்களுக்கு முறையா ஒரு அங்கீகாரம் கொடுத்து மனுஷியா மதிக்காத இந்த கவர்ன்மென்ட்டத்தான் கேட்கணும்.
.
நிம்மதியா டாய்லெட் போகக்கூட எங்களுக்கு உரிமை இல்லை. ஆம்பள கக்கூசுக்குள்ள போனா கிண்டல் பண்ணி மிரட்டுவானுக. பொம்பள கக்கூசுக்குள்ள போனா அருவருப்போடு விரட்டுவாளுக. இப்படி வெட்டிக்கிட்டா கொஞ்ச நஞ்சமா சுரக்குற ஆம்பள ஹார்மோன் சுத்தமா நின்னுரும். மாரெல்லாம் வளர்ந்து பொம்பளை ஷேப் ஆயிருவோம் நாங்க. தைரியமா பொம்பள டாய்லட்டுக்குள்ள போக முடியும்ல அப்புறம்!
.
அவ்வளவு என்னத்துக்கு.. ஆத்திரம் அவசரம்னு எப்பவாச்சும் நாங்க லிஃப்ட் கேட்டா பொம்பளைனு நினைச்சாவது எவனாவது வண்டிய நிறுத்துவான்ல!''

படத்தைப் பார்! சிரி!! / எப்படி? ஏன்? எதற்கு?


ஸ்ஸ்ஸ்.. கணவனுக்கும் மனைவிக்கும் கடும் சண்டை!

“போயும் போயும் உங்களைக் கல்யாணம் பண்ணதுக்கு ஒரு ஆட்டுக்கல்லைக் கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்!” - இது மனைவி.

“ச்சீ! வாயைக் கழுவு. ஆத்திரத்துல என்ன பேசுறதுன்னு விவஸ்தை வேணாம்! ஆட்டுக்கல்லோட குடும்பம் நடத்துனா என்னாகும் தெரியுமா?! சனியனே!” - இது கணவன்.

“யார் சனியன்.. நீங்கதான் சனியன். உங்களை இப்படி வளர்த்திருக்கா பாரு உங்கம்மா அவதான் சனியன்”

“யேய்.. இப்ப ஏண்டி எங்கம்மாவை வம்புக்கு இழுக்குறே?” - பாய்ந்துபோய் மனைவியை அடிக்கக் கை ஓங்கினான் கணவன்.

“நிறுத்துடா. என்ன பழக்கம் இது பொண்டாட்டிய அடிக்குறது?” என்றபடியே வீட்டுக்குள் நுழைந்தான் கணவனின் நண்பன். திடுதிப்பென வீடு அமைதியானது.

மிக நெருக்கமான நண்பன் அவன். காதலர்களாக இருந்த அவர்கள் பதிவுத்திருமணம் செய்ய ஓடி வந்தபோது உடனிருந்து நடத்திவைத்தவன். நல்ல அன்பவசாலியும்கூட. அதனால் அவன் பேச்சுக்கு அந்த வீட்டில் மறு பேச்சு இல்லை!

கணவனும் மனைவியும் ஆளுக்கொரு திசையில் முகம் திருப்பிக் கொண்டு உட்கார, பீரோவைத் திறந்த நண்பன் ஒரு பொருளை எடுத்து வந்து அவர்கள் முன் விரித்து வைத்தான். அதைப் பார்த்தபடியே கேலியும் கிண்டலுமாக கமெண்ட் அடிக்கத் தொடங்கினான்.

ஒரு கட்டத்தில் நண்பனின் கேலிப்பேசு கணவன், மனைவி இருவரையும் கோபத்தை மறந்து சிரிக்க வைத்தது! இருவரும் பாய்ந்து அந்தப் பொருளைப் பிடுங்கினர். ஆசையோடு புரட்டலானார்கள். அப்படியே ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக் கொள்ளவும் ஆரம்பித்தார்கள்.

“சரி சரி. இனிமேல் நான் எதுக்கு கரடிமாதிரி” என்ற நண்பன் “டாடா” காட்டிவிட்டு வெளியேறினான்.

சண்டைக்கோழிகளாக இருந்த இந்த தம்பதிகளைச் சேர்த்துவைத்த (எந்த தம்பதியையும் சேர்த்துவைக்கும்) அந்த மேஜிகல் பொருள் என்ன என யூகிக்க முடிகிறதா?

?

?

?

?

?

?

?

அது... 'கல்யாணப் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும் ஆல்பம்!'

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள்: இங்கே!